Astrology: மகிழ்ச்சியான மண வாழ்க்கை
Happy married life!
தலைப்பு: மகிழ்ச்சியான மண வாழ்க்கை
---------------------------------------------
பள்ளிக்கூடத்தில் இருப்பதுபோல சிலபஸ் எல்லாம் கிடையாது
முக்கிய விதிகள், அலசல் பாடங்கள், உதாரண ஜாதகங்கள் என்று பாடங்கள் கலவையாக இருக்கும்.
படிப்பதற்கு சுவையாக, வழக்கம்போல எனது நடையில் (எளிய நடையில்) எழுதிக்கொண்டுள்ளேன்!
தொடர்ந்து படியுங்கள்.
சந்தேகம் வராது. வந்தால், பாடம் சம்பந்தமான சந்தேகத்தை மட்டும் கேளுங்கள்
உங்கள் ஜாதகத்தோடு சம்பந்தப் படுத்திக் கேட்காதீர்கள்
முழுப்பாடங்களையும் படித்த பிறகு உங்கள் ஜாதக சம்பந்தமான மேட்டர்களை அலசிப் பார்க்கும் அறிவு உங்களுக்கே ஏற்பட்டுவிடும்
நான் எனக்குத் தெரிந்ததை மட்டுமே சொல்லித் தருகிறேன்
தெரிந்ததை மட்டுமே எழுதுகிறேன்
உங்களை ஜோதிடன் ஆக்கவேண்டும் என்பது என் நோக்கமல்ல. முதலில் நானே தொழில்முறை ஜோதிடன் அல்ல!
ஜோதிடத்தில் நான் கற்றுணர்ந்தவற்றை, உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். அவ்வளவுதான்
நீங்கள் நான் சொல்லிக் கொடுப்பதை மனதில் வாங்கிக் கொண்டு, உங்கள் ஜாதகத்தையும், உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகத்தையும், உங்கள்
நண்பர்களின் ஜாதகத்தையும், அலசிப்பார்க்கும் அளவிற்கு மேன்மையுற்றால், அதுவே போதும்.நான் சொல்லித் தரும் நோக்கமும் அதுதான்.
எண்ணிக்கை முக்கியமல்ல. நான் சொல்லித் தருபவர்களில் ஒரு பத்துப் பேர் தேர்ச்சியுற்றால் போதும். அதுவே எனது அரிய நேரத்தை செலவழித்து
நான் உங்களுக்குப் பாடம் நடத்துவதற்குக் கிடைத்த பயனாகும்.
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
இன்றையப் பாடம்: மகிழ்ச்சியான மண வாழ்க்கை
அக்காலத்தில், ஜாதகம் பார்த்து நடந்த திருமணங்கள் குறைவே! நெருங்கிய உறவுகளில் உள்ள வரன்களை, ஒருவருக்கொருவர் மனப் பொருத்தம்
இருந்தால் போதும் என்று மணம் செய்துகொள்வார்கள். அத்தை வீடு, அம்மான் வீடு (மாமா வீடு) என்று திருமணங்கள் நடைபெறும். அல்லது உறவுக்காரர்களில் சம்பந்தம் செய்யக்கூடிய உறவுகளைத் தேர்ந்தெடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு மணம் முடித்துவிடுவார்கள்.
பெண்ணிற்கு 18 வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தை செய்துவிடுவார்கள்.
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, நிலமை, வேறு விதமாக இருந்தது. அப்போதெல்லாம் பால்ய விவாகம். அதாவது குழந்தைத் திருமணம்.
என் பெற்றோருக்கு நடந்ததும் பால்ய விவாகம்தான். என் அன்னைக்கு அப்போது 11 வயதுதான். என் தந்தைக்கு 13 வயது. செல்வந்தர் வீடுகள். இரு வீட்டாருமே நெருங்கிய உறவுக்காரர்கள். அப்போதெல்லாம் 6 நாள் கல்யாணமாம். அந்த 6 நாட்களுக்கும், உறவினர்கள் அனைவருக்கும் ஜாம் ஜாமென்று விருந்தோம்பல் உண்டாம். என் பெற்றோர்கள் திருமணத்திலும் அவ்வாறு நடந்ததாம்!
ஜாதகம் எல்லாம் பார்க்கும் வழக்கம் இல்லாத காலம் அது. திருமணத்திற்குப் பிறகு தம்பதிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டால், இரு வீட்டிலும் உள்ள பெரியவர்கள் கலந்து பேசி அதை சரி செய்திருக்கிறார்கள்.
இப்போது நிலைமை அப்படியல்ல! எல்லாம் தலை கீழாக மாறியுள்ளது.
