மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.1.18

Short Story: சிறுகதை: பணமும், பகையும்!


Short Story: சிறுகதை: பணமும், பகையும்!

சென்ற மாதம், மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் எழுதிய கதை அந்த இதழ் வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. அந்தக் கதையை நீங்கள் அனைவரும் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
      சுப்பிரமணியன் செட்டியார், தங்கள் வீட்டிற்கு தன்னைப் பார்ப்பதற்காக வந்திருந்த தன் தம்பி மகன் சின்னைய்யாவை பிடித்துக் கொண்டு விட்டார். மெதுவாகக் கேட்டார்:

      “நீயும் உன் அண்ணனும் இந்த வீட்டின் அருமை, பெருமைகளை ஏன் அப்பச்சி வெட்டி சாய்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

      சின்னைய்யாவிற்கு தூக்கி வாரிப் போட்டது. பதிலுக்குக் கேட்டான்: “என்ன பெரியப்பச்சி சொல்கிறீர்கள்? சற்று விபரமாகச் சொல்லுங்கள்”

      “உன் பாட்டைய்யா அண்ணாமலை செட்டியார், அந்தக் காலத்தில், அதாவது 1906ம் ஆண்டிலேயே பர்மாவிற்குச் சென்று பெரும்பொருள் ஈட்டியவர். பத்தாயிரம் ஏக்கர்கள் விலை நிலம் இருந்தது. அங்கே மூன்று ஊர்களில் கொடுக்கல், வாங்கல் கடைகள் இருந்தன. 1,941ல் இரண்டாம் உலக யுத்தம் தீவிர மடைந்தபோது, பர்மாவிற்கு ஏற்படப் போகும் அவல நிலையைக் கணித்து, அதை அப்படியே விட்டு விட்டு, கையில் இருந்த பணத்துடன் இங்கே வந்தவர், அதை வைத்து, திருவாரூருக்கு அருகில் 500 ஏக்கர்கள் விலை நிலங்களை வாங்கி விவசாயம் செய்யத் துவங்கினார். அதையும் வெற்றிகரமாகச் செய்து, பொருள் ஈட்டி தன் குடும்பத்தைச் செழிப்பாக வழி நடத்தியதுடன், நம் ஊர் சிவன் கோவிலுக்கும், திருப்பணிகளைச் செய்தார். சிவன் கோவிலுக்கு காரியக்காரராக இருந்து கோவிலின் நிர்வாகத்தை சீராக நடத்தினார். ஊர் மக்கள் அவரைக் காரியக்காரர் என்றும், நம் பெரிய வீட்டைக் காரியக்கார வீடு என்றும் அழைத்தார்கள், அந்தப் பெயர் இன்றும் நிலைத்திருக்கிறது. அதெல்லாம் உனக்குத் தெரியுமா?”

     “நன்றாகத் தெரியும் பெரியப்பச்சி! நீங்கள்தான் அடிக்கடி சொல்வீர்களே!”

      “தெரிந்து என்னடா பிரயோசனம்? மாமியார் வீட்டு சொத்திற்கு, மைத்துனன்களுடன் ஏன்டா அடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? கேவலமாக இருக்கிறது!”

     “அந்த வேலையை, நான் செய்யவில்லை. எங்கள் அண்ணன் அல்லவா செய்து கொண்டிருக்கிறார்.

     “ அதை நீ தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாமா?”

     “என்னைவிட அவர் பத்து வயது மூத்தவர். நான் சொன்னால், அவர் கேட்கவா போகிறார்? அத்துடன் அவர் மனைவியும் அவருக்குத் துணை போகிறார். அதில் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை!”

     “அவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர்கள் இருக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் சேர்ந்து சொல்ல வேண்டாமா?”

     “அவர் எங்கள் அப்பச்சி வைத்துவிட்டுப்போன சொத்துக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு அறுபது வயதாகி விட்டது. யாருக்கும் சல்லிக்காசு தரமாட்டேன் என்கிறார். எப்போதும் அவர் பெருமையையே அவர் பேசிக் கொண்டிருக்கிறார். இங்கே ஊரில் சொந்த வீடு கட்டிக் கொண்டதிலிருந்து, இந்தப் பொது வீட்டிற்குக் கூட அவர் வருவதில்லை. அது உங்களுக்கே தெரியும்.”

