மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.7.20

மாணிக்கவாசகர் சொல்ல சிவபுராணத்தைத் தன் கைப்பட எழுதியவர் இறைவன் சிவனார்!!!!


மாணிக்கவாசகர் சொல்ல சிவபுராணத்தைத் தன் கைப்பட எழுதியவர் இறைவன் சிவனார்!!!!

*திருவாசகத்தை, சிவபுராணத்தை, இறைவன் சிவன், தன் கைப்பட எழுதிய நாள் வியாழக்கிழமை 25. 6. 2020*

*ஓம் நமசிவாய , வரும் வியாழக்கிழமை 25. 6. 2020 அன்று, மாணிக்கவாசகர் சொல்ல, இறைவன் சிவன், சிவபுராணத்தை, திருவாசகத்தை தன் கைப்பட எழுதிய நாள். 26.6.2020 அன்று மாணிக்கவாசகர், தில்லை அம்பலத்தில் அதாவது சிதம்பரத்தில் இறைவனுடன் ஜோதியாக கலந்த நாள்.*

சிவனின் கருணையால் திருவாசகத்தின் முதற் பதிகமான சிவபுராணத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கிறோம். இந்த அற்புதமான நேரத்தில் திருவாசகம் பற்றிய, சிவபுராணம் பற்றிய ஒரு சில விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சிவபுராணத்தில் 93 வது வரி
“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார்”
என்று மாணிக்கவாசகர் பாடியிருப்பார். சொல்லிய பாட்டின் பொருள் என்பது இங்கு நம்முடைய இறைவனான சிவனைக் குறிக்கிறது. இக்கருத்தை மாணிக்கவாசகரின் வாழ்க்கை வரலாறு சொல்கிறது. இதனை அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் ஒரு சிறுகதையாக இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.

“ஐயா! வணக்கம். நான் இந்த ஊரை சேர்ந்தவன். உங்களுடைய பாடல்களை பலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அவற்றை பாராயணம் செய்ய விரும்புவதால், எழுதிக் கொள்ள வேண்டி தங்களை தேடினேன். நீங்கள் இங்கே இருப்பதாக அறிந்து வந்தேன். பாடல்களை தாங்கள் சொன்னால், நான் எழுதி கொள்கிறேன்..” குரல் வந்த திசை நோக்கி மாணிக்கவாசகர் திரும்புகிறார்.

வந்த அந்தணருக்கு களையான முகமும், ஒளி பொருந்திய கண்களுமாக இருந்தார். பார்த்தவுடன் அனைவரையும் கவரும் முகம் கொண்ட அவரால், உள்ளன்புடன் வைக்கப்பட்ட கோரிக்கையை, மாணிக்கவாசகரால் தவிர்க்க இயலவில்லை. தன்னை அறியாமல் அதற்கு சம்மதம் தெரிவித்து பாடல்களை சொல்ல தயாரானார். அதை எழுத அந்தணர் வடிவில் வந்த இறைவனும் ஆயத்தமானார்.

தன்னைத் தேடி வந்திருப்பவர், அடியார்களிடம் திருவிளையாடல் நடத்துவதில் பேரின்பம் கொண்ட ஈசன்தான் என்பதை  மாணிக்கவாசகர் என்று போற்றப்படும் திருவாதவூரார் உணரவில்லை. தன்னிலை மறந்து அவர் பாடல்களை சொல்லிய வேகத்திலேயே, அவை சுவடியில் எழுதப்பட்ட அதிசயம் அங்கே நிறைவேறி முடிந்தது.

‘திருவாசகம்’ முழுவதும் எழுதியாகி விட்டது. அதன் பின்னர், திருச்சிற்றம்பலத்தின் மேல் திருக்கோவை பதிகம் ஒன்று வேண்டும் என்று அந்தணர்  வேண்டுகிறார். தன்னை அறியாத நிலையில் மாணிக்கவாசகர் அதையும் பாடி முடிக்கிறார். எழுதி முடித்தவுடன் அந்தணராக வந்த இறைவன் மறைந்து விடுகிறார். மாணிக்கவாசகருக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தணர்  வடிவில் வந்த இறைவன் , ஓலைச் சுவடிகளை தில்லை அம்பலமான சிதம்பரத்தின் கருவறை வாசல்படியில் வைத்துவிட்டு மறைந்து விட்டார்.

