மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.4.20

Astrology: கட்டுப்பட்ட திருமணம்!!!


Astrology: கட்டுப்பட்ட திருமணம்!!!

காதல் திருமணம் தெரியும்! அதென்ன கட்டுப்பட்ட திருமணம்?

Arranged Marriageஐ எப்படி மொழி பெயர்ப்பீர்கள்? ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றோ அல்லது பெற்றோர்கள் பார்த்துச் செய்துவைக்கும் திருமணம் என்றோ சொல்லலாம்.

பெற்றோர்களுக்குக் கட்டுப்பட்டு ஒரு இளைஞனோ அல்லது ஒரு
யுவதியோ செய்து கொள்ளும் திருமணத்தை பெற்றொர்களுக்குக்
கட்டுப்பட்ட திருமணம் என்று சொல்லலாம் இல்லையா?

அதுதான் கட்டுப்பட்ட திருமணம்!

எது நல்லது?

இரண்டுமே நல்லதுதான். தம்பதிகள் நல்லவிதமாக இணைந்து மன
ஒற்றுமை, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் சரி!

இப்படிப் பொதுவாகச் சொல்லித் தப்பிக்காதீர்கள் - குறிப்பிட்டுச்
சொல்லுங்கள் எது நல்லது? உங்கள் கருத்துப்படி எது நல்லது?

என் அனுபவப்படி எது நல்லது என்பதில் ஒரு கருத்து உள்ளது. என்
ஆசானும் அதைத்தான் சொல்லியிருக்கிறார். அதைப் பதிவின் நடுவில் சொல்லியிருக்கிறேன்.

அதற்கு முன் கொஞ்சம் வறுத்தல் அல்லது பொரித்தல், காரம், உப்பு,
மசாலா பொடிகள் சேர்க்கும் வேலைகள் உள்ளது. அது முதலில். அப்போதுதானே சுவாமி பதிவு சுவையாக இருக்கும்?

இந்த ஜோதிடத் தொடரை ஆரம்பித்து 150 மாதங்கள் ஆகின்றன.
இந்தக் காலக்கட்டத்தில் எனக்கு வந்த, வந்துகொண்டிருக்கின்ற மின்னஞ்சல்களில் 25 சதவிகிதம் தங்களுடைய திருமணத்தைப் பற்றிக் கேள்வி கேட்டு வந்தவைதான் அல்லது வருபவை.

ஆண் வாசகர்களிடம் இருந்தும் வந்துள்ளன! கணிசமான அளவு
பெண் வாசகிகளிடம் இருந்தும் வந்துள்ளன.

உதாரணத்திற்கு சென்றவாரம் ஒரு அன்பரிடம் இருந்து வந்ததைக் கொடுத்துள்ளேன் பாருங்கள்:

"சார், நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். என் காதல் நிறைவேறுமா? என்னுடைய ஜாதகப்படி அதற்கு வாய்ப்புண்டா? உங்களுக்கு நேரமில்லை என்று சொல்லாமல், எனக்காக - உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கும்
ஒரு ஜீவனுக்காக, தயவு செய்து என் ஜாதகத்தைப் பரிசீலனை செய்து
பதில் எழுத வேண்டுகிறேன்."

நான் உடனே பதில் எழுதிக் கேட்டேன்: "அந்தப் பெண்ணும் உங்களைக் காதலிக்கிறாரா?"

இதற்கு மின்னல் வேகத்தில் பதில் வந்தது." ஆமாம் ஐயா! அவளும்
என்னைக் காதலிக்கிறாள்!"

இதற்கு என்ன எழுதுவது?

நான் எழுதிய பதிலைக் கீழே கொடுத்துள்ளேன்:

"அவளும் உங்களைக் காதலிக்கும்போது எதற்காக ஜாதகத்தைப் பார்க்கிறீர்கள்?ஒரு பெண் தன்னுடைய இதயத்தை உங்களிடம் தந்து
விட்டாள் அல்லது தன்னுடைய இதயத்தில் உங்களுக்கு இடம் தந்து
விட்டாள் என்னும் நிலை எவ்வளவு உன்னதமானது? எவ்வளவு
உயர்ந்தது? அதைவிட ஜாதகம் ஒன்றும் பெரிதல்ல. அவளைத்
திருமணம் செய்துகொள்ளுங்கள்.அதற்கான முயற்சியைச் செய்யுங்கள்"

விழிகள் படபடக்க, ஒரு இளம் பெண், ஒரு ஆடவனுடன் பேசுவதே
பெரிய காரியம். அதற்கு அடுத்து அவனுடன் பழகுவது. அதற்கு அடுத்து நெருங்கிப் பழகுவது. மனம் விட்டுப்பேசுவது. விரும்புவது. இப்படிப் பலநிலைகளைத்தாண்டித்தான் காதல் உண்டாகும். முதல் நிலையிலேயே பல இளைஞர்களின் தாவு தீர்ந்து விடும்.

