மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.8.18

நோய்கள் தீர இங்கே செல்லலாம்!!!!


நோய்கள் தீர இங்கே செல்லலாம்!!!!

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி .......!!!!

 சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது.

இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.

சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம் * மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும்.

பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.

*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.

சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது.

உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும்.

24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

சதுரகிரி தல வரலாறு :

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான்.

இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி.

மனைவி சடைமங்கை.

இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள்.

ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார்.

பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.

தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார்.

மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான்.

சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது.

ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார்.

இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான்.

அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன்.

நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார்.

அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார்.

இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது.

இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும்.

செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன.

இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம்.

சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம்.

அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.

இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது.

இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம்.

இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது.

கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம். இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம்.

சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது.

இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள்.

பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம்.

மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

இரட்டை லிங்கம்:
ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர்.

இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். ""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார்.

அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பிலாவடி கருப்பு:
வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

பெரிய மகாலிங்கம்:
நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை:
மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம்.

இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம்.

பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது. தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது.

குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும்.

இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள்.

இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும்.

தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது.

அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது. சுந்தரமூர்த்தி கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும்.

சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை'
என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது.

அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர்.

சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது.
இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் :
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள்.

தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது.

பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர்.

பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.

இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது. லிங்க வடிவ அம்பிகை சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள்.

சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

சதுரகிரியில் தீர்த்தங்கள் சந்திர தீர்த்தம் சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம். சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு. சந்தன மகாலிங்கம் தீர்த்தம். இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது.

இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.

மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

அபூர்வ மூலிகைகள் :
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன.

இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது. இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்த விருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர்.

கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.

இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள்.

சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ஆராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது.

இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.8.18

எதை வெல்ல நினைக்கிறோமோ அதில்தான் நாம் அடங்கப் போகிறோம்!!!!

எதை வெல்ல நினைக்கிறோமோ அதில்தான் நாம் அடங்கப் போகிறோம்!!!!

பிதாமகர்

களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர் என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜீனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான்.

பிதாமகரை அத்தனை எளிதாய் வீழ்த்திவிட்டானா அர்ஜீனன் ?.. என கோபப்பட்டான் கர்ணன்.

இல்லை. சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை வீழ்த்திவிட்டார்கள்.. என்றான் தகவல் கொண்டுவந்த வீரன்.

அதர்மத்தின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று எங்களை குறைகூறிய பாண்டவர்களே, அதர்மத்தினைக் கையாளுவதுதான் தர்மமா ?

அர்ஜீனா.. இதோ வருகிறேன். சந்திக்கிறேன் உன்னை களத்தில். உன்னைக் கொல்லவேண்டும் என நான் நினைத்ததற்கான காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கூடிக்கொண்டே போகின்றன.. என தனக்குள் பொங்கினான்.

இறுதியாக ஒருமுறை, பீஷ்மரின் திருமுகத்தைக் கண்டுவரக் கிளம்பினான் குருஷேத்திரம் நோக்கி.

கௌரவர் சேனையும், பாண்டவர் சேனையும் அணிவகுத்து நின்று, ஒவ்வொருவராய் பீஷ்மரைக் கண்டு கலங்கியபடியே நகர்ந்தார்கள் களத்தில். போதும் புறப்பட்டுவிடலாம் என நினைத்த பீஷ்மம், தனது தாயின் மடியினைத் தேடியது. தாய் தந்த அமுதோடு உயிர்கொண்டோம். அதோடே, உயிர் துறப்போம் என்று எண்ணிய பீஷ்மர், அர்ஜீனனை அருகில் அழைத்தார்.

அர்ஜீனா.. தாகம் அதிகம். இதுவரை கொண்ட அத்தனை தாகத்தினையும் மறக்கச் செய்யும் அதீத தாகம். என் தாய் கங்கையால் மட்டுமே தீர்க்கமுடிந்த தாகம். தீராமல், இவ்விடம் விட்டு நகர்தல் என்பது இயலாது. புரிகிறதா ?.. என்றார்.