இன்றைய தேதியில், பத்திரிக்கைக்காரர்கள், சனி, பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு & கேது பெயர்ச்சி என்று ஒவ்வொரு பெயர்ச்சிக்கும் மலர் (இணைப்புப் புத்தகங்களைப்) போட்டு வருவதாலும், மற்றும் நாள், வார, மாத ராசி பலன்களை எழுதிவருவதாலும், மக்களிடம் ஒரு விழிப்பு உணர்வு
ஏற்பட்டுள்ளது. எல்லோருக்கும் ஜாதகத்தின் மேலும் ஜோதிடத்தின் மேலும் ஒரு பிடிப்பு ஏற்பெற்றுள்ளது. அனைவரும் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார்கள்.
பொருத்தமான ஜாதகம் உடைய வரனுக்கு அலைபவர்கள் சிலரை எனக்குத் தெரியும்.
அவர்களிடம் நான் சொல்லுவேன்:
”ஜாதகம் பொருந்தினால் பையனைப் பிடிக்காது. பையனைப் பிடித்தால் ஜாதகம் பொருந்தாது. ஆகவே முருகப் பெருமானிடம் பாரத்தைக் கொடுத்து
விட்டு ஜாதகம் பார்க்காமல் திருமணத்தை செய்து வையுங்கள்” என்று கூறுவேன்
ஜாதகம் பார்த்துப் பண்ணுவதால் வருவிருக்கின்ற கேடை (விதியைத்) தடுத்து நிறுத்த முடியுமா? நடக்கவிருப்பதை, நடக்கவிடாமல் செய்ய முடியுமா?
நடக்கவிருப்பது எப்படியும் நடந்தே தீரும்!
ஜாதகப் பொருத்தம் பார்த்து செய்த திருமணங்களில் பல திருமணங்கள் ஊற்றிக் கொண்டுள்ளன. அவர்களை எல்லாம் நான் அறிவேன்.
அதற்கு என்ன காரணம்?
ஜாதகத்தின் மேல் தவறா? அல்லது ஜோதிடத்தின் மேல் தவறா? அல்லது ஜோதிடரின் மேல் தவறா?
ஜோதிடர், 10 பொருத்தங்களைப் பார்ப்பார். சரியாக இருக்கும். தசா சந்திப்பு ஜோடிகளுக்குள் இருக்ககூடாது என்பதால அதையும் பார்ப்பார்,
அதுவும் சரியாக இருக்கும். செவ்வாய் தோஷம் இருக்கிறதா? இருந்தால் இருவருக்கும் இருக்கிறதா என்றும் பார்ப்பார். அதுவும் பொருந்தி வரும். அது போன்று பெண் வீட்டார் கொண்டு வரும் ஐந்து அல்லது ஆறு ஜாதகங்களை அலசி, அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொடுப்பார்.
அவரால் முடிந்தது அதுதான்.
தனிப்பட்ட முறையில், பெண்ணின் ஜாதகத்தையும், பையனின் ஜாதகத்தையும் தனித்தனியாக அலசி அவைகளுள் உள்ள குறைபாடுகளை அவர் பார்க்க மாட்டார். அல்லது அப்படிப் பார்ப்பதற்கான நேரம் அவருக்கு இருக்காது.
அவ்வாறு அலசிப் பார்க்காத ஜாதகங்களில் உள்ள குறைகள் விஸ்வரூபம் எடுக்கும்போது பிரச்சினைகள் உண்டாகும்.
---------------------------------------------------------------------------
மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு உரிய முக்கியமான ஜாதக விதிகளில் சில!
1. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் ஒருவருக்கொருவர் பகையான இடத்தில் அமரக்கூடாது. 6/8 அல்லது 1/12 நிலைகளில் அமர்ந்திருக்கக்கூடாது
உதாரணமாக கன்னி லக்கினத்திற்கு அதிபதி புதன். அந்த லக்கினத்திற்கு 7ஆம் அதிபதி குரு. புதன் 9ல் அதாவது ரிஷபத்திலும், குரு 4ல் அதாவது தனுசுவிலும் இருந்தால் ஒருவருக்கொருவர் 6/8 நிலைப்பாடு. குருவிற்கு ஆறில் புதன். புதனுக்கு எட்டில் குரு. அவ்வாறு இருப்பது தீமையானது.
2. களத்திரகாரகன் சுக்கிரன் வக்கிரகதியிலோ அல்லது பாப கர்த்தாரி யோகத்திலோ இருக்கக்கூடாது.
3. ஏழாம் வீடும் அதன் அதிபதியும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியிருக்கக்கூடாது.
பாப கர்த்தாரி யோகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? அதைப் பற்றி பலமுறை சொல்லியுள்ளேன். எனது பாடங்களை விடாமல் தொடர்ந்து
படிப்பவர்களுக்கு அது தெரியும்
4. அஷ்டகவர்க்கத்தில் 7ஆம் வீட்டில் இருவருக்கும் 25 பரல்களுக்கு மேல் இருப்பது நல்லது. ஒருவருக்கு 20 பரல்களோ அல்லது அதற்கும் குறைவான பரல்களோ இருப்பது நல்லதல்ல
இவைகள் எல்லாம் பொது விதிகள். ஆனால் முக்கியமான விதிகள். இவற்றை மனதில் வையுங்கள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com