
உயர்ந்த கோவிலில் ஒப்பற்ற விழா!
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலின் திருக்குட
நன்னீராட்டுப் பெருவிழா நாளை 1.7.2009 புதன் கிழமை காலை
9:30 முதல் 10:30 மணிக்குள் நடைபெறவுள்ளது.
திருக்கோவில் நிர்வாகத்தினரிடமிருந்து அடியவனுக்கு வந்த
அழைப்பிதழை உங்களுக்கும் உரிய அழைப்பிதழாகக் கீழே
கொடுத்துள்ளேன்.
“கோடி மாதவங்கள் செய்து குன்றினார் தம்மையெல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்னெறியாகுமன்றே”
என்று அப்பர் சுவாமி அவர்களால் பாடப்பெற்ற அற்புதமான
திருத்தலம் அது!
ஸ்ரீ ராமபிரான் ஈஸ்வரனை சிவலிங்க வடிவில் பிரதிஷ்டை செய்தார்
என்பதாலும், சைவம், வைணவ மதத்தினர்களும் வந்துகூடி வழிபடுவதாலும்
இந்தியாவில் உள்ள இந்து ஆலயங்களில் இராமேசுவரம் முக்கியமான
தலமாகத் திகழ்கிறது. இந்தக் கோவிலில் அமைந்துள்ள 22 புண்ணிய
தீர்த்தங்களில் நீராடுவதால் உடலும் உள்ளமும் தூய்மை அடையும்
அதோடு தோஷங்களுக்குச் அது சிறந்த பரிகார ஸ்தலமாகும்.
ஆகவே விருப்பமுள்ளவர்கள் சென்று வாருங்கள்.
நாளைக்கே செல்ல வேண்டும் என்பதில்லை. ஒரு மண்டலத்திற்குள்
அதாவது 48 நாட்களுக்குள் நேரம் கிடைக்கும்போது எப்போது வேண்டு
மென்றாலும் சென்று வரலாம்.
தோஷம் என்றால் என்னவென்று கேட்பவர்களும், தோஷத்தின் மீது
நம்பிக்கை இல்லாதவர்களும், வழக்கம்போல மாநகராட்சி
அல்லது நகராட்சி குழாய்த் தண்ணீரிலேயே நீராடி மகிழலாம்.
என்னிடம் வந்து இது சம்பந்தமாகக் கேள்வி கேட்டுப் பிறாண்ட வேண்டாம்
இது இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கான பதிவு.
அதை மனதில் வையுங்கள்!

+++++++++++++++++++++++++++++++++++++
48 நாட்கள் சுவாமியை வணங்குவது ஏன்?
எந்த தெய்வத்தின் பூஜிப்பதாக இருந்தாலும் அதனைத் தொடர்ந்து
ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜிக்க வேண்டும்.
இதற்கான காரணம் தெரியுமா? சூரியன் முதல் கேது வரை நவக்கிரகங்கள்
ஒன்பதாகும். மேஷம் முதல் மீனம் வரை ராசி மண்டலம் பன்னிரண்டாகும்.
அசுவதி முதல் ரேவதி வரை நட்சத்திர மண்டலம் 27 ஆகும்.
இந்த மூன்று மண்டலங்களின் கூட்டுத்தொகையான 48ஐ வழிபாட்டில்
ஒரு மண்டலம் என்று வகுத்துள்ளனர்.
9 planets + 12 rasis + 27 stars = 48
ஒருவருக்கு ஒரு செயல் நடைபெற கிரகங்களும், ராசிநாதர்களும்,
நட்சத்திர தேவதைகளும் துணை செய்ய வேண்டும் என்று கருதியே
மண்டல வழிபாடு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
குறிப்பிட்ட நோக்கத்தை மனதில் கொண்டு அந்நோக்கம் நிறைவேறுவதற்காக
ஒரு மண்டலம் தொடர்ந்து பூஜிப்பது மரபு. இந்நாட்களில், எந்த தெய்வத்தை
வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் கோயிலுக்குச் செல்லுதல்,
அந்த தெய்வத்திற்குரிய மூலமந்திரங்களை உச்சாடனம் செய்தல்,
மந்திரம் சொல்ல முடியாதவர்கள் அந்த தெய்வத்திற்குரிய எளிய
துதிப்பாடல்கள், கவசங்களைப் பாராயணம் செய்தல், சகஸ்ர நாமங்களை
ஜபித்தல், புஷ்பத்தால் அர்ச்சித்தல், தீபமிடுதல் போன்ற எளிய விதங்களில்,
நம் சக்திக்கு எவ்வழிபாட்டுமுறைகள் இயன்றதோ அம்முறையில் வழிபாடு
செய்தல் போதுமானது. ஒருமுகப்பட்ட மனதுடன் ஒருமண்டலம் செய்து
வரும் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறி வருவதை அனுபவத்தில்
உணரலாம். மண்டல வழிபாடு செய்வது என்பது மிகவும் மகத்தானது.
ஆனால், மண்டலவழிபாடு இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து செய்யப்பட
வேண்டும். ஒரு செயலில் முழுமையான வெற்றியை வேண்டுவோர் தமக்கு
விருப்பமான இஷ்டதேவதையை முன்னிறுத்தி தொடர்ந்து 48 நாட்கள்
பூஜித்து வர நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி.
(48 நாட்களைப் பற்றிய விளக்கக் கட்டுரை: நன்றி’ தினமலர்’)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!