பாரதிக்கு நிகர் யாருமில்லை!
"வழி வழி பாரதி"
தஞ்சை நகரம் தமிழகத்துக்கு அளித்த பெரும் புலவர்களில் சேக்கிழாரடிப் பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் ஒருவர். நல்லதொரு குடும்பத்தின் வாரிசு. தொழிலால் வழக்கறிஞர். தமிழ், ஆங்கிலப் புலமை மிக்கவர். பாரதியை முழுமையாக மொழியாக்கம் செய்தவர். மாணிக்கவாசகரின் திருவாசகத்தை ஆங்கிலத்தில் அருமையாக நாநிலம் போற்றும் வகையில் மொழிபெயர்ப்புச் செய்தவர். இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் 'முதுமுனைவர்' எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர். பாரதி அறிஞர், கவிஞர் திருலோக சீத்தாராம் அவர்களின் ஞானச் சீடர். பழகுதற்கு இனியர். நடமாடும் பல்கலைக் கழகம். பல நூறு முனைவர்கள் உருவாக அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர். அவர் பாரதி குறித்து "வழி வழி பாரதி" என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒரு பகுதியை இப்போது தருகிறேன். பாரதி உலகக் கவிஞர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவனா, அல்லது நம் உடன் பிறந்தவர்களாலேயே குறைவாக மதிப்பிடப்பட வேண்டியவனா என்பதை இந்தப் பகுதி ஆணி அறைந்தாற்போல அறிவிக்கும். தமிழ்நாடு செய்த தவப்பயன் பாரதி இங்கு வந்து பிறந்தான். அவன் புகழை அறியாதோரைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அறிந்தோர் மேலும் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.
இனி "வழி வழி பாரதி"யிலிருந்து:--
..."பாரதிதாசன் கூறியதைக் கேளீர்: "என்னுடைய கவிதைகளில் காணப்படுகிற முற்போக்குக் கருத்துக்களுக்குப் பாரதியாரே காரணம் ஆவார்." பாரதியாரின் தொடர்பே தம் பழக்க வழக்கங்களிலும் சிந்தனையிலும், தாமே அறியாதவாறு சில மாற்றங்களைச் செய்தது என்றும் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பொதுவுடமை வாதி. நல்ல கவிஞர். அவர் சொல்லுகிறார்:--
"பாரதிக்கு நிகர் பாரதியே மண்ணில்
யார் எதிர்த்தாலும் மக்கள்
சீர் உயர்த்தும் பணியில்
பாரதிக்கு நிகர் பாரதியே."
பாரதியார் வேதத்தைப் போற்றியவர். வேதம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளாத, அறிந்து கொள்ள விரும்பாத அன்பர்களே, அதைப் பழித்தும், தெழித்தும், இழித்தும் பேசத் தலைப்படுகின்றனர். வேதம் காட்டும் ஆயிரமாயிரமாம் அறிவியற் செய்திகளை உணர்ந்து, மேலை நாட்டோர் இன்றும் அடைந்து வரும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
வேதம் என்றால் அறிவு, அறிதல் என்று பொருள்.
ஞானம் வேண்டாம் என்று கூறலாமா? காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பர். பாரதி "வேதம் புதுமை செய்" என்று ஆணையிடுகிறார். அப்படியென்றால் என்ன பொருள்? பழைய உண்மைகளுக்குப் புதிய துலக்கங்கள் தருதல் வேண்டும் என்பதே. வேதமறிந்தவன் பார்ப்பான். பார்ப்பான் வேதமறிந்தவன் என்று கூறவில்லை. நன்றாகக் கவனியுங்கள். வேதம் அறிந்தவன் பார்ப்பான், அதாவது யார் வேதம் அறிந்திருந்தாலும் அவன் அந்தணன். ஆக, பாரதி வேதம் புதுமை செய்தார். வேதம் சொன்னபடி 'பார்ப்பான்' என்றால் யார் என்பதை எடுத்துக் காட்டினார்.
"நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தினரேனும் - உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்."
எவையெல்லாம் வேதம் அல்ல என்பதையும் அவர் காட்டுகிறார்.
"உண்மையின் பேர் தெய்வம் என்போம் - அன்றி
ஓதிடும் வேதங்கள் பொய்யெனக் கண்டோம்;
உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்."