     “சாகும்போது, என்னத்தைக் கொண்டு போகப் போகிறான்? செய்த பாவ, புண்ணியங்கள்தான் கூட வரும்!”

     “அதை எங்கள் மூத்த சகோதரி ஒருமுறை சொல்லிவிட்டார். பணம் பணமென்று ஏன் பேயாக அலைகிறாய்? காதறுந்த ஊசிகூட உன்னுடன் வராது என்று பட்டினத்தார் கதையை எல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டார். ஆனால் அவர் ஒரே வரியில் பதில் சொல்லி எங்கள் ஆச்சியின் வாயை அடைத்துவிட்டார்”

     “என்ன சொன்னான்?”

     “ஆச்சி நீ சொல்வதெல்லாம், மண்டையைப் போட்ட பிறகு, இருக்கும்வரை எல்லாம் வேண்டும். அதற்குப் பணம்தான் பிரதானம். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று சொல்லிவிட்டார்”

      பெரியப்பச்சி புன்னகைத்துவிட்டுச் சொன்னார்:“ நானென்ற அகம்பாவம்: நமதென்ற எக்காளம் நடவாது வேலனிடமே” என்று
கவியரசர் கண்ணதாசன் அற்புதமாகச் சொல்லிவிட்டுச் சென்றார். உன் அண்ணன் சிங்காரத்திற்கு இன்னும் மனம் பக்குவப்படவில்லை. அதை அவன் உணரும் நாள் சீக்கிரம் வரும். நான் வணங்கும் பழநியாண்டவர் அதை அவனுக்கு தன் தண்டாயுதத்தால் உணர வைப்பார். பொறுத்திருந்து பார்!”

      இதைச் சொன்னபிறகு அவர் மெளனமாகி விட்டார். அத்துடன் அவர்களுடைய உரையாடலும் நிறைவிற்கு வந்தது.

     ********************************************************************      சிங்காரம் செட்டியாரின் அப்பச்சிக்கு ஆறு பிள்ளைகள். பிறப்பு வரிசையில் சிங்காரம் செட்டியார் இரண்டாவது. சிங்காரம் செட்டியாருக்கு ஒரு மூத்த சகோதரியும், மூன்று இளைய சகோதரிகளும் ஒரு சகோதரனும் உண்டு.

       சிங்காரம் செட்டியாரின் அப்பச்சி மாணிக்கம் செட்டியார், அவருடைய காலத்திலேயே தன்னுடைய நான்கு பெண் மக்களையும் உரிய வயதில் கட்டிக்கொடுத்தத்துடன், சிங்காரம் செட்டியாருக்கும், அவருடைய தம்பி சின்னைய்யாவிற்கும் பெரிய இடத்துப் பெண்களைக் கட்டி வைத்துவிட்டார். இப்போது அவர் இல்லை.

       சிங்காரம் செட்டியார் சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். வேலைக்குப் போகவில்லை. தங்கள் அப்பச்சியின் கட்டுமானத் தொழிலையே உடன் இருந்து பழகி, முழுமையாக இப்போது அதையே செய்து வருகிறார். பண விஷயத்தில் கறாரானவர். அவருடைய மாமனார் வீட்டினர் உள்ளூரிலேயே பெரிய பணக்காரர்கள்.

       சிங்காரம் செட்டியாருக்கு இரண்டு மகன்கள், இருவரும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில் பணி செய்கிறார்கள். இருவருமே பெங்களூரில் இருக்கிறார்கள்.

       சிங்காரம் செட்டியாரிடம் நிறைய கஞ்சத்தனம் உண்டு. அதை அவர் சிக்கனம் என்பார்.

       சென்னை அண்ணா நகரில் ஒரு கிரவுண்டு மனையில் பெரிய வீடும், ஐந்து இடங்களில் அவர் கட்டிக் கொடுத்த பலமாடிக் குடியிருப்பு மனைகளில் ஒவ்வொரு வீடு என்று ஐந்து வீடுகளும் உள்ளன. அவற்றை எல்லாம் வாட்கைக்கு விட்டிருக்கிறார்.

