மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.9.09

அனுபவம்: பெரியப்பச்சி

கழுத்திரு - செட்டிநாட்டின் முக்கிய அணிகலன்
-------------------------------------------------------------------------------
அனுபவம்: பெரியப்பச்சி

எங்கள் பெரியப்பச்சி அறிவு ஜீவி. கலா ரசிகர். தீவிர வாசகர்.
கொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். அதிரடியாகப் பேசக்கூடியவர்.
எந்த சபையாக இருந்தாலும் அவர் தனியாகத்தெரிவார். அவரைப்
பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். கதையின் நீளம் கருதி இரண்டு
சுவையான விஷயங்களை மட்டும் இப்போது சொல்கிறேன்.

பெரியப்பச்சி என்பது அப்பச்சியின் அண்ணனைக் குறிக்கும். அப்பச்சி
என்பது அப்பாவைக் குறிக்கும். டாடி என்று தங்கள் தந்தையைக் கூப்பிட்டுக்
கொண்டிருக்கும், இக்கால இளசுகளுக்காக இதைச் சொல்கிறேன்.

கதை நடந்த காலம் 1921ஆம் ஆண்டு. அப்போது எங்கள் பெரியப்பச்சிக்கு
வயது 18. திருமணமான புதிது. பெரியத்தாவிற்கு வயது 16. இந்த வயதுத்
திருமணம் எல்லாம் அந்தக்காலத்தில் சர்வ சாதாரணம். அப்போதெல்லாம்
ஆறு நாள் கல்யாணம்.

கல்யாணம் முடிந்த கையோடு, எங்கள் பெரியப்பச்சியை வேற’ வைத்து
விட்டார்கள். அதாவது ’வேறாக’ வைத்து விட்டார்கள். இருக்கும் பெரிய
வீட்டிற்குள்ளேயே, சமையல் கட்டு அறை, தங்குவதற்கு அறை, படுக்கை
அறை என்று ஒதுக்கிக் கொடுத்து, தனிக்குடித்தனம் வைத்து
விட்டார்கள். தனியாகச் சமைத்துச் சாப்பிடச் சொல்லிவிட்டார்கள்.
அப்போதுதான் தம்பதியருக்குப் பொறுப்பு வரும் என்பதற்காக அப்படிச்
செய்வார்கள்.

’வேறாக’ வைக்கும் வைபவம் பெரிய விழா போல நடக்கும். ’வேறாக’
வைத்த அடுத்த நாள், எங்கள் பெரியத்தா, காலை ஏழரை மணிக்கு,
காலைப் பலகாரத்தை செய்து, தேக்கு மரவையில் - பாத்திரங்களில்,
அவற்றை எடுத்துக் கொண்டு வந்து, தன் கணவனுக்குப் பறிமாற
ஆரம்பித்தார்கள்.

முகப்புப் பெட்டக சாலையில் இந்தக் காட்சி நடைபெறுகிறது.
அப்போதெல்லாம் ஆண்கள் அடுப்படிக்குச் சென்று சாப்பிடும் பழக்கம்
இல்லை. ஒன்று முகப்பு அறையில், அல்லது பெட்டக சாலையில் அல்லது
வளவு சுற்றுப் பத்தியிலேயே ஆண்கள் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்!

என்ன மெனு?

இட்லி, உளுந்து வடை, தேங்காய் சட்னி, சாம்பார்.

எங்கள் பெரியப்பச்சி அப்போதிலிருந்தே சாப்பாட்டு ரசிகர்.

முதலில் வடையைக் கையில் எடுத்துக் கடித்து, ஒரு வாய் சாப்பிட்டவர்,
தன் இளம் மனைவியிடம் பேச்சுக் கொடுத்தார்

’வடைக்கு என்ன அளவு உளுந்து போட்டாய்?”

”ஒரு ஒழக்கு!” இது பெரியத்தாவின் பதில்.

“எல்லா மாவையும் வடையாகச் சுட்டு விட்டாயா?”

“ஆமாம்!”

”எத்தனை வடைகள் வந்தன?”

“பதினாறு வடைகள் வந்தன”

“வந்த வடைகள் எல்லாமே இந்தப் பாத்திரத்தில் இருக்கிறதா?”

“ஆமாம்”.

இந்த இடத்தில் கலவரமாகி, தன் மனைவியிம் முகம் சற்று சிவப்பதைக்
கண்டும் காணமலும், பெரியப்பச்சி தொடர்ந்தார்.

“ இந்தா, அறைச் சாவி, நிலைக்கதவு பலகையில், சன்னக் கயிறும்,
சின்னக் கத்தரிக்கோலும் இருக்கிறது. எடுத்துக் கொண்டு வா?”

எடுத்து கொண்டு வந்தார்.

பெரியப்பச்சி பொறுமையாக, இரண்டு வடைகளைத் தனித் தனியாக,
கயிற்றை சிறு சிறு வளையமாக்கி அதில் கட்டினார். பிறகு மீதம் இருந்த
வடைகளைக் கயிற்றால் கோர்த்து மாலையாக்கினார். எழுந்து
பெரியத்தாவின் காது மடல்களில், வடையைத் தொங்க விட்டுவிட்டு,
வடை மாலையைக் கழுத்தில் அணிவித்து விட்டு, எல்லாம் சரியாக,
பிடிப்புடன் இருக்கிறதா என்று பார்த்தார்.

பிறகு மனைவியின் கையைப் பிடித்து, நடத்திக் கொண்டு போய், வளவு
நடுவாசலில் நிறுத்தி, ”இங்கேயே இந்தக் கோலத்திலேயே ஒரு மணி
நேரம் நில். வளவில் உள்ளவர்கள் அத்தனை பேரும் பார்க்கட்டும்.
அப்போதுதான் புத்திவரும்.”

’’என்ன தப்பு என்று சொன்னால்....பரவாயில்லை!” பெரியத்தாவின்
கண்களில் கண்ணீர் ததும்புகிறது.

