மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.8.09

சிறுகதை: 21st Century Avvaiyar

சிறுகதை: 21st Century Avvaiyar

ஆத்தாளுக்கும், மகளுக்கும் சண்டை. சத்தம் தெருவரை கேட்டது.
ஒண்டிக் குடித்தன வீடு. கேட்காதா பின்னே?

மாடியில் படியேறி, தங்கள் வீட்டு வாசல்வரைக்கும் ஒருவர் நடந்துவரும்
ஓசையைக்கூடக் கேட்காமல் சத்தமாகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

"என்னடி சொல்றே? விளங்குகிற மாதிரிச் சொல்லு!"

"உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் விளங்காது - எப்படிச் சொன்னாலும்
விளங்காது - அதனாலதான் சுருக்கமாச் சொல்றேன். பெரியப்பா பணம்
கொண்டு வந்து கொடுத்தால் - வாங்காதே. வேண்டாம் என்று சொல்லிவிடு"

"அதுதான் எப்படிச் சொல்றது?"

"உனக்கு முடியவில்லையென்றால் சொல்லு.நான் சொல்கிறேன். அய்யா,
பெரியவரே, மடியில் பணமும், மனதில் இருளும் கொண்ட மகானே! என்
தந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவாத உங்கள் பணம், இப்போது நீங்கள்
வலிய வந்து கொடுத்தாலும் எங்களுக்கு வேண்டாம். உங்களிடம் பணம் வாங்கி,
அது ஒத்த ரூபாயாக இருந்தாலும் சரி அல்லது ஒரு லட்சமாக இருந்தாலும்
சரி,திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் எனக்குத்
திருமணமே வேண்டாம் என்று சொல்லி விடுகிறேன் - போதுமா?"

"கிறுக்குப் பிடிச்சமாதிரிப் பேசாதே.பானை செய்றதுக்குப் பத்து நாள் ஆகும்.
போட்டு உடைக்கிறதுக்கு ஒரு நொடி போதும். முகத்தில் அறைஞ்சமாதிரி
வேண்டாம்னு சொல்லிட்டா, ஊருக்கு வந்து பத்துப் பங்காளிகள் முன்னால நின்னு
உன் கல்யாணத்தை நடத்துறது யாரு?"

"அதுக்கெல்லாம் நீ கவலைப் படாதே!.எங்க பெரியப்பாவைப்பத்தி எனக்கு
நன்றாகத் தெரியும். தலைப்பாகை வச்சிகிறதுக்கும், தேங்காய்ச் சட்டி
தூக்கிறதுக்கும் அவரை யாரும் கூப்பிடவேண்டாம். நான்தான் வீட்டிற்கு
மூத்தவன் என்று சொல்லி வம்படியா வந்து, முதல் ஆளா நின்னுடுவாரு!
பணம்னா மட்டும்தான் மனுஷன்கிட்ட பத்து ரூபாய்கூட வாங்கிறது கஷ்டம்.
ஆனா நீ சொன்ன அதுக்கெல்லாம் பி.டி.உஷா வேகத்தில அவரே ஓடி வந்து
நின்னுடுவாரு!"

"வேண்டாம்னு சொன்னா, கொண்டு வந்து கொடுக்கிறவங்களை அவமதிக்கிறது
மாதிரி ஆகாதா?"

"வேண்டாம்னு ஏன் சொல்றே - கொஞ்சம் புத்திசாலித்தனமா மாத்திச் சொல்லு.
எங்களுக்கு வேணும்ங்கிற அளவுக்கு பணம் கிடைச்சிருச்சு.இப்போது பணம்
எதுவும் வேண்டாம். தேவைப்பாட்டால் கேட்டு வாங்கிகிறோம் என்று சொல்லு!"

"அதையும் மீறி, இல்லை வச்சிக்குங்க என்று சொல்லி மேஜை மேல வச்சிட்டுப்
போனார்ன்னா என்ன செய்றது!"

"ம்..ம்..அப்படி வச்சிட்டுப் போனார்ன்னா, அவர் போன உடனே, அந்தப்
பணத்தைக் கொண்டுபோய் வடபழநி முருகன்கோயில் உண்டியல்ல போட்டுவிட்டு
வந்து விடு."

"உன் கோபத்துக்கும் வெறுப்பிற்கும் ஒரு அளவில்லையா? உண்டியல்ல
எதுக்காகப் போடணும்?"

