மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.2.22

சினிமா: ஒரு வெற்றிப் படத்தின் கதை



சினிமா: ஒரு வெற்றிப் படத்தின் கதை

இயக்குனர் ஆர் சுந்தரராஜன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

அவரது இயக்கத்தில் 'நான் பாடும் பாடல்' வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொன்னார் ஆர் சுந்தரராஜன்.
"எனக்கு இப்போது சொந்த வீடு வேண்டும். அதை யார் வாங்கி கொடுக்கிறீர்களோ அவர்களுக்குத்தான் அடுத்த படம் செய்வேன்."

உடனடியாக ஏவிஎம் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அட்வான்ஸாக இரண்டு லட்ச ரூபாய் பணமும் வந்தது.

கொஞ்சம் தயங்கினார் ஆர் சுந்தரராஜன். "அடுத்த படத்திற்கான கதையை இன்னும் தயார் செய்யவில்லையே..!"
 
"அதைப்பற்றி பரவாயில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
இதை வாங்கிக் கொள்ளுங்கள்."
அந்தப் பணத்தை வாங்கி புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் கொடுத்து விட்டார் ஆர் சுந்தரராஜன்.

அடுத்த ஒரு சில நாட்களில்...
கதை தயாரானது. அதுதான் வைதேகி காத்திருந்தாள். ஏ.வி.எம்.முக்கு போய் கதையை சொன்னார் சுந்தரராஜன்.
"நல்லா இருக்கு. ஹீரோ யார் ?" 

விஜயகாந்தை போட்டால் பொருத்தமாக இருக்கும். படமும் பிரமாத வெற்றி பெறும் என்றார் சுந்தரராஜன்.

"விஜயகாந்தா ?
வேண்டாம்.
ஏற்கனவே வெளிவந்து வெற்றி பெற்ற 'நான் பாடும் பாடல்' படத்தில் சிவகுமார்தானே  ஹீரோ ? வைதேகி காத்திருந்தாள் படத்திலும் அவரையே நடிக்க வையுங்கள்."

ஆர் சுந்தரராஜன் உறுதியாகச் சொன்னார். "அந்த வெள்ளைச்சாமி கேரக்டருக்கு விஜயகாந்த்தான் பொருத்தமாக இருப்பார்."

பொறுமையாக அதைக் கேட்ட ஏ.வி.எம். : "இல்லை. அதில் எங்களுக்கு சம்மதமில்லை. அப்படியானால் நாங்கள் கொடுத்த இரண்டு லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்து விடுங்கள்."

ஆர் சுந்தரராஜன் திகைத்துப் போனார்.
ஏனெனில் ஏவிஎம் கொடுத்த அந்த பணத்தை வாங்கித்தான் புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் தொகையாக கொடுத்து விட்டிருந்தார் அவர். வேறு பணம் எதுவும் அவர் கைவசம் இல்லை.

என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினார் ஆர் சுந்தரராஜன்.
ஏவிஎம் கொடுத்த இரண்டு லட்சம் ரூபாயை எப்படி அவர்களுக்கு திருப்பி கொடுப்பது ?

அன்று மாலை வாடிய முகத்தோடு வழக்கமான வாக்கிங் சென்றபோது எதிரே வந்தார் தூயவன் என்ற கதாசிரியர்.
என்ன நடந்தது என்று உண்மையான அக்கறையோடு தூயவன் விசாரிக்க, நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் எடுத்துச் சொன்னார் ஆர் சுந்தரராஜன்.
"இவ்வளவுதானே? இதற்கு போய் ஏன் இப்படி கவலைப்படுகிறீர்கள்? வாருங்கள் என்னுடன்."

அடுத்த சில நிமிடங்களில் பஞ்சு அருணாச்சலத்தின் வீட்டில் அமர்ந்து இருந்தார்கள்.
'வைதேகி காத்திருந்தாள்' கதையை மறுபடியும் ஆர் சுந்தரராஜன் சொல்ல...
உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் ஆர் சுந்தரராஜன் கைகளில் கொடுக்கப்பட,
ஏவி எம்மிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஆர் சுந்தரராஜன்.

தூயவன் வைதேகி காத்திருந்தாள் படத்தின் தயாரிப்பாளர் ஆனார்.

வீடு வாங்க வேண்டும் என்றபோது அதற்கான பணத்தை உடனடியாக ஏவிஎம். மூலமாக கொடுத்தது இந்த பிரபஞ்சம்.
அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தபோது கொஞ்சமும் தாமதிக்காமல் உடனடியாக வேறு ஒரு தயாரிப்பாளரை தேடி கொடுத்ததும் அதே பிரபஞ்சம்.

நமக்கு எப்போது எது தேவையோ அதை நம்மிடம் கொண்டுவந்து கொடுக்க ஏதாவது ஒரு வழியை இந்த பிரபஞ்சம் எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறது.

ஆர். சுந்தரராஜனுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே உதவுவதற்கு இந்த பிரபஞ்சம் எப்போதுமே காத்திருக்கிறது.

அதற்குத் தேவை 
அசைக்க முடியாத தன்னம்பிக்கை உள்ள மனிதர்கள் மட்டுமே!!!

