---------------------------------------------------------------------------------
சிறுகதை: கருப்பஞ்செட்டியாரும் கருவேலமரமும்!
மலர்ந்து மலராத பாதிமலர் போன்ற அதிகாலை நேரம். பொழுது முழுதாகப் புலரவில்லை. தோட்டத்தில் குடியிருக்கும் காளியம்மா போட்ட அலறல் சத்தத்தில், திடுக்கிட்டு எழுந்தார் கருப்பஞ் செட்டியார்.
என்ன ஆகியிருக்கும்? காளியம்மாவைப் பாம்பு ஏதாவது கொத்தியிருக்குமோ? யாருக்குத் தெரியும்? போய்ப்பார்த்தால் அல்லவா தெரியும்?
கொசுவலையை விலக்கிக் கொண்டு, தான் படுத்திருந்த கட்டிலைவிட்டு இறங்கினார். பெட்டகசாலை விளக்கைப் போட்டார். சைனா டார்ச் லைட்டைக் கையில் எடுத்துக் கொண்டார். பிரதான முகப்புக் கதவைத் திறந்து, வேகமாக நடந்து முகப்புப் பத்தியைக் கடந்தார். செருப்பை மாட்டிக்கொண்டு வாரத்தில் இறங்கி, கிணற்றடியை அடைந்தார். அங்கேதான் தோட்டத்திற்குச்
செல்லும் கதவு இருந்தது.
கதவில் இரு பக்கமும் திறக்கும்படியான செயின் போட்ட பூட்டு. அதைத் திறந்து, தோட்டத்திற்குள் அவர் அடியெடுத்து வைப்பதற்குள், ஐந்து நிமிடங்கள் கடந்து போயிருந்தன.
அதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. தோட்டத்தில் குடியிருக்கும் மூன்று குடித்தனக்காரர்களும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வீட்டின் எதிர்ப்புறம், கொழும்பு லேனா வீட்டுக் கார் ஷெட்டில் டீக்கடை வைத்திருக்கும் சுல்தான் பாயும், அவனுடைய வாப்பாவும் நின்று கொண்டிருந்தார்கள்.
காளியம்மா அங்கே கிடந்த பட்டியக்கல் ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். கை கால்கள் எல்லாம் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தன.
அவள் எதிரில், எட்டு அடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஒன்று அடித்துப்
போடப் பட்டிருந்தது.
பெரிய செட்டியாரைப் பார்த்தவுடன், அனைவரும் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். காளியம்மாவின் கணவன் செல்லையாதான் முன்வந்து அவருக்கு விவரத்தைச் சொன்னான்.
இரும்பு வாளிக்குள் கிடந்த பாம்பை, இருட்டில் கவனிக்காமல், கயிறு என்று நினைத்துக் காளியம்மா கையில் தூக்கிவிட்டாளாம். நொடியில், பாம்பு என்று தெரிந்தவுடன் அலறிக் கீழே போட்டவள், அதன் மீது வாளியையும் போட்டுவிட்டாளாம். இரும்பு வாளி தாக்கியதில் நகர முடியாமல் கிடந்த பாம்பை மற்றவர்கள் எல்லாம் ஒன்று கூடி அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.
கதையைக் கேட்ட பெரிய செட்டியார், பெருமூச்சு விட்டார். அவரால் செய்ய முடிந்தது அது ஒன்றுதான்.
பாவம் காளியம்மாள். வயது முப்பதுதான். நான்கு பிள்ளைகளுக்குத்தாய். கணவன் செல்லையா சத்திரம் சீனாதானா வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கிறான். பாம்பு கொத்தியிருந்தால் காளியம்மாவின் குடும்பம் சீரழிந்து போய்விடுமே?. பிள்ளைகள் தாயில்லாமல் தவித்துப்போய்விடுமே?
தங்கள் வீட்டுத் தோட்டத்தில் அசாம் காடுகளைப்போல் அடர்த்தியாக நீண்டு வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களைப் பார்த்தார் செட்டியார். 400 அல்லது 500 மரங்கள் இருக்கலாம். இரண்டு வீட்டு மனை இடம் என்றால் சும்மாவா? அதை விட அதிகமான எண்ணிக்கையில் அங்கே பாம்புகள் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஊருக்குக் கடைசி என்பதாலும்,
அருகில் கருப்புசாமிக் கண்மாய் இருப்பதாலும், பாம்புக்குப் பஞ்சமில்லை.
தினசரி பாம்பின் தரிசனமும், வாரம் ஒன்று அடித்துக் கொல்லப்படுவதும் நடக்கின்ற கதைதான். காளியம்மாள் இன்று கையால் பாம்பைப் பிடித்துக் கொண்டு அலறியது மட்டும்தான் புதுக்கதை!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த கருவேலமரப் பிரச்சினை பத்து வருடங்களாக வாட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்பு, கீழக் குடியிருப்பில் இருக்கும் ஜனங்கள் வந்து மரங்களை, செட்டியார் வீட்டிற்குச் செலவில்லாமல், வெட்டி எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். அவர்களுக்கு அவைகள் விறகாகிவிடும். செட்டியாருக்குத் தோட்டம் சுத்தமாகிவிடும்.
தற்போது நிலைமை அப்படியில்லை. திண்டுக்கல், வேடசந்தூர், தாடிக்கொம்பு பகுதிகளில் தோன்றியுள்ள ஏராளமான நூற்பாலைகளால் உள்ளூர் ஏழை ஜனங்கள் புலம் பெயர்ந்து போய்விட்டார்கள். ஊர் வெறிச்சோடிப் போய்விட்டது. வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.
