
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிறுகதை: மாமியாரின் மறுபக்கம்! மீனாட்சி அரசாளும் மதுரை. கோவிலுக்குக் குடமுழுக்கு முடிந்து
பத்து தினங்களே ஆகியிருந்தன. பளபளப்பு அத்தனை இடங்களிலும்
குடமுழுக்கைச் சிறப்பாக நடத்தியவர்களின் பெயரைச் சொல்லிக்
கொண்டிருந்தது.
தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பிய சாலா, பொற்றாமரைக்
குளத்தின் வடக்குப்படிக்கட்டில் வந்து அமர்ந்தாள். தனது இரண்டு
வயதுக் குழந்தையை மடியில் அமர்த்திக் கொண்டாள். குழந்தை
சமர்த்தாக வருகிற போகிற ஜனங்களைப் பார்த்தவாறும், தன்
தாயின் கையைக் கெட்டியாகப் பிடித்தவாறும் அமர்ந்திருந்தது.
சாமி சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் இருந்த விற்பனைக் கடையில்
இருந்து, லட்டு பிரசாதத்தை விலைக்கு வாங்கிக் கொண்டு திரும்பிய
அவளுடைய கணவன் குமரப்பனும் அவளருகே வந்து அமர்ந்து
கொண்டான்.
அமர்ந்தவன் மெல்லக் கேட்டான், "சொக்கநாதர் சன்னதியில்
அரைமணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்து பிரார்த்தனை செய்தாயே
- என்ன வேண்டிக்கொண்டாய்?"
புன்னகைத்த அவள், மெல்லிய குரலில் பதில் சொன்னாள்.
"எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நீங்கள்தான் எனக்குக் கணவராக
வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்"
"ஏன் இந்த ஒரு ஒரு ஜென்மம் பத்தாதா? அடுத்த பிறவி எதற்கு?"
"இல்லை, உங்களோடு திகட்டும் வரைக்கும் வாழவேண்டும். அதற்கு
எத்தனை பிறவிகள் வேண்டுமோ எனக்குத் தெரியவில்லை!"
"ஓகோ!"
"நீங்கள் என்ன வேண்டிக்கொண்டீர்கள்?"
"நான் அம்பாளிடம் வேண்டிக்கொண்டேன்!"
"அதுதான் என்ன வேண்டிக்கொண்டீர்கள்?"
"எத்தனை பிறவி என்றாலும் என் ஆத்தாதான் எனக்கு மீண்டும் மீண்டும்
ஆத்தாவாக வந்து அமைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்."
"என்னவொரு ஆத்தா பாசம்? ஏன் இதுவரை பட்டது போதாதா?"
"என் ஆத்தாவால்தான் உன்னுடைய அபரிதமான அன்பு எனக்குப்
புலப்பட்டது. உன்னுடைய அன்பால்தான் நீ என்னைக் கட்டிப் போட்டு
வைத்திருக்கிறாய்!"
"உங்கள் தாயாருக்கு ஊரில் என்ன பெயர் தெரியுமா?"
"தெரியும். அலறுவாய் அலமேலு ஆச்சி!"
"பெண்ணிற்கு நாவடக்கம் வேண்டும். அது இல்லாததால்தான் அவர்கள்
அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். என்னை விடுங்கள். உங்கள்
தாயபிள்ளைகள் யாரிடமாவது அவர்களுக்கு சுமூகமான உறவு இருக்கிறதா?"
"ஆண், பெண் என்ற பேதம் எதற்கு? எல்லோருக்குமே நாவடக்கம் வேண்டும்.
என் தாயாரிடம் அது இல்லை. முன்கோபம் மிக்கவர்கள். கோபத்தில்
என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி விடுவார்கள். அத்தனை
பிரச்சினைக்கும் அதுதான் காரணம். கோபத்தோடு எழுகிறவன்,
நஷ்டத்தோடு உட்காருவான் என்பார்கள். அந்தக் கோபத்தால் என்
தாயார் இழந்தது அதிகம். "
"இத்தனை வயதாகியும் அவர்கள் ஏன் இன்னும் அதை உணரவில்லை?"
