மாணவர் மலர்
இன்றைய மாணவர மலரை 6 பேர்களின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே தந்துள்ளேன். படித்து மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
1
அன்னதானத்தின் சிறப்பு
அன்னதான சிறப்புக்கு மஹா பெரியவர் சொன்ன கதை
தெரியப் படுத்தியவர்: வெ.கோபாலன், தஞ்சாவூர்
(தன்னுடைய நண்பர் சி.ஆர்.சங்கரன் என்பவர் அனுப்பிய மின்னஞ்சலில் வந்த கதையை நமக்குச் சுவைபடக் கொடுத்திருக்கிறார் தஞ்சைப் பெரியவர். படித்து மகிழுங்கள்)
பல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மஹா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக் கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், "அடடே...யாரு...பாலூர் கோபாலனா ! ஒரு வருஷத்துக்கு முன்னாலே வந்திருந்தே. அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ?" என்று சிரித்துக் கொண்டே வினவினார்.
உடனே அந்த பாலூர் கோபாலன், "பரம சௌக்கியமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு 'அதிதி' க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்) சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வர்றது பெரியவா ! வயல்கல்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் மறிச்சுப் போறதில்லை! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம் இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம் நீங்க அநுக்கிரகம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமை தான் பெரியவா....தினமும் செஞ்சுண்டிருக்கேன். வேற ஒண்ணும் இல்லே " என்று கண்களில் நீர் மல்கக் கூறினார்.
அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், "பேஷ்...பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்...அது சரி. இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே...அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா ?" என்று கவலையுடன் விசாரித்தார்.
உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு, "அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான் பெரியவா வந்திருக்கோம். ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது !" என்றாள்.
இதைக் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம். "அப்படித் தான் பண்ணனும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்கிரகத்தைப் பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்!
ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார், தெரியுமா ?" - குதூகலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழ, கியயூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர்.
அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.
ஒரு பக்தர், ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்: "அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி ?"
உடனே ஸ்வாமிகள், "ஆமாமா! மோட்ஷத்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ணிய தர்மம் அது ! ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணி இருக்கு ! இத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான் சொல்லுவா. அப்பேற்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!" என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.
ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டுப் பவ்யமாக, "எம் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாளை நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்ணறோம்...இந்த அதிதி போஜன மகிமையைப் பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா...நாங்கெல்லாம் நன்னா புரிஞ்சுக்கறாப்லே கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும் !" என்றார்.
அவரை அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:
"ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதெட்டு..முப்பத்தொம்போதாம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்) நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலே இதுல இருக்கிற மகிமை நன்னா புரியும் ! சொல்லறேன், கேளுங்கோ. " - சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்:
கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுலே குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரி ஒருத்தர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு...அவரோட தர்ம பத்தினி பேரு சிவகாமி ஆச்சி ! அவா காரைக்குடி பக்கத்துலே பள்ளத்துரச் சேர்ந்தவா. அந்தத் தம்பதிக்கு கொழந்த குட்டி கெடையாது. கடைத்தெரு மளிகைக் கடைய பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டிருந்தா.
குமரேசன் செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயசு இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் அவா ரெண்டு பேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம் தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது ! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார் ! நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்ட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாளப் பத்தி, இதையெல்லாம் விட தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாச்சாரம் சொல்லப் போறேன், பாருங்கோ..."
- சொல்லி விட்டு சஸ்பென்சாக கொஞ்ச நாழிகை மௌனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள்.
சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப் போகிறாரோ என ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: "பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா ? அதிதிகளுக்கு உபச்சாரம் பண்றது! ஆச்சர்யப்படாதீங்கோ ! அந்த தம்பதிகள் பல வருஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டு இருந்தா ! பிரதி தினமும் மத்தியானம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு எல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்திலே ஒக்காத்தி வெச்சு போஜனம் பண்ணி வெப்பா. சிவனடியார்களை வாசத் திண்ணையில் ஒக்கார வெச்சு ரெண்டு பெறுமா சேர்ந்து கை கால் அலம்பி விட்டு, வஸ்திரத்தாலே தொடச்சு விட்டு...சந்தனம் - குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சுண்டு போய் ஒக்காத்துவா.
அவா க்ருஹத்திலே சமையல்காரா ஒத்தரையும் வெச்சுக்கலே ! எத்தனை அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா! அதுலேயும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா ! அப்டி ஒரு ஒசந்த மனசு! இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா...அது வேற ஒரு ரகசியமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார். அவர் தான் சாவகசமா இருக்கறச்சே இதை எல்லாம் வந்து சொல்லுவார்! இப்ப புரிஞ்சுதா? "
சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார், ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவில்லை. மஹா ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது: " ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்தது. உச்சி வேளை. ஒரு அதிதியக் கூடக் காணோம்! கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப் படிகள்ளே எறங்கிப் பார்த்தார் செட்டியார். அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவரைப் பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரை அழைச்சுண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி. செட்டியாரின் தர்ம பத்தினி சிவனடியார் கிட்டே போய், "ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும் ? சொல்லுங்கோ. கடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போட்டுடறேன்' என்று கேட்டார்.
சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப் பக்கம் போய்ப் பார்த்தார். கொள்ளையிலே நிறைய முளைக் கீரை மொளைச்சிருந்ததைப் பார்த்தார். உள்ளே வந்தார். அந்த அம்மாவைக் கூப்பிட்டு, தனக்கு 'வேற ஒண்ணும் வேண்டாம். மொளக்கீர கூட்டும், கீரத் தண்டு சாம்பாரும் பண்ணாப் போறும்' னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆயிண்டே போச்சு. சிவனடியார்க்கோ நல்ல பசி. கீரைய நாமும் சேர்ந்து பறிச்சா சீக்கிரமா முடியுமேங்கற எண்ணத்துலே, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.
இவா ரெண்டு பேரும் கீரை பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படியிலே நின்னு பாத்துண்டிருந்தா. பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரைத் தட்டைக் கொண்டு வந்து உள்ளே வந்து வெச்சா ! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா ? ரெண்டு தட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா. ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினா. ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு...அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் ! 'என்னடா இது..ரெண்டும் ஒரே மொளக் கீரை தானே. ஒரே பாத்திரத்துலே போட்டு சமைக்காம இப்படி தனித் தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளே' னு கொழம்பினார்.
சித்த நாழி கழிச்சு, கீர வாணலி இரண்டையும் கீழே எறக்கி வெச்ச அந்தம்மா, சிவனடியாரோட கீரைய மாத்திரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை 'ரூம்'லே ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. இதைப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே ! அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா ?' நாம ஒரு பெரிய சிவ பக்தன்...சந்யாசி. அதனாலே நாம பறிச்ச கீரையைத் தான் சிவபெருமான் ஏத்துப்பார்' ங்கறதை இந்தம்மா புரிஞ்சுண்டு, நிவேதனம் பண்ணறா' னு தீர்மானிச்சுண்டுட்டார். இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மாகிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம் பண்ணிண்டார்."