பக்கத்துக் கிராமத்தில் இருந்து ஆட்களைத் தேடிப் பிடித்துக் கொண்டுவந்தால், ஒரு மரத்தை வெட்டுவதற்கு 250 ரூபாய் என்ற கணக்கில் குத்து மதிப்பாக ஒன்றரை லட்ச ரூபாய் கேட்கிறார்கள். பத்துப் பேர்கள் வருவார்களாம். ஒரு மாதம் வேலை இருக்கிறதாம்.
வெட்டுவதும் தரையில் இருந்து ஒரு அடி விட்டுவிட்டு, அதற்கு மேல் உள்ள மரத்தின் பகுதியைத் தான் வெட்டுவார்களாம். “வேருடன் தோண்டி எடுக்க வேண்டாமா?” என்றால், அதை மிஷினை வைத்து (Poclain) நீங்கள்தான் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
கரும்பின் விலை டன் 1,800 ரூபாய். ஆனால் கருவேல மரத்தின் விலை டன் மூவாயிரம் ரூபாய். சரி ஆகின்ற செலவை வெட்டும் மரங்களை வைத்துச் சரி பண்ணிக்கொள்ளலாம் என்று பார்த்தால், அதிலும் சிக்கல் இருக்கிறது. அந்தத் தொழில் சில அரசியல் பிரமுகர்களின் கையில் இருக்கிறது. வெட்டிய பிறகு, துண்டுகள் போட்டு விட்டுக் கூப்பிடுங்கள். உருட்டுக் கட்டைகளை மட்டும் எடுத்துகொள்வோம் என்கிறார்கள். அதில் உள்ளடி வேலைகள் உள்ளன. அடிமாட்டு விலைக்குத்தான் போகும் போல் இருக்கிறது.
என்ன செய்வது என்று புரியாத நிலைமை.
வீட்டில் இருப்பது கருப்பஞ்செட்டியார் ஒருவர்தான். மற்ற
பங்குதாரர்கள் எல்லாம், அதாவது கருப்பஞ்செட்டியாரின் மகன்கள்,
மற்றும் அவருடைய இரண்டு தம்பிகள், அவர்களுடைய மகன்கள்
ஆறு பேர்கள், ஆக மொத்தம் பத்துப் பேர்களும் சென்னை, கோவை,
திருச்சி போன்ற நகரங்களில் வசிக்கிறார்கள். விஷேசங்களுக்குக்
கார்களில் வந்து போவதோடு சரி. எல்லோரும் வசதியாக இருக்கிறார்
கள். ஆனால் எந்தப் பொதுக்காரியத்தையும் ஒத்துவந்து செய்ய
மாட்டார்கள். அவர்களும் செய்ய மாட்டார்கள். அடுத்தவனையும்
செய்ய விடமாட்டார்கள்
கருப்பஞ் செட்டியாருக்கு எண்பது வயதாகிறது. அவர் அடிக்கடி
இப்படிச் சொல்வார்.
“செட்டிய வீடூகளில் ஒரு அய்யா, ஒரு மகன், ஒரு பேரன், ஒரு கொள்ளுப்பேரன் என்று வாரிசு வரிசை இருந்தால் எந்தப் பிரச்சினை
யும் இருக்காது. தவறி ஒரு அய்யா, இரண்டு மகன்கள், ஐந்து அல்லது
ஆறு பேரர்கள், எட்டு அல்லது பத்துக் கொள்ளுப்பேரர்கள் என்று
வம்சாவழி அதாவது வாரிசு வரிசை விரிவாக இருந்தால் எல்லா
விதப் பிரச்சினைகளும் அந்த வீட்டில் இருக்கும். அதை வைத்துப்
பெரிய புத்தகம் போடலாம். அந்த அளவு பிரச்சினைகள் சுவாரசியமாக
வும் இருக்கும்”
“பிரச்சினை என்றால் தலைவலிதானே இருக்கும், சுவாரசியத்திற்கு அங்கே இடமேது?” என்று கேட்டால், “ரசனை உணர்வோடு பார்த்தால், எதுவுமே சுவாரசியமாகத்தான் இருக்கும். பிரச்சினைகளும் அதற்கு விதிவிலக்கல்ல” என்று சொல்வார்.
“சொத்துக்கள் இருந்தால்தானே பிரச்சினை? சொத்து எதுவும் இல்லாவிட்டால், அவனவன் கையை ஊன்றிக் கர்ணம் அடிக்கின்றான் என்னும் நிலை இருந்தால், அங்கே பிரச்சினைக்கே இடமில்லையே?”
“ஏன் இல்லை? எங்கள் அய்யா, அவர் காலத்தில், அதாவது 1931ஆம் ஆண்டு, காரைக்குடியில் இருந்து, பத்துக் கிலோ மீட்டர் தூரத்திற்கு சொந்தச் செலவில் இரும்புக் கிராதிகளை நட்டு, குட்டி டிரான்ஸ்ஃபார்மரை நிறுவி, ஊருக்கே மின்சாரத்தைக் கொண்டு வந்தாராம். மின்சாரம் வந்த அன்று, இரவு, ஒளிவெள்ளத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்தாராம். அத்துடன், எங்கள் தெருவில் இருந்த அத்தனை வீடுகளுக்கும் மின் இணைப்பு எடுத்துக்கொள்ள உதவினாராம். தனி மனுஷனாக அன்று அவர் செய்ததை இன்றும் ஊரில் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று எங்கள் வீட்டு நிலைமை அப்படியா இருக்கிறது?”
“ஏன், என்ன ஆச்சு?”
