மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.11.11

வாரணாசியின் மறுபக்கம்!


 வாரணாசி நகர விடுதி நுழைவாயில் உள்ள நீண்ட நடை பாதை
200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்றது என்றாலும் 
எத்தனை அழகாக இருக்கிறது பாருங்கள்!
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரணாசியின் மறுபக்கம்!

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப்போல, ஒரு ஊருக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இன்று வாரணாசியின் மறுபக்கத்தைப் பார்ப்போம்!

சென்னையில் இப்போது இருப்பது போன்ற “பெருநகர் வளர்ச்சிக் குழுமம்”  Chennai Metropolitan Development Authority (CMDA) எல்லாம் அப்போது இந்தியாவில் எங்கும் இல்லாத காலம். அதனால்தானோ என்னவோ வாரணாசியில் உள்ள தெருக்கள் எல்லாம் முறைப்படி இல்லை. பெரும்பாலும் அகலக் குறைவாக நெரிசலாக உள்ளன. சந்துகளின் (Lanes) எண்ணிக்கை உள்ளூர்க்காரனுக்கே தெரியாது. அத்தனை சந்துகள். ஒவ்வொரு சந்தும் கிலோ மீட்டர் கணக்கில் நீளும். ஆனால் ஒவ்வொரு சந்தும் இறுதியாக கங்கைக்கரைக்கு உங்களைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

அதனால்,
வாழ்க காசி
வாழ்க காசி நகரத்து சந்துகள்!
வளர்க அவ்விடத்து மக்கள்!

காசிக்குச் சென்றால், சென்றவுடன் முதல் வேலையாக கங்கைக் கரைக்குச் சென்று உங்களுடைய முன்னோர்களுக்கு 'திதி’ கொடுக்கும் சடங்குகளைச் செய்து விடுங்கள். நகரத்தார் விடுதியில் விஸ்வநாத சாஸ்திரிகள் என்ற முதியவர் இருக்கிறார். அவர் உங்களுடன் கங்கைக் கரைக்கு வந்து வேத மந்திரங்களைச் சொல்லி, திதி கொடுக்கும் நிகழ்வை முழுமையாகச் செய்து விடுவார். அவருக்கு தட்சணை ரூ.300:00 மட்டுமே.

திதியை முடித்தவுடன் கங்கையில் நன்றாக முங்கிக் குளித்துவிட்டு வந்து விடுங்கள். அதற்குப் பிறகுதான் விசுவநாதர் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

மேலதிகத் தகவல்கள்:

தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தல் மற்றும் அஸ்தி கரைத்தல்: பனை ஓலைக் குடைகளின் கீழே ஏராளமான சாஸ்திரிகளை நீங்கள் பார்க்கலாம். அவர்களுக்கு அங்கே ‘பண்டா’க்கள் என்று பெயர். பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை அவர்கள் செய்து கொடுப்பார்கள். பித்ருக்கள் என்றால் அர்த்தம் தெரியாமல் விழிக்க வேண்டாம். உங்கள் முன்னோர்களைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். தாய், தந்தை இருவரும் உயிருடன் இல்லை என்றால் அவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். ஒருவர் மட்டும் இல்லை என்றால் இல்லாதவருக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் தாய்க்குக் கொடுக்கும்போது அவரைப் பெற்றவருக்கும், தாய் வழிப்பாட்டிக்கும் ஆக மொத்தம் 3 பேருக்கும் திதி கொடுக்க வேண்டும். அவர்களை நினைவில் கொண்டு வழிபடவேண்டும். தந்தைக்கும் அப்படியே. ஆகவே 3 தலைமுறை யினரின் பெயர்களையும், அவர்கள் பிறந்த நட்சத்திரத்தையும் குறித்து எடுத்துக்கொண்டு செல்லுங்கள். உங்களுடைய கோத்திரம் என்ன வென்று கேட்பார்கள். தெரிந்தால் சொல்லுங்கள். தெரியவிட்டால் ‘சிவகோத்திரம்’ என்று சொல்லுங்கள்.  எல்லா மக்களுமே சிவனுடைய பெயரைச் சொல்லி விடலாம். அவர் ஒன்றும் சண்டைக்கு வரமாட்டார்!


விஸ்வநாத சாஸ்திரி
த்ரப்பணம் செய்யக் காத்திருக்கும் பண்டா’க்கள் 
என்னும் வேத சாஸ்திரிகள்

புனித நீராடல் (Holy Dip): கங்கா தேவியே நதி வடிவில் ஓடுவதாக ஐதீகம். கரையில் தண்ணீர் சில இடங்களில் அசுத்தமாகக் காணப்படும். அதற்குக் காரணம் கங்கை வரும் வழியில் உள்ள பல நகரங்களின் கழிவு நீர்கள் அதனுடன் கலந்து வருவதுதான். படகில் ஏறி எதிர்க்கரைக்குச் சென்றால் தண்ணீர் சுத்தமாக இருக்கும் அங்கே குளித்துவிட்டுத் திருமபலாம். அது போல கங்கை நீரை நடு ஆற்றில் இருந்து கேன்களில் பிடித்துக்கொண்டு வாருங்கள். அந்தக் கேன்கள் எல்லாம் கரையிலேயே பணம் கொடுத்தால் கிடைக்கும்.

நதியில் குளியுங்கள். லட்சக்கணக்கானவர்கள் குளிக்கிறார்கள். ஆகவே ஒன்றும் ஆகிவிடாது. கோவிலின் அருகில் இருக்கும் அகல்யா கட்டம் என்னும் இடத்தில் படித்துறையும், அதனைத் தொட்டுக்கொண்டு ஓடும் கங்கையும் குளிப்பதற்கு வசதியாக இருக்கும். பெண்கள் உடை மாற்றிக்கொள்ள அங்கே metal sheetகளில் சிறு சிறு அறைகளைக் கட்டியும் வைத்துள்ளார்கள். கங்கையில் குளிக்கும்போது இதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் போக வேண்டும் என்ற பிரார்த்தனையோடு முங்கிக் குளியுங்கள்.

ஆன்ந்தக் குளியலுக்கு மேலும் ஒரு கட்டம். கேதார் கட்டம்

தெரிந்தும் தெரியாமலும், அறிந்து அறியாமலும் செய்த பாவங்கள் எல்லாம் போகும். நம்பிக்கைதான் முக்கியம். கேள்வி கேட்டு உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். காலையில் சூரிய உதயத்தின்போது குளிப்பது மிகவும் சிறப்பாகும். முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு சூரிய பகவானை வழிபடுவது அதைவிடச் சிறப்பாகும்!

 விளக்கு விற்கும் பெண்மணி!