“வடையில் அதிகமான உப்பு. வடையைச் சுடுமுன்பாக, மாவின் ஒரு
துளியை வாயில் வைத்து, உப்பு, காரம் சரியாக உள்ளதா என்று பார்க்க
வேண்டாமா? அல்லது ஒரு வடையையைச் சுட்டு எடுத்தவுடன், ஒரு
விள்ளல் கிள்ளி வாயில் போட்டுப் பார்க்க வேண்டாமா?. இனிமேல்
அப்படிச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வடைமாலை
அலங்காரம். அனைவரும் பார்க்கட்டும்”

சொன்னவர், திரும்பி வந்து, அமர்ந்து இட்லியை எடுத்து சாப்பிட
ஆரம்பித்து விட்டார். அங்கே நடுவாசலில் புது மனைவி, திகைப்பு
மற்றும் கண்ணீருடன், என்ன செய்வது என்று தெரியாத நிலையில்.

இதையெல்லாம் அமைதியாக, பக்கத்து பெட்டக சாலையில் அமர்ந்து
பார்த்துக் கொண்டிருந்த, எங்கள் சின்னைய்யா (cousin grand father)
மெல்லிய குரலில் சொன்னார்:

“டேய், மாணிக்கம், அவள் சின்னப் பெண்ணடா. எல்லாம் ஒரே நாளில்
வந்து விடாது. போகப் போகத் தெரிந்து கொள்வாள். பேசாமல் அவளை,
உள்ளே போகச் சொல்!”

அதன்படியே நடந்தது.

அப்போது, பெண்களுக்கு ஆணாதிக்கம் என்றால் தெரியாது. வாக்கு வாதம்,
மகளிர் காவல் நிலையம், நீதி மன்றம், விவாகரத்து என்று எதுவும் கிடையாது.
பொறுமையின் சிகரங்கள் அவர்கள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்கள். எங்கள் பெரிய அன்னையார், எங்கள் பெரிய அப்பச்சியை முழுமையாகப் பொறுத்துக் கொண்டார்கள். ஏனென்றால் அவர் கொஞ்சுவதும் முரட்டுத்தனமாக இருக்குமாம்!:-))))))

***************************

அது நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 1951ஆம் ஆண்டு தை
மாதத்தில் ஒரு நன்நாள்.

ஒரு திருமணவைபவம். மணப்பெண் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச்
சேர்ந்தவள். ஒரு வராகன் சீதனம்.30 பவுன் நகைகள் என்று திருமணத்திற்குத்
தோது பேசியிருந்தார்கள். மொத்த செலவு பத்தாயிரம் ரூபாய்க்குள் வரும்.
அன்றையத் தேதியில் பத்தாயிரம் என்பது இன்றைய மதிப்பில் ஆறு லட்சம்
வரும்.

தோது என்பது இங்கே வரதட்சனையைக் குறிக்கும். ஒரு வராகன் என்பது
சுமார் 3,500 ரூபாய்!

பர்மா நொடித்துப்போன சமயம். பர்மாவிலிருந்து திரும்பி வந்திருந்த
பெண்ணின் தந்தை, பல சிரமங்களுக்கிடையே அந்தத் திருமணத்திற்கு
ஏற்பாடு செய்திருந்தார்.

முக்கிய நகையான ‘கழுத்திரு’ அவரிடம் இல்லை. திருமணத்தில்
பெண்ணின் கழுத்தில் திருப்பூட்டுவதற்கும், அணிவிப்பதற்கும் அது வேண்டும்.
இல்லாதவர்கள் இரவல் வாங்கிக் கட்டி விட்டு, அடுத்த நாள் திருப்பிக்
கொடுத்து விடுவார்கள்.

மணப்பெண்ணின் தந்தை எங்கள் அப்பத்தா வழி உறவு. அவர் என்
தந்தையை அனுகிக் கேட்க, என் தந்தையாரும், செல்வந்தர் ஒருவர்
வீட்டில் இருந்து, கெட்டிக் கழுத்திரு ஒன்றை இரவல் வாங்கிக் கொடுத்திருந்தார்.
செல்வந்தர் வீட்டில் 4 அல்லது 5 கழுத்திருக்கள் வைத்திருப்பார்கள், நம்
வீடுகளில் அண்டா, குடங்கள் வைத்திருப்பதைப்போல அவர்கள்
கழுத்திருவை, அதிக எண்ணிக்கையில் வைத்திருப்பார்கள்.
கெட்டிக் கழுத்திரு என்பது 100 பவுன் தங்கத்தில் செய்யப்பெற்றதாகும்.
அன்றைய மதிப்பு எட்டாயிரம் ரூபாய். இன்றைய மதிப்பு 13 லட்ச ரூபாய்.
அதை நினைவில் வையுங்கள்.

என்னுடைய தந்தையார், எங்கள் பெரிய அப்பச்சி மற்றும் அவருடைய
உற்ற நண்பர் ஆகிய மூவரும் அந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்தார்கள்.

மாலை ஏழு மணிக்கு, பெண் அழைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி சிறப்பாக
நடந்தேற, வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் மாப்பிள்ளை வீட்டில்
இரவு உணவு வழங்கப்பெற்றது.

விருந்து முடிந்து என் தந்தையார், புறப்பட எத்தனிக்கும் போது,
பெண்ணின் தந்தை ஓடி வந்து,“ வீரப்பா, போய் விடாதே, எல்லா
வேலையும் முடிந்து விட்டது. சம்பந்தியிடம் கழுத்திருவை வாங்கிக்
கொண்டு புறப்பட வேண்டியதுதான். நானும் வருகிறேன். துணக்கு
ஆள் வேண்டும். போகிற வழியில், இரவல் கொடுத்தவரிடம் நகையைக்
கொண்டுபோய்த் திருப்பிக் கொடுத்து விட்டுப்போய் விடுவோம்”

என் தந்தையார் சரி’ யென்று சொல்ல, அவர் தன் சம்பந்தி செட்டியாரிடம்
சென்று,” அய்த்தான், நாங்கள் புறப்பட வேண்டும், கழுத்திருவைத் தாருங்கள்.
புறப்படுகிறோம்” என்று சொன்னார்.

