+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தாவுதல் தடைசெய்யப்பட்டுள்ளது!
எட்டாம் வீடு - பகுதி ஒன்று
எச்சரிக்கை:
இது ஜாதகத்தின் ஆயுள் ஸ்தானத்தைப் பற்றிய பகுதி. பாடம் விவரமாக எட்டு அல்லது பத்துப் பகுதிகளாக வரவுள்ளது. அனைவரும் பொறுமை காக்கவும். தங்கள் சொந்த ஜாதகத்தை வைத்து இடையில் யாரும் கேள்விகள் கேட்க வேண்டாம். சில பொது விதிகளை வைத்துக் குழம்பவும் வேண்டாம். அத்தனை பாடங்களையும் மனதில் உள்வாங்கிப் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும்.
--------------------------------------------------------------------
எட்டாம் வீடு மிகவும் முக்கியமான பகுதி. சவாலான பகுதி.
படிப்பவர்களுக்குச் சிக்கலான பகுதி. அதனால்தான்
இதுவரை அதை நடத்தாமல் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தேன். வெளிவரவுள்ள ஜோதிட நூலிற்கு இந்தப் பகுதிதேவைப்படுவதால்
இப்போது எழுதும் கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளேன்.
ஆயுள் (longevity), மரணம் ஏற்படும் விதம், காலம் (nature of death, time and place of death) ஏற்படவுள்ள சிரமங்கள், துன்பங்கள் (difficulties) சந்திக்கவுள்ள சிறுமைகள் (degradation) எல்லாம் இந்த வீடு சம்பந்தப்பட்ட பணிகளே!
எட்டாம் வீடு, அதன் அதிபதி, காரகன் சனீஷ்வரன், வந்தமரும் கிரகங்கள், சேர்க்கைகள், பார்வைகள் என்று பல விதிகள் மற்றும் விதிவிலக்குகளை வைத்துத்தான் ஒரு முடிவிற்கு வரவேண்டும். நவாம்சமும், அஷ்டக வர்க்கமும் அதற்குக் கைகொடுக்கும். பாடத்தில் எல்லா விவரங்களும் வரும். பொறுத்திருந்து படிக்கவும்..
Don't jump to any conclusion by seeing general rules -
தாவுதல் தடைசெய்யப்பட்டுள்ளது! அர்த்தமானதா?
--------------------------------------------------------------------
1
எட்டாம் வீட்டு அதிபதி கஷ்டமான பலன்களையே கொடுப்பார்.
2.
மரணம், விபத்தில் அடிபடுதல், கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை, வறுமையான சூழல், அவமானங்கள், சிறுமை, மன அமைதியின்மை ஆகியவற்றை ஏற்படுத்துபவர் அவரே!
3.
அவர் (அதாவது எட்டாம் அதிபதி - 8th lord) வலிமையோடு, எந்த சுபக்கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை இன்றி இருந்தால், மேற்கூறியவைகள் அதிகமாகும். இல்லையென்றால் குறைந்துவிடும்.
இது மூன்றும் பொதுவிதி
-----------------------------------------------------------------------------------
எட்டாம் அதிபதி சென்று அமர்ந்த இடத்திற்கான பலன்கள்
1
எட்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்:
கடன், பணக்கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை அமையும். அதுவும் இங்கே வந்தமரும் கிரகத்துடன் லக்கினாதிபதியும் சேர்ந்திருந்தால், சொல்லவே வேண்டாம். கடனிலேயே தினமும் முங்கிக் குளிக்க வேண்டும்.
ஜாதகனுக்கு வியாதிகள், கடன் தொல்லை, வறுமை மூன்றும் சட்டைப் பையிலேயே இருக்கும் (அதாவது கூடவே இருக்கும்)
எல்லா நிலைகளிலும் துரதிர்ஷ்டம் (Misfortune) தொடர்ந்து வரும்.
எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால் இந்த நிலை மாறும். உதாரணமாக எட்டாம் அதிபதி நவாம்ச லக்கினத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் அமர்ந்திருப்பது போன்ற பலமில்லாத நிலைமை. நீசமாக இருக்கும் நிலைமை!
உடல் உபாதைகள் இருக்கும். வீட்டிலும், வெளியிலும், அதாவது வேலை பார்க்கும் இடங்களிலும் மற்றவர்களின் மதிப்பை, உரிய மரியாதையைப் பெற முடியாது.
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள்
உண்டு. சிரமங்களும், கவலைகளும் கணிசமாகக் குறைந்துவிடும்.
இதற்கு நேர் மாறாக இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி தீயகிரகத்தின் பார்வையைப் பெற்றால், ஜாதகன் வறுமையில் உழல நேரிடும். வியாதிகள் கூடிக் கொல்லும். அடிக்கடி விழுந்து எழுந்திரிப்பான். அதாவது விபத்துக்கள் நேரிடும்
-----------------------------------------------------------------------------------
2
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால்:
கண் மற்றும் பல் உபாதைகள் இருக்கும்
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், எல்லாவிதமான உபத்திரவங்களும் இருக்கும். சாப்பிடும் உணவுகளிலும் சுவை இருக்காது. கிடைத்ததை உண்ணும் வாழ்க்கை
அமையும்.
ஜாதகனின் வாக்கில் நாணயம் இருக்காது. பேசுவது எல்லாம் பொய்யாகிப் போகும்.