இதில் அந்தப் பெண்ணிடம், ஜாதகம் மற்றும் இதர புண்ணாக்குகளைக்
கேட்டு வாங்கிப் பார்த்துக் காதலிப்பது என்பது நடக்கிற காரியமா?

சரி வாங்கிப் பார்த்து, ஒத்து வராத ஜாதகம் என்றால் அல்லது உங்கள் ஜாதகப்படி கட்டுப்பட்ட திருமணம்தான் என்றால் என்ன செய்வீர்கள்? காதலைப் பாதியில் முறித்துக் கொண்டு விடுவீர்களா? நடக்குமா அது?

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு" என்றார் வள்ளுவர்.

ஆகவே காதலிக்கத் துவங்கிவிட்டால் மற்றதை எல்லாம் கடாசி விடுங்கள்!

"காதலி கடைக்கண் கட்டிவிட்டால், கள்வனுக்கு மாமலையும் ஓர் கடுகாம்'
என்பதுதான் காதலின் இலக்கணம்!

மாமலையே கடுகாகி விடும் போது ஜாதகம் எதற்கு?

இரு மனங்கள் இணைவது மட்டுமே காதல்!

அவளோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் வாழ்க்கைதான். அல்லது அவளுக்காக ஒரு தாஜ் மகாலைக் கட்டும் அளவிற்கு வாழ்ந்தாலும் அது வாழ்க்கைதான்.
காதலில் கட்டுண்ட பிறகு எதற்கு அவநம்பிக்கை? ஏன் ஜாதகம் பார்க்க நினைக்கிறீர்கள்?

காதலில் அகப்பட்டுக் கொண்டால், ஜாதகத்தை மறந்து விடுங்கள்l!
ஜாதகத்தில் நம்பிக்கை இருக்கிறது என்றால், காதலில் ஈடு படாதீர்கள்!

தலை எழுத்துப்படிதான் - விதித்தபடிதான் எல்லாம் நடக்கும். ஒவ்வொருவருக்கும் அவர்களின் தலை எழுத்துப்படிதான் திருமண
வாழ்வு!

காதல் திருமணம் என்றால் காதல் திருமணம்தான். கட்டுப்பட்ட
திருமணம் என்றால் அதுதான் நடக்கும். வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்!.

யாரும் எதையும் மாற்ற முடியாது. அதை உணர வேண்டும்.

எதையும் மாற்ற முடியாது என்றால் எதற்காக ஜாதகம்?
எதற்காக ஜோதிடம்?

தனிப்பட்ட ஒருவனுக்காக ஏற்பட்டதல்ல ஜோதிடக்கலை! உன்னைக்
காதல் தேடி வந்து விட்டதா? காதல் செய்! அவ்வளவுதான்!

மெல்லியலாள் சாய்ந்தாள் தாங்கிக் கொள்: மீறி நெஞ்சில் அடி விழுந்தால் வாங்கிக் கொள்!

துன்பம், பிரச்சினை என்பது, காதல் திருமணத்திலும் உண்டு! கட்டுப்பட்ட
திருமணத்திலும் உண்டு. ஏமாற்றம் இரண்டிலும் உண்டு.எது நல்லது? எது
கெட்டது? என்று விவாதம் செய்து, பிரித்து அலசவெல்லாம் முடியாது.

வம்பு, வாதம், பிரதிவாதம், சண்டை இவைகள் தான் மிஞ்சும். அவரவர்க்கு அவரவர் செய்வதுதான் நியாயம். அந்த நியாயத்தில் உண்மையெல்லாம் ஓரங்கட்டப் பட்டுவிடும்.

அதனால் என் கருத்திற்கு இங்கே இடமில்லை. என் ஆசான் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கருத்துத்தான் என் கருத்து. அதை அடுத்து
வரும் வரிகளில் கொடுத்திருக்கிறேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் "காதலைக் காவியத்திற்கு விட்டு விடுங்கள். கல்யாணத்தைப் பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.