"அது அவர்களுடைய சுபாவம். சுபாவத்தை மாற்றிகொள்வது இயலாத
காரியம். பாகற்காய் பாகற்காய்தான். என்ன சர்க்கரை போட்டு சமைத்தாலும்
அதன் கசப்பு நீங்காது! பாகற்காயில் கசப்பும் உண்டு. அதோடு அற்புதமான
மருத்துவத் தன்மையும் உண்டு.பலருக்கும் அதன் கசப்பு மட்டுமே கண்ணில்
படும். மருத்துவக் குணத்தை அறிந்தவர்கள் வெகு சிலரே!"
"உங்கள் அத்தாவிடம் உள்ள அந்த மருத்துவக்குணம் என்னவென்று
சொல்லுங்களேன்"
"நேரம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்" என்று சொன்னவன் எழுந்து
விட்டான்.
அவர்கள் பேச்சு அத்துடன் தடைப்பட்டது.
+++++++++++++++++++++++++++++++++++++++++
அதே நேரம் சாலாவின் மாமியார் அலமேலு ஆச்சி அவர்கள் தன் இளைய
சகோதரன் சாத்தப்பனுன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"விளக்கமாற்றிற்குப் பட்டுக் குஞ்சம் கட்டின மாதிரி உடம்பு. சோறு வடிக்கிற
குண்டான் மாதிரி முகம். தோல் மட்டும்தான் கொஞ்சம் சிவப்பு. இவளைப்
போய் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறானே - இவனுக்கு
நடிகை நயன்தாரா மாதிரி ஒரு அழகான பெண்ணைக் கல்யாணம் பண்ணி
வச்சிருந்தா - என்ன ஆகியிருக்கும்?" என்று ஆச்சி தன் மருமகள்
புராணத்தைப் பாட ஆரம்பித்து விட்டார்கள்.
ஆச்சி திரைப் படங்கள், சின்னத்திரைத் தொடர்கள் என்று நிறையவே
பார்த்துக் கரை கண்டவர்கள்.வார்த்தைகள் எல்லாம் உதாரணங்களுடன்
வசனங்களாகவே வரும்.
"என்ன ஆகியிருக்கும் - நீங்களே சொல்லுங்கள்," என்று தம்பி
குறுக்கிட்டவுடன், ஆச்சி தொடர்ந்து சொன்னார்கள்.
“நாகபட்டிணத்தில் அடிச்ச சுனாமி எங்க வீட்டுக்குள்ள அடிச்சிருக்கும்.
அப்படியே என்னைக் கொண்டுபோயிருக்கும். உன்னோடு பேச நான்
உயிரோடு இருந்திருக்க மாட்டேன்”
“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ஆச்சி. ஆயிரம் இருந்தாலும், அவள்
உங்கள் வீட்டிற்கு வாழவந்திருக்கும் பெண். விளக்கேற்றி வைக்க வந்தவள்.
நல்ல வார்த்தையாகச் சொல்லுங்கள் ஆச்சி!”
இந்த இடத்தில், மனம் உடைந்த ஆச்சி, உணர்ச்சி மேலிட, அழுக
ஆரம்பித்து விட்டார்கள்.
“தம்பி, நான் என்ன வேண்டுமென்றா சொல்லுகிறேன்? உள்ளதைத்
தானே சொல்லுகிறேன். தேளிற்குக் கொடுக்கில் மட்டும்தான் விஷம்.
என் மருமகளுக்கு உடம்பெல்லாம் விஷம். அவளோடு இருக்க முடியாது.
அதனால்தான் வந்துவிட்டேன்.”
தன் மூத்த சகோதரியின் ஆளுமை உணர்வையும், கோப உணர்வையும்
நன்கு அறிந்த சாத்தப்பன், இந்த இடத்தில் பொறுமையாக எடுத்துச்
சொன்னான்.
"ஆச்சி ஒன்று மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த வீட்டில்தான்
மாமியார் மருமகள் சண்டை இல்லை? ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுத்துப் போகாததினால்தான் பிரச்சினைகள் உண்டாகின்றன.