மறுநாள் காலை சிதம்பரம் நடராஜருக்கான அன்றாட பூஜைகளை செய்ய வந்த அர்ச்சகர், நுழைவு வாசலில் வைக்கப்பட்டிருந்த ஓலைச் சுவடியை பார்த்தார். அதை கைகளில் எடுத்து கவனித்தபோது, திருவாதவூரார் சொல்லச்சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது’ என்று கையெழுத்து இடப்பட்டிருந்தது.

‘பூட்டப்பட்ட கோவிலின் கருவறை வாசலில் இந்த ஓலைச் சுவடியை வைத்தது யார்?’ என்று திகைத்தார், குழம்பினார். அவரால் எவ்வித முடிவுக்கும் வர இயலாமல், மேற்கொண்டு விவரங்களை அறிய, தில்லை வாழ் மூவாயிரமவர் சபையில் ஓலைச் சுவடியை சமர்ப்பித்தார்.

சபையினருக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன. ‘ஓலைச் சுவடியை வைத்தது யார்? இறைவனா அல்லது வேறு யாராவதா? கையெழுத்தாக அழகிய சிற்றம்பலமுடையான் என்று இருப்பதால் சிவபெருமானே இதை வைத்ததாக எடுத்துக்கொள்ளலாமா?’ என்றெல்லாம் பல கேள்விகள் அவர்களுக்குள்.

இறுதியாக சபையின் தலைவர் இறைவனை பிரார்த்தித்துவிட்டு, ஓலைச்சுவடியை பிரித்து படிக்கத் தொடங்கினார். அதில் ிவபெருமானை பாட்டுடை தலைவனாகக் கொண்ட ‘திருவாசகம்’ மற்றும்  ‘திருக்கோவை பதிகம்’ ஆகியவை இருந்தன. பாடலின் மூலம் எழுந்த உணர்வுகள், அனைவரது மனதையும் உருக்கி விட்ட அதிசயம் அங்கே நிறைவேறியது. அதன் காரணமாக, பாடல்களுக்கான மூல விளக்கத்தை அறிந்து கொள்ள அனைவரும் விரும்பினர்.

பாடல்களின் அடியில் ‘திருவாதவூரார் சொல்லச்சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு  இதுபற்றி திருவாதவூராரையே சந்தித்து கேட்பது என்று முடிவானது.

தன்னைத் தேடி வந்திருக்கும் தில்லைவாழ் மூவாயிரவர் சபையினரிடம், “இந்த அடியவனை நாடி அனைவரும் வந்துள்ள காரணம் என்ன?” என்றார் திருவாதவூரார்.

கோவில் கருவறை முன்பு ஓலைச்சுவடி இருந்தது முதல், அதைப் படித்தது வரை கூறி சபையின் தலைவர், “பாடலின் நயம் புரிந்தது. ஆனால் முழுவதுமாக அர்த்தம் விளங்கவில்லை. சுவடியின் அடியில் திருவாதவூரார் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது என்ற குறிப்பும் உள்ளது. ஆகையால் தான் தங்களை சந்தித்து தக்க விளக்கம் பெற வந்துள்ளோம்” என்றார்.

திருவாதவூராரின் உடல் முழுவதும் ஒரு கணம் அதிர்ந்தது. சுதாரித்துக்கொண்ட அவர், “அந்த ஓலைச்சுவடியை நான் பார்க்கலாமா..”

