மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.2.18

short Story: சிறுகதை: பங்குதாரர்


short Story: சிறுகதை: பங்குதாரர்

சென்ற மாதம் மாத இதழ் ஒன்றில் அடியவன் எழுதி,  பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன். அனைவரையும் படிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
பங்குதாரர்

சொக்கலிங்க அண்ணனுக்கு பழநி தண்டாயுதபாணி மேல் அளவில்லாத பக்தி உண்டு. அதற்குக் காரணம், அவர் இளைஞனாக இருந்த காலத்தில் பழநிக்குப் பாதயாத்திரை செல்வது வழக்கம். அவ்வாறு செல்கையில் மூன்றாம் ஆண்டு நடைப் பயணத்தின்போதுதான் மீனாட்சியைச் சந்திக்க நேர்ந்தது.

அவர் பயணமாகச் சென்ற குழுவில்தான் அவளும், அவளுடைய தாயாரும், மற்றும் இரண்டு உறவினர்களும் ஒன்றாக வந்தார்கள். மருதுப் பட்டி தோப்பில் துளிர் விட்ட நட்பு, நத்தம், சானார்பட்டி, கோபால்பட்டி, திண்டுக்கல், செம்மடைப்பட்டி, குழந்தை வேலன் சந்நதி, பழநி என்று தைப்பூச நன்னாள்வரை தொடர்ந்தது.

இவர் விழுந்து, விழுந்து அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பணிவிடைகள் செய்ய அவர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

எப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பார். தோற்றத்தில் அந்தக் காலத்து அன்னக்கிளி திரைப்பட நாயகன் சிவகுமார் போல இருப்பார். மீனாட்சியும் உயர்ந்த மனிதன் திரைப் படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்த நாயகி பாரதியைப் போலவே இருப்பார்.

”என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி”

என்று பாடாமலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது, அந்தக் காதல் அடுத்து வந்த வைகாசி மாதத்தில், ஒரு வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணத்தில் முடிந்தது.

அப்போது சொக்கலிங்கம் அண்ணனுக்கு இருபத்தைந்து வயது. மீனாட்சிக்கு இருபத்தோரு வயது.

நல்ல மனையாளை அடையாளம் காட்டியதோடு, கைபிடிக்கவும் வழி செய்த, பழனியாண்டவர் மேல் அவருக்கு மேலும் தீராத பக்தி  உண்டானது.

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகத்தில் பட்டம் பெற்றிருந்த சொக்கலிங்கம் அண்ணனை அவருடைய தந்தையார், இரும்பு வணிகம் செய்து கொண்டிருந்த தன்னுடைய நண்பர் ஒருவரின் கடையில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தார்.  நான்கு ஆண்டுகள் அங்கே கடுமையாக உழைத்து, வியாபாரத்தில் உள்ள நெளிவு சுழிவுகளை எல்லாம் நன்கு கற்றுத் தேறியிருந்தார் நமது நாயகன்.

திருமணம் ஆன கையோடு, அவருடைய தந்தையார் பத்து லட்ச ரூபாய் முதலீட்டில் தனியாகக் கடை ஒன்றையும் வைத்துக் கொடுத்தார். கோவை என்.ஹெச் ரோட்டில் கடை. அருகில் இருந்த சந்தில் கிட்டங்கி. வியாபாரம் துவக்கத்தில் இருந்தே சூடு பிடித்து வளரத் துவங்கியது.

பழனியாண்டவர் மேல் இருந்த அதீத பக்தியால் தன் கடைக்கு பழநியப்பா ஸ்டீல்ஸ் என்ற பெயரையும் சூட்டியிருந்தார் சொக்கலிங்கம் அண்ணன். அத்துடன் பழனியாண்டவரையும் கூட்டாக சேர்த்துக் கொண்டிருந்தார். ஆண்டவருக்கு லாபத்தில் 20 சதவிகிதம் பங்கு என்பது எழுதாத ஒப்பந்தம்!