- இங்கு சற்று நிறுத்தி எதிரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார்: "போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்த சிவனடியார் தன் சந்தேகத்தை அந்த அந்த ஆச்சிகிட்டே கேட்டுட்டார். ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா ? 'ஐயா கொல்லைல கீரை பறிக்கறச்சே நா பாத்துண்டே இருக்கேன். என் பர்த்தா 'சிவ..சிவ' னு சிவ நாமத்தை சொல்லிண்டே பறிச்சார். அது, அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து.
திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியம் இல்லே. நீங்க ஒண்ணுமே சொல்லாம பறிச்சேள். அதனாலே தான் தனியா அடுப்பு மூட்டி ஒங்க கீரையை மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்' னு சொன்னா. இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம்பதி ரெண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப் புறப்பட்டார்! அப்டி அன்னம் (சாப்பாடு) போட்ட ஒரு தம்பதி அவா..."
நிறுத்தினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஸ்வாமிகள் தொடர்ந்தார்: "இப்படி விடாம அதிதி போஜனத்தை பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச 'பல ப்ராப்தி' (பிரயோஜனம்) என்ன தெரியுமா ? சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டியப்த பூர்த்தி' (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு 'ஓச்சலா இருக்கு' னு சொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா. பதறிப் போய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார். அவ்வளவு தான். அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய' த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவி' யப் பார்த்தேளா ? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன். அப்படி அன்னம் போட்ட ஒரு தம்பதி அவா..."
முடித்தார் ஆச்சார்யாள்! கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது. இடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், "மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்கு. எல்லோருக்கும் பசிக்கும். போங்கோ...உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோ" எனக் கருணையுடன் அனுப்பி வைத்தது.
பக்தி என்பது, பண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் ஆகக் கூடாது. நாம் எதையும் கிஞ்சித்தும் கருதாமல், சர்வசதா காலம் அவனிடம் போய் சேருவது ஒன்றையே நினைத்து நினைத்துத் தன்னையும் அறியாது ஓடுகிற சித்தவிருத்தி இருக்கிறதே அதற்குத் தான் பக்தி என்று பெயர்.
ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர.. ஓம் ஸ்ரீ சாயிராம்.
தொகுப்பு - ஸ்ரீ எஸ். ரமணி அண்ணா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
வெஞ்சினமும் பழிதீர்த்தலும் தர்மத்திற்கு ஒவ்வாத செயல்கள்!
ஆக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு
இந்தியத் திருநாட்டின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள், கிளைக்கதைகள், எல்லாவிதமான மனிதமனங்களின் சித்தரிப்புகள், உணர்ச்சிக் குமுறல்கள், அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் வாழ்வியல் தர்மங்கள் ஆகியவற்றைப் பற்றி எழுத ஆரம்பித்தால் முடிவேது?. இந்தக் கட்டுரையில் மகாபாரதத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் கொண்ட வெஞ்சினத்தையும், (தவறிழைக்காமல் புண்படுத்தப்பட்ட மனம் கொண்ட சினம் ) அதன் காரணமாக விளைந்த பழி தீர்த்தலையும் காணலாம்.
குரு வம்சத்துத் தலைமகன் பீஷ்மர். தன் தம்பியான விசித்திரவீர்யனுக்கு மணம் முடிப்பதற்காக, காசி நகரத்து ராஜகுமாரிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரை சுயம்வரத்தில் வென்று, ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். எதிரே, மாபெரும் படை ஒன்று வழிமறித்தது. சௌபல நாட்டு அரசன் சால்வன், மிகப் பெரும் படையோடு நின்றிருந்தான்.பீஷ்மரின் வில், அம்புகளை மழையெனப் பொழிந்து, சால்வனின் படைகளைச்சிதற அடித்தது. சால்வன் தோற்றோடினான்.
ஹஸ்தினாபுரம் வந்த பீஷ்மர், ராஜகுமாரிகளை அழைத்துக் கொண்டு, தன் தம்பியைக் காணச் செல்லும் வேளையில், ராஜகுமாரிகளுள் ஒருத்தியான அம்பை, பயத்துடன், பீஷ்மரை அணுகி, தன் மனதை சால்வனுக்குக் கொடுத்ததைக் கூறினாள். முதலில் சினம் கொண்டாலும், பின், தன் மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு உண்டென்பதை மதித்த பீஷ்மர், முன்பே நீ இதை என்னிடம் தெரிவித்திருந்தால், சால்வன் படைகளுடன் வந்த பொழுதே, அவனிடம் உன்னை ஒப்படைத்திருப்பேனே!!! என்று கூறி, அவளை சௌபல (சாளுவ) தேசத்துக்கு, சகல மரியாதைகளுடன் அனுப்பிவைத்தார்.
சமரின் முந்திய சாலுவன்மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி, அம்பையை,
'எமர்களுக்கு இஃது இயற்கை அன்று' என்னவே,
அமர் அழிந்த அவனுழைப் போக்கினான். (வில்லி பாரதம்).
மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க, சால்வனை நாடிச் சென்றாள் அம்பை. ஆனால் சால்வனோ, மாற்றான் கவர்ந்து சென்ற மங்கையை மணத்தல் முறையன்று என்று கூறி அவளை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான்.
சென்ற அம்பையைத் தீ மதிச் சாலுவன்,
'வென்று, தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன்'
என்று இகப்ப, இவனுழை மீளவும்,
மன்றல் வேண்டினள், மன்றல் அம் கோதையாள். (வில்லி பாரதம்).
திரும்பவும் பீஷ்மரிடம் வந்தாள் அம்பை. விசித்திரவீர்யன், மற்றொரு ஆணிடம் காதல் கொண்ட பெண்ணை தான் மணப்பது இயலாது என்று கூறிவிட்டான்.
சினம் கொண்டாள் அம்பை. தான் விதியின் விளையாட்டில் ஒரு பகடைக்காயாக உருட்டி விளையாடப்படுவதை உணர்ந்தாள். தன்னைக் கவர்ந்து வந்த காரணத்தால், பீஷ்மரே தன்னை மணக்க வேண்டும் என்றாள். தான், திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சபதமெடுத்திருப்பதைக் கூறி, மறுத்தார் பீஷ்மர்.
மீண்டும் சால்வனிடமே சென்று, மணந்து கொள்ளுமாறு கேட்கச் சொன்னார் பீஷ்மர். சால்வன் உறுதியாக மறுத்துவிட்டான். அம்பையின் தந்தை,தன் தூதுவரை அனுப்பி, பீஷ்மரிடம் முறையிட்டதும் பயனற்றதாயிற்று.