அவர் மணவறைக்குள் சென்று, அங்கே இருந்த தன் மனைவிடம் பேச்சுக்
கொடுக்க, அந்த ஆச்சி சொன்னார்கள்: “முறைச் சிட்டையில் திகட்டல்
இருக்கிறது. அதைக் காலையில், பேசிப் பணத்தை வாங்கிக் கொண்ட
பிறகு கழுத்திருவைக் கொடுப்போம். இப்போது இல்லை என்று
சொல்லி அவரை அனுப்பி வையுங்கள்”

“இல்லை என்று எப்படிச் சொல்வது. அது நன்றாகவா இருக்கும்?”

“இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள்? மாற்றிச் சொல்லுங்கள். இன்று
வெள்ளிக்கிழமை. பெண்பிள்ளைகள் இன்று வேண்டாம் என்று
சொல்கிறார்கள். ஆகவே, நகையை நாளை வந்து வாங்கிக் கொண்டு
போங்கள் என்று சொல்லுங்கள்”

அப்படியே அவரும், வந்து விஷயத்தைச் சொல்ல, பெண்ணின்
தந்தையாருக்குத் திக்’கென்றிருந்து. நேராக வந்து என் தந்தையாரின்
காதில் விஷயத்தைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று குழம்பியவாறு
கேட்டிருக்கிறார்.

அதைக் கவனித்துவிட்ட எங்கள், பெரியப்பச்சி, “டேய் என்னடா, கிசு, கிசு?
ஒருத்தன் காதை இன்னொருத்தன் கடிக்கிறீர்கள். எதுவாக இருந்தாலும்,
வெளிப்படையாகச் சொல்லுங்கடா” என்று அதட்டவும், இருவரும் அவரிடம்
விஷயத்தைச் சொன்னார்கள்.

ஒரு விநாடி கூட யோசிக்காமல் அவர் பதில் சொன்னார்:” இப்படி கேட்டால்
வராதுடா. நான் கேட்கிறேன் பார், உடனே கொண்டுவந்து கொடுக்கிறானா -
இல்லையா? என்று பாருங்கள்”

அதைச் செயல் படுத்தவும் முனைந்தவர், அருகில் இருந்த ஒரு சிறுவனை
விட்டு, மாப்பிள்ளையின் தந்தையை அழைத்துவரச் சொன்னார். எங்களூரில்,
எங்கள் பெரியப்பச்சியைத் தெரியாதவர்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.
பெரியப்பச்சி கூப்பிடுகிறார் என்று தெரிந்தவுடன், அவரும் விழுந்தடித்துக் கொண்டு வந்து எதிரில் நின்றார்.

“டேய், நாங்கள் வீட்டிற்குக் கிளம்ப வேண்டும். கழுத்திரு என் தம்பி இரவலாக
வாங்கிக் கொடுத்தது. அதைக் கொடுத்தால், எடுத்துக் கொண்டு கிளம்பி
விடுவோம்”

“அதான் சம்பந்தியிடம் சொன்னேனே அண்ணே!”

“என்ன சொன்னாய்?”

“இன்று வெள்ளிக் கிழமை.ஆகவே நாளை வந்து வாங்கிக் கொண்டு
போங்கள் என்று சொல்லியிருக்கிறேனே....”

அதற்குள் எங்கள் பெரியப்பச்சி இடைமறித்தார்,” என்னடா வெள்ளிக்கிழமை.
நாங்கள் எங்கள் பெண்ணையே வெள்ளிக் கிழமை என்று பாராமல், உங்கள்
வீட்டிற்குக் கூட்டி அனுப்பியிருக்கிறோம். அவளை விட அந்த நகை
உசந்ததா என்ன?”

”இன்று திருப்பிக் கொடுக்கப் பெண்கள் பிரியப் படவில்லை... அதனால்தான்”

“ஒகோ பெண்கள் பிரியப் படவில்லையா? அப்படியென்றால் சரி. நாங்கள்
நால்வர் இருக்கிறோம். எங்களுக்கு இன்னும் ஒரு தம்ளர் சூடாகப் பால்
கொண்டு வரச் சொல். அதோடு உங்கள் பட்டாலையில் நான்கு மெத்தை
விரிக்கச் சொல். நாங்கள் இங்கேயே படுத்துத் தூங்கி விட்டு, அதிகாலையில்
எழுந்தவுடன் நகையை வாங்கிக் கொண்டு போகிறோம்.சரிதானே?” என்று
பெரியப்பச்சி அதிரடியாகக் கேட்கவும், அவரின் முகம் பேயரைந்ததைப் போல
ஆகி விட்டது.

ஓடிச் சென்று, தன் மனைவியைக் கடிந்து கொண்டார்.அதோடு மாணிக்கம்
செட்டியார், படுத்திருந்து விட்டு, அதிகாலையில், நகையை வங்கிக் கொண்டு
போவதாகச் சென்னதையும் சொன்னார். கழுத்திருவைக் கொடுத்தவர்கள்,
படுத்திருந்து, அதிகாலை வாங்கிக் கொண்டு போனால், போனது ஊருக்குள்
தெரிந்தால், அது நமக்கு, அசிங்கம், கேவலம் என்றும் சொன்னார்.

அடுத்த நிமிடம், நகை உரியவர்களிடம் வந்து சேர்ந்தது!

இது உண்மையில் நடந்த கதை. ஒரு விஷயத்தை எப்படிக் கையாள
வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? என்பதற்கு உதாரணமாக இந்தக்
கதையை என் தந்தையார் சொல்வார்.

அது என் மனதிலுள்ள ஹார்ட் டிஸ்க்கில் பதியப்பட்டுள்ளது. உங்களுக்காக
அதை இன்று அதை எழுத்தில் வடித்துக் கொடுத்திருக்கிறேன்!

