மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.5.08

இந்தத் திருடனை எப்படித் துவைக்கலாம்?

இந்தத் திருடனை எப்படித் துவைக்கலாம்?

கடந்த மூன்று மாதங்களாக என்னுடைய வலைப்பூ மற்றும் மின்னஞ்சல் பாஸ்வேர்டைத் திருடுவதற்கு
யாரோ ஒரு கேடு கெட்டவன் ஆதீதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறான்.

தினம் ஒன்று அல்லது இரண்டு ‘Trap Mail' மெயில்கள்' வரும். விதம் விதமாக வரும். நான் எப்படியாவது
ஏமாந்து அதைக் கிளிக்கித் தொலைக்க மாட்டேனா என்று எதிர்பார்க்கிறது அந்த இழி பிறவி!

வருகிற மெயில்கள் எல்லாம் என்னுடைய பதிவுகளில் அடிக்கடி பின்னூட்டமிடுகின்ற, எனக்கு நன்கு
பரீட்சையமான பெயர்களிலேயே வரும்

ஒரு சமயம் இதைக் கிளிக்கிப் படித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள் என்று வரும், ஒரு சமயம்
இந்த அழைப்பைக் கிளிக்கிப் பாருங்கள் அல்லது ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வரும்.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தத் தொல்லை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை
ஏமாறாமல் தப்பித்துக் கொண்டு வந்துள்ளேன்.

என்னுடன் இருக்கும் இறையருள் நான் ஏமார்ந்துவிடாமல் என்னைக் காக்கும்!

இதை மற்ற வலைப் பதிவர்கள் அறிவதற்காகத் தந்துள்ளேன். ஏனென்றால் இது உங்களுக்கும்
ஒரு நாள் நடைபெறலாம். கவனமாக இருங்கள்.

இன்று சகோதரி ரேவதிநரசிம்ஹன் அவர்கள் பெயரில் வந்த போலி மின்னஞ்சலை உங்கள்
பார்வைக்குக் கீழே கொடுத்துள்ளேன்
---------------------------------------------------------------------


வந்த மெயில் as it is


அனுப்பியவர் யாரென்று கிளிக்கிப் பார்க்கும்போது கிடைக்கும் வடிவம்

----------------------------------------------------------------------------------------
pimpmysearch.com என்ற இனையதளத்தில் இருந்து இந்த போலி மின்னஞ்சல்கள் வந்து
கொண்டிருக்கின்றன.
அந்த இணைய தளத்தில் இருந்து இவற்றை அனுப்பும் அந்தக் கழிசடை யார்?
கண்டுபிடிக்க வழியுண்டா?
எனக்கு கணினி அறிவு அவ்வளவாக இல்லை. வல்லுனர்கள் யாராவது
உதவ வேண்டுகிறேன்


அன்புடன்
SP.VR.சுப்பையா

2.5.08

பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 2



==========================================================
ஜோதிடக் கட்டுரை 2

உட்தலைப்பு: பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 2

முன்பகுதியைப் படித்துவிட்டு வாருங்கள்: சுட்டி இங்கே!

சொத்துக்கள் இரண்டு வகைப்படும்; கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்.

அசையாத சொத்து (Fixed asset) அசையும் சொத்து (Movable asset) என்று சொத்துக்களைப்
பிரித்துப் பார்க்கலாம். இடம், வீடு, நிலம், தோட்டம் எல்லாம் முதல் வகையில் சேரும்.
நகைகள், பணம், வைப்புநிதிச் சான்றிதழ்கள், பங்குப் பத்திரங்கள் எல்லாம் இரண்டாம்
வகையில் சேரும்

அதுபோல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும். நிரந்தரமான கஷ்டங்கள், தற்காலிகமான
கஷ்டங்கள்.

நிரந்தரமான கஷ்டங்கள் எதெது? தற்காலிகமான கஷ்டங்கள் எதெது?

கஷ்டங்களைப் பட்டியலிடுவது கஷ்டமானது. கர்மகாரகன் சனியிடம் என்ன மென்பொருள்
இருக்கிறதென்று தெரியவில்லை என்ன சர்வர் இருக்கிறதென்று தெரியவில்லை இந்தியாவில்
உள்ள 110 கோடி ஜனங்களுக்கும் 110 கோடி விதமான கஷ்டங்களைக் கொடுத்திருக்கிறான்.

