மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.7.19

எனக்கு ஒன்று - உனக்கு இரண்டு



எனக்கு ஒன்று - உனக்கு இரண்டு 
(நகைச்சுவைச் சிறுகதை)
--------------------------------------------------------------
அடியவன் எழுதி மாத இதழ் ஒன்றில் வந்த கதை! நீங்கள் படித்து மகிழ்வதற்காக இன்று அதை வலையில் ஏற்றியுள்ளேன்

அன்புடன்
SP.VR.சுப்பையா, 
கோயமுத்தூர்
---------------------------------------------------------------------
குண்டக்க மண்டக்க ராமசாமி - குனிக்கி முனுக்கி பழனிசாமி, இருவரையும் தெரியாதவர்களே கிடையாது. கவுண்டமணி,
செந்திலுக்குப் பதிலாகப் படத்தில் இரண்டு கவுண்டமணிகள் என்றால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கும் அவர்கள்
அடிக்கும் லூட்டிகள். இத்தனைக்கும் இருவரும் பங்காளிகள்.

குண்டக்க மண்டக்க, குனிக்கி முனுக்கி என்பதெல்லாம் ஊர் மக்களால் வழங்கப்பெற்ற விருதுகள். அதாவது பட்டப் பெயர்கள்.

பொள்ளாச்சி அருகில் நல்லாம் பாளையத்தில் இருவரும் பெரிய பண்ணை வீடுகளில் வசித்தார்கள். அதுவும் எதிர் எதிரே!

இருவருக்கும் சம வயது. வருகிற ஆடியோடு ஐம்பது முடியப்போகிறது. ஏராளமான சொத்துக்கள். கோயம்புத்தூர் செல்லும் வழியில், ஆளுக்கு இரண்டுதென்னந்தோப்புக்கள், வால்பாறையில் தேயிலைத் தோட்டங்கள், மாட்டுப் பண்ணைகள் என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.

இருவருக்கும் சுகஜீவனம் - அதாவது எந்த வேலையும் செய்யாமல் சுகமான வாழ்க்கை. இருக்கும் நிலபுலன்களையெல்லாம் குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள். குத்தகைப் பணமே வருடத்திற்கு ஒரு கோடிக்குமேல் வருகிறது .போதாதா?

எதற்கு வேலை செய்ய வேண்டும்?

சரி, பொழுது போக்கு?

ஒருவரை ஒருவர் நோட்டமிட்டுக் கொண்டிருப்பதும், அவர் ஏதாவது செய்தால்உடனே இவர் அதைச் செய்வதும். இவர் செய்ததற்குப் போட்டியாக அவர் மற்றொன்றைப் போட்டியாகச் செய்வதும் - அதுதான் முழு நேர வேலை!

இவர், ஊர் எல்லையில் பேருந்துப் பயணிகளுக்காக ஒரு நிழற்கூடம் கட்டிக்கட்டிக் கொடுத்தால், அவரும் அதற்கு எதிரேயே போட்டியாக ஒன்றைக்கட்டிக் கொடுப்பார். இவர் கார்த்திகைக்கு உள்ளூர் முருகன் கோவிலில் அன்னதானம் கொடுத்தால், அவர் அதே கோவிலில் பெளர்ணமிக்கு அன்னதானம் கொடுப்பார்.

இவர் இன்னோவா கார் ஒன்றை வாங்கினால், அவரும் அதே கலரில்ஒரு இன்னோவா காரை வாங்கிக் கொண்டு வந்து நிறுத்துவார். பயங்கரப்போட்டி - யார் பெரியவன் என்பதில்!

இருவரில் ராமசாமியைக் கடந்த பத்து நாட்களாகக் காணவில்லை. அதாவது யார் கண்ணிலும் தென்படவில்லை. ஊர் மக்களுக்குக்
கவலையிருந்ததோ இல்லையோ, பழனிசாமிக்குக் கவலையாகி விட்டது. இருப்புக் கொள்ளவில்லை. வீட்டில் உட்கார முடியவில்லை.

தன் கணக்கப் பிள்ளையை அழைத்து விசாரித்தார். கணக்கப் பிள்ளை நம்மநடிகர் டென்சன் பாண்டுவைப் போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்

"முதலாளி, நீங்க கேட்பீங்கன்னு தெரியும். நாளு நாளைக்கு முன்னாடியே ஊர் முச்சூடும் விசாரிச்சிட்டேன். ஒருத்தனுக்கும் தெரியலை . கண்டு பிடிக்கமுடியாது. நோ சான்ஸ்!"

