பூலோக கைலாயம் எது தெரியுமா?
கண்டேன், கண்டறியாதன கண்டேன்!
திருக்கைலாயத்தை தேடிச்சென்ற திருநாவுக்கரசர், பூலோக கைலாயமென பெரியவர் ஒருவர் குறிப்பிட திருவையாறு தலத்தை
அடைகிறார். அங்கே அவர் தான் கண்ட காட்சியாக பாடுகிறார்:
இதோ, வீதியில் செல்லும் அவர்கள் அழகான பிறைமதியை தன் தலையணியாக அணிந்த சிவபெருமான் மற்றும் உமாதேவியை
பாடிச் செல்கிறார்கள். அவர்கள் புதியதாக பறிக்கப்பட்ட பூவோடு நீரையும் எடுத்துக் கொண்டும் துதித்துக் கொண்டும்
போகிறார்கள்.
அவர்கள் பின்னாலேயே போனால் நானும் கோயிலைச் சென்றடைவேனே.
கால்கள் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு தலத்தை அடைந்தேனே. (திருக்கயிலாயம் செல்ல எடுத்துக்கொண்ட
முயற்சியினால் என் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழிவுகள் எல்லாம் சுவடே இல்லாமல் மறைந்து போனதுவே, திருவையாற்றினை
அடைந்ததுமே!)
அங்கே ஆண்யானையும், பெண்யானையும் ஜோடியாக காதல் களிப்புடன் வரக் கண்டு, அக் காட்சியில் சிவபெருமானின் திருவடிகளைக் கண்டு தரிசித்தேன். (அன்பே சிவம்!)
இதுவரை கண்டு அறியாத காட்சிகளை (திருப்பாதம், சிவானந்தம்) எல்லாம் கண்டேன் என்று பாடுகிறார் அப்பர் பெருமான்.
(இந்தப் பாடலில் யானைகள் ஜோடியாக வருவதைக் குறிக்கும் அவர், இந்தப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விலங்கு
அல்லது பறவை தன் துணையுடம் வருவதாக குறிக்கிறார்.)
பதிகத்தின் முதல் பாடல்: (நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம் பதிகம் 3)
மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.
மாதர்பிறை = அழகியபிறை
கண்ணி = நெற்றி/தலையில் சூடும் அணிகலன்
போதொடு நீர் = வழிபாட்டிற்குரிய நீர்
பிடி = பெண் யானை;
களிறு = ஆண் யானை
----------------------------------------------------------
இந்தப் பாடலை பொன்னியின் செல்வனில், சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத் தேவர் பாடிக்காட்டுவதாக வரும். சேந்தன்
அமுதன் பாடி முடித்தபின், அருகிலிருந்த குந்தவை, செம்பியன் மாதேவியிடம், இந்தப் பதிகம் பிறந்த வரலாற்றைக் கேட்பார். அந்த
முதிய பிராட்டி சொன்ன வரலாற்றை, கல்கியின் வரிகளில் இங்கே அப்படியே தருகிறேன். நீங்கள் மெய்மறந்து கேட்டிட:
அப்பர் சுவாமி பிராயம் முதிர்ந்து உடல் தளர்ச்சியுற்றிருந்த சமயத்தில் கைலையங்கிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க
விரும்பினார். நெடுதூரம் வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்தார். மேலே நடக்க முடியாமல் களைத்து விழுந்தார். அச்சமயம் ஒரு
பெரியவர் அங்கே தோன்றி, “அப்பரே! கைலையைத் தேடி நீ எங்கே செல்கிறீர்? பொன்னி நதிக் கரையிலுள்ள திருவையாற்றுக்குச்
செல்லுங்கள்! பூலோக கைலாசம் அதுதான்” என்று அருளிச் செய்து மறைந்தார். அது இறைவன் வாக்கு என்று அறிந்த அப்பர்
திரும்பித் திருவையாறு வந்தார். அந்த ஸ்தலத்தை நெருங்கி வந்த போதே அவருடைய உள்ளம் பரவசம் அடைந்தது. பல
அடியார்கள் கையில் பூங்குடலையும் கெண்டியில் காவேரி நீரும் ஏந்தி ஐயாறப்பனைத் தரிசிப்பதற்காகச் சென்று
கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் பின்னால் அப்பரும்
சென்றார். அப்போது திருவையாறு நகர்ப்புறத்தில் ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் வந்தன. அந்தக் களிறும் பிடியும் சிவமும் சக்தியுமாக அப்பருக்குக் காட்சி அளித்தன. ஆலயத்தை அடைவதற்குள் இவ்வாறு பல விலங்குகளையும் பறவைகளையும் ஆண் பெண் வடிவத்தில் அப்பர் பார்த்தார். கோழி பெடையோடு கூடிக் குலாவி வந்தது; ஆண் மயில் பெண் மயிலோடு ஆடிப் பிணைந்து வந்தது; அருகிலிருந்த சோலையில் ஆண் குயிலோடு பெண் குயில் பாடிக் களித்துக் கொண்டிருந்தது; இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் ஒன்று அதன் பெண் இனத்தோடு சென்றது; நாரையும் அதன் நற்றுணையும் சேர்ந்து பறந்து சென்றன;
பைங்கிளியும் அதன் பேடையும் பசுமரக்கிளைகளில் மழலை பேசிக் கொண்டிருந்தன; காளையும் பசுவும் கம்பீரமாக அசைந்து
நடந்து சென்றன. இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக்கண்ணுக்கு புலனாயின. உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார்.
இந்த உலகமே கைலாசம்; தனியாக வேறு கைலாசமில்லை” என்று உணர்ந்தார். இத்தகைய மெய்ஞான உணர்ச்சியோடு மேலே சென்றபோது, ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருவதையும் பார்த்தார். தாம் அன்று புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்து அனுபவித்ததையெல்லாம் ஒவ்வொன்றாக இனிய தமிழில் இசைத்துப் பாடி அருளினார். இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும் கருத்தினால் அறியாமலிருந்தவற்றை இன்று திருவையாற்றில் கண்டு அறிந்து கொண்டதாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் “கண்டறியாதன கண்டேன்!” என்று திரும்பத் திரும்ப வியந்து கூறினார்.
பாடல் : மாதர்பிறை கண்ணியானை
இயற்றிவர் : திருநாவுக்கரசு நாயன்மார்
தலம் : திருவையாறு
இராகம்: செஞ்சுருட்டி .
-----------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
பல முறை சென்றுள்ளேன்.
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteபடித்து மகிழ வைத்த பதிவு!
Respected Sir,
ReplyDeleteHappy morning... Nice post...
Have a great day.
With regards,
Ravi-avn
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபல முறை சென்றுள்ளேன்.////
ஆமாம். முன்பு நீங்கள் தஞ்சையில் வசித்ததால் அது சாத்தியப்பட்டுள்ளது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
படித்து மகிழ வைத்த பதிவு!//////
நல்லது. நன்றி வரதராஜன்!!!!!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Nice post...
Have a great day.
With regards,
Ravi-avn//////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!