எப்படி மனித முகம் வேறு படுகிறதோ, எப்படி வலது கை கட்டை விரல் ஆளாளுக்கு
வேறு படுகிறதோ, அப்படி கஷ்டங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

அதுபோல கஷ்டங்களும் தீர்ந்த பாடில்லை. ஒரு கஷ்டம் போனால் அடுத்த கஷ்டம்
கதவைத் திறந்து கொண்டு வந்து விடுகிறது. கஷ்டம் என்பதை எளிமைப் படுத்திப்
பிரச்சினை என்று கொள்ளலாம்.

சிலருக்குப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வரும். சிலருக்கு ஒட்டு மொத்தமாக வரும்.
சிலருக்கு க்யூவில் நின்று அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் வரும்.

அதனால் பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று
நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான் இந்தத் தொடர் எழுதுவதையே நிறுத்தி
விடுகிறேன்.

கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.

”தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே!”

என்னவொரு அற்புதமான வெளிப்பாடு பாருங்கள். இரண்டே வரிகளில் வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளும்படி சொன்னார் பாருங்கள். அதனால்தான் அவரைக் கவியரசர்
என்கின்றோம்.

ஆகவே இங்கே கஷ்டங்கள் என்பதை நான் சற்று Fine Tuning செய்து, கட்டுரைக்கு
வசதியான முறையில் உங்கள் அனுமதியுடன் பிரச்சினைகள் என்று மாற்றிக்கொள்கிறேன்.

உடல் ஊனம், மன நோய், வறுமை, தீராத பிணி இவைகள் ஜாதகத்தின் வேறு பகுதியில்
பார்க்கப் பட வேண்டியவை ஆகும். ஆகவே அவற்றை இங்கே நான் எடுத்துக்கொள்ள
வில்லை

பொதுவாக உள்ள பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை மட்டுமே நான் இங்கே வகைப்
படுத்திப் பேச உள்ளேன்
------------------------------------------------------------------------------------------
1. வளர்கின்ற வயதில், தாய் அல்லது தந்தை இல்லாமல் வளர்வது

2. படிக்கவேண்டிய வயதில் சூழ்நிலை காரணமாக அல்லது சேர்க்கை காரணமாக படிக்க
முடியாமல் போய்விடுவது.

3. வேலை கிடைக்க வேண்டிய வயதில் சரியான அல்லது தோதான வேலை கிடைக்காமல்
அல்லாடுவது.

4. திருமணமாக வேண்டிய வயதில் ஏதாவதொரு காரணத்தினால் திருமணம் தள்ளிக்
கொண்டேபோவது.

5. திருமணம் ஆனாலும், அன்பு செலுத்தாத, அரவனைக்காத கணவன், கூட இருந்தும்
உதவியாக இல்லாத மாமனார் மாமியார், மற்றும் இன் லாக்கள்.

6. வேலை கிடைத்தாலும் திருப்தியில்லாத வேலை, தகுதிக்கு ஒத்துவராத வேலை,
நிறைவில்லாத சம்பளம்.

7. வாடகை வீடு - அதுவும் வீடு ஓரிடம், வேலை ஓரிடம், தினமும் 40 கிலோமீட்டர் தூரம்
பயணிக்க வேண்டிய அலுப்பு

8. வாழ்க்கையில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாகக் கவலைப்பட்டு, குழந்தை
களைப் படி, படி என்று அனுதினமும் விரட்டிப் படிக்க வைக்க வேண்டிய அவதி

9. பருவம் வந்த பெண் குழந்தையாக இருந்தால் அவளை வெளியே அனுப்பும்போது
ஏற்படும் பரிதவிப்பு

10. அத்தியாவசியத் தேவைக்குக் கூட செலவு செய்ய முடையாமல் ஏற்பட்டு விடும்
கடன் சுமைகள்

இப்படிப் பிரச்சினைகளைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

ஆகவே ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் பிரச்சினை என்பது உங்களுக்கு மட்டுமில்லை.
ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பெரும்பாலான பிரச்சினைகள் பணத்தைச் சார்ந்து இருக்கும்.

“பணம் இருந்தால் போதும் சார்! எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே நொடியில் தீர்த்து
விடுவேன்!” என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம்.

அது உண்மையல்ல! பணத்தால் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் அது உரு
மாறி வேறு விதத்தில் நம்மிடமே திரும்பவும் வந்து நிற்கும்.

இன்று பணம் இல்லாதவனை விட, பணக்காரனிடம்தான் அதிகமான பிரச்சினைகள் உள்ளன!