உங்கள் மருமகள் சாலாவையும் நான் அறிவேன். நீங்கள் சொல்லுகிற
மாதிரியான பெண்ணல்ல அவள். உங்கள் மகன் குமரப்பன் எவ்வளவு
கெட்டிக்காரன்? நீங்கள் சொல்லுகிற மாதிரி அவளுக்கு உடம்பெல்லாம்
விஷம் என்றால், அவன் அதை உணராமலா அவளுடன் குடும்பம் நடத்திக்
கொண்டிருக்கிறான்? எல்லா ஆத்தாக்களுக்குமே மகன் தனக்கு மட்டும்தான்
பாத்தியப்பட்டவன் என்னும் உணர்வு அதிகம். தன்னுடையது என்னும்
பொசசிவ்னெஸ் அதிகம். திருமணத்திற்குப் பிறகு உரிமைப் பத்திரம்
மாறிவிடும். வருபவளுக்கு மகன் சொந்தமாகிவிடுவான் என்பதை ஏற்றுக்
கொண்டு யதார்த்தமாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது!”
”சொந்தத்தில், உள்ளூரில் நிறையப் பெண் பார்த்தேன். ஒன்றுகூட
அமையவில்லை. அவன் இவளை வெளியூரில் இருந்து பிடித்துக் கொண்டு
வந்தான். உள்ளுர்ப் பெண் என்றால் நமது குடும்பத்தின் அருமை பெருமை
தெரிந்தவளாக இருப்பாள். தெரியாவிட்டாலும் பெற்றவர்கள் சொல்லி
யனுப்பி வைப்பார்கள். அது எதுவும் தெரியாமல் வந்தவள் என்பதால்தான்,
என் கையை விட்டு என் மகன் போய்விட்டான். நானும் ஊருக்கு வந்து
இப்படித்தனியாய் இருந்து இழுபடும்படியாகி விட்டது.”
பேச்சை மேலும் வளர்க்க விரும்பாத சாத்தப்பன்,” சரி, விடுங்க
ஆச்சி! சின்னஞ்சிறுசுகள்! ஒரு நாள் உங்கள் அருமை, பெருமை
தெரியாமலா போய்விடும்? அப்போது வருவார்கள். அதுவரை
பொறுமையாக இருங்கள்!” என்று சொன்னான்.
அந்த அருமை, பெருமைகளை, அனைவரையும் உணரவைத்தான்
பழநியம்பதியில் உறையும் பழநிஅப்பன்!
**********************
இளம் வயதிலேயே கணவனைப் பறிகொடுத்தவர் அலமேலு ஆச்சி.
அவருடைய கணவர் அண்ணாமலை செட்டியார் சாலை விபத்தொன்றில்
காலமாகிவிட்டார். ஆச்சியின் மகன் குமரப்பனுக்கு அப்போது ஐந்து
வயதுதான்.செட்டியார் வேலை பார்த்த வங்கியில் ஆச்சிக்கு
மனிதபிமான அடிப்படையில் வேலை தருகிறேன் என்றார்கள்.
ஆனால் ஆச்சிக்கு, உரிய கல்வித்தகுதி இல்லாததனால், கடை நிலை
ஊழியர் வேலை மட்டுமே கொடுக்க முடியும் என்றார்கள். ஆச்சி
மறுத்து விட்டார்கள்.
வங்கியிலிருந்து,பி.எஃப், கிராஜுட்டி, காப்பீட்டுப்பணம், ஊழியர்கள்
சங்க உதவிப்பணம் என்று நிறையப் பணம் கிடைத்தது. அதோடு
செட்டியாரை வைகுண்டத்திற்கு அனுப்பிய லாரிக் கம்பெனிக்காரர்களும்
நீதிமன்ற உத்தரவின்படி நிறையப் பணம் கொடுத்தார்கள். வந்த
பணத்தையெல்லாம், ஆச்சியின் அப்பச்சியும், மாமனாருமாகப் பேசி,
பத்திரப்படுத்தி வைத்தார்கள். ஆச்சியின் மாத வருமானத்திற்கு
வழிபண்ணி வைத்தார்கள். முதல் இரண்டு வருடம் தன் தாய்
வீட்டிலிருந்த ஆச்சி, பிறகு செஞ்சியில் இருந்த தங்கள் வீட்டிற்கே
வந்து விட்டார்கள்.
