+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கிடைக்காமல்போன ஆங்கிலப் பேராசிரியர்!
இரவு மணி 2.30; 27 ஜனவரி 1977ம் நாள் பிறந்து 150 மணித் துளிகள்
ஆகிவிட்ட நேரம். அப்போதுதான் 'மவுன்ட்டு ஹவுஸ்'( தஞ்சையில்
என் இரண்டாவது அண்ணன்) வீட்டு வாசலில் தந்தி பட்டுவாடா
செய்யும் ஊழியரின் குரல் கேட்டது. வேளை கெட்ட வேளையில்
வந்த அவரைப் பார்த்துத்  தெரு  நாய்கள் குரைக்கின்றன. கருப்பு
நாய் ஒன்று பெருங்குரல் எடுத்து ஊளையிடுகிறது. நேரம்,சகுனம்
ஒன்றுமே  சரியில்லை. தந்திக்காரரின்  குரல் கேட்டு நான் தான்
முதலில் துள்ளி எழுந்தேன். கையெழுத்து இட்டு விட்டு  தந்தியைப்
பிரித்தால், என் மூச்சு ஒருகணம் நின்றுவிட்டது.மயங்கி  விழுந்தேன். மற்றவர்களும் ஓசைகேட்டு எழுந்து  விட்டார்கள். ஒவ்வொருவராகத் தந்தியைப் படித்துவிட்டு திகைத்துப்  போய்  வாயடைத்து
நிற்கிறார்கள். அப்படி என்ன  செய்தி அந்தத் தந்தியில்?
என் மூத்த அண்ணன் அய்யாசாமி கோவையில் 26 ஜனவ்ரி 1977 இரவு 10.30 மணியளவில் மாரடைப்பால்  காலமானர் என்ற பெரும் துக்கச் செய்தியைத் தாங்கி வந்திருந்தது அந்தத் தந்தி. முதலில் தன்னிலைக்கு வந்து சுதாரித்தது என் அப்பாதான்.தெருமுனை வரை சென்று விட்ட தந்தி ஊழியரைக்  கூவி அழைத்து அவரிடமே "கிளம்பிவிட்டோம்,காத்திருக்கவும்"என்ற பதில் தந்தி வாசகத்தை எழுதிக் கொடுத்து,  தந்திக்கு ஆகும் செலவுக்கு மேலேயே அவர் கையில் கொடுத்து அனுப்பி வைத்தார். அக்கம் பக்கத்து வீட்டாரை  எழுப்பி அவர்கள் மூலம் வாடகைக் காருக்கு ஏற்பாடு செய்தார். விடியற் காலை சுமார் 4 மணிக்கெல்லாம் கோவையை நோக்கி எங்கள் துக்கப் பயணம் துவங்கிவிட்டது.
26 ஜனவரி 1977 காலை வாஸ்து நாளாக இருந்தது.அப்போது நான்
என் இரண்டாவது அண்ணன் முனைவர்  கண்ணன் அவர்களுடன்
அவருடைய இல்லமான 'மவுன்ட் ஹவுஸி'ல் என் மனைவி,
முதல் பெண் ஹம்ஸபுவனாவுடன் (அப்போது ஒரு வயது),
என் தாய் தந்தையருடன் கூட்டுக் குடித்தனமாக வாழ்ந்து வந்தேன்.
என்  அண்ணன் கண்ணன் அன்றும் இன்றும் சிக்கனமாகவும்
செட்டாகவும்  குடும்பம் நடத்தக் கூடியவர்.நான் அளித்து வந்த
சொற்ப சம்பளத்தில்  மீதம் வைத்து, எனக்கும் அவர் வீட்டுக்கு அருகாமையிலேயே  11 சென்ட் நிலம் வாங்கி  வீடு கட்ட ஏற்பாடு
செய்தார்.
அந்த வாஸ்து நாளில் விடியற்காலையிலேயே அண்ணன் வாங்கிக்
கொடுத்த அந்த நிலத்தில் வாஸ்து பூஜை  செய்தோம்.
தஞ்சையிலேயே ஒஸத்தியான, (உருவம், உயரம், வேத அறிவு எல்லாவற்றிலும்தான்  ஒஸத்தி)  சாஸ்திரிகள் வந்திருந்து பூஜையை
நடத்திக் கொடுத்தார். பூஜை முடிந்த பின்னர் அன்று குடியரசு தினம்
ஆனதால்  அந்தக்  காலனி பொது இடத்தில் அப்பா கொடியேற்றி கொடி வணக்கம்  செய்தார். வந்திருந்த  வாண்டுகளுக்கெல்லாம் கைநிறைய
மிட்டாய் கொடுத்துவீட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
அம்மாவும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட வடை பாயசத்துடன்
விருந்து சமைத்து விட்டார்கள்.வீடே விழாக்கால  மகிழ்ச்சியில் திளைத்தது.எல்லாம் அந்தத் தந்திவரும் வரைதான் நீடித்தது.