அர்ஜீனனின் கண்கள் கண்ணனை நோக்க, அவனும் தலையசைக்க, தனது பாணங்களை நிலம் நோக்கி செலுத்தினான் அர்ஜீனன். நிலம் பிளந்து, பாறைகள் தாண்டி, ஆழத்தில் பயணித்துக் கொண்டிருந்த கங்கையினை தொட்டது அர்ஜீனனின் அம்புகள்.

அம்பு பயணித்த இடைவெளியின் ஊடே, பீஷ்மரின் சுவாசமும் கலந்து பயணிக்க, சீறி எழுந்தாள் கங்கை. கிடைத்த இடைவெளியில் பொங்கி வழிந்து ஊற்றாய் பெருகி, பாலாய்ப் பொழிந்தாள். மண்தொட்டு கிளம்பிய கங்கை, நேராக, தன் மகனின் தாகம் தீர்க்கத் தாயாக மாறி, பாலூட்ட ஆரம்பித்தாள் பிதாமகர் பீஷ்மருக்கு.

கங்கை உள்நிரம்பியதும், வெம்மையாய் இருந்த கொஞ்ச நஞ்ச எண்ணங்களும் குளிர்ந்துபோக,

போதும் தாயே போதும். கொண்டதொரு பணி நிறைவாய் முடிந்தது. விடைகொடு எனக்கு.. என்று மனதாலேயே தன் தாயை வணங்க, கங்கை அடங்கினாள்.

பீஷ்மத்தைப் பெற்றதனால், புனிதமானாள் கங்கை என நாளைய சரித்திரம் சொல்லுமடா உன் பெயரை.. என வாழ்த்தினாள்.

பீஷ்மரின் கண்கள் விண்ணை நோக்கின. தேவர்களும், விண்ணவர்களும் புடைசூழ நிற்பது கண்டு வணங்கினார். சூரிய தேவனுக்கு அருகிலேயே, மரண தேவனும் தன் அனுமதிக்கு காத்திருப்பது தெரிந்தது.

வாரும் மரணதேவரே.. வாரும். இதுநாள்வரை உம் கடமை நிறைவேற்றத் தடையாயிருந்தமைக்கு மன்னியும் என்னை. நானே அழைக்கிறேன் உம்மை. வந்தெம்மை ஆட்கொள்ளும்.. என பீஷ்மரின் மனம் இறைஞ்சியது.

சற்றுப் பொறும் பீஷ்மரே. இருக்கும் அத்தனை பேரையும் விருப்பு வெறுப்பின்றி ஆசீர்வதித்து செல்கிறீரே.. வந்து கொண்டிருக்கிறான் எம் மைந்தன். அவனையும் ஆசிகொடுத்துவிட்டுச் செல்லாமே.. வேண்டினான் சூரியதேவன்.

அதேநேரம், கர்ணனும் நுழைந்தான் அவ்விடம். அம்புப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த பீஷ்மரைக் கண்டதும் ஆடிப்போனான் கர்ணன். மனம் கலங்கியது. அவரை எதிர்த்து உதிர்த்த வார்த்தைகள் நினைவில் வந்து நெஞ்சினைக் கிளறியது. அவரது கால் தொட்டு வணங்கினான். அருகே சென்றான்.

பிதாமகரே.. அறியாமல் கோபத்தில் நான் உதிர்த்த வார்த்தைகள், உம்மைக் காயப்படுத்தியிருப்பின் மன்னியுங்கள் என்னை... என்றான் கர்ணன்.

தவறான புரிதலால் ஏற்பட்ட விளைவிற்கு காரணமாக எதையுமே கற்பிக்க இயலாது கர்ணா.. இதோ.. நீ விரும்பியது காத்திருக்கிறது. நாளைமுதல் நான் களத்தில் இருக்கப் போவதில்லை... என்றார் பீஷ்மர்.