ஒரு நாள், இரு நாள் அல்ல. ஆறு ஆண்டுகள் சால்வனிடமும், பீஷ்மரிடமும் கண்ணீரால் நிரம்பிய கண்களுடன் மாறி மாறி ஓடினாள் அம்பை.
இறுதியாக, பீஷ்மரின் குரு, பரசுராமரைச் சரணடைந்தாள். அவர், அம்பையை மணந்துகொள்ளும்படி, பீஷ்மரை வேண்டினார். பீஷ்மர் மறுக்க, சினம் கொண்ட பரசுராமர், பீஷ்மருடன் போருக்குத் தயாரானார்.
இருவரின் அஸ்திரப் பிரயோகங்களால், பூமி நடுங்கியது. திக்குகள் அதிர்ந்தன. மலைகள் வெடித்தன. வானுலகம் நிலைகுலைந்தது. உயிர்கள் பதறின.முடிவில்லாமல் பத்து நாள் இரவு பகல் பாராமல் நீண்டது போர். இறுதியில், பீஷ்மரின் கை ஓங்கவே, பரசுராமர், பின்வாங்கினார்.
துடித்தெழுந்தாள் அம்பை. பீஷ்மரை மணக்க இயலாது என்பது முடிவான முடிவு என்பதை அவள் மனம் ஒப்புக் கொள்ள மறுத்தது. அவள் மனம் மிக வருந்தி, தவம் புரிதலே இனி தன் வாழ்க்கை என முடிவெடுத்தாள்
ஆனால் தவறேதும் செய்யா அவள் மனம், பீஷ்மரைப் பழிவாங்கத் துடித்தது.
பீஷ்மரின் இறப்புக்குத் தான் காரணமாவேன் என்று வெஞ்சினம் கொண்டுசபதம் செய்த அவள், அந்த நோக்கத்துடன், இமயமலை சாரலை அடைந்து, அங்குள்ள பாகூத நதிக்கரையில்; ஒரு காலின் கட்டை விரலை ஊன்றி நின்று, மறு காலை மடக்கி,பன்னிரண்டு ஆண்டுகள் கடுந் தவம் செய்தாள் .
வெம்பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என, வீடுமன்
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான்' எனா,
வம்பை மோது முலை, வம்பை வீசு குழல்,
வம்பை மன்னும் எழில், வரி கொள் கூர்
அம்பை மானும் விழி, அம்பை என்பவளும்
அரிய மா தவம் இயற்றினாள். (வில்லி பாரதம்)
ஆறுமுகக் கடவுள் அம்பை முன் தோன்றி ஒரு தாமரை மாலையை அளித்தார். அந்த மாலையை அணிந்து கொள்பவர், பீஷ்மரின் இறப்புக்குக் காரணமாவார் என வரமளித்தார். அந்த மாலையை எடுத்துக் கொண்டு, இகலோகத்து அரசர்களிடமெல்லாம் சென்று, அணிந்து கொள்ள வேண்டினாள் அம்பை. ஒருவரும் உடன்படவில்லை. இறுதியாக, பாஞ்சால தேசத்து அரசன் துருபதனிடம் சென்று, முறையிட்டாள். துருபதனும், பீஷ்மரின் பகைக்கு அஞ்சி மறுக்கவே, மாலையை அவன் கோட்டை வாயிலிலேயே மாட்டி விட்டு, தீப்பாய்ந்தாள் அம்பை.
மனித ஆன்மா ஒரு தொகுப்பு நூல் போன்றது. அது, பல ஜென்ம வாசனைகளை ( நினைவுகளை)த் தன்னுள் தொகுத்து வைத்திருக்கும்.ஒரு ஜென்மத்து விருப்போ, வெறுப்போ, ஜென்மங்கள் கடந்தும் தொடரும். சிலரைப் பார்த்தவுடன் பிடித்துப் போவதற்கும், வெறுப்பு வருவதற்கும் இதுவே காரணம். இந்த ஜென்மாந்திர வாசனைகள் இருக்கும் வரை, ஜென்மம் எடுப்பதும் நிற்காது.
அம்பை வெஞ்சினம் கொண்ட மனத்தோடு, அடுத்த பிறவியில், துருபதனின் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு சிகண்டி என்று பெயர் சூட்டினான் துருபதன். ஒரு நாள், அவளே அந்த மாலையை எடுத்து, அணிந்து கொண்டாள்.
அம்பை (சிகண்டி) யின் நோக்கத்துக்கு உதவிய காரணத்தால், ஸ்ரீ சுப்பிரமணியரின் அஷ்டோத்திர சத நாமாவளியில்,
"சிகண்டி க்ருதகேதனாய நம: " என்னும் ஒரு நாமம் இருக்கிறது
செய்தி அறிந்து துருபதன், அவளை நாடு கடத்தி விட்டான். கானகம் சென்ற சிகண்டி, 'இஷிகர்' என்ற முனிவரின் யோசனைப்படி நடந்து, ஒரு கந்தர்வனிடம் தன் பெண் வடிவைக் கொடுத்து, அவன் ஆண் வடிவைத் தான் பெற்றுக் கொண்டு, மீண்டும் துருபதனை வந்தடைந்தாள் (அடைந்தான்?). சிகண்டியை ஏற்றுக் கொண்ட துருபதன், அவனுக்கு சகல வித்தைகளிலும் பயிற்சி அளித்தான்.
இந்த சிகண்டியை முன்னிறுத்தியே, பாரதப்போரில் அர்ஜூனன் பீஷ்மரை எதிர்த்துப் போரிட்டான். பெண்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதால், பெண்ணாக இருந்து, ஆணாக மாறிய சிகண்டியை எதிர்த்து, பீஷ்மர் ஆயுதம் எடுக்கவில்லை. அர்ஜூனனின் காண்டீபம் சரமழை பொழிந்து, பீஷ்மரை அம்புப் படுக்கையில் தள்ளியது. இவ்வாறாக அம்பை தன் பகை முடித்தாள்.
பாண்டவர்களும் கௌரவர்களும் கைகட்டி, பணிந்து நின்றனர்.
எதிரே அவர்கள் குரு துரோணாச்சாரியார். குருகுலப் பயிற்சி முடிந்து, குருதட்சணை வழங்க வேண்டிய தருணம்.
மூத்தவனான தருமன், " குருவே, தாங்கள் குருதட்சணையாக எதைக் கேட்டாலும், அதை வழங்கக் கடமைப்பட்டுள்ளோம் " என்றான்.
மறுநாள் சொல்வதாகச் சொல்லிவிட்டு, தனிமையை நாடிச் சென்றார் துரோணர். நெஞ்சினுள் சீறிப் பாய்ந்த நினைவலைகளால் தாக்குண்டு செய்வதறியாது நின்றார் அவர்.