மெத்தையை வாங்கலாம், ஸ்பிளிட் ஏர்கண்டிஷன் இயந்திரத்தை வாங்கலாம் - ஆனால்
தூக்கத்தை வாங்க முடியாது. பணம் கொடுத்துப் பசியை வாங்க முடியாது! பணம் கொடுத்து
அரண்மனையை வாங்கலாம். அன்பு செலுத்தும் இல்லாளை வாங்க முடியாது. சொன்னதைக்
கேட்கும் குழந்தையை வாங்க முடியாது. துரோகம் இல்லாத நட்பை வாங்க முடியாது. இப்படி
முடியாதது எவ்வளவோ இருக்கின்றன!
-----------------------------------------------------------------------------
சரி, உங்களுக்குப் புரியும் படியாக ஒரே வரியில் சொல்கிறேன்.

பிரச்சினை தீரவே தீராது.

ஒன்றைத் தீர்க்க அடுத்தது வந்து நிற்கும். பிர்ச்சினை என்பது சீட்டாட்டத்தைப்போல!
உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒன்றைக்
கிழே கழற்றி விட்டால், அங்கேயிருந்து பதிலுக்கு நீங்கள் ஒரு கார்டை எடுத்துத்தான்
ஆகவேண்டும்.

கேஸ் ஸ்டவ், பிரஷ்சர் குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், வாஷிங்
மெஷின், டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர், ஸ்டெபிலைசர், ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர்
அல்லது மின் விசிறிகள், மோட்டார் சைக்கிள் அல்லது கார், கணினி, யு.பி.எஸ் என்று
வீட்டிலுள்ள சாதனங்கள் ஒன்று மாற்றி ஒன்று ரிப்பேராகிக் கொண்டே இருக்கும்.

பணம் இருப்பவன் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரே நாளில் அத்தனை சாதனங்
களையும் புதிதாக மாற்றி விட்டு, நிம்மதியாக இருப்போம் என்று நினைத்தால், விதி அவனை
விடாது. அவனேயே நோய்க்கு ஆளாக்கி அல்லது எங்காவது விபத்தில் புரட்டி எடுத்து
மருத்துவமனையில் கொண்டுபோய் படுக்க வைத்துவிடும். அவனையே ரிப்பேர் செய்ய
வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கி விடும்.

ஆகவே பிரச்சினை என்பது, நமது இரத்த ஓட்டம்போல, சுவாசம் போல உடன் இருப்பது
ஆகும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையின் அவசியமென்ன?

இரண்டு வழிகளில் உங்களுக்குப் பதில் சொல்வதற்குத்தான் இந்தக்கட்டுரை!

1. பிரச்சினையைத் தாங்கக் கூடிய திறன் இருக்கிறதா?

2. அடுத்த பிரச்சினையை அப்போது பார்த்துக்கொள்வோம்,
இப்போதுள்ள பிரச்சினை எப்போது தீரும்?
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகத்தில் திரிகோண வீடுகளான ஒன்றாம் வீடு (லக்கினம்) ஐந்தாம் வீடு (House of Mind)
ஒன்பதாம் வீடு (House of Gains - பாக்கிய ஸ்தானம்) ஆகிய வீடுகள் நன்றாக - அதாவது
வலுவாக இருந்தால் - உங்களுக்குப் பிரச்சினைகளைத் தாங்கக்கூடிய திறன் இருக்கிறது
என்று கொள்ளலாம். அதுதான் முக்கியம் - தாங்கும் வல்லமை இருந்தால் போதாதா?

சரி, அதை எப்படித் தெரிந்து கொள்வது?

மூன்று வீடுகளும் ஒட்டு மொத்தமாக நன்றாக இருப்பது என்பது ஆயிரத்தில் ஒருவருக்குத்
தான் இருக்கும். சராசரியாக, மனிதனுக்கு மூன்றில் ஒன்று நன்றாக இருந்தாலும் போதும்!

முன்பே சொல்லியிருக்கிறேன் உலகில் அனைவருக்கும் உள்ள மொத்த பரல்கள் 337 மட்டுமே
அதை 12 ஆல் (ராசிகளால்) வகுத்தால் சராசரியாக 28 வரும். சராசரிக்கும் மேலே கூடுதலாக
இரண்டு பரல்களுடன் - அதாவது 30 பரல்கள் அந்த வீடுகளில் - அல்லது ஒன்றிலாவது
இருத்தல் நல்லது.

