மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.8.10

மண்டபத்தில் ‘அதையும்’ எழுதிக் கொடுப்பார்களா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மண்டபத்தில் ‘அதையும்’ எழுதிக் கொடுப்பார்களா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 9
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
-----------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.25
திருநாராயணன்
ஸ்ரீரங்கம்
   
வணக்கம் அய்யா
கேள்விகள் எல்லாம் என்னுடைய சொந்த கற்பனையே!
யாரோ ஒருவர் மண்டபத்தில் உருவாக்கி கொடுத்து கேட்கப்பட்டது 
அல்ல! சுத்த அக்மார்க் திருநாராயணனால் கேட்கப்பட்டது.
நன்றி அய்யா!

அதையெல்லாம் நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அதுபோகட்டும், மண்டபத்தில் எழுதிக்கொடுக்கிற ஆட்கள் உங்கள் ஊரில் உள்ளதுபோல் தெரிகிறது. கேள்விகளை மட்டும்தான் எழுதித் தருவார்களா? கேள்விகளுக்குப் பதில்களையும் எழுதித்தருவார்களா? கேட்டுச் சொல்லுங்கள்:-))))

1. “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன?

திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகச்
சொல்லப்படும் சொல்லடை அது! இப்போது எல்லோரும் உஷாராக இருக்கிறார்கள். பத்துப் பொய்களைக்கூடச் சொல்ல முடியாது.
சொன்னால், பிறகு மகளிர் காவல்நிலைத்தில் நிற்க வேண்டிய
நிலைமை ஏற்படலாம். அதையும் யோசித்துப் பொய்களைச்
சொல்வது நல்லது.

2. குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?

மூன்று பேர்கள் ஒரே ராசியாக இருந்தால் கோச்சாரத்தில் கிரகங்கள்
மூன்று பேரையும் ஒரே சமயத்தில் படுத்தி எடுக்கும். ஏழரைசனி,
அஷ்டமச் சனி எல்லாம் ஒரே நேரத்தில் வந்து உலகக்கோப்பை
ரேஞ்சிற்கு விளையாடும்.ராசிநாதனாக உள்ள கிரகத்தின் கோவிலுக்கு, அடிக்கடி சென்று வணங்கிவிட்டு வரலாம். உதாரணம் சிம்ம ராசியாக இருந்தால் சூரியனார் கோவில். மகரம் அல்லது கும்ப ராசியாக இருந்தால் திருநள்ளாறு. அல்லது தனித்தனியாக அவரவர்களுக்கு நடக்கும்
தசையை வைத்து, தசாநாதனின் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு வரலாம். வசதியில்லாதவர்கள், தங்களின் ஜென்மநட்சத்திரத்தன்று
உள்ளூர் சிவன் கோவிலுக்குச் சென்று மனம் உருகி சிவனை வழி பட்டு
விட்டு வரலாம். அர்ச்சனை செய்துவிட்டு வரலாம்.  நல்ல பலன்
கிடைக்கும். நம்பிக்கையுடன்  வணங்குவது முக்கியம்.

3. ஜாதகத்தில் மனைவிக்கு கண்டம் எனக் கூறப்பட்டிருந்தால் அதனை 
மாற்ற முடியுமா?

மாற்ற முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நம்மால் (மனிதப் பிறவிகளால்) அதை மாற்ற முடியாது!

4. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கைந்து குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழப்பது ஏன்?

பெற்றவர்களின் ஜாதகத்தில் கடுமையான புத்திர தோஷம் இருக்கும்.
அதன் காரணமாக அவர்கள் ஒரே நாளில் ஒரே பாதக நிகழ்வில் தங்கள் குழந்தைகளைப் பறி கொடுக்க நேரிடலாம். 12ஆம் வீட்டில் மாந்தி
இருந்தாலும்ஜாதகனுக்கு இதுபோன்ற திடீர் இழப்புக்கள் ஏற்படும்! அது குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பொன், பொருள், வீடு, வாசல், நிலம் நீச்சு என்று எதுவாக வேண்டுமென்றாலும்
இருக்கலாம்!It is called as sudden loss to the native

5. ஒருவர் செய்யும் செயல்களை வைத்து அவர்களுக்கு கற்பனையான 
ஜாதகம் உருவாக்க முடியுமா?(உதாரணம்‍_ பூவரசி)

குணங்களை வைத்து லக்கினத்தை உருவாக்கலாம். ஆனால் செயல்கள் எனும்போது கஷ்டம். முழு ஜாதகத்தையும்  கற்பனையாக உருவாக்க முடியாது. பிறப்பு விவரங்களை ஜாதகத்துடன் இணக்க முடியாது. அல்லது உருவாக்கிய  ஜாதகத்துடன் அவற்றைக் கொண்டுவர முடியாது. ஒன்றிற்கொன்று இடக்காக இருக்கும்!
---------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.26
C.குமரேசன்
   
/////பஞ்சாங்கத்தில் சந்தேகம்.
ரிஷிகள் ஜோதிடம் பார்க்கையில் அல்லது எழுதுகையில் வாக்கிய முறையைத்தான் பயன்படுத்தினார்கள். அப்படி என்றால் அவர்கள் எழுதி வைத்திருக்கும் ஜாதக புத்தகங்களும், பலன்களும் அவற்றின் அடிப்படையில்தானே  இருக்க முடியும். இப்பொழுது நாம் திருக்கணிதப் பஞ்சாங்கம் பயன்படுத்தினால் பலன்கள் மாறாதா? நாம் கோள்சாரத்தில் நவீன அறிவியலைப் பயன்படுத்துகிறோம் என்றால் பலன்களையும் மாற்றிக்கொள்ள  வேண்டும் அல்லவா? அவர்கள் உடலுக்குத் தகுந்த சட்டையை அவர்கள் அணிந்திருந்தார்கள்.  இப்பொழுது  நமக்கு?//////

திருக்கணிதத்தை வகுத்த மேதைகளையே அதையும் மாற்றி எழுதித் தரச்சொல்லலாமே!