இப்போது பழனிசாமி டென்சனாகி விட்டார்,"யோவ், இதைச் சொல்றதுக்கா உன்னிய நானு வேலைக்கு வச்சிருக்கேன்? உலகத்தில முடியாததுன்னுஒன்னுமே கிடையாதைய்யா! ஏதாவது டாகால்டி வேலை பண்ணிக் கண்டு பிடிச்சுக்கிட்டு வா - போ"

"அதுக்குக் கொஞ்சம் பணம் செலவாகுமே முதலாளி"

"எவ்வளவு ஆகும்?"

"ராமசாமி பொஞ்சாதி பிள்ளைங்ககிட்டக் கூட சொல்லாமப் போனாலும் போயிருப்பாரு - ஆனால் அவரோட கணக்கப்பிள்ளை மயில்சாமிகிட்ட நிச்சயமா சொல்லிட்டுத்தான் போயிருப்பாரு - நாம அந்த மயில்சாமிக்கு ஒரு இருபது அல்லது இருபத்தைந்தாயிரத்தை வெட்டுனமின்னா, கண்டு பிடிச்சிரலாம்"

"கூடவே செலவானாலும் பரவாயில்லை - இன்னிக்கி ராவுக்குள்ள கண்டு பிடிச்சாகணும் சொல்லிப்போட்டேன்" என்று தன் முதலாளி பழனிசாமி சொல்லவும், இதை வைத்து நாமும் ஒரு பத்தாயிரத்தைக் கையில் பார்த்துவிட வேண்டியதுதான் என்ற வேகத்துடன் கணக்கப்பிள்ளை விட்டியாகப் பறந்து சென்றுவிட்டார்.

**************************************************************

பணம் பத்தும் செய்யும் என்பார்கள். பணத்தைக் கொடுத்தால் கணக்கப் பிள்ளை பத்திற்கு மேலேயேயும் செய்யக்கூடியவர். அன்று மாலையே அவர் முழுத்தகவலையும் கறந்து கொண்டு வந்து விட்டார்

ராமசாமி உத்ராஞ்சல் மாநிலத்தில் இருக்கும் ஹரித்துவாருக்குச் சென்றிருக்கிறாம் .அங்கே மலையடிவாரத்தில் ஒரு பெரிய ஆசிரமம் இருப்பதாகவும், அந்த ஆசிரமத்தில் சேர்ந்து முறைப்படி இறைவனை வணங்கும் நெறிமுறைகளையும் மற்றும் தியானத்தின் மூலம்  மன அமைதி பெறும் பாடங்களையும் கற்றுக் கொண்டு வருவதற்காகப் போயிருக்கிறாராம். அதோடு அவர் திரும்பி வர ஆறுமாத காலங்கள் ஆகுமாம் என்பதையும் , மேலும் கையில்இரண்டு லெட்ச ரூபாய் பணத்தை ரொக்கமாகக் கொண்டு போயிருக்கும் தகவலையும் விலாவரியாகச் சொன்னதோடு, அந்த ஆசிரமத்தின்
முகவரி எழுதப்பெற்ற சீட்டையும் கொடுத்தார்.

விடுவாரா பழனிசாமி? அடுத்த நாளே அவரும் புறப்பட்டுக் கோவை வழியாக டில்லிக்கு விமானம் மூலமும், பிறகு அங்கிருந்து ஒரு வாடகைக்கார் மூலம் பயணித்து அந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார்.

வந்தவுடன், முதல் வேலையாக ராமசாமி அங்கே இருப்பதை உறுதி செய்து கொண்டுஅவரும் அங்கே ஆறு மாதத்திற்கு உரிய கட்டணமான ஒரு லெட்சத்தைக் கட்டிச் சேர்ந்து விட்டார்.

அது நூறு ஏக்கர் பரப்பளவில், வானுயர்ந்த மரம், செடி, கொடிகளுடன் கூடிய, நல்லபராமரிப்பில் உள்ள ஆசிரமம். ரம்மியமான சூழ்நிலையில் இருந்தது. பெரிய சாமியார் உதவி சாமியார்கள் என்று ஆசிரம நிர்வாகிகளே ஐம்பது பேர்களுக்கு மேல் இருந்தார்கள். எல்லோருக்கும் ஆங்கிலம்
தெரிந்திருந்தது. தமிழ் தெரிந்தவர்களும் இருவர் இருந்தார்கள்.