“எங்கள் வீட்டில் ஆரம்பத்தில் ஒரு மீட்டர்தான் இருந்தது. இன்று எட்டு மீட்டர்கள் இருக்கின்றன. வருடத்திற்கு ஆகின்ற சொற்ப மின்கட்டணத்தை ஒன்றாகச் செலுத்தி, பங்கிட்டுக் கொள்ளும் மனப்பக்குவம் யாருக்கும் இல்லை. ஆளாளுக்குத் தனித்தனி இணைப்பு, தனித்தனி மீட்டர். தனித்தனி கட்டணம்”
“அதற்கு என்ன காரணம்?”
“ஆண்டு முழுவதும் நான் வெளியூரில் இருக்கிறேன். உள்ளூரில் குடியிருந்து கொண்டு குப்பை கொட்டுகிறவன் கட்டட்டும் என்னும் மனப்பாங்கு, தனித்தனி மீட்டரில் முடிந்துவிட்டது. அது மட்டுமா?
வீட்டின் முன்பக்கம், தனித்தனி கழிப்பறை, தனித்தனி குளியலறை,
தனித்தனிப் பூட்டு, தனித்தனி சாவி! பவுன் பதிமூன்று ரூபாய் விற்ற
காலத்தில் அவர் லட்ச ரூபாய் செலவழித்து, பர்மாத்தேக்கு, இத்தாலி
மார்பிள், பெல்ஜியம் கண்ணாடி என்று பார்த்துப் பார்த்துக் கட்டிய
வீட்டைப் பராமரிப்பதில் கூட இன்று பல பிரச்சினைகள். அன்று
கூட்டுக் குடும்ப வாழ்க்கை. இன்று அது இல்லை. மைக்ரோ ஃபாமிலிகளாகிவிட்டன. அன்று தர்ம சிந்தனை இருந்தது. இன்று
தன்னைப் பேணித்தனம்தான் இருக்கிறது.”
“எல்லா வீடுகளிலும் அப்படி இல்லை. சில வீடுகளில் அப்படி இருக்கலாம்”
“நானும் இருக்கிற வீடுகளைத்தான் சொல்கிறேன். எங்கள் வீட்டில் இருக்கிறது.
“இருந்தால் என்ன? பேசித் தீர்த்துக்கொள்ளலாமே?”
“எங்கள் வீட்டில் அது முடியாது. கோணவழக்குப் பேசுவார்கள். ரத்த
அழுத்தநோய் வந்துவிடும். வந்துவிட்டது. மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இருக்கிற பிரச்சினைகள் போதாதென்று எங்கள்
வீட்டுத் தோட்டத்திலுள்ள கருவேலமரங்களை வைத்து வேறு பெரிய பிரச்சினை. அதற்காக வீட்டு பொதுக்குழுவைக் கூட்டிப் பேசியபோது,
என் சின்னத்தம்பி சிங்காரம் சொல்லிவிட்டான். மரங்களை வெட்டிச்
சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்தான். பழைய வழக்கப்படி சுத்தம் செய்கிறவர்களையே கூலிக்குப் பதிலாக மரங்களை எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டியதுதான். கைக்காசை எப்படிச் செலவு பண்ணுவது? பாம்புக்குப் பயந்தால் எப்படி? இங்கே சுத்தம் செய்தாலும், பக்கத்துக் கண்மாய்களில் இருந்து பாம்புகள் வரத்தான் செய்யும். குடியிருப்பவர்
களைக் காலி செய்யச் சொல்லி, பாம்பு வராத இடத்திற்குக் குடி போகச் சொல்லுங்கள். அதுதான் தீர்வு.”
“மற்றவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று சுவாரசியமாகக் கேட்டபோது, அதற்குச் செட்டியார்அதிரடியாக இப்படிப் பதில் சொன்னார்.
“என்ன திரைப்படமா எடுக்கப்போகிறோம். பலரிடமும் விவாதித்துத் திரைக்கதை அமைப்பதற்கு? சிங்காரம், அப்படிப் பேசியவுடன், கூட்டம் கலைந்துவிட்டது. அனைவரும் எழுந்து போய்விட்டார்கள். என்
பங்கிற்கு, நான் பழநி மலைமேல் உரையும் தண்டாயுதத்தானைப்
பிரார்த்திக் கொண்டிருக்கிறேன். பிரச்சினையை அவன் தீர்த்துவைப்பான்”
கருப்பஞ்செட்டியாரின் நம்பிக்கையும் பிரார்த்தனையும் வீண் போகவில்லை. பழநி அப்பன் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினான்.
அடுத்து வந்த மூன்று மாதங்களில், அவனருளால் அது நிறைவேறியது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அரண்மனை போன்ற அந்த வீட்டின் பங்குதாரர்களில் ஒருவனும், கருப்பஞ் செட்டியாரின் மூத்த தம்பி அழகப்பனின் மகனுமான தேனப்பன், ஒரு வேலையாக ஊருக்கு வந்தவன், தங்கள் வீட்டுத் தோட்டத்தைப் பார்த்து அசந்துவிட்டான்.
அவனால் நம்ப முடியவில்லை. அப்படியொரு மாற்றம்.
ஒரு கருவேல மரம்கூட இல்லை. தோட்டத்தின் மொத்தப்
பரப்பளவான 67 சென்ட் இடமும், கார் தொழிற்சாலைகளில் இருப்பது
போல கான்ங்க்ரீட் சிமெண்ட் தளம் போடப்பெற்றுப் பளபளத்துக் கோண்டிருந்தது. தோட்டத்தைச் சுற்றிலும் ஐந்தடி உயரத்திற்குப் புதிய
சுற்றுச் சுவர்கள் கட்டப்பெற்று, மஞ்சள் வண்ணத்தில் பளபளத்துக் கொண்டிருந்தன. வீட்டை ஒட்டி தோட்டத்தின் நுழைவாயிலில்,
பதினைந்தடி அகலத்தில் புதிய ‘கேட்’. அத்துடன் அதில் ஒரு சிறிய
திறப்புக் கதவு (wicket gate) குடியிருப்பவர்களின் உபயோகத்திற்காக. அசத்தலாக தெரு விளக்கு உயரத்திற்கு தோட்டத்தில் ஆறு இடங்களில்
மின்விளக்குக் கம்பங்களும் இருந்தன.