எத்தனை நாகரீக மாற்றங்கள் வந்தாலும் அம்மாவை அம்மா என்றுதான் கூப்பிடுகிறோம். அம்மாவும் தன் தாய்ப்பாசத்தில் எந்தக் குறையும் இல்லாமல்தான் நடந்துகொள்கிறார்.

ஆடுமாடுகள் எல்லாம் அதே நான்கு கால்களுடன்தான் பிறக்கின்றன. பிறக்கும் குழந்தைகளும் பத்து வயதுவரை குழந்தைகளாகத்தான் இருக்கின்றன.

இயற்கையில் மாற்றம் இல்லை.பருவங்களில் மாற்றம் இல்லை. கிரகங்களின் சுழற்சியிலும் மாற்றம் இல்லை. சுழற்சிப் பாதையிலும் மாற்றம் இல்லை. சுழற்சி வேகத்திலும் மாற்றமில்லை.

ஹோண்டா சிட்டி கார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதைப்போல அல்லது புல்லட் ரயில் 300 கிலோமீட்டர்  வேகத்தில் போவதைப்போல (அதாவது வாகனங்கள் வேகத்தில் விஞ்ஞானத்தின் தாக்கம் இருப்பதைப்போல)  கிரகங்களில் எந்தத்தாக்கமும் இல்லை. சூரியன் தன்னுடைய சுற்றை முடிப்பதற்கு ஒரு ஆண்டு காலத்தைத்தான்
எடுத்துக்கொள்கிறது. நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆறு
மாதத்திலோ அல்லது எட்டு மாதத்திலோ தன்சுற்றை  முடித்துக்கொள்வதில்லை. முடித்துக்கொண்டால் என்ன ஆகும்?
சூரியனுக்கு செமஸ்டர் சிஸ்டம் எல்லாம்கிடையாது. அரியர்ஸ்
எல்லாம் வைக்க முடியாது. தனக்குப்   பதிலாக ஃப்ராக்ஸி எல்லாம்
கொடுக்க முடியாது.

அதுபோல சந்திரன் 27 நாட்களைத்தான் எடுத்துக்கொள்கிறது. (27 நட்சத்திரங்கள். 27 நாட்கள்). சந்திரனும் எந்த பம்மாத்து வேலையும் செய்வதில்லை.

புரிகிறதா?

அதுபோல ரிஷிகள் கணித்துவைத்துவிட்டுப்போயிருக்கும், கிரகங்கள் அவற்றின் வீடுகள். அதனதன் பலன்களிலெல்லாம் ஒரு மாற்றமும் ஏற்படாது. ஏற்படுத்த முடியாது. நீங்கள் குழப்ப நினைக்கும், அல்லது குழம்பி நிற்கும், திருக்கணித ஜாதகத்திலும், 9 கிரகங்கள் 12 வீடுகள்தானே  இருக்கின்றன?

திருக்கணித ஜாதகத்திற்கும் வாக்கிய ஜாதகத்திற்கும் சுமார் 2 பாகைகள் வித்தியாசம் உள்ளது உண்மை. அதனால் லக்கின சந்திப்பில் பிறந்த ஜாதகர்களுக்கு மட்டும் நட்சத்திர பாகையில் வித்தியாசம் ஏற்படும்.
சிலருக்குதிருக்கணிதத்தில் ஒரு லக்கினமும், வாக்கியத்தில் ஒரு
லக்கினமும் வரும்.

நான் காலசந்திப்பில் பிறந்தவன். திருக்கணிதத்தின்படி என்னுடைய
லக்கினம் கடகம்! வாக்கியத்தின்படி சிம்ம லக்கினம். அதேபோல ராமன் அயனாம்சத்தின்படியும் சிம்ம லக்கினம்தான். என் பாட்டனார் எழுதிவைத்திருக்கும்  ஜாதகத்தில் சிம்ம லக்கினம் என்றுதான் குறிபிட்டுள்ளார். சிம்மலக்கினத்தைவைத்துப் பார்க்கையில்
மட்டுமே என்ஜாதகப் பலன்கள் சரியாக வருகின்றன. ஆகவே நான் திருக்கணிதத்துடன் டூ விட்டுவிட்டேன்.

இதை வைத்து ஒருவருக்கு அருள் வந்து என்னுடன் கும்மி ஆடினார்.
நீங்கள் துவக்க காலத்தில் திருக்கணிதத்தை ஆதரித்தது ஏன் என்று கேட்டு என்னை மடக்கினார். அஷ்டகவர்க்கம் இல்லாதவர்களுக்கான கணினி ஜாதகத்தைச்சிபாரிசு செய்தேன். துவக்கத்தில் (எனக்குத் தெரிந்து) திருக்கணிதம் மட்டுமே program செய்யப்பட்டிருந்தது. இப்போது கணினி ஜாதகத்தில் எல்லா முறைகளுக்குமே option வந்து விட்டது.