பாரத்வாஜ முனிவரின் மகன் துரோணர். தன் தந்தையிடமே கல்வி கற்று வரும்போது, உடன் படித்த, பாஞ்சால தேசத்து இளவரசன், துருபதனிடம் மாறாத நட்புக் கொண்டார். குருகுல வாசம் முடியும் தருவாயில் ஒருநாள், பேச்சு வாக்கில், "நீ நாடாளும் மன்னனாகி விட்டால் என்னை எங்கே நினைவில் வைத்திருக்கப் போகிறாய்!!!" என்று கேட்டு விட்டார். உடனே, துருபதன் (யாகசேனன் என்பது இவனது மற்றொரு பெயர்) கங்கை நீரை துரோணர் கையில் வார்த்து, " நான் மன்னனானால், உனக்குப் பாதி நாட்டைத் தருவேன்"என்று சத்தியம் செய்தான்.
பின்னை, இரவும் பகலும், பிரியேம் ஆகித் திரிய,
தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா,
'என் ஐ வானம் எய்தி, யானே இறைவன்ஆனால்,
உன்னை ஆள வைப்பேன், உலகில் பாதி' என்றான். (வில்லி பாரதம்)
பின், துரோணர், குரு வம்சத்து குலகுருவான, கிருபாச்சாரியாரின் தங்கை கிருபியைத் திருமணம் செய்து கொண்டார். தன் நண்பன் ,துருபதன்
பாஞ்சால தேசத்து மன்னனான செய்தி அறிந்து மகிழ்வு கொண்டார்.
காலப் போக்கில், துரோணர், கொடிதினும் கொடிய நோயான வறுமைக்கு ஆளானார். தவமிருந்து பெற்ற ஒற்றைப் பிள்ளைக்குப் பாலூட்ட இயலாமல் உடல் நலிவுற்றாள் கிருபி.மனம் சோர்ந்தார் துரோணர். இறுதியில், தன் நண்பனான துருபதனிடம், ஒரு பசுமாட்டைத் தானம் பெற்று வரலாம் என்று முடிவெடுத்துப் புறப்பட்டார். பாதி ராஜ்யத்தையே தருவதாக வாக்களித்தவன், ஒரு பசு மாட்டைத் தர மாட்டானா? என்பது அவர் எண்ணம்.
அரண்மனையில் தான் யார் என்று விசாரித்தவர்களிடம், பழைய நட்புரிமையில், "உங்கள் மன்னனின் நண்பன்" என்று சொல்லிவிட்டார்.
வெகுண்டான் துருபதன். "அரசனாகிய நான் எங்கே, ஆண்டியாகிய நீ எங்கே" , என்று பலர் முன்னிலையில் இழித்தும் பழித்தும் பேசி விட்டான். மனம் நொந்தார் துரோணர். நம்பி வந்த தன்னை, அவமானப்படுத்திய துருபதன் மேல் சினம் பொங்கியது அவருக்கு. " நான் தவ முனிவர் வழிவந்தவன், ஆகவே, எனக்குச் சக்தி இருந்தாலும் உன் மேல் போர் தொடுக்க மாட்டேன். என் மாணவன் உன்னை வென்று, தன் தேர்க்காலில் கட்டி இழுத்து என் முன் நிறுத்துவான்!!! " என சூளுரைத்து விட்டுப் புறப்பட்டார்.
'புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன்;
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன்;
அகன்ற மெய்ம்மை உடையாய்! அறிதி' என்றேன்' என்று,
சுகன்தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்லக் கேட்டான். (வில்லிபாரதம்)
துருபதனை வெல்லுமாறு, மறுநாள் தன் சிஷ்யர்களுக்குக் கட்டளையிட்டார். அர்ஜூனன் அந்தக் கட்டளையைச் செவ்வனே நிறைவேற்றினான். தன்முன் தலை கவிழ்ந்து நின்ற துருபதனை நோக்கி, " நீ என் நண்பன் என்பதால் உனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறேன். மேலும், நீ எனக்கு முன்பே வாக்களித்தது போல் உன் பாதி நாட்டை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன். சென்று வா" என்று கூறி துருபதனை விடுதலை செய்தார். துரோணர் இவ்வாறு தன் சபதத்தில் வெற்றி அடைந்தார்.
'அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும்; மற்று
இன்று, உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன்;
குன்று எனக் குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே!
உன்தனக்கு வேண்டும்' என்ன, உயிரும் வாழ்வும் உதவினான்.(வில்லிபாரதம்).
பாண்டவர்களில் ஐந்தாமவன் சகாதேவன். பாண்டுவின் இளைய மனைவி மாத்ரிக்கு, அஸ்வினி தேவர்களின் அருளாசியால் பிறந்தவன். நுண்ணறிவில் சிறந்தவன், ஜோதிடக்கலையில் வல்லவன். அமைதியும் ஆழ்ந்த யோசனைத் திறமும் மிகுந்த கிருஷ்ண பக்தன்.
ஸ்ரீ கிருஷ்ணரையே, தன் பக்தியால் கட்டி வைத்த பெருமையுடையவன்.சூதாட்டத்தில். செல்வங்கள் அனைத்தையும் இழந்த தருமர், பிறகு, தன் தம்பியரில்,முதலில் சகாதேவனைத் தான் பணயமாக வைத்துத் தோற்றார்.
எப்பொழு தும்பிர மத்திலே சிந்தை
ஏற்றி உலகமொ ராடல் போல்.எண்த்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும்-வகை
தானுணர்ந் தான்சஹ தேவானம்-எங்கம்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில்-வைத்தல்
உன்னித் தருமன் பணயமென்று -அங்குச்
செப்பினன் காயை உருட்டினார்-அங்குத்
தீய சகுனி கெலித்திட்டான். (மஹாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம்)
முடிவில், பீமனும், அர்ஜூனனும், துரியோதனன், துச்சாதனன், கர்ணன் ஆகியோரைக் கொல்வதாகச் சபதம் செய்தபோது, சகாதேவன், 'எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?' எனும் சொல்லுக்கேற்ப, இதற்கெல்லாம் யார் காரணம் எனச் சிந்தித்து, சூதாட்ட யோசனையைச் சொன்ன சகுனியே இதன் மூல காரணம் எனத் தேர்ந்தான். போரில் சகுனியைக் கொல்வேன் எனச் சபதம் செய்தான்.
'
சகுனிதனை இமைப்பொழுதில்,' சாதேவன், 'துணித்திடுவேன்
சமரில்' என்றான்; (வில்லி பாரதம்).
பாரதப் போரில், சகுனியை எதிர்த்துப் போரிட்டான் சகாதேவன். சகுனியைக் காக்கவென, துரியோதனன் சகாதேவன் மேல் எறிந்த வேல், பயனற்றுப் போய் விட்டது. அவ்வாறில்லாமல், சகாதேவன், தன் குறியைச் சரியாக நிர்ணயித்து, சகுனி மேல் வேல் எறிந்து தன் சபதத்தை முடித்தான்.
சகுனி ஆவி போமாறு, சபத வாய்மை கோடாமல்,
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட,
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை
இகலொடு ஏவினான், வீமன் இளவலான போர் மீளி. (வில்லி பாரதம்)
இந்தப் பாடலில், 'சபத வாய்மை' என்ற சொல், சகாதேவன் சகுனியைக் கொல்வதாக இருந்த சபதத்தை நினைவுபடுத்துகிறது.
