ரங்கநாயகித் தாயார், திருவரங்கம்
Short Story: சிறுகதை: ரங்கநாயகி
அடியேன் எழுதி, சென்ற மாதம், மாத இதழ் ஒன்றில் வெளிவந்து,
பலரது பாராட்டையும் பெற்ற சிறுகதை ஒன்றை, உங்களுக்கு
அறியத்தரும்முகமாகப் பதிவில் ஏற்றியுள்ளேன். அனைவரும்
படித்து மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
சிறுகதை: ரங்கநாயகி
வேலை தேடி நேர்காணலுக்கு வந்த இளைஞனைப் பார்த்தவுடன், சிவநேசன் செட்டியாருக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.
ஆறடி உயரம். களையான முகம். அத்துடன் பட்டையாக நெற்றிக்கு
அழகு சேர்க்கும் விபூதி. வெள்ளை முழுக்கைச் சட்டை.காப்பித்தூள்
கலரில் முழுக் கால்சட்டை. சட்டையை உள்ளிட்டு இடையில்
பெல்ட். மொத்தத்தில் டக்கராக இருந்தான்.
வயது 20. சொந்த ஊர் அனகம்பாளையம். கருருக்கு அருகிலிருக்கும்
கிராமம். கல்வித்தகுதி ப்ளஸ் டூ. கணினிப் பயிற்சி மையம் ஒன்றில் ஆறுமாதப்பயிற்சி. அப்பா விவசாயி. வீட்டில் நான்கு பிள்ளைகளில்
மூத்தவன். வசதிக் குறைவினாலும், குடும்பச் சூழ்நிலையினாலும்
மேலே படிக்கவில்லை. பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒரு வருடம்
கேஷியராக வேலை பார்த்த அனுபவமும் உண்டு.
செட்டியார் வீட்டில் இருபது ஆண்டுகளாக ஓட்டுனர் வேலை பார்த்து
வரும் கந்தசாமிதான் அவனைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தான்.
வந்தவன் மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களைச் சொல்லி விட்டு, மற்றவற்றை செட்டியார் பார்த்துக் கொள்ளட்டும் என்று தனது
இடத்துக்குப் போய்விட்டான்.
செட்டியார் இரண்டு சக்கர வாகனம் ஓட்டத் தெரியுமா என்றார்.
தெரியும் என்றான். ஒட்டுனர் உரிமம் உள்ளது என்றான்.
தன்னுடைய மேஜைக்கு எதிரில் இருந்த நாற்காலிகள் ஒன்றில்
உட்காரச் சொன்னார். உட்கார்ந்தான். ஒரு முழுநீளத் தாளைக்
கொடுத்து, வேலைக்கான விண்ணப்பம் ஒன்றைத் தமிழில்
அல்லது ஆங்கிலத்தில் எழுதும்படி சொன்னார். எழுதிக் கொடுத்தான்.
வாங்கிப் பார்த்தார். கையெழுத்து சூப்பராக இருந்தது. எழுத்துக்கள்
முத்து முத்தாக கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருந்தது.
மேலும் ஒரு காகிதத்தைக் கொடுத்தவர், முதல் நாள் கணக்குச்
சிட்டையில் இருந்து பத்து வரிகளைப் படித்து, எழுதும்படி சொன்னார். அதையும் எழுதினான். வாங்கிப் பார்த்தார். எண்களை அதனதன்
வரிசை மாறாமல் அழகாக எழுதியிருந்தான்.
செட்டியார் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல், அவனுடைய
பெயரைக் கேட்டார்.
“பெருமாள்” என்றான்.
செட்டியாருக்குத் ‘திக்’ கென்றிருந்தது. பெருமாளா? நாள் ஒன்றிற்கு
குறைந்த அளவு பத்துத் தடவைகளாவது அவனைப் பெயர் சொல்லிக்
கூப்பிட வேண்டுமே? பெருமாள்...பெருமாள் என்று எப்படிக் கூப்பிடுவது?
செட்டியார் அதீதமான சிவபக்தர். சிவனாரைத் தவிர வேறு தெய்வங்களை வணங்காதவர். சென்ற முப்பது ஆண்டுகளாக திருவானைக் காவலில்
உறையும் ஜலகண்டேஸ்வரரை வணங்கி வருபவர். திருச்சியில் தான் இருக்கும் நாட்களில் எல்லாம். தவறாமல் திருவானைக்காவல் சென்று சிவனை வணங்கிவிட்டு வருபவர். பிள்ளையார் சுழி சிவமயத்திற்கு, உலகமெல்லாம் சிவமயம்.அதைத்தான் நாம் உனா சிவமயம் என்று எழுதுகிறோம் என்று விளக்கமும் சொல்லி வருபவர்.
தன்னுடைய உதவியாளனாக வேலைக்குச் சேர இருக்கும் இளைஞனை
அவர் எப்படி நாள் முழுக்கப் பெருமாள்...பெருமாள் என்று கூப்பிடுவார்?
செட்டியார் மெல்லிய குரலில் அவனிடம் சொன்னார்: “தம்பி எனக்கு
எல்லாம் பிடித்திருக்கிறது. உன் பெயரைத் தவிர. உன் பெயரை மாற்றி வைத்துக் கொள்ள முடியுமா?”
அவன் பதில் சொன்னான்: “அய்யா, அதை நான் செய்ய முடியாது.
ஊருக்குச் சென்று, என்னுடைய பெற்றோர்களிடம் சொல்லி, எங்கள் குல தெய்வக்கோவிலில் கட்டணம் செலுத்தி மாற்றிக் கொள்ள வேண்டும்.
நீங்கள் நிச்சயம் வேலை தருவதாக இருந்தால், இரண்டே நாட்களில்
அதைச் செய்து கொண்டு வந்துவிடுவேன்.”