"வட பழநி முருகன் தன் பக்தைக்கு நல்லது பண்ணாம விட்டுட்டாரு. உன் சகோதரி
அதுதான் என் பெரியம்மா - எவ்வளவு நல்லவர்கள். எவ்வளவு பெரிய முருக பக்தை
அவர்களைக் கொண்டுபோய் எதுக்காக இந்தக் கஞ்சத்தனம் பிடிச்ச மனுஷன்கிட்ட
அந்த முருகன் சிக்க வச்சாரு. சீக்கிரமா அவங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்.
நீ போய் உண்டியல்ல போட்டுட்டு வா. பிரார்த்தனையை நான் பண்ணிக்கிறேன்".

"அடிப் பாவி!"

"பாவி என்று சொல்லாதே, பெரியம்மாவைப் பற்றிக் காலையில் ஒரு கவிதை
எழுதினேன். அது இந்தச் சீட்டில் உள்ளது படித்துப்பார். சும்மா மனசுக்குள்ளேயே
படிக்காதே - வாய் விட்டுப் படி - அப்பொழுதுதான் அது செவி வழியாக மனதிற்குள்
போகும்!"

"உன்னைத் தமிழ் எம்.ஏ படிக்க வச்சதுக்கு இது ஒன்னுதான் மிச்சம்" என்று
முணுமுணுத்தவாறே சீட்டை வாங்கி வாய்விட்டுப் படித்தார்கள் வள்ளி அம்மையார்.

"கொடியது எதுன்னு முருகன் விளக்கமாகச் சொல்லும்படி கேட்க, 21ம் நூற்றாண்டின்
அவ்வைப்பிராட்டி பாடியது.
கொடியது கேட்கின் நெடி வெவ்வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினுங் கொடிதே ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிதே கஞ்சனுடன் வாழ்வது
அதனினும் கொடிதே அவனின் மனைவியாய் இருப்பது!"

"கிறுக்குக் கழுதை அவ்வையார் எங்கேடி இதெல்லாம் பாடினாள்?" என்று தன் தாய்
சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாத சீதா, தேங்காய்ப்பூத் துண்டையும், ஷாம்பூ
பாக்கெட்டையும் கையில் எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

வெளியே மறைவாக நின்று இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வள்ளியம்மை
ஆச்சியின் பெரிய கொழுதனார் சிவலிங்கம் செட்டியாருக்கு - அதுதான் சீதாவின்
பெரியப்பாவிற்கு சம்மட்டியால் அடிவாங்கியதைப் போன்று இருந்தது, ஒரு அடியல்ல,
அடுத்தடுத்து பத்து அடி வாங்கியதைப் போன்றிருந்தது!

சத்தமில்லாமல் திரும்பி, மெதுவாக நடந்து, படிகளில் இறங்கிக் கீழே தெருவிற்கு
வந்தவர், அருகில் இருந்த பஸ் நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
மனதில் தாங்கவொன்னா துக்கம். கையில் தன் தம்பி மகள் திருமணத்திற்குக்
கொடுப்பதற்காகக் கொண்டு வந்திருந்த ஐம்பதினாயிரம் ரூபாய் பணம்.

++++++++++ ++++++++++++++++++ ++++++++++++++

அதே நேரம் தன் வீட்டில் தெய்வானை ஆச்சி கவலையுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
தன் தங்கை மகளின் குணத்தை நன்கு அறிந்தவர் அவர். அரை மனதோடு தன்
வற்புறுத்தலுக்காக வீட்டுக்காரர் போயிருக்கிறாரே - கொடுத்து விட்டு வருவாரா
அல்லது வாங்கிக் கட்டிக் கொண்டு வருவாரா? ஒன்றும் புரியவில்லை

ஆச்சியின் தவிப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது. அவரின் கணவர் திருவாளர்
சிவலிங்கம் செட்டியார் காலை பத்து மணிக்குத்தான் வீட்டிற்குத் திரும்பினார்.
முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தார்.சோர்வுடனும் காணப்பட்டார்.

தெய்வானை ஆச்சி மெல்லிய குரலில் கேட்டார்கள்.

"ஏன் சிக்கலாகி விட்டதா?"

"இல்லை"

"பணத்தை வாங்கிக் கொண்டார்களா - இல்லையா?"