       இவை பத்தாது என்று தன்னுடைய மாமனார் வீட்டு சொத்துக்களில் தன் மனைவியின் பங்கிற்காக அவர்களுடன் இவரே நின்று சண்டை போட்டத்துடன், தன் மைத்துனன்கள் மூன்று பேர் மீதும் வழக்கும் தொடுத்துவிட்டார். அவர்கள் தருவதாகச் சொன்ன பணத்தை வாங்க மறுத்து சம பங்கு வேணும் என்பதுதான் பிரச்சினை. ஊர் முழுக்க அது அவருக்குக் கெட்ட பெயரை உண்டாக்கி விட்டது.

        அந்தப் பிரச்சினைகளாலும், அதிகமாகப் பணம் செலவாகும் என்ற காரணத்தாலும் தன்னுடைய அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவைக்கூட அவர் செய்து கொள்ளவில்லை. வடபழநிக் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வந்ததுடன் அது முடிந்து விட்டது.

         உடன் பிறந்தவர்களிடமும், உறவினர்களிடமும் சுமூகமான உறவு இல்லை. தன்னைப் பேணியாக வளர்ந்துவிட்டார்,  உலகில் தான்தான் கெட்டிக்காரன் என்ற அகம்பாவம் மிக்கவர். பணம்தான் அவருக்குக் கடவுள். சேர்ந்த பணத்தை விட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். தர்ம காரியங்களுக்கென்று ஒரு நூறு ரூபாய் பணம்  கூட இதுவரை கொடுத்ததில்லை.

      அவர் செய்த நல்ல காரியம் தன்னுடைய மகன்கள் இருவரையும் நன்றாகப் படிக்க வைத்ததும், அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்ததும்தான்.

        துவக்கம் என்றால் முடிவு என்று ஒன்று உண்டு. பகல் என்றால் இரவு உண்டு, உறவு என்றால் ஒரு நாள் பிரிவும் உண்டு. பிறப்பு என்றால் இறப்பும் உண்டு. உலகில் எல்லாவற்றிற்கும் இரண்டு நிலைப்பாடுகள் உண்டு.

       அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் அற்புதமாகத் தன் பாடல் ஒன்றில் இப்படிச் சொன்னார்:

       அங்கும் இங்கும் அலைபோலே - தினம் 
       ஆடிடும் மானிட வாழ்விலே 
       எங்கே நடக்கும் எது நடக்கும் - அது 
       எங்கே முடியும் யார் அறிவார் 

        சிங்காரம் செட்டியாரும் அதை உணரும் காலம் வந்தது.

        காலதேவன் அதைக் கச்சிதமாகச் செய்தான்

        என்ன செய்தான்?

        வாருங்கள் அதைப் பார்ப்போம்!

                      **********************************************
        பெரியவர் சுப்பிரமணியன் செட்டியார், “பழநியாண்டவர் உன் அண்ணனுக்கு தன் தண்டாயுதத்தால் எல்லாவற்றையும் உணர வைப்பார்.” என்று சொன்ன ஒரு வார காலத்திலேயே அது நடந்தது.

        சிங்காரம் செட்டியாரின் மனைவி மீனாட்சி ஆச்சியின் உயிர் ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் தூக்கத்திலேயே பிரிந்து விட்டது.

         சிங்காரம் செட்டியார் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார். ஆடிப் போய் நிலை குலைந்து விட்டார்.

         சிங்காரம் செட்டியாரின் மகன்களும், உடன் பிறப்புக்களும் மற்றும் உறவினர்களும் வந்து குவிந்து விட்டார்கள். ஆச்சியின் சகோதரர்கள் மூவரும் பகையை மறந்து ஆச்சிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வந்து விட்டார்கள். இறந்த இரண்டாம் நாள்
ஆச்சியின் பூத உடல் திருவொற்றியூர் மாயானத்தில் தகனம் செய்யப் பெற்றது.

        எல்லா கிரியைகளையும், சவண்டியையும் சென்னையிலேயே செய்தார்கள். இரண்டு நாட்கள் சொந்த ஊருக்கும் சென்று பங்காளி வீடுகளுக்கு கேதம் சொன்னார்கள்.