சிலருடைய அப்பாவிற்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். அவர்கள்
வீட்டுக் குழந்தைகளைக்கேட்டால், இந்த  இருதாரக் குடும்பங்களில்
உள்ள அவலங்கள் தெரியும். அதுபோல காலசந்திப்பில் பிறந்தவர்
களுக்கு சில அவலங்கள் உண்டு. முக்கியமான அவலம். ஜோதிடன்
சொல்லும் பலன்களில் பாதி சரியாக இருக்காது. பலன்கள்  சரியாக
இருக்க வேண்டும் என்றால், வாக்கியத்தை வைத்து ஜாதகத்தைக்
கணித்துப் பலன்களைப் பார்க்க  வேண்டியதுதான் ஒரே வழி! அப்பா எழுதிவைத்திருக்கும் ஜாதகத்தை பத்திரமாக வைத்துக்கொள்வது
முக்கியம்.

இல்லை, விஞ்ஞானம், நாகரீகம், திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கு
வக்காலத்து என்று ஏங்குபவர்கள் எல்லாம், வாக்கியத்தை மறந்து
விட்டு அல்லது வாக்கியத்தின் நம்பகத்தன்மையைக் கேள்வி 
கேட்பதை விட்டு விட்டுத் திருக்கணிதத்தின்படி தங்கள் ஜாதகத்தை வைத்துக்கொள்ளலாம் இல்லையென்றால் மண்டையைப் பிய்த்துக் கொண்டுஅலைய வேண்டிய திருக்கும்

அவருக்கு (காலசந்திப்பில் பிறந்தவர்களுக்கு) அந்த இரண்டு
லக்கினங்களின் குணாதியம்சங்களும் இருக்கும்.

திருக்கணிதம் பிடித்திருந்தால், அதுதான் நாகரீக, விஞ்ஞான
வளர்ச்சியின் சாதனை என்று நினைப்பவர்கள்,  அதையே கடைப்
பிடிக்கலாம். உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள். ஒரு பெண்
சேலை கட்டிக்கொள்ளலாம்,சுடிதார் போட்டுக்கொள்ளலாம்.  
2 piece dressஆக Top & Midi போட்டுக்கொள்ளலாம். எல்லாம்
அவளது  விருப்பம். அதுபோல நீங்கள் எதை வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளுங்கள் (கடைப்பிடியுங்கள்) அது  உங்கள் விருப்பம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.27
V.சுந்தரேசன்
புனைப்பெயர்: சுந்தர் வேலவன்
துபாய்
வயது 30
     
Dear sir,
I have two Doubts

1. Reshba lakanthirku 9 and 10 owner same planets(saturns) intha jathakathuku Dharmakarma athipathi Yogam unda?

ஏன் இல்லை. 9 & 10ஆம் இடங்கள் இரண்டிற்கும் சனீஷ்வரனே அதிபதியாகிவிடுவதால், ஜாதகத்தில் அவர் திரிகோண வீடுகளில் அல்லது கேந்திரங்களில் இருந்தால் அந்த யோகம் உண்டு.

2. Guru vin VAKRA parviku pallan unda?

குருவின் வக்கிர பார்வைக்குப் பலன் உண்டு!

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை
தரும். குரு எப்படி இருந்தாலும்  நன்மைகளையே செய்வார். வக்கிரம் பெற்றதால் குறைந்த அளவே செய்வார். குறைந்த அளவு  என்றவுடன்,  எத்தனை சதவிகிதம் குறையும் என்று ஒருவர் கேட்டார். அதை
அளந்து சொல்ல டிஜிட்டல் தராசு இல்லை.

அழகான மனைவி கிடைப்பாள் என்று சொல்லும்போது, எப்படிபட்ட
அழகுடன் இருப்பாள் என்று கேட்டால்  என்ன சொல்ல முடியும்?

கிளியோபட்ராவும் அழகுதான். மோனாலீசாவும் அழகுதான். மர்லின் மன்றோவும் அழகுதான். எலிசபெத் டெயிலரும் அழகுதான். கண்ணாம்பாவும் அழகுதான், டி.ஆர். ராஜகுமாரியும் அழகுதான். பானுமதியும் அழகுதான். பத்மினியும் அழகுதான். செளகார் ஜானகியும் அழகுதான். அஞ்சலிதேவியும் அழகுதான் சாவித்திரியும் அழகுதான்., சரோஜாதேவியும் அழகுதான். தேவிகாவும் அழகுதான் விஜயகுமாரியும் அழகுதான். கே.ஆர்.விஜயாவும் அழகுதான், வாணிஸ்ரீயும் அழகுதான், சரிதாவும் அழகுதான், ரேவதியும் அழகுதான், அம்பிகாவும் அழகுதான், ராதாவும் அழகுதான், அமலாவும் அழகுதான், பானுப்பிரியாவும் அழகுதான் ஸ்ரீதேவியும் அழகுதான்,
மீனாவும் அழகுதான், தேவயானியும் அழகுதான், சிம்ரனும் அழகுதான், ஜோதிகாவும்அழகுதான், நயன்தாராவும் அழகுதான், நமீதாவும்
அழகுதான், ரம்பாவும் அழகுதான் ஷ்ரேயாவும் அழகுதான், ஷில்பா
செட்டியும் அழகுதான், அனுஷ்கா சர்மாவும் அழகுதான், அஸினும்
அழகுதான், பிரியா மணியும் அழகுதான், பாவ்னாவும் அழகுதான்
தமன்னாவும் அழகுதான!

அழகு என்பது அவரவர்கள் கண்ணுக்கு  மாறுபடும்.