“உனக்கு வேலை உண்டு. எங்கள் பங்களாவின் பின்புறம் உள்ள பணியாட்களுக்கான குடியிருப்பில் உனக்குத் தனி அறை ஒன்றைத் தருகிறேன். நீ இங்கேயே தங்கிக் கொள்ளலாம். வீட்டில் சமையல்காரர் இருக்கிறார். இரண்டு பணியாட்கள் இங்கேதான் சாப்பிடுகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் சாப்பிடலாம். தினமும் எட்டு மணி
நேரம்தான் வேலை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. மாதம் ஐயாயிரம்
ரூபாய் சம்பளம். முதல் மூன்று மாதங்கள் வேலை செய். பிடித்திருந்தால் தொடரலாம். இல்லை என்றால் நின்று கொள்ளலாம். என்ன சொல்கிறாய்?”
“நல்லது அய்யா. நான் ஊருக்குப் போய் நீங்கள் சொன்னபடி பெயரை மாற்றிக்கொண்டு, இரண்டு நாட்களில் வந்து விடுகிறேன்.”
ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டினார். வாங்கிக்
கொண்டவன். அவரை வணங்கி விட்டு, புறப்பட்டுச் சென்றான்.
+++++++++++++++++++++++++++++++++++++++
இங்கே ஒரு முக்கியமான செய்தி ஒன்றைச் சொல்ல வேண்டும்.
சிவநேசன் செட்டியாருக்கு இப்போது 55 வயது. நாற்பது ஆண்டுகளுக்கு
முன்பு, அவர் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் வீட்டிற்குப் பாடம்
சொல்லிக் கொடுக்க வந்த டியூஷன் வாத்தியார் பாஷ்யம் ஐயங்கார் வைஷ்ணவ பக்தர். திருமாலை மட்டுமே முழுமுதற் கடவுளாக
வழிபடும் பக்தர். பெரியாழ்வாரின் பாசுரம் ஒன்றைச் சொல்லி
விட்டுத்தான் பாடத்தைத் துவங்குவார்.
”வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்
சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்
கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்.”
என்ற பாடலைப் பாடிவிட்டுத்தான் பாடங்களைச் சொல்லிக்
கொடுக்கத் துவங்குவார். சுமார் இரண்டு ஆண்டுகாலம் அந்தப்
பாடலைக் கேட்டுக்கேட்டு, சின்ன வயதுச் செட்டியாருக்கு
பளிச் சென்று மனதில் ஒன்று தோன்றியது.
நகரத்தார்கள் நாம் சிவ பக்தர்கள். சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றுபவர்கள்.பல சிவன் கோயில்களுக்குத்
திருப்பணி செய்தவர்கள். நாம் சிவனை அல்லவா வணங்க
வேண்டும். எதற்காகப் பெருமாளைப் போய் வணங்க வேண்டும்
என்று நினைத்தவர். சிவபக்தராகமாறிவிட்டார். நாளடைவில்
அது தீவிரம் அடைந்துவிட்டது.
சிவநேசன் செட்டியார் பெரிய சிவபக்தரானது அப்படித்தான். மற்றொரு முக்கியமான செய்தி செட்டியார் பெரிய செல்வந்தர் வீட்டுப் பிள்ளை.
இப்போது முறையாகப் பொருள் ஈட்டி அதீத செல்வந்தரானவர். தான தர்மங்கள் செய்யக்கூடியவர்.
திருச்சி கன்டோண்மென்ட் பகுதி, வில்லியம்ஸ் ரோட்டில் அவருடைய பங்களா இருக்கிறது. குண்டு மல்லிகை, அரளி, செம்பருத்தி,
நந்தியாவட்டை போன்ற மலர்ச் செடிகள்கள் அனைத்தும் அவர்
வீட்டுத் தோட்டத்தில் உண்டு. மா, பலா, வாழை, கொய்யா, நெல்லி
மரங்களும் உண்டு. அத்துடன் நாகலிங்கப் பூ மரம் ஒன்றையும்
ஆசையாக வளர்த்து வைத்திருக்கிறார். வீட்டில் எல்லா வேலை
களுக்கும் வேலை ஆட்கள் இருக்கிறார்கள்.
தோட்டக்காரர் மலர்களை எல்லாம் கொய்து ஒரு பெரிய பூக்கூடையில் சேர்த்து, காலை 6 மணிக்குத் தயாராக வைத்திருப்பார். செட்டியார் காலை 5
மணிக்கெல்லாம் அலாரம் இல்லாமல் தன்னிச்சையாக எழுந்துவிடுவார். காலைக் கடன்களை எல்லாம் முடித்துத் தயாராகி விடுவார். திருவானைக்
காவலுக்குச் சென்று ஜலகண்டேஸ்வரரை வணங்கி விட்டு வருவதுதான் அவருடைய முதல் வேலை.
வீட்டில் 3 கார்கள் இருந்தன. இரண்டு ஓட்டுனர்கள். இவருக்குத் தனிக்கார். ஆச்சிக்கு அதாவது அவருடைய மனைவி மீனாட்சி ஆச்சிக்குத் தனிக்கார். மூத்த மகனுக்கு ஒரு கார். இளையவனுக்கு, அவன் விருப்பப்படி பல்சர் மோட்டார் சைக்கிள்.
மதிய உணவு சாப்பிடும்போது, காலையில் நடந்த சம்பவத்தை ஆச்சியிடம், அதாவது தன் மனைவி மீனாட்சி ஆச்சியிடம் விளக்கமாகச் சொன்னார்.
ஆச்சிக்கு செட்டியாரின் கொள்கைகளும். பிடிவாதமும் நன்றாகத் தெரியும். அதனால் ஒன்றும் சொல்லாமல், புன்னகை மட்டும் செய்தார். அவர்களின்
வாழ்க்கை ஒரு சிறு உரசல்கூட இல்லாமல் ஓடுவதற்கு ஆச்சியின் இந்தப் புன்னகை பூக்கும் தங்கமான மனசுதான் காரணம்.