ஒவ்வொரு ஆண்டும் கணக்கை முடித்தவுடன், பங்குதாரர் பழநியாண்டவருக்கு உள்ள பங்கை பணவோலை மூலம் பழநி கோவிலில் செலுத்திவிடுவார். அதுபோல ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பழநிக்குப் பாத யாத்திரையும் மேற்கொள்வார்.
தொடர்ந்து இருபது ஆண்டுகள் சென்று வந்தவர், அதற்குப் பிறகு உடல்நிலை காரணமாக பாதயாத்திரை செல்லாமல் தைப்பூச சமயத்தில் காரில் பழநிக்குச் சென்று பழநியில் மூன்று நாட்கள் தங்கி பழநியப்பனை தரிசனம் செய்துவிட்டு வருவார்.

தெளிந்த நீரோடைபோல வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

ஆசைக்கு பெண்ணொன்றும் ஆஸ்திக்கு ஆண் என்றும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார்.

ப்ரூக்பாண்ட் ரோட்டின் மையப் பகுதியில் இருந்து குருத்வாரா சங்கம் செல்லும் தெருவில் 20 செண்ட் இடம் ஒன்றை விலைக்குவாங்கி சொந்தமாகக் கட்டிடம் ஒன்றையும் கட்டி, அங்கே இருந்து நிர்வாகம் செய்தவாறு வியாபரத்தைத் தொடர்ந்தார், வியாபாரமும் சிறப்பாக நடைபெற்றது.

காலச் சக்கரம் சுழன்றதில் எல்லா மாற்றங்களும் நிகழ்ந்தன!

நல்லவை மட்டுமல்ல அல்லவை ஒன்றும் நடந்தது.

வியாபாரம் ஒன்றை மட்டுமே முனைப்போடு கவனித்து தனது ஆரோக்கியத்தைக் கவனிக்காமல் விட்டதால், வயதாகும்போது வரும் வியாதிகள் எல்லாம் ஒவ்வோன்றாக வந்து விட்டன. இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், முழங்கால் வலி என்று எல்லாம் வந்து உடம்பில் குடியேறிவிட்டன.

செட்டியாருக்கு மட்டுமல்ல, அவருடைய அன்பு மனைவிக்கும் அவை எல்லாம் வந்துவிட்டன. மருந்து மாத்திரைகளால் அவை கட்டுக்குள் இருந்தன.

அதுபற்றி யாராவது கேட்டால், சொக்கலிங்கம் அண்ணன் நகைச்சுவையாகச் சொல்வார்: “ கார் பெட்ரோலில் ஓடுகிறது: என் உடம்பு மருந்தில் ஓடுகிறது!”

சொக்கலிங்கம் அண்ணனுக்கும் அறுபது வயதாகிவிட்டது. சஷ்டியப்த பூர்த்தி சாந்தி பண்ணிக் கொள்ளவில்லை. அதற்காக வைத்திருந்த பணத்தில் ஊரில் ஏழ்மையில் உழன்ற இரண்டு நகரத்தார் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

அத்துடன் தனது ஊரில் சிவன்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் ஒன்றையும் கட்டிக் கொடுத்தார். அதன் நிர்வாகத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், வருகின்ற வருமானத்தையும் கோவில் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி மண்டபத்தை அவர்களிடமே கொடுத்துவிட்டார்

சொக்கலிங்கம் அண்ணனின் ஊர், நகரத்தார் ஊர்களில் பெரிய ஊராகும். பங்காளிகள், தாய பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று ஏராளமான தொடர்புகள். அத்துடன் நெடுநாட்களாக கோவையில் இருப்பதால் மற்ற ஊர் நகரத்தார்களிடமும் பழக்கம் அதிகம். 59வது, 60வது, 70வது சாந்திக் கல்யாணங்கள், திருமணங்கள் என்று சராசரியாக மாதம் பதினைந்து அழைப்புக்க்களுக்கு மேல் வரும். எல்லோரும் வீடு தேடி வந்து கூப்பிட்டுவிட்டுப் போவார்கள்.

போகாமல் இருக்க முடியுமா?

காரில்தான் போவார் என்றாலும் சிரமமாக இருந்தது. செட்டிநாட்டு ஊர்களுக்குப் போக ஆறு மணி நேரம், திரும்பிவர ஆறு மணி நேரம் என்று பயணம் சள்ளையாக இருந்தது

அதனால், சம்பாதித்து போதும். இருப்பதை வைத்துக் கொண்டு நிம்மதியாக இருப்போம் என்று தன் சொந்த ஊருக்கே வந்து விட்டார். வியாபாரத்தை மொத்தமாகத் தன் மகனிடமே கொடுத்து, பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்.  இவரிடம் சுமார் எட்டு ஆண்டு காலம் பணி செய்து பயின்ற அனுபவத்தால் அவனும் அதைச் சிறப்பாகப் பார்த்துக்கொண்டான்.