அதோடு ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமைக்குரிய பரல்கள் எட்டு. நான்கு என்பது
சராசரி. 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் அந்த கிரகம் இருந்தால் நல்லது

உதாரணம் சிம்ம லக்கின ஜாதகனுக்கு, சூரியன்தான் லக்கின அதிபதி. ஜாதகத்தில் சூரியன்
அதன் சுய வர்க்கத்தில் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஐந்தாம் வீடு, தனுசு வீடாகும், தனுசிவின் அதிபதி
குரு பகவானும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஒன்பதாம் வீடு, மேஷமாகும், மேஷத்தின் அதிபதி
செவ்வாயும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு லக்கினக்காரர்களும் தங்களுக்குரிய லக்கினத்தை வைத்து அந்த
மூன்று இடங்கலையும் தாங்களே மதிப்பிட்டுக்கொள்ள வேண்டுகிறேன்

இவ்வாறு ஒரு வீடும், வீட்டின் அதிபதியும் அமைந்து விட்டால் போதும். உங்களை
ஒன்றும் சீண்ட முடியாது. எது வந்தாலும் தாங்கக்கூடிய உத்தம மனிதர் அல்லது
பெண்மணி நீங்கள். அந்த கிரகங்கள் உங்களுக்குக் கடைசிவரை கை கொடுக்கும்!

பதிவின் நீலம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்ற செய்திகள்
அடுத்த பதிவில்

(தொடரும்)

புதியவர்களுக்கு: பரல்களைக் கணித்துக்கொடுக்கும் மென்பொருளிற்கு இங்கே சொடுக்கவும்:

----------------------------------------------------------------------------------------

1.5.08

பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 1


====================================================

ஜோதிடக் கட்டுரை 2

உட்தலைப்பு: பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 1

வியாபார நிமித்தமாக அடிக்கடி பேருந்திலும், ரயிலிலும் பயணிக்கும் பழக்கம் உண்டு.
இப்போதல்ல. அது முன்பு! பயணம் என்றால் பத்து மணி நேரம் முதல் இருபது மணி
நேரம் வரை பயணிக்க வேண்டும்

அவ்வாறு பயணிக்கும்போது,படிப்பதற்காக புத்தகம் ஒன்றை எடுத்து வைத்துக்கொள்வேன்.

இளைஞனாக இருந்த காலத்தில், James Hadley Chase அல்லது Jeffery Archer புத்தகம்
ஒன்றை எடுத்துக் கொள்வேன். பெரும்பாலும் விலைக்கு வாங்கியதாகவோ அல்லது
நண்பர்கள் கொடுத்ததாகவோ இருக்கும். மணிக்கு முப்பது பக்கம் என்ற அளவில் அதை
முழுதாகப் படித்து விடுவேன். மேலோட்டமான படிப்பு அல்ல! முழுதாக உள்வாங்கி
ரசித்துப் படிக்கும் பழக்கம்.

பின்பு ஒரு காலகட்டத்தில், ஆன்மிகப் புத்தகங்களுக்கும், ஜோதிட நூல்களுக்கும் முக்கியம்
கொடுத்துப் படிக்க ஆரம்பித்தபோது, புதினங்கள் படிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டேன்.

ஜோதிட நூல்களைப்போலவே, ஜோதிட மாத இதழ்களையும் விரும்பி வாங்கிப் படிக்கத்
துவங்கினேன். Indian Expressன் Star Teller, Astrological Magazine ஆகிய ஜோதிட இதழ்களில்,
பிரபலமான ஜோதிட வல்லுனர்களான P.S Ayer, K.S.Rao, N.Sundararajan, Dr.V.P.Shukla,
V.S.Kalyanaraman போன்றோர்களின் கட்டுரைகள் அசத்தலாக இருக்கும் அதுபோல
அதன் ஆசிரியர் B.Venkatraman அவர்களின் கேள்வி பதில் பகுதி விறுவிறுப்பாக இருக்கும்.

Your Technical Difficulties Solved என்ற பகுதியில் ஜோதிடம் அறிந்த தங்களுடைய
வாசர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு, அவர்கள் அனுப்பிய ஜாதகக் குறிப்பையும்
அருகிலேயே கொடுத்துப் பதிலையும் கச்சிதமாகச் சொல்லியிருப்பார் அவர். தொடர்ந்து
படிக்கும் வாசகர்கள், அந்தக்கேள்விக்கான பதில் என்னவாக இருக்கும் என்று கொடுக்கப்
பட்டிருக்கும் ஜாதகத்தை வைத்து ஆராய்ந்து பார்த்து யோசித்துவிட்டு, தங்கள் பதில்
அவருடைய பதிலுடன் ஒத்துப்போகிறதா என்று பார்ப்பது வழக்கம்.