++++++++++++++++++++++++++++++++
பெயரை மாற்றிவரச் சென்ற இளைஞன் மூன்றாம் நாள் காலையில் திரும்பி விட்டான்.
செட்டியார் அவனிடம் கேட்டார்:
“இப்போது என்ன பெயர்?”
அவன் கணிரென்ற குரலில் சொன்னான்.
”பெத்தபெருமாள்”
செட்டியாருக்குத் தூக்கிவாரிப் போட்டது. டென்சனாகவும் ஆகிவிட்டது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், பொறுமையாகச் சொன்னார்.
“போர்ட்டிகோவில் உள்ள நாற்காலியில் உட்கார் தம்பி. பலகாரம் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்”
பிள்ளையார் பிடிக்கபோய் குரங்கான கதைபோல ஆகிவிட்டதே. பெருமாள் இப்போது பெத்தபெருமாளாகி விட்டாரே. அதாவது பெரிய பெருமாளாகி விட்டாரே!
அதே ஹாலில் அமர்ந்து நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆச்சி, அந்த இளைஞன் சென்றவுடன், செட்டியாரின் அருகில் வந்து மெல்லிய
குரலில் கேட்டார்:
“இப்போது என்ன செய்வதாக உத்தேசம்?”
"அதுதான் புரியவில்லை. யோசித்து முடிவெடுக்க வேண்டும்”
“இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? நீங்கள் அவனிடம் இன்ன மாதிரி பெயர் வைத்துக்கொண்டு வாவென்று சொல்லியனுப்பினீர்களா? இல்லையே! தவறு உங்கள் மேல்தான் உள்ளது. இப்போது வேலை கிடையாது என்று சொல்லி, அவனைத் திருப்பி அனுப்புனீர்கள் என்றால், அவன் மனம் என்ன பாடுபடும்? உங்களுக்காகப் பெயரை மாற்றி அனுப்பி வைத்த அவனுடைய பெற்றோர்களின் மனது என்ன பாடுபடும்? அதனால் பேசாமல் அவனை வேலையில் சேர்த்துக் கொள்ளுங்கள். ரங்கநாயகி என்றிருந்த என் பெயரை நம் திருமணத்தின்போது மீனாட்சி என்று அடாவடியாக மாற்றி வைக்கச் சொன்னீர்களே, உங்கள் பேச்சைக் கேட்டு மாற்றி வைத்தபோது என் தந்தையின் மனது என்ன பாடுபட்டது தெரியுமா?”
“உன் தந்தையின் மனம் வருத்தப்பட்டதா, என்ன சொல்கிறாய்?”
“எனக்கு ரங்கநாயகி என்று எதற்காகப் பெயர் வைத்தார்கள் தெரியுமா? எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?”
”சரி இப்போது சொல்!”
“எங்கள் அப்பச்சிக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததாம். அப்போது அவர்கள் ஸ்ரீரங்கத்தில் குடியிருந்தார் களாம். எங்கள் அப்பச்சி தினமும் ரங்கநாயகித் தாயார் சன்னதில் ஒரு மணி நேரம் அமர்ந்து மனம் உருகப் பிரார்த்தனை செய்துவிட்டு வருவாராம். ஆண் குழந்தை பிறந்தால் ரங்கநாதன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் ரங்கநாயகி என்றும் பெயர் சூட்டுகிறேன் என்று வேண்டிக் கொண்டாராம். நான்தான் முதலில் பிறந்தேன். அடுத்துத்தான் என் தம்பி ரங்கநாதன். நான் பிறந்த போது எங்கள் அப்பச்சி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லையாம். ரங்கநாயகித் தாயார் வந்து என் வீட்டில் பிறந்திருக்கிறாள் என்று வீட்டுக்கு வருகிறவர்களிடம் எல்லாம் சொல்லி மகிழ்வாராம்."
"ஓஹோ”
“நம் திருமணப் பேச்சின்போது, உங்கள் அப்பச்சி, என் பையனுக்குப் பெண்ணை மிகவும் பிடித்திருக்கிறது. அவன் இந்த வயசிலேயே பெரிய சிவபக்தன், அதனால் பெண்ணின் பெயரை மீனாட்சி என்று மாற்றி வைக்க வேண்டும் என்கிறான், சம்மதமா? என்று எங்கள் பெரிய அம்மான் மூலம் கேட்டு அனுப்பினார்கள். அதற்கு எங்கள் அப்பச்சி, திருமணமாகிவிட்டால், அவள் உங்கள் வீட்டுப் பெண், அதனால் நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சம்மதிக்கவில்லையா?”
“சம்மதித்தார். ஆனாலும் மனிதர், உங்கள் வீட்டுத் திருமணப் பத்திரிக்கையில் உன் பெயரை, ரங்கநாயகி என்ற மீனாட்சி என்றுதானே போட்டார்”
“அது மட்டும் உங்களுக்குத் தெரியும். அதற்குப் பிறகு எங்கள் அப்பச்சி எத்தனை வருத்தப்பட்டார்கள் தெரியுமா? ரங்கநாயகி என்ற அழகான
பெயர், அவளை எனக்கு வழங்கிய அந்த ரங்கநாயகித் தாயாரின் பெயர் அல்லவா? அதை மாற்றச் சொல்கிறார்களே என்று நம் திருமண நாள்
வரை வருத்தம்மேலிட இருந்தார்”
”அதைத் தெரிந்துதானே, இன்றுவரை நீ ஸ்ரீரங்கம் போய் வருவதற்கு
நான் எந்தக் குறையும் வைக்கவில்லையே?”
“ஆனால் நீங்கள் ஒருதடவை கூட என்னுடன் வந்ததில்லையே?