அவசரப்பட்டு பேசிவிட்டேனோ என்று அதற்காகப் பலமுறை வருந்தியிருக்கிறேன் பிதாமகரே. உம்மோடு களம்புகுந்து, பார்போற்றும் உமது வீரத்தினை அருகிருந்து காணும் கொடுப்பினை கிட்டியும், அவசரப்பட்டு தவறவிட்டுவிட்டேனே என வருந்தாத நாளில்லை ஐயனே.. என்றான் கர்ணன் உருக்கமாக.

எல்லாம் நன்மைக்கே கர்ணா.. என் இடத்தை நிரப்பாமல் செல்கிறேனே என்ற கடைசிக்குறையும் தீர்ந்தது உன்னால். களம் காண்பாய் கர்ணா.. என்றார் பீஷ்மர்.

நீங்கள் இட்ட பணி தொடர, வெற்றி பெற வாழ்த்தியருள வேண்டுகிறேன் பிதாமகரே.. என்றான் கர்ணன்.

எவரும் பெறமுடியாத புகழினை இக்களத்தினில் நீ பெறுவாய் கர்ணா.. உன் தர்மம் அதற்குத் துணைநிற்கும்.. என கர்ணனை ஆசீர்வதித்த பீஷ்மர், கண்மூட ஆரம்பித்தார். மனதாலேயே மரணதேவனை ஆட்கொள்ள அழைக்க, பீஷ்மரின் ஆன்மாவினை தனதாக்கிக் கொண்டான் மரணதேவன். உடல் மட்டுமே உயிர்ப்போடு இருந்தது.

விண்ணெங்கும், மண்ணெங்கும் பீஷ்ம.. பீஷ்ம..பீஷ்ம.. என்னும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

கலங்கிய கண்களோடும், கனத்த இதயத்தோடும் செய்வதறியாது நின்ற அர்ஜீனனை அவ்விடம் விட்டு சற்று தூரமாய் அழைத்துவந்தான் கண்ணன்.

இழப்பின் வலி என்னவென்பதை பிதாமகர் உணர்த்திப் போனபின்பும், மண்ணிற்கான இப்போர் தொடரத்தான் வேண்டுமா கண்ணா ?.. கலங்கியபடியே கேட்டான் அர்ஜீனன்.

பீஷ்மர் ஆவது அத்தனை எளிதென்று எண்ணிவிட்டாயா அர்ஜீனா ?.. கேட்டான் கண்ணன்.

நான் கேட்பது என்ன ? நீ சொல்வது என்ன ?.. எரிச்சலோடு கேட்டான் அர்ஜீனன்.

புரிந்துகொள்ளும் மனநிலையில் நீயில்லை எனப் பொருள் அர்ஜீனா.. என்றான் கண்ணன்.

என்ன புரியவில்லை ? இன்னும் என்ன புரியவேண்டும் ? எவர் பார்த்து இவர்போல் ஆகவேண்டும் என நினைத்தேனோ, அவரை என்னைக் கொண்டே வீழ்த்த வைத்தது புரியவில்லையா எனக்கு ? மனம் முழுதும் நிறைந்திருந்த பிதாமகரை, மண்விட்டு அனுப்ப, காரணமாகிப் போனேனே நான்.. இதுகூடவா எனக்குப் புரியவில்லை ?.. படபடத்தான் அர்ஜீனன்.

பீஷ்மர் மண்விட்டுப் போய் வெகுகாலமாகிவிட்டது அர்ஜூனா... என்றான் கண்ணன்.

திகைப்பாய்ப் பார்த்தான் அர்ஜீனன்.

ஆம் அர்ஜீனா.. மண்ணாள மட்டும் பீஷ்மர் நினைத்திருந்தால், தடுப்பார் எவருமில்லை அன்று. மண்ணோடு தன் தொடர்பை என்றோ விட்டொழித்தார் பீஷ்மர். அதனாலேயே, தன் சுக துக்கங்களை அவரால் மறக்க முடிந்தது. தன்னைப் பற்றிய நினைவே இன்றி, தம் குலத்திற்காக மட்டுமே வாழ்வினை அர்ப்பணிக்க முடிந்தது.

பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது அர்ஜீனா.. விருப்பு, வெறுப்பின்றி எதனையும் அணுகமுடிவதே #பீஷ்மம்.
கொண்ட கொள்கைக்காக, தனைப்பற்றிய சிந்தனையே இன்றி, தொடர்ந்து கடமையாற்றுவதே #பீஷ்மம்.

பீஷ்மரின் கொள்கை தன் குலம் காத்து நிற்பது மட்டுமே. அதற்கு எது சரியோ, அதை மட்டுமே சிந்தனையில் கொள்பவர். அது சரியா, தவறா என்றுகூட யோசிக்கமாட்டார். தன் நிலை தாழ்ந்தாலும் கவலைப்படாமல், தன்னை நம்பியிருக்கும் தன் குலம் காப்பவர் எவரோ.. அவரே #பீஷ்மர். அதற்காக, அவர் கைக்கொண்ட தவம்தான் பிரம்மச்சர்யம்.

மண்ணிலிருந்து தன்னை விலக்கிக் கொள்பவனால் மட்டுமே பீஷ்மனாக முடியும்.. என்றான் கண்ணன்.

பஞ்சபூதங்களில் ஒன்றுதானே இம்மண். அதை மட்டும் விட்டு விலகிநின்றால் போதுமா ?.. கேட்டான் அர்ஜீனன்.

நீர், நெருப்பு என இரண்டையும் தன்னுள் அடக்கி, தன்னைத் தொட்டே தன் பலத்தினை நிரூபிக்க முடியும் என வாயுவிற்கும் வாய்ப்பளிக்கும் மண்ணை அத்தனை சாதாரணமாக எண்ணிவிடாதே அர்ஜீனா. இங்கு அனைத்திற்கும் காரணம் மண்தான். மண்தொட முடியாத ஒரே விஷயம் ஆகாயம் மட்டுமே. அதுவும், இறப்பிற்கு பின்மட்டுமே அடையமுடியும் இடம்.

உலகின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் நிற்பது #மண் மட்டுமே. மனிதப்பிறவியின் அசைக்கவே முடியாத, விடவே இயலாத, ஆழமான ஓர் உணர்வு ஆசை. அந்த ஆசையின் அஸ்திவாரமே #மண்தான்.

கருவில் இருக்கும்வரை, மண்ணோடு தொடர்பில்லை. வெளியில் வந்தபின்னும், தாய்மடியில் இருக்கும்வரை, தனக்கென்று ஓர் தனித்த சிந்தனை இருப்பதே இல்லை எந்தக் குழந்தைக்கும். எப்போது குழந்தை என்ற ஓருயிர், மண்தொட ஆரம்பிக்கிறதோ.. அப்போது நுழைகிறது அதனுள் ஆசை. தான் படுத்திருக்கும் இடம் தன் இடம். அதுமட்டும் போதுமா ? போதாது. உள்நுழைந்த ஆசை விட்டுவிடுமா என்ன ? புரள்கிறது குழந்தை.. இன்னும் இடம் கிடைக்கிறது. அதுவும் தன் இடம் என்றபின், முன்னோக்கி நகர்கிறது.. தவழ்கிறது இடம் பிடிக்க. அதுவும் போதவில்லை. கண்படும் இடமெல்லாம் தனதாகவேண்டுமே.. எழ முயற்சித்து தொட நினைக்கிறது.. எழுகிறது.. நடக்கிறது.. ஓடுகிறது.. இத்தனை இடம் கிடைத்தும் போதவில்லை. மண் மட்டும் போதுமா ? மண்மேல் இருக்கும் அத்தனை சுகங்களும் வேண்டும்.. ஓடுகிறது.. தேடுகிறது.. வாழ்நாள் முழுதும் தேடியே ஓய்கிறது.

முதுமையில் தளர்ந்து மறுபடியும் மண்மேல் விழும்வரை ஓய்வதில்லை. எல்லாம் ஓய்ந்தபின்னே, உயிர்பிரிந்து போனபின்னே, மண்ணால் வந்த மனிதனின் ஆசை, மண்ணுக்குள்ளேயேதான் புதைக்கவும் படுகிறது. இத்தனைக்கும் காரணமான இம்மண்ணை மட்டும், அத்தனை எளிதாய் எவராலும் துறக்க முடியாது.