கதை இப்படியே சென்று கொண்டிருந்தால் என்ன சுவாரசியம் இருக்கும்? கதை என்றால் திருப்பங்கள், டிவிஸ்ட்டுகள், முடிச்சுகள்
என்று ஏதாவது ஒன்று வேண்டாமா?

சொக்கலிங்கம் செட்டியார் வாழ்க்கையிலும் முடிச்சு ஒன்று விழுந்தது. ஆண்டு தோறும் பங்குதாரார் பழணியாண்டவரின் பங்கை அவர் செலுத்தி வந்தது போல, அவர் மகன் ஒழுங்காக செலுத்தாமல் காலம் தாழ்த்தி செலுத்தத் துவங்கினான். இந்த ஆண்டு அதையும் அவன் செய்யாததால், பழநியாண்டவருக்கு உரிய பணம் போய்ச் சேரவில்லை,

அதை அறிந்தவுடன் அண்ணன் துடித்துப் போய் விட்டார்.

நெருங்கிய உறவுகளுடன் தர்க்கம் செய்யக்கூடாது, வாக்குவாதம் செய்யக்கூடாது - உறவுகளில் கீறல் விழுந்து விடும் என்பதால் அதை அவர் ஒரு போதும் செய்ய மாட்டார். மகனுடன் நேரடியாகப் பேசி காரணத்தை அறிந்து கொள்ள அவர் விரும்பவில்லை. ஆகவே தன் அன்பு மனைவியை அழைத்து விஷயத்தைச் சொல்லி விசாரிக்கச் சொன்னார். மேலும் பழநியாண்டவருக்கு ஒரு வாரத்திற்குள் பணம் போய்ச் சேர வேண்டும். அதற்கு நீதான் பொறுப்பு என்றும் சொல்லிவிட்டார்.

ஆச்சி அவர்களும் அவரைச் சமாதானப் படுத்தி, நான் ஏற்பாடு செய்கிறேன். கவலைப் படாதீர்கள் என்று சொல்லி விட்டு ஊரிலிருந்து தங்களுடைய காரில் புறப்பட்டு கோவைக்குச் சென்றார்கள்.

என்ன நடந்தது? பணம் ஏன் போகவில்லை. ஆச்சி சொன்னபிறகாவது போய்ச் சேர்ந்ததா?

வாருங்கள், அதைத் தெரிந்து கொள்வோம்!

                 ****************************************************************

மீனாட்சி ஆச்சி கோவைக்கு வந்ததும் மகன் சுப்பிரமணியனை அழைத்து உட்காரவைத்து சரமாரியாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

      “மணி, சென்ற நிதியாண்டுக் கணக்கை முடித்து வருமான  வரியை எல்லாம் கட்டிவிட்டாயா?”

      “மார்ச் முபத்தொன்றாம் தேதி அட்வான்ஸ் டாக்ஸ் கட்டிய போதே அதெல்லாம் முடிந்துவிட்டது ஆத்தா! பாக்கி ஒன்றும் இல்லை”

      “நிகர லாபம் எவ்வளவு?”

      “ஐம்பது லட்ச ரூபாய். ஆடிட்டட் பேலன்ஸ் ஷீட்டை அப்பச்சிக்கு அனுப்பியிருக்கிறேனே ஆத்தா”

      “அதை நான் பார்க்கவில்லை! பழநி கோவிலுக்கு நாம் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்? அதை அனுப்பி விட்டாயா?”

      “பத்து லட்சம் அனுப்ப வேண்டும். அதில் ஒரு சின்ன மாற்றம். அந்தப் பணத்தை வேறு சில காரியங்களுக்கு தர்மமாகக் கொடுத்துவிட்டேன். பழநி கோவிலுக்கு அடுத்த ஆண்டுதான் பணம் அனுப்ப முடியும்”

      “என்ன காரியங்களுக்குக் கொடுத்தாய்?”

