Short Story: கிளிக்குக் கிடைத்த வரம்!
மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் எழுதிய சிறுகதை ஒன்றை நீங்கள் அனைவரும் படித்து மகிழ, அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!
அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------
வனாந்திரக் காட்டுப் பகுதி அது. மரம், செடி,கொடி என்று செழிப்பாக இருந்தது. சில இடங்களில் சூரிய ஒளியே தெரியாத அளவிற்கு அடர்த்தியான மரங்கள்.
எல்லாவகையான மரங்களும் இருந்தன. மா, பலா, கொய்யா என்று கனி தரும் மரங்களுக்கும் குறைவில்லாத பிரதேசம். அருகே ஒரு பெரிய நீர் நிலையும் இருந்தது.
ஏராளமான பறைவைகள் அங்கே இருந்தன. அதுதான் குறிப்பிடத்தகுந்த செயதி.
வனத்தின் மத்தியப் பகுதியில் பிரம்மாண்டமான ஆலமரம் ஒன்றும் இருந்தது. அதன் வயது 200 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கலாம். அத்தனை பெரிய மரம்.
அந்த மரத்தின் பொந்து ஒன்றில் கிளியொன்று குடியிருந்தது. அதற்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அது அங்கேதான் குடியிருந்தது. ஆலமரத்தின் கனிகளை உண்டுவிட்டு அல்லது பக்கத்தில் உள்ள நாவல், கொய்யா மரங்களில் இருக்கும் கனிகளை உண்டுவிட்டு, அருகில் இருக்கும் நீர் நிலையில் தேவையான தண்ணீரைக் குடித்துவிட்டு, தன் பொந்திற்கே வந்து அடைந்துவிடும். மைனா போன்ற மற்ற பறவைகளும் கூடு கட்டிக்கொண்டு அந்த மரத்திலே தங்கியிருந்தன. ஒன்றுக்கொன்று போட்டியில்லாமல் அவை
அனைத்தும் ஒற்றுமையாக இருந்தன. காலம் சுவையாக ஓடிக் கொண்டி ருந்தது.
அப்படியே ஓடிக்கொண்டிருந்தால் கதையில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது?
ஒரு திருப்பம் ஏற்பட்டது.
ஒருமுறை கடுமையான வறட்சி ஏற்பட்டு, ஆறு மாத காலம் மழையே பெய்யவில்லை. பகலில் சூரிய வெப்பத்தால், வெட்கையும் அதிகமாக இருந்தது. அத்தனை மரங்கள் இருந்தும் காற்று வீசாததால் ஜீவிப்பதே கஷ்டம் என்ற சூழ்நிலை உண்டானது. அருகில் இருந்த நீர் நிலை சுத்தமாக வற்றிப்போய் விட்டது. கட்டாந்தரையாகிவிட்டது.
நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு மரமாக பட்டுக் கொண்டே வந்தது. கடைசியில் அது ஆலமரத்தையும் தொற்றிக் கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக புற்று நோயைப் போல மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பாதிப்பிற்கு உள்ளானது. இலைகள் அனைத்தும் உதிர்நது விட்டன. கிளைகள் எல்லாம் காய்ந்து விறகுக்கு மட்டுமே பயன்படக் கூடிய நிலைக்கு ஆளாயின.
நம் நாயகன் கிளியைத் தவிர அதில் வசித்துவந்த மற்ற பறவைகள் அனைத்தும் இடம் பெயர்ந்து வனத்தின் வேறு பகுதிக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போய் விட்டன.
சரியான ஆகாரம் மற்றும் தண்ணீர் இன்றி கிளியும் வாட்டமுற்றுத் தன் பொலிவை இழந்து, இன்றோ அல்லது நாளையோ உயிரைவிடும் நிலைமைக்கு ஆளாகி விட்டது.
உடல் மெலிந்து, செயல் இழந்து, சிறகுகள் உதிர்ந்து, காண்பதற்குப் பரிதாபமான நிலைக்கு வந்து விட்டது. ஆனாலும் அது தன் மன உறுதியை விடாமலும், வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதற்கு விருப்பமில்லாமலும், அந்த பொந்திலேயே இருந்தது.
கண்ண பரத்மாத்மாவின் கவனத்திற்கு இது வந்தது. பறவைகளுக்கு உள்ள நியதிகளை மறந்து, அங்கேயே பிடிவாதமாக இருக்கும் கிளியின் மன நிலையை அறிந்து கொள்வதற்கும், அதற்கு உதவி செய்வதற்கும் அவர் அங்கே காட்சி கொடுத்தார்.