இறைவணக்கம், தியானம் செய்முறைகள் ஆகியவற்றிற்கு பழனிசாமிக்கு இரண்டு நாட்கள் பயிற்சி கொடுத்தார்கள். 108 உத்திராட்சங்களைக் கொண்ட உத்திராட்ச மாலை ஒன்றைக் கையில் கொடுத்து பஞ்சாட்சிர மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார்கள்

பின் வளாகத்தில் ஐம்பதடிக்கு ஒன்றாக இருந்த ஏராளமான சிறு குடில்களில் பழனிசாமிக்கும் ஒரு குடிலைக் கொடுத்தார்கள். அவருக்கு வேண்டிய உணவுகள் குடிலுக்கே வந்து சேரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பழனிசாமிக்கு ஒரே ஒரு வேலைதான். காலையில் எழுந்தவுடன், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குடிலின் மையத்தில் இருந்த பீடத்தின் மீது அமர்ந்து இறைவனைப் ப்ரார்த்திக்க வேண்டியதுதான். மனதை ஒருமுகப் படுத்தி 'நமசிவாய' மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லிப் பிரார்த்தனை செய்ய
வேண்டியதுதான்.

சிரத்தையோடு சொன்னால் இறைவனைக் கண்டுகளிக்கும் பாக்கியமும் உண்டு என்றுசொல்லியிருந்தார்கள். ராமசாமிக்கு முன்னால் நாம் இறைவனைக் கண்டு பேசிவிட வேண்டும் என்ற பேராசையில் இவர் தூங்கும் நேரத்தைக் கூடக் குறைத்துக் கொண்டுஅதிரடியான பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

ஆனால் நடந்தது வேறு! பழனிசாமி வந்து ஒரே வாரத்தில் சிவபெருமான் காட்சிகொடுத்தார் - இவருக்கல்ல - முதலில் ராமசாமிக்கு!

ராமசாமிக்கு அளவிட முடியாத சந்தோஷம்."பரமேஷ்வரா - என்னே உன் கருணை"என்று சொல்லி இறைவனின் கால்களில் விழுந்தவர் எழ விருப்பம் இல்லாமல் அப்படியே கிடந்தார்.

இருவருடனும் ஒரு திருவிளையாடலை நடத்த வந்திருந்த இறைவனோ, மெல்லக் கேட்டார்.

"என்ன ராமசாமி, என்னை வணங்குவதிலுமா உங்களுக்குள் அப்படியொரு போட்டி?"

ராமசாமிக்குச் சுரீர் என்றது. சடாரென்று எழுந்து நின்றவர், "இல்லை அய்யனே, அப்படி இருக்க வாய்ப்பில்லையே! நான் இங்கே வந்தது யாருக்குமே தெரியாதே!"

"இல்லை உன் கணக்கப்பிள்ளை மயில்சாமியை மடக்கிப் பிடித்துத் தெரிந்து கொண்டு பழனிசாமியும் இங்கே வந்துள்ளார்"

"அவருக்கும் காட்சி கொடுப்பீர்களா சாமி?"

"நிச்சயமாக! அவனும் என் பக்தனல்லவா? போகட்டும், உனக்கு என்ன வேண்டும் கேள்!"

"சாமி, ஒரு விண்ணப்பம். உங்கள் அருளால் எனக்கு எல்லாச் செல்வமும் இருந்தாளுமிந்த் பழனிசாமியால்தான் எனக்குத் தீராத தொல்லை. நான் என்ன செய்தாலும் அதை அவரும் செய்து என் நிம்மதியைக் குலைக்கிறார். ஆகவே அவர் என்ன கேட்கப்போகிறார் என்று தெரிந்து கொண்டால்
- நான் எனக்கு வேண்டியதைச் சொல்வதற்குச் செளகரியமாக இருக்கும். தயவு செய்து இதைமட்டும் தாங்கள் நிறைவேற்ற வேண்டுகிறேன்"

"அப்படியே ஆகட்டும்" என்று இங்கே மறைந்து அங்கே காட்சி கொடுத்தார் இறைவன்

இறைவனின் காட்சி கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்ட பழனிசாமி சுதாகரித்துக் கொண்டு கேட்டார்.

"கருணைக் கடலே! என் வாழ்நாள் போட்டியாளனரான ராமசாமியைப் பார்த்தீர்களா, சாமி?"

"ஆமாம், பார்த்தேன். நான் அளித்த வரத்தை வாங்குவதற்கு யோசித்தார் . உனக்கு என்னகோரிக்கை என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல்தான் அவரிடம் மேலோங்கியிருக்கிறது.அதைத் தெரிந்து கொண்ட பிறகுதான், அவருக்கு வேண்டியதைச் சொல்வதாக இருக்கிறார் அவர்"

இதைக் கேட்டவுடன் பழனிசாமிக்குக் கோபமாக வந்தாலும் அதை வெளிப்படுத்தாமலும், அந்த ராமசாமிக்கு அதிச்சியைக் கொடுக்கும் விதமாக தன்னுடைய கோரிக்கை இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், மின்னலாக யோசித்தவர் உடனே சொன்னார்.