=================================================================
கழுத்து உரு (கழுத்து அணிகலன்). முழுவடிவில் நீங்கள் பார்த்துத்
தெரிந்து கொள்ள படம் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்

படத்தில் உள்ள பெண்மணி என் தாய் வழிப் பாட்டி. அவர் கழுத்தில் அணிந்திருப்பதுதான் கழுத்துரு. அதன் எடை ஒரு கிலோ தங்கம்.
அவர் காலத்தில் அப்படித்தான் செய்வார்கள். அதைத் தினமும் அணிந்து
கொள்ள மாட்டார்கள். வீட்டில் நடக்கும் திருமண, மணி விழாக்களில்
அணிந்து கொள்வார்கள். இப்போது யாரும் 100 பவுன் அல்லது ஒரு
கிலோ தங்கத்தில் அதைச் செய்வதில்லை. அது 16 பவுன் 21 பவுன் எனும்
அளவில் சுருங்கி விட்டது.

அருகில் இருக்கும் எனது தாத்தா (அய்யா) தன் கழுத்தில் அணிந்திருப்பது
கெளரி சங்கம் எனப்படும் ருத்திராட்ச மாலையாகும். அதன் அடியில்
உள்ள டாலரின் எடை 25 பவுன்கள். அதில் ரிஷப வாகனத்தில்
சிவனும் சக்தியும் சமேதராக அமர்ந்திருக்கும் காட்சி வடிவமைக்கப்
பெற்றிருக்கும்!

உபரித்தகவல்: இந்தப் படம் எடுத்த ஆண்டு 1953 (அக்டோபர்) எங்கள்
தாத்தாவின் மணிவிழாவில் எடுக்கப் பெற்ற படம் அது!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச் சேர்க்கை!

சகோதரி வல்லிசிம்ஹன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, என் பெரியப்பாவின் படத்தைப் பதிவில் இப்போது சேர்த்துள்ளேன். படத்தில் இடது கோடியில் சிவந்த நிறத்துடன் இருப்பவர் என் பெரியப்பா. வலது கோடியில் சஃபாரி சட்டையுடன் காலமேல் கால்போட்டு அமர்ந்திருப்பவர் எனது தந்தை. நடுவில் அமர்ந்திருப்பவர் எங்கள் நெருங்கிய உறவினரும், கரூர் வெண்ணைமலை பரம்பரை அறங்காவலர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், பெரும் செல்வந்தருமான திருவாளர்.திண்ணப்ப செட்டியார். மற்றும் படத்தில் உள்ள மூவரும் எங்கள் பங்காளிகளே. படம் எடுக்கபெற்ற ஆண்டு 1941. அப்போது என் தந்தையாரின் வயது 20. என் பெரியப்பாவின் வயது. 38

படத்தின் மீது கர்சரை வைத்து, அழுத்தினால், படம் பெரிதாகத் தெரியும்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

53 comments:

  1. ஐயா,
    நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை.

    தமிழில் எழுவது கொஞ்சம் கடினமாக உள்ளது.

    -சங்கர்

    ReplyDelete
  2. அருமை அருமை.
    ஒரு கிலோ தங்கம் கழுத்திலா!!!
    :))))

    பெரியப்பாவின் படம் போட்டிருக்கலாமே சுப்பையா சார்.
    இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்ப்பது அதிசயமில்லையா. எனது வணக்கங்கள் பெரியவர்களுக்கு.

    ReplyDelete
  3. கருத்துக்கள் மிகவும் அருமை, பழங்காலாத்து தகவல்கள் மிகவும் இனியவை, குறிப்பாக அந்த காலத்தில் நகை,பணம் செல்வம் ஆகியவற்றை வீட தமது பெயர்,குடும்ப கொளவரம்தான் மதிக்கப்பட்டது, அவர்களும் கெடாமல் பாதுகாத்தார்கள், இன்று பெயர் கெட்டாலும் பரவாயில்லை பணம் இருந்தால் போதும் என்று அலைகிறார்கள்.

    ReplyDelete
  4. 1921 முதல் 1953 வரை அழைத்து சென்றதிற்கு நன்றி.

    ReplyDelete
  5. Dear sir,

    பாடம் சூப்பர் சார்.

    எப்படி அந்த காலத்தில் பெண்கள் கோபத்தை பொறுத்துக் கொண்டார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது?????

    ஏன் இப்போது பொறுமையே இல்லை :-))))

    Thanks for taking us to 1950's.

    காலை வணக்கத்துடன்
    சரவணகுமார்

    ReplyDelete
  6. ////hotcat said...
    ஐயா,
    நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை.
    தமிழில் எழுவது கொஞ்சம் கடினமாக உள்ளது.
    -சங்கர்////

    அது இறையருள்! எனக்குப் பல வாசகர்கள் கிடைத்ததற்கும் அதுதான் காரணம்!

    ReplyDelete
  7. ////வல்லிசிம்ஹன் said...
    அருமை அருமை.
    ஒரு கிலோ தங்கம் கழுத்திலா!!! :))))
    பெரியப்பாவின் படம் போட்டிருக்கலாமே சுப்பையா சார்.
    இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்ப்பது அதிசயமில்லையா. எனது வணக்கங்கள் பெரியவர்களுக்கு.////

    உங்கள் கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட்டது சகோதரி! பதிவில் என் பெரியப்பாவின் படத்தை, இடைச் சேர்க்கையாகச் சேர்த்து உள்ளேன். பார்க்க வேண்டுகிறேன்.
    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  8. ////பித்தன் said...
    கருத்துக்கள் மிகவும் அருமை, பழங்காலாத்து தகவல்கள் மிகவும் இனியவை, குறிப்பாக அந்த காலத்தில் நகை,பணம் செல்வம் ஆகியவற்றை வீட தமது பெயர்,குடும்ப கொளவரம்தான் மதிக்கப்பட்டது, அவர்களும் கெடாமல் பாதுகாத்தார்கள், இன்று பெயர் கெட்டாலும் பரவாயில்லை பணம் இருந்தால் போதும் என்று அலைகிறார்கள்.////

    நீங்கள் சொல்வது உண்மைதான். எல்லோருமே பணம் என்று அலையும் நிலை உள்ளது. ஆனால் போகும்போது மிஞ்சுவது ஒன்றுமில்லை என்று உணர்ந்தவர்கள் வெகு சிலரே!