படித்தேன் அகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.2.22

புகழ்பெற்ற மனிதர்கள்: தமிழ்வாணன்


புகழ்பெற்ற மனிதர்கள்: தமிழ்வாணன்

பிரபல வார இதழ் கல்கண்டு ஆசிரியரும், துப்பறியும் நாவல்கள் படைத்தவருமான தமிழ்வாணன்.

சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் (1921) பிறந்தார். இயற்பெயர் ராமநாதன். தமிழ்த்தென்றல் திருவிக தனக்கு ‘தமிழ்வாணன்’ என்ற பெயரைச் சூட்டியதாக குறிப்பிட்டுள்ளார். என்எஸ்எம்விபி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருச்சியில் சில காலம் வசித்தார். சாக்பீஸ் கம்பெனியில் வேலை செய்தார். எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், வல்லிக்கண்ணன் ஆசிரியராக இருந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.

சென்னைக்கு 1946-ல் வந்தார். ‘அணில்’ என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது அறிவாற்றலாலும், எழுதும் திறனாலும் அந்த இதழ் பரபரப்பாக விற்பனையானது. 

‘அணில் அண்ணா’ என அழைக்கப்பட்டார். பள்ளித் தோழர் வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட ‘ஜில் ஜில் பதிப்பகம்’ தொடங்கினார்.

ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதினார். ‘தமிழ் எழுத்தாளர்கள் மிடுக்குடன், கம்பீரமாக இருக்க வேண்டும்’ என்பார். அதை செயல்படுத்தியும் காட்டினார். 

இவரது ஒருபக்க கட்டுரைகள் மிகவும் பிரசித்தம். இவரது பேச்சு, உற்சாகம், திட்டமிடல், சுறுசுறுப்பு ஆகியவை அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலை 1947-ல் ‘கல்கண்டு’ வார இதழைத் தொடங்கி அதன் முழுப் பொறுப்பையும் இவரிடம் ஒப்படைத்தார். 

‘துணிவே துணை’ என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த அந்த இதழை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் படித்தனர்.

 இளைஞர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் ஏராளமான துணுக்கு செய்திகளை அதில் வெளியிட்டார்.

கேள்வி-பதில் பகுதியில் மருத்துவம், அரசியல், சினிமா, அறிவியல் என சகல துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார். அதன் ஆசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றினார்.

மணிமேகலை பிரசுரத்தை 1955-ல் தொடங்கினார். 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துள்ளார். பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுதுபவர்.

 கோணி மூட்டையில் வந்து குவியும் வாசகர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் எழுதுவார். வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். கைரேகை பார்ப்பதில் வல்லவர்.

‘தமிழ்ப் பற்பொடி’ என்ற பெயரில் பற்பொடி தயாரித்து விற்பனை செய்தார்.

 தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்து ‘பிள்ளைப் பாசம்’, ‘துடிக்கும் துப்பாக்கி’ ஆகிய 2 திரைப்படங்களை தமிழில் வெளியிட்டார். 

‘காதலிக்க வாங்க’ என்ற திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதி, தயாரித்து வெளியிட்டார்.

 தொப்பி, கருப்புக் கண்ணாடி இவரது தனி முத்திரை. ஒரு அஞ்சல் அட்டையில் முகவரியே எழுதாமல், வெறும் தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் மட்டுமே வரைந்து அனுப்பினால்கூட அது நேராக ‘கல்கண்டு’ பத்திரிகைக்கு வந்துவிடுமாம்.

இவரது துப்பறியும் நிபுணர் ‘சங்கர்லால்’ கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. 

இவர் எழுதிய நாவல்கள்..

நாற்பதினாயிரம் ரூபாய்
ஆந்தை விழிகள்
பெர்லினில் சங்கர்லால்
கெய்ரோவில் தமிழ்வாணன்
சிகாகோவில் தமிழ்வாணன்
டயல் தமிழ்வாணன்
என்னைத் தேட வேண்டாம்
பிராங்க்பர்டில் தமிழ்வாணன்
ஜெனிவாவில் தமிழ்வாணன்
ஹவாயில் தமிழ்வாணன்
ஹலோ சங்கர்லால்
ஹாங்காங்கில் சங்கர்லால்
இன்னொரு செருப்பு எங்கே
இரும்புக்கை மனிதன்
இருண்ட இரவுகள்
கதவு திறந்தது கை தெரிந்தது
மலையில் மறைந்த மனிதன்
மணிமொழி நீ என்னை மறந்துவிடு
மர்ம மனிதன்
மர்ம தீவு
மருதமலை சாரலிலே நடுவிரல்
மூடிக்கிடக்குதே உன் நெஞ்சம்
முரட்டு பெண்
நடுவிரல்
நேபிள்ஸில் சங்கர்லால்
நியூயார்க்கில் சங்கர்லால்
ஒரு குரல்
பாரிஸில் சங்கர்லால்
பேய்
பேய் மழை
பெயர் இல்லாத தெரு
சங்கர்லால் வந்துவிட்டார்
டோக்கியோ ரோஜா
விலகி நில்

தன் எழுத்தாற்றலால் அனைத்து தரப்பினரின் அன்பையும் மரியாதையையும் பெற்ற தமிழ்வாணன், மாரடைப்பால் 56-வது வயதில் (1977) காலமானார்.!!