      “என் பெரிய மைத்துனன் மகன் அமெரிக்காவிற்கு எம்.எஸ் படிக்கப் போயிருக்கிறான். அவனை அனுப்பும் சமயத்தில் பணம் பற்ற வில்லை என்றார். அந்தப் பையனின் கல்விக்கு உதவுவதற்காக அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.”

      “உறவுகளுக்கு உதவுவது உதவிக் கணக்கில்தான் வரும். தர்மக் கணக்கில் எப்படி வரும்?’

      “இப்போது அவன் படிப்பதற்குப் பணம் கொடுத்தேன். அதைக் கல்விநிதி என்று வைத்துக் கொள்ளலாம் அல்லவா? கல்விக்கு உதவுவது தர்மமாகாதா?”

      “ஆகாது. முன்பின் தெரியாதவர்களுக்குக் கொடுப்பதுதான் தர்மக் கணக்கில் வரும். நீ கொடுத்துள்ள பணம் வராது. வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் 40 சதவிகித்தை நீ எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறோமே. அந்தப் பணம் அதாவது இருபது லட்ச ரூபாய் என்ன ஆயிற்று? அந்தப் பணத்தில் நீ அந்தப் பையனுக்குக் கொடுத்திருக்கலாமே?”

      “பாலக்காட்டில் பழைய இரும்பை உருக்கி கட்டுமான பணிகளுக்கான கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று விலைக்கு வருகிறது. என் நண்பன் ஒருவனுடன் கூட்டாகச் சேர்ந்து அதை வாங்கி நடத்தலாம் என்று உள்ளோம். என் பங்குப் பணமாக ஐம்பது லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். அதற்காக என் இருப்பை அப்படியே வைத்திருக்கிறேன்.”

      “கொள்ளைக்குப் போனாலும் போகலாம் கூட்டுத் தொழிலுக்குப் போகக்கூடாது என்று எங்கள் அப்பச்சி கூறுவார். புதுத் தொழிலெல்லாம் வேண்டாம். கையில் இருக்கிற இந்தத் தொழிலையே நீ அக்கறையுடன் செய்தால் போதும். பாலக்காட்டில் தொழிற்சாலை ஆரம்பித்தால் அதை யார் பார்த்துக் கொள்வது?”

       “என் நண்பன் பார்த்துக் கொள்வான். நானும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் அங்கே சென்று நடப்பைப் பார்த்துவிட்டுத் திரும்பலாம் என்று உள்ளேன்”

      “அதெல்லாம் நமக்கு சாத்தியப்படாது. ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளை ஓட்டிச் செல்ல முடியாது. ஆகவே அந்த நினைப்பை விட்டுவிடு. இதையெல்லாம் உன் அப்பச்சியிடம் ஏன் சொல்லவில்லை?

      “போனில் சொன்னால் சத்தம் போடுவார். டென்சனாகி விடுவார். ஆகவே நேரில் சந்திக்கும்போது சொல்லலாம் என்றுள்ளேன்”

       “நீ ஒன்றையும் சொல்ல வேண்டாம். சொன்னால் அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படுத்து விடுவார். நீ அதைச் செய்யாமல் இரு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியுள்ளது. பழனியாண்டவரைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

      “அப்பச்சி அடிக்கடி சொல்வதுபோல அவர் நம் குலதெய்வம். நம்மைக் காக்கும் குலதெய்வம்”

       “அதைவிட மேலானது ஒன்று இருக்கிறது. அவர் நம் கடைக்கு, நம் வியாபாரத்திற்குப் பங்குதாரர். அது தெரியுமல்லவா உனக்கு?”

       “தெரியும்”

       “பங்குதாரரின் பங்கை அவரிடம் கொடுப்பதைவிட்டு விட்டு நீ எப்படி உன் நோக்கத்திற்கு செலவு செய்யலாம். அவர் ஸ்லீப்பிங் பார்ட்னர். நேரில் வந்து கேட்க மாட்டார் என்ற நினைப்பா?”

        “--------------”

       “பழனியாண்டவர் பங்குதாரராக இருப்பதனால்தான் இத்தனை ஆண்டுகளாக வியாபாரம் நல்ல முறையில் நடந்திருக்கிறது. நஷ்டமே வந்ததில்லை. கொடுத்த சரக்குகளுக்கு வராத பாக்கி என்று எதுவும் இல்லை.  நாமும் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம். நம் வாழ்க்கையும் செழிப்பாக இருக்கிறது. ஆகவே அவரை ஏமாற்ற நினைப்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதைப் போன்றது. அதை மட்டும் செய்யாதே. செய்தால் உருப்படாமல் போய் விடுவோம். அதை மனதில் வை.

