மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.4.11

தர்மம் எப்படியடா தலையைக் காக்கும்?

----------------------------------------------------------------------------------
 தர்மம்  எப்படியடா  தலையைக்  காக்கும்?

"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்யைடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம் திருந்த மருந்து சொல்லடா"


சுமார் 29 வயதுவரையே வாழ்ந்த தன்மானத் தமிழர் கவிஞர் பட்டுக்கொடை கல்யாணசுந்தரம் அவர்கள் தன்னுடைய 25 வயதில் ‘மகாதேவி’ என்னும் திரைப்படத்திற்காக எழுதிய நல்லதொரு கருத்துள்ள பாடலின் துவக்க வரிகள் இவை.

தமிழ்நாடு முழுவதும் தரிசு நிலங்களில் சீமைக் கருவேல மரம் காடாக வளர்ந்திருப்பதைப்போல, இந்தத் திருட்டும், புரட்டும், கொள்ளையும், ஊழல்களும் அதீதமாகப் பெருகியுள்ளன. அசுர வளர்ச்சியோடு உள்ளன.

சுமார் எண்பது விழுக்காடு மக்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.
ஒன்று இவற்றைச் செய்வதில் முனைப்பாக உள்ளார்கள் அல்லது செய்பவர்களுக்கு துணைபோவதில் விழிப்பாக உள்ளார்கள்.
கையூட்டு வங்குவது  குற்றமென் றால், கொடுப்பதும் குற்றம்தான்.
தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள நல்லவர்கள் கூட
லஞ்சம் கொடுப்பதைக்  குற்றமாக நினைப்ப தில்லை. வாழ்க்கை
வசதிகளைப் பெருக்கிக் கொள்ள ஊழல் செய்ய அஞ்சுவதில்லை.
அதுதான் மிகப்பெரிய அவலம்.

மக்களின் சுயநல மனப்பான்மைதான் முக்கிய காரணம். யார் எக்கேடு கெட்டால் என்ன? நாம் நன்றாக இருந்தால் போதும் என்னும் போக்குத்தான் காரணம்.

“பற்றித்தொடரும் பாவமும் புண்ணியமும்” என்று பட்டினத்தார்
பாடி வைத்துவிட்டுப்போனதை எல்லாம் சொன்னால் பெரும்பாலோர்
கேட்கும் மன நிலையில் இல்லை.

இன்றையப் பொருளாதாரச் சூழ்நிலையில், வாழ்க்கைச் சிக்கல்களில், பழகிவிட்ட பழக்க வழக்கங்களில் அதெல்லாம் சாத்தியமில்லை.

சுற்றிலும் நடக்கும் அக்கிரமங்களை, திகைப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் அல்லது பார்க்காமல் ஒதுங்கியிருக்கும் சூழல்தான் நல்லவர்களிடையே இருக்கிறது. பகவான் இன்னொருமுறை அவதரித்து இவற்றை எல்லாம் சீராக்குவார் அல்லது இன்னொரு காந்தி வந்து நமக்கு சுதந்திரம் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களிடையே இருக்கிறது.

யாரையும், யாரும் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை.

யாரையும் யாரும் திருத்த முடியாது.

யாரையும் திருத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை.

நம்மை நாமே திருத்திக் கொள்ள முடியாது.

இதெல்லாம் சற்று காலம் நீடிக்கத்தான் செய்யும்.

நாளொன்றுக்கு 75 லட்சம் மக்கள் குடிக்கிறார்கள். ஆண்டிற்கு சுமார் 17 ஆயிரம்கோடி ரூபாய் பணம் மதுவிற்பனையில் புரள்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

குடிப்பதற்காக மாதம் முவாயிரம் ரூபாய்க்கு மேல் சர்வ சாதாரணமாக செலவு செய்பவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று, “இந்தக் கோவில் புராதணமான கோவில் இங்கே நித்திய வழிபட்டிற்குக்கூட வழியில்லாமல் இருக்கிறது. நீங்கள் உங்கள் சார்பில் மாதம் ஒரு டின் நல்லெண்ணெய் வாங்கிக் கொடுங்கள். கோவிலில் விளக்காவது எரியட்டும்” என்று சொன்னால் ஏளமானமாகப் பார்த்துவிட்டு அல்லது காதில் வாங்கிக் கொள்ளாமல் போகிறவர்கள் அதிகம் உள்ளார்கள்.

