Astrology திருமணத்தடை நீங்க எங்கே மனுக்கொடுக்க வேண்டும்?
அந்தக் காலத்தில் பெண்ணிற்கு 18 வயதிலும், ஆணிற்கு 21 வயதிலும் திருமணத்தை செய்து வைத்துவிடுவார்கள். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. படிப்பு, மேற்படிப்பு வேலை, பொருளாதார மேம்பாடு என்று பல காரணங்களால் பலருக்கும் திருமணம் தள்ளிக்கொண்டே போகின்றது .
அதிலும் பெண்களுக்குத் தள்ளிக்கொண்டே போவது வருந்தற்குரியது. ஒரு பெண் 12 வயதில் பூப்படைகிறாள் என்றால், அவளுடைய வசந்தகாலம் 36 ஆண்டுகள். 48 வயதுவரை அவள் இனிமையான மணவாழ்விற்கு உகந்தவள். 18 வயதில் மணமுடித்தால் 30 ஆண்டுகாலம் அவளுடைய உரிமம் (License) செல்லத்தக்கதாக இருக்கும். 32 வயதில் மணம் முடித்தால் 20 ஆண்டு காலம் வீணாகக் கழிந்து அவளுடைய உரிமக் கணக்கில் 16 ஆண்டுகள் மட்டுமே பாக்கி இருக்கும்.
இந்தக் கணக்கை எல்லாம் யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை.
தங்கள் வருமானத்தை அதிகப்படுத்துவதிலும், வங்கி இருப்பை உயர்த்துவதிலும், சொந்த வீடு வாங்குவதிலும், வாகனம் வாங்குவதிலும், தினமும் சரவணபவனில் வடை, பொங்கல், நெய்ரோஸ்ட் என்று வெட்டுவதிலுமே எல்லோரும் குறியாக இருக்கிறார்கள். இரண்டொரு பெற்றோர்கள் தங்கள் பெண்ணின் மணவாழ்க்கை குறித்துக் கவலைப் பட்டாலும், பெண் அதற்கு இசைவதில்லை. சில இடங்களில் சொல்லமுடியாத தவிப்பில் பெண் இருந்தாலும், பெற்றோர் கண்களில் அது படுவதில்லை.
எது எப்படி இருந்தாலும். திருமணம் ஆக வேண்டிய சூழ்நிலையில் அல்லது விருப்பத்தில் இருப்பவர்கள், லால்குடி அருகே இடையாற்று மங்கலத்தில் இருக்கும் மாங்கல்யேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று, அங்கே உறையும் நாதரின் தாள் பணிந்து மனுக் கொடுத்துவிட்டு வந்தால் திருமணம் உடனே கூடிவரும்.
அத்துடன் திரும்பும் வழியில் லால்குடிக்குச் சென்று, வாத்தியார் பெயரைச் சொன்னால். கே முத்துராமகிருஷ்ணர் வீட்டில் உங்களுக்கு அமுது படைத்து, கையில் வெற்றிலை பாக்குக் கொடுத்து அனுப்பி வைப்பார்கள். மோர்க்குழம்பு, வாழைப்பூ உசிலி, உருளைக்கிழங்கு காரகறி என்று வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டுப் பேருந்தைப் பிடிக்கலாம்.
திருமண கோரிக்கை உள்ளவர்கள் மட்டும்தான் செல்ல வேண்டுமா?
யார் வேண்டுமென்றாலும் செல்லலாம். குறிப்பாக உத்திர நட்சத்திரக்காரர்கள் அவசியம் சென்று வணங்க வேண்டிய ஸ்தலம் அது. அந்த நட்சத்திரக்காரர் களுக்கான கோவில் அது! அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் என்பது அதன் பெயர்
எங்கே உள்ளது?
திருச்சி நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அத்திருத்தலம்.
மூலவரின் பெயர்: மாங்கல்யேஸ்வரர். (சுயம்பு மூர்த்தி என்பது சிறப்பு)
அம்பிகையின் பெயர்: மங்களாம்பிகை
கோவில் இருக்கும் கிராமத்தின் பெயர்: இடையாற்று மங்கலம்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட புராதணக் கோவில்! பங்குனி உத்திரத்தில் கோவில் களை கட்டி திருவிழாக் கோலத்தில் இருக்கும்
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் உங்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.
கோவிலின் அஞ்சல் முகவரி: அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இடையாற்று மங்கலம் - 621 218 வாளாடி வழி, லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம்.
மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். பல ரிஷிகளின் திருமணத்தை அவர் முன்னின்று நடத்தியவர். தனது தவ வலிமையால் அவர் இன்றும் அக்கோவிலில் ஈசனின் தாள் பணிந்து அங்கேயே உறைகின்றார் என்று நம்பப்படுகின்றது. மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்துபவர். தவவலிமை மிக்கவர். உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன என்பதை மனதில் கொள்க!
உத்திரம் நட்சத்திரக்காரர்கள் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரிடமும் இனிமையாகப் பழகுவார்கள். நன்றி மறவாதவர்கள். வாக்கு நாணயம் மிக்கவர்கள். இறை நம்பிக்கை மிக்கவர்கள். உத்திர நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் மற்றும் கஷ்டங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்
ஒருமுறை சென்று வாருங்கள். பலனைக் கண்டு வாருங்கள்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!