உங்களுக்கு ஏன் இத்தனை தெய்வ நிந்தனை? கண்ணதாசன் எத்தனை
பெரிய கவிஞர்? அவர் வெள்ளிமலை மன்னவா, வேதம் நீ அல்லவா
என்று சிவனுக்கும் பாட்டு எழுதினார். கேட்டதும் கொடுப்பவனே
கிருஷ்ணா, கிருஷ்ணா, கீதையின் நாயகனே என்று பெருமாளுக்கும்
பாட்டு எழுதினார். எல்லாத் தெய்வங்களும் ஒன்றுதான் என்று
சொல்வார். அந்த சிந்தனை, அந்தப் பெருந்தன்மை உங்களுக்கு ஏன்
இல்லை?”
“...........................”
“இன்னொன்று சொல்லட்டுமா? பெண் குழந்தைகள் என்றால்
எவ்வளவு ஆசைப்படுவீர்கள்? எப்படிக் கொஞ்சுவீர்கள்? உங்கள்
குடும்பத்தில் இதுவரை யாருக்காவது பெண் குழந்தை பிறந்திருக்
கிறதா? உங்கள் அய்யாவிற்கு ஒரே ஒரு மகன்தான். உங்கள்
அப்பச்சிக்கும் நீங்கள் ஒரே ஒரு பிள்ளைதான்.
உங்களுக்கும் இரண்டு ஆண் மக்கள்தான். பெண் தெய்வங்களை வணங்கினால்தான் வீட்டில் மகராசி பிறப்பாள். லெட்சுமி பிறப்பாள்.”
ஆச்சியின் சொற்கள் செட்டியாருக்குச் செவிட்டில் அறைந்ததைப் போன்றிருந்தது.
ஒன்றும் சொல்லாமல் பத்து நிமிடம் மெளனமாக இருந்தார். அவர் சிந்திக்கட்டும் என்று ஆச்சியும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து
சென்று விட்டார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++
அன்று மாலை.
ஆச்சி அவர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்வதற்காகத் தயாராகி,
புறப்பட எத்தனிக்கும் போது, “ரங்கநாயகி” என்ற குரல் கேட்டுத் திரும்பிப்
பார்த்தார்கள். அழைத்தது சிவநேசன் செட்டியார்தான்.
”இனிமேல் உன்னை நான் அப்படித்தான் அழைப்பதாக உள்ளேன்”
“ஆச்சரியமாக உள்ளது.”
“நானும் உன்னுடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகிறேன். உன்னுடைய காரிலேயே போய்விடலாம்.”
“இது அதிசயமாக உள்ளது.உங்களுடைய இந்தத் திடீர் மன மாற்றத்திற்கு என்ன காரணம்?”
“எனக்கு ஒரு பேத்தி வேண்டும். உன்னைப் போல் அழகு சமர்த்து
எல்லாம் நிறைந்த பேத்தி வேண்டும்.” என்று சொல்லிக்கொண்டே
வந்தவர்,ஆச்சியின் காரில், பின் இருக்கையில் ஆச்சியுடன் ஏறிக்
கொண்டவர், அடுத்து ஒரு அதிசயத்தைச் செய்தார்.
“பெத்த பெருமாள், வா, கோவிலுக்குப் போய் வருவோம்” என்று
சொல்லி அன்று காலையில் வேலைக்குச் சேர்ந்த பெத்தபெருமாளையும்
ஏற்றிக்கொண்டார். அவனும் ஓடி வந்து காரின் முன் இருக்கையில் ஏறிக் கொண்டான்.
ஆச்சிக்கு அளவிடமுடியாத சந்தோஷம். ஆச்சியின் மனதை சந்தோஷமும், கண்களை நீரும் ஒரு சேர நிறைத்தன!
வண்டி பங்களாவை விட்டு அரங்கநாதர் கோவிலை நோக்கிச் சென்றது.
ஒரு பெண்ணின் உண்மையான, சத்தியமான வார்த்தைக்கு என்ன வலிமை என்பதை அடுத்து வந்த ஆண்டில் சிவநேசன் செட்டியார் அறிந்து
கொண்டார்.
**********************************************************
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
அருமையான கதை வாத்தியார் ஐயா!
ReplyDeleteஅந்த ரங்கனே உங்களை எழுத வச்சுருக்கான்!
/////Blogger துளசி கோபால் said...
ReplyDeleteஅருமையான கதை வாத்தியார் ஐயா!
அந்த ரங்கனே உங்களை எழுத வச்சுருக்கான்!//////
உண்மைதான் டீச்சரம்மா! உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு மிக்க நன்றி! எழுதுபவர்களுக்குப் பாராட்டு என்பது ஊக்க மருந்து. அடுத்த கதை எழுதுவதற்கு அது ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும்!
Arumaiyana kathai, athaivida Arumaiyana Nadai!
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...உண்மையில் சைவ சமய மக்களுக்கு மஹா விஷ்ணுதான் முதல் சிவனடியார் அவரது பெயரை சொல்வதில் தவறே இல்லை.. மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு ஞானமஹா நடராஜ பிரபுவின் திருநாட்டியத்தை மீண்டும் தனது இதய தாமரையில் நடனமாட கண்டுகளித்தவர். .ஆகவே அவருக்குதான் முதல் வணக்கம் .s.n.ganapathi.
ReplyDeleteவாத்தியார் ஐயா, நல்ல கதை...
ReplyDeleteபடிக்க மிக சுவாரசியம்மாகவும் நன்றாகவும் இருந்தது.
ReplyDeleteசிறுகதை மிக அருமை ஐயா. இயல்பான நடை. கதையுடன் நாமும் பயணித்த அனுபவம் கிடைத்தது !!!
ReplyDeleteகதை நல்லாத்தான் இருக்கு
ReplyDeleteகருத்தில் தான் வேறுபட்டிருக்கு
பெருமாளே அந்த சிவனின்
பக்தன் தானே..
அடியாரை வணங்குவது
அனைவருக்கும் பொது..
அடியவரை கடவுளாக்குவது தவறு
அந்த சிவனேசன் செட்டியார்
சொன்னதை தவறாக புரிந்து
சொல்லவந்த செய்தியை
வேறு மாதிரியாக காட்டியது
வேதநாயகனுக்கு எப்படியிருக்கும்?
