ஏ.பி.நாகராஜன் அவர்களை அறிமுகம் செய்தது இவர்தான்!!!!
எம்.ஏ.வேணு [தயாரிப்பாளர்-நடிகர்-தயாரிப்பு நிர்வாகி]
மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் சாதாரண காவலாளியாக இருந்தவர்தான் எம்.ஏ.வேணு. படத்தொழிலின் நுட்பங்களை
அறிந்துகொண்டு, பட அதிபராக உயர்ந்தவர்.
சம்பூர்ண ராமாயணம்,மாதவி உள்ளிட்ட சிறந்த பல படங்களைத் தயாரித்தவர். இவரது சொந்த ஊர் சேலம். அங்கு செவ்வாய் பேட்டை பகுதியில் வேணுவின் தந்தை நூல் வியாபாரம் செய்து வந்தார்.
அவருக்கு 4 மகன்கள். மூத்தவர்தான் இந்த வேணு.
வேணு அதிகம் படிக்கவில்லை. சேலம், மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் காவலாளியாக வேலையில் சேர்ந்தார். அங்கு
தயாரிக்கப்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். வி.எம்.ஏழுமலைச் செட்டியாரும், இவரும் சேர்ந்து சில
படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தனர். இவர் இங்கு
தயாரிப்பு நிருவாகியாகவும் இருந்தார். நிருவாகத்தைத்
திறம்பட நிருவகித்தார் வேணு.
சகல நுட்பங்களையும் நன்கு அறிந்த வேணு, மாடர்ன் தியேட்டர்
ஸிலிருந்து விலகி, சிலருடைய கூட்டுறவுடன் “நால்வர்”
என்ற படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்தின் மூலமாகத்தான்
கதை-வசன ஆசிரியராகவும், கதாநாயகனாகவும் ஏ.பி.நாகராஜன் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெற்றிப்படமானது.
இந்தப் படத்திற்குப் பின் எம்.ஏ.வேணு தனியாகப் பிரிந்து “எம்.ஏ.வி.பிக்சர்ஸ்” என்ற கம்பெனியைத் தொடங்கி முதன் முதலாக “மாங்கல்யம்” என்ற படத்தைத் தயாரித்தார். ஏ.பி.நாகராஜன் கதை, வசனம் எழுதி கதாநாயகனாக நடித்தார். பி.எஸ்.சரோஜா, ராஜ சுலோச்சனா, எஸ்.ஏ.நடராஜன், எம்.ஏ.வேணு, ஏ.கருணாநிதி போன்ற பலர் நடித்திருந்தனர்.
குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பிரமாதமாக ஓடியது.
பிறகு “பெண்ணரசி” என்ற படத்தைத் தயாரித்தார். ஏ.பி.நாகராஜனும் சூரியகலாவும் இணையாக நடித்தனர். “மனோகரா” பாணியில்
எடுக்கப்பட்ட இந்தப் படம் சுமாராகவே ஓடியது.
அடுத்தப் படம் ”டவுன் பஸ்”, என்.என்.கண்ணப்பாவும், அஞ்சலிதேவியும் இணையாக நடித்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமானது. இதையடுத்து “சம்பூர்ண ராமாயணத்தை” பிரம்மாண்டமாக தயாரித்தார். பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நிறைந்த இந்தப் படத்தைத் தயாரிக்க
நீண்ட காலமானது. இதனால் குறைந்த செலவில் குறுகிய கால
தயாரிப்பாக “முதலாளி” படத்தைத் தயாரித்தார். முக்தா வி.சீனிவாசன் இயக்கிய இப்படம் 1957-இல் தீபாவளிக்கு வந்த பெரிய நடிகர்கள் நடித்த படங்களைப் புறந்தள்ளிவிட்டு, மகத்தான வெற்றி பெற்றது. “சம்பூர்ண ராமாயணம்” 1958-இல் ஏப்ரல் 14-இல் வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது.
1959-இல் “பாஞ்சாலி” படத்தைத் தயாரித்தார். ஆர்.எஸ்.மனோஹர், எல்.விஜயலட்சுமி, தேவிகா, ரி.கே.ராமச்சந்திரன் நடித்த இப்படம் தோல்வியடைந்தது. எம்.ஆர்.ராதா, நடிக்க “பணம் பந்தியிலே”
படத்தைத் தயாரித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதன் பின்
தயாரித்த “தங்க வளையல்”, “துளசி மாடம்”, “பட்டணத்து சிப்பாய்”
ஆகிய படங்கள் வரிசையாய் தோல்வியைத் தழுவி எம்.ஏ.வேணுவின் அதிர்ஷ்டச் சக்கரம் சுழல்வது நின்றது.
வெற்றிப் படங்கள் மூலம் அவர் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை, தோல்விப் படங்கல் விழுங்கிவிட்டன. இவரது மனைவி பெயர் பார்வதி அம்மாள். இவர்கட்கு 5 மகள்கள்.
நன்றி:- தினத்தந்தி
-------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
சுவாரஸ்யமான விஷயங்கள்.
ReplyDelete/////Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteசுவாரஸ்யமான விஷயங்கள்./////
நல்லது. நன்றி நண்பரே!!!