கல்வியைத் தர வேண்டிய அரசாங்கம் சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

கல்வியும், மருத்துவமும் தர்மத் தொழில்களாகும். ஆனால் இன்று அவற்றில் தர்மம் இல்லை. அவைகள்தான் காசு கொழிக்கும் தொழில்களாகும்.

“தர்மம் தலை காக்கும்” என்று நீதி நெறிகளைச் சொன்னால், அவர்கள் பதிலுக்கு “தர்மம் எப்படியடா தலையைக் காக்கும்? தனக்கு மிஞ்சித்தான் தானம்” என்று வாழ்க்கை நெறிகளைச் சொல்கிறார்கள்.

எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன்?

யோசித்துச் சொல்லுங்கள்

என்னுடைய பதில் நாளை வரும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

24.4.11

இரண்டாம் வீட்டில் சனியிருந்தால் என்ன ஆகும்?

இரண்டாம்  வீட்டில் சனியிருந்தால் என்ன ஆகும்?

வார மலர்
---------------------------------------------------------------------------------------------
நான் என் சிறு வயது முதலே கொஞ்சம் வாய்த் துடுக்கு உள்ளவனாகவே இருந்துள்ளேன். இப்போது நினைத்துப் பார்த்தால் ஏன் அப்படியெல்லாம் நடந்து கொண்டோம் என்று வருத்தமாகக் கூட இருக்கிறது. சிறியவர் பெரியவர் என்ற பேதம் இல்லாமல் என் 'வெடுக்கு வெடுக்கு' என்ற பேச்சால் மகிழ்வித்தும் இருக்கிறேன்; புண்படுத்தியும் இருக்கிறேன்.சில நிகழ்வுகளைச் சொல்ல விழைகிறேன்.

ஒருமுறை எனக்கு சுரம் கண்டிருந்தது.7 வயது இருக்கலாம்  அப்போது.படுக்கையில் ப‌டுத்திருந்த என்ன‌ருகில் அப்பா ஆறுதலாக வ‌ந்து அமர்ந்தார்கள். அப்பாவின் மடிமீது என்கால்களைச்செல்லமாகப் போட்டுக்
கொண்டேன். அந்த சமயம் பார்த்து வலசையூர் தலைமையாசிரியர் என்று நாங்கள் அழைக்கும் அப்பாவின் நண்பர் இல்லத்திற்கு வந்தார். அவர் பள்ளிப் பிள்ளைகளிடம் பேசிப் பேசி எப்போதும் ஒரே அதட்டலாகத்தான் பேசுவார். குரலும் கணீரென ஓங்கி ஒலிக்கும். நான் அப்பா மடி மீது கால் போட்டுப் படுத்திருப்பதைப் பார்த்து விட்டு,

"என்னடா இது!? சிறிதும் மரியாதை இல்லாமல்..? அப்பா மடி மீது கால் போட்டுக்கொண்டு படுத்து இருக்கிறாய்? எடுடா காலை.."என்று அதட்டினார்

அவர் அப்படிப் பேசியது எனக்கு சற்றும் ரசிக்கவில்லை. அவருக்குப் பதிலடி கொடுத்தேன் இப்படி:

"என் அப்பா மடி! என்னோட காலு.. உமக்கு ஏனய்யா கண்ணை உறுத்துகிறது? உங்கள் மடியிலா கால் போட்டேன்?" வலசையூர் தலைமை ஆசிரியருக்கு நல்ல சிவந்த முகம். என் பேச்சைக்கேட்டு மேலும் சிவந்துவிட்டது.அவர் அவமானப் பட்டுக் கோபித்துக் கொண்டு  'விருட்'டென்று வெளியேறி விட்டார்.இன்று நினைத்தாலும் அவரைப் புண்படுத்தியது மிகவும் மனதுக்குச் சோகமாகவே உள்ளது.இளங்கன்று பயம் அறியாது என்பது போல நடந்து கொண்டு விட்டேனே என்று இப்போதும் நினைத்து வருந்துகிறேன்.
**********************************************************************
நான் 9வது படிக்கும் போது ஒரு நாள் வகுப்புக்கு வர வேண்டிய ஆசிரியர் எதிர்பாராத விடுப்பு எடுத்து விட்டதால், எங்கள் தலைமை ஆசிரியரே எங்க‌ள் வகுப்புக்கு வந்தார்."பொதுவான கருத்துக்களைச் சொல்கிறேன்; பாடம் ஒன்றும் வேண்டாம்"என்று கூறினார். பல செய்திகளை அழகாகக் கூறி வந்தவர், நெப்போலியன் போனபார்ட்டே என்ற கவிதையை உருக்கமாக நடித்துக் காண்பித்தார்.நெப்போலியன் குன்றின் மீது நின்று கொண்டு தன்னைச் சூழ்ந்துள்ள எதிரிப் படையை கண்காணிக்கிறார்.அவர்களுடைய வலிமையை மதிப்பிடுகிறார்.

"canon to the front of him
 canon to the left of him
 canon to the right of him
 canon behind him...
 yet he stood like a rock ...."

கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு நெப்போலியனைப் போலவே சுற்று முற்றும் பார்த்து எதிரிகளின் பீரங்கிப் படையை 'சர்வே'செய்யும் காட்சியை எங்க‌ள் தலைமை ஆசிரியர் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தார்.
அதை நிறுத்தி விட்டு தன் திறமையில் தானே மகிழ்ந்து போய்,

"எந்தக் கம்மனாட்டியாவது என்னை மாதிரி இந்தக் கவிதையை நடிப்போடு சொல்ல முடியுமாடா..?"என்று கொக்கரித்தார்.அவர் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்தவர். தஞ்சை மாவட்டத்தில் செல்லத் திட்டு கம்மனாட்டி'!  மதுரை, நெல்லைக்கு எப்படி 'மூதியோ' அப்படி தஞ்சைக்குக் 'கம்மனாட்டி'!சென்னைக்கு அதுவே 'கஸ்மால'மாக மாறும்.

வகுப்பே மெளனம் சாதிதது.எந்தக் 'கம்மனாட்டி'யும் பதில் சொல்லாத போது, நான் எழுந்து "இந்தக் கம்மனாட்டி சொல்கிறேன் சார்!" என்றேன்.

நானும் அவரைப்போலவே 'கம்மனாட்டி' என்ற சொல்லைப் பயன் படுத்தியதைக் கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ந்து போனார்.கோபத்தில் என்னை இரண்டு தட்டு தட்டினார். பின்னர், "சவாலாடா விடுகிறாய்! இப்பவே போட்டி வைக்கிறேன்!நடிப்போடு சொல்லணும்! முடியுமாடா உன்னால்!?" என்றார்.

"முடியும் சார்!"

ஏவலாளரை அழைத்து ஆசிரியர் அறையில் ஓய்வாக இருக்கும் இரண்டு ஆசிரியர்களை அழைத்து வரச் செய்தார். அவர்களை நடுவராக வைத்தார்.

"இந்தப் பாட்டை நான் சொல்லுவேன் முதலில். என்னைத் தொடர்ந்து இவன் சொல்லணும். நான் சொல்லும் பாவத்தில் சொல்கிறானா என்று நீங்கள் தீர்ப்புச் சொல்லணும்.யார் சொல்லுவது சிறப்பாக இருந்தது என்று சொல்லணும்." நடுவர்களுக்குப் போட்டியின் நிபந்தனைகளை விளக்கினார்.

முதலில் அவர் சொல்லிக் காண்பித்தார்.தொடர்ந்து நான் சொன்னேன்.

நடுவர்கள் தங்களுக்குள் ஆலோசித்தார்கள்.பின்னர்,"ஐயா! நாங்கள் சொல்லும் தீர்ப்பால் எங்க‌ள் மீது கோபப் படமாட்டீர்கள் என்றால் சொல்கிறோம். இல்லாவிட்டால் தீர்ப்புச் சொல்லாமல் வெளியேறுகிறோம்"என்று தலைமை ஆசிரியரிடம் சொன்னார்கள்.

"எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். நான் கோவம் கொள்ளவில்லை!"

"அந்தப் பையன் உங்களைக் காட்டிலும் கம்பீரமாக‌க நல்ல‌ பாவத்துடன் சொல்கிறான் ஐயா!இந்தப் போட்டியில் அவனே வெற்றி பெற்றான் ஐயா!"

தலைமை ஆசிரியர் மகிழ்ந்து போனார்.எந்தக் கையால் என்னை அடித்தாரோ அந்தக் கையாலேயே என்னை அணைத்துப் பாராட்டினார்.மறுபடியும் பல தடவை'கம்மனாட்டி கம்மனாட்டி' என்று செல்லமாக அழைத்தார்.ஒரு புத்தகத்தை எனக்குப் பரிசாகக் கொடுத்து வெகுவாகப் பாராட்டினார். தலமை ஆசிரியர் திரு வி. சுப்பிரமணிய ஐயர்.நடுவராக இருந்தவர் என் பழைய ஆக்கம் "முன்னுக்கு வாடா கண்ணா"வில் வரும் திரு கோபால கிருஷ்ண ஐயர்.மற்றொரு நடுவர் திரு என் ஆர். வெங்கடராமன்.

என் வாய்க் கொழுப்பு எனக்குப் புகழ் சேர்த்த சம்பவம் இது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நான் 7வது படிக்கும் சமயம் நெல்லை சென்று இருந்தேன்.என் தாயாரும் நானும் மட்டும் அங்கு சென்று இருந்தோம்.அங்கு என் அத்தை மகன் திரு கிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தோம்.அவர்  எனக்கு 20 வயதாவது மூத்தவர்.மதுரை வங்கியில் உயர் பதவி வகித்தவர்.

"டேய்! அம்மாஞ்சி! (அம்மான் சேய்,மாமன் மகனே என்று பொருள்) உன்னுடைய வேதம் என்ன என்று தெரியுமாடா உனக்கு?!" என்று கேட்டார்.

"தெரியும் ஓய்! ராவணன் அழுகைதான் என் வேதம் என்றேன்".

என் பதிலை சற்றும் எதிர்பார்க்காத அயித்தான் சற்றே திகைத்தார்.அப்புறம் சமாளித்துக்கொண்டார். நான் சொன்னதில் உள்ள நயம் அவருக்குப் புலப்பட்டது.

"அடே அப்பா! புராணம் இதிஹாசம் எல்லாம் இப்பவே அத்துப்படியாடா உனக்கு?" என்று பாராட்டினார்.

என் தாயாரிடம்,"இவனைச் சரியாக வளர்க்க வேண்டும். குயுக்தியான மூளை உள்ளவனாக இருக்கிறான். சரியாக வழி நடத்தாவிட்டால் சிக்கலில் போய் மாட்டுவான்.அல்லது பெரிய வக்கீலாக வருவான்" என்றார்.

நான் கூறிய பதிலில் இருந்து என் வேதம் என்னவென்று சொல்ல முடியுமா வகுப்பறைத் தோழர்களே!?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஒரு முறை மடத்து சுவாமிகள் ஒருவருடன் எனக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

"உனக்குக் காமாலைக் கண். அதனால்தான் உனக்கு எல்லாம் மஞ்சளாகத் தெரிகிறது" என்றார்.

"சரி,ஒப்புக்கொள்கிறேன். ஆனால் காமாலை நோயால் பதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று நான் அறியமாட்டேன். ஆனால் நீங்களோ கலர் கண்ணாடி அணிந்துள்ளீர்கள்.அதனால் எல்லாமும் உங்களுக்கு கண்ணாடியின் நிற‌த்தில் தெரிகிறது. நீங்கள் விரும்பினால் கண்ணாடியை கழற்றிவிட்டு வெறும் கண்களால் பார்த்துத் தெளிவாக அறியமுடியும். ஆனால் நீங்களோ கண்ணாடியைப் பிடிவாதமாகக் கழற்ற மறுக்கிறீர்கள்!" என்றேன்