படித்தேன்; வியந்தேன். பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.2.22

Devotional: தமிழ்நாட்டிலுள்ள புகழ் பெற்ற அம்மன் கோவில்கள்


Devotional: தமிழ்நாட்டிலுள்ள புகழ் பெற்ற அம்மன் கோவில்கள்

தமிழ்நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற 10 அம்மன் கோவில்கள்.

நமது நாட்டில் பெண் தெய்வங்கள் அதிகம் வணங்கப்படுகிறது. பெண் தெய்வங்களில் மிகவும் புகழ் பெற்ற தெய்வம் அம்மன்.
நம்முடைய தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த பல அம்மன் கோவில்கள் உள்ளன. அப்படி மிகவும் புகழ்பெற்ற 10 அம்மன் கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

*1.மீனாட்சி அம்மன் திருகோவில் மதுரை*

மதுரையின் மிக முக்கிய அடையாளம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவில் வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது. சுந்தரேஸ்வரர் என்ற பெயரிலுள்ள சிவபெருமானின் மனைவி மீனாட்சியின் பெயரிலேயே குறிப்பிடப்படுவது பெண் சக்தியை முன்னிறுத்தும் விதமாக அமைந்துள்ளது. 
இங்கு முதல் பூஜை மீனாட்சி அம்மனுக்கே.

*2.காஞ்சி காமாட்சி திருக்கோவில்*

காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும் இது. 
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடமாகும். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

*3.திருச்சி சமயபுரம் திருக்கோவில்*

சமயபுரம் மாரியம்மன் கோவில்
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருச்சி மாவட்டத்தில் கண்ணபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 
இங்கு நடைபெறும் பூச்சொரிதல் என்னும் நிகழ்வு மிகவும் பிரபலம். 
மாசி மாதத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். மேலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரபலம். ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் செவ்வாய் அன்று சித்திரை தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதை பார்க்க 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள்

*4.தஞ்சை புன்னைநல்லூர் திருக்கோவில்*

புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்
புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலானது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 
இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக புற்று வடிவில் அருள்பாலிக்கிறார். 
இங்கு அம்மன் துர்க்கை, மாரியம்மன் அதாவது முத்துமாரி எனவும் அழைக்கப்படுகிறார்.

*5.பொள்ளாச்சி மாசாணி அம்மன் திருக்கோவில்*

மாசாணியம்மன் திருக்கோவில், பொள்ளாச்சி
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி , ஆனைமலையில் அமைந்துள்ளது. 
இங்கு தை மாதத்தில் 18 நாள்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள அம்பாள் மயானத்தில் சயனித்த நிலையில் காட்சி தருவதால் மயானசயனி என்றழைக்கப்பட்டாள்.

*6.ஈரோடு பண்ணாரி அம்மன் திருக்கோவில்*

பண்ணாரி மாரியம்மன் கோவில்
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 
இங்கு அம்மன் சுயம்புவாக அருள் பாலிப்பதால் விபூதி கிடையாது. 
புற்று மண்தான் பிரசாதமாக தரப்படுகிறது. இங்கு 20 நாள் கொண்டாடப்படும் பங்குனி குண்டம் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.☘

*7.மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்*

பகவதி அம்மன் கோவில் மண்டைக்காடு
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 
பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கோவில் இது . 
15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டி கொண்டிருக்கும் புற்றுதான் பகவதி அம்மன். 
இங்கு நடைபெறும் மாசித்திருவிழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள்.

*8.ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில், கொல்லங்கோடு*

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடுஇ என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் தூக்க நேர்ச்சை மிகவும் பிரபலம். தூக்க நேர்ச்சையில் 45 அடி உயர தூக்க வில்லில் குழந்தையை சுமந்தபடி கோயிலை வளம் வருவார். இங்கு அம்மனுக்கு இரண்டு கோவில்கள் இருப்பது சிறப்பு.

*9.ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மேல்மலையனூர்*

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூரில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள தேவியை புற்று தேவி என்றே கூறுகிறார்கள். கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு வருகின்றனர். அங்காள பரமேஸ்வரிக்கு பல இடங்களிலும் ஆலயங்கள் இருந்தாலும் மேல்மலையனூர் ஆலயமே மிக முக்கியமான ஆலயமாகும்.

*10.தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில்*

தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல்கள் சங்கமிக்கும் குமரி கடற்கரையின் அருகில் அமைந்துள்ளது. 
இங்குள்ள அம்மன் கன்னி அம்மன். 

51 சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகு பகுதி விழுந்த சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது. இங்கு உள்நாட்டு பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு பக்தர்களும் தொடர்ந்து வருகை புரிகிறார்கள்.

சர்வ மங்கல தாயே அனைவரையும் காத்து ரட்சிக்க வேண்டும்

ஓம் சக்தி ஆதிபராசக்தி.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!