தேவையும் மாறுபடும்.ஒருவருக்கு மாதம் இருபதாயிரம் இருந்தால்
போதும். ஒருவருக்கு இருபது லட்சம் கிடைத்தாலும் பத்தாது.
இந்தியாவின் டாப் டென் பணக்காரர்களுக்கு அதுவே ஆயிரம்
கோடியென விரிவடையும்.

அதுபோல வக்கிர பலன் என்பது ஜாதகத்திற்கு ஜாதகம் மாறுபடும்.
ஒரு நாளில் 12 வித்தியாசமான லக்கினங்களில் பிறக்கும் 12 விதமான லக்கினங்களுக்கும் அது மாறுபடும். அதன் பலன்களும் மாறுபடும்.

ரேசன்கடையில் உள்ள மேலாளரை, அளவு குறைத்தால், சட்டையைப் பிடித்துக்கொண்டு அல்லது கழுத்தைப் பிடித்துக் கொண்டு கேட்பதைப்
போல கிரகங்களைக் கேட்க முடியாது.

ஆகவே கிடைத்தவரை சரி என்று சந்தோஷமாகப் போய்விட
வேண்டியது தான்!

ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, உங்களுக்கு அடுத்து வருவது சுக்கிர தசை.
அதில் உங்களுக்கு செல்வம் சேரும்  என்று ஒரு ஜோதிடர் சொன்னால், எவ்வளவு செல்வம் வரும்? எந்த வழியில் வரும்? வருவது தங்குமா?
எந்த  அளவு தங்கும்? என்று நீங்கள் கேள்வியை அடுக்கினால்,
அதற்கெல்லாம் அவரால் பதில் சொல்ல முடியாது. செல்வம் வரும்
என்று பொதுவான சந்தோசத்துடன் இருங்கள். எவ்வளவு வரும்?
அதை எப்படி ஒளித்து  வைப்பது? எப்படி இன்கம்டாக்ஸில் இருந்து
தப்பிப்பது போன்ற கவலைகளை எல்லாம் விட்டொழியுங்கள்.
வருகின்ற அன்றைக்கு அதைப் பார்த்துக்கொள்ளலாம்.

எதற்கும் அளவு கிடையாது!
ஆசைக்கு அளவு உண்டா?
தேவைக்கு அளவு உண்டா?
ஆனால் ஒன்றிற்கும் மட்டும் அளவு உண்டு.
அனைவருக்கும் அது ஒரே அளவுதான்!
அதுதான் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண்
அதன் அளவு அனைவருக்கும் 337 மட்டுமே!
-----------------------------------------------
மின்னஞ்சல் எண்.28
ராஜா,
மும்பை.
வயது 45
(நான் உங்கள் பதிவேட்டில் இருக்கிறேன்)

ஐயா வணக்கம்,

ரிஷப லக்கினத்திற்கு சனி 9 -ம் மற்றும் 10 -ம் இடத்திற்கு அதிபதியாகிறான். எனவே, சனி  9 -ம் இடத்திலோ அல்லது 10 -ம் இடத்திலோ இருந்தால் 'தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகுமா ?.

இன்றையப் பதிவில் மின்னஞ்சல் எண் 27லிலும் இதே கேள்வி. அதற்கான பதில்தான் உங்களுக்கும் படித்துக் கொள்ளுங்கள்.
===========================================================
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

17.8.10

சுக்கிரனும் பின்னணி இசையும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 சுக்கிரனும் பின்னணி இசையும்!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 8
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
-----------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.22
பெயர்: குணசேகரன்
பிறந்த ஊர் பொள்ளாச்சி
இருப்பது ஸ்வீடனில்
வயது 26  ,
தனுசு லக்கினம் ,
மகரராசி
  
////////ஐயா ,
  புதன் சுப கிரகம் அதனுடன் மாந்தி உள்ளது. அதுவும் லக்கினத்தில், புதன் 7, 10ற்கு அதிபதி .லக்குனாதிபதி 12 ல் உடன் சூரியன் ,கேது .லக்குனாதிபதி குரு. இதில்  எப்படி பலன் தெரிந்து கொள்ளுவது ?
ஒரு வீட்டின் பலன் எடுத்து கொண்டால் இப்படி கூட்டாக இருந்தால் எப்படி கணிப்பது ? இதே போல் 11 ல் சுக்கிரன் ,சனி இருவரும் இருக்கிறார்கள் .சுக்கிரன் 11 ன் அதிபதி சனி இரண்டின் அதிபதி எப்படி பலன் கொள்ளுவது .ஒருவர் சொன்னார் இரண்டாம் வீட்டிற்கு பலன் எடுக்கும் போது ஆறாம் வீட்டையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று எனக்கு  கொஞ்சம் விளக்குங்களேன் ?//////////

வீடுகள், நிலம், தோட்டங்கள், வங்கியிருப்புக்கள் என்று குடும்பச் சொத்துக்கள் பலவிதமாகக் கொள்ளையாக உள்ளது. வாரிசு ஒருவர் என்றால் பிரிக்க வேண்டாம். சொத்துக்களை மதிப்பிட்டு இன்ன தேறும் என்று சொல்லிவிடலாம். நமக்குத் தெரிந்த அழகான பெண்ணையும் அவருக்குக் கட்டி வைத்துவிடலாம்.