"சாமி அவர் என்ன வேண்டுமென்றாலும் கேட்கட்டும். எனக்கு அதைப் போல இரண்டு மடங்கு வேண்டும். அப்போதுதான் அவர் என்னைப் புரிந்து கொள்வார். ஆகவே அவருக்கு நீங்கள் கொடுப்பது எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்கவேண்டும். அதைத் தந்தருளுங்கள் சாமி"

"தந்தேன்!" என்று சொன்ன சிவனார், இங்கே மறைந்து அங்கே மீண்டும் காட்சி கொடுத்து, நடந்ததைச் சுருக்கமாகச் சொல்ல, வந்ததே ராமசாமிக்கு ஆத்திரம். அதை வெளிப்படுத்தாமலும், பழனிசாமிக்குப் புத்தி புகட்டும் விதமாகவும் தனது கோரிக்கை இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவர் இப்படிச் சொன்னார்.

"அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனே, இந்த உலகத்தில், அதுவும் கலி முற்றிய நிலையில், இங்கே தினமும் நடக்கும் அக்கிரமங்களைக் காண எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே எனக்கு இரண்டு கண்கள் வேண்டாம். ஒன்று போதும். ஒன்றை எடுத்து விடுங்கள்"

"அப்படியே ஆகட்டும்!" என்று இறைவன் அறுதியிட்டுச் சொல்ல - ராமசாமிக்கு ஒரு கண்பார்வை போய்விட்டது.

இரண்டு மடங்கு என்று வரம் வாங்கி வைத்திருந்த பழனிசாமிக்கு, இரண்டு கண் பார்வையும் போய்விட்டது.

எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை - உனக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் என்று கிராமப்புறங்களில் ஒரு சொல்லடை இருக்கிறதே- அதற்கான கதை இதுதான்.
------------------------------------------------------------
ஆனால் இவர்கள் வாழ்க்கையில் அவ்விதம் நடக்கவில்லை. இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில், இறைவனின் அருட்பார்வையில் இருவரின் மனமும் ஒரே நொடியில் மாறி நல்வழியில் செயல்பட ஆரம்பித்தது.

இருவரும் ஒரே நேரத்தில் ”நாங்கள் இருவரும் மனம் ஒன்றி நெருங்கிய நண்பர்களாக இருந்து, எங்கள் ஊருக்கும், அங்கிருக்கும் மக்களுக்கும் பல தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். எங்கள் ஊரில் பெண்களுக்காக பெரிய கல்லூரி ஒன்றைக் கட்ட வேண்டும். எங்கள் ஊரில் உள்ள கோவில்களுக்கு திருப்பணி செய்ய வேண்டும். இலவச மருத்துவ  மனை கட்ட வேண்டும். அருள் புரிக ஆண்டவனே” என்று மனம் உருகி வேண்டிக் கொள்ள ஆண்டவனும் அருள்பாலித்துவிட்டு  மறைந்தார்.

ஊரே அதிசயப்படும்படி, அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பல நற்பணிகளைத் தொடர்ந்து செய்தார்கள்.

இறைவனின் கண் பார்வை பட்டால் மனித மனதில் உள்ள தீய எண்ணங்கள் எல்லாம் மறைந்து விடும் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
=============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. வணக்கம் குருவே,
    ஒரு வித்தியாசமான கதை

    ReplyDelete
  2. simple proverb nicely exlained. quite interesing

    ReplyDelete
  3. மனம் பித்தானாலும் முருகனருளால் முத்தாவேன் நான்..
    என்று பாடிய பாடல்தான் நினைவிற்கு வருகின்றது.

    ReplyDelete
  4. //////Blogger Sinavar said...
    Why my posting is not displayed?//////

    தெரியலையே சாமி!!!!

    ReplyDelete
  5. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    ஒரு வித்தியாசமான கதை//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  6. //////Blogger kmr.krishnan said...
    simple proverb nicely exlained. quite interesing///////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  7. //////Blogger Sabarinaathan said...
    மனம் பித்தானாலும் முருகனருளால் முத்தாவேன் நான்..
    என்று பாடிய பாடல்தான் நினைவிற்கு வருகின்றது.//////

    முருகனருள் முன்னிற்கும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com