    ReplyDelete
  9. செட்டிநாட்டு பாரம்பரியக்கதை அருமை.

    என் அயித்தானும் என் முதல் நாள் சமையலை பொறுத்து இனிமையாக பேசிய தந்த ஊக்கத்தால்தான் நானும் சமையல் நன்கு கற்க நேர்ந்தது.

    ReplyDelete
  10. ////மதி said...
    1921 முதல் 1953 வரை அழைத்து சென்றதிற்கு நன்றி./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ///Saravana said...
    Dear sir,
    பாடம் சூப்பர் சார்.
    எப்படி அந்த காலத்தில் பெண்கள் கோபத்தை பொறுத்துக் கொண்டார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது?????
    ஏன் இப்போது பொறுமையே இல்லை :-))))
    Thanks for taking us to 1950's.
    காலை வணக்கத்துடன்
    சரவணகுமார்//////


    இன்றைய இளம் மங்கைகளின் மனமாற்றத்திற்குப் பெரிதும் காரணம் மூன்று ஈ’க்கள். Education, Employment, Exposure!
    கல்வி, கை நிறைந்தசம்பளம், கண்களுக்குக் கிடைக்கும் கண்ணோட்டம்!

    ReplyDelete
  12. /////புதுகைத் தென்றல் said...
    செட்டிநாட்டு பாரம்பரியக்கதை அருமை.
    என் அயித்தானும் என் முதல் நாள் சமையலை பொறுத்து இனிமையாகப் பேசித் தந்த ஊக்கத்தால்தான் நானும் சமையல் நன்கு கற்க நேர்ந்தது./////

    நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.
    உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. அன்பு சகோதர சுப்பையாவுக்கு, பல நினைவுகளைப் பசுமையாகக் கொண்டு வந்துவிட்டீர்கள் அதற்கு நன்றி முதலில். பெரியம்மா பொறுத்தார் என்பதற்கு பெரியப்பாவின் ஆளுமை என்று குறித்தது குறும்பு:)

    போட்டோ பதிவிட்டதுக்கும் நன்றி. படு கம்பீரமாகக் காட்சி அளிப்பது அப்பாதான். இளங்காளை அல்லவா. பெரியப்பா சாதுவாகத் தெரிகிறார்.
    மீண்டும் நன்றி,.

    ReplyDelete
  14. அன்பு துளசிக்கும் கோபாலுக்கும் இனிய பிறந்த நாள் 24/9/09
    அன்றைக்கான வாழ்த்துகள்.
    தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்:)

    ReplyDelete
  15. வாத்தியார் சார்,

    இதுவே மிகசரியான விளக்கம். (3E's)

    மாணவன்
    சரவணா

    ReplyDelete
  16. சார், வடைமாலைக்கதை இன்று நடந்தால் என்ன நடக்கும்? ??????

    ReplyDelete
  17. சார், வடைமாலைக்கதை இன்று நடந்தால் என்ன நடக்கும்? ??????

    ReplyDelete
  18. சார், வடைமாலைக்கதை இன்று நடந்தால் என்ன நடக்கும்? ??????

    ReplyDelete
  19. சார், வடைமாலைக்கதை இன்று நடந்தால் என்ன நடக்கும்? ??????

    ReplyDelete
  20. சார், வடைமாலைக்கதை இன்று நடந்தால் என்ன நடக்கும்? ??????

    ReplyDelete
  21. ஆசிரியருக்கு வணக்கம்,

    சம்பவம், அதை நீங்கள்
    சமைத்த விதம் அருமை!

    அதனினும் அருமை தங்கள்
    பெரியப்பச்சியின் சாமர்த்தியம்
    மிகவும் அருமை!!.

    அதனால் தான் தங்களின்
    நூலுக்காக காத்திருக்கிறேன்.

    (தகவல் ஏதும் இல்லயே குருவே)

    மேலும் கூடுதல் தகவல்
    தங்களின் கதை எனது
    கல்லூரி நண்பர்கள்
    அழகப்பன், மெய்யப்பன்,
    சோலையப்பன் மற்றும்
    முருகப்பனையும்,
    அவர்கள் கூறிய
    இது போன்ற சம்பவங்களையும்
    ஞாபகப்படுத்துகிறது.


    அன்புடன்,

    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  22. வல்லிசிம்ஹன் said...
    அன்பு சகோதர சுப்பையாவுக்கு, பல நினைவுகளைப் பசுமையாகக் கொண்டு வந்துவிட்டீர்கள் அதற்கு நன்றி முதலில். பெரியம்மா பொறுத்தார் என்பதற்கு பெரியப்பாவின் ஆளுமை என்று குறித்தது குறும்பு:)
    போட்டோ பதிவிட்டதுக்கும் நன்றி. படு கம்பீரமாகக் காட்சி அளிப்பது அப்பாதான். இளங்காளை அல்லவா. பெரியப்பா சாதுவாகத் தெரிகிறார்.
    மீண்டும் நன்றி,.////

    உங்கள் விமர்சனத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  23. ////வல்லிசிம்ஹன் said...
    அன்பு துளசிக்கும் கோபாலுக்கும் இனிய பிறந்த நாள் 24/9/09
    அன்றைக்கான வாழ்த்துகள்.
    தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்:)////

    துளசி டீச்சருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
    இது இணைய வகுப்பு. நேரம் காலம் கிடையாது!
    தாமதம் எனும் பேச்சுக்கும் இடமில்லை சகோதரி!