காசித் தீர்த்தம் கொண்டு வருவத்ற்குக் கிடைக்கும் சிறு கேன்கள்

தீப வழிபாடு: குளித்து முடித்த பின்பு, ஊதுபத்திகளை ஏற்றி, விளக்குகளை ஏற்றி, பூக்களை வைத்து சிறு வழிபாட்டிற்குப் பிறகு அந்த விளக்கை அதைத் தாங்கியிருக்கும் இலையுடன் கங்கையில் மிதக்க விட்டு விடலாம். அவை எல்லாம் கங்கைக் கரையிலேயே கிடைக்கும்.

செல்லும்போது ஒரு ஆயிரம் ரூபாய்க்கு வெறும் பத்து ரூபாய் நோட்டுக்களாக கொண்டு செல்லுங்கள். அங்கே செலவழிப்பதற்கு சில்லறை தட்டுப்பாடு இருக்காது.

திதி கொடுக்காவிட்டாலும் முதலில் கங்கையில் முங்கிக் குளித்துவிடுங்கள். அது முக்கியம். அதற்குப் பிறகுதான் கோவில் விஸிட், நாஷ்டாவெல்லாம். அர்த்தம் ஆயிந்தா சுவாமி?
---------------------------------------------------------------------------------
தெருக்களில், சந்துகளில் வணிகம் செய்யும் கடைகள்தான் அதிகம் உள்ளன. எங்கே பார்த்தாலும் வியாபாரம்தான். துணிக்கடைகளே அதிகம். விதம் விதமான பனாரஸ் பட்டு சேலைகள். சிந்தடிக் சேலைகள். மனதை அள்ளும் சுடிதார்கள். ஜரிகை மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுடன் கூடிய துணிவகைகள். குர்த்தாக்கள், குழந்தைகளுக்கான ஆயத்த அடைகள்.பாசி மணி ஊசிமணிக் கடைகள். ருத்திராட்சம், காசிக்கயிறு காசித்தீர்த்தக் கடைகள். இனிப்பு விற்கும் கடைகள். சொல்லும் விலையில் பாதியைக் குறைத்துக் கேட்கலாம். தந்துவிடுகிறார்கள். எல்லாம் பேரம்தான். ஏமாந்தால் நம் தலையை அம்மியாக்கி மிளகாய் அரைத்து விடுவார்கள்.

எண்ணிக்கையற்ற டீக்கடைகள். மற்றும் ஜர்தா பீடாக் கடைகள்.

எல்லா இடங்களிலுமே டீ சூப்பராக இருக்கிறது. நம்மூர் டம்ளருக்கு அரை டம்ளர் அளவுதான் டீ தருகிறார்கள். மசாலா டீ. அது போதும். விலை நான்கு ரூபாய்தான். காசியில் விசுவநாதருக்கு அடுத்தபடியாக எனக்கு மிகவும் பிடித்தது அந்த மசாலா டீதான்.

அதற்காக ஒரு கடைக்காரனிடம் டீ மேன்மையின் இரகசியம் அறிந்து, அதற்குரிய டீத்தூளை ஹோல்சேல் கடைக்காரனிடம் கேட்டு வாங்கி வந்தேன். அந்த டீத்தூளுடன் நெஸ்கஃபே காப்பிப் பவுடரை சிறிது கலக்கிறார்கள் ருசிக்காகவும். மணத்திற்காகவும்!

சந்துகளில் மனிதர்களைவிட மாடுகள் அதிகம் திரிகின்றன. அவைகள் உங்களை ஒன்றும் செய்யாது. பயப்பட வேண்டாம். பழைய வாரணாசியில் உள்ள வீடுகள் எல்லாம் 100ல் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்றவை. சில வீடுகள் கலை நயத்துடன் 3 அடுக்கு 4 அடுக்குகளுடன் அழகாக உள்ளன.

பெண்கள் எல்லாம் (பெரும்பாலும்) சிவந்த நிறத்துடன் அழகாக இருக்கிறார்கள். குழந்தைகள் எல்லாம் லட்டு லட்டாக இருக்கின்றன. வழியில் பல இடங்களில் எருமை மாட்டுச் சாணி. பெண்களைப் பார்த்துக்கொண்டே நடந்தால் சாணத்தில் கால்களை நனைத்துக்கொண்டே செல்லும் அபாயம் உண்டு. ஆகவே பெண்களைப் பார்ப்பதுடன், அவ்வப்போது தெருவையும் பார்த்து நடக்க வேண்டும்.

ஆண்களைப் பார்த்தால், உங்களுக்குக் கோபம் வரலாம். பெரும்பாலோர் வாயில் புகையிலை கலந்த ஜர்தா பீடா (Jarda Paan) அல்லது Manic Chand அல்லது Pan Parag. வாயில் மோட்டார் வைத்து அரைப்பதைப்போன்று அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு வருமானம் எத்தனை ரூபாய்கள் இதற்குச் செலவழிக்கிறார்கள் என்ற கணக்கே இருக்காது போலும். நாளொன்றுக்கு பத்து டீயும், இருபது ஜர்தா பீடாவரை போடும் ஆசாமிகள் எல்லாம் சர்வ சாதாரணமாக உண்டு!



உங்கள் பார்வைக்கு ஒரு பீடாக்கடை. 
எத்தனை வகையான மசாலாக்கள் கடையில் உள்ளன பாருங்கள்

நினைத்த இடத்தில் துப்பி வைத்துவிட்டுப் போகிறார்கள். ஏமாந்தால், உங்கள் சட்டையின் பின்புறம் கூட வெற்றிலைக்கறை இருக்கும். சர்ஃப் எக்செல் போட்டு அலசினாலும் போகாது அந்தக்கறை!

காசியில் காக்காயும் இல்லை கருடனும் இல்லை. நகரப் பேருந்தும் இல்லை (என் கண்ணில் படவில்லை)

ஹரிச்சந்திரகட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய இரண்டு கட்டங்களிலும், கங்கைக் கரையில் கணக்கு வழக்கு இன்றி சடலங்களை (இறந்தவர்களின் உடல்களை) எரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்விரு இடங்களும் ஜே..ஜே..என்று திருவிழாக் கூட்டம் போல இருக்கிறது

வாரணாசியைச் சுற்றி 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமங்கள் அல்லது சிறு நகரங்கள் என்று அனைத்துப் பகுதிகளிலும் யார் இறந்தாலும் எரிப்பதற்கு இங்கே கொண்டு வந்து விடுவார்களாம். படகுகளில் வைத்துக் கொண்டுவந்து விடுவார்களாம். படகுகளில் மனித சடலங்களும் வருகின்றன. எரியூட்டுவதற்குத் தேவையான விறகுகளும் கட்டுக் கட்டாக வருகின்றன. சைக்கிள் ரிக்‌ஷாக்களில் உட்கார வைத்த நிலையில் சடலங்களைக் கொண்டுவந்து விடுகிறார்கள்.

ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு சடலங்கள் எரிந்து கொண்டிருக்கும்போதே மூன்றாவது சடலத்தையும் அதன் மேல் ஏற்றி எரிக்கத் துவங்கிவிடுகிறார்கள். அஸ்தி தனியாக எடுக்கத்தேவையில்லை. சுடச்சுட அப்போதே கங்கையில் கரைத்து விடுகிறார்கள். பிறகு அஸ்தி எதற்கு?

நாளொன்றுக்கு சராசரியாக 200 சடலங்கள் எரிக்கப்படுகின்றனவாம். இது ஒரு உத்தேசக் கணக்குதான்! அதிகமாகவும் இருக்கலாம்!

Pollution Control எல்லாம் இங்கே எடுபடாது. எவனாது கேள்வி கேட்டு வந்தால். அவனையும் எரியும் சடலங்களோடு ஒரே அமுக்காக அமுக்கிப் படுக்க வைத்து எரித்து விடுவார்கள் போல் உள்ளது. அத்தனை முரட்டுத் தனமான ஆட்கள்!
எரியூட்டும் இடம் ஹரிச்சந்திர கட்டம்
என்னவொரு பொருத்தமான பெயர் பாருங்கள்  




படகில் வந்து சேரும் விறகுக் கட்டுகள். மணிகர்ணிகா கட்டம்

அதை வேடிக்கை பார்க்க ஏராளமான வெளி நாட்டவர்கள் அங்கே வந்து அமர்ந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். வியப்பில் அவர்களின் கண்கள் கங்கையின் அகலத்திற்கு விரிகின்றன!

படகில் சென்று ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வாருங்கள். மோட்டார் படகில் செல்லுங்கள். 30 அல்லது 40 பேர்களை ஏற்றிக்கொள்கிறார்கள். தலைக்கு 20 ரூபாய் மட்டுமே கட்டணம். கங்கைக் கரையில் உள்ள எல்லாக் கட்டங் களையும் படகில் இருந்தவாறே பார்த்துவிட்டு வரலாம்!

சாதா படகுகள் உள்ளன. தலைக்கு நூறு ரூபாய் கேட்டு வம்படி செய்வார்கள். 5 அல்லது 7 பேர்களை ஏற்றிச் செல்லும் சிறிய படகுகள். தலைக்கு 30 ரூபாய் மட்டுமே கட்டணம். ஆனால் வரமாட்டார்கள். பேரம் பேசிப் படிய வைக்க வேண்டும்!

அதே போல முடிந்தவரை ஆட்டோ ரிக்‌ஷாக்களைத் தவிர்த்து விடுங்கள். ரயில்வே ஸ்டேசனில் இருந்து விடுதிக்கு வருவதற்கும், திரும்பி விடுதியில் இருந்து ரயில் நிலையத்திற்குச் செல்வதற்கு மட்டுமே பயன் படுத்துங்கள். 5 கிலோ மீட்டர் தூரம்தான். அதிக பட்சம் நூறு ரூபாய் மட்டுமே கொடுங்கள்.

உள்ளூரில் 3 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கே ஆட்டோக்காரர்கள் நூறு ரூபாய் கேட்கிறார்கள். அதே தூரத்திற்கு சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்கள் 30 ரூபாய்க்கு வருகிறார்கள். டோங்கா என்னும் குதிரை வண்டிகளை வைத்து ஓட்டுபவர்கள் 60 ரூபாய்க்கு வருவார்கள். 4 பேர்கள் அதில் செளகரியமாகச் செல்லலாம். ஒரு வாயுள்ள மனிதனுக்கும், ஒரு வாயில்லாத பிராணிக்கும் ஒரு சேர உதவி செய்த புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும்!

வாரணசிக்குச் செல்லும் இரயில்களின் பட்டியலைக் கொடுத்துள்ளேன். சிங்காரச் சென்னையில் இருந்து தூரம் 2,138 கிலோ மீட்டர். பிரயாண நேரம் 36 மணி நேரம். போக வர நபர் ஒன்றிற்கு ரூ1,100 செலவு ஆகும். நீங்கள் மூத்த குடிமகன் என்றால் கட்டணத்தில் 40 சதவிகிதம் சலுகை உண்டு 730 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.

பதிவு செய்யப்பெற்ற சீட்டு இருந்தால் மட்டுமே பயணியுங்கள். RAC (Reservation against cancellation) ஐ நம்பி எல்லாம் பயணிக்காதீர்கள். திரும்பி வரும்போது சிக்கலாகி விடும். வாரணாசியில் இருந்து இரயில் புறப்படும்போது ஓட்டுனர் ஒருவர் மட்டுமே வண்டியில் வருவார். இயக்குவார். ஒரு பெட்டிக்குக்கூட TTE (Travelling Ticket Examiner) வரமாட்டார். 72 பேர்கள் ஏறவேண்டிய பெட்டியில் 150 பேர்கள் ஏறுவார்கள். உங்கள் பெர்த்தில் ஏதாவது அன்னக்காவடி படுத்திருக்கும். எனக்கும் RAC Waiting List என்று கூறுவான். TTE வரட்டும் எனது பெர்த் எது என்று தெரிந்துகொண்டு போகிறேன் என்பான். உண்மையில் அவன் கையில் டிக்கெட்டே இருக்காது. நிலைமை அவ்வளவு மோசம்.

சென்னையில் இருந்து அலாகாபாத் வரை பயணம் செளகரியமாக இருக்கும். Double Track - Both are electrified tracks. அதற்குப் பிறகு அங்கிருந்து வாரணாசி வரை உள்ள 125 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 3 மணி நேரம் ஆகும். Single Track - Hauled by Diesel Locomotives வழியில் உள்ள ஸ்டேசன்கள் எல்லாம் அழுது வடிகின்றன. இந்திய சுதந்திரத்திற்கு முன்னால் கட்டப்பெற்ற ரயில் நிலையங்கள், அதற்குப் பிறகு அவைகள் எல்லாம் பராமரிக்கப்படவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. அந்த இடைப்பட்ட தூரத்திற்கு பேருந்து பயணமும் அவலமாகத்தான் இருக்கும்! ஆகவே எச்சரிக்கையாக இருங்கள். நேற்றையப் பின்னூட்டத்தில் நண்பர் ஒருவர் சொன்னதைப்போல எதைப் பற்றியும் கவலைப் படாத முரட்டு ஜனங்கள்!
-----------------------------------------------------------------------------
பயணிக்க இரயில்களின் விவரம்:

12669 Ganga Kaveri Express Dep: 5:35 PM  சேரும் நேரம் 7:05 AM 2138 Kilo Meter Monday & Saturday வாரம் இரண்டு நாட்கள் மட்டும்

12295 Sangha Mithra Express Dep: 3:40 PM Mughal Sarai JN  சேரும் நேரம் 5:10 AM (3rd Day Early Morning) vaaraththil 5 waatkaL mattum (முகல் சராய் ஸ்டேசனில் இருந்து வாரணாசிக்கு நீங்கள் ஆட்டோவில் பயணிக்க வேண்டும். - தூரம் 13 கிலோ மீட்டர்கள் - ஆட்டோக்காரன் ரூ 150 கேட்பான்)  இந்த வண்டிக்கு தினசரி சேவை உள்ளது. அதனால இதைக் கொடுத்துள்ளேன்

14259 Rameshwaram - Varanasi Express Dep at Chennai 1.15 PM 4:40 AM  Weekly once Wednedsday (வாரம் ஒருமுறை மட்டும்)

 சென்னையில் இருந்து இட்டார்சி ஜங்சனுக்குச் சென்று அங்கிருந்து வேறு இரயிலுக்கு மாறி வாராணசிக்குச் செல்வதென்றால், onward journeyக்கும் சேர்த்து நீங்கள் திட்டமிட்டுக்கொள்ளலாம்.  அந்த வழியில் உங்களுக்கு நிறைய இரயிலகள் உள்ளன. அவற்றைப் பற்றிய விவரங்களைக் கீழே கொடுத் துள்ளேன்.

Chennai to Itarsi Junction 1095 KMs + Itarsi to Varanasi 736 KM = 1,831 KM






+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச் சேர்க்கை!

வகுப்பறை மாணவர் திருவாளர் விசுவநாதன் அவர்கள் அனுப்பிய மேலதிகத்தகவல்கள்:

.. அனுமான் காட்டின் தெரு முனையில் மகாகவி பாரதியாரின் சிலை இருக்கிறது
    ,, வாய் பேசாமலிருந்து திரு முருகன் திருவருளினால் பேச்சுத் திறமை பெற்ற
    பேரரளுளார் குமரகுருபரர் மொழி தெரியாத அந்த காசி நகரில் (போராடி சண்டை போட்டு என சொல்லலாமா?) இடம் வாங்கி தமிழ் வளர்க்க தொண்டாற்றியவர்
    ,, இந்த குமாரசாமி மடம் கேதார் காட்டில் உள்ளது.
    ,, லங்கா ரோட்டின் தொடக்கத்தில் ராமகிருஷ்ண மடம் உள்ளது.
    ,, பல மடங்களில் இலவசமாக சாப்பாடு போடுகிறார்கள்
    .. விலை அதிகம் விற்பதற்கு அவர்களுக்கு வேறு வருமானமில்லை என்பதே..அந்த நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கும் தாராளம் காட்டலாம் (விரும்புபவர்கள்)
    .. கேதார் காட்டில் ஆந்திர ஆசிரமம் அருகில் உள்ள கடை (செட்டியார் கடை என செல்லமாக சொல்கிறார்கள்) யில் பூசை பொருட்கள் தரமானதாகவும் நியாயமான விலையிலும் மொழி பிரச்சனை உள்ளவர்களுக்கு தமிழிலும் வியாபாரம் இருக்கும்
    .. சீராக இல்லாத ரோட்டில் சைக்கி ரிக்க்ஷா பயணம் ஒரு adventure என்றே சொல்லலாம்
    ,, ஆட்டோ கட்டணம் கூடுதல் தான் ஷேர் ஆட்டோவில் கட்டணம் குறைவு மொழியும் இடமும் தெரிந்தவர்களுக்கு இது தான் சிக்கனம்
    ,,சிறு பிள்ளைகள் கூட வாயில் போட்டு அறைக்கும் அந்த பழக்கம் புற்று நோய்க்கு இது தான் தாய் நாடு என சொல்ல வைக்கிறது
    ,,வெண்மையாக உள்ள பல்லைக் கண்டு நம்மை வெளியூர்க்காரன் என எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்
    .. அண்மையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த லங்கா ரோடில் உள்ள சங்கட் விமோசன் அனுமான் கோவிலில் வானரங்களுக்கு பஞ்சமில்லை.. மக்கள் கூட்டம் எப்போதும்.. வியாழன் கிழமைகளில் இன்னமும் அதிகமாக இருக்கும்.
    .. BHU என செல்லமாக அழைக்கும் பல்கலைகழகம் மிக மிக பெரியது இதற்கு அடுத்தது தென்னிந்தியாவில் உள்ள மைசூர் பல்கலைகழகம் என நினைக்கிறேன்.
    .. இதன் அருகே உள்ள விசுவநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது.. இங்கு அதோமுக லிங்கம் உள்ளது.
    .. இந்நகரில் உள்ள துர்கா மா மந்திர் எனும் துர்கை அம்மன் கோவிலில் உள்ள கதவுகளில் வீட்டு சாவியை வைத்து வணங்கி வழிபட்டால் வீட்டில் திருடுபோகாது என்றும் கல்லா பெட்டி சாவியை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை இந்த ஊர் மக்களிடம்..
    .. பழைய கோவில் அருகே உள்ள பள்ளி வாசல் பற்றி ஒரு செய்தி உண்டு அதனை வகுப்பறையில் பதிவிடுவது ஆரோக்கியமாக இராது என்பதால் (அதனை மறைத்து) அமைதி கொள்கிறோம்.
    .. cantontment பகுதியில் அனைத்து இரும்பு பொருட்களும் கம்பளி பொருட்களும் எதிர்பார்த்திராத விலையில் கிடைக்கும்.
    ..சலவைக்கல்லில் கடவுள் சிலையை வடித்துக் கொடுக்கும் கடைகள் ஏராளம் தாராளம். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீடுகட்டும் ஆயத்தில் இருப்பவர்களுக்காக இது..
    ,, point to point டிக்கெட் எடுப்பதற்கு பதில் circular ticket எடுத்துக் கொண்டால் செலவு இன்னமும் குறையும் அல்லது இதே செலவில் இன்னமும் சுற்றிப் பார்க்கும் இடம் அதிகம் கிடைக்கும்
    .. திட்டமிட்டு route போட்டு குறைந்த நாட்களில் அதிக செலவில்லாத ரயில் பயண திட்டம் இந்த அவசர உலகில் இருப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் (LTA அல்லது குறைந்த நாள் லீவு கிடைப்பவர்களுக்காக இது),
    ,,கை தாராளம் உள்ளவர்கள் விமானத்திலும் செல்லலாம். விமான நிலையம் நகரத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது
    ஆண்டு தோறும் ஒருவரை இலவசமாக காசிக்கு அழைத்துச் செல்லும்/அனுப்பி வைக்கும் அய்யரின்    பங்கிற்கு இந்த தகவலை சொல்லிவிட்டோம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
உங்களின் நேரமும் பொறுமையும் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். காசியைப் பற்றியும், அதன் சுற்றுப்புறத்திலுள்ள ஸ்தலங்களைப் பற்றியும் இன்னும் செய்திகள் உள்ளன. அவைகள் தொடர்ந்து வரும்.
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

23.11.11

தீது அகல எதைச் செப்புவான் விஸ்வேசன்?