எல்லோருடனும்/எதற்கெடுத்தாலும் தர்க்கம், வாதம் செய்பவனாக இருப்பான்
அவனுடைய குடும்ப வாழ்க்கை ஏற்றமுடையதாக, சந்தோஷமுடையதாக இருக்காது.
அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி அமைவாள். அவளுடன் தினமும் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக வாழ்க்கை அமையும்
சிலருக்கு, மனைவியை பிரிந்து வாழும் வாழ்க்கை அமைந்துவிடும்.
சிலருக்கு ஆயுள் பூரணமாக இருந்தாலும், நோயும் பூரணமாகவே இருக்கும்.
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், தான்தோன்றித் தனமாக அத்தனை செல்வத்தையும் செலவு செய்து அழித்துவிடுவான்.
உடல் நலம் இருக்காது.
மொத்தத்தில் பைத்தியக்காரனைப்போல வாழ்க்கையை நடத்துவான்.
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
-----------------------------------------------------------------------------------
3
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால்:
உடன்பிறப்புக்களுடன் ஒற்றுமை இருக்காது. உடன் பிறப்புக்கள் என்றால் கட்சிக்காரர்கள் இல்லை. கூடப்பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் என்று பொருள் கொள்ளவும்.
மன தைரியம் இருக்காது. மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும்.
சிலருக்கு கேட்கும் சக்தி குறைந்துவிடும். ஏன் சமயத்தில் காது கேட்காத சூழ்நிலைகூட உண்டாகும்
முன்னோர்கள் கொடுத்துவிட்டுப்போன சொத்துக்கள் பலவழிகளில் நாசமாகும்.
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது தீய கிரகத்தின் பார்வையைப்பெற்ரிருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள துயரங்கள், தாங்க முடியாத அளவிற்கு இருக்கும்
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
----------------------------------------------------------------------------------
4.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்:
தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின் மகிழ்ச்சியும் இருக்காது.
குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும்
சொத்துக்கள் கையை விட்டுப்போகும்.
சம்பாத்தியத்திலும் ஒன்றும் மிஞ்சி, சுகத்தைத் தராது.
வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவையே அதிகமாகக் கொடுக்கும். நஷ்டங்களையே கொடுக்கும் மொத்தத்தில் சுகக்குறைவு.
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி நான்காம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், பல சுகங்கள் சொல்லிக்கொள்ளாமல் போய்விடும். தாயின் உடல் சுகவீனமடைந்து, ஜாதகனின் மன அமைதியைக் கெடுக்கும்.
ஜாதகனின் வீடு, மற்றும் வாகனங்களினால் ஏற்படும் சுமைகள், தொல்லைகள் அதிகரிக்கும்.
சிலர் தங்கள் சொத்து, சுகங்களை, வீடு, வாகனங்களைப் பறி கொடுக்க நேரிடும்.
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
------------------------------------------------------------------------------------
5
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால்:
பெற்ற பிள்ளைகளால் மன அமைதி போய்விடும். மனதில் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும். சொந்தங்களுடன் விரோதப்போக்கு நிலவும்.
அலைச்சல் மிகுந்திருக்கும். மனதில் கலவரமும் அடிக்கடி தோன்றி மறையும்
எண்ணப்படி எக்காரியத்தையும் நிறைவுடன் செய்து முடிக்க முடியாது.
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனால், ஜாதகனின் பிள்ளைகளுக்குக் கேடு உண்டாகும்.
அதே போல ஜாதகனின் குழந்தைகளும் தகாத செயல்களில் ஈடுபட்டு,
ஜாதகனின் மதிப்பு, மரியாதைக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். அதாவது குண்டு வைத்துவிடுவார்கள். சிலருக்கு, தங்கள் தந்தையுடன், ஒற்றுமை இருக்காது. புரியாத சர்ச்சைகள் நிலவும்.
இந்த சேர்க்கை, தீய கிரகத்தின் அதீத பார்வையைப் பெற்றிருந்தால்,
சிலர் தங்கள் குழந்தைகளை, அது பிறந்த இரண்டொரு வருடங்களிலேயே
பறி கொடுத்து விட்டுத் தவிக்க நேரிடும்.
இது மனதிற்கும் தொடர்புடைய இடமாதலால், சிலர் மனஅமைதியை இழந்து மன நோயாளியைப் போல திரிய நேரிடும்.
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
------------------------------------------------------------------------------------
6.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால்:
அற்ப ஆயுள் (** இது பொது விதி)
உடல் ஸ்திரமாக இருக்காது.
ஜாதகன் மெலிந்து இருப்பான். பலவிதமான நோய்கள் வந்து குடி கொள்ளூம்
தீய எண்ணங்கள் மிகுந்திருக்கும்
ஒரே ஒரு ஆறுதல், ஜாதகன் பகைவர்களை வெல்லக்கூடியவனாக இருப்பான்.
சிலருக்குப் புத்திர பாக்கியம் அவுட்டாகி விடும். அதாவது இல்லாமல் போய்விடும். சிலர் தத்துப்புத்திரனுடன் வாழ நேரிடும்.
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ராஜ யோகம் ஏற்படும். ஜாதகனுக்கு செல்வம் சேரும். புகழ் உண்டாகும். நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். அவன்
ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும். (அப்பாடா, இதுவரை சொன்ன வற்றில் இது ஒன்றுதான் அம்சமாக, சந்தோஷத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.)
------------------------------------------------------------------------------------
(தொடரும்)
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!