வாசலில் நின்று கொண்டிருந்த காளியம்மாதான் கேட்டைத் திறந்து விட்டாள். கேட்டிலிருந்து கார் உள்ளே செல்வதற்கான தடம் நெடுஞ்சாலை களில் இருப்பதுபோல, மஞ்சள் மற்றும் வெள்ளைக் கோடுகளால் குறியிடப்பெற்றிருந்தது. அத்துடன் வீட்டுச் சுவரை ஒட்டி ஆறு கார்கள் நிறுத்தும் அளவிற்கு லைட் ரூஃபிங் வேயப்பெற்ற கார்களை நிறுத்துமிடமும் புதிதாக இருந்தது. அதை ஒட்டியிருந்த மூன்று குடியிருப்புக்களும் மராமத்து செய்யப்பெற்றுப் பளபளத்துக் கொண்டிருந்தன.
காரைவிட்டு இறங்கியவன், காளியம்மாவிடம், “என்ன நடந்தது? ஏன் இப்படியொரு அதிசய மாற்றம்? என்பதைக் கண்களாலேயே கேட்டான்.
“நெறைய ஆளுங்களை வைத்துக் காண்ட்ராக்டர் சண்முகம் செட்டியார்தான்ணே இந்த வேலைகளை எல்லாம் செஞ்சாரு. மேல் விவரமெல்லாம் எங்ககிட்ட அவர் எதுவும் சொல்லலையன்ணே!”
நெஞ்சு குறுகுறுத்தது. முதலில் இதைத் தெரிந்து கொள்ள
வேண்டும். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழரை. எட்டு மணிக்கெல்லாம் சண்முகம் செட்டியார் காரைக்குடி அல்லது
மதுரைக்குக் கிளம்பி விடுவார். இரண்டு ஊர்களிலும் அவருக்குக்
கட்டுமானப் பணிகள் உள்ளன. அதற்குள் அவரைப் பார்க்க வேண்டும்.
விருட்டென்று மீண்டும் காருக்குள் ஏறியவன், சிவன்கோவில் ஊருணிக்கரையில் இருந்த அவருடைய வீட்டை அடைந்தான். அந்தக் காலத்தில் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர் அவர். நெருங்கிய நண்பர்.
முதலில் சாதாரணமாகத் தன் பேச்சைத் துவங்கியவன், பிறகு தங்கள்
வீட்டு விஷயத்தைச் சொல்லிக் கேட்டவுடன், புன்னகையுடன் அவர்
பதில் சொன்னார்.
“ஒரு புண்ணியவான் பணம் கொடுத்தான்டா. எனக்கு முழு சுதந்திரமும் கொடுத்து செய்யச் சொன்னான்டா. செஞ்சேன். யாரு? எவருன்னு கேட்காதே? பணம் கொடுத்தவன், பேரைச் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கான்”
“ஒகோ” என்று சொன்ன தேனப்பன், பதிலை வரவழைக்கும் விதமாக, கேள்வியை மாற்றிப் போட்டுக் கேட்டான்.
“எவனோ சொன்னான்கிறதுக்காக நீ எப்படிச் செய்யலாம்? வீட்டுக்கு உடையவங்க நாங்க இருக்கிறோம். எங்க கிட்ட நீ பெர்மிசன் வாங்க வேண்டாமா?”
“ஆகா, உங்க வீட்டு இடக்கு, வில்லங்கம் எல்லாம் எனக்குத் தெரியாதா என்ன? பர்மிசன் வாங்கிகிட்டுத்தான் செஞ்சேன் அப்பச்சி”
“யாருகிட்டே?”
“உங்க பெரியப்பச்சிகிட்ட! அதான் உங்க வீட்டுக்கு மூத்தவர் கானரூனா கிட்ட. அவருகிட்ட பர்மிசன் வாங்கினா போதுமில்ல! அவர் தெளிவா சொன்னாரு. சண்முகம், நாம வீட்டுக்குள்ள கையை வச்சாத்தான் எல்லோருகிட்டேயும் பர்மிசன் வாங்கணும். வீட்டுக்கு வெளியே பொது இடத்தில, அதுவும் காலியிடத்தில திருப்பணி செய்றதுக்கு யாருகிட்டேயும் பர்மிசன் வாங்க வேண்டாம். நீ செஞ்சுமுடி. மத்ததை நான் பார்த்துக்கிறேன் னார்”
தேனப்பனுக்கு அந்தக் கூற்று நியாயமாகப் பட்டது. இருந்தாலும் தெரிந்துகொள்ள வேண்டியதைத் தெரிந்து கொள்ளாமல் போகக்கூடாது என்பதற்காக, தேனப்பன், அவரை நச்சரித்து, அதற்கும் மேலாகக் கெஞ்சிக் கூத்தாடி, நடந்ததைத் தெரிந்துகொண்டான்.
கதையின் நீளம் கருதி அதைச் சுருக்கிக் கொடுத்துள்ளேன்.