        எல்லாச் சடங்குகளும் முடிந்து, புறப்படும் சமயத்தில், அவருடைய மகன்கள் இருவரும் தங்கள் தந்தையைத் தனியே அழைத்துச் சென்று பேசிய வார்த்தைகள்தான் முக்கியமானது.

        "அப்பச்சி, பணம் மட்டுமே சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் தராது. உறவுகளாலும் நட்புக்களாலும்தான் அதைத் தரமுடியும். உங்கள் வம்பு, வழக்குகளை மறந்து எங்கள் ஆயா வீட்டு மக்கள் அனைவரும் கேதத்திற்கு வந்து விட்டார்கள் பார்த்தீர்களா? உங்கள் உடன் பிறப்புக்கள் அனைவரும் வந்து விட்டார்கள். அந்தப் பெருந்தன்மை நமக்கு வேண்டாமா? ஆகவே சிந்தித்துப் பாருங்கள். எங்களுக்குப் பணமும் வேண்டாம். பணத்தை வைத்து வரும் பகையும் வேண்டாம். உங்கள் பணம், சொத்து என்று எங்களுக்கு எதுவும் வேண்டாம். இறையருளால் நாங்கள் சம்பாதிப்பதே எங்களுக்குப் போதும், அதுபோல நீங்கள் உண்டாக்கி வைத்திருக்கும் பகையும் எங்களுக்கு வேண்டாம். அவற்றை எல்லாம் முதலில் சரி பண்ணுங்கள். இது எங்களுடைய வேண்டுகோள்” என்று சொன்னவர்கள், அவரை விழுந்து வணங்கி விட்டுப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.

          சிங்காரம் செட்டியாருக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது. அவருடைய மனதில் பெரிய தாக்கத்தையும் உண்டாக்கியது. தன் பிள்ளைகளுக்கு முப்பது வயதிற்குள் ஏற்பட்ட பக்குவம், அறுபது வயதாகியும் தனக்கு ஏற்படாததை நினைத்து மனதில் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.

          எல்லாவற்றையும் ஒரே மாதத்தில் சரி செய்தார். மைத்துனர்கள் மேல் போட்டிருந்த வழக்கை வாபஸ் வாங்கியதோடு, அவர்களையும் அழைத்து எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். தம்பியை அழைத்து தங்கள் அப்பச்சியின் சொத்துப் பத்திரங்கள், வங்கி வைப்புத்தொகைகளை எல்லாம் கொடுத்து நீங்கள் ஐவரும் எடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

           சென்னையில் இருந்த சொத்துக்களை எல்லாம் விற்றதுடன், தங்கள் பாட்டனார் அண்ணாமலை செட்டியார் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கி, அதில் அந்தப் பணத்தை எல்லாம் முதலீடு செய்தார். அத்துடன் சென்னையில் தான் செய்து வந்த கட்டுமானத் தொழிலை நிறுத்திவிட்டு தன் சொந்த ஊருக்கு குடி பெயர்ந்து விட்டார்.

           தங்கள் பெரிய வீட்டிலேயே சமையல்காரர், காவல்காரர் என்று உதவிக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டு, அங்கேயே தங்கி, தன்  பெரிய தகப்பனார் உதவியுடன் உள்ளூர் நகரச் சிவன் கோவிலின் நித்திய பூஜைகள், கட்டளைகளைக் கவனிக்கத் துவங்கினார்.

           காரியக்காரர் வீடு என்ற பெயர் மீண்டு வந்து சேர்ந்தது! அவருடைய மன மாற்றத்திற்கு கிடைத்த பரிசு என்று அதை  எடுத்துக் கொள்ளலாம்.

*******************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. அருமை. சுய காரியக்காரராய் இருந்தவர் ஊர் காரியக்காரராய் மறுபடியும் மாறி மனிதன் ஆனார்.

    ReplyDelete
  2. Good morning sir very excellent story sir vazhga valamudan sir

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... superb Moral story....

    Thanks for sharing...

    Have a nice day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. ////Blogger ஸ்ரீராம். said...
    அருமை. சுய காரியக்காரராய் இருந்தவர் ஊர் காரியக்காரராய் மறுபடியும் மாறி மனிதன் ஆனார்.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  5. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very excellent story sir vazhga valamudan sir////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... superb Moral story....
    Thanks for sharing...
    Have a nice day.
    With regards,
    Ravi-avn////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com