உலகில் பற்பல வேதங்கள் உள. தெய்வம் என்று ஒன்று கிடையாது என்று சாற்றிடும் மீமாஞ்சகர் வேதம், வேதம் இல்லை என்கிறார் பாரதி. ஸ்மிருதிகள் மாறிப் பயிலும் இயல்பின என்கிறார் அவர். யார் மேலோர் என்பதற்கு அவர் தரும் விடை.
"வையகம் காப்பவரேனும் - சிறு
வாழைப்பழக்கடை வைப்பவரேனும்
பொய்யகலத் தொழில் செய்தே - பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்"
தவம் என்றால் என்ன? இதற்கு பாரதி தரும் விடை.
"உற்றவர் நட்டவர் ஊரார் - இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் - இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை."
'யோகி' என்பவன் யார்? கேளுங்கள், அதற்கு பாரதி தந்த விடை.
"பக்கத் திருப்பவர் துன்பம் தனைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி
ஒகத் திருந்தி உலகோர் நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி."
'யோகம்', 'யாகம்', 'ஞானம்' இவற்றை விளக்குக என்றால் பாரதி தந்த விடை:
"ஊருக்குழைத்திடல் யோகம் - நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் - உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்."
'முக்தி' என்கிறார்களே அப்படியென்றால் என்ன? அதற்கு பாரதியின் பதில்.
"தோன்றி அழிவது வாழ்க்கை - இதில்
துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும்
மூன்றில் எது வருமேனும் - களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி."
"நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?" என்ற வினாவுக்கு பாரதி தரும் விடை.
"நன்றே செயல் வேண்டும் - அதை
நாளை செய்வோம் என்று போக்காமே
இன்றே செயல் வேண்டும் - அதை
இப்பொழுதே செய்திடல் வேண்டும்
அன்றிப் புன் சோம்பரினால் - இதை
ஆற்றுவம் நாளை என்றிருப்பீரேல்
கொன்றுமை நாளைக்கே - நமன்
கொண்டு சென்றால் பின்னர் ஏது செய்வீர்!"
செய்கின்ற தொழில்களில் எந்தத் தொழில் நல்ல தொழில்?
"யாதானும் தொழில் செய்வாம்
யாதும் அவள் தொழிலாம்."
செய்யும் தொழிலில் இழிவு கிடையாதா?
"தொழில் சோம்பரைப் போல் இழிவு இல்லை."
பாரதியிடம் போய் "உங்களுடைய தொழில் என்ன?" என்று கேட்டால்
"நமக்குத் தொழில் கவிதை" என்றார்.
சரி! கடமைதான் யாது?
"கடமையாவன தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடை முடியனாய்
பிற நட்டிருப்போர் பெயர் பலகூறி
அல்லா, யெனோவா எனத் தொழுது அன்புறும்
தேவரும் தானாய், திருமகள், பாரதி
உமை யெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்......"
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். பாரதியாரிடம் நாம் கற்க வேண்டியவை. தமிழ்ப் பற்று, தாய்மொழிப் பற்று, பிறமொழிப் பயிற்சி, தமிழ்நாட்டுப் பற்று, பாரத தேசப் பற்று, உலக நேயம்.
"நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்"
இந்நாள் வரை நான் சரியாக வாழவில்லையே. கவலைகள் என் மனத்தை மொய்க்கின்றனவே. என்ன செய்ய?
"சென்றது இனி மீளாது, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர், சென்றதனைக் குறித்தல் வேண்டா,
எழு, விழி, உணர்வு உறு!
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று, விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!
"செத்த பின் சிவலோகம், வைகுந்தம் சென்றிடலாம் என்று எண்ணாதே இத்தரை மீதினிலே இந்த நாளினிலே, இப்பொழுதே முத்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையில் களித்திடு, ஏங்கும் மனத்தை இளைப்பாற்றச் செய்" இவைதான் பாரதி நமக்களித்த அறிவுச் செல்வம். வேதம் புதுமை செய்தது.
ஆக்கம்: V.கோபாலன், தஞ்சாவூர்
திருவாளர் கோபாலன் அவர்களின் எழில்மிகு தோற்றம்!
