Astrology: கோள்சாரச் சனியின் பயண காலம் Saturn's transit period
பிள்ளை வளர்ந்து இளைஞனாகி விட்டால், தன் தந்தை சொல்லும் அறிவுரைகளைக் கேட்கமாட்டான். இல்லாளும், வயதாகிவிட்டால், கணவனை மதிக்க மாட்டாள். கல்விக் கற்றுத் தேரிய மாணவனும் ஆசிரியரைத் தேடமாட்டான். வியாதி முற்றிலும் குணமாகிவிட்டால், மக்களும் வைத்தியரைத் தேட மாட்டார்கள் என்று ஞானி ஒருவன் சொல்லிவைத்தான்.
உரைநடையாகச் சொல்லவில்லை. பொட்டில் அடித்த மாதிரிப் பாடலாகச் சொல்லிவைத்தான். நீங்கள் அறிந்து கொள்ளப் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.
“பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல்புத்தி கேளான்
கள்ளின் நல்குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப்பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகோர் பண்டிதரைத் தேடார்!
-விவேக சிந்தாமணி என்னும் நூலில் வரும் பாடல் இது!
உலக இயல்பு அது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். அதுபோல நல்ல நிலைமையில் இருக்கும் எவனும் ஜோதிடத்தையோ அல்லது ஜோதிடரையோ நாடமாட்டான். ஒரு கஷ்டம் வரும்போதுதான், அதுவும் அவனால் அதைத் தீர்க்க முடியாத நிலை அல்லது சூழ்நிலை வரும்போதுதான், தன் ஜாதகத்தைத் தூசி தட்டிக் கையில் எடுப்பான்.
முன்பு ஒரு முறை நண்பர் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார்: “நான் செய்யாத தவறிற்காக, இப்போது என் அலுவலகத்தில் பெரிய பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிறேன்”
நான் கேட்டேன்: “நீ தவறு செய்யாமல் எப்படி அவர்கள் உன்னை ஆட்படுத்துவார்கள். அதில் உன் பங்களிப்பு ஏதாவது நிச்சயமாக இருக்க வேண்டும்”
“ஆமாம், எனக்குக் கீழே உள்ளவன் செய்த தவறு. அவன் மீது நம்பிக்கை உள்ள காரணத்திற்கக, அவன் வைத்த காகிதங்களில் அவற்றை ஆராயமல் கையெழுத்துப் போட்டேன். அது மட்டுமே நான் செய்த தவறு!”
“போதாதா? அவனைப் போன்றவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை இடுவதற்குத்தானே உன்னை நியமித்திருக்கிறார்கள். நீ ஒன்றைப் படிக்காமல் எப்படி கையெழுத்துப்போடலாம்? இது வேலையில் அக்கறையின்மை கணக்கில் வரும்”
“வரும் என்ன, வந்துவிட்டது. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. விசாரணை நடைபெறுகிறது. எனக்கு ஒலையோடு நிற்குமா அல்லது வேலை போய்விடுமா என்று தெரியவில்லை. பயமாக இருக்கிறது”
அவன் தன்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். வாங்கிப் பார்த்தேன்.
இதுபோன்ற கேள்விகளுக்கு, தொழில் ஸ்தானமாகிய 10ஆம் இடத்தை லக்கினமாக வைத்துக் கொண்டு, ஜாதகத்தில் உள்ள அமைப்புக்களைப் பார்க்க வேண்டும்.
அவர் மேஷ லக்கினக்காரர். பத்தாம் இடம் மகரம். அதன் அதிபதி, அதாவது பத்திற்கு உரியவன், சனீஷ்வரன், அவன் அந்த வீட்டிற்கு 5ஆம் இடத்தில் திரிகோணமேறி இருந்தான். அதுவும் நட்புவீட்டான ரிஷபத்தில். ஆகவே வேலையில் ஒரு ஸ்திரமும், முன்னேற்றமும் இருக்கும்.
சரி, இப்போது உள்ள பிரச்சினை எதனால்? அது தற்காலிகமானதா? எத்தனை நாட்கள் நீடிக்கும்? எப்போது உய்வு வரும்?
அதற்கு கோள்சாரச் சனியைப் பார்க்க வேண்டும். அதுவும் கேள்விக்குரிய பத்தாம் வீட்டை வைத்தே பார்க்க வேண்டும்.
அன்றையத் தேதியில், சனி சிம்மத்தில் இருந்தார். அது 10ஆம் வீட்டிற்கு எட்டாம் இடம். அதனால்தான் வேலையில் பிரச்சினை. அடுத்த சனிப்பெயர்ச்சி இன்னும் 3 மாதகாலத்தில் நடைபெறவுள்ளது.
ஆகவே நான் சொன்னேன். ”மூன்று மாத காலம் உன்னைப் பணிநிறுத்தம் (suspend) செய்யலாம். அதற்குப் பிறகு உண் பணி அங்கேயே தொடரும். வேலையை விட்டு உன்னைத் தூக்கும் வாய்ப்பு இல்லை”
அதன்படியே நடந்தது.
இதை ஒரு உதாரணத்திற்காகவே சொன்னேன்.
ஆகவே இதுபோன்ற சூழ்நிலைகளில் ஜாதகத்தை ஆராயும் வழிமுறைகளைக் கீழே கொடுத்துள்ளேன்:
1. கோள்சாரச் சனி 10ஆம் இடத்திற்கு, 6, 8 & 12ஆம் வீடுகளில் பயணிக்கும் காலங்களில், வேலை அல்லது தொழிலில் சரிவுகள் ஏற்படலாம். பிரச்சினைகள் உண்டாகலாம்.
2. ஆறாம் வீட்டில் (அந்த வீட்டிற்கு ஆறாம் இடத்தில்)பயணிக்கும் காலத்தில், தொழிலில் போட்டியாளர்கள் உருவாகி, நமக்கு இடைஞ்சலை உண்டாக்கலாம். எதிரிகள் ஏற்படலாம். நமது தொழிலை ஸ்தம்பிக்கச் செய்யலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில், நமக்கு எதிரானவர்களால், அல்லது நம்மைப் பிடிக்காதவர் களால், பாதிப்புக்கள் உண்டாகலாம். அவப்பெயர் உண்டாகலாம். அந்தக் காலகட்டத்தில் வேலையில் கவனமாக இருக்க வேண்டும்
3. எட்டாம் இடத்தில் (அந்த வீட்டிற்கு எட்டாம் இடத்தில்) சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில், தொழிலில் சரிவுகள் ஏற்படலாம். தொழிலை மாற்ற நேரிடலாம். தொழிலில் பலவிதமான சிக்கல்கள் (difficulties) ஏற்படலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில் அவருக்கு இடமாற்றம் ஏற்படலாம். கீழ் நிலைக்குத் தள்ளப்படலாம் (depromotion) அல்லது தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றப்படலாம்.
4. பன்னிரெண்டாம் இடத்தில் (அந்த வீட்டிற்கு பன்னிரெண்டாம் இடத்தில்) சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில், தொழிலில், விரையங்கள் (Financial losses) ஏற்படலாம். தொழிலைக் கைவிட நேரிடலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில் சம்பளம் குறைக்கப்படலாம். நமது பணியால், அலுவலில் ஏற்படும் நஷ்டத்திற்கான ஈட்டுத்தொகையை நாம் கட்டும்படி நேரிடலாம். அல்லது வேலையை விட்டே விலக நேரிடலாம்.
பயப்பட வேண்டாம். இவை எல்லாமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, அவற்றில் உள்ள கிரக நிலைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும்!
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com