 நகரத்தார் விடுதியின் அருகே இருக்கும் கடை வீதி 
---------------------------------------------------------------------------------------
 தீது அகல எதைச் செப்புவான் விஸ்வேசன்?

 இந்தூர் ராணி ராஜ்மாதா தேவி அகல்யாபாய் அவர்களைத் தெரியுமா உங்களுக்கு? அதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அவர் வாழ்ந்த காலம்: 31.05.1725 முதல் 13.08.1795 வரை

இந்திய வரலாற்றில் முகலாய சக்கரவர்த்தி அக்பருக்கு எப்படி ஒரு இடம் உள்ளதோ அப்படி ஒரு இடம் இந்த ராஜ மாதாவிற்கும் அதாவது அரசிக்கும் உண்டு.

அவரைப் பற்றித் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டும் என்பதற்காக ஒரு சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்
http://en.wikipedia.org/wiki/Ahilyabai_Holkar



 இந்தூர் ராணி அகல்யாபாய் அரண்மனையின் எழில்மிகு தோற்றம்

-------------------------------------------------------------------------------------------
வாரணாசியைப் பற்றிய பயணக் கட்டுரையில் அவருக்கு என்ன வேலை என்கிறீர்களா?

அவர்தான் இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலை 1777ஆம் ஆண்டு கட்டினார். அவர் கை ராசி, அவரால் கட்டப்பெற்ற அக்கோவில் சுமார் 234 ஆண்டு காலம் தாக்குப் பிடித்து இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

காசியில் இருந்து இந்தூர் 960 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது (மத்தியப் பிரதேசம்). தற்போது உள்ளதுபோல பயண வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில் இத்தனை தூரம் தாண்டி வந்து தனது மேற்பார்வையில், பெரும் பொருட் செலவில் கோவிலைக் கட்டியுள்ளார் என்றால் அதற்குக் காரணம் அவருடைய மன வலிமை என்பதைவிட அவருக்கு விசுவநாதரின் மேல் இருந்த பக்திதான் முழுக் காரணமாக இருந்திருக்க முடியும்!

வாரணாசிக்கு 3,000 ஆண்டு வரலாறு உள்ளது என்னும்போது, அதற்கு முன்பு இருந்த விசுவநாதர் கோவில் என்ன ஆயிற்று என்கிறீர்களா?

பல வேற்று மதத்தவர்களின் படை எடுப்பின் போது அவைகள் எல்லாம் இடித்துத் தள்ளப்பட்டன.

அதைப் பார்த்துக்கொண்டு காசி விஸ்வநாதர் சும்மா இருந்தாரா என்று வகுப்பறைக்குள் எட்டிப் பார்க்கும் அரை டிக்கெட்டுகள் கேள்வி கேட்கலாம்.

''அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது!"


என்ற சிந்தனை ஒரு கவிஞனுக்கே இருக்கும்போது, எல்லாம் வல்ல இறைவனுக்கு இருக்காதா?

அங்கே இடிப்பவர்கள் இடிக்கட்டும், அதை மீண்டும் கட்டுவதற்கு ஒருவன் வருவான் என்று இறைவன் வாளாவிருந்துவிட்டார் (ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டார்) இறைவன் நீக்கமற எல்லா இடங்களிலும் இருப்பவர். தனக்கு ஒரு கோவில் கட்டச் சொல்லி அவர் ஒருவரையும் பணித்ததில்லை. கேட்டுக்கொண்டதில்லை. கட்டுபவன் பக்தனே. இடிந்ததைப் புதுப்பிக்க வருபவனும் பக்தனே! எல்லாம் ஒரு சுழற்சி!
-------------------------------------------------------------------------------

அலங்காரத்தில் திளைக்கும் விஸ்வநாதர்!
------------------------------------------------------------------------------------------------
வாரணாசியில் விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளியுள்ளார். வெள்ளித்தகடுகள் பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது அவர் காட்சியளிக்கின்றார்.

சிவபெருமானின் அடியையும் முடியையும் காணப் பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது, அவர்களை எரித்து அழித்த இடம் இவ்வூரே என்று புராணங்கள் கூறுகின்றன. எனவே, இவ்வூருக்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டு.

கங்கையின் மேற்குக்கரையில் காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கை நதி ஓடுகிறது. வடமுகமாக கங்கை இங்கே ஓடுவதால் உத்தரவாகினி என்று அழைக்கின்றனர்.

கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. மொத்தம் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. அத்தீர்த்தக் கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது என்பது உள்ளூர்க்காரனுக்கு வேண்டுமென்றால் சாத்தியமாகலாம். இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் பயணமாகச் செல்பவர்களுக்கு சாத்தியப்படாது.

அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது நல்லது. அதற்கு பஞ்சதீர்த்த யாத்திரை என்று பெயராகும். அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. அங்கிருந்துதான் காசி ஸ்தலம் ஆரம்பமாகிறது.

அக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர்கள். அக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் அஸ்சங்கமேஸ்வரர் எனப்படுகின்றார். முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். (எப்படி மறைந்தார் என்று யாரும் கேட்டுப் பின்னூட்டம் இட வேண்டாம்)

அதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். அங்கு பிரம்மா பத்து அசுவமேத யாகங்களைச் செய்ததால்  தசாஸ்வமேத  கட்டம் எனப் பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது. இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கின்றது. இந்த கரையில் உள்ள ஆதிகேஸ்வரரை வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நீராடி விட்டுக் கரையிலுள்ள பிந்து மாதவர் மற்றும் கங்கேஸ்வரரை வணங்க வேண்டும்.

பஞ்ச தீர்த்தக்கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள மணிகர்ணிகேஸ்வரரையும், அம்பாளையும் வழிபட வேண்டும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி என்பார்கள். இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. மனித வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை நினைவு படுத்தும் இடங்கள் மூன்று. ஜெருசலம், பீகிங் ஆகியவற்றுடன் வாரணாசியும் சேர்த்துப் பேசப்படுகின்றது. அத்தனை பழமையான நகரம்.

இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள்.  காசிவிஸ்வநாதரை வழிபாடு காசி என்றால் ஒளிநகரம் என்றும் பொருள் படும்.

“திருவாரூரில் பிறந்தால் முக்தி ;
காசியில் இறந்தால் முக்தி
(சிதம்பரத்தில் வாழ்ந்தால் முக்தி ;
அண்ணாமலையை நினைத்தால் முக்தி)”

என்பார்கள்

முக்தி என்பது உலக வாழ்வை ஆன்மா நீக்கிவிட்டுச் செல்லும் நிலை. பின்பிறப்பு இல்லாத நிலை. உலகியல் துன்பங்கள் இல்லாத நிலை.

வாரணாசியில் இறந்து போவது முக்தியைத் தரும் என்று சொல்வார்கள். அங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சிவபெருமானே ஓதுவதாகச்  சொல்லப் படுகிறது. நமசிவாய மந்திரத்தையும் ஓதுவாராம். இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தச் செய்தி!

“மாதவத்தால் காசிதனில் மாண்டவர்கள் தம்செவியில்
தீதுஅகல விஸ்வேசன் செப்புவான் ஐந்தெழுத்தை
மாதவள் விசாலாட்சி மடிக்கிடத்தி வீசுவாள்
வேதனையெல்லாம் தீர்ந்து வென்றிடுவர் பின்பிறப்பை!”


என்று செட்டிநாட்டுக் கவிஞன் ஒருவன் எழுதிய பாடல் ஒன்று, காசி நகர விடுதியில் காட்சிக்கு உள்ளது.  நீங்களும் அதைக் காணக் கீழே கொடுத்துள்ளேன்.


-------------------------------------------------------------------------------------------------------
வாரணாசியில் நடைபெறும் திருவிழாக்கள்: மகா சிவராத்திரி, தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்சவம்)
கோவில்  திறந்திருக்கும் நேரம்:  காலை 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.
   
எச்சரிக்கை: சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் அருகில் தீவிரவாதிகளால் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதால், தற்போது கோவிலின் நுழைவாயிலும், உள்ளேயும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. (Security Check) உங்களைத் தோண்டித் துருவி விட்டுத்தான் உள்ளே அனுப்புவார்கள். ஆகவே கோவிலுக்குச் செல்பவர்கள் காமெரா, செல்போன், கத்தி போன்ற எதையும் கொண்டு செல்ல வேண்டாம். அவற்றுடன் உங்களுக்கும் சேர்த்து அனுமதி மறுக்கப்படும்!    
 
கோயில் மிகவும் சிறிய கோயில் தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம்.      
 
விஸ்வநாதர் கோயிலின் அருகிலேயே அன்னபூரணி அம்பாள் கோயில் உள்ளது. அம்பாளின் அழகே அழகு! சந்நிதானத்தில் அனைவருக்கும் ஒரு கைப்பிடி பச்சை அரிசியைப் பிரசாதமாகத் தருகிறார்கள். மறக்காமல் கேட்டு வாங்கிக் கொண்டு வாருங்கள். அன்னபூரணியின் அருளால் உங்களுக்கு எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் இருக்காது.


அன்னபூரணி தன் நாதருக்கே அரிசி தானம் வழங்கும் காட்சி!
---------------------------------------------------------------------------------------------------
அன்னபூரணி கோவிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாராம்!
    
விஸ்வநாதரை மனமுருகப் பிரார்த்தனை  செய்தால் திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் குறை நீங்கும், கல்வியில் சிறந்து விளங்கலாம்.
 
விசாலாட்சி அம்மைக்குத் தனி சன்னதி உள்ளது.

ஒருமுறை சென்று வாருங்கள். விஸ்வநாதன் - அன்னபூரணி அழகைக் கண்டு வாருங்கள். அருளைப் பெற்று வாருங்கள். வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் எல்லாம் நீங்கும்!
-----------------------------------------------------------------------------------
(இன்னும் வரும்)

அன்புடன்
வாத்தியார் 


இதுபோன்ற பழைய - எழில்மிகு கட்டங்கள் நிறைய உள்ளன!


நகரத்தார் விடுதியின் அருகே உள்ள ஒரு தெரு. 
 எப்படி இதில் வாகனத்தில் செல்ல முடியும்?

 இதுபோன்ற் அகலக் குறைவான தெருக்கள் ஏராளமாக உள்ளன!

 அகலக் குறைவான தெருக்களிலும் 
அமோகமாக நடைபெறும் வியாபாரம்


 கோவிலின் அருகிலேயே இத்தனை நெரிசல். மாநகராட்சியும், காவல்துறையும் அங்கே முழுவீச்சோடு செயல்படவில்லை!
-----------------------------------------------------------------------------------------------------




 கங்கைக் கரையில் வாத்தியார்

 மேளதாளத்துடன் வாத்தியார் சுவாமி தரிசனத்திற்குப் புறப்படும் காட்சி!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

22.11.11

விஸ்வநாதா வேளை வேண்டும்


வாரணாசியில் உள்ள நகரத்தார் விடுதியின் முன்புறத் தோற்றம்

 விடுதியைப் பற்றிக் கட்டியம் கூறும் அறிவிப்புப் பலகை!

 அவ்விடுதியின் உட்புறம் உள்ள சிவாலயத்தின் வாயிலில் 
உங்களுக்கு அருள்பாலிக்கக் காத்திருக்கும் பிள்ளையார்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விஸ்வநாதா வேளை வேண்டும்

விஸ்வநாதா வேலை வேண்டும் என்ற பாடலைத்தானே உங்களுக்குத் தெரியும்.

இதென்ன கூத்து? “விஸ்வநாதா வேளை வேண்டும்”

இது புதுப்பாடல் : “விஸ்வநாதா வேளை வேண்டும்” என்று கூத்தனுக்கான பாடல்!

என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்!
-----------------------------------------------------------------------------------------------------

இந்தியாவில் உள்ள சிவ ஸ்தலங்கள் எண்ணற்றவை. அவற்றில் பாதி தமிழ் நாட்டில்தான் உள்ளன.