அத‌ன் பின்னர் எங்க‌ள் தொடர்பே அற்றுப் போய் விட்டது.அவரை நான் என் நாக்கால் சுட்டு விட்டேன் என்பது இப்போது புரிகிற்து.என்ன செய்ய முடியும்? சிந்திய பாலும்,சிதறிய வார்த்தையும் மீண்டும் பயன்படுமா?
ஒரு தியாகியை நோக அடித்ததற்காக வருந்துகிறேன்.
**********************************************************************
இதற்கெல்லாம் என்ன காரணம்? என் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் சனீஸ்வரன், சூரியன் புத‌னுடன் கோலோச்சுகிறார். கடக ராசி, கடக லக்கினம்.

நன்றி! வணக்கம்!
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===


வாழ்க வளமுடன்!

23.4.11

அம்பி கல்யாணத்திற்கு அலைந்த கதை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 அம்பி கல்யாணத்திற்கு அலைந்த கதை!

இளைஞர் மலர்

இளைஞர் ஒருவர் தான் கல்யாணத்திற்கு, அதாவது தன்னுடைய கல்யாணம் நடைபெறுவதற்காக  அலைந்த கதையைச் சுவையாகச் சொல்லியுள்ளார். என்ன, 36 ஆண்டுகள் கழித்துச் சொல்லியுள்ளார். ஆண்டுகள் போனால்  என்ன? சம்பவம் நேற்று நடந்ததுபோல சுவையாக உள்ளது. அத்துடன் தகப்பன் சாமி (அதான் நம்ம  சுவாமி நாதன்) தன் வாழ்வில் நிகழ்த்திய அதிசயத்தையும் சொல்லியுள்ளார். அப்படியே கொடுத்துள்ளேன். படித்து  மகிழுங்கள். யார் அந்த இளைஞர்? பதிவின் முடிவில் அவர் பெயர், படத்துடன் உள்ளது!
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
26 ஜனவரி 1975 அன்று தான் என்னவளை நான் பெண் பார்த்தது.தில்லகேணி என்று சென்னை நகரவாசிகளால்  செல்லமாக அழைக்கப்படும் திருவல்லிக் கேணி சிவராமன் தெருவில், என் தாய் மாமன் சத்யவாகீஸ்வரன்
அவர்கள்  இல்லத்தில் வைத்துத்தான் இந்த வைபவம் நடந்தது.என் துணைவியார் என் மாமாவின் மைத்துனி பெண் தான்.  ஆகவே மாமாவின் மகள் என்ற முறையும்தான்.

ஏற்கனவே என் தாய் தந்தையெல்லோரும் பெண்ணைப் பார்த்து இருப்பதால் என்னை மட்டும் தஞ்சையில் இருந்து  சென்னைக்கு வண்டி ஏற்றி அனுப்பி விட்ட‌னர்.

"எனக்கும் பெண்ணைப் பார்க்க வேண்டாம். எப்படி இருந்தாலும் கட்டிக்கொள்கிறேன்" என்றேன்.

"அது சரிதான். ஆனால் பெண் உன்னைப் பார்க்க வேண்டாமா? பெண்ணுக்கு உன்னைப் பிடிக்க வேண்டாமா?  பெண் பார்ப்பது என்று பெயர்தானே தவிர அது ஆண் பார்ப்பதுமாகும்.உன் அக்காவை அழைத்துச் சென்று  பெண் பார்த்துவிட்டு வா!" என்றார் அப்பா.

சென்னையில் அக்காவையும், என் பெரியப்பா பையனான என் அண்ணன் ஸ்ரீநிவாஸனையும் துணைக்கு  அழைத்துக் கொண்டு பெண் பார்க்கச் சென்றேன்.

என் மூத்தவருடைய திருமணம் முடிந்தவுடனேயே என் திருமணத்திற்கு அவசரப்படுத்தினேன்.'என்ன இப்படி கல்யாணம் கல்யாணம் என்று அலைகிறான்' என்று அப்பாவும் அம்மாவும் தனிமையில் பேசிக் கொண்டதையும்  ஒட்டுக் கேட்டும் கேளாதது போல் இருந்து கொண்டேன்.ஆனாலும் கல்யாணப் பேச்சை நிறுத்தவில்லை.