அதே நேரத்தில் அந்த சொத்திற்கு நான்கு பேர்கள் வாரிசுகள். அத்துடன் பெரியவனுக்குத் திருமணமாகி அவன் மாமனார் சகுனியும் (மாந்தியும்) உடன் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். சொத்துக்களை எப்படிப் பிரிப்பீர்கள்? அல்லது எப்படி மதிப்பிடுவீர்கள். சமயத்தில் விவகாரம் பூதாகரமாகி கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு என்று ஜாதகர்களின் காலத்தில் பிரித்துக்கொள்ள முடியாதபடி சிக்கலில் மாட்டிக்கொண்டு விடுவதும் உண்டு.
சமயத்தில் கட்டைப் பஞ்சாயத்து வைத்தும் பிரித்துக்கொள்ளலாம். சில இடங்களில் வெட்டு, குத்து விழுந்து வழக்கு வேறு விதமாகிவிடுவதும் உண்டு.

அதுபோலத்தான் ஜாதகத்தை அலசுவதும்.

உங்கள் ஜாதகத்தையே எடுத்துக்கொள்ளூங்கள் (சொந்த ஜாதகத்தை வைத்துக் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்லியும் கேட்டிருக்கிறீர்கள். உங்களை என்ன செய்வது? பொள்ளாச்சிக்காரார் என்பதால் விட்டு விடுகிறேன். பொள்ளாச்சி எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் ஒன்று அதனால் விட்டு விடுகிறேன்:-)))

தனுசு லக்கினம். லக்கினாதிபதி குரு பகவான் 12ல் போய் மெத்தை போட்டு படுத்துக்கொண்டு விட்டார். அவரை எழுப்பி விடாலாம். ஏதாவது வேலை செய்யுங்கள் சாமி என்று சொல்லலாம் என்றால், உடன் பாக்கியாதிபதி (9ஆம் அதிபதி) சூரியனும் போய் படுத்துக்கொண்டுவிட்டார், இருவரும்தான் அப்படி என்றால் உச்சம் பெற்ற கேது அய்யாவிற்கும் அது 12ஆம் இடமாக அமைந்துவிட்டது. லக்கினாதிபதியால் பெரிய பலன் இருக்காது. அவர் தூங்குவதால், நீங்கள் எதிர் நீச்சல் போட வேண்டும். லக்கினாதிபதி 12ல் இருந்தால் அதிக முயற்சி குறைந்த பலன். ஆனால் உடன் பாக்கியாதிபதியும் சேர்ந்து இருப்பதால், வாய்ப்புக்களை அவர்களே கொண்டு வந்து தருவார்கள். (படுத்திருந்தாலும் அவர்கள் பெயர் ராசிக்கும், சேர்க்கை ராசிக்கும் நடக்கும்) இருந்தாலும் இரண்டாயிரம் டாலருக்கு நீங்கள் உழைத்தாலும், கையில் 1000 டாலர்கள்தான் சேரும். அல்லது தேறும். மற்ற இருவரும் அவரவர் தசா / புத்தியில் எழுந்து முடிந்த அளவு (முழு அளவு இல்லை) பலனைத் தந்துவிட்டு மீண்டும் படுத்துக்கொள்வார்கள்.

ஜாதகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெரிய நஷ்ட ஈடு இரண்டாம் அதிபதி சனீஷ்வரன் உச்சம் பெற்றுள்ளார். உச்சம் பெற்று லக்கினத்திற்குப் பதினொன்று, தன் வீட்டிற்குப் பத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் குடும்ப மற்றும் தன ஸ்தானத்திற்கு அதிபதி. ஆகவே கையில் காசு புரளும். 7ஆம் அதிபதி புதன் வந்து லக்கினத்தில் அமர்ந்ததோடு, தன்னுடைய வீட்டையும் நேரடிப் பார்வையில் வைத்திருக்கிறார். அதனால் உங்களுக்கு நல்ல சுட்டியான பெண் மனைவியாக அமைவாள். அவள் வரும்போது செல்வத்துடன் வருவாள்.அவள் வந்த பிறகு நீங்கள் எதிர் நீச்சல் போட வேண்டிய நிலைமை இருக்காது. மோட்டார் மாட்டிய படகுடன் அவள் வருவாள். அவளுடன் படகில் ஏறி நீங்கள் சொகுசாகப் பயணிக்கலாம். “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, சேர்ந்திடக் கண்டேனே” என்று அவள் அழகாகப் பாடி உங்களை மயக்கவும் செய்வாள். வாழ்க்கை ஆனந்தமாகிவிடும். தன் சொந்த வீட்டில் இருக்கும் சுக்கிரன் அதற்கு BGM போடுவார். (BGM என்றால் என்னவென்று தெரியுமல்லவா? அதுதான் பின்னணி இசை Back ground music))

ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால், ஜாதகன் சுகமான பின்னணி இசையோடு வாழ்வான்!

இரண்டாம் அதிபதி சனீஷ்வரன் உச்சமாக உள்ளார். அதனால் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் மனைவி உங்களை வளைய வந்து உங்களுடன் உரசல் இல்லாமல் (அதாவது சண்டை சச்சரவு இல்லாமல்) குடும்பம் நடத்துவாள்.

இப்படித்தான் ஜாதகத்தை அலச வேண்டும். அலசல் போதுமா? விளக்கம் போதுமா?
-------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.23
அசோக்குமார்

//////Dear Sir,
Thanks a lot for giving Question and Answer opportunity.
My Questions:
1.What is the remedy if Jupiter is placed in 5th Place? Jupiter is natural benefic , but  some astrologers are telling that the person with Jupiter placed in 5th will not get a child, Why?
Regards,
Ashok///////

ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற அல்லது தள்ளுபடியாக ஒரு நாடு மட்டும் ஓட்டுப்போட்டால் செல்லாது. கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஐந்து நாடுகள் ஓட்டுப்போட வேண்டும்.