வீட்டுப் பெரியவர் கருப்பஞ்செட்டியாரின் பேரன் மெய்யப்பன்,
இரண்டரைமாதங்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து சென்னையில் இருக்கும் தன் பெற்றோர்களைப் பார்க்க வந்திருந்தவன், அய்யாவையும் பார்க்க ஊருக்கு வந்தானாம். வந்த இடத்தில் நடந்தவற்றை எல்லாம் கேள்விப்பட்டதோடு தோட்டைத்தையும் பார்த்து வருந்தினானாம். தோட்டத்தைச் செம்மைப் படுத்தி, பாம்புத்தொல்லையில் இருந்து
விடுபட, காண்ட்ராக்டர் சண்முகம் செட்டியாரை, அழைத்து வந்து பேசினானாம். அவன் எண்ணப்படி எல்லாவற்றையும் செய்து முடிக்க உத்தேசமாக பதினைந்து லட்ச ரூபாய் செலவாகும் என்றவுடன்,
சற்றும் யோசிக்காமல், முகம் சுளிக்காமல் பதினைந்து லட்ச
ரூபாய்க்குக் காசோலை ஒன்றை எழுதிக் கொடுத்து, உடனே செய்து
விடுங்கள் என்றானாம்.
“ஏனப்பா, நீ ஒருவனாக இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கலாமா?” என்று கேட்டதற்கு, இப்படி அழுத்தம் திருத்தமாக அவன் பதில் சொன்னானாம்:
“அண்ணே பணத்தின் மதிப்பு அதைச் சேர்த்து வைப்பதில் இல்லை.
நல்ல விதத்தில் அதைச் செலவழிப்பதில்தான் இருக்கிறது. இங்கே உள்ளவர்கள் யாருக்கும் உயிரின் மதிப்புத் தெரியவில்லை. எனக்குத்
தெரியும். ஒரு வருடத்திற்கு முன்பு, என் குழந்தை ஒன்றைப் பறி
கொடுத்தேன். நீச்சல் குளத்தில் தவறி விழுந்து என் குழந்தைகள்
இரண்டில் ஒன்று இறந்து விட்டது. துக்கத்தில் ஒருவாரம் நான் தூங்க
வில்லை. இங்கே இத்தனை பாம்புகள் இழைகின்றன. கடித்து ஒருவர்
இறந்து போனால் என்ன ஆகும்? இந்தக் கிராமத்தில் உடனடி
சிகிச்சைக்கும் வழியில்லை. போகிற உயிர் சின்ன உயிராக
இருந்தால் என்ன? பெரிய உயிராக இருந்தால் என்ன? தோட்டத்தில் குடியிருப்பவன் அல்லது வீட்டிற்குள் வந்து போகிறவன் என்கிற
பேதம் உயிர்களுக்கு இல்லை. உயிர் உயிர்தான். ஆகவே நீங்கள்
செய்யுங்கள். பணம் பற்ற வில்லை என்றால் எனக்குத் தகவல்
சொல்லுங்கள். மேலும் தேவையான பணத்தை அனுப்பிவைக்கிறேன்”
அவன் வார்த்தைகளில் மயங்கிப்போன சண்முகம் செட்டியார்,
தனக்குரிய சர்வீஸ் தொகையைக் கூட எடுத்துக்கொள்ளாமல், முழு
மனதுடன் அவன் கொடுத்த பணத்திற்குள்ளேயே, அதைச் சேவையாகச்
செய்து முடித்தாரம்.
தேனப்பனுக்குக் கண்கள் பனித்துவிட்டன. எழுந்து தன் நண்பனிடம்
விடை பெற்றவன், முத்தாய்ப்பாக இப்படிச் சொல்லிவிட்டுச் சென்றான்.
“எங்கள் வீட்டிற்குள்ளும் சில கருவேல மரங்கள் இருக்கின்றன. கூடவே ஒரு சந்தன மரமும் இருக்கிறது! அதுதான் நாங்கள் செய்த பாக்கியம்”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏபரல்’ 2011 மாத இதழில் வெளிவந்து, பலரது பாராட்டையும் பெற்ற சிறுகதை. நீங்களும் படித்து மகிழ உங்களுக்காகக் கொடுத்துள்ளேன். கதை எப்படி இருக்கிறது சாமிகளா?
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
4.5.11
Short Story கருப்பஞ்செட்டியாரும் கருவேலமரமும்!
Subscribe to:
Post Comments (Atom)
அன்புடன் வணக்கம்
ReplyDeleteவாத்தியார் அய்யா !! நிறைய குடும்பங்களில் இது போன்ற கருவேல மரங்களுடன் நச்சு பாம்பு குடி இருக்கிறது..
என்ன செய ??""".பொது பண்டம் புழுத்து போகும் என்பார்கள் ஏன் அம்மா """ இது போன்ற மன தெளிவுள்ள மனிதர்கள் ஒருவர் இருந்தால் அந்த ஒட்டு மொத்த குடும்பமும் தழைக்கும்... நல்ல கருத்து கொண்ட கதை.. (உண்மை சம்பவம் ) நன்றி...
"தன்னைப் போல பிறரை என்னும் தன்மை வேண்டுமே - அந்த
ReplyDeleteதன்மை வளர உள்ளத்திலே கருணை வேண்டுமே..."
///// “அண்ணே பணத்தின் மதிப்பு அதைச் சேர்த்து வைப்பதில் இல்லை. நல்ல விதத்தில் அதைச் செலவழிப்பதில்தான் இருக்கிறது. இங்கே உள்ளவர்கள் யாருக்கும் உயிரின் மதிப்புத் தெரியவில்லை. எனக்குத் தெரியும். ஒரு வருடத்திற்கு முன்பு, என் குழந்தை ஒன்றைப் பறி கொடுத்தேன்.////
உண்மை தான், நெஞ்சில் கருணை மிகுந்த புத்திசாலிகள் தான் தனக்கு வரும் துன்பங்களின் மூலம் இந்த உலகை சரியாக புரிந்து கொண்டு சரியான பாதையில் நடக்க ஆரம்பிக்கிறார்கள்.....