ஏன் அப்படி கல்யாணத்திற்கு அலைந்தேன்? ஏன் அவசரப்படுத்தினேன்? எல்லாம் ஒரு காரணமாகத்தான். அதென்ன காரணம்?

ஒருநாள் காலையில் எழுந்தவுடன் வழக்கமாக கர தரிசனம் செய்யும் போது வலது கை கட்ட விரலுக்குக் கீழே  சுக்கிர மேட்டில் பட்டாணி அளவில் ஒரு வெள்ளைத் தழும்பைக் கண்டேன்.முதல் நாள் இரவு வரை இல்லாத அந்தத் த‌ழும்பு திடீரெனத் தானாகத் தோன்றியிருந்தது.தேய்த்துப் பார்த்தாலும் போகவில்லை.

அன்று மாலையே ஒரு தோல் நோய் நிபுணரிடம் 1 1/2 மணிநேரம் காத்துக் கிடந்து ஆலோசனை கேட்டேன்.

"இது லூகோடெர்மா! உடல் முழுதும் பரவ வாய்ப்பு உண்டு.இது ஒரு தோல் நிலைப்பாடே தவிர, இது ஒரு நோய்  கிடையாது. தோலுக்கு நிறம் கொடுக்கும் 'பிக்மெண்ட்' இல்லாமல் போய் விடுவதால் இப்படி ஆகிறது. நம்  தமிழ்நாட்டில் இதற்கு 'வெண்குஷ்டம்' என்று பெயர் வைத்துவிட்டதால் மக்களிடம் நமக்குப் பரவுமோ என்ற  ஒரு  பீதி உள்ளது.அப்படிப் பரவாது.பார்க்கவும் விகாரமாக‌ உள்ளதால் இந்த 'ஸ்கின் கண்டிஷன்' வந்தவர்களுக்கு  சமூக அங்கீகாரம் கிடைப்பது சிரமமாக உள்ளது. திருமணத் தடை ஏற்படும். ஆன திருமணம் கூட விவாகரத்தில்  முடியும்.உஙளுக்குத் திருமணம் ஆகவில்லை என்கிறீர்கள். முடிந்தால் கூடிய விரைவில் திருமணம் செய்து  கொள்ளுங்கள். ஏனென்றால் உடல் முழுதும் பரவி விட்டால் பெண் கிடைப்பது அரிதாகிவிடும்...."

அந்த டாக்டர் சொன்னதையெல்லாம் கேட்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். உடல் முழுதும் வெள்ளையாகப்  போய் கண்களைச் சுற்றிமட்டும் வளையமாக பழுப்பாக நிறம் மாறாமல் இருந்து, பார்க்க ஒரு பிசாசைப் போல  நடமாடுவது போலக் கனவெல்லாம் வர ஆரம்பித்து விட்டது.

அந்த டாக்டர் சொன்னது தப்பாக இருக்கலாமோ என்ற நப்பாசையில் வேறு ஒரு தோல் நிபுணரை அணுகினேன்.  அவரோ 'இது விடிலிகோ' என்று
புதுப் பெயரைச்சொன்னார்.'அப்பாடி!  அந்த டாக்டர் சொன்னது இல்லை போல
உள்ளதே' என்று சந்தோஷமாக மருத்துவ அகராதியைப் புரட்டிப் பார்த்தேன். விடிலிகோ என்பதற்குப் பொருள்  லூகோடெர்மா என்றும், லூகோடெர்மா விற்குப் பொருள் விடிலிகோ என்றும் கண்டிருந்தது.