வெஞ்சினம் கொள்ளுதலும் பழிதீர்த்தலும் தர்மத்தின்படி சரியான செயலாகக் கருதப்படவில்லை என்றாலும், சில தருணங்கள் அப்படி அமைந்தும் விடுகிறது என்பதே மகாபாரதம் சொல்லும் செய்தி. ஆயினும் இனி வரும் காலத்தில், அமைதி நிலவவும், அன்பு தழைக்கவும் எங்கும் நிம்மதி நிறைந்திருக்கவும், இறைவனை வேண்டுவோம்.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
பெங்களூரு.
www.aalosanai.blogspot.in
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிகளே அந்தக் காலத்தில் காதல் பூங்காக்கள்!
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி
"சேவாலயா என்னும் தொண்டு நிறுவனம்" என்ற என் ஆக்கத்தில் (11 ஏப்ரல் 2011) ஒரு 'டைடானிக்' பாட்டியின் கதையைச் சொல்லி இருந்தேன். புதிதாக வந்தவர்கள் அதனைப் படிக்க வேண்டுகிறேன்.
என் அந்த ஆக்கத்திலேயே வேறொரு பாட்டியின் கதை கிடைத்ததையும், அதனைப் பின்னர் சொல்வதாகவும் கூறியிருந்தேன். அந்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றுகிறேன்.
அந்த முதியோர் இல்லத்தில் இருந்த பாட்டிமார்களிலேயே மிகவும் உற்சாகமான பாட்டி அவர். இத்தனைக்கும் அந்த முதியவர்களிலேயே அவர்தான் வயதில் மூத்தவர் என்றார்கள்.நான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவரைச் சந்தித்த போதே அவருக்கு 90 வயது கடந்து இருக்கும்.
அந்தக் குழுவுக்கு அந்தப் பாட்டிதான் தலைவர். தலைவர் என்றால் ஏதோ தான் மற்றவர்களுக்கு ஆணை பிறப்பித்து விட்டு, சொகுசாக அமர்ந்திருக்கும் தலைவர் அல்ல அவர். மற்றவர்களின் தேவை அறிந்து அவர்களுக்கான எல்லாச் சேவைகளையும் செய்பவராக விளங்கினார்.
வாரந்தோறும் ஓரிரு மருத்துவர்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்து பாட்டிகளுக்கு மருத்துவ சோதனை செய்வர். நமது கதாநாயகிப் பாட்டி எல்லோருடைய மருத்துவ சோதனை பதிவு அட்டைகளையும் தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு அந்தந்த பாட்டிகளின் முறை வந்தவுடன் அட்டையை எடுத்துக் கொடுத்து மருத்துவ சோதனைக்கு அனுப்புவார். தானும் அருகில் இருந்து டாகடர் கூறும் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டு, மருந்து சாப்பிடும் முறைகளையெல்லாம் விசாரித்து அறிந்து அந்தப் பாட்டிகளை நேரத்திற்கு மருந்து உண்ண வைப்பார். ஒரு பாசம் நிறைந்த தாயாகவும், கண்டிப்பான செவிலியாகவும் அந்தப் பாட்டி நடந்து கொள்வார்.
"ஒரு தொழில்முறை நர்ஸ் கூட இப்படி பணிவிடை செய்ய மாட்டார்கள்" என்று அங்கு நான் சந்தித்த மருத்துவர்கள் வாயாற நம் பாட்டியின் புகழ் பாடினார்கள்.
மற்ற முதியவர்களின் துவைத்த துணிமணிகளை மடித்துக் கொடுப்பார்.
யாரும் படுக்கையிலேயே அமர்ந்து சாப்பிடக்கூடாது என்று எழுதப்படாத சட்டத்தைக் கடைப் பிடிப்பார்.முடியாத பாட்டிமார்களைக் கையைப் பிடித்து உணவுக் கூடத்திற்கு அழைத்து வந்துவிடுவார்.
"இதற்காகக் கூட நடக்காவிடில் எப்படி? இப்படியே படுத்துக் கிடந்தால் படுக்கைப் புண் வந்துவிடும்" என்று உரிமையோடு கண்டிப்பார்.
காலை மாலை இரண்டு வேளைகளிலும் நடக்க முடிந்தவர்களோடு தானும் அருகில் உள்ள கடற்கரை வரை சென்று வருவார்.
"நடந்தால் தான் கைகால் விளக்கமாக இருக்கும்"என்று அறிவுரை கூறுவார்.
நமது பாட்டிக்கு ஒரு பெயர் சூட்டி விடுவோமா?.'ஆண்டாள்' என்று வைத்துக் கொள்வோம்.ஆம்! பாட்டி ஒரு ஸ்ரீவைஷ்ணவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.ஆதியில் அவர் ஐயங்கார் மாது. 9 குழந்தைகளைப் பெற்ற அன்னை. சீரும் சிறப்புமாக மடி ஆச்சாரத்துடன் ஸ்ரீஉடையவர் அவதரித்த திருத்தலத்தில் பிறந்து வளர்ந்து திருமணமாகி நல்ல கிரஹஸ்தியாக வாழ்ந்தவர்.
40 வயதுவரை வீடும், அடுப்படியும், கோவிலும் தவிர வேறு ஓர் இடமும் அறியாதவர் நம் ஆண்டாள். கணவனே கண் கண்ட தெய்வம், இல்லறமே நல்லறம் என்ற கொள்கையுடன் எந்த மன சஞ்சலங்களுக்கும் இடமளிக்காமல் மன திருப்தியுடன் வாழ்ந்து வந்தவர் அவ்ர்.
கணவர் நல்ல வேத விற்பன்னர். வேதத்தை சடங்குகளுக்குப் பயன் படுத்தக்கூடாது என்ற கொள்கையுடையவர் ஆதலால்,வருமானம் மிகக் குறைவு. வந்த வருமானத்தில் வறுமையில் செம்மையாக வாழ்ந்தது அந்தக் குடும்பம்.
நிம்மதியாகவே வாழ்க்கை முழுதும் செல்வதற்குக் கொடுப்பினை வேண்டும்.ஏற்ற இறக்கங்கள்,நல்லது கெட்டது, நன்மை தீமை அனைத்தும் கலந்தததுதானே வாழ்க்கை!? அமைதியான பூங்காவனத்தில் திடீரெனப் புயல் வீசியது.அனைத்தையும் புரட்டிப் போட்டது.
அப்போதுதான் பெண்களும் பள்ளி செல்லலாம் என்ற மனோபாவம் நடுத்தர வர்க்கத்தில் வேரூன்ற ஆரம்பித்த நேரம். தட்டச்சுக் கற்றுக்கொண்டால் அரசாங்க வேலை கிடைக்காவிட்டாலும், வீட்டில் இருந்தவாறே 'ஜாப் ஒர்க்' செய்தாவது அன்றாடச் செலவுகளுக்கு சில்லறைக் காசுகளைப் பார்க்கலாம் என்ற எண்ணம் பரவத் துவங்கியிருந்தத்து.