    ReplyDelete
  24. ////Saravana said...
    வாத்தியார் சார்,
    இதுவே மிகசரியான விளக்கம். (3E's)
    மாணவன்
    சரவணா/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. ///Uma said...
    nice stuff////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. /////vattukozhi said...
    சார், வடைமாலைக்கதை இன்று நடந்தால் என்ன நடக்கும்//////

    இன்று அந்த அளவிற்கு சீரியசாக நடந்து கொள்ளும் ஆடவர்கள் கிடையாது.
    அப்படியே நடந்தாலும், அதைத் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவம் உள்ள பெண்ணும் கிடையாது!

    ReplyDelete
  27. ////Blogger Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    சம்பவம், அதை நீங்கள்
    சமைத்த விதம் அருமை!
    அதனினும் அருமை தங்கள்
    பெரியப்பச்சியின் சாமர்த்தியம்
    மிகவும் அருமை!!.
    அதனால் தான் தங்களின்
    நூலுக்காக காத்திருக்கிறேன்.
    (தகவல் ஏதும் இல்லயே குருவே)
    மேலும் கூடுதல் தகவல்
    தங்களின் கதை எனது
    கல்லூரி நண்பர்கள்
    அழகப்பன், மெய்யப்பன்,
    சோலையப்பன் மற்றும்
    முருகப்பனையும்,
    அவர்கள் கூறிய
    இது போன்ற சம்பவங்களையும்
    ஞாபகப்படுத்துகிறது.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.///

    ஜோதிட நூல்கள் டிஸம்பரில் வெள்விரும். பொறுத்தருள்க!
    தங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. அருமையான தகவல்கள்! செட்டியார் இல்லத் திருமணங்களில் பந்தி பரிமாறும் அழகு - துளி கூட சிந்தாமல், சிதறாமல், வெள்ளைப் பணியாரம், பால் பணியாரம் என, கேட்டுக் கேட்டு பறிமாறுவார்களாம், அதே சமயம் எதுவும் வீணாகாமல் பார்த்து செய்வார்கள்.

    சீர் வரிசைகள் பார்வைக்கு வைத்து எல்லோரையும் பார்க்க அழைப்பார்கள்.

    இன்னும் இது போல பல தகவல்கள் - காரைக்குடியில் வசித்த எங்கள் வீட்டு மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், பிரமித்து இருக்கிறேன்.

    அன்புடன்

    மதுரை சுப்பு

    ReplyDelete
  29. Guruvey,
    old is gold...All these people are god to us...they showed a very good path to us...Even though they have money they didn't followed a luxurious life....Because they know what is life..All of them live a peaceful and happy life...It is good to hear a legend story....You are great you are following your ancestors...

    Thank you.

    Moral:
    Every one need to follow our ancestors or atleast think of them...

    ReplyDelete
  30. வணக்கம் அய்யா
    பாரம்பரிய மிக்க
    இந்த குடும்பத்தில்
    நானும் . . நாங்களும் . . .
    என்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்

    பொன் நகையையும் . .
    பெண் பொறு(ரு)மையையும்
    ஒரு சேர தந்தது சுவையாக இருந்தது..

    கௌரி சங்கம் ருத்திராட்சத்தின் சிறப்பே சிறப்பு,

    வாழ்க . . வாழ்க . .

    ReplyDelete
  31. ////subbu said...
    அருமையான தகவல்கள்! செட்டியார் இல்லத் திருமணங்களில் பந்தி பரிமாறும் அழகு - துளி கூட சிந்தாமல், சிதறாமல், வெள்ளைப் பணியாரம், பால் பணியாரம் என, கேட்டுக் கேட்டு பறிமாறுவார்களாம், அதே சமயம் எதுவும் வீணாகாமல் பார்த்து செய்வார்கள்.
    சீர் வரிசைகள் பார்வைக்கு வைத்து எல்லோரையும் பார்க்க அழைப்பார்கள்.
    இன்னும் இது போல பல தகவல்கள் - காரைக்குடியில் வசித்த எங்கள் வீட்டு மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், பிரமித்து இருக்கிறேன்.
    அன்புடன்
    மதுரை சுப்பு/////

    உங்கள் தகவல் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. Self Realization said...
    Guruvey,
    old is gold...All these people are god to us...they showed a very good path to us...Even though they have money they didn't followed a luxurious life....Because they know what is life..All of them live a peaceful and happy life...It is good to hear a legend story....You are great you are following your ancestors...
    Thank you.
    Moral:
    Every one need to follow our ancestors or atleast think of them...
    Friday, September 25, 2009 11:38:00 AM /////

    நன்றி இளைஞரே! இந்தக் கதை உங்களைப் போன்ற இளைஞர்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் என் எழுத்தின் நோக்கம்!

    ReplyDelete
  33. ////iyer said...
    வணக்கம் அய்யா
    பாரம்பரிய மிக்க
    இந்த குடும்பத்தில்
    நானும் . . நாங்களும் . . .
    என்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்
    பொன் நகையையும் . .
    பெண் பொறு(ரு)மையையும்
    ஒரு சேர தந்தது சுவையாக இருந்தது..
    கௌரி சங்கம் ருத்திராட்சத்தின் சிறப்பே சிறப்பு,
    வாழ்க . . வாழ்க . .////

    உங்கள் வாழ்த்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. என்ன சாமி கிராம் கணக்குலே
    தங்கம் வாங்க யோசிக்கவே
    நேரம் இல்லே.கிலோ கணக்கிலே
    பேசிகிட்டு இருக்கீக.
    நடை, சம்பவங்கள் அருமை.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  35. //இன்று அந்த அளவிற்கு சீரியசாக நடந்து கொள்ளும் ஆடவர்கள் கிடையாது.
    அப்படியே நடந்தாலும், அதைத் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவம் உள்ள பெண்ணும் கிடையாது!//

    இன்றும் இருக்கிறார்கள். ஆனால் மிக மிகக் குறைவாக இருக்கிறார்கள். இன்னொன்று பெண்கள் விஷயத்தில் எதுவும்/எதையும் நாம் கையாலும் விதத்தில்/திறமையில் இருக்கிறது.