ஆத்தாளின் இந்த சொற்கள் அனைத்தும் சுப்பிரமணியனை செவிட்டில் அறைவதைப் போன்று இருந்தது.

அவன் கலங்கிப் போய் விட்டான். கண்களில் நீர் கோர்த்துக் கொண்டுவிட்டது

      “ஆத்தா என்னை மன்னித்துவிடுங்கள். என் தவறை நான் உணர்ந்துவிட்டேன். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்.”

      “பங்குதாரருக்கு உரிய பங்கிற்கு பண ஓலை ஒன்றை எடுத்துக் கொடு. நான் ஊருக்குக் கிளம்புகிறேன். உன் அப்பச்சி அங்கே தனியாக இருப்பார். போகிறபோது தாராபுரம் வழியாகப் போகாமல் பழனி வழியாகச் சென்று கோவில் நிர்வாகத்தினரிடம் பண ஓலையைச் சேர்த்துவிட்டு, பழநியாண்டவரையும் தரிசித்து விட்டு நான் ஊருக்குப் போய்ச் சேருகிறேன்.

அடுத்த நாள் காலை ஆச்சி தான் ஊரிலிருந்து வந்த காரிலேயே திரும்பிச் சென்று விட்டார்கள்.

சுப்பிரமணியன் தான் செய்த தவறுக்குப் பிராயச் சித்தமாக பத்து லட்சத்திற்குப் பதிலாக தன் பணத்தையும் சேர்த்து பதினைந்து லட்சத்திற்கு பண ஓலை எடுத்து வந்திருந்தான். தன் தாயாரிடமும் அதைக் கொடுத்துவிட்டான்

அதைப் பார்த்தவுடன் ஆச்சியின் கண்கள் பனித்து விட்டன!

                           *******************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

 1. Good evening sir very excellent story,im also a devotie of lord palaniyappan but in my life he is still waiting, what was the reason i don't know, this i my karma va,he has the power to change my bad karma?

  ReplyDelete
 2. வணக்கம் குருவே!
  சிறுகதையை சிறப்பாகத் தொகுத்துள்ளீர்கள்!
  நேர்மை, நாணயம் மற்றும் இறைபக்தி இவையனைத்தையும்
  ஒருங்கே சேர்த்து, மனிதனை மனிதனாக்கும் மாண்பினை இணைத்து,மிக அழகாகப் பிண்ணித்
  தொகுக்கும் தங்களின் கைத்திறனுக்கு எனது ஆயிரம்
  கைதட்டல்கள்,ஐயா!

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா,அற்புதம்.மன மாற்றத்திற்க்கு இறைவனே ஏதும் திருவிளையாடல் நடத்துவது போல் புனைந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி.

  ReplyDelete
 4. //////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Good evening sir very excellent story,im also a devotie of lord palaniyappan but in my life he is still waiting, what was the reason i don't know, this i my karma va,he has the power to change my bad karma?////

  மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். அவர் உதவிக்கு வந்தால் எதுதான் நடக்காது?

  ReplyDelete

 5. ////Blogger kmr.krishnan said...
  Very nice Story, Sir./////

  உங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

  ReplyDelete
 6. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  சிறுகதையை சிறப்பாகத் தொகுத்துள்ளீர்கள்!
  நேர்மை, நாணயம் மற்றும் இறைபக்தி இவையனைத்தையும்
  ஒருங்கே சேர்த்து, மனிதனை மனிதனாக்கும் மாண்பினை இணைத்து,மிக அழகாகப் பிண்ணித்
  தொகுக்கும் தங்களின் கைத்திறனுக்கு எனது ஆயிரம்
  கைதட்டல்கள்,ஐயா!/////

  உங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!!!!

  ReplyDelete
 7. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,அற்புதம்.மன மாற்றத்திற்க்கு இறைவனே ஏதும் திருவிளையாடல் நடத்துவது போல் புனைந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி./////

  உங்களின் பரிந்துரைக்கு நன்றி! கதை யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்யவில்லை!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com