அதுபோல குழந்தை பாக்கியத்திற்கான காரகன் குரு ஐந்தில் இருந்தால் பயப்பட வேண்டாம். ஐந்தாம் வீட்டு அதிபதி முக்கியமானவர். ஐந்தாம் வீடும் சிறப்பாக இருக்க வேண்டும். தீய சக்திகளின் பார்வை அல்லது சேர்க்கையில்லாமல் இருக்க வேண்டும். இதே கேள்வியை வேறு ஒரு மாணவர் வேறு விதமாகக் கேட்டிருந்தார். அவருக்குப் 10.8.2010 அன்றையப் பதிவில் பதில் சொல்லியுள்ளேன். அதையும் பாருங்கள்.அதன் சுட்டி இங்கே உள்ளது.

நீங்கள் அதைத் தேடி அலைய வேண்டாம் என்று நானே அதை உறித்துக் கீழே கொடுத்துள்ளேன்

கேள்வி: 3) 5ல் 19 பரல்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்ைலயா?
மின்னஞ்சல் எண்.15 தேதி 10.8.2010
ஐந்தாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள் உண்டு. House of mind,House of Poorva punniya & House of Children. சந்திரன் (மனகாரகன்) குரு (புத்திரகாரகன்) அதன் அதிபதி ஆகியவர்களைப் பொறுத்து அந்தந்தத் துறைகள் சிறப்பாகச் செயல்படும். ஆகவே 19 ஐ மட்டும் வைத்துக் குழம்பாதீர்கள். அவர்களின் வலுவையும் பாருங்கள்.

காரகன் பாவ நாசம் என்பது பொதுவிதி: தந்தைக்குக் காரகன் சூரியன் தன்னுடைய ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் ஒன்றும் செய்வதில்லை. ஜாதகனுக்கு நன்மையைச் செய்வார். ஆதே போல ஆயுள்காரகன் சனீஷ்வரன் தன்னுடைய ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்குக் கெடுதல் செய்யாமல் நீண்ட ஆயுளைத் தருவார். அதுபோல குரு பகவானும் மற்ற அமைப்புக்களை வைத்து நன்மையைச் செய்வார். நம்புங்கள். குரு ஐந்தில் இருந்தால், தன்னுடைய விஷேசப் பார்வையான ஒன்பதாம் பார்வையால் ஜாதகனின் லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகனுக்குப் பல நன்மைகளைச் செய்வார். அதையும் மனதில் வையுங்கள்

விளக்கம் போதுமா நண்பரே!
--------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.24
P. வெங்கடேசன்.
கோயம்புத்தூர்
37 வயது

  
அய்யா,
நான் உங்கள் வகுப்பறை மாணவன்.
எனது இராசி - மிதுனம்
எனது நட்சத்திரம் - புனர் பூசம்
எனது லக்கினம் - கன்னி

என்னுடைய கேள்வி ஒன்று தான்.
எனது ஜாதகத்தில் பத்தாம் இடத்தில புதன், சந்திரன், சனி, செவ்வாய் என நான்கு கிரகங்கள் உள்ளன. எனக்கு வேலையில் அடிக்கடி இடைவெளி ஏற்படுகிறது. ஒரு வேலையை விட்டால் உடனே வேலை கிடைப்பது இல்லை. எனக்கு வேலை நிலைக்க அல்லது உடனடியாக வேலை கிடைக்க என்ன வழி? எனது கேள்விக்கு எனது மின் அஞ்சல் வழியாகவே பதில் அனுப்பினால் போதும். மிக்க எதிர்பார்ப்புடன்
வெங்கடேசன்
கோவை.

சொந்த ஜாதகத்தை வைத்துக் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்லியும் கேட்டிருக்கிறீர்கள். உங்களை என்ன செய்வது? நானும் கோவையில் தான் வசித்து வருகிறேன் என்பதால் விட்டு விடுகிறேன்.

கன்னி லக்கினம். லக்கினாதிபதி புதன் 10ல். 11ஆம் அதிபதி சந்திரனும் உடன் உள்ளார். இருவரும் சேர்ந்து வண்டியை நன்றாக ஓட விடுவார்கள். ஆறாம் அதிபதி சனியும், எட்டாம் அதிபதி செவ்வாயும் உடன் இருப்பதால், அடிக்கடி கத்தியைக் காட்டி, மிரட்டி வண்டியின் ஓட்டத்திற்குப் பல இடைஞ்சல்களைச் செய்வார்கள். சக்கரங்களில் ஒன்றைப் பழுதாக்கிவிடுவார்கள். இது அமைப்பு. பொதுவாக ஒரு கட்டத்தில் அல்லது ஒரு வீட்டில் 4 கிரகங்கள் இருந்தால் அது கிரக யுத்தக் கணக்கில் வரும். எந்த எந்தக் கிரகங்கள் யுத்தத்தில் அடிவாங்கி ராணுவ மருத்துவமனையில் படுத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

இந்த நான்கு கிரகங்களின் தசாபுத்திகள் வரும்போது, பலன்கள் நல்லதும் கெட்டதுமாகக் கலந்துவரும். அவைகள் நான்குமே 10ஆம் வீட்டில் இருப்பதால், பத்தாம் வீட்டிற்குரிய பலன்களில்தான் அப்படி ஏற்படும்

அதெல்லாம் பெரிய வேலை. அதையெல்லாம் பார்த்துக்குழம்ப வேண்டாம். கிடைக்கும் வேலையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். என்ன சிரமம் வந்தாலும் தாக்குப்பிடித்து அதிலேயே இருங்கள். அதற்குரிய மன வலிமையை இறைவழிபாடு கொடுக்கும்.