26 ஜனவரி முடிந்து 27 துவங்கும் போது மகிழ்ச்சி எங்களை விட்டுப்
பிரிந்து வெகு தூரம் போய்விட்டது.
வாடகைக் கார் கோவையை நோக்கிப் போய் கொண்டு இருக்கும்
சமயம் மறைந்த அண்ணன் பற்றிய "ஃப்ளேஷ்  பேக்" அவருடைய
பெயர் அய்யாசாமி. வேறென்ன? முருகனின் திருநாமம்தான்.
தகப்பன்சாமி, சுவாமிநாதன் என்ற பெயர்களின் மற்றோர் வடிவமே அய்யாசாமி.அது எங்கள் அப்பாவின்  தந்தையாரின் பெயர். அதாவது
என் தாத்தாவின் பெயர். மூத்த அண்ணன் என்பதையே எங்கள்
குடும்பங்களில் முத்தண்ணா என்போம். எனக்கு இரண்டு
அண்ணன்மார்கள். எல்லோருக்கும் மூத்தவரான அய்யாசாமி
அண்ணனை முத்தண்ணா என்ற  பெயரில் இனி குறிப்பிடுகிறேன்.
முத்தண்ணா 1942ல் பிறந்தார். நான் 1949. எனக்கும் அவருக்கும்
7 வயது வித்தியாசம்.எனக்கு, என்னுடைய 7,8  வயதில் நடந்த
செய்திகள் முதல்தான் நினைவுக்கு வருகிறது. எனக்கு 8 வயது
ஆகும் போது முத்தண்ணாவுக்கு15 வயது ஆகி, அவர் பள்ளி
இறுதி வகுப்பு முடித்து விட்டார். முன்பே  சொன்னது போல
அப்பாவுக்கு  வருமானம் குறைவு. முத்தண்ணாவைக் கல்லுரியில்
சேர்க்க்த் தன்னால் இயலாது என்று அப்பா முடிவு  செய்து  விட்டார்.
எனவே ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் மைலாப்பூர்
சென்னையில் இலவச மோட்டார் வாகன தொழிற் கல்விப் படிப்பில்
மடத்து சந்நியாசிகள் பரிந்துரையின் பேரில்  சேர்க்கப்பட்டார்.அந்த
மாணவர்  இல்லத்தில் இருந்தபோது ஸ்ரீமத் பகவத் கீதை 18 அத்தியாயஙளையும் மனப்பாடமாக ஒப்பிக்கவும், மேலும் பல
உபநிஷத் மந்திரங்களை பொருளுடன் கற்கவும், வேதத்தில் இருந்து
பல பகுதிகளைப் பிழையின்றி ஓதவும்  கற்றுக் கொண்டார். எப்போது கூப்பிட்டாலும் சேவை செய்ய முதன்மையாக அண்ணா நிற்பாராம்.
அதனால்  அவருக்கு "எவர் ரெடி" என்ற சிறப்புப் பெயர் கொடுத்து பரிசு கொடுத்து மகிழ்ந்தது மிஷன் நிர்வாகம்.
முத்தண்ணாவுக்கு மிகவும் பிடித்தது ஆங்கிலமும் ஆங்கில  இலக்கியமும். அவருடைய ஆங்கிலக் கையெழுத்து  அழகு சொட்டும். ஆங்கிலப்பேச்சும் எழுத்தும் ஒரு கவிஞனை நினைவு படுத்தும். அவர் விருப்பத்திற்கு விட்டு 
இருந்தால் இன்று நமக்கு ஒரு சிறப்பான ஆங்கிலப் பேராசிரியர் கிடைத்து இருப்பார்.
ஆனால்,
  
"குயிலைப் பிடித்துக் கூண்டில் அடைத்துப் 
    பாடச் சொல்லுகின்ற உலகம்;
    மயிலைப் பிடித்துக் காலை  ஒடித்து  
   ஆடச் சொல்லுகின்ற உலகம்;
   அது எப்படிப் பாடும் அம்மா?
    இது எப்படி ஆடும் அம்மா?........"
அண்ணாவின் வாழ்க்கை ஆரம்பமே வேண்டா வெறுப்பாகத்
துவங்கியது. அதிலும் அந்த ஹாஸ்டல் வார்டன்  முத்தண்ணாவின்
மனதைப் புண்படுத்துவதையே தன் முழுநேர வேலையாகக்
கொண்டு விட்டார்.