வாழும் காலத்திலேயே, மண்ணாசையை.. மண்ணால் கொண்ட உணர்வுகளை துறந்து நின்றதால்தான் அவர் பீஷ்மர்.. என கண்ணன் கூறியதைக் கேட்ட அர்ஜீனன் திகைத்தான்.

அதனால்தான், மண்படாது பீஷ்மரை அம்புப் படுக்கையில் ஏற்றச் சொன்னாயா கண்ணா ?.. விழிகள் விரியக் கேட்டான் அர்ஜீனன்.

சரியான புரிதல்தான் அர்ஜீனா. பிதாமகர் பீஷ்மர் வாவென்றழைக்காமல், மரணதேவனால் அவரை நெருங்கக்கூட இயலாது. வாழும்போது மண்ணோடு தான் கொண்ட உறவறுத்து வாழ்ந்த பீஷ்மர், இறுதி நேரத்தில் மண்மீது விழுந்துவிட்டால், மண் அவரை விட்டுவிடுமா என்ன ? மறுபடியும் வாழவேண்டும் என்ற ஆசைதனை அவருள் புகுத்திவிட்டால் ?..

மீண்டும் எழுந்து, பீஷ்மம் மறந்து, மண்ணாள ஆசை கொண்டுவிட்டால். ? உன்னால், என்னால், எவராலும் அவரை தடுத்து நிறுத்திட இயலாது என்பதால்தான் அம்புப் படுக்கையில் கிடத்தச் சொன்னேன்.

ஒருவேளை, அதிலிருக்கும்போதும், மண்தொட அவர் விரும்பினாலும், அம்புகள் குத்தி நிற்கும் உடலின் வலி அதிகரிக்கும்.

மண்தொட ஆசைப்பட்டால், வலிதான் மிஞ்சும் என்பதாலேயே, மறந்தும் கூட அவர் அதனை செய்ய மாட்டார். அதனாலேயே, இறுதிவரை அவரை மண் பார்க்க விடாமல், விழிகளை விண்நோக்கியே இருக்கச் செய்தேன்.

பீஷ்மர் தவறலாம் அர்ஜீனா.. அவர் கொண்ட பீஷ்மம் தவறிவிடக்கூடாது.. என்றான் கண்ணன்.

இத்தனையும்தான் நானறிந்து கொண்டேனே ? மண் வேண்டாம் என என்னால் போரிடாமல் விலக முடியாதா ?.. ஆதங்கத்தோடு கேட்டான் அர்ஜீனன்.

சிரித்தான் கண்ணன். நீ நிற்பதே மண்மீதுதான். உன் இருப்பே மண்மீதுதான் என்றபின், விலகி எங்கு செல்ல முடியும் அர்ஜீனா ? விண் நோக்கிச் செல்ல, உனக்கான காலம் இன்னும் வரவில்லை என்றபின், மண்ணில்தான் போராடவேண்டும். மண்ணோடுதான் போராடவேண்டும்.. மண்ணிற்குள் மறைந்து மண்ணாகும்வரை.. என்றான் கண்ணன்.

அர்ஜீனனுக்குப் புரிந்தது. மண்ணில் கலக்கத்தான் இத்தனை போராட்டங்களும்.. மண்ணாக மாறத்தான் இந்த ஓர் பிறவியும். நாம் கொண்ட சுகங்களும், துக்கங்களும் மண்ணால்தான் அருளப்பட்டது. அதை அடையத்தான் இந்த வாழ்க்கைப் போராட்டமும்.

எதை வெல்ல நினைத்தோமோ, அதில்தான் அடங்கப் போகிறோம். இங்கு நாம் கண்ட உறவுகள் அத்தனையும், இந்த மண் தந்ததுதான். உறவுகளையும், உணர்வுகளையும் கொடுத்த மண்தான், அவைகளை திரும்பவும் பெற்றுக் கொள்ளப் போகிறது.
எனில், நான் என்பது யார் ? நான் என்பதும் அதுதான்.இதைப் புரிந்து கொள்ளவே வாழ்க்கை. புரிந்தாலும், புரியாவிட்டாலும், தான் யார் என்பதை மண் புரியவைத்துவிடும்.