அய்யா
ReplyDeleteகதை அருமையாக உள்ளது.என் விதியையும்,ரெங்கனையும் நினைத்துவிட்டு தூங்கினேன்.காலையில் அம்மா ரெங்கனாயகி வீடு தேடிவந்துவிட்டாள்.மிக்க நன்றி
அருமை வாத்தியாரைய்யா!எதையும்,யாருக்கும் சொல்லும் விதத்தில் சொன்னால் நல்லதும், நன்மையையும் கூடவே வரும்!
ReplyDeleteGood and excellent play write sir
ReplyDeleteGood Story Sir
ReplyDelete'பெருமாள் பெத்த பெருமாள் ஆன கதை'நாட்டார் வழகில் மரபாக வந்த ஒரு கதை.அதனை மைய்யமாக வைத்து ஜோடனை செய்து உங்கள் பாணியில் ஒரு
ReplyDeleteசிறப்பான கதையினைச் சொல்லிவிட்டீர்கள்.வழக்கம் போல் 'பாஸிடிவ் நோட்'டில் சுபமாக ஒரு நற்செய்தியையும் சொல்லி அற்புதமாக முடித்துள்ளீர்கள்.
'அரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதவன் வாயில் மண்ணு' என்பது நெடுநாளைய பழமொழி. கதை அதைத்தான் சொல்ல வருகிறது.
வீர சைவர்களைப்போலவே, வீர வைஷ்ணவர்களும் உண்டு.சொல்லப்போனால்
வைஷ்ணவர்களிலேயே அதிகமானோர் சிவன் கோவில் பக்கமே திரும்பக்கூட மாட்டார்கள்.
சுவாமி ஐயப்பன் அவதார மகிமை சிவ வைணவ பேதம் அறுக்கவே
உருவாக்கப்பட்டது.
ஸ்ரீ சங்கர மடங்கள் அத்வைத தத்வத்தைக் கடைப்பிடிப்பவை.
இப்பிரபஞ்சத்தில் இறைவனே யாண்டும் பூரணமாக நிரம்பியுள்ளார். அவரன்றி வேறு இரண்டாவது இல்லை என்பது 'அ+த்வைதம்(=இரண்டல்ல')
சிருங்கேரிஸ்ரீஸ்ரீ மகாசன்னிதானம் ஸ்ரீமுகம்(கடிதம்) எழுதும் போது "ஸ்ரீந்ருசிம்ம ஸ்மிரிதி'என்று கையெழுத்துக்கு பதில் எழுதுவார்கள்.அதாவது 'நரசிம்ம சுவாமியின் திருநாமத்தின் பேரால்' என்று பொருள் கொள்ளலாம்.
காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீமுகம் கொடுக்கும் போது 'ஸ்ரீநாராயண ஸ்மிரிதி'என்று எழுதுவார்கள்.
இந்து மதத்தில் இஷ்ட தெய்வம் (பெர்சனல் காட்) என்ற அடிநாதம் உண்டு.
ஒருவர் சிவன் கோவிலில்,வெளித் தோற்றத்திற்கு சிவனடியார் போலவே
விளங்கிக் கொண்டு, தொழும் போது சிவனில் பெருமாளைக் கண்டால், அவரை நாம் எவ்வாறு கண்டு பிடிக்க முடியும்?அல்லது தடுக்க முடியும்?
சில பெருமாள் கோவில்களில் வில்வ அர்ச்சனை உண்டு.சில சிவன் கோவில்களில் துளசி சேர்க்கப் படுகிறது.தாணுமாலயன், தத்தாத்ரேயர் போன்று சிவன், விஷ்ணு,பிரம்மா ஆகியோரின் கூட்டு உருவங்கள் பல கோவில்களில்
வழிபாட்டில் உள்ளன.
தீவிர சிவ/விஷ்ணு பகதர்களை அந்த அந்த தெய்வங்களே மன மாற்றம் செய்து அருளிய புராணக் கதைகள் ஏராளம்.
சிரஞ்சீவியான ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமி ஸ்ரீகிருஷ்ணரைக் காணப் போனாராம்.அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீராமராகத் தன்னை உருமாற்றிக் கொண்டாராம்.இது எதைக் குறிக்கிறது? பகவான் நாம் எப்படி அவரைக் காண நினைத்தலும் அப்படி அவர் தனது காட்சியை அளிப்பார்.
நன்றி ஐயா!
hai Sir!
ReplyDeleteDear sir,
ReplyDeletei am a new student.
ஐயா வணக்கம்
ReplyDeleteஐயா
ReplyDelete{ தாங்களுடைய அனைத்து பதிப்பையும் என்னுடைய அண்ணாச்சி ஒருவர் உள்ளார் அவருடைய முகவரிக்கு ( இந்தியா) அனுப்பி வைக்க வேண்டுகின்றேன். }
எட்டாம் இடம் பற்றிய குறிப்போ அல்லது புத்தகமோ இருந்தாலும் உடனே தேவை படுவதால் அனுப்பி வைக்க வேண்டுகின்றேன்.
தங்களுடைய வங்கி கணக்கு நம்பரை தந்தால் உடனே அனுப்பி வைக்கின்றேன்.
--
Thanks & Reg
Kannan Seetharaman
Qatar + 974 66762664
Excellent story line and script.
ReplyDelete///kmr.krishnan said..
ReplyDelete'அரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதவன் வாயில் மண்ணு' என்பது நெடுநாளைய பழமொழி///
இது தவறாக
இப்படி பொருள் கொள்ளப்படுகிறது
அரியும் சிவனும் ஒன்று என்பதல்ல
அதன் பொருள்...
அகம் பிரம்மாஸ்மி என்பதற்கு
அடுத்தவர் கொள்வது போல
பொருள் கொள்வது சரியல்ல..