புனர்பூச நட்சத்திரம். பெருமாளைத் தினமும் வழிபடுங்கள். நம்பிக்கையோடு வழிபடுங்கள். அவர் நல்வழியைக் காட்டுவார்!
---------------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

15.8.10

முன்னுக்கு வாடா கண்ணா!


இன்று இந்திய சுதந்திரத்திற்கு 63 வயதுகள் நிறைவு பெற்று 
64வது வயது துவங்குகிறது. அனைவரும் மகிழ்ச்சி கொள்வோம். 
சுதந்திரத் தியாகிகளை நினைவு கூர்வோம். 
கிடைத்த சுதந்திரத்தைப் பேணிக்காப்போம். 
போற்றி மகிழ்வோம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



நமது வகுப்பறை சீனியர் மாணவர் 
தஞ்சாவூர் திரு. கே.முத்துராம கிருஷ்ணன் (KMRK)
அவர்களின் எழில்மிகு தோற்றம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முன்னுக்கு வாடா கண்ணா!

முன்னுக்கு வா என்று அந்தக் காலத்தில் சொல்பவர்கள் இருவர்.
ஒருவர் குதிரை வண்டிக்காரர். இன்னொருவர் பள்ளிக்கூட வாத்தியார்.
குதிரை வண்டிக்காரர், வண்டியின் பாரத்தை சமன் செய்வதற்காக அமர்ந்திருப்பவர் களை முன்னுக்கு வரச் சொல்வார். அதுபோல வகுப்பறையில்  வாத்தியார், தன் மாணவர்களின் மேல் உள்ள
அன்பின் மிகுதியாலும், பாடத்தை நன்றாகக் கவனிக்கும் பொருட்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும்
முன்னுக்கு வரச் சொல்வார்.

இன்று  நமது வகுப்பறை சீனியர் மாணாவர் திருவாளர்.MRK என்றழைக்கப்பெறும் தஞ்சை முத்துராமகிருஷ்ணர்
தன்னுடைய பள்ளி அனுபவத்தைத் கட்டுரையாக்கிக் கொடுத்துள்ளார். வலை ஏற்றி உள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள். பின்னூட்டம் மூலம் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++
Over to the posting!
+++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் சொல்ல வேண்டும் என்றே காத்திருந்தேன். நானாக எழுதக் கொஞ்சம் கூச்ச‌மாக‌ இருந்த‌து. திரு.சுப்புரத்தினமும், திரு.தஞ்சாவூராரும் என்னைப் ப‌ற்றி அறிந்த‌ மூத்த‌வ‌ர்க‌ள். அவர்கள் முன்னிலையில் சுயபுராண காலட்சேபம் செய்யத் தயங்கினேன். வாத்தியார் நன்கு 'எடிட்' செய்து என் மானத்தைக் காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையில் எழுதத் துணிந்தேன்.

'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'என்பது தெரிந்த பழமொழி. இந்தப் பழமொழியில் 'பெண்' என்பதற்கு பதில் 'ஆசிரியர்'  என்று மாற்றி வாசிக்க வேண்டும்.

ஓர் ஆசிரியர் நினைத்தால் வெறும் களிமண்ணையும் பிசைந்து உருவமாக்கி அதனுள் உயிர் மூச்சை ஊதி ஆளாக்கி, முன்னேற்றப் பாதையில் நடமாடவும் விட்டு விடுவார். அதற்கு நானே ஒரு உதாரணம்.

ஒரு மாணவனைப் பாராட்டிப் பாராட்டிப் பேனைப் பெருமாளாக மாற்றிவிடும் திறமை ஒரு நல்லாசிரியருக்கு உண்டு.என்னை அப்படி உரு மாற்றிய ஆசிரியரைப் பற்றியும், அவர் சம்பந்தப்பட்ட அந்த நாளும் நினைவுக்கு வந்தது.

அவருடைய திருப்பெயர் உயர்திரு கோபாலகிருஷ்ணைய்யர்.
சேலத்தில் நான் 7ம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு அவர் அறிவியல்
பாடம் எடுத்தார். அப்போது நான் கடைசி பெஞ்சு மாணவன்.

வீட்டுக்குக் கடைசிப் பிள்ளை என்பதால் எல்லோருக்கும் செல்லம். என் அம்மாவிற்கு நான் நன்றாகச் சாப்பிட வேண்டும். அது ஒன்றுதான்
அன்றைய தேதியில் அவருடைய கவலை. ஓவர் ஈட்டிங் செய்து ஊளைச் சதையும், மழுங்கிய மூளையுமாக நானும் பள்ளி சென்று வந்து கொண்டிருந்தேன். .படிப்பில் ஆர்வம் மிகவும் குறைவு.

திருப்பு முனையான அந்த நாளூம் வந்தது.  இந்த இடத்தில் திரு கோபாலகிருஷ்ணைய்யர் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல
வேண்டும். திரு அய்யர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில்
சிப்பாயாகப் பணியாற்றியவர் என்று கூறக் கேட்டுள்ளேன். அவர்
தலையில் குண்டு உரசிச் சென்றதால், சில சமயஙக‌ளில் கட்டுப்படுத்த முடியாத அளவு கோபப் படுவார். சீக்கிரமாகவே மனம் மாறி வருத்தம் தெரிவிப்பார். சிறிது நேரம் கண் மூடி தியானத்தில் இருப்பது போல் அமர்வார்.உடனே மகிழ்ச்சியான மனிதராக வெளிப்படுவார்.
மனைவியை இளம் வயதில் காலனுக்குப் பறி கொடுத்தவர். தனியாக
ஒரு சிறு அறையில் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்து
வந்தார். எந்த நேரமும் அவர் தனி அறைக்குச் சென்று பாடம்
கேட்கலாம். பணம் கேட்காத இலவச டியூசன்!