இப்போது கை பேசி காதலுக்கு உதவுவது போல,(வெறும் காதலுக்கு மட்டுமா?)அந்தக் காலத்தில் காதல் மலர்வது தட்டச்சுப் பயிற்றும் பள்ளிகளில்தான்.
தட்டச்சுப் பயில வரும் யுவன்,யுவதிகள் பெரும்பாலும் பதின்வயதினர். புருத் தெரியும் வயது. நெருப்பையும் பஞ்சையும் பக்கதில் வைத்தால்..?
"ஐயோ பத்திக்கிச்சி பத்திக்கிச்சி......" என்று பாட வேண்டியதுதான்.
அப்படித்தான் ஆயிற்று ஆண்டாளின் மூத்த பெண்ணுக்கு.
"படித்தது போதும் யார் கையிலாவது பிடித்துக் கொடுத்து விடுகிறேன்" என்று பெண் வயதுக்கு வந்தது முதல் புலம்பத் துவங்கிவிட்டார் ஆண்டாளின் கண்வர்.ஆண்டாள்தான் புதுமைப் பெண்ணாக பெண் விடுதலை பேசினாள்:
" 18 வயது முடிந்துதான் பெண்ணுக்குத் திருமணம் செய்தல் வேண்டும். அதுவரை பெண் படிக்க வேண்டும். முன்பு போல படிப்பு இல்லாத விதவையான பெண்களைத் தலையை மழித்து மூலையில் உட்கார வைக்க முடியாது. தேவைப்பட்டால் பெண் தன் கையால் உழைத்து,அல்லது அறிவால் பணிசெய்து சம்பாதித்துப் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும்.எனவே என் பெண் கனகவல்லி பள்ளி இறுதி வகுப்பு முடித்து தட்டச்சும் பயில வேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் நான் செய்யத் தயார்"
"எப்படியோ போங்கள்.. நாளை ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பொறுப்பும் தண்டனையும் உனக்குத்தான்.." என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் குடும்பத் தலைவர்.
அவர் சொன்னது பலித்தது. அவருக்கும் இரண்டாமிடத்தில், வாக்கில் சனி போல..
அதனால்தான் எதிர்மறை எண்ணம் பலிக்கிறது.
கனகவல்லி தட்டச்சுக் கூடத்தில் காதல் வயப்பட்டாள்.
ஆச்சாரக் குடும்பத்தில் வந்த கனகவல்லியின் உள்ளத்தைக் கவர்ந்தவன்
முகம்மது இப்ராஹிம்!
இப்ராஹிம் பேரழகன். அவன் வெளித் தோற்றத்திலும், அவனுடைய மென்மையான பேச்சிலும் மயங்கிவிட்டாள் கனகா.
தினமும் ஒரு ரோஜாவுடன் தட்டச்சுப் பள்ளியின் வாசலில் நின்று இருப்பான் இப்ராஹிம். லைலா மஜ்னுவாக கனகாவும், இப்ராஹிமும் சிறகடித்துப் பறந்தார்கள்.
சிறிய ஊர்தான் அது. முணுக்கென்றாலும் அனைவருக்கும் தெரிந்தவிடும்.
ஊர் வம்பளந்தது. கனகாவின் தந்தையின் காதுக்கு செய்தி வந்தபோது காதல் மிகவும் முதிர்ந்த நிலை.
பெண்ணை வீட்டுச் சிறையில் வைத்தார். கனகா சாப்பிட மறுத்து உண்ணா நோன்பு இருந்தாள்.
ஆண்டாளுக்கு பெண்ணின் நிலையைக் கண்டு துக்கம் மேலிட்டது.கணவர் குளியல் அறையில் இருந்த போது கதவைத் திறந்து கனகாவை விடுவித்தாள் ஆண்டாள்.
அந்தச் சிட்டு பறந்து சென்று தன் ஜோடியுடன் இணைந்தே விட்டது.
ஆண்டாளின் கணவர் ஆகாயத்திற்கும் பூமிக்குமாகக் குதித்தார். ஆண்டாளுக்கு அவர் அன்று செய்த கொடுமைகள் சொல்லும் தரமன்று.
பெண்ணைத் தலை முழுகி, அவள் இறந்ததாகக் கருதி அவளுக்குச் செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்தார் அந்த வேத பிராமணர்.
ஆண்டாளுடன் பேசுவதை நிறுத்தி கொண்டார்.ஒரே வீட்டிற்குள் இரண்டு தீவுகள்!
காலம் உருண்டு ஓடியது.
சுமார் 15 மாதங்களுக்குப் பின்னர் ஆண்டாளுக்கு ஒரு செய்தி வந்தது.
அதாவது,கனகா ஒரு ஆண்மகவைப் பெற்று எடுத்து அரசு மருத்துவ மனையில் இருக்கிறாள்.தன் தாய் வந்து காண வேண்டும் என்று கனகா ஆசைப்படுகிறாள்.பெண்ணின் உள்ளம் பெண்ணே அறிவாள்.
ஆண்டாள் புழக்கடை வழியாக வீட்டை விட்டு வெளியேறி கனகாவையும் அவள் குழந்தையையும் மருத்துவமனையில் வைத்துப் பார்த்தாள்.
இரண்டு கலகக் கண்களும் ஆண்டாளை மருத்துவமனையில் அவள் அறியாமல் பார்த்தன. கனகா வீட்டை அடையும் முன்னர் கணவருக்குச் செய்தி போயிற்று.
புழக்கடைக் கதவை பூட்டி விட்டு வாசல் திணையில் வந்து அமர்ந்து கொண்டார்.
எரிமலை வெடிக்கத் தயாராக இருந்தது.
பின் கதவு பூட்டப்படதை அறிந்து ஆண்டாள் அதிர்ந்தாள்.வேறு வழியில்லாமல் வாயில் பக்கம் வந்து வீட்டுக்குள் நுழைய முயன்றாள்.
அவ்வளவுதான்! அந்த எரிமலை வெடித்தே விட்டது.
நடு வீதியில் காலால் உதை வாங்கிக் கொண்டு ஆண்டாள் கிடந்தாள். காலைக் கட்டிக்கொண்டு அழுதும் பயனில்லை. அந்த அசுரனின் ஆவேசம் தணியவில்லை.
அரிவாள் மணையைக் கொண்டு வந்து ஆண்டாளின் கூந்தலைக் களைந்தார் அந்த மகானுபாவன். அடி வாங்கிக் கொண்டே பின் நகர்ந்தாள்.
கட்டிய புடவையுடன் அந்த கிராமத்தைவிட்டு சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு வெளியேற்றப்படாள் பரிதாபத்திற்குரிய ஆண்டாள்.