    நிற்க, கதை அருமை. அக்காலத்து வாழ்க்கை முறையை படம் பிடித்துக் காட்டுவதாக இருந்தது.

    ReplyDelete
  36. Dear Sir,

    அந்த காலத்தில் தங்கம் விலை குறையு வயதில் பெரிவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம், , now தங்கவிலை அதிகம் மற்றது எதிர்மறை.

    உங்கள் நினைவாற்றல் சூப்பர்.

    Rgds
    Nainar

    ReplyDelete
  37. ஆச்சிகளைப் போலவே அப்பச்சிகளூம் சுவாரஸ்யமானவர்கள்தான் போல!

    ஆஞ்சனேயருக்குப் பிறகு வடைமாலை அணிந்தது இந்த ஆச்சிதான் போல!

    வாழ்வியல் பதிவுகளே நாளைய வரலாற்றுப் பதிவுகள்.வளர்க தங்கள் பணி!!
    kmr.krishnan
    http://parppu.blogspot.com

    ReplyDelete
  38. ////thirunarayanan said...
    என்ன சாமி கிராம் கணக்குலே
    தங்கம் வாங்க யோசிக்கவே
    நேரம் இல்லே.கிலோ கணக்கிலே
    பேசிகிட்டு இருக்கீக.
    நடை, சம்பவங்கள் அருமை.
    நன்றி அய்யா./////

    1875ம் ஆண்டு முதல் 1925 ஆண்டு வரை தங்கத்தின் விலை பவுன் ரூ.13;00 மட்டுமே!
    அப்போது ஒரு மூட்டை (100 கிலோ) அரிசியின் விலை ரூ.6;00 மட்டுமே
    கொத்தனாரின் சம்பளம் 2 அணா (12 பைசா)
    சித்தாளின் சம்பளம் ஒரு அணா (6 பைசா)

    ReplyDelete
  39. /////ananth said...
    //இன்று அந்த அளவிற்கு சீரியசாக நடந்து கொள்ளும் ஆடவர்கள் கிடையாது.
    அப்படியே நடந்தாலும், அதைத் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவம் உள்ள பெண்ணும் கிடையாது!//
    இன்றும் இருக்கிறார்கள். ஆனால் மிக மிகக் குறைவாக இருக்கிறார்கள். இன்னொன்று பெண்கள் விஷயத்தில் எதுவும்/எதையும் நாம் கையாலும் விதத்தில்/திறமையில் இருக்கிறது.
    நிற்க, கதை அருமை. அக்காலத்து வாழ்க்கை முறையை படம் பிடித்துக் காட்டுவதாக இருந்தது.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  40. /////arumuga nainar said...
    Dear Sir,
    அந்த காலத்தில் தங்கம் விலை குறையு வயதில் பெரிவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம், , now தங்கவிலை அதிகம் மற்றது எதிர்மறை.
    உங்கள் நினைவாற்றல் சூப்பர்.
    Rgds
    Nainar//////

    ஹி..ஹி....புதன் 7ல்! உங்களுடைய பாராட்டிற்கு நன்றி நைனா(ர்)

    ReplyDelete
  41. /////kmr.krishnan said...
    ஆச்சிகளைப் போலவே அப்பச்சிகளூம் சுவாரஸ்யமானவர்கள்தான் போல!
    ஆஞ்சனேயருக்குப் பிறகு வடைமாலை அணிந்தது இந்த ஆச்சிதான் போல!
    வாழ்வியல் பதிவுகளே நாளைய வரலாற்றுப் பதிவுகள்.வளர்க தங்கள் பணி!!
    kmr.krishnan
    http://parppu.blogspot.com/////

    சுவாரஸ்யத்திற்கு ஆண், பெண் எனும் பேதமில்லை, கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  42. மாணிக்கம் செட்டியாரை நேரில் கண்டது மகிழ்ச்சி...அப்பா படையப்பா styleலே
    கலக்கல் போஸ்.
    இரவல் தந்தவன் கேட்கின்றான்..அதை இல்லையென்றால் அவன் விடுவானா?என்ற கண்ணதாசன் பாட்டு நினைவுக்கு வருகிறது..
    கடன் வாங்கும் போது உள்ள அக்கறை திருப்பித்தருவதில் கொஞ்சமும் இல்லை என்பது காலாகாலமாக மனிதனின் குணமாக இருந்து வருவதை மீண்டும் தங்களின் கதை(சம்பவம்) நிரூபித்துள்ளது..

    எனக்கு(என் வீட்டுக்கு செட்டிநாட்டு மன்வாசைக்கதைகள் புத்தகங்கள் கிடைத்து விட்டது.
    ஆசிரியருக்கு நன்றி.)

    முறைச் சிட்டையில் திகட்டல்=what?

    ReplyDelete
  43. /////minorwall said...
    மாணிக்கம் செட்டியாரை நேரில் கண்டது மகிழ்ச்சி...அப்பா படையப்பா styleலே
    கலக்கல் போஸ்.
    இரவல் தந்தவன் கேட்கின்றான்..அதை இல்லையென்றால் அவன் விடுவானா?என்ற கண்ணதாசன் பாட்டு நினைவுக்கு வருகிறது..
    கடன் வாங்கும் போது உள்ள அக்கறை திருப்பித்தருவதில் கொஞ்சமும் இல்லை என்பது காலாகாலமாக மனிதனின் குணமாக இருந்து வருவதை மீண்டும் தங்களின் கதை(சம்பவம்) நிரூபித்துள்ளது..
    எனக்கு(என் வீட்டுக்கு செட்டிநாட்டு மன்வாசைக்கதைகள் புத்தகங்கள் கிடைத்து விட்டது. ஆசிரியருக்கு நன்றி.)
    முறைச் சிட்டையில் திகட்டல்=what?/////