அது ஏன் எனில்  அப்பாவின் "உண்மை விளம்பி"க் கொள்கையால்
விளைந்தது. அதாவது அந்தக் கல்வி நிறுவனத்தில் மாதச் சம்பளம்
ரூபாய் 100 க்குக் குறைவாக உள்ளவர்களின் குழந்தைகளுக்கே
இலவச உணவு, உறைவிடம், கல்வி ஆகியவை கிடைக்கும்.
அப்பாவுக்கு ரூபாய் 103 சம்பளம். அந்தத் தகவலை மறைக்காமல்
அப்பா  விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். சந்நியாசிகள் விதியைத்
தளர்த்தி சேர்த்துக் கொண்டு விட்டனர்.இது பிடிக்காத வார்டன், 
முத்தண்ணாவைக் காணும் போதெல்லாம் "103, 103" என்று கூப்பிட்டு கடுப்பேற்றி உள்ளார்.அந்த விடலைப்  பருவத்தில் ஏற்பட்ட
தாழ்வுணர்ச்சி முத்தண்ணாவுக்கு அவர் மறையும் வரை நீடித்தது.
முத்தண்ணா மோட்டார் வாகனத் தொழிற் கல்வியில் (டிப்ளமோ
இன் ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்) நல்ல  மதிப்பெண்களுடன்
தேறி சென்னை ராயல் என்ஃபீல்டு கம்பெனியில் சேர்ந்துவிட்டார்.
இந்தக் கால கட்டத்திற்குப் பின்னர் நடந்தது எல்லாம் எனக்கு
நினைவில் இருக்கிறது.
அண்ணா முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் 2,3 மாததிற்கு
ஒருமுறை நீலகிரி விரைவு வண்டியில் சேலம் வந்து  சேர்வார்
'அம்மா' என்று விடிவதற்கு முன்பாக வீட்டு வாசலில் குரல்
கேட்டால் அம்மா துள்ளி எழுந்து போய்மகிழ்ச்சியாக 'வா வா'என்று
கதவைத் திறந்து கூட்டிவருவார்கள்.அன்று  முத்தண்ணாவுக்கு
மிகவும் பிடித்த  பருப்பு உருண்டைக் குழம்பு கட்டாயம் சாப்பாட்டில் இருக்கும்.அம்மாவும் பிள்ளையும்  பேசுவார்கள் பேசுவார்கள் 
அப்படி பேசுவார்கள்.தாயன்பு என்பதைப் பிரிந்து இருந்த தனயன்
நிரம்பப் பெறுவார்.அப்பாவும் பிள்ளையும்  சம்பிரதாய விசாரிப்புடன்
விலகிக் கொள்வார்கள்.அம்மாவிடம் தான் எல்லா பகிர்வுகளும்.
கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவின் பாசத்தை அம்மாவிடமும், பிரிந்த
தாயைகண்ட கன்றின் மனநிலையில் உள்ள தனயனையும் நாங்கள்
கண்டு ஆனந்திப்போம். எப்படி நாங்கள் கண் விழிப்பதற்கு முன்னர்
வீட்டுக்குள் வந்தாரோ அது போலவே நாங்கள் இரவு கண்
அயர்ந்தவுடன் வெளியேறி விடுவார் அதனால் அவருடனான
இன்டெராக்ஷன் எனக்கு மிகக்  குறைவு.
என்னைக் கருவில் சுமந்த போது அம்மாவுக்கு வைசூரியும் மிகுந்த
காய்ச்சலும் இருந்துள்ளது. அப்போது தன்  நினைவு இல்லாமல்  உளறியுள்ளார்கள். அடிக்கடி,"எனக்குப் பிள்ளயார் மகனாகப் பிறக்கப்
போகிறார்" என்று பிதற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். ஒருமுறை முத்தண்ணா வீட்டுக்கு வந்த சமயம் நான் அவர்கள் இருவரும்  பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் நடமாடினேன். அப்போது அம்மாவின்
அதீத கவனிப்பால் என் உடல் ஊளைச்சதையும் தொந்தியும்
தொப்பையுமாக இருக்கும்.என்னைக் கண்ணுற்ற முத்தண்ணா,"
அம்மா! பிள்ளையார் பிறக்கப்  போகிறார் என்று  சொல்லுவாயே! உண்மையாகவே இவன் பார்க்கப் பிள்ளையார் போலத்தான் இருக்கிறான்"என்று  கூறியது நன்றாக நினைவு உள்ளது. அன்று
அதை  நகைச்சுவை  உணர்வுடன் பார்க்கத் தெரியவில்லை. 