பொருளின் உண்மையை புரிந்து
சொல்ல வேண்டும் என்பதை
சொல்லவும் வேண்டுமா
இலால்குடியாரே
இது வாதமல்ல
கண்டு கொள்ளுங்கள் இது
கருத்து பரிமாற்றமே
இனிய கதை.. அருமையான நடையழகு!.. மகிழ்ச்சி தரும் சொல்லாட்சி!.. வாழ்க நலம்..
ReplyDeleteஅருமையான கதை.உங்கள் எழுத்துக்கள் மனஆறுதல் தருபவை.
ReplyDeleteநன்றி.
/////Blogger Bala M said...
ReplyDeleteArumaiyana kathai, athaivida Arumaiyana Nadai!///////
எனது எழுத்து, ஆக்கம், நடை எல்லாம் பழநி அப்பனின் கொடை! நன்றி நண்பரே!
////Blogger hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...உண்மையில் சைவ சமய மக்களுக்கு மஹா விஷ்ணுதான் முதல் சிவனடியார் அவரது பெயரை சொல்வதில் தவறே இல்லை.. மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு ஞானமஹா நடராஜ பிரபுவின் திருநாட்டியத்தை மீண்டும் தனது இதய தாமரையில் நடனமாட கண்டுகளித்தவர். .ஆகவே அவருக்குதான் முதல் வணக்கம் .s.n.ganapathi.////
நல்லது. உங்களின் தகவலுக்கு நன்றி நண்பரே!
////Blogger S.Namasu said...
ReplyDeleteவாத்தியார் ஐயா, நல்ல கதை...////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger V.C.Arunchand said...
ReplyDeleteபடிக்க மிக சுவாரசியமாகவும் நன்றாகவும் இருந்தது.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger Sivachandran Balasubramaniam said...
ReplyDeleteசிறுகதை மிக அருமை ஐயா. இயல்பான நடை. கதையுடன் நாமும் பயணித்த அனுபவம் கிடைத்தது !!!/////
உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteகதை நல்லாத்தான் இருக்கு
கருத்தில் தான் வேறுபட்டிருக்கு
பெருமாளே அந்த சிவனின் பக்தன் தானே..
அடியாரை வணங்குவது
அனைவருக்கும் பொது..
அடியவரை கடவுளாக்குவது தவறு
அந்த சிவனேசன் செட்டியார்
சொன்னதை தவறாக புரிந்து
சொல்லவந்த செய்தியை
வேறு மாதிரியாக காட்டியது
வேதநாயகனுக்கு எப்படியிருக்கும்?////
சிவனேசன் செட்டியார் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்தான். அவர் சொன்னதை சரியாகப் புரிந்துதான் கதையை எழுதியிருக்கிறேன். நீங்கள் இடையில் நுழைந்து மேட்டரைக் குழப்பாமல் இருந்தால் போதும் வேப்பிலை சுவாமி!
////Blogger Kalai Rajan said...
ReplyDeleteஅய்யா
கதை அருமையாக உள்ளது.என் விதியையும்,ரெங்கனையும் நினைத்துவிட்டு தூங்கினேன்.காலையில் அம்மா ரெங்கனாயகி வீடு தேடிவந்துவிட்டாள்.மிக்க நன்றி////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger Subramaniam Yogarasa said...
ReplyDeleteஅருமை வாத்தியாரைய்யா!எதையும்,யாருக்கும் சொல்லும் விதத்தில் சொன்னால் நல்லதும், நன்மையையும் கூடவே வரும்!////
உண்மைதான். நன்றி யோகராசா!
////Blogger karthik shiv said...
ReplyDeleteGood and excellent play write sir////
உங்களின் மேன்மையான பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger karthik shiv said...
ReplyDeleteGood Story Sir////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
Blogger kmr.krishnan said...
ReplyDelete'பெருமாள் பெத்த பெருமாள் ஆன கதை'நாட்டார் வழகில் மரபாக வந்த ஒரு கதை.அதனை மைய்யமாக வைத்து ஜோடனை செய்து உங்கள் பாணியில் ஒரு
சிறப்பான கதையினைச் சொல்லிவிட்டீர்கள்.வழக்கம் போல் 'பாஸிடிவ் நோட்'டில் சுபமாக ஒரு நற்செய்தியையும் சொல்லி அற்புதமாக முடித்துள்ளீர்கள்.
'அரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதவன் வாயில் மண்ணு' என்பது நெடுநாளைய பழமொழி. கதை அதைத்தான் சொல்ல வருகிறது.
வீர சைவர்களைப்போலவே, வீர வைஷ்ணவர்களும் உண்டு.சொல்லப்போனால்
வைஷ்ணவர்களிலேயே அதிகமானோர் சிவன் கோவில் பக்கமே திரும்பக்கூட மாட்டார்கள்.
சுவாமி ஐயப்பன் அவதார மகிமை சிவ வைணவ பேதம் அறுக்கவே
உருவாக்கப்பட்டது.
ஸ்ரீ சங்கர மடங்கள் அத்வைத தத்வத்தைக் கடைப்பிடிப்பவை.
இப்பிரபஞ்சத்தில் இறைவனே யாண்டும் பூரணமாக நிரம்பியுள்ளார். அவரன்றி வேறு இரண்டாவது இல்லை என்பது 'அ+த்வைதம்(=இரண்டல்ல')
சிருங்கேரிஸ்ரீஸ்ரீ மகாசன்னிதானம் ஸ்ரீமுகம்(கடிதம்) எழுதும் போது "ஸ்ரீந்ருசிம்ம ஸ்மிரிதி'என்று கையெழுத்துக்கு பதில் எழுதுவார்கள்.அதாவது 'நரசிம்ம சுவாமியின் திருநாமத்தின் பேரால்' என்று பொருள் கொள்ளலாம்.
காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீமுகம் கொடுக்கும் போது 'ஸ்ரீநாராயண ஸ்மிரிதி'என்று எழுதுவார்கள்.