இது அந்த மாதிரி இருக்கக்கூடாதே என்று வேண்டாத தெய்வமில்லை. எனக்கு சரியாகப் போய்விட்டல் உனக்குப்  பத்து தேங்காய் உடைக்கிறேன் என்று ஒரு பிள்ளையார் கோவிலில் வேண்டிக் கொண்டால், அடுத்த பிள்ளை

யாருக்கு அது 20 ஆக உயரும். இப்படி உயர்ந்து ஊரில் உள்ள எல்லா பிள்ளை யாருக்கும் வேண்டிக் கொண்ட  தேங்காய் எண்ணிக்கை 10000ஐத் தாண்டும். ஆனாலும் ஒரு பலனும் இல்லை.என்னைக் குணப்படுத்த வேண்டிய
பொறுப்பைத்  தன் தம்பியிடம் விட்டு விட்டதால் பிள்ளையார் என்னைக் கண்டு கொள்ளவில்லை.

இப்போது புரிகிறதா திருமணத்திற்கு ஏன் அலைந்தேன் என்று? உடல் பூராவும் வெண்மை பர‌வி விட்டால் பெண்  கிடைப்பது சிரமமாகிவிடுமே என்ற பக்காவான சுயநலம் தான் காரணம்.

சொஜ்ஜி பஜ்ஜி காப்பி ஆனவுடன், வழக்கமாகக் கேட்கும் "ஒரு பாட்டுப் பாடேன் கேட்போம்" என்றார் அக்கா. இதற்காகவே காத்து இருந்தது போல ஒரு கிராமபோன் பிளேட்டை முடுக்கிவிட்டதைப்போல அந்தப் பெண்
பாடினார்கள்.

      "மோஹம் கொண்டேன் முருகா
      முத்துக்குமாராஆஆஆஆஆ குஹா ஆஆஆஆஆ‍ உன்மேல்
      மோஹம் கொண்டேன் முருகா ஆஆஆஆஆ"


"முத்து"என்ற பெயர் வருகிறதாம் அந்தப்பாட்டில்! பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளையின் பெயர் என்பதால்  அந்தப் பாட்டை தெரிவு செய்து மிகவும் சாமர்த்தியமாகப் பாடினார்களாம். திருமணம் முடிந்த பின் எடுத்துச்  சொன்னார்கள். அந்த அளவு கலை நுண்ணுணர்வு இருந்தால் நான் ஏன் இப்படி இருக்கப் போகிறேன்.?

கூட வந்த அண்ண்ன ஸ்ரீநிவாசன் எல்லோரும் கேட்க உரக்க அங்கேயே வைத்து, "டேய்! அம்பி! இவளையே கல்யாணம் பண்ணிக்கோ..ஆமாம்.. சொல்லிட்டேன்...உனக்கு இதை விட நல்ல பெண்  எல்லாம் கிடைக்காது ...என்ன கேட்டியா...சரின்னு இப்பவே சொல்லு...." என்கிறார்.

நானும் பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டி வைத்தேன்.எல்லோருக்கும் மகிழ்ச்சி.

ஆனாலும் மனதுக்குள் ஒரு குற்ற உணர்வு.

"நாம் அந்தப் பெண்ணை ஏமாற்றுகிறோமோ? நாளைக்கே இந்த வெள்ளை புள்ளி உடல் முழுதும் பரவி விட்டால்  என்னை வெறுப்பாளோ? கல்யாணத்திற்கு முன்பாகவே சொல்லுவதா வேண்டாமா? சொன்னால் கல்யாணம் நின்று  விடுமா?"

இரவு முழுதும் என் மனச்சாட்சி விழித்துக் கொண்டு ஆட்ட‌ம் போட்டது.

மறு நாள் விடிந்ததும் யாரிடமும் சொல்லாமல் திருவல்லிக்கேணி போய் மாமன் வீட்டுக் கதவைத்  தட்டினேன்.  மாமன் மனைவியிடம் (அம்மாமி என்போம்.சுந்தரி மாமி) விஷயத்தைப் புட்டு புட்டு வைத்தேன்.மாமி

எல்லோரிடமும் பேசி, பெண்ணிடமும் பேசி ஒப்புதல் வாங்கி விட்டார்கள்.

திருமணத்திற்கு நாள் பார்த்து 24 ஏப்ரில் 1975 அன்று சுவாமிமலையில் வைத்துத் திருமணம் எளிமையாகவும்  இனிமையாகவும் நடந்தது. என் துணைவியார் கைத்தலம் பற்றும் போது கையில் உள்ள வெண்புள்ளி உருத்துவது போல ஒரு பிரமை.