பணிவுடன் கேட்ட அவரது கைகளில் தரப்பட்ட ஓலைச்சுவடியை கண்டதும், கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. பிறந்த குழந்தையை கையில் தாங்கும் அன்னையைப் போல, பரவசத்துடன் ஓலைச்சுவடியை கைகளில் தாங்கினார். உள்ளம் நிறைய அதனை தடவியபடி ஒவ்வொரு சுவடியாக பார்த்தார். பாடலின் அடியில் இருந்த ‘அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ என்ற வார்த்தையை கண்டு கண்ணீர் பெருக்கு இன்னும் அதிகமானது. அதை மீண்டும் மீண்டும் கண்களில் ஒற்றியவாறே இறைவனின் திருவிளையாடலை எண்ணி உள்ளம் பூரித்து நின்றார்.

சிவபெருமானின் கரங்களால் எழுதப்பட்ட தமிழை படிக்க, அவரது இரண்டு கண்கள் போதவில்லை. “இறைவா.. உன்னை எப்படி போற்றுவேன். இந்த அடியவன் சொன்னதை உனது திருக்கரங்களால் எழுதக் கூடிய பாக்கியம் பெற, எந்த பிறவியில் தவம் செய்தேனோ; இப்பிறவியில் அது வாய்த்தது” என்று பலவாறாக உணர்வுகளை வெளிப்படுத்திய திருவாதவூராரை, கூடியிருந்த அனைவரும் ஆச்சரி யத்துடன் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திருவாதவூராரின் உள்ளத்தில் ஏற்பட்ட ஒளியில் தோன்றிய இறைவன், “திருவாதவூராரே! நீ என்னுடைய பாதத்தை அடையும் காலம் வந்துவிட்டது. சிற்றம்பலம் நோக்கி வந்து எனது பாதத்தில் புகுவீராக..” என்று கூறி மறைந்தார்.

தன்னிலை மறந்து நின்றவர், நினைவு வந்தவராக சபையினரைப் பார்த்துச் சொன்னார், “ஐயா.. இந்த பாடல்களுக்கான அர்த்தத்தை நான் சிற்றம்பலத்தின் சன்னிதியில் தெரிவிக்கலாமா?”

அனைவரும் அதை ஆமோதித்து ஏற்றுக்கொண்டனர். திருவாதவூரார் முன்னே செல்ல, மூவாயிரமவர் சபை அவரை பின் தொடர்ந்தது.

தில்லை சிற்றம்பலத்திற்கு சென்று நின்ற திருவாதவூரார் கருவறையை சுட்டிக் காட்டி, இந்த பொன்னம்பலத்தானே இந்த அனைத்து பாட்டுகளுக்கும் பொருள் ஆவான்” என்று கூறியவாறே, இறைவனின் பாதத்தை நோக்கி சென்று ஒளி வடிவமாக கலந்து விட்டார். மாணிக்கவாசகரின் வாழ்க்கை வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள இந்த விஷயம் மிகத் தெளிவாகச் சொல்கிறது, திருவாசகத்தின் பொருள் இறைவன்தான் என்று. அதுமட்டுமல்ல இதற்கான ஆதாரம் திருவாசகத்தின் இரண்டாம் அதிகமான கீர்த்தித் திருவகவலில் கொடுக்கப்பட்டுள்ளது. திருவாசகத்தின் பொருள் மட்டும் தான் அல்ல,  மாணிக்கவாசகர் சொல்ல தன் கைப்பட எழுதியது என்பதற்கு ஆதாரத்தையும் இறைவன் நமக்கு கீர்த்தித் திருவகவல் மூலமாக கொடுத்திருக்கிறார். கீர்த்தித் திருவகவலின் 26 - 28ம் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக் 26
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச்
சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் 28

கூறு - பாதி, உடை - புடவை, மங்கை - பெண், குடநாடு - மேல் நாடு, மிசை - உயர்ந்த, உன்னத,  சதுர் - தந்திரம் சூழ்ச்சி உபாயம், சாத்தாய் - பாடல்,

தமிழ் அகராதிகளின் படி மேற்கண்ட வரிகளின் பொருள்
தன்னில் பாதியாக உள்ள புடவை கட்டிய மங்கையும், *தானும்* வந்து
மேல் நாட்டைச் சேர்ந்த உயர் குதிரையை கொண்டு
சூழ்ச்சி செய்து, *பாடலாய் (திருவாசகமாய்) தான்* எழுந்தருளி

என்று வருகிறது. மாணிக்கவாசகர் தன் கைப்பட திருவாசகத்தை ஓலைச்சுவடிகளில் எழுதி இருந்தால், இங்கே  கூறு உடை மங்கையும் *தானும்* என்று எழுதி இருக்க மாட்டார்.