அர்ஜீனன், தர்மன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், கர்ணன், துரோணன் என எல்லாம் ஒன்றுதான். அத்தனை பேரும், விரைவாய் மண்ணோடு கலக்க, போராடும் களமே வாழ்க்கை. எவர் முந்துகிறார் என்பது மட்டுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

வா கண்ணா.. நாளைய போருக்கு தயார் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு.. என அர்ஜீனன் கூற, கண்ணனுக்குப் புரிந்தது.. தன்னை எவரென உணர்ந்துவிட்டான் அர்ஜீனன் என்பது.

இங்கு ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே.. ஒவ்வொருவரும் அர்ஜீனரே. விளங்கச் சொல்ல, கண்ணன் எனும் சாரதி ஒவ்வொருவர் உள்ளும் உண்டு.

வாழும்போதே அதை உணர்ந்தது, பீஷ்மரைத் தவிர வேறு எவரும் இல்லை.
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.8.18

Astrology: ஜோதிடம்: 10-8-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 10-8-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகம் பிரபல இசைக்கலைஞர் ரவி சங்கர் பண்டிட் அவர்களுடையது
பிறப்பு விபரம்: 7-4-1920ம் தேதி காலை 10:13 மணிக்கு வாரணாசி நகரில் பிறந்தவர்!!!!

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.  16 பேர்கள் சரியான விடையை
எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய
பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
10-8-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் பிரபல இசைக்கலைஞர் பண்டிட் ரவிஷங்கர் ஆவார். பிறந்த தேதி

7-4-1920. காலை 10.46 மணி. பிறந்த ஊர் வாரணாசி.
அ.நடராஜன்
சிதம்பரம்
Friday, August 10, 2018 7:18:00 AM
------------------------------------------------
2
Blogger sfpl fab said...
Answar for 10.08.2018 quiz
Mr.Ravi Shankar, born Rabindra Shankar Chowdhury, his name often preceded by the title Pandit, was an Indian

musician and a composer of Hindustani classical music. Wikipedia
Born: 7 April 1920, 9.30am Varanasi
Friday, August 10, 2018 10:28:00 AM
--------------------------------------------------
3
Blogger bg said...
Mr. Ravi Shankar famous Indian musician and composer born on Apr 7 1920 at varanashi.
Friday, August 10, 2018 10:29:00 AM
--------------------------------------------------
4
Blogger ARAVINDHARAJ said...
Name:Ravi Shankar
Date of Birth:07-APR-1920
Place of Birth:Varanasi,Uttar Pradesh.
Profession:Composer,Musician.
Friday, August 10, 2018 1:45:00 PM
---------------------------------------------------
5
Blogger ponnusamy gowda said...
RAVI SHANKAR
Ravi Shankar (Bengali: রবি শংকর; born Robindro Shaunkor Chowdhury on 7 April 1920), often referred to with the title

Pandit, is an Indian musician and composer who plays the plucked string instrument sitar. He has been described as

the most known contemporary Indian musician by Hans Neuhoff in Musik in Geschichte und Gegenwart. Shankar

was born in Varanasi.
Date of Birth: 07-Apr-1920 at 11-31 hrs.
Place of Birth: Varanasi, Uttar Pradesh, India
Profession: Composer, Musician
- Ponnusamy.
Friday, August 10, 2018 1:50:00 PM
----------------------------------------------------
6
Blogger csubramoniam said...
ஐயா
ஜாதகத்திற்கு உரியவர் இந்துஸ்தானி இசை கலைஞர் ரவி ஷங்கர்
DOB :7/4/1920
TIME :11A.M
PLACE: VARANASI
நன்றி
Friday, August 10, 2018 1:51:00 PM
--------------------------------------------------
7
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Famous Musician Bharat Ratna,Mr.Ravi Shankar Chowdry, was born in