இந்து மதத்தில் இஷ்ட தெய்வம் (பெர்சனல் காட்) என்ற அடிநாதம் உண்டு.
ஒருவர் சிவன் கோவிலில்,வெளித் தோற்றத்திற்கு சிவனடியார் போலவே
விளங்கிக் கொண்டு, தொழும் போது சிவனில் பெருமாளைக் கண்டால், அவரை நாம் எவ்வாறு கண்டு பிடிக்க முடியும்?அல்லது தடுக்க முடியும்?
சில பெருமாள் கோவில்களில் வில்வ அர்ச்சனை உண்டு.சில சிவன் கோவில்களில் துளசி சேர்க்கப் படுகிறது.தாணுமாலயன், தத்தாத்ரேயர் போன்று சிவன், விஷ்ணு,பிரம்மா ஆகியோரின் கூட்டு உருவங்கள் பல கோவில்களில்
வழிபாட்டில் உள்ளன.
தீவிர சிவ/விஷ்ணு பகதர்களை அந்த அந்த தெய்வங்களே மன மாற்றம் செய்து அருளிய புராணக் கதைகள் ஏராளம்.
சிரஞ்சீவியான ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமி ஸ்ரீகிருஷ்ணரைக் காணப் போனாராம்.அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீராமராகத் தன்னை உருமாற்றிக் கொண்டாராம்.இது எதைக் குறிக்கிறது? பகவான் நாம் எப்படி அவரைக் காண நினைத்தலும் அப்படி அவர் தனது காட்சியை அளிப்பார்.
நன்றி ஐயா!/////
உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும், மனம் நெகிழ்ந்த பாராட்டிற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger dio snowin said...
ReplyDeleteDear sir,
i am a new student./////
உங்கள் வரவு நல்வரவாகட்டும்! தொடர்ந்து படியுங்கள்!
////Blogger Maaya kanna said...
ReplyDeleteஐயா
{ தாங்களுடைய அனைத்து பதிப்பையும் என்னுடைய அண்ணாச்சி ஒருவர் உள்ளார் அவருடைய முகவரிக்கு ( இந்தியா) அனுப்பி வைக்க வேண்டுகின்றேன். }
எட்டாம் இடம் பற்றிய குறிப்போ அல்லது புத்தகமோ இருந்தாலும் உடனே தேவை படுவதால் அனுப்பி வைக்க வேண்டுகின்றேன்.
தங்களுடைய வங்கி கணக்கு நம்பரை தந்தால் உடனே அனுப்பி வைக்கின்றேன். --
Thanks & Reg
Kannan Seetharaman
Qatar + 974 66762664////
என்னுடைய சிறுகதைத் தொகுப்புக்கள், மற்றும் மனவளக் கட்டுரைகள்தான் நூல்களாக வந்துள்ளன. மொத்தம் எட்டு நூல்கள். அவற்றையா அனுப்பி வைக்கச் சொல்கிறீர்கள்? சரியாகச் சொல்லுங்கள் கண்ணன்.
////Blogger B Sudhakar. said...
ReplyDeleteExcellent story line and script.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger Jeevalingam Kasirajalingam said...
ReplyDeleteசிறந்த பகிர்வு/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger வேப்பிலை said...
ReplyDelete///kmr.krishnan said..
'அரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதவன் வாயில் மண்ணு' என்பது நெடுநாளைய பழமொழி///
இது தவறாக
இப்படி பொருள் கொள்ளப்படுகிறது
அரியும் சிவனும் ஒன்று என்பதல்ல
அதன் பொருள்...
அகம் பிரம்மாஸ்மி என்பதற்கு
அடுத்தவர் கொள்வது போல
பொருள் கொள்வது சரியல்ல..
பொருளின் உண்மையை புரிந்து
சொல்ல வேண்டும் என்பதை
சொல்லவும் வேண்டுமா
இலால்குடியாரே
இது வாதமல்ல
கண்டு கொள்ளுங்கள் இது
கருத்து பரிமாற்றமே/////
அந்தப் பழைய மொழியை கல்கி ரா,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன் நாவல்களில் பலமுறை பயன் படுத்தியுள்ளார். அதன் உண்மைப் பொருள் என்ன என்பதை நீங்கள் ஏன் சொல்லவில்லை? பொருள் கொள்வது சரியல்ல என்றால், உண்மைப் பொருளைச் சொல்ல வேண்டும் அல்லவா? அது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை வேப்பிலையாரே!
////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteஇனிய கதை.. அருமையான நடையழகு!.. மகிழ்ச்சி தரும் சொல்லாட்சி!.. வாழ்க நலம்../////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger Kamala said...
ReplyDeleteஅருமையான கதை.உங்கள் எழுத்துக்கள் மனஆறுதல் தருபவை.
நன்றி.//////
உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி சகோதரி!
///உண்மைப் பொருளைச் சொல்ல வேண்டும் அல்லவா? ///
ReplyDeleteஉண்மையை சொல்லி
உள்ளபடியே வாத மேடையாக்கனுமா
வகுப்பறை திறந்து இருக்கட்டுமே
வந்து போவது நாங்கள் தானே
உண்மைகள் கசக்கும்
உங்களுக்கும் இது தெரியும் தானே
பணிவான வணக்கத்துடன் திரு KMRK..தங்களின் கருதது பதிவில் ..**அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் என்னமோ பண்ணு..!!*** என கூறி இருக்கலாம் ..தாங்கள் போன்ற பெரியவர்கள் இது போன்ற வார்த்தை உபயோகம் ????எப்படி இருந்தாலும் சைவராக வைணவராக அதீத பக்தயின் காரணமாகவே பேதம் பார்கின்றனர் .. அப்போ அவருக்கு இஷ்டப்பட்ட தெய்வத்தின் மீது பக்தி வைப்பது பிற தெய்வங்கள் தேவை இல்லை என்பது சகஜம்தானே !!! .அப்படி என்றால் இவர்கள் வாயில் ....என்பது சரிதான..??? வகுப்பரையின் மதிப்பு மிக்க மூத்த மாணவர் உங்களை போன்றோர்களின் வழிகாட்டுதல் எங்களுக்கு தேவை...எனது கருத்தில் தவறு இருந்தால் பொறுத்து கொள்க.. நன்றி.. S.N.கணபதி
ReplyDelete///hamaragana said...