அதற்கு தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்ற பேதம் இல்லை...
அருமையான சிதனையைத் தரும் சிறுகதை....
நன்றிகள் ஐயா!
நல்ல சிறுகதை ஐயா,
ReplyDeleteமெய்யப்ப செட்டியாருக்கு
ReplyDeleteமெய்யாலுமே வாழ்த்துக்கள்..
அவுகள கேக்கோனும்
இவுகள கேக்கோனும்னு
அங்கன இங்கன
சொம்மா இல்லாம நம்ம
சண்முகஞ் செட்டியாரு அந்த (பழனி)
சண்முகத்தை தேன் முன்னாடிகாட்டிச்சு
எம்புட்டு பெரிய விசயத்தை
இப்படி அழகா சொல்லிட்டீக..
இரும்புகடலைய
இனிப்பு கடலையா மாத்திடுக..
ஒங்களுக்குதேன் சபாசு..
பிறகென்னே...
மெய்யப்ப செட்டியாருக்கு
ReplyDeleteமெய்யாலுமே வாழ்த்துக்கள்..
அவுகள கேக்கோனும்
இவுகள கேக்கோனும்னு
அங்கன இங்கன
சொம்மா இல்லாம நம்ம
சண்முகஞ் செட்டியாரு அந்த (பழனி)
சண்முகத்தை தேன் முன்னாடிகாட்டிச்சு
எம்புட்டு பெரிய விசயத்தை
இப்படி அழகா சொல்லிட்டீக..
இரும்புகடலைய
இனிப்பு கடலையா மாத்திடுக..
ஒங்களுக்குதேன் சபாசு..
பிறகென்னே...
ஆசிரியருக்கு வணக்கம்.
ReplyDeleteஅய்யா,
சிறுகதை சுவாரசியமாக உள்ளது (உண்மை நிகழ்ச்சி?) இக்கதையின் நீதியை
புரிந்து கொண்டால் நாட்டில் உள்ள அநேக "கருவேல மரங்கள்" ளில் ஒரு சில
மரங்களாவது "சந்தன" மரங்களாக மாறும் என்பது நிச்சயம். ஆசிரியருக்கு
நன்றி.
அன்புடன், அரசு.
சொத்துக்களை சம்பாத்தித்து, அவரவ்ர் காலம் வரையில் நன்கு அனுபவித்து விட்டு, கால் பங்கு மட்டுமே வாரிசுகளுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை தான தர்மம செய்து விட வேண்டும்! வாரிசுகளுக்கு தரமான கல்வியையும், நல்ல துணையையும் அமைத்துக் கொடுத்து விட வேண்டும்!தன் காலம் இருக்கும்போதே வாரிசுகளுக்கு சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும்! வாரிசுகள் தன் காலிலேயெ நிற்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்! பொதுவில் நிறைய சொத்துக்களை விட்டு சென்றால், பொறுப்பில்லாமல், மூதாதையர் விட்டுச் சென்ற சொத்துக்களின் அருமை தெரியாமல், தமக்குள் சண்டையிட்டு பாழ்படுத்தி விடுவர்!
ReplyDeleteநல்ல கதை ஆசிரியர் அவர்களே. இந்த சிறுகதையில் பல உண்மைகளைத் தேடி எடுத்துக் கொள்ளலாம். பிற உயிர்களை மதிக்கும் பாங்கு, ஊருக்கு நல்லது செய்ய வேண்டுமென்கிற தயாள சிந்தை, கூலி கேட்பதிலும் வரைமுறை இல்லாத மனிதர்கள் இப்படி. தன் வாரிசின் உயிர் பிரிந்ததன் சோகம், பிற உயிர்கள் பாதுக்காக்கப்பட வேண்டுமென்று பணத்தை அள்ளிக் கொடுத்தவரை பாராட்ட வேண்டும். நான், எனக்கு என்று உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பவர்கள் மத்தியில் இப்படியும் சிலர். என் வீட்டில் ஒரு மாமரம் அடுத்த வீட்டுப் பக்கம் போய் நிறைய காய்த்திருந்தது. அந்த வீட்டு மாடியில் குடியிருந்த இஸ்லாமிய நண்பர் என்னை ஒரு நாள் அழைத்து, என்ன சார்! மரத்தில் இருக்கும் மாங்காய்களை நீங்கள் பறிப்பதே இல்லையா? எங்கள் வீட்டுச் சொந்தக்காரரும் அவர் மனைவியும் வரும்போதெல்லாம் பெரிய பைகள் நிறைய காய்களைப் பறித்துக் கொண்டு போகிறார்கள். எங்கள் வீட்டுக் குழந்தைகள் என்னிடம் கேட்கின்றன. பக்கத்து வீட்டு ஐயாவிடம் கேட்டு வாங்கித் தருகிறேன் என்று சொன்னேன் என்றார். இருவரது குண விசேஷங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். மனிதர்களில் எத்தனை வண்ணங்கள். அந்த மரத்தின் கிளையை வெட்ட ஒருவனிடம் கூலி பேசினேன். பெரிய கிளை, ஜாக்கிரதையாக வெட்ட வேண்டும், ஐநூறு ஆகும் என்றான். நானூறு ரூபாய் தருகிறேன் வெட்டு என்றேன். அவன் வந்து வெட்டி முடித்து கிளைகளை துண்டு போட்டான். ஒரு தட்டு வண்டி கொண்டு வந்திருந்தான். அந்தத் துண்டுகளை அந்த வண்டியில் ஏற்றத் தொடங்கினான். என்னப்பா இது! மரம் வெட்ட கூலி கொடுத்தாயிற்றே. பிறகு எதற்கு மரத் துண்டுகளை எடுக்கிறாய் என்றேன். மரம் வெட்ட கூலி சரி. வெட்டிய துண்டுகள் எனக்குத்தான் என்றான். காலம் மாறியது தெரியாத மூடனாக இருந்துவிட்டேனோ நான்? இப்போது தர்மம் இதுதானோ என்று எனக்கு சந்தேகம் இன்று வரை தீரவில்லை. கடைசியில் சண்டைபோட்டு பாதி மரத் துண்டுகளையாவது மீட்டேன். அவன் விடாப்பிடியாக பாதியைக் கொண்டு போய் விட்டான்.
