Astrology - பாம்புக்கு பால் வார்ப்பது எப்படி?
புரட்சித் தலைவரின் பழைய படப் பாடல் ஒன்று உள்ளது: “ஹலோ...ஹலோ சுகமா? இப்போ நீங்க நலமா?” என்ற பல்லவியுடன் துவங்கும். படம் ‘தர்மம் தலை காக்கும்’
நான்காம் வீடுதான் சுக ஸ்தானம். அந்த வீடு நன்றாக இருந்தால் இந்தப் பல்லவிக்கு வேலையே இல்லை. ஆசாமி எப்போதும், எந்த சூழ்நிலையிலும் சுகமாக இருப்பான்.
அந்த வீடு நன்றாக இல்லாவிட்டால் என்ன ஆகும்? சுகக்கேடுதான்.
சுகககேடு மட்டுமா? வேறு சில கேடுகளும் உள்ளன. அவற்றை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------------------------------------
கேளப்பா யின்னமொரு புதுமை கேளு
கெடுதி செய்யும் செம்பாம்பு நாலில்நிற்க
சீளப்பா செனித்த மனை சுத்தபாழாம்
சென்மனுக்கு கிரகமுண்டு விதியும் கூறு
கூளப்பா குளிகனுமே சேர்ந்து நிற்க
குடியிருக்க குச்சில்லை கறவையில்லை
ஆளப்பா அன்னைக்கு தோஷம் தோஷம்
அத்திடலில் அரவுக்கு சாந்தி செய்க!
- புலிப்பாணி முனிவர்
நான்காம் வீட்டில் சனி, ராகு, அல்லது கேது போன்ற தீமையான கிரகங்கள் இருப்பது சுகக்கேடு.
நான்காம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள். தாய், கல்வி, சுகம் (வீடு, வண்டி வாகனங்கள்). சரி, நான்காம் வீடு அடிபட்டுப்போயிருந்தால் இந்த இலாக்காக்கள் மூன்றுக்குமே கேடா?
அது பொது விதி! தாய்க்கு சந்திரனும், கல்விக்கு புதனும், சுகத்திற்கு சுக்கிரனும் மந்திரிகள் (authorities) அவர்களுடைய நிலைமையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். அவர்கள் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் (உச்சம் பெற்று இருந்தாலும் அல்லது கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் அல்லது சுயவர்க்கப் பரல்களில் 5ம் அல்லது 5ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் ஜாதகனுக்கு கொடுத்து விடுவார்கள்) அவன் தப்பித்துவிடுவான்.
இல்லை என்றால் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டியதாயிருக்கும்.
அந்த வீட்டில் கேது வந்து அமர்ந்திருந்தால், அது கேடானது என்று முனுசாமி (அதாங்க முனிவர்) அடித்துச் சொல்கிறார். அது பொதுப் பலன் என்றாலும் கொஞ்சமாவது வேலை செய்யும்.
என்னென்ன கேடு என்கிறார்? ஜாதகன் பிறந்த வீடு பாழாகிப் போகும் என்கிறார். அதாவது அடையாளமின்றிப் போகலாம். அதுவும் கேதுவுடன் மாந்தியும் சேர்ந்திருந்தால், கேட்கவே வேண்டாம், ஜாதகனுக்கு குடியிருக்க வீடு இருக்காது. வீட்டில் மாடு, கன்று இருக்காது.
முனுசாமி காலத்தில் மாடு கன்றுகளுக்கு அத்தனை முக்கியத்துவம் இருந்திருக்கிறது. அத்துடன் ஜாதகனுடைய தாய்க்கும் அது கெடுதியானது என்கிறார்.
அரவுக்கு சாந்தி செய்க என்கிறார். அதுதான் பரிகாரம் என்கிறார். பாம்பை வளர்த்து வணங்கவும் முடியாது. பாம்புப் புற்றில் தினமும் பால் வார்க்கவும் முடியாது. இன்றைய வாழ்க்கை முறையில் அதெல்லாம் சாத்தியமில்லை.
ஆகவே எல்லாம் வல்ல இறைவனைத் தினமும் மனம் உருக பிரார்த்தனை செய்ய வேண்டும். அத்துடன் ஜென்ம நட்சத்திரத்தன்று கேது ஸ்தலத்திற்கும் சென்று கேது பகவானை வழிபட்டு வரலாம்!
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com