+++++++++++++++++++++++++++++++++++வகுப்பறையின் சார்பில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
"உண்மையின் பேர் தெய்வம் என்போம் - அன்றி
ReplyDeleteஓதிடும் வேதங்கள் பொய்யெனக் கண்டோம்;
உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்." /:////. Nice thank you
//"உண்மையின் பேர் தெய்வம் என்போம் - அன்றி
ReplyDeleteஓதிடும் வேதங்கள் பொய்யெனக் கண்டோம்;
உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்."//
- இது தெளிவாகப் புரியும்படி நேரடியாகவே உண்மைத் தவிர்த்து வெறெதும் நம்பக் கூடியது அல்ல என்று சொல்லப்பட்டு இருக்கிறது
//உலகில் பற்பல வேதங்கள் உள. தெய்வம் என்று ஒன்று கிடையாது என்று சாற்றிடும் மீமாஞ்சகர் வேதம், வேதம் இல்லை என்கிறார் பாரதி//
மீமாம்சகர் பற்றி மேற்கண்ட (செய்யுள்) வரிகளில் எதுவும் இல்லாத போது இந்த இடைச் சொருகல் விளக்கம் ஏன் ?
ஆஹா! அற்புதம்!! அற்புதம்!!.. அருமை!!! அருமை!!!
ReplyDeleteஅறிவே தெய்வம்...
"சுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளீரோ?"
விடுதலை தெய்வம்....
"பொருத்தமுறநல் வேதமொர்ந்து
போயமைதீர மெயமைநேர
வருத்தமொழிய வறுமையொழிய
வையம் முழுதும் வண்மைபொழிய"
மிகவும் அற்புதமான வெள்ளி மணியதை
குன்றின் மீதே ஏறி நின்று அடித்தார் போலும்....
என் போன்ற பலருக்கும் இன்று அருமையான
அறிவுக்கு விருந்து.....
முதுமுனைவர் தி.ந. இராமசந்திரன் அவர்களின்
இலக்கிய மழையில் எனது சிறுவயதிலே
கேட்டு திளைத்திருக்கிறேன்... நான் வசிக்கும் இந் நாட்டில்
இந்த பெருந்தகையோர் போன்றோர் எழுத்துக்களையும்,
சொற்பொழிவுகளையும் கேட்க என் போன்றோருக்கு
வாய்ப்பு பெரும்பாலும் இல்லை...
தங்களின் மூலம் அதைப் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி...
பாரதியின் அடிபொடியான ஐயா திருவாளர் தஞ்சாவூரார்
இது போன்று மேனிலைப் பாடங்களை சான்றோர்
அருளிச் சென்ற அறிய பல இலக்கியப் பாடங்களை
இந்த வகுப்பறையில் வாரம் ஒரு முறையாவது
வழங்கினீர்கள் என்றால்; இந்த வகுப்பறையில்
சிறப்புத் (உயர்) தமிழ் இன்னும் சீருறும் நாங்களும்
இன்புறுவோம்...
எனது வேண்டுகோளை தாங்களும்...
வாத்தியாரும் ஏற்கவேண்டும்
என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்...
இந்த வகுப்பறை அறிவான எதற்கும் இடமளிக்கும்
என்பதில் அணுவளவும் ஐயமில்லை...
நன்றிகள் ஐயா!
உலக மஹாகவி பாரதியை
ReplyDeleteவேதம் புதுமை செய்யச் சொன்னவனை..
அச்சமில்லை அச்சமில்லை என்று....
நெஞ்சில் சூரியனை சுமந்து நேர் பார்வை கொண்டு
வீறு கொண்டு எழுந்து இரு போல் நடந்தவனை....
நதிநீர் இணைப்பு இந்திய மண்ணிற்கு அன்றே அவசியமென்று
கூறியவனை....
சேதுவை மேல் நிறுத்திச் சிங்களத்திற்கு வீதி சமைக்க சொன்னவனை.....
தொழில் சிறந்து விளங்கி ... பொருளாதார உலகமயமாக்களை
செய்தே ஆகவேண்டும் என்றவனை...
இவை எல்லாவற்றிற்கும் இந்த சாதி மத பேதம் தான்
தடை அவைகளை (அந்த பேதங்களை) ஒழித்தே தீர வேண்டும்....
இந்த உலகம் உய்ய இவைகள் மாய்ந்து போகவேண்டும் என்பவனை..