இப்போதுதான் அதில் உள்ள ஆழமான நகைச்சுவை புரிகிறது.
சோகத்துடன் சிரித்துக் கொள்கிறேன். முத்தண்ணாவுடன் நன்கு
புரிதலுடன் வளந்தவர். என் அக்கா ராம லக்ஷ்மி மட்டுமே.
அக்காவுக்கும் அவருக்கும் 2  வயது மட்டுமே வித்தியாசம்.தன்
தங்கையை பாதுக்காக்க எதுவும் செய்யத் தயங்காத ஒரு வீரம்
செறிந்த அண்ணனாகத் திகழ்ந்து இருக்கிறார்.'ஜே' போட்டுக்
கொண்டு ஊர்வலம் சென்ற தந்தைக்குப் பிறந்த இந்தக்  குழந்தை
களுக்கும் ஊர்வலம் போவது போல விளையாடுவது ஒரு பொழுது
போக்கு. அண்ணன் தலமை தாங்கிக்  கொடி பிடித்து முன்னால்
செல்ல தங்கை பின்னால் 'ஜே' போட்டு செல்வாராம்.
'பாரத் மாதாக்கி'............ ..........   ஜே!
மஹாத்மா காந்திஜிக்கி.......   ஜே!
ஜவஹர்லால் நேருஜிக்கி......ஜே!
நேதாஜி சுபாஷ் போஸ்க்கி...  ஜே!
எல்லா தலைவர்களின் பெயரும் தீர்ந்துவிட்ட நிலையில் அண்ணன் கோஷத்தை நிறுத்திவிடுவாராம். அக்கா 
உடனே அழத் துவங்கி விடுவாராம்.
'ஜே' போட பெயர் இல்லாத நிலையில்,
புளிய மரத்துக்கு ......  ஜே!
வேப்ப மரத்துக்கு......  ஜே!
மாமரத்துக்கு........    ....ஜே!
வாழைமரத்துக்கு..... ..ஜே
ஆட்டுக்குட்டிக்கு......  ஜே!
பசு மாட்டுக்கு..........     ஜே!
அண்ணாச்சிக்கு.....     ஜே!
தங்கச்சிக்கு...............    ஜே!
இப்போதும் நிறுத்த முடியாத நிலையில் அண்ணனுக்குக் கோபம் வந்து விடுமாம்!
மண்ணாங்கட்டிக்கு ..... ஜே!
குப்பைத்தொட்டிக்கு....  ஜே!
விளக்குமாற்றுக்கு......   ஜே!
இந்தச் செய்தியை அம்மாவும் அக்காவும் பல தடவை சொல்லி
இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர்  நானும் அக்காவும்
சேர்ந்து அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தோம்.
அதில் ஒரு சோப்புத்தூள் விளம்பரம் வந்தது.அண்ணனும்
தங்கையுமாக இரண்டு குழந்தைகள் பள்ளியில் இருந்து புத்தகப்
பையுடன்  திரும்பிக்கொண்டு இருப்பார்கள். தங்கை கால் இடறி
சேற்றில் விழுந்து விடுகிறாள்.உடனே அழத் துவங்கி  விடுகிறாள்.
அவளை சமாதானப்படுத்த அண்ணன் வீரத்துடன் தானும் சேற்றில்
பாய்ந்து அந்த சேறு நிறைந்த  நிலத்தை தன் கைகளால் ஒங்கி ஓங்கித் தாக்குகிறான். "ஆ! என் தங்கையையா தள்ளி விட்டாய்?  இந்தா வாங்கிக்கொள்!" என்று நிலத்துக்குக் குத்து விடுகிறான். தங்கையின்
முகம் மலர்வதைக் கண்ட அண்ணன் தன்  நடிப்பை விட்டுத்
தங்கையுடன் சேர்ந்து சிரிப்பான். இதைக் கண்ட அக்காவின்
கண்கள் பனித்தன."என் அண்ணனும்  இப்படித்தான் எனக்காக
எதையும் செய்வார்"என்று விம்மத் துவங்கினார்கள்.
முத்தண்ணாவின் திருமண நாள் அன்று மாலை மூதறிஞர்
ராஜாஜியின் ஆசிகளைப் பெற அப்பா மணமக்களைக்  கல்கி
கார்டனுக்கு அழைத்துச் சென்றார்கள்.வணங்கி எழுந்த
அண்ணனைப் பார்த்து ராஜாஜி கேட்டார்:
"என்ன  சம்பளம் வாங்கற?"
அண்ணன்: "500 ரூபாய்".