அன்று வழக்கம் போல நான் கடைசி பெஞ்சில் அமர்ந்து, நான் உண்ட மயக்கத்தில் இருந்தேன். திரு அய்யர் அவர்கள் 'ஆக்ஸிஜன்' என்ற பாடம் நடத்தத் துவங்கினார். வகுப்பைப் பார்த்து திரு அய்யர் கேட்டார்:

"தணலைத் தண்ணீர் விடாமலும், மணல் தூவாமலும் அணைக்கும் வழி என்ன?"

ஒவ்வொரு மாண‌வனாக எழுந்து விழிக்கிறார்கள். ஒரு சிலர் 'தண்ணீர் விடலாம்' என்கிறார்கள். சிலர் 'மணல்'என்கிறார்கள்.

"அதுதான் கூடாது என்கிறேனே"என்று ஆசிரியர் மிரட்டுகிறார்.

என் முறை வந்தது.

”தணல் மேல் ஒரு சட்டியைக் கவிழ்த்து வைத்து விட்டால், தணல் தானாக அவிந்துவிடும் சார்!' என்றேன்.

"இது எப்படியடா உனக்குத் தெரிந்தது?" ஆசிரியர் வியப்புடன் கேட்டார்.

"எங்கள் வீட்டில் என் அம்மா குளிக்க விறகு அடுப்பில் வென்னீர் போட்டு முடித்தவுடன் விறகை வெளியில் இழுத்துத் தணலைத் தட்டி அதன் மீது சட்டியைக் கவிழ்த்து வைப்பார்கள். அந்தத் தணல் கரியாக மாறிவிடும். அதனை மீண்டும் கரி அடுப்பில் பயன் படுத்துவார்கள்" என்று அவருக்குப் பதிலைச் சொன்னேன்.
.
"சபாஷ்! ஏன் தணல் அவ்வாறு அவிந்து போகிறது?" என்று அவர் மீண்டும் கேட்டார்.

"காற்று கிடைக்காததால்.." என்றேன்.

"பலே! பலே!அதுதான் இன்றைய பாடம். நெருப்பு எரிவது, காற்றில் உள்ள ஆக்ஸிஜனால். புரிகிறதா?"என்றார் அய்யர்.

மேலும் சொன்னார்: "நீராவியின் ஆற்றலைக் கண்டுபிடிக்கும் போதும், வீட்டில் அம்மா தேனீர் போடக் கெட்டிலில் வென்னீர் போட்டதையும், கெட்டில் மூடி நீராவியால் தூக்கப்படுவதையும் கண்டு ஆய்வில் ஈடு பட்டார் ஜேம்ஸ் வாட். இதோ நம் வகுப்பிலும் ஒரு ஜூனியர் ஜேம்ஸ் வாட். வாடா! நீ ஏனடா பின்னால் உட்காருகிறாய்? முன்னுக்கு வாடா!" என்று பலவாறு புகழ்ந்தார்.

அன்று முதல் படிப்பதில் ஊக்கம் பிறந்தது. அய்யரிடம் நல்லபெயர் எடுக்கப் படிக்க ஆரம்பித்தேன். ஏதோ இந்த அளவாவது முன்னேற்றம் கண்டேன்.

என் காதுகளில் எப்போதும் அவருடைய "முன்னுக்கு வாடா!" என்ற அவரின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்னை ஊக்குவித்துக்கொண்டே இருக்கிறது. இதைப் பலமுறை பலரிடமும் சொல்லி மகிழ்ந்து இருக்கிறேன். என் பணி ஓய்வு நாள் அன்று பிரிவு உபசார நிகழ்ச்சியிலும் நனறியுடன் அதை நினைவு கூர்ந்தேன்.

நல்லாசிரியர்கள் அனைவருக்கும் இப்பதிவைக் காணிக்கை ஆக்குகிறேன்.

வாத்தியார்கள் அனைவரும் வாழ்க!

குரு பிரம்மா! குரு விஷ்ணு! குருதேவோ மஹேஷ்வர!
- ஆக்கம்: தஞ்சை முத்துராமகிருஷ்ணன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து வருவது இரண்டாவது பதிவு (சுதந்திர தின ஸ்பெஷல்)



நமது வகுப்பறை மாணவர் சீதாராமன் கண்ணனின் 
எழில்மிகு தோற்றம்.
இன்று அவருடைய ஆக்கம் ஒன்று அரங்கேறியுள்ளது. 
படித்துப்பாருங்கள்
சீதாராமன் கண்ணன்
வயது 31
சொந்த ஊர்: வாசுதேவ நல்லூர், நெல்லை மாவட்டம்
வசிக்கும் ஊர்: தோஹா, கத்தார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நெஞ்சைத் தொட்ட கதை!

ஓ...வெற்றிக்கு இதுதான் காரணமா?

ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனை களுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்த மானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப் பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!
----------------------------------------------------------------
நட்புடன்,,
நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!
------------------------------------------------------
ஆக்கம்: சீதாராமன் கண்ணன், கத்தார்
_________________________________________

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!