கற்றுக் கொடுக்கும் தொழிலின் மேன்மை!!!
ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார்.
இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.
" நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். _ " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது.
ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை.
பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார்.
மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். *ஆசிரியர் கூறினார்,* "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.!
==========================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===================================================================
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com