ராஜாஜி :"மெட்ராஸ் ஊரில இருக்கற விலை வாசியில எப்படி குடித்தனம் நடத்துவ? வாடகைக் கொடுத்து,  சாப்பாட்டுக்கு உன் சம்பளம் பத்தாது"
என்னடா இப்படி பயம் காட்டுகிறாரே என்று அண்ணனும் உடன்
சென்றவர் களும் திகைத்துவிட்டார்கள்.சிறிது நேர மெளனத்துக்குக்ப்
பின்னர் ராஜாஜியே பேசினார்:  "நடைபாதையில் குடும்பம் நடத்துபவர்
களைப் பார்! அவ்ர்களுக்கு   சரியான ஆடை, உணவு, இருப்பிடம்,வசதி இல்லை.ஆனால் அவர்கள் ஆணும் பெண்ணும் எவ்வளவு காதலுடன்  பழகுகிறார்கள்! எனவே உங்கள் இருவருக்கும் இடையில் அன்பு
மலரவும் நிலைக்கவும்,பணம், சம்பளம் ஒரு தடையாக இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.காதலுக்குப் பணம் தேவையே இல்லை."
அறிவுரை சொல்வதையும் ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்து சொன்னார் பாருங்கள், அதுதான் ராஜாஜி!
பள்ளி இறுதித் தேர்வில் அண்ணன் 412 மதிப்பெண் பெற்றுத் தேறினார்.
நான் எஸ் எஸ் எல் சி தேர்வு  எழுதும்போது எனக்கு ஒரு போட்டி
வைத்தார். அதாவது அவருடைய 412ஐக் காட்டிலும் அதிகமாக நான்
எடுக்கும்  ஒவ்வொரு மதிப் பெண்ணுக்கும் ரூபாய் ஒன்று பரிசு
அளிப்பதாகச் சொன்னார்.நான் 404மதிப்பெண்தான் எடுக்க முடிந்தது.
ஒரு பரிசும் கிடைக்கவில்லை.எங்கள் சுற்றத்தார்களில் யாருமே
அண்ணன்  வாங்கிய மதிப்பெண்ணைத் தாண்ட முடியவில்லை.
ராயல் என்ஃபீல்டில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து
விட்டு, திருப்பதியில் சுவேகா மொபெட்  உற்பத்தி செய்த முதலாளி
களுக்கு ஆரம்பத்தில் இருந்து ஆலோசகராகப் பணியாற்றினார்
.டி வி எஸ் மொபெட் தயாரிக்கும் வரை சுவேகாதான் சந்தையில்
முன்னால் நின்றது.ஆக, மொபெட் என்ற ஆக்கத்தை இந்தியாவுக்கு
அறிமுகப் படுத்தியவர்களில் முத்தண்ணா வுக்கு முதன்மையான
இடம் உண்டு.
திருப்பதி முதலாளிகளின் பங்குதாரர்கள் கோவையில் மொபெட்
தொழிற் சாலை  ஒன்று அமைக்க நினைத்து  அண்ணனை
கோவைக்கு அழைத்து வந்து விட்டார்கள்.அண்ணன் கோவைக்கு
வந்து ஒரு சில மாதங்களில் அந்த 26 ஜனவரியும் வந்தது. 26 ஜனவரி
1977 அன்று மலையில் அவருக்கு மார்வலி கண்டிருக்கிற்து.அவரை ஒரு ஃபியட் காரில் பெரிய  ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று இருக்கி றார்கள்.உடன் சென்றவர் காரின் ஜன்னல் கதவுகள் முழுதும் இறங்கும்
என்று எண்ணி ஹாண்டிலை சுற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்.
"ஃபியட் காரில் பாதிதான் கண்ணாடி இறங்கும்.  ஹாண்டில் உடைந்து
விடும். சுற்றுவதை நிறுத்து"என்று சத்தம் போட்டு இருக்கிறார். நல்ல நினைவுடன் இருக்கும்  போதே இரவு 10.30க்கு மின்சாரம் நின்று
போவதைப் போல இதயம் துடிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது.
     ================================================
வாடகைக்கார் சூலூர் அருகில் வரும் போது மக்கர் செய்து நின்று
விட்டது. அப்போதுதான் ஓட்டுனர் முகத்தைப்  பார்த்தேன். தீவிரமான
பெரு வியாதியால் பாதிக்கப்பட்டவர். கைகால் விரல்கள் எல்லாம்
சிதைந்த நிலையில்  இருந்தார். எப்படித்தான் ஸ்டியரிங்கையும், ஆக்சிலேட்டரையும் பயன் படுத்தினாரோ! எங்களை எப்ப்டித்தான்
விபத்துக்கு உள்ளாக்காமல் சூலூர் வரை கொண்டு சேர்த்தாரோ! ஆண்டவன்தான் காப்பாற்றினார். சூலூரில்  இருந்து மீண்டும் ஒரு
வாடகை வண்டிபிடித்து கோவைப்புதூர் வந்து சேரும்போது உச்சி
வேளை தாண்டிவிட்டது. 