"பணத்தை வாங்கிக் கொள்ளும் மன நிலையில் அவர்கள் இல்லை"

"என்ன சொல்கிறீர்கள்?"

"என் தம்பியின் மருத்துவச் செலவிற்கு நான் பண உதவி செய்யாத கோபம்
அவர்களை விட்டு இன்னும் விலகவில்லை! என் தம்பியின் சாவிற்கு நான்தான்
காரணம் என்ற எண்ணத்தோடுதான் இன்னும் இருக்கிறார்கள்."

"சொன்னார்களா?"

"இல்லை தெரிந்து கொண்டேன்!"

"பேசினீர்களா?"

"எல்லாவற்றையும் விலாவரியாக இப்போது கேட்காதே - இரண்டு நாட்கள்
போகட்டும் சொல்கிறேன்" என்று சொன்னவர், படுக்கையறைக்குச் சென்று
படுக்கும் நோக்கத்துடன் சட்டையைக் கழற்ற ஆரம்பித்தார்.

அம்மையார் விடவில்லை. பின்னாலேயே தொடர்ந்து சென்று கேட்டார்கள்

"பணத்தைத் என்ன செய்தீர்கள்?"

அழுத்தமாகப் பதில் சொன்னார் அவர்."வடபழனிக் கோயில் உண்டியலில்
போட்டு விட்டேன்".

440 வாட்ஸ் மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சி ஏற்பட்டது அவருடைய
மனைவிக்கு.

"விளையாடாமல் சொல்லுங்கள் - உண்டியலிலா போட்டீர்கள்?"

"ஆமாம்,"

"எதற்காக?"

"சும்மா வழ வழவென்று கேட்டுக் கொண்டிருக்காதே, போடவேண்டும் என்று
தோன்றியது போட்டு விட்டேன்"

படுக்கையில் படுத்தவர், முகத்தைத் திருப்பிக்கொண்டுவிட்டார். தெய்வானை
ஆச்சியும் அத்துடன் விட்டு விட்டார்கள்.

++++++++++++++ ++++++++++++++++++++ +++++++++++++++++

நான்கைந்து நாட்கள் போகட்டும், நடந்ததைத் தெரிந்து கொள்ளலாம்
என்றிருந்த ஆச்சிக்கு மூன்றாம் நாள் காலையில் கூரியரில் வந்த கடிதம்
மேலும் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியது.

பெரிய அளவில் தர்மம் செய்யும் அறக்கட்டளை நிர்வாகத்தினரிடமிருந்து
வந்திருந்தது. அந்தக் கடிதம். ரத்தினச் சுருக்கமாக நான்கே வரிகளில் எழுதப்
பெற்றிருந்தது

எழுதப் பெற்றிருந்த வாசகம் இதுதான்

அன்புடையீர், நீங்கள் மனமுவந்து அனுப்பிய ரூபாய் நான்கு லட்சத்திற்கான
பணவோலை (Pay Order) கிடைத்தது. அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி
குறிப்பிட்டிருந்த குடும்பத்திற்கு உங்கள் பெயரைக் குறிப்பிடாமல் திருமண
உதவித் தொகையாக ரூபாய் ஒரு லெட்சத்திற்கான காசோலையை (Cheque)
அனுப்பி விட்டோம். மீதி மூன்று லெட்ச ரூபாயை எங்கள் தர்மநிதிக் கணக்கில்
வரவு வைத்துக் கொண்டு விட்டோம்.உங்களுக்கு நேரம் இருக்கும்போது
எங்கள் அலுவலகத்திற்கு ஒரு முறை வந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் தர்ம சிந்தனை வாழ்க! வளர்க!

ஆச்சிக்கு ஒன்றும் புரியவில்லை! தன் கணவர் தலை கீழாக மாறிப்போய் விட்டாரே,
என்ன நடந்திருக்கும்? அவருடைய மனதைப் புரட்டிபோட்டு மாற்றியது யாராக
இருக்கும்? இருபத்தைந்து ஆண்டுகளாகத் தன்னால் செய்ய முடியாததை யார்
செய்திருப்பார்கள்?

பலத்த சிந்தனையில் ஆழ்ந்தவர்கள்,அதற்கு விடை அன்று மாலை கிடைக்கும்
என்று நினைத்தார்கள்.

ஆனால் கிடைக்கவில்லை!

கணவரிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே கிடைத்தது.