செட்டிநாடு ஒரு சிறிய பகுதி எனக்குத் தெரிந்து அங்கேயே எண்பதிற்கும் மேற்பட்ட சிவாலயங்கள் உள்ளன. இளையாற்றங்குடி, மாத்தூர், வைரவன்பட்டி, இலுப்பக்குடி,  பிள்ளையார்பட்டி, இரணியூர்க் கோவில், நேமம்கோவில், சூரக்குடிக் கோவில், வேலங்குடிக் கோவில் என்று ஒன்பது, பெரிய மற்றும் புராதனக் கோவில்கள் உள்ளன. மற்றும் செட்டிநாட்டில் இன்று உள்ள 75 கிராமங்களிலும்  ஊருக்கு ஒரு சிவன் கோவில் உள்ளது. மொத்தம் எத்தனை கோவில்கள் என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

1
இளையாற்றங்குடிக் கோவில்
சுவாமியின் பெயர்: கைலாசநாதர், அம்மையின் பெயர்: நித்தியகல்யாணி.
2.
மாத்தூர் கோவில்
சுவாமியின் பெயர்: ஐநூற்றீசுவரர், அம்மையின் பெயர்: பெரியநாயகி
3.
வைரவன் கோவில்
சுவாமியின் பெயர்: வளரொளிநாதர், அம்மையின் பெயர்: வடிவுடையம்மை.
4.
இரணியூர்க் கோவில்
சுவாமியின் பெயர்: ஆட்கொண்டநாதர், அம்மையின் பெயர்: சிவபுரந்தேவி.
5.
பிள்ளையார்பட்டிக் கோவில்
சுவாமியின் பெயர்: திருவீசர், அம்மையின் பெயர்: சிவகாமவல்லி.
6.
நேமங்கோவில்.
சுவாமியின் பெயர்: செயங்கொண்ட சோழீசர், அம்மையின் பெயர்: சவுந்தரநாயகி.
7.
இலுப்பக்குடி.
சுவாமியின் பெயர்: தான்தோன்றீசுவரர், அம்மையின் பெயர்: சவுந்தரநாயகி.
8
வேலங்குடிக் கோவில்.
சுவாமியின் பெயர்: கண்டீசுவரர், அம்மையின் பெயர்: காமாட்சியம்மை.
9.
சூரக்குடிக் கோவில்
சுவாமியின் பெயர்: தேசிகநாதர், அம்மையின் பெயர்: ஆவுடைநாயகி

இந்தக் கோவில்கள் அனைத்தும் காரைக்குடியில் இருந்து 10 முதல் 25 கிலோ மீட்டர் வட்டத்திற்குள் உள்ளன. வாகனத்தில் சென்றால் ஒரே நாளில் அத்தனை கோவில்களையும் பார்த்துவிடலாம்.

செட்டிநாட்டிலுள்ள மக்கள் எல்லாம் இந்தக் கோவில்களைச் சேர்ந்தவர்கள் தான். ஒரு கோவிலைச் சேர்ந்த மக்கள் எல்லாம் சகோதர உறவு உடைய வர்கள்.  அவர்கள் எல்லாம் எந்த ஊரில் வசித்தாலும் சகோதரர்களாக உறவு வைத்திருப்பார்கள். தங்கள் குடும்பங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். அடுத்த எட்டுக் கோவிலைச் சேர்ந்த குடும்பங்களுடன்தான் திருமண பந்தம்

தங்கள் வீட்டு அழைப்பிதழ்கள் அனைத்திலும் தாங்கள் சார்ந்துள்ள கோவிலின் சுவாமி மற்றும் அம்மனின் பெயரைக் குறிபிட்டு எழுதுவார்கள்.

உதாரணத்திற்கு:

அன்புடையீர்,
ஸ்ரீநித்தியகல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதர் திருவருளால் நிகழும் சுபஸ்ரீ கர வருடம் கார்த்திகை மாதம் 27ஆம் நாள் (13.12.2011) செவ்வாய்க்கிழமை புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் கும்ப லக்கினம் நிஷ்பஞ்சகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 11:30 க்கு மேல் 12:30 மணிக்குள் என் சகோதரர் so and so விற்கு நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி சாந்திக் கல்யாணத்திற்கு தாங்கள் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாயக் கேட்டுக்கொள்கிறோம்.


என்று எழுதுவார்கள். அதைவைத்து சம்பந்தப்பட்ட குடும்பத்தார் எந்தக் கோவிலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். அந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய முன்னோர்கள் கட்டியது. இன்றுவரை அவர்கள் அக்கோவிலைப் புதுப்பித்து 12 வருடங்களுக்கு ஒருமுறை திருப்பணி செய்து வருகிறார்கள். கோவிலின் நித்திய பூஜைக்குத் தேவையான நிதிக்கு, நிலபுன்கள், அறங்காவலர் குழு என்று எல்லா அமைப்புக்களும் இருக்கும். அது முக்கியமானது.
--------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் நாட்டில் பிரபலமான சிவன் கோவில்கள் பல உள்ளன. இடம் மற்றும் உங்கள் நேரம் கருதி பத்துக் கோவில்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அத்தனை கோவில்களையும் பற்றி எழுதுகிறேன்

1
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோவில்
சுவாமியின் பெயர்: ஸ்ரீசுந்தரேசுவரர், அம்மையின் பெயர்: மீனாட்சி.

2
திருவண்ணாமலை
அருள்மிகு அருணாச்சலேசுவரர் ஆலயம்
சுவாமியின் பெயர்: ஸ்ரீஅண்ணாமலையார், அம்மையின் பெயர்: உண்ணாமுலையம்மன்.

Thiruvannamalai is one of the Pancha Bootha Sthalangal representing the fire element along with Chidambaram, Sri Kalahasti, Thiruvanaikoil and Kanchipuram representing space, wind, water and earth respectively.

3.
காஞ்சிபுரம்
ஏகாம்பரநாதர் கோவில்
சுவாமியின் பெயர்: ஏகாம்பரநாதர், அம்மையின் பெயர்: காமாட்சி.

Kanchi is one of seven most holy places for Hindus in India where Varanasi is considered as the holiest of the seven holy cities.
“Ayodhyā Mathurā Māyā Kāsi Kāñchī Avantikā
Purī Dvārāvatī chaiva saptaitā moksadāyikāh II - Garuḍa Purāṇa I XVI .14”
A Kṣetra is a sacred ground, a field of active power, a place where Moksha, final release can be obtained. The Garuda Purana enumerates seven cities as giver of Moksha, They are Ayodhya, Mathura, Māyā, Kāsi, Kānchī, Avantikā and Dvārāvatī

4.
சிதம்பரம்
தில்லை நடராஜர் கோவில்
சுவாமியின் பெயர்: ஸ்ரீநடராஜர், அம்மையின் பெயர்: சிவகாமி.

5
திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவில்
சுவாமியின் பெயர்: ஸ்ரீநெல்லையப்பர், அம்மையின் பெயர்: காந்திமதி.