Varanasi,Uttrapradesh on07/04/1920 time 10.13am, Anusham nakshtra Scorpio sign,Gemini ascendent ,Lagna lord in

Bakyasthansa, poorva punniyathipathy uccham,Seventh and Tenth lord in uccham. thanks sir vazhga valamudan
Friday, August 10, 2018 2:12:00 PM
------------------------------------------------
8
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகம் சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர அவர்களுடையது.பிறந்த தேதி 7 ஏப்ரல் 1920. பிறந்த நேரம் காலை 10 மணி 13

நிமிடங்கள். பிறந்த ஊர் வாரணாசி.
உச்ச குரு (பத்தாம் அதிபனும் அவனே)10ல் அமர்ந்த உச்ச சுக்ரனை 9ம் பார்வையாகப் பார்த்ததும், 5ம் அதிபதியான சுக்ரன் 10ல்

அமர்ந்து உச்சம் பெற்றதும் ஒரு கலைஞராக உலகப்புகழ் பெற வைத்தது.லக்கினாதிபதி 9ல் அமர்ந்து 9ம் அதிபனான

சனீஸ்வரரைப் பார்த்ததும் பல நன்மைகளைக்கொடுத்தது.
Friday, August 10, 2018 2:18:00 PM
--------------------------------------------------
9
Blogger சங்கரராம் நாராயணன் said...
இந்திய சிதார் இசைக்கலைஞர் ரவி சங்கர்
07/Apr/1920
Friday, August 10, 2018 2:25:00 PM
--------------------------------------------------
10
Blogger angr said...
பிரபல சிதார் இசைமேதை ரவிசங்கர் அவர்கள் ஜாதகம்
Friday, August 10, 2018 2:50:00 PM
----------------------------------------------------
11
Blogger venkatesh r said...
"ஜோதிடப் புதிர் 10-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
மறைந்த பிரபல இந்துஸ்தானி இசைக்கலைஞரும்,உலகப் புகழ் பெற்ற இந்திய சித்தார் இசைக்கருவி வல்லுநரும், இந்திய இசையை

மேற்கு உலகுக்கு கொண்டு சென்று பரப்பியவருமான "பாரத ரத்னா" உயர்திரு.பண்டிட் ரவிசங்கர்" அவர்களின் ஜாதகம்.
முழுப்பெயர் : ரவிந்திர சங்கர் சவுத்ரி
பிறப்பு : ஏப்ரல் 7, 1920
இடம் : பனாரஸ் (எ) வாரணாசி.
நேரம் : காலை 10 மணியளவில்.
Friday, August 10, 2018 4:09:00 PM
--------------------------------------------------------
12
Blogger Ananthakrishnan K R said...
Good Evening,
Native: Pandit Ravi Shankar
DoB: 7th April 1920 @ 06.00 AM
Place: Varanasi, India
Regards,
K R Ananthakrishnan
Chennai
Friday, August 10, 2018 5:10:00 PM
------------------------------------------------------
13
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is Pandit Ravi Shankar who was born on 7th of april 1920 in varnasi in India.
Regards
Rajam Anand
Friday, August 10, 2018 6:21:00 PM
----------------------------------------------------
14
Blogger suresh radhakrishnan said...
Guru ji.. the answer to your quiz is pandit ravi shankar... born on 7th april 1920..
Friday, August 10, 2018 10:26:00 PM
-------------------------------------------------
15
Blogger thozhar pandian said...
பாரத இரத்னா விருது பெற்ற சிதார் இசை கலைஞர் பன்டித இரவி சங்கர் அவர்கள். பிறந்தது ஏப்ரல் 7 1920
Friday, August 10, 2018 10:52:00 PM
---------------------------------------------------
16
Blogger Chandrasekaran Suryanarayana said...
PANDIT RAVI SHANKAR
Musician and Composer - Sitar / Vocals
Born : 7th April 1920 Wednesday.
Time : 06:00:0
Birth Place : Varanasi, UP
Longitude: 83 E 0
Latitude: 25 N 20
Powerful Sukaran joined with SUN gave great top musician all the times.
Saturday, August 11, 2018 1:09:00 AM
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!