200 பேர் முத்தண்ணா வீட்டு வாசலில் நிற்கிறார்கள்.
அண்ணன் உடல் அருகில் அழுது அழுது கண்ணீர் வற்றிய நிலையில் கர்பிணியான அண்ணி, 5 வயது மகன்,3  வயது மகள். நாங்கள்
எல்லோரும் கதறுகிறோம். அப்பா மனம் தளராமல் கல் போல
இருக்கிறார்."சரி சரி சீக்கிரம் தகனத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
போனவன் போய்ட்டான். அழுதால் திரும்ப வரப் போகிறானா?"
என்கிறார். கூட்டத்தினரைப் பார்த்து, "என் மகனுக்காக யாராவது
பணம் காசு செலவு செய்திருந்தாலோ, என் மகனுக்குக்  கடன் கொடுத்திருந்தாலோ என்னிடம் கேட்டுப்பெற்றுக் கொள்ளுங்கள்.
அவன் கடனாளியாகப் போகக்கூடாது!"  என்கிறார்.
முத்தண்ண்ணாவின் உடலை எரித்ததும், மறுநாள் சாம்பலை
எடுத்து வந்து, ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்தில்  கரைத்ததும்,
கர்பிணியான அண்ணியுடன் இரண்டு குழந்தைகளை தஞ்சைக்கு
அழைத்து வந்ததும், அண்ணி  மேலும் ஒரு பெண்குழந்தையை
பெற்று அளித்துவிட்டு 1980ல் மறைந்ததும், அப்பா 1985ல் இறந்ததும், 
முத்தண்ணாவின் குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாக இருந்து
அம்மா தாய்க் கோழி தன் குஞ்சுகளை  சிறகுகளால் மூடிமூடிப்
பாதுகாப்பது போல் 2007 வரை ,தன் 84 வயது வரை, காப்பாற்றியதும்,
இன்று  அனைவரும் நல்ல நிலையில் இருப்பதுவும் சொன்னால்
சீரியல் போல 1000 எபிசோட் போகும்.
பின்னர் ஒருமுறை என்னால் சொல்ல முடிந்தால் சொல்வேன்.
முடியும் என்று தோன்றவில்லை.கண்ணீர் கண்களை  மறைக்கும்
போது எப்படி தட்டச்சு செய்வது சொல்லுங்கள்!
- ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK)  தஞ்சாவூர்
நமது வகுப்பறையின் மூத்த  மாணவர்களில் ஒருவரான 
கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK) அவர்களின் எழில்மிகு தோற்றம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரமலரின் இரண்டாம் பகுதி
சுவாமி விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம்.
சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிய விரும்பி தேடியபோது கிடைத்தது. 
(இவைகளை பள்ளிப் பாடத்தில் இவ்வளவு காலம் வைத்து கற்றுத் தந்திருந்தால்! எத்தனையோ மெஞ்ஞானிகள் அல்ல நல்ல மனிதர்களையாவது நாடு பெற்றிருக்கும் என்பது எனது ஆதங்கம். உலக மதங்களுக்கெல்லாம்; கருவும், கருவறையும் நமது வேதங்கள் என்றால் அது மிகையாகாது. மேலைநாடுகளையும் அம்மக்களையும் இறைவன் விஞ்ஞானத்திற்கான கூரோடுப் படைத்திருக்கிறான் என்றால்.... கீழைநாடுகளையும் அம்மக்களை யும்  ... குறிப்பாக இந்தியாவையும் இந்தியர்களையும் மெஞ்ஞானத்திற்காகப்  படைத்திருக்கிறான் என்று சொல்லத் துணிகிறேன்).