அதன் பின்னார் அவள் அந்த கிராமத்தையோ, உறவினர்களையோ, குழந்தைகளையோ மீண்டும் பார்க்கவேயில்லை.அதற்கான வைராக்கியத்தையும், சோதனைகளை அளித்த அதே ஆண்டவனே அளித்தான்.
பல இல்லங்களில் சமையல் வேலை பார்த்தாள். பல முதியவர்களுக்கு தாதி, செவிலியர் பணி செய்தாள். 80 வயதுவரை ஓய்வின்றி உழைத்த ஆண்டாளின் மீது பரிதாபம் கொண்ட ஒரு கோட்டு வாத்தியப் பிரபல வித்வான் தன் இல்லத்திலிருந்து அவளுக்கு ஓய்வு கொடுத்து முதியோர் இல்லத்தில் சேர்த்தார்.
இந்த இல்லத்திலேயும் தன் சேவைப்பணிகளை ஆண்டாள் தொடர்ந்தார்.
இப்போது இருந்தால் ஆண்டாளுக்கு 125 வயது இருக்கும். அவர் எங்கிருந்தாலும் வாழ்க.
ஆண்டாள் மறைந்த செய்தி எனக்குக் கிடைகாததால் அவரை வாழ்த்துகிறேன். ஒரு வேளை அவர் பூதவுடல் மறைந்து இருந்தாலும் அவர் புகழ் உடம்புடன் என் மனதில் என்றும் வாழ்கிறார்.
இவர்களைப் போன்றவர்களால் அல்லவோ "உண்டாலம்ம இவ்வுலகம்!"
வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
ராபர்ட் கிளைவ் யாருக்கு முத்தம் கொடுத்தார்?
ஆக்கம்: தேமொழி
ருட்யார்ட் கிப்லிங் (Joseph Rudyard Kipling) என்ற ஆங்கில எழுத்தாளரைப் பற்றித் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கமுடியாது. அதுவும் இந்த தலைமுறையினருக்கும் அவரைப் பற்றி அறிமுகப்படுத்தியது வால்ட் டிஸ்னியின் படமான "தி ஜங்கில் புக்" என்பதாகும். விக்கிபீடியா களஞ்சியத்தின் மூலம் அவர் பற்றிய செய்திகள் பலவற்றை அறிந்து கொள்ளமுடியும். அவரது வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாக சொன்னால், அந்தக்கால ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த மும்பையில் 1865 ஆம் ஆண்டு பிறந்தவர். தன்னை ஆங்கிலோ இந்தியர்கள் எனக் கருதிக்கொண்ட இங்கிலாந்தின் குடிமக்களான பெற்றோர்களுக்குப் பிறந்தவர். அவர் பிறந்தபொழுது அவர் தந்தை "Sir J. J. College of Architecture" என்னும் மும்பை கல்லூரியில் பணிபுரிந்தார். அவர் பிறந்த வீடு சிதிலமடைந்ததால் அதை இடித்து மற்றொரு கட்டிடம் அங்கே எழுப்பப்பட்டு, அது இப்பொழுது அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. கிப்லிங் பிறந்த இடம் எனக் குறிப்பிடும் பட்டயம் மட்டுமே அங்கே ஒரு இடத்தில் பொறிக்கப்படுள்ளதாம், அதைத்தவிர முக்கியத்துவம் தர நம் இந்தியர்களுக்கு அவர் பெயரில் அவ்வளவாக ஆர்வம் இல்லை.
அதற்கு குறிப்பாக மற்றொரு காரணம், கிப்லிங் ஆங்கில ஏகாதிபத்தியத்தில் பெருமை கொண்டவர், அவர் காலத்தில் பிரட்டிஷ் அதிகாரம் உலகம் முழுவதும் பரந்து கிடந்தது. எனவே அது அவரது நாட்டுப் பற்று, அதில் எந்த ஒரு குறையும் சொல்வது தவறு. ஆனால் அவர் கூறிய மற்றொருகூற்று "தி வைட் மேன்ஸ் பர்டன்" (The White Man's Burden) என்றது பலருக்கு எரிச்சல் மூட்டியது. ஐரோப்பிய கிறிஸ்துவ வெள்ளைக்காரர்களின் கடமை பின்தங்கிய நாடுகளுக்கு சென்று அந்த மக்களை கலாச்சாரப்படி மேம்படுத்துவது என்பதைத்தான் அவர் அவ்வாறுக் குறிபிட்டார். இது பொதுவாக மற்றக் கலாச்சாரங்களைக் கீழ்த்தரமாகக் கருதும் ஐரோப்பியர்கள் அல்லது வெள்ளைக்காரர்களின் கருத்து.
நமது கடிகாரம் சரி என (நாமே நினைத்து) நாம் அடுத்தவர் கடிகாரத்தை சரிசெய்ய முயன்றால்....??
(அய்யர் ஐயாவின் பின்னூட்டக் கருத்துக்களில் மனதை தொட்ட வரிகள்)
இது போன்ற ஆணவ, அகங்கார எண்ணமுடைவர்களை நம் மண்ணில் பிறந்த ஒரே காரணத்திற்காக நாமும் கொண்டாட விருப்பமில்லாமல் இருப்பதில் தவறில்லைதான். தன் பிறப்பின் பின்னணியினால் தன்னை உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு சகமனிதர்களை இளக்காரமாகப் பார்பவர்களையே இளக்காரமாக நினைக்க இன்னொருவர் உலகத்தில் இருக்க மாட்டார்களா என்ன?
நோபல் பரிசுகள் வழங்க ஆரம்பித்த பின்பு ஆங்கில இலக்கியத்திற்காக முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களில் மிகவும் இளையவர் (42 ஆம் வயதில், 1907 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்) என்ற பெருமைகள் இவரைச் சாரும். மும்பையில் பிறந்து ஆறு வயது வரை அங்கு வளர்ந்து, பின்பு பள்ளிப் படிப்பிற்காக இங்கிலாந்து அனுப்பப்பட்டு, மீண்டும் இந்தியா வந்து கொஞ்ச நாள் வேலைப் பார்த்தார். பின் உலகம் முழுவதும் சுற்றினாலும், பல நாடுகளில் வாழ்ந்தாலும், அவரால் இந்தியாவில் வாழ்ந்த நாட்களை மறக்க முடியவில்லை. அதிலும் அவர் பிறந்த பம்பாய் நகர் மேல் தனி அன்பும் அவருக்கு இருந்தது. இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதினார். ஜங்கிள் புக் கதையில் இந்தியாவை அடிப்படையாக வைத்து எழுதியது போல் அவரது பிற படைப்புகளிலும் இந்தியாவைப் பற்றிப் பலமுறைக் குறிபிட்டுள்ளார்.