ஆச்சியின் ஆழ்மனதில் ஒரு கோபம் உண்டு. விதி தன்னை இளம்
வயதிலேயே இப்படி விதவையாக்கிவிட்டதே என்ற கோபம் அது.
தன் வயதையொத்த பெண்கள் ஜிகுஜிகுவென்று பட்டில் போகும்
போதும், வைரத்தாலி மின்ன சிரிக்கும்போதும், ஆச்சியின் மனம்
அடித்துப்போட்டது போல வலியால் துவளும். போகப் போக அது
உளவியல் ரீதியாக ஆச்சியின் மனதை, செயலை மிகவும் மாற்றி
விட்டது. அவர்களுடைய நல்ல குணமெல்லாம் மங்கிப் போய்,
எரிந்து விழும் தன்மையே மேலோங்கி நின்றது. யாருடனும் ஒட்ட
முடியாமல் போய்விட்டது.
பலர் அவர் வீட்டில் பெண் கொடுக்கத் தயங்கியபோது, அதற்கு
இடமில்லாமல், குமரப்பனே, தன்னுடன் பொறியியற் கல்லூரியில்
படித்த சாலாவையே திருமணம் செய்து கொண்டுவிட்டான்.
நிறைய வாங்கி, தன் மகனின் திருமணத்தை தடபுடலாகச் செய்ய
வேண்டும் எனும் ஆச்சியின் ஆசை, நிறை வேறாமல் போய்விட்டது.
அதில் ஆச்சிக்கு மிகுந்த வருத்தம்.
சாலாவீட்டில், வரதட்சனை வேண்டாம் என்று இவன் சொல்லிவிட்டான்.
வலுக்கட்டயமாக அவர்கள் கொடுத்த ஐந்து லட்ச ரூபாய்களைக்கூட,
சாலா பேரிலேயே வைப்பு நிதியாகப் போடச் சொல்லிவிட்டான்.
அதே நேரத்தில் தன் தாயார் நஷ்டப்படக்கூடாது என்று, தன்
திருமணத்தால் கிடைக்கக்கூடிய ஆதாய வரவு என்ன இருக்கும் என்பதை,
தன் சிறிய தந்தையாரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டு, தன்
தாயாரின் கையில் மூன்று லட்ச ரூபாய் ரொக்கத்தையும் கொடுத்து
விட்டான். அதோடு திருமணம் நடந்த போது, செலவுகளுக்கு, தன்னுடைய
வங்கி டெபிட் கார்டைக் கையில் கொடுத்து வேணும் என்கிற பணத்தை
எடுத்துக் கொள்ளவும் சொல்லிவிட்டான்.
தன் மகன் படித்து முடித்து புனே’யில் மிகப் பெரிய நிறுவனத்தில்
வேலைக்குச் சேர்ந்தபோது, என் மகனுக்கு நல்ல சாப்பாடு கிடைக்காது,
நான் வடித்துப் போடுகிறேன் என்று சொல்லி ஆச்சி அவர்களும் உடன்
வந்து விட்டார்கள். புனேயில் சிவாஜி நகரில் வீடு. தனாஜிவாடி
பகுதியில் அவன் வேலைபார்க்கும் அலுவலகம் இருந்தது.
மொழிப்பிரச்சினையால் ஆச்சி எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே
இருப்பார்கள். வார விடுமுறை நாட்களில் மகன் கூட்டிக் கொண்டு
போனால்தான் உண்டு.
குன்யா முரளிதர் கோவில், ஓம் கரேஷ்வரர் கோவில் என்று துவங்கி
புனேயில் அத்தனை கோவில்களையும். கேல்கர் அருங்காட்சியகம்,
பால கந்தர்வ அரங்கு, சனிவார்வாடா அரண்மனை, சரஸ் பூங்கா,
பேஷ்வா பூங்கா என்று அத்தனை சுற்றுலாத் தளங்களையும்
ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டார்கள்.