வேதாந்தத் தத்துவம்
(ஹார்வர்ட் பல்கலைகழகத்தில், 25 மார்ச் 1896 -ல் சுவாமி விவேகனந்தர் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்)
வேதாந்தத் தத்துவம் என்று இன்று பொதுவாகக் கூறப்படுவது, உண்மையில், தற்போது இந்தியாவிலுள்ள எல்லாப் பிரிவுகளையும் (மதங்களையும்) தன்னுள் அடக்கியதாகும். (ஏன்? உலக மதங்களும் இதில் அடக்கம் என்று பிற்பகுதியில் அவரே  குறிப்பிடுகிறார்). எனவே அதற்குப் பல்வேறு விளக்கங்கள் இருந்திருக்கின்றன. இவை துவைதத்தில் துவங்கி, அத்வைதம் வரைப் படிப்படியாக முன்னேறி இருக்கவேண்டும் என்று நான் நினைக்கின்றேன். துவைதிகள் புராணங்களைப் பெரிதாகப் போற்று கின்றனர், அத்வைதிகள் வேதாந்த நெறிகளையே முதன்மையாகக் கொள்கின்றனர்)
வேதம் அதற்கு எழுதப்பட்ட உரை வேதாந்தம். வேதாந்தம் என்ற சொல்லின் பொருள் வேதங்களின் முடிவு என்பதாகும். வேதங்கள் இந்துக்களின் சாஸ்திரங்கள். வேதங்கள் என்பவை துதிப் பாடல்களும், சடங்குகளும் மட்டுமே என்று பலராலும் சிலவேளைகளில் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்தப் பகுதிகள் தற்போது ஏறக்குறைய  உபயோகத்தில் இல்லை.
பொதுவாக வேதம் என்றால் வேதாந்தம் என்றுதான் தற்போது இந்தியாவில் பொருள் கொள்ளப் படுகிறது. "வேதாந்தம்" என்பது "சுருதி" என்றத் தனிப் பெயராலும் அழைக்கப் படுகிறது. ("சுருதி" ஒரு பிரபல நடிகரின் மகள் ஒரு பெண் இசை அமைப்பாளரை நமக்கு நினைவுப் படுத்தும்... அவரும் இதன் பொருட்டே தனது மகளுக்குப் பெயர் வைத்து இருக்கலாம் காரணம் அவரும் வேதங்கள், அத்வைதம் சார்ந்த கருத்துக் களில் நம்பிக்கைக் கொண்டவர் என்பதை அவருடைய திரைப் படங்களும் அவரிடம் நேர்காணலின் பொது அவர் தரும் பதில்களும் நமக்கு உணர்த்தும். சரி சர்ச்சை வேண்டாம் விசயத்திற்கு வருவோம்).
நடைமுறையில் இந்துக்களின் சாஸ்திரங்களாக இருப்பது வேதாந்தமே. வைதீகத் தத்துவங்கள் எல்லாம் வேதாந்தத்தையே அடிப்படையாக கொள்ள வேண்டும். தங்களுக்கு ஒத்துவருகின்ற வேதாந்தக் கொள்கைகளை மேற்கோளாகக் காட்ட பெளத்தர்களும், சமணர்களும் கூடத் தயங்குவதில்லை.
இந்தியத் தத்துவப் பிரிவுகள் எல்லாம், வேதங்களே தங்களுக்கு அடிப்படை உரிமை என்றுக் கொண்டாடினாலும், அவைகள் தங்களின் நெறிகளுக்கு வெவ்வேறு பெயர்கள் வைத்துக் கொண்டன. இந்த நெறிகளுள் கடைசியானது வியாசருடையது. வியாசருக்கு முந்திய சிலவைகள் இருந்தும்.. வியாசரின் நெறிதான் சிறப்பாக வேதாந்தத் தத்துவம் என்று அழைக்கப் படுகிறது.
பொதுவாக இந்தியாவில் மூன்று விளக்க உரைகள் அதன் பொருட்டு மூன்று தத்துவப் பிரிவுகளும் அதனால் மூன்று நெறிகளும் தோன்றி இருக்கின்றன. (வேதங்களின் விளக்க உரைகள் பாஷ்யம், டீகா, டிப்பணி, சூர்ணி என்று பலவகைகள் இதில் பாஷ்யமே மூலப்பாடத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு கோட்பாட்டு முறையை  நிலைநாட்டும் முயற்சித்தது.)
மூன்று நெறிகள்: 
முதலில் துவைதம் (இரண்டு என்பது அதன் பொருள் அதாவது பரமாத்மா, ஜீவாத்மா என இரண்டு ஆத்மாக்கள் இருப்பதை நிலை நிறுத்தும் தத்துவம்), இரண்டாவது விசிஷ்டாத்வைதம், மூன்றாவது அத்வைதம் (அத்வைதம் இரண்டல்ல ஒன்றே அதாவது பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றே எல்லா ஜீவன்களிலும் பரமாத்மாவே  இருக்கிறதாக கொள்வது) ஆகும். இதில் இந்தியாவில் அத்வைதிகள் குறைவு.... 
எல்லா வேதாந்திகளும் / வேதாந்த நெறிகள் பொதுவாக சில கருத்துக்களில் மட்டும் வேறுபடுகின்றன....ஆனால் மூன்று விசயங்களில் ஒத்துப்  போகின் றன...