ReplyDeleteஒரு பிரச்சனையை எடுத்துக் கொண்டு, அதனை நன்கு கூர்மைப் படுத்தி, நடு முற்றத்தில் கொண்டு நிறுத்தி, அடுத்து என்னவோ என்று ஆவலைத்தூண்டி, அதற்கான சுபமான முடிவை அழகான மண்வாசனையுடன் கொடுப்பது தங்களின் தனிப் பாணி ஐயா!இக்கதையிலும் அத் தன்மையைப் பார்க்கிறோம்.
ReplyDeleteகதையும் அழகு! கதைக்குப் போட்டுள்ள செட்டிநாட்டு வீட்டின் உட்புறத் தோற்றமும் அழகு.
Ayya,Really nice story.
ReplyDeleteSituation tune.
1) "Kodiyele maliga poo, manakkuthe maane edukkavaa thodukkava thavikkiren naane"
Full Song dedicated.
2) "Rasathi unna Kaanaatha nenju kaathadi pool aaduthu"
very good story.learnt the moral.
ReplyDelete///////hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வணக்கம்
வாத்தியார் அய்யா !! நிறைய குடும்பங்களில் இது போன்ற கருவேல மரங்களுடன் நச்சு பாம்பு குடி இருக்கிறது.. என்ன செய்ய ??""".பொது பண்டம் புழுத்து போகும் என்பார்கள் ஏன் அம்மா """ இது போன்ற மன தெளிவுள்ள மனிதர்கள் ஒருவர் இருந்தால் அந்த ஒட்டு மொத்த குடும்பமும் தழைக்கும்... நல்ல கருத்து கொண்ட கதை.. (உண்மை சம்பவம் ) நன்றி...//////
நல்லது நன்றி நண்பரே!
Alasiam G said...
ReplyDelete"தன்னைப் போல பிறரை என்னும் தன்மை வேண்டுமே - அந்த
தன்மை வளர உள்ளத்திலே கருணை வேண்டுமே..."
///// “அண்ணே பணத்தின் மதிப்பு அதைச் சேர்த்து வைப்பதில் இல்லை. நல்ல விதத்தில் அதைச் செலவழிப்பதில்தான் இருக்கிறது. இங்கே உள்ளவர்கள் யாருக்கும் உயிரின் மதிப்புத் தெரியவில்லை. எனக்குத் தெரியும். ஒரு வருடத்திற்கு முன்பு, என் குழந்தை ஒன்றைப் பறி கொடுத்தேன்.////
உண்மை தான், நெஞ்சில் கருணை மிகுந்த புத்திசாலிகள் தான் தனக்கு வரும் துன்பங்களின் மூலம் இந்த உலகை சரியாக புரிந்து கொண்டு சரியான பாதையில் நடக்க ஆரம்பிக்கிறார்கள்.....
அதற்கு தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்ற பேதம் இல்லை...
அருமையான சிதனையைத் தரும் சிறுகதை....
நன்றிகள் ஐயா!//////
நல்லது. உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி ஆலாசியம்!
This comment has been removed by the author.
ReplyDelete/////சிவ.சி.மா. ஜானகிராமன் said...
ReplyDeleteநல்ல சிறுகதை ஐயா,/////
நல்லது. நன்றி இடைப்பாடியாரே!
//////iyer said...
ReplyDeleteமெய்யப்ப செட்டியாருக்கு மெய்யாலுமே வாழ்த்துக்கள்..அவுகள கேக்கோனும் இவுகள கேக்கோனும்னு
அங்கன இங்கன சொம்மா இல்லாம நம்ம சண்முகஞ் செட்டியாரு அந்த (பழனி) சண்முகத்தை தேன் முன்னாடிகாட்டிச்சு எம்புட்டு பெரிய விசயத்தை இப்படி அழகா சொல்லிட்டீக.. இரும்புகடலைய இனிப்பு கடலையா மாத்திடுக.. ஒங்களுக்குதேன் சபாசு.. பிறகென்னே.../////
இரும்புக் கடலையா? என்ன அது சுவாமி?
//////ARASU said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம். அய்யா,
சிறுகதை சுவாரசியமாக உள்ளது (உண்மை நிகழ்ச்சி?) இக்கதையின் நீதியை
புரிந்து கொண்டால் நாட்டில் உள்ள அநேக "கருவேல மரங்கள்" ளில் ஒரு சில
மரங்களாவது "சந்தன" மரங்களாக மாறும் என்பது நிச்சயம். ஆசிரியருக்கு
நன்றி.
அன்புடன், அரசு.///////
உண்மைக்ககதையல்ல. முற்றிலும் கற்பனை! நன்றி
////ரம்மி said...