வந்தவர், தன் அன்புக் கரங்கரங்களால், கிளியைப் பிடித்துத் தடவிக் கொடுத்துவிட்டுக் கேட்டார்:
”ஏன் இந்த முட்டாள்தனம்? வேறு இடங்களுக்குப் பறந்து போகாமல், ஏன் இங்கேயே இருந்து உயிரை மாய்த்துக் கொள்ளப் பார்க்கிறாய்? உனக்கு இன்னும் வயது இருக்கிறது. காலம் இருக்கிறது. உடனடியாக வேறு ஒரு பசுமையான இடத்திற்குப் பறந்து செல்!
கிளி வந்தவர் கடவுள் என்பதை உணர்ந்து அடக்கமாகப் பதில் சொன்னது:
”இல்லை பகவானே என் தாயை விட்டுவிட்டு வேறு இடத்திற்குச் செல்ல எனக்கு மனமில்லை. அவளுக்கு ஏற்படும் முடிவு எனக்கும் ஏற்படட்டும் என்றுதான் என் தாயோடு நான் இருக்கிறேன்.
”தாயா? யார் உன் தாய்?”
”இந்த மரம்தான் பகவானே!”
”எப்படிச் சொல்கிறாய்?”
”நான் ஒரு மாதக் குஞ்சாக இருக்கும்போதே என்னைப் பெற்ற தாய் என்னைவிட்டுப் போய் விட்டாள். என் தாயின் முகம் கூட எனக்கு நினைவில் இல்லை. இந்த மரம்தான் எனக்குத் தாயாக அடைக்கலம் கொடுத்தது. உணவைக் கொடுத்தது. வெய்யிலிலும், மழையிலும் நான் பாதுகாப்பாகத் தங்க ஒரு பொந்தையும் கொடுத்து என்னை அரவணைத்தது. இந்த மரம்தான் என் தாய். என் தாய் நலிவுற்றிருக்கும் சமயத்தில் என் தாயைக் கைவிட்டு விட்டுப்போக என் மனம் ஒப்பவில்லை. அதனாலதான் இங்கேயே இருக்கிறேன். என் தாய்க்கு நேரவிருக்கும் முடிவு எனக்கும் ஏற்படட்டும்”
நெகிழ்வுற்ற பகவான், புன்னகையோடு சொன்னார்
“உன் நல்ல மனதை நான் பாராட்டுகிறேன். உனக்கு வரம் ஒன்றைத் தருகிறேன். என்ன வேண்டும் கேள்”
கிளி என்ன கேட்டிருக்கும், சொல்லுங்கள்!
தனக்கும், தன் தாய்போன்ற மரத்திற்கும் மட்டும் பலனைக் கேட்காமல் ஒட்டு மொத்த வனாந்திரத்திற்கும் சேர்த்துப் பலனைக் கேட்டது.
“பகவானே! இந்த வனாந்திரம் பழைய நிலைமைக்குத் திரும்ப வர வேண்டும். பழைய பொலிவிற்கு வர வேண்டும். அருள் செய்யுங்கள்!”
கிளியின் விசுவாசத்தையும், பெருந்தன்மையையும் எண்ணி வியந்த பகவான், “அப்படியே ஆகட்டும்!” என்றார்
என்னவொரு அதிசயம்!. ஒரே நொடியில் வனாந்திரம் முழுவதும் முன்னிருந்த நிலைமைக்குத் திரும்பியது! பகவானின் அருள் இருந்தால், அவருடைய கடைக்கண் பட்டால் என்னதான் நடக்காது?
“நன்றாக இரு” என்று கிளியை வாழ்த்திவிட்டுப் பகவான் மறைந்தார்.
கிளியும் பழைய பொலிவிற்குத் திரும்பி வந்திருந்தது. அள்வில்லாத மகிழ்ச்சி கொண்ட கிளி, தன் சிறகுகளை விரித்து அந்த ஆலமரத்தைச் சுற்றிப் பலமுறைகள் வலம் வந்தது.
தாயைப் போன்று தனக்கு அடைக்கலம் கொடுத்த அந்த மரத்திற்கு நன்றி சொல்லவும், வணங்கவும், அந்தக் கிளி அவ்வாறு பறந்து வலம் வந்தது என்று அதை நாம் எடுத்துக்கொள்வோம்
++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!