தான் தன் தம்பி வீட்டிலிருந்து திரும்பி வரும்போது, பேருந்து கிடைக்காமல்,
நடந்தே வீட்டிற்கு வந்து சேர்ந்ததையும், வரும் வழியில் வடபழனிக் கோவியில்
அருகே காப்பி அருந்தும் நோக்கத்துடன் ஹோட்டல் ஒன்றிற்குள் சென்ற
மர்ந்ததையும், அங்கே சுவற்றில் மாட்டப்பெற்றிருந்த படத்தில் இருந்த
வாசகங்களைப் படிக்க நேர்ந்ததையும், தன்தம்பி மகளின் தர்ம அடிச் சொற்களால்
தன் மனதில் பாதி ஏற்பட்டிருந்த மாற்றத்தையும், அந்தப் படத்தில் எழுதப்
பெற்றிருந்த வாசகங்கள் முழு மாற்றத்தை ஏற்படுத்தியதையும் அவர்
யாரிடமும் சொல்லவில்லை.

சிலவற்றைச் சொல்லாமல் வைத்திருப்பதிலும் ஒரு சுகம் உண்டு!

அந்த வைர வரிகள் இதுதான்

"ஒரு மாதத்தில் பயன்பெற கீரையை பயிர்செய்
ஒரு வருடத்தில் பயன்பெற வாழையைப் பயிர்செய்
ஏழு வருடத்தில் பயன்பெற தென்னையைப் பயிர்செய்
இருபது வருடத்தில் பயன்பெற தேக்கைப் பயிர்செய்
பெற்ற பிறவியின் பயன்பெற தர்மத்தைப் பயிர்செய்!"

****************** **************
’பயிர்களும் பயன்களும்' எனும் தலைப்பில் அடியவன் எழுதி மாத இதழ் ஒன்றில்
வெளிவந்த சிறுகதை! நீங்கள் படித்து மகிழ இங்கே பதிந்தேன்.


வாழ்க வளமுடன்!

காட்சியும் - சாட்சியும்!


காட்சியும் - சாட்சியும்!

கவிஞர்களால் எதையும் சுருங்கச் சொல்லி மனதை அசர அடிக்க முடியும்.
எழுத்தாளர்களுக்கு எதையும் விரிவாகச் சொல்லத்தான் வரும்.

அறுபடை வீடுகளுக்கு 24 வரிகளில் ஒரு பாட்டு!

பாடலை எழுதியவர் மிகப் பெரிய கவிஞர். முனைவர். கல்லூரியில்
தமிழ்த்துறைத் தலவராக இருந்தவர். அதோடு முக்கியமாக கவியரசர்
கண்ணதாசனின் சிநேகிதர். அவருடைய பெயர் அர.சிங்காரவடிவேலன்.
அசத்தலாக, எதுகை, மோனை, சீர், சந்தம் என்று இலக்கண சுத்தமாகப்
பாடல் எழுதுவதில் வல்லவர்.

கீழே உள்ள பாடல் எப்படி உள்ளது பாருங்கள்.
-----------------------------------------------------------------

"சுப்பன் சொன்னான் மந்திரத்தை
சொக்கன் கேட்டான் தலைகுனிந்து
இப்புவி மயங்குது காட்சிகண்டு
இதற்கு சாட்சி சுவாமிமலை!

மாம்பழம் கேட்டது இருபிள்ளை
மதியால் வென்றது முதல்பிள்ளை
மலையில் நின்றது மறுபிள்ளை
மயிலுமே சாட்சி பழநிமலை!

தீயவன் சூரனை கொன்றவனே
செந்தூர் கடலினை கொண்டவனே
மாயவன் மகனே முருகையனே
மலரொன்று சாட்சி திருச்சீர்அலை!

கானகம் வாழ்ந்தது புள்ளிமயில்
கந்தனை மணந்தது வள்ளிமயில்
வானகம் வாழ்த்துது பூத்தூவி
யானையே சாட்சி தணிகைமலை!