சரியாக இருந்துவிட்டால் ஒரு சந்தோஷம் ஏற்படும் பாருங்கள், அதற்கு ஈடு இணையே
கிடையாது. சரியாக இல்லையென்றாலும், என்ன காரணத்தினால் அது தவறாகிவிட்டது
என்று நமது கணிப்பைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை அது ஏற்படுத்தும். அந்த
வகையிலும் அது மகிழ்வையே தரும். பல வாசகர்களின் ஜோதிட அறிவு வளர்ந்ததற்கு
அவருடைய எழுத்துக்களே காரணம்.

உதாரணத்திற்கு ஒன்றைக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்:


=========================================================
இவ்வாறு மனம் ஒன்றியும், முனைப்புடனும் படிக்கும்போது நேரம் போவது தெரியாது.

பஸ்ஸில், அருகில் அமர்ந்திருப்பவரால் ஒன்றும் சிரமம் ஏற்படாது. ஆனால் ரயிலில்
பயணிக்கும்போது, உடன் பயணிக்கும் சக பயணிகள் சும்மா இருக்கமாட்டார்கள்.
ஆர்வத்துடன் பேச்சுக்கொடுப்பார்கள். அவர்களைத் தவிர்க்க முடியாது. புத்தகத்தை
மூடி வைத்துவிட்டு அவர்களுடன் தொடர்ந்து பேசும்படி ஆகிவிடும். அதிலும் ஒரு
லயிப்பு இருக்கும். ஆகவே சங்கடமின்றி அரட்டை அடிப்பது வழக்கம்.

அப்படி அரட்டை அடிப்பதிலும் பல சுவையான அனுபவங்களும், செய்திகளும்
கிடைக்கும். சில சமயம் நன்கு ஜோதிடம் தெரிந்தவர்களும் பயணிப்பார்கள். அவர்களுடன்
பல தகவல்களைக் கேட்டுப்பெற்ற அனுபவமும் எனக்கு உண்டு.

அப்படிக் கிடைத்ததுதான் நான் உங்களுக்கு விவரித்துச் சொன்ன சனீஸ்வரன் படித்த
பள்ளிக்கூடக் கதை!
--------------------------------------------------------------------------------------------------
பொதுவாக, ஜோதிடம் அறிந்தவர் நீங்கள் என்பது தெரிந்தால், அவர்களுக்கு உங்கள்
மேல் பத்து மடங்கு ஆர்வமும், மரியாதையும் டக்கென்று ஏற்பட்டுவிடும். இது நான்
பல இடங்களில் பார்த்திருக்கிறேன். (அதனால், பின்னால் பல அசெளகரியமும் ஏற்படும்
- அது தனிக்கதை!)

எல்லோரும் கேட்கக்கூடிய ஒரு பொதுக்கேள்வி உண்டு!

“நான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். யார்தான் கஷ்டப்படவில்லை
என்று சொல்லாதீர்கள்! என் கஷ்டம் என்னைத் தொடர்ந்து வாட்டிக்கொண்டிருக்கிறது.
அது தீருமா? அல்லது தீராதா?”

என்று சொல்லியவாறு, தன் சட்டைப்பையில் தயாராக வைத்திருக்கும் தன்னுடைய
ஜாதகத்தை எடுத்து நீட்டிவிடுவார்கள்.

கஷ்டங்கள் இரண்டு வகைப்படும்.

சொத்துக்கள் இரண்டு வகைப்படுவதைப்போல - அதாவது அசையும் சொத்து, அசையாத
சொத்து என்று - இரண்டு வகைப்படுவதைப்போல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்

அவை என்னென்ன? அவைகளுக்குத் தீர்வு உண்டா? அவற்றின் தீர்வு காலத்தை - அதாவது
அவைகள் நீங்கும் காலத்தை நம் ஜாதகத்தைப் பார்த்து நாமே அறிய முடியுமா?

முடியும்!!!

அவற்றை உங்களுக்குச் சொல்லித் தருவதற்குத்தான் இந்தக் கட்டுரைத் தொடர். சற்று
நீண்ட தொடர். விவரமாக எழுத உள்ளேன்; பொறுமையாகப் படியுங்கள்!

(தொடரும்)
---------------------------------------
அன்புடன்,
வாத்தியார்