அவர் எழுதிய 4 வரிக் கவிதை:

"காதலை காவியத்திற்கு விட்டு விடுங்கள் - உங்கள்
கல்யாணத்தை பெற்றோரிடம் விட்டுவிடுங்கள்"
பெற்றவர்கள் பார்ப்பதானால் பெருமையென்னவோ - அவர்கள்
மற்றதையும் பார்ப்பதனால் நன்மையல்லவோ"

நூற்றுக் கணக்கான காதல் படங்களுக்குப் பாடல்களை எழுதிய
அவருக்குத் தெரியாத காதலா, நமக்குத் தெரிந்துவிடப் போகிறது?"

ஒரு ஆணிற்கு இரண்டு முகங்கள் உண்டு. காதலிக்கும்போது
ஒரு முகம்தான் பெண்ணின் கண்ணில்படும். இரண்டாவது முகம் திருமணத்திற்குப் பிறகுதான் தெரியும். அதுபோல அவனுடைய
குடும்பப் பின்னணியைப் பற்றிப் பெண் நினைப்பது ஒன்றாக இருக்கும், திருமணத்திற்குப் பிறகு வேறொன்றாக இருக்கும். இதே விதிமுறைகள் பெண்ணிற்கும் சேர்த்துத்தான்.

பெற்றோர்கள் அக்கு வேறாக ஆணி வேறாக எல்லாவற்றையும் தீர விசாரித்துவிட்டுத் தங்கள் பெண்ணிற்கோ அல்லது பையனுக்கோ
மணம் முடிப்பதால். காதல் திருமணங்களைவிட கட்டுப்பட்ட
திருமணங்கள் பாதுகாப்பானது. அதனால்தான் கவியரசர்
சொன்னார். பெற்றோர்கள் பார்ப்பதால் என்ன பெருமையோ;
அவர்கள் மற்றதையும் பார்ப்பதால் வரும் நன்மையே என்றார்

வீடாகட்டும், வேலையாகட்டும், திருமண வாழ்க்கையாகட்டும்,
பாதுகாப்பும், சுதந்திரத் தன்மையும் முக்கியமில்லையா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்படிப்பட்ட திருமண வாழ்க்கை கிடைக்கும் என்பதை முன் பதிவில் எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் இங்கே எடுத்து எழுதினால், பதிவு, அனுமார் வால் போல நீண்டு விடும். ஆகவே எழுத வில்லை. விருப்பமுள்ளவர்கள் மீண்டும் ஒருமுறை படிக்கலாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி, இன்றையப் பாடத்திற்கு வருகிறேன்.

1.
காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும்.
அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு
கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். இந்த வலு
என்னும் வார்த்தைக்குப் பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன்.
அது உங்களுக்குத் தெரிந்ததுதான்.
2.
சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில்
வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ
அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும்.
அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
3.
ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம்
என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
4.
அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது
நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது
சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!
5.
ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால்
திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
6.
குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள்
ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது
- ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக்
கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில்
நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
7.
அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம்
அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்
திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
8.
அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி,
ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses)
- அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
9.
இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக
வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா?
அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை
இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு துபாய் போன்ற தேசங்களில்
போய் உட்கார்ந்து கொள்வது எப்படி நல்ல குடும்ப வாழ்க்கையாகும்?
கைபிடித்த மனனவியைவிட பொருள் ஈட்டல் முக்கியமா?
10
செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது
சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
11.
ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
கொள்கிறவன் பாக்கியசாலி!.
12.
1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண்
அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
13.
7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய
பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை
மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
14.
கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில்
புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
15.
மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று
பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு
கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள்
யோகமான பெண்தான்.
16.
கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து,
அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின்
மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள்.
இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள்.
அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
17.
எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும்.
லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள்
யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால்,
அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
18.
திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,
லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய
மூவரும் பலமாக இருக்க வேண்டும்.
19.
பெண்களுக்குப் பாகியஸ்தானமும், ஆண்களுக்கு லக்கினமும்
சிறப்பாக இருப்பது முக்கியம்
20.
இங்கே கூறப்படும் விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் பொதுவானதுதான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:
1.
லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து
இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று
இருப்பதும் கூடாது.
2.
ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத்
திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர்
உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3.
சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய
கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4.
சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5.
குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன்
பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6.
சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7.
ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8
ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9.
எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10.
ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11.
ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில்
செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12
எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில்
அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில்
அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
ஜாதகத்தில் உள்ள பலவிதமான அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே இங்கே எழுதுவதைப் படித்து விட்டு மகிழவும் வேண்டாம்.
கவலைப் பட்டுக் கலங்குவதும் வேண்டாம்.

Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

அன்புடன்'
வகுப்பறை வாத்தியார்
-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com