நம்மைப்போன்ற எளியவர்கள், புராணங்களில் சொல்லப்பட்டவை எல்லாம் கதை அல்ல அவைகள் எல்லாம் உண்மை என்பதை புரிந்து கொள்வதற்காகவே இந்த வரிகளில் மிக அழகாக, கூறு உடை மங்கையும் தானும்  என்றும் சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் என்றும் ஆதாரங்களை மறைமுகமாக கொடுத்திருக்கிறார்.

*நமக்கு திருவாசகம் கொடுத்த மாணிக்கவாசகரின் பொற்பாதங்களையும், அதை நமக்காக தன் கைப்பட எழுதிய இறைவன் திருப்பாதங்களையும் வணங்கி வரும் 25 ஜூன் 2020 மற்றும் 26ஆம் தேதி ஜூன் அன்றும், சிவபுராணம் மற்றும் திருவாசகத்தை பாராயணம் செய்வோம்.*

நாம் வாழும் காலத்தில், பெரும்பாலும் சமூக அந்தஸ்து என்கிற கௌரவத்திற்காக வேலை, வேலை, வேலை மற்றும் பணம் சம்பாதித்தல் என்பதற்காகவே நம்முடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிடுகிறோம். மற்றவர் முன்பு உயர்ந்து நிற்பதற்கு ஆகவே வாழ்க்கையின் பெரும் பகுதியை செலவிடும் நாம் நமக்கு என்ன வேண்டும்? எது நமக்கு திருப்தியைத் தருகிறது? எது நம்முடைய குடும்பத்திற்கு அமைதியை தருகிறதுஎது? என்பதை பற்றி யோசிக்க கூட நேரமில்லாமல் பணம் என்கின்ற ஒன்றை நோக்கி மட்டுமே சென்று கொண்டிருக்கிறோம். நம்முடைய குழந்தைகளுக்கும் , எவ்வளவு பணத்தை சேமித்து வைப்பது ? எவ்வளவு சொத்து கொடுப்பது? என்பது பற்றி நிறைய யோசிக்கிறோம். நாம் செய்யும் பாராயணங்களும், நம்முடைய குடும்பத்திற்கு ஒரு சொத்துதான். நம்முடைய பாராயணங்கள், நம்முடைய குழந்தைகள், குடும்பத்தினர் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், எங்கு சென்றாலும், எல்லாவிதமான இக்கட்டு களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் பாதுகாக்கும் சக்தி கொண்டவை. நம்முடைய குழந்தைகளுக்கும் பாராயணம் கற்றுத்தருவது,  அடுத்து வரும் தலைமுறைகள், அழியா சொத்தை பெற்று, அந்த சொத்தை அதற்கடுத்து வரும் தலைமுறைகளுக்கும் கொடுப்பார்கள். நாம் சேர்த்து வைக்கும் பணம் மற்றும் மற்ற சொத்துக்களுக்கு காலப்போக்கில் மதிப்பு குறையலாம் ஆனால் பாராயணம் மூலமாக நாம் சேசரிக்கும் சக்தியின் மதிப்பு அளவிட முடியாதது இதனை பாராயணம் செய்பவர்கள் மட்டுமே உணர முடியும். நம்மை அனைவரையும் இணைத்து பாராயணம் செய்ய வைத்த எம்பெருமானின் திருப்பாதங்களை வணங்கி, பாராயணம் செய்வோம், நன்றி சொல்வோம்....

*சிவாய நம*
ஆக்கம்: மணிராமன்
---------------------------------------------------
படித்தேன், உவந்தேன், பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com