ReplyDeleteசொத்துக்களை சம்பாத்தித்து, அவரவர் காலம் வரையில் நன்கு அனுபவித்து விட்டு, கால் பங்கு மட்டுமே வாரிசுகளுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை தான தர்மம செய்து விட வேண்டும்! வாரிசுகளுக்கு தரமான கல்வியையும், நல்ல துணையையும் அமைத்துக் கொடுத்து விட வேண்டும்!தன் காலம் இருக்கும்போதே வாரிசுகளுக்கு சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும்! வாரிசுகள் தன் காலிலேயெ நிற்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்! பொதுவில் நிறைய சொத்துக்களை விட்டு சென்றால், பொறுப்பில்லாமல், மூதாதையர் விட்டுச் சென்ற சொத்துக்களின் அருமை தெரியாமல், தமக்குள் சண்டையிட்டு பாழ்படுத்தி விடுவர்!//////
உண்மைதான். பிரித்துவாங்கிக் கொண்டுபோன பின் நம்மை மதிக்கமாட்டார்கள். என்று பல பெரியவர்கள், கடைசிவரை பிரித்துக் கொடுப்பதில்லை
Thanjavooraan said...
ReplyDeleteநல்ல கதை ஆசிரியர் அவர்களே. இந்த சிறுகதையில் பல உண்மைகளைத் தேடி எடுத்துக் கொள்ளலாம். பிற உயிர்களை மதிக்கும் பாங்கு, ஊருக்கு நல்லது செய்ய வேண்டுமென்கிற தயாள சிந்தை, கூலி கேட்பதிலும் வரைமுறை இல்லாத மனிதர்கள் இப்படி. தன் வாரிசின் உயிர் பிரிந்ததன் சோகம், பிற உயிர்கள் பாதுக்காக்கப்பட வேண்டுமென்று பணத்தை அள்ளிக் கொடுத்தவரை பாராட்ட வேண்டும். நான், எனக்கு என்று உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பவர்கள் மத்தியில் இப்படியும் சிலர். என் வீட்டில் ஒரு மாமரம் அடுத்த வீட்டுப் பக்கம் போய் நிறைய காய்த்திருந்தது. அந்த வீட்டு மாடியில் குடியிருந்த இஸ்லாமிய நண்பர் என்னை ஒரு நாள் அழைத்து, என்ன சார்! மரத்தில் இருக்கும் மாங்காய்களை நீங்கள் பறிப்பதே இல்லையா? எங்கள் வீட்டுச் சொந்தக்காரரும் அவர் மனைவியும் வரும்போதெல்லாம் பெரிய பைகள் நிறைய காய்களைப் பறித்துக் கொண்டு போகிறார்கள். எங்கள் வீட்டுக் குழந்தைகள் என்னிடம் கேட்கின்றன. பக்கத்து வீட்டு ஐயாவிடம் கேட்டு வாங்கித் தருகிறேன் என்று சொன்னேன் என்றார். இருவரது குண விசேஷங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். மனிதர்களில் எத்தனை வண்ணங்கள். அந்த மரத்தின் கிளையை வெட்ட ஒருவனிடம் கூலி பேசினேன். பெரிய கிளை, ஜாக்கிரதையாக வெட்ட வேண்டும், ஐநூறு ஆகும் என்றான். நானூறு ரூபாய் தருகிறேன் வெட்டு என்றேன். அவன் வந்து வெட்டி முடித்து கிளைகளை துண்டு போட்டான். ஒரு தட்டு வண்டி கொண்டு வந்திருந்தான். அந்தத் துண்டுகளை அந்த வண்டியில் ஏற்றத் தொடங்கினான். என்னப்பா இது! மரம் வெட்ட கூலி கொடுத்தாயிற்றே. பிறகு எதற்கு மரத் துண்டுகளை எடுக்கிறாய் என்றேன். மரம் வெட்ட கூலி சரி. வெட்டிய துண்டுகள் எனக்குத்தான் என்றான். காலம் மாறியது தெரியாத மூடனாக இருந்துவிட்டேனோ நான்? இப்போது தர்மம் இதுதானோ என்று எனக்கு சந்தேகம் இன்று வரை தீரவில்லை. கடைசியில் சண்டைபோட்டு பாதி மரத் துண்டுகளையாவது மீட்டேன். அவன் விடாப்பிடியாக பாதியைக் கொண்டு போய் விட்டான்.//////
உங்களின் பாராட்டிற்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி கோபாலன் சார்!
kmr.krishnan said...
ReplyDeleteஒரு பிரச்சனையை எடுத்துக் கொண்டு, அதனை நன்கு கூர்மைப் படுத்தி, நடு முற்றத்தில் கொண்டு நிறுத்தி, அடுத்து என்னவோ என்று ஆவலைத்தூண்டி, அதற்கான சுபமான முடிவை அழகான மண்வாசனையுடன் கொடுப்பது தங்களின் தனிப் பாணி ஐயா!இக்கதையிலும் அத் தன்மையைப் பார்க்கிறோம்.
கதையும் அழகு! கதைக்குப் போட்டுள்ள செட்டிநாட்டு வீட்டின் உட்புறத் தோற்றமும் அழகு.///////
உங்களின் பாராட்டிற்கும், ரசனை உணர்விற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!
//////தகடூரான் said...
ReplyDeleteAyya,Really nice story.
Situation tune.
1) "Kodiyele maliga poo, manakkuthe maane edukkavaa thodukkava thavikkiren naane"
Full Song dedicated.
2) "Rasathi unna Kaanaatha nenju kaathadi pool aaduthu"////////
என்ன சிச்சுவேசன், என்ன பாட்டு, ஒன்றும் புரியவில்லை சுவாமி!
/////ஜெயலக்ஷ்மி முத்து said...
ReplyDeletevery good story.learnt the moral./////
நல்லது. நன்றி சகோதரி!