மாலையும் கழுத்துமாக சுவாமிநாதனைத் தரிசிக்கும் போது மனமாற வேண்டிக் கொண்டேன், "அப்பனே!  என்னுடைய குறையைத் தீர்த்தருளும்"

தகப்பன் சுவாமி உண்மையாகவே என் குறையை நீக்கினார். அந்த அதிசயத்தைச் சொல்லவே இந்தப்பதிவு.

திருமணம் முடிந்து ஒருவருடம் கழிந்தபின்னர் என் அண்ணன் முனைவர் கண்ணன் அவர்கள் பங்களூருவில்  டாட்டா இன்ஸ்டிட்யூட்டில் பி ஹெச் டி படிக்கச் சென்றார். அங்கே அவருக்கு ஆய்வில் பல தடங்க‌ல் ஏற்பட்டது.
சோர்வு உற்றார்.அவரை உற்சாகப்படுத்தவும், வேண்டுதலாகவும் ஒரு ஆன்மீகச் சுற்றுலா போனோம்.

முன்னர் ஒருமுறை நான் திருச்செந்தூர் போன போது, அங்கே ஒருவர் ஒரு மண்டபத்தில் 20 பண்டாரங்களுக்கு, அவர்களுடைய திருவோடுகளில் ஒவ்வொரு சம்பா சாதக்கட்டி, பெரியது, வைத்து கூடவே சிறிது த‌ட்சணையும்
வைத்து விழுந்து கும்பிட்டார்.அந்தப் பண்டாரங்களும் தானம் கொடுத்தவருக்கு அழகு தமிழில் மந்திரம் போல  வாழ்த்துச் சொன்னார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த நான், 'நானும் அப்படிச் செய்வேன்' என்று வேண்டிக்  கொண்டேன்.

சுவாமிமலையில் 25 பண்டாரங்களை ஒரு சேரக் கண்டவுடன், திருச்செந்தூரில் கண்டது நினைவுக்கு வந்தது.உடனே  மடப்பள்ளியில் சொல்லி 25 பெரிய பட்டை வெண்பொங்கல் போடச் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு சுவாமி
தரிசனம் செய்யச் சென்றோம். தரிசனம் முடிந்து வந்து பண்டாரங்களுக்கு அந்தப் பொங்கலை அளித்து விட்டு  சிறிது தட்சணையும் அளித்து சாஷ்டாங்க‌ நமஸ்காரம் செய்தேன்.

மறுநாள் காலை வழக்கம் போல படுக்கையை விட்டு எழுந்தவுடன் கர தரிசனம் செய்தேன். அதிசயம் காத்து  இருந்தது. ஆம்! அந்த வெண் புள்ளி காணவில்லை. என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.புள்ளி இருந்த  இடத்தைச் சுரண்டிப் பார்த்தேன். போயே போச்!

கண்களில் ஆனந்தக் க‌ண்ணீர் பெருகியது. எல்லாம் அந்த தகப்பன் சுவாமியின் அருளேதான். அவன்  சன்னதியிலேயே திருமணம் செய்வித்து, என் குறையயும் தீர்த்து வைத்தானே ,அவன் புகழை எப்படிப்பாடுவேன்?

என்ன சொல்லிப் போற்றுவேன்?

வருகின்ற 24 ஏப்ரல் 2011க்கு 36 வருட திருமண வாழ்க்கை முடிவுறுகிறது. குறை உள்ளவன் என்று தெரிந்தும்  என்னைத் ஏற்றுக் கொண்டு துணிவுடன் குடும்பம் நடத்திய என் துணைவியார் திருமதி ஜெயலக்ஷ்மி பி.எஸ்ஸி.,எம்
எட் அவர்களுக்கு என்றும் என் வந்தனம்.

ஸ்ரீசுவாமிநாத குருவே போற்றி! தகப்பன் சுவாமியே போற்றி! ஓம்காரப் பொருளே போற்றி! உள் நின்று  ஒளிர்வாய் போற்றி!

நன்றி, வணக்கத்துடன்
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!