ReplyDeleteஎனது கருத்தில் தவறு இருந்தால் பொறுத்து கொள்க..////
கருத்தில் தவறேதும் இல்லை
கருத்து சொல்ல உரிமை உண்டே
நான் சொல்வது சரி என்றால் சரி
நான் சொல்வது மட்டுமே சரி என்றால் தவறு
அதை சரி கட்ட மற்றவரின்
மேற்கொள்களை கொண்டுவந்தால்
அது அதைவிட பெரிய தவறு
சென்று நாம் சிறுதெய்வம்
சேர்வோம் அல்லோம்
அப்பர் வாக்கு இதனை நாமும்
அறிவோம் தானே
யாதொரு தெய்வம் கொண்டீர்
சித்தியார் வாக்கு இது தானே
இறைவன் வேறு
தெய்வம் வேறு..
தெய்வங்களை
இறைவனாக்குவதால்
வரும் குழப்பங்கள் தான் இவை
வகைப்படுத்தி சொல்லவே வந்தது
ஞானிகள் பைத்தியம் போலிருப்பர் என்பதால்
ஞானியாக்கலாமா பைத்தியங்களை எல்லாம்
////Blogger வேப்பிலை said...
ReplyDelete///உண்மைப் பொருளைச் சொல்ல வேண்டும் அல்லவா? ///
உண்மையை சொல்லி
உள்ளபடியே வாத மேடையாக்கனுமா
வகுப்பறை திறந்து இருக்கட்டுமே
வந்து போவது நாங்கள் தானே
உண்மைகள் கசக்கும்
உங்களுக்கும் இது தெரியும் தானே////
நீங்கள் சொன்னால்தானே அது உண்மையா அல்லது உண்மையில்லையா என்பது தெரியும்? வாதமேடையாகாமல் பார்த்துக்கொள்வது என்னுடைய வேலை. அதை நான் பார்த்துக்கொள்வேன். நீங்கள் கவலைப் படுவதில் நியாயமில்லை!
///Blogger hamaragana said...
ReplyDeleteபணிவான வணக்கத்துடன் திரு KMRK..தங்களின் கருதது பதிவில் ..**அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் என்னமோ பண்ணு..!!*** என கூறி இருக்கலாம் ..தாங்கள் போன்ற பெரியவர்கள் இது போன்ற வார்த்தை உபயோகம் ????எப்படி இருந்தாலும் சைவராக வைணவராக அதீத பக்தயின் காரணமாகவே பேதம் பார்கின்றனர் .. அப்போ அவருக்கு இஷ்டப்பட்ட தெய்வத்தின் மீது பக்தி வைப்பது பிற தெய்வங்கள் தேவை இல்லை என்பது சகஜம்தானே !!! .அப்படி என்றால் இவர்கள் வாயில் ....என்பது சரிதான..??? வகுப்பறையின் மதிப்பு மிக்க மூத்த மாணவர் உங்களை போன்றோர்களின் வழிகாட்டுதல் எங்களுக்கு தேவை...எனது கருத்தில் தவறு இருந்தால் பொறுத்து கொள்க.. நன்றி.. S.N.கணபதி/////
நீங்களும் மூத்த மாணவர்தான் சுவாமி!
/////Blogger வேப்பிலை said...
ReplyDelete///hamaragana said...
எனது கருத்தில் தவறு இருந்தால் பொறுத்து கொள்க..////
கருத்தில் தவறேதும் இல்லை
கருத்து சொல்ல உரிமை உண்டே
நான் சொல்வது சரி என்றால் சரி
நான் சொல்வது மட்டுமே சரி என்றால் தவறு
அதை சரி கட்ட மற்றவரின்
மேற்கொள்களை கொண்டுவந்தால்
அது அதைவிட பெரிய தவறு
சென்று நாம் சிறுதெய்வம்
சேர்வோம் அல்லோம்
அப்பர் வாக்கு இதனை நாமும்
அறிவோம் தானே
யாதொரு தெய்வம் கொண்டீர்
சித்தியார் வாக்கு இது தானே
இறைவன் வேறு
தெய்வம் வேறு..
தெய்வங்களை
இறைவனாக்குவதால்
வரும் குழப்பங்கள் தான் இவை
வகைப்படுத்தி சொல்லவே வந்தது
ஞானிகள் பைத்தியம் போலிருப்பர் என்பதால்
ஞானியாக்கலாமா பைத்தியங்களை எல்லாம்/////
இறைவனையே பித்தா பிறைசூடி என்று அழைத்தவர்கள் நாம். ஆகவே பக்தியில் எதுவுமே தவறில்லை! உங்களுக்குத் தவறு என்பது எங்களுக்குத் தவறில்லை. அதை மனதில் வையுங்கள்!
படித்த பின்பு , அந்த கதையின் கருத்து ஆழ்மனதில் நிற்க வேண்டும் . அதுவே அந்த கதையின் வெற்றி . நிச்சயம் மூன்று கதபாதிரங்களையும் மறக்க முடியாது . அருமையான பதிவு .
ReplyDelete/////Blogger Thirumalaisamy Baabu said...
ReplyDeleteபடித்த பின்பு , அந்த கதையின் கருத்து ஆழ்மனதில் நிற்க வேண்டும் . அதுவே அந்த கதையின் வெற்றி . நிச்சயம் மூன்று கதபாதிரங்களையும் மறக்க முடியாது . அருமையான பதிவு ./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!