செந்தமிழ்ப் பாவை தெய்வானை
செந்தில் முருகனை கைப்பிடித்தாள்
பைந்தமிழ் வாழ்ந்திடும் மணக்காட்சி
பரங்குன் றத்தின் திருக்காட்சி

கோதையர் இருவரும் அருகிருக்க
குமரனும் மலையில் கொலுவிருக்க
மாமனும் அன்பால் வாழ்த்திசைக்க
மங்களக் காட்சி சோலைமலை!"
- அர.சிங்காரவடிவேலன்
--------------------------
முதல் 4 வரிகள் -- சுவாமிமலை
அடுத்த 4 வரிகள் - பழநி
அடுத்த 4 வரிகள் - திருச்செந்தூர்
அடுத்த 4 வரிகள் - திருத்தணி
அடுத்த 4 வரிகள் - திருப்பரங்குன்றம்
அடுத்த 4 வரிகள் - பழமுதிர்ச் சோலை
------------------------------------------

வாழ்க வளமுடன்!

4.8.09

அவன்தான் ஒரிஜினல் வில்லன்!

அவன்தான் ஒரிஜினல் வில்லன்!

ஒரிஜினல் மிட்டாய்க் கடை அல்லது ஒரிஜினல் அல்வாக் கடை என்று
கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான நெய்யினால் செய்யப்பெற்ற இனிப்புகள்
என்பார்கள். அதுபோல வில்லன்களிலும் ஒரு ஒரிஜினல் வில்லன் இருக்கிறான்.
நீங்கள் திரைப்படங்களில் பார்க்கும் வில்லன் படத்தோடு போய்விடுவான்.
நேரில் பார்க்கும் வில்லத்தனமான ஆசாமிகளைக் கொஞ்சம் புத்திசாலித்
தனத்தோடு சமாளித்துவிடலாம்.

ஆனால் யாராலும் சமாளிக்க முடியாத வில்லன் ஒருவன் இருக்கிறான்.
அவன் பெயர் மாந்தி!

எல்லோருடைய ஜாதகத்திலும் அவன் இருப்பான். யாருக்கும் விதிவிலக்கில்லை.
ஆனால் 3,6,10 & 11ஆம் (3rd/6th/10th and 11th houses) வீடுகளில் அவன்
இருந்தால், அந்த ஜாதகர்கள் மட்டும் தப்பிப் பிழைப்பார்கள்.

"அது மட்டும் ஏன்?" என்று கேட்காதீர்கள். சில ஜோதிட விதிமுறைகளுக்குக்
காரணம் சொல்ல முடியாது. அதை வகுத்தவர்கள் எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே போய்ச் சேர்ந்துவிட்டார்கள். போய்ச் சேர்ந்தவர்களிடம் எப்படிக் கேட்பது?
அவர்கள் சொல்லி விட்டுச் சென்றதை, அப்படியே நம்பி எடுத்துக் கொள்ள
வேண்டும். அவ்வளவுதான். அது மட்டுமே நாம் செய்யக்கூடியது. அந்த வில்லனிடம்
அடி வாங்கியவர்களும் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதையும், அதாவது
அவர்கள் அனுபவித்ததையும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!

ராகு & கேதுவைப்போல மாந்தியும் ஒரு நிழல் கிரகம் (shadow' planet)

தீயவைகளைச் செய்யக்கூடியது.It has a malefic effect.

குளிகன் என்பவனும் மாந்தி என்பவனும் ஒரே ஆள்தான். ஒரே உபகிரகம்தான்.
புராணங்கள் மாந்தியை சனியின் புதல்வன் என்கின்றன. அது நமக்குத்
தேவையில்லாதது. எந்த மருத்துவமனையில் அவர் பிறந்தார் என்றெல்லாம்
நாம் கேட்டுக் கொண்டிருப்போம். ஆகவே அது தேவையில்லாதது.

It is scientifically a satellite. There ends the matter.

சில ஜோதிடவல்லுனர்கள், இரண்டு பெயர்கள் இருந்தாலும், அவை ஒன்றுதான்
என்பார்கள் வேறு சிலர் அவை தனித்தனி என்னும் மாறுபட்ட கருத்தைக்
கொண்டுள்ளார்கள். ஆனால் பழைய ஜாதகங்களை எல்லாம் எடுத்துப்பார்த்தால்,
ஒன்றைத்தான் குறித்து வைத்துள்ளார்கள். ஆகவே அடித்துச் சொல்லலாம், அவை
இரண்டும் ஒன்றுதான்! There is not a single chart in any book where Gulika
& Mandi are both present, so both must be the same.

ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தவர்கள் அறியத்தரலாம். தன்
தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு
அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த
சமயத்தில், சனியை வரவழைத்த ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில்
நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம்.
ஜாதகத்தில், சனிக்கு 11ஆம் வீடு சிறந்த இடம். 12ஆம் வீடுதான் மோசமான
இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும்,
தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11ல் நிற்கும் போது, சனியின்
ஒரு கால் 12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம்.

கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்த,
அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந்த அந்தக் காலும், அதனுடன்
இருந்த சதைப் பகுதியும் சேர்ந்துதான் மாந்தியாக உருவெடுத்ததாம். அதோடு
லக்கினத்தில் உயிர் பெற்று எழுந்ததால், ராவணனின் மகன் இந்திரஜித்தின்
வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே முடித்துக் கணக்கைத் தீர்த்ததாம்.
Mandi being on the lagna gave Indrajit, a short span of life!

இந்தக்கதையை நம்புவர்கள் நம்பலாம். நம்பாதவர்கள், பின்னூட்டத்தில் சொல்ல
வேண்டாம். ஒரு குறுகுறுப்பான தகவல் என்பதற்காக அதைக் கொடுத்துள்ளேன்.
எனக்கும் அந்தக் கதையில் நம்பிக்கை இல்லை!:-))))

இன்னொரு கதையும் உண்டு, ராவணன் தன் அரசவையில், அரியணை இருக்கும்
இடத்தில் ஏறுவதற்கான படிக்கட்டில் சனியையும் கல்லில் படிக்கட்டாகி,
குப்புறப் போட்டு வைத்திருந்தானாம். அதுதான் முதல் படிக்கட்டாம். தினமும்
அதை மிதித்துக் கொண்டு, ஏறிச் சென்றுதான் தன் அரியணையில் அமர்வானாம்.

அவனுடைய கொட்டத்தை அடக்க நினைத்த நாரதர், அவனுடைய சபைக்குச்
சென்று பேசிக்கொண்டிருந்த போது சொன்னாராம், “ ராவணா, உன்னுடைய
தவவலிமை என்ன? உன்னுடைய பெருமை என்ன? நீ எதற்காக சனியை
குப்புறப் போட்டு மிதித்துக் கொண்டு செல்கிறாய்? நிமிர்த்திப்போட்டு, சனியின்
நெஞ்சில் அல்லவா நீ மிதித்துக் கொண்டு செல்ல வேண்டும்?”

நெகிழ்ந்துபோன ராவணன் உடனே அதைச் செய்தான்.

என்ன ஆயிற்று?

நிமிர்ந்து கிடந்த சனியின் மார்பில், அவன் கால்கள் படும்போதெல்லாம், சனியின்
பார்வை அவன் மேல் விழுக ஆரம்பித்தது.

சனியின் பார்வை படப்பட அவனுடைய வலிமை எல்லாம் நீங்கி, கெட்டவை
குடிகொள்ள ஆரம்பித்தன. கடைசியில் மாற்றான் மனைவி சீதையின் மேல்
கையை வைத்தான். வைத்த பிறகு நடந்ததைத்தான் அனைவரும் அறிவோமே!
----------------------------------------------------------------------------

படத்தின் மேல் கர்சரை வைத்து அழுத்திப்பாருங்கள். படம் பெரிதாகத் தெரியும்.
ஜகன்நாத ஹோரா மென்பொரு்ளில் கணிக்கபெற்ற ஜாதகத்தில் மாந்தியின்
நிலைப்பாடு அதில் தெரியவரும்
----------------------------------------------------------------------------------------------------
கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜோதிடர்கள் ஜாதகப் பலன்களைச்
சொல்லும்போது, மாந்தியின் நிலையை வைத்துத்தான் முக்கியமான பலன்களைச்
சொல்வார்கள். அது சரியாகவும் இருக்கும். தமிழ்நாட்டு ஜோதிடர்கள்,
மாந்தியையும் பார்ப்பதில்லை. அஷ்டகவர்க்கத்தையும் பார்ப்பதில்லை.
என் கண்ணிற்கு அது ஒரு குறையாகத்தான் படுகிறது!