குமரப்பனுக்குத் திருமணம் நிச்சயமானவுடன், ஆச்சி அவர்களின்
புனே வாழ்வு முடிவிற்கு வந்துவிட்டது. சாலா பெங்களூரில் வேலை
பார்த்ததால், குமரப்பனும் பெங்களூருக்கு வேலையை மாற்றிக்
கொண்டு வந்துவிட்டான்.
அவனுடைய திருமணத்திற்குப் பிறகு, ஆச்சி, அவர்களுடன்
பெங்களூருக்கு வந்து இருந்தார்கள். அவனுக்கு அவுட்டர் ரிங்
ரோட்டில் அலுவலகம். அவளுக்கு ஒயிட்ஃபீல்ட் ரோட்டில்
அலுவலகம். மாதவபுரா ஏரியாவில் வீடு. சாலா மாருதி ஜென்கார்
வைத்திருந்தாள். பெங்களூரில் எல்லா இடங்களும் அத்துபடி.
அதோடு நன்றாகக் கார் ஓட்டுவாள். தன் கணவனைக் காலையில்
அவனுடைய அலுவலகத்தில் இறக்கிவிடுவதோடு, மாலையில்
திரும்ப வீட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதையும் அவள்தான்
செய்வாள்.
ஆச்சிக்கு தன் மருமகள் கார் ஓட்டுவதே முதலில் எரிச்சலைத்
தந்தது. பெண் பெண்ணாக இல்லாமல் ஆண்களைப் போல எல்லா
வேலைகளையும் செய்கிறாளே என்ற பத்தாம்பசலி எண்ணங்களால்
தொடர்ந்து பல எரிச்சல்கள். பிரச்சினைகள், சச்சரவுகள்.
மனத்தாங்கல்கள். பொறுத்துக் கொள்ள முடியாமல், காரைக்குடி
பெரிய வீட்டிற்கே திரும்பி வந்து விட்டார்கள். பிறகு நடந்த
தெல்லாம் கதைக்கு முக்கியமில்லை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
குமரப்பன் தனது ஐந்தாவது திருமண நாளை, தன் மனைவி
மகளுடன், பெங்களூர் தாஜ் ரெஸிடென்ஸி ஹோட்டலில்
கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ஊரில் இருந்து தகவல் வந்தது.
அவனுடைய தாயார், குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டார்
களாம். துவைக்கிற கல்லில் தலை அடிபட்டதால் பின்மண்டையில்
பலமான அடியாம். உடனே புறப்பட்டுப் போனான்.
காரைக்குடியில் இருந்த தனியார் மருத்துவ மனைக்காரர்கள்,
முதலுதவி செய்து, ஆச்சியின் மயக்கத்தைப் போக்கி உயிர்
பிழைக்க வைத்திருந்தார்கள். உதவிக்கு, வளவில் இருந்த மற்ற
பங்குதாரர்களும் இருந்தார்கள். தலையின் பின்பகுதியில் ரத்தம்
கசிவது நின்று விட்டாலும், மதுரை அல்லது திருச்சிக்குச் சென்று
மேற்சிகிச்சை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
குமரப்பனும், திருச்சியில் வைத்து சிகிச்சை செய்தான். ஒன்றும்
பலனிக்கவில்லை. ஆச்சி அவர்கள் திருச்சி வந்த நான்காம் நாள்
காலையில் சிவபதவி அடைந்துவிட்டார்கள்.
ஆனால் இறக்கும் முன்பு, தன் மகனின் கைகளைக் கெட்டியாகப்
பிடித்துக் கொண்டு, கலங்கிய கண்களுடன் தன் கடைசி விருப்பத்தைச்
சொல்லி விட்டுத்தான் இறந்து போனார்கள்.
அதுதான், குமரப்பனை மட்டுமல்ல, சாலாவையும் அதிர வைப்பதாக
இருந்தது. ஆச்சியின் முழு உணர்வும் அதில் வெளிப்பட்டது.
“அப்பச்சி, நான் பிழைக்க மாட்டேன் என் உள்மனது சொல்கிறது.
பணத்தை வீணாகச் செலவழித்து என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதே.
என் காலம் முடியப் போகிறது. நான் வாழ்