    பெண் - மாப்பிள்ளை என இருவீட்டாரும் தங்களுக்குள் திருமண சமயத்தில் செய்ய வேண்டிய சீர் வரிசைகளை, பேசி எழுத்தில் எழுதிக் கொள்ளும் சீட்டுகளுக்கு முறைச் சீட்டு அல்லது முறைச் சிட்டை என்று பெயர். கிராமங்களில், தேய்ங்காய்களை ஒரு தட்டிலும், பழங்களை ஒரு தட்டிலும், கற்கண்டு, பேரிச்சம்பழம் இத்யாதிகளை ஒரு தட்டிலும், இதுபோல 11 பெரிய தட்டுக்களில் சீர் கொண்டு போவதைப் பார்த்திருப்பீர்களே - அதுதான் சீர். செட்டிநாட்டில், அதை எல்லாம் தூக்கிச் சுமக்காமல், சீட்டில் எழுதி, அதற்குரிய
    பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். அந்தக் காலத்தில், அது ரூ 500 முதல், ரூ 2000ற்குள் ஸ்ட்டேட்டஸை வைத்து வரும். இன்றையத்தேதியில் அது ரூ30,000 முதல் ஒரு லட்ச ரூப்பாய்க்குள் வரும். பெண் வீட்டு சிட்டையும் இருக்கும் மாப்பிள்ளை வீட்டுச் சிட்டையும் இருக்கும். இருவீட்டாரும் அதன்படி செய்து கொள்வார்கள். அதிகமான வரவு மாப்பிள்ளை சைடில் இருக்கும். பெண் வீட்டார், தங்களுக்கு வரவேண்டியதைக் கழித்துக் கொண்டு, மிச்சத்தை மாப்பிள்ளை வீட்டாரிடம் சேர்த்து விடுவர்கள். இப்போது அதெல்லாம் single window package ஆக மாறிவிட்டது. பெண் வீட்டார், எதையும் எதிர்பார்க்காமல், மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒரு தொகையை ரவுண்டாகக் கொடுத்துக் கணக்கைத் தீர்த்துவிடுவார்கள்.

    இது தவிர பெண்ணிற்கு தங்க நகைகள், வைர நகைகள், வரதட்சணைப் பணம் என்பதெல்லாம் தனிக் கணக்கு. நன்றாகப் படித்து, நல்ல வேலையில் இருக்கும் பெண்களை,
    வரதட்சனை எதுவுமின்றித் திருமணம் செய்துகொள்ளும் நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது
    குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று!

    திகட்டல் = குறை, வித்தியாசம், பாக்கி

    ReplyDelete
  44. வாத்தியாரே..

    உங்க பெரியப்பச்சி செஞ்ச மாதிரி இப்ப யாராவது செஞ்சா அன்னிக்கே தொலைஞ்சான்தான்..!

    அதெல்லாம் அந்தக் காலம்ல..! நம்ம தாத்தா, பாட்டிகளுக்குத்தான் எவ்வளவு பொறுமை..

    சம உரிமை பெறுவதற்கே அவர்களுக்கு இத்தனை காலம் ஆகிவிட்டது..

    ReplyDelete
  45. Periyavargalin arumaiai Unaravaithatharkku / Puriya Vaithatharkku / Iniyavathu unara vendum endra ennathai yerpaduthiya Vathiyaar Iyyavukku Nandri.

    ReplyDelete
  46. புரிந்தது...ஆசிரியரின் விளக்கத்துக்கு நன்றி..

    ReplyDelete
  47. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    உங்க பெரியப்பச்சி செஞ்ச மாதிரி இப்ப யாராவது செஞ்சா அன்னிக்கே தொலைஞ்சான்தான்..!
    அதெல்லாம் அந்தக் காலம்ல..! நம்ம தாத்தா, பாட்டிகளுக்குத்தான் எவ்வளவு பொறுமை..
    சம உரிமை பெறுவதற்கே அவர்களுக்கு இத்தனை காலம் ஆகிவிட்டது..////

    உண்மைதான் உண்மைத் தமிழரே! எதிர்காலத்தில் ஆண்கள் சம உரிமைகேட்டுப் போராட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்:-))))

    ReplyDelete
  48. //////Sakthi Ganesh said...
    Periyavargalin arumaiai Unaravaithatharkku / Puriya Vaithatharkku / Iniyavathu unara vendum endra ennathai yerpaduthiya Vathiyaar Iyyavukku Nandri.//////

    உங்களுடைய பாராட்டிற்கு நன்றி சக்தி கணேஷ்!

    ReplyDelete
  49. /////minorwall said...
    புரிந்தது...ஆசிரியரின் விளக்கத்துக்கு நன்றி../////

    மைனருக்குப் புரியும் வரைக்கும் நானும் விட மாட்டேன் இல்லையா?

    ReplyDelete
  50. அருமை!

    எங்கள் நாயக்கர் குலத்திலும் திருசங்கிலி ( கருகமணி ) என்று காசு மலை போல ஒரு ஆபரணம் உண்டு. ஒரு கிலோ அளவு எங்கள் பாட்டி வைத்திருந்ததாக அம்மா சொல்லுவார்.

    எஸ்.பி.முத்துராமன் உங்கள் உறவினரா?

    ReplyDelete
  51. ////Raju said...
    அருமை!
    எங்கள் நாயக்கர் குலத்திலும் திருசங்கிலி ( கருகமணி ) என்று காசு மலை போல ஒரு ஆபரணம் உண்டு. ஒரு கிலோ அளவு எங்கள் பாட்டி வைத்திருந்ததாக அம்மா சொல்லுவார்.
    எஸ்.பி.முத்துராமன் உங்கள் உறவினரா?////

    தகவலுக்கு நன்றி மிஸ்டர் ராஜு!
    எஸ்.பி.முத்துராமன் எங்கள் ஊர்க்காரர். நண்பர். எனது இரண்டாவது புத்தகத் தொகுப்பிற்கு சிறப்பாக அணிந்துரை வழங்கியவர்!

    ReplyDelete
  52. மிகவும் அருமையான நம் பெரியோர் வாழ்வு முறைகள். நன்றி. சித.சுப்பையா பூம்புகார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com