சென்ற வார மலரில் ஏழு கடல்களைப் பற்றிப் படித்த பின்பு, இணையத்தில் தேடியதில் கிப்லிங்கின் "The Seven Seas" என்ற புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது (http://www.gutenberg.org/files/27870/27870-h/27870-h.htm). பொதுவாக இலக்கியங்களில் (தமிழோ அல்லது ஆங்கிலமோ, இதில் மொழி பேதம் இருந்ததில்லை) எனக்கு ஆர்வம் குறைவென்பதால் அவைகளைப் பார்ப்பதுடன் நிறுத்திக்கொள்வதே என் வழக்கம், படிக்க முயலுவதில்லை. இந்த புத்தகத்தை கிப்லிங் பம்பாய் நகரத்திற்கு சமர்ப்பணம் செய்து, பம்பாய் நகரத்தின் மீது ஒரு கவிதையே எழுதியுள்ளார். இந்தப் படைப்பில் ஒரு இடத்தில் ஆங்கில ஆட்சியின் கீழிருந்த நகரங்கள் கூறுவதாக "The song of the Cities" என்ற தலைப்பில் பல சிறிய செய்யுள்களும் இடம் பெற்றுள்ளன. அதில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களும் இடம் பெற்றிருக்கின்றன (இடம் பெற்ற மற்ற நகரங்கள், Rangoon, Singapore, Hon-Kong, Halifax, Quebec and Montreal, Victoria, Capetown, Melbourne, Sydney, Brisbane, Hobart, and Auckland). அவற்றில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களின் பகுதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
The song of the Cities
(by Rudyard Kipling, 1896)
Bombay
Royal and Dower-royal, I the Queen
Fronting thy richest sea with richer hands --
A thousand mills roar through me where I
glean
All races from all lands.
Calcutta
Me the Sea-captain loved, the River built,
Wealth sought and Kings adventured life to hold.
Hail, England! I am Asia-Power on silt,
Death in my hands, but Gold!
Madras
Clive kissed me on the mouth and eyes and brow,
Wonderful kisses, so that I became
Crowned above Queens --a withered beldame now,
Brooding on ancient fame.
(* beldame என்றால் அழகற்ற கிழவி என்று பொருள்)
இவரது
"If___" (http://www.everypoet.com/archive/poetry/Rudyard_Kipling/kipling_if.htm) என்ற கவிதையைப் படித்துப் பாருங்கள், இந்தக் கவிதையின் சாரம் கீதாஉபதேசத்தின் கருத்துக்களைக் கொண்டது என்று பத்திரிக்கையாளர் திரு. குஷ்வந்த்சிங் அவர்கள் கருதியதாகத் தெரிகிறது. இது ஒரு நல்ல கவிதைதான். பார்வதி படித்தால் எந்த சுலோகங்களின் சாயல் இந்தக் கவிதையில் உள்ளது என்று சொல்லிவிடுவார்கள். சிறிது காலம் கிப்லிங் ஒரு யானை தன் துதிக்கையில் தாமரைப் பூவினை வைத்திருப்பதையும், இந்துக்கள் சூரியனின் குறியாகக் கருதும், அதிர்ஷ்டம் தரும் என்று நம்புகிற சுவஸ்திகாவையும் தன் புத்தகங்களில் இலச்சினையாகப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் ஜெர்மனின் நாசிப் படைகளின் குறியாக சுவஸ்திகா உயோகப்பட ஆரம்பித்தவுடன் அவர் அந்த வழக்கத்தை நிறுத்திக் கொண்டார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
இந்த ஆக்கத்திற்கு ஓவியம் வரைந்து கொடுத்த தேமொழி அவர்களுக்கு நன்றி - தனுசு
காத்திருப்பில் கலங்காதே
-தனுசு-
கொல்லிமலை காட்டுக்குள்ள
மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
மூணு நாளா தவிச்சிருக்கு -என்
முகம் காண துடிச்சிருக்கு.
பச்சரிசி சோறோடு
கருவாட்டு குழம்பாக்கி
தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
ஒத்தையிலே காத்திருக்கு.
உச்சந்தலை கூந்தலிலே
கட்டிவச்ச கருப்பு!
நெற்றியெனும் முற்றத்திலே
பொட்டு வச்ச வனப்பு !
கண்ணுக்குள் குடிவந்த
கடல்மீனின் துடிப்பு!
கன்னக் கதுப்பினில்
உப்பியிருக்கும் செழிப்பு!
வெளஞ்ச சோளக்கொல்லை
போல உந்தன் உடம்பு!
மெலிந்த உதட்டோரம்
மின்னுமடி சிவப்பு!
நிமிர்ந்து நடந்தாலே -சுவைக்கும்
மாங்கனி நினைப்பு!
இத்தனையும் பார்த்தாலே -மனசில்
வைக்குமடி நெருப்பு!
மலரும் நினைவினில் -உன்முகம்
உலர வேண்டாமடி
புலரும் பொழுதிதில் -விலகும்
உன் வருத்தமடி!
கொஞ்சிப்பேச வாரேனடி
கொஞ்சம் பொறு மயிலே!
கூட்டிக் கொண்டு வாரேன்
குளிர்காயும் நிலவை!
கொக்கரொக்கோ கூவும்வரை
நித்திரைக்கு தடை சொல்ல
வில்லாளன் வாரேனடி
வன வேட்டை முடித்து.
-தனுசு-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.
இந்த வயதிலும் ஓடிக்கொண்டிருக்கும் வாகனம்!
By S. Sabari Narayanan, Chennai
(இந்த வாகனம் ஏலத்தில் 3 கோடி 65 லட்ச ரூபாய்களுக்கு விலை போனதாம்)
This is the oldest motor vehicle car in the world that still runs.
It was built one year before Karl Benz and Gottlieb Daimler invented the internal combustion engine.
The world's oldest running motor vehicle has been sold at auction for an astonishing $4.62 million (R36.5-million), more than double the pre-sale estimate, as two bidders chased the price up in a three-minute bidding war.
The 1884 De Dion Bouton et Trepardoux Dos-a-Dos Steam Runabout drew a standing ovation as it was driven up onto the stage at Friday's RM Auction in Hershey , Pennsylvania - to prove that this 127-year-old car really does run! - and attracted a starting bid of $500 000, which was immediately doubled to $1 million.
Encouraged by the applauding crowd, the bidding went swiftly up to $4.2 million (R33 million) - 4.62 million (R36.5 million) including the 10 percent commission - before the car was knocked down to a unnamed buyer.
The Dos-a-Dos (Back-to-Back) Steam Runabout was built in 1884 by George Bouton and Charles-Armand Trepardoux for French entrepreneur Count de Dion, who named it 'La Marquise' after his mother.
In 1887, with De Dion at the tiller, it won the world's first ever motor race (it was the only entrant to make the start line!) covering the 32km from the Pont de Neuilly in Paris to Versailles and back in one hour and 14 minutes (an average of 25.9km/h) and, according to contemporary reports, hitting a breathtaking 60km/h on the straights!
La Marquise has only had four owners, remaining in one family for 81 years, and has been restored twice, once by the Doriol family and again by British collector Tom Moore in the early 1990's. Since then, it has taken part in four London-to-Brighton runs and collected a double gold at the 1997 Pebble Beach
d'Elegance in California .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!