6.
திருவாணைக்காவல், திருச்சிராப்பள்ளி
ஸ்ரீஜம்புகேஷ்வரர் அகிலாண்டேஷ்வரி கோவில்
சுவாமியின் பெயர்: ஸ்ரீஜம்புகேஷ்வரர், அம்மையின் பெயர்: அகிலாண்டேஷ்வரி.

7.
ராமேச்சுவரம்
ராமநாதசுவாமி கோவில்

8.
திருவாரூர்
தியாகராஜ சுவாமி கோவில்
சுவாமியின் பெயர்: ஸ்ரீதியாகராஜர், வீதிவிடங்கர், அம்மையின் பெயர்: கமலாம்பிகை.

9
தஞ்சாவூர்
பெரியகோவில் (பிரஹதீஸ்வரர் ஆலயம்)

10
நாகபட்டினம்
நீலாயதாட்சி கோவில்
சுவாமியின் பெயர்: காயரோஹனேஷ்வரர் அம்மையின் பெயர்: நீலாயதாட்சி
--------------------------------------------------------------------------------------------------
இப்படி எண்ணற்ற கோவில்கள் தமிழ் நாட்டில் இருந்தாலும் அகில இந்திய அளவில் மிகவும் சிறப்பித்துக் கூறப்படுபவை 12 ஜோதிலிங்கக் கோவில்கள். அவற்றைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்

1. சோமநாதர் கோவில் (குஜராத்)
கடற்கரையில் உள்ள கோவில்
http://en.wikipedia.org/wiki/Somnath

2. மல்லிகார்ஜுன சுவாமி (ஸ்ரீசைலம், ஆந்திரா)
கிருஷ்ணா நதிகரையில் உள்ளது,
http://en.wikipedia.org/wiki/Srisailam

3. மஹாகாளீஸ்வரர் கோவில், உஜ்ஜெயின் (மத்திய பிரதேஷ்)
கிராமத்தில் உள்ளது
http://en.wikipedia.org/wiki/Mahakaleshwar_Jyotirlinga

4. ஓம்காரேஷ்வர் கோவில், சிவபுரி (மத்திய பிரதேஷ்)
இந்தூர் அருகே நர்மதை ஆற்றங்கரையில் உள்ளது
http://www.religiousportal.com/OmkareshwarTemple.html

5. வைத்தியநாதர் கோவில் பரேலி (மஹாராஷ்ட்டிரா)
காண்ட்டிபூர் என்னும் கிராமத்தில் உள்ளது.
http://www.shaivam.org/siddhanta/sp/spjyoti_vaidyanath.htm

6. நாகேஷ்வர் கோவில்
அல்மோரா மாவட்டம், உத்திரகாண்ட மாநிலம்
http://en.wikipedia.org/wiki/Jageshwar

7. கேதாரேஷ்வர் கோவில்
இமயத்தில் உள்ளது
http://jyotirlingaofindia.blogspot.com/2011/04/shri-kedarnath-in-himalayas.html

8. த்ரியாம்பகேஷ்வர் கோவில் நாசிக் ((மஹாராஷ்ட்டிரா)
கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது.
http://www.shaivam.org/siddhanta/sp/spjyoti_tryambak.htm

9. ராமேஷ்வர் கோவில், ராமேச்சுவரம் (தமிழ்நாடு)
கடற்கரையில் உள்ளது.
http://en.wikipedia.org/wiki/Rameswaram

10. பீமாஷங்கர் கோவில், தகினி, ((மஹாராஷ்ட்டிரா)
http://www.shaivam.org/siddhanta/sp/spjyoti_bimsankar.htm

11. விஸ்வேஸ்வர் கோவில் வாரணாசி (உத்திரப் பிரதேசம்)
கங்கை ஆற்றங்கரையில் உள்ளது
http://www.shaivam.org/siddhanta/sp/spjyoti_vishvesh.htm

12. கிரீஷ்னேஷ்வர் கோவில், தேவசரோவர் (மஹாராஷ்ட்டிரா)
ஒளரங்காபாத் அருகே வெரூல் என்னும் கிராமத்தில் உள்ளது
http://www.shaivam.org/siddhanta/sp/spjyoti_grishnesh.htm

இவற்றில் இரண்டு ஆலயங்கள் கடற்கரைப் பகுதியில் உள்ளன, மூன்று ஆலயங்கள் நதிக்கரையில் உள்ளன. நான்கு ஆலயங்கள் உயர்ந்த மலை முகடுகளில் உள்ளன. மூன்று ஆலயங்கள் கிராமப் பகுதிகளில் உள்ளன.

இந்தியாவில் உள்ள இந்த 12ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது. இரண்டாவது இடம் நமது ராமேச்சுவரத்திற்கு! அதை மனதில் வையுங்கள். இதைச் சொல்வதற்காகத்தான் இத்தனை பில்ட் அப் கொடுத்து எழுதியுள்ளேன்.

ஆகவே இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்து மதத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்களும் வாழ்வில் ஒரு முறையாவது வாரணாசிக்குச் சென்று விஸ்வநாதரைத் தரிசித்து வரவேண்டும்

சரி, எப்போது காசிக்குப் போக வேண்டும்?

எப்போது வேண்டுமென்றாலும் போகலாம். ஆனால் அதற்கு முன்பு உங்களுக்கு காசிநாதன் அதற்குரிய வேளையை (Time) உண்டாக்கித் தருவான். அவன் தந்தால்தான் நீங்கள் செல்ல முடியும். அதற்குரிய மன நிலையும் சூழ்நிலையும் அப்போதுதான் உங்களுக்குக் கிடைக்கும்

ஆகவே

கோவில் மேலே கோவில் கொண்டு
கோடி கோடி உள்ளங்களைக்
கொள்ளை கொண்ட சீமானே
ஹலோ ஹலோ காட்சி தாராய் சீமானே!
அன்ன பூரணியை அருகில் கொண்டு
கங்கைக் கரையில் உறைந்திருக்கும் சீமானே
ஹலோ ஹலோ காட்சி தாராய் கோமானே!

விஸ்வநாதா வேளை வேண்டும்
விஸ்வநாதா வேளை வேண்டும் - உம்மைக்
காண வரும் வேளை வேண்டும்!
ஹலோ ஹலோ வேண்டுதலைச் செவிமடுப்பாய் கோமானே!

என்று அட்லீஸ்ட் தினம் ஒரு முறையாவது பாடுங்கள். அதற்குரிய வேளை வந்து சேரும்


அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம்


அலகாபாத்தில் உள்ள முன்னாள் பாரதப் பிரதமர்கள்களின் 
(மொத்தம் மூன்று பேர்கள்) வீட்டு வாயிலில் வாத்தியார்
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(வாரணாசியைப் பற்றிய கட்டுரை தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!