அவைகள்: கடவுள், வேதங்கள் (வேதங்கள் என்பது வேதாந்திகள் மூலம் அந்தப் பரம் பொருளிடம் இருந்து வெளிப்பட்ட அருள் வெளிப்பாடு, அதாவது ஞானிகள் மெஞ்ஞானத்தினால் உணர்ந்தவைகள்...நமக்கு புரியும் படி  கூறினால்  அது ஒருத் திரைப்படமாக அவர்களுக்கு தெரிந்தது எனக் கொள்வோம்.... அப்படியானால்.... அவைகள் எத்தனைனாட்கள் நிற்காமல் ஓடி இருக்க வேண்டும் எனத் தோன்றலாம்.... இதை விளக்க யோகி ஓசோ அவர்கள் அற்புதமான விளக்கத்தைக் கூறுவார்... பகவத் கீதையில் போர்களத்திலே அவ்வளவு பேர் கூடிய அந்த வேளையிலே எப்படி பரமாத்மாவும்.... அர்சுனனும் அவ்வளவுப் பேசிக்கொண்டார்கள் அது நம்பும் படியான கால அவகாசம் இல்லையே என்பதற்கு அருமையான விளக்கம்.... அது நாம் பிறந்து வளர்ந்து, கல்யாணம் முடித்து என்றுத் தொடரும் வாழ்க்கையை எப்படி அரைமணிக் கனவில் கண்டு விடுவோமோ அதைப் போன்ற ஒரு நிலையில் நடந்த விவாதம் எனக் கொள்ளவேண்டும் என்று.... எவ்வளவு அற்புதமான விளக்கம்....) மூன்றாவதாக படைப்புச் சுழற்சி- இந்த மூன்றையும் அவர்கள் நம்புகிறார்கள்.
படைப்புச் சுழற்சிப்பற்றிய நம்பிக்கை பின்வருமாறு.......
ஆகாசம் என்ற மூல ஜடப்பொருள் (உயிரற்றப் பொருள்) ஒன்றிலிருந்து தோன்றியது தான் பிரபஞ்சம் முழுவதும்  காணப்படும் ஜடப்பொருள்கள் அனைத்தும். புவியீர்ப்பு சக்தி, இணைக்கும் சக்தி, விளக்கும் சக்தி போன்ற எல்லா சக்திகளும், உயிர் சக்தியும் பிராணன் என்ற ஓர் ஆதி சக்தியிலிருந்து தோன்றியவை. பிராணன் ஆகாசத்தின் மீது செயல் படுவதால் பிரபஞ்சம் படைக்கப் படுகிறது, அல்லது வெளிப்படுகிறது. படைப்பின் தொடக்கத்தில் ஆகாசம் அசைவின்றி, மாறுதல் இன்றி இருந்தது. அதன்மீது பிராணன் அதிக அளவில் செயல் பட்டு, அதிலிருந்து செடிகள், பிராணிகள், மனிதர்கள், விண்மீன்கள், போன்ற தூலப் பொருட்கள் படைத்தது. 
அடுத்தது பிரபஞ்ச மறைவு பற்றியதையும் இங்கேயே அவர் கூறியதை நினைவு கூறுவோம்.......
கணக்கிட முடியாத காலத்திற்குப் பின்னர் இந்த விரிவு அல்லது தோற்றம் ஒடுங்கத் தொடங்குகிறது. ஒவ்வொன்றும் தூலநிலையில் இருந்து படிப் படியாக சூட்சும நிலைக்கு மாறி, கடைசியில் முதற்பொருளான ஆகாசமும் பிராணணுமாக மாறி ஒடுங்கிவிடுகிறது...... 
பிறகு, மீண்டும் ஒரு புது சுழற்சி தொடங்குகிறது. இந்த ஆகாசத்திற்கும் பிரானணுக்கும் அப்பால் ஏதோ ஒன்று இருக்கிறது. இந்த இரண்டையும் மூன்றாவது பொருளாகிய "மகத்" என்பதற்குள் சுருக்கலாம். இந்த மகத் என்பது தான் பிரபஞ்ச மனம் (Cosmic mind ). இந்த பிரபஞ்ச மனம், ஆகாசத்தையும், பிராணனையும் படைப்பதில்லை: தானே அவையாக மாறுகிறது. 
மேலும்....... 
மனம், ஆன்மா, இறைவன் பற்றிய நம்பிக்கைகளை பற்றி சுவாமி விவேகனந்தர் கூறியதன் சுருக்கத்தை தொடர்ந்து பிறகு பார்ப்போம். 
ஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி, சிங்கப்பூர்.
 நமது வகுப்பறையின் சமர்த்தான
  மாணவர்களில் ஒருவரான 
 ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களின் எழில்மிகு தோற்றம்!
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!