!!!!!!!!!வேதாந்தி!!!!!!! என்றுத் இன்னும்.... இன்றும்....
சிலர் இந்த சமதர்ம செஞ்சூரியனை தனி சிறையில் அடைப்பது ஏன்?
அது நியாயமா?
தங்களின் அடுத்த ஆக்கம் இதன் பொருட்டு தாருங்கள் பெருதகையே....
நன்றி! நன்றி!!! நன்றி!!!
நீங்கள் இங்கே எடுத்து எழுதிய எல்லாமே அருமை.
ReplyDelete"யாதானும் தொழில் செய்வாம்
யாதும் அவள் தொழிலாம்."//
இது எனக்குப் புரியவில்லை, சற்று விளக்குவீர்களா?
சான்றோர் அருளிச் சென்ற அறிய பல இலக்கியப் பாடங்களை இந்த வகுப்பறையில் வாரம் ஒரு முறையாவது வழங்கினீர்கள் என்றால்//
இதை நானும் வழிமொழிகிறேன்.
வாத்தி ஐயா வணக்கம்.
ReplyDeleteவாத்தியாரின் வகுப்பறையில் முண்டாசு & மீசை காரன் பாரதியை பற்றி இனிமையான கட்டுரையை தந்த வாத்தியாரின் வகுப்பறையின் தலைமை தாங்கி " தஞ்சவூராருக்கு", எமது பணிவான வணக்கங்கள் பல.
தொழில் செய்து பிழைப்பதே மனித வாழ்வின் குறிக்கோள். உண்டு உறங்கி பிறருக்கு இடர் செய்து செத்திடும் மனித வாழ்க்கையை பாரதி விரும்பவில்லை. எது நல்ல தொழில்? எது உயர்ந்த தொழில்? செய்யும் தொழிலில் நல்லதும் கெட்டதும் உண்டா. பிறருக்கு நன்மை பயக்கும் எந்த செயலும் அல்லது தொழிலும் அன்னை பராசக்தி நமக்களித்த தொழில். இதில் ஏற்றத் தாழ்வு இல்லை என்பதே இதன் பொருள். பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் இந்திய அரசின் கடிதங்களில் His Majesty's Service
ReplyDeleteஅல்லது Her Majesty's Service
என்றெல்லாம் போடுவது வழக்கம். நாம் அன்னை பராசக்தியின் பணியில் என்று எந்தத் தொழிலையும் செய்யலாம், அதில் உயர்வு தாழ்வு இல்லை. அதனால்தான் பாரதி "வையகம் காப்பவரேனும், சிறு வாழைப்பழக்கடை வைப்பவரேனும், பொய்யகலத் தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்" என்கிறான். நாம் செய்யும் தொழிலில் பொய், பித்தலாட்டம், ஏமாற்றுதல் போன்றவை இருக்கக்கூடாது.
தங்கள் விளக்கத்திற்கு நன்றி.
ReplyDeleteபாரதியார் பற்றி இணைய உலகில் தாங்கள் மூலம் அறிய வாய்ப்பளித்தமைக்கு நன்றி..புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்..
ReplyDeleteஆக்கம் விளைய வித்திட்டவர் எங்கே?மூலம் எதுவானாலும் ஞாலம் அறிய தாங்கள் வீறு கொண்டது சிறப்பு..நன்றி..
நாத்திக வாதத்தைப் பற்றிய குறிப்புகள் பாரதியின் படைப்பில்
ReplyDeleteவெகு சில இடங்களில் தான் வருகிறது....
பாரதியின் சுய சரிதையில் பாட்டு எண்
13 ல் ...............பொய்மைசேர்
மதியினில் புலி நாத்திகம் கூறுவார். என்றும்....
இவ்விடத்திலே பாரதி நாத்திகத்தை நேர்முகமாக கண்டித்து இருக்கிறான்
மேலும் அதை கீழ்த்தரமானது என்றே கருதுகிறான்... அது போக..
****************************************************************************************
சர்வ மத சமரசம்
(கோவிந்த சுவாமியுடன் உரையாடல்) என்ற தலைப்பிட்டப் பாடலில்
''பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்,
நாமமுயர் சீனத்துத் 'தாவு''மர்க்கம்,
நல்ல ''கண் பூசி''மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே. 65
''பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:
சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே;
தத்வமஸி;தத்வமஸி;நீயே அஃதாம்;
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்
சதாகாலம் 'சிவோஹ'மென்று சாதிப் பாயே!''
பூமியிலே நீ கடவுள் இல்லை என்றுக் கூறுவது
உன் மனத்திற்குள் புகுந்த மாயை என்று கூறுகிறான்.
***********************************************************************************************
(தொடரும்)
மேலும் தனது இரண்டு கட்டரையில்
ReplyDelete"பாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம்"
என்று தெய்வம் இல்லை என்று கூறுபவர்களும் வெறுமனே தியானம் செய்யவும் எனவும்..
********************************************************************************************
கடைசியாக "யாரைத் தொழுவது" என்ற கட்டரையில்....
கோவிலுக்கு போனாலும், இல்லாவிட்டாலும் சரி,
தெய்வத்தை கும்பிட்டாலும் இல்லாவிட்டாலும் சரி,
யாருக்கும் தீங்கு செய்யாது இருந்தால் தெய்வம் அருளும்
என்றும் கூறியுள்ளான்...
**********************************************************************************
அவன் நாத்திகர்களைக் பெரிதாக குறைகூறியோ
கண்டிக்கவோ, ஒதுக்கித் தள்ளவோ இல்லை..
ஏனெனில் ஒருவன் நல்லவன் கேட்டவன் என்று அறிவதற்கு
தெய்வ நம்பிக்கை தான் உரைகள் என்பது ஆகாது என்றே கருதினான்
என்பதை அவனின் மற்ற பாடல்கள் மூலம் அறியலாம்..
ஆக வள்ளுவர் குரலுக்கு இணங்க...
"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்." என்று யாராயினும்
மனசாட்சி சுதந்திரத்தை தந்து விடுகிறான்...
*************************************************************************
////பாரதியின் சுய சரிதையில் பாட்டு எண்
ReplyDelete13 ல் ...............பொய்மைசேர்
மதியினில் புலை நாத்திகம் கூறுவார். என்றும்....////
புலி அல்ல புலை நாத்திகம் (எழுத்துப் பிழை)
என் கட்டுரையை வெளியிட்ட ஆசிரியர் அவர்களுக்கும், அதற்கு ஊக்கமளிக்கும் வகையில் பின்னூட்டமிட்ட அன்பு சகோதரர்கள் சிங்கப்பூர் திரு ஆலாசியம், ஜப்பான் மைனர்வாள், கண்ணன், சகோதரி டெல்லி உமா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தங்கள் விருப்பத்திற்கிணங்க மகாகவி பற்றிய மேலும் சில கட்டுரைகளை ஆசிரியருக்கு அனுப்புகிறேன். அவரும் தகுதியுடைத்து என்று கருதினால் வகுப்பறையில் வெளியிடுவார் என நம்புகிறேன்.
ReplyDeleteநல்ல பதிவு பாரதியார்க்கு நிகர் பாரதியாரே உலகிற்கு மீண்டும் நினைவுட்டிய தஞ்சாவூர் காரருக்கும் வாத்தியாருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
ReplyDeletepadaippu miga arumai.... pugaipadamum miga arumai.
ReplyDeleteFrom browsing centre
ReplyDelete-----------------------
"கடமையறியோம் ...." என்று சொன்ன மஹாகவி "கடமையாவன...."என்றும் பட்டியல் போடுகிறார். 'பயன் அதில் நான்காம்...';'அறம், பொருள், இன்பம், வீடு ....'
என் மூத்த சகோதரர் முனைவர் கண்ணன் சொல்லுவார்:
தன்னைக்கட்டுதல் அறம்; பிறர் துயர் தீர்த்தலால் வருவது பொருள்;பிறர் நலன் வேண்டுதல் இன்பம்; இறைவனைக் கைதொழுது அடைவது வீடு!
இதை வைத்து மும்பை தமிழ்ச்சங்கத்தில் ஓர் பேருரை ஆற்றியுள்ளார்.
'வழி வழி பாரதி' நூலையும் திருநெய்த்தானம் தந்த நடமாடும் பல்கலைக் கழகத்தையும் ஒரு சேர அறிமுகப்படுத்திய தங்களுக்குப் பல நமஸ்காரங்கள்.
புகைப்படம் தங்கள் இலண்டன் விஜயத்தின் போது எடுத்ததோ? அருமை!