நான் படித்ததெல்லாம் ஆங்கில ஜோதிட நூல்கள் என்பதால், எனக்கு ஒரு விரிந்த
பார்வை கிடைத்தது. நான் கேரள ஜோதிடர்கள் எழுதிய கட்டுரைகளையும்
படித்திருக்கிறேன். குஜராத் ஜோதிடர்கள் எழுதிய கட்டுரைகளையும்
படித்திருக்கிறேன்.
---------------------------------------------------------------------------------
மாந்தி அல்லது குளிகன், ஜாதகங்களில் இருக்கும் இடத்தைவைத்துப்
பலாபலன்கள்:

1ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் பந்தா’ பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர்
கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச்
சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள்
-----------------------------------------------------------------------
2ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால்,
சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு
இல்லையென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள்
இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும்.
சிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள்.

இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில்
(Dictionary)மட்டும்தான்.
---------------------------------------------------------------------
3ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன் கோபக்காரன்.
யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர வேண்டும்
என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக்கூடியவன்.
உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு
நல்ல உறவு இருக்காது.

சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின்
தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
----------------------------------------------------------------------
4ல் மாந்தி இருந்தால்:

ஒரே வரியில் சொன்னால் - துரதிர்ஷ்டவசமானவன் மற்றும் ஏழ்மையான
நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor)
-----------------------------------------------------------------------
5ல் மாந்தி இருந்தால்:

நிலையில்லாதவன். அதாவது நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி
மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான்.
நாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன்.
அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள்
தொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது.
சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள்.
பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள்.
-------------------------------------------------------------------------
++++++6ல் மாந்தி இருந்தால்:

துணிச்சலானவன். உங்கள் மொழியில் சொன்னால் தெனாவெட்டான ஆசாமி.
அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி ஓடுவார்கள் (terror to his foes).
மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர் சமூகத்தில் புகழ் பெற்று
விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை விரும்புவாள். அவனிடம்
ஈடுபாடுகொள்வாள் (loved by women)
-------------------------------------------------------------------------
7ல் மாந்தி இருந்தால்:

வாய்ச்சண்டை போடக்கூடியவன். வீண் விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு
வீண் வம்பு என்று ஒதுங்காதவன். தவறான நியதிகள், தவறான நியாயங்களை
உடையவன். உங்கள் மொழியில் சொன்னால் தனக்கென்று சில சட்டங்களை
வைத்திருப்பவன். நன்றி, விசுவாசம் இல்லாதவன்.

சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின் தயவிலேயே
வாழ்க்கையை ஓட்ட நேரிடும்!
-------------------------------------------------------------------------
8ல் மாந்தி இருந்தால்:

கண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு வயதான காலத்தில்
கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு சாப்பிட்டாலும், பசித்துக்
கொண்டே இருக்கும் உடல் அமைப்பைக் கொண்டவன்.

துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும். கல் மனதுக்காரன்.
ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது.
------------------------------------------------------------------------
9ல் மாந்தி இருந்தால்:

தன்னுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள்
அவனை ‘அம்போ’ அல்லது ’சிவ சம்போ’ என்று கடாசிவிட்டுப் போய்
விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும்.
(deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள்.
வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும்.
-------------------------------------------------------------------------
10ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் பலவிதமான கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன்.
சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு
இறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வீட்டில்
விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும் சாப்பிட
விடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில் போட்டு
வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும் மனப்பான்மை
உடையவர்களாக இருப்பார்கள்.

மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள்
----------------------------------------------------------------------------
11ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம்
கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான்.

சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது .
உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப்
பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் தேடி வரும்.
----------------------------------------------------------------------------
12ல் மாந்தி இருந்தால்:

ஏழ்மை நிலையில் வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும்.
கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும்.
சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீழ்த்தரமான
பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள்.

சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில்
இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு.
-----------------------------------------------------------------------
கூறப்படுள்ளவை அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு,
சுப கிரகங்களின் அமைப்பு, பார்வை ஆகியவற்றை வைத்து மேற்சொன்ன
பலன்கள் மாறுபடும். கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும்
போகலாம்.

எனது அனுபவத்தை வைத்து மாந்தியின் பலன்களை மேலும் விவரமாக அலச
உள்ளேன். அது மேல் நிலைப் பாடம். மின்னஞ்சலில் வரும். சனியை
அலசியவுடன், தொடர்ந்து மாந்தியைப் பற்றிய பகுதி வரும்.
பொறுத்திருந்து படியுங்கள்!


அன்புடன்,
வகுப்பறை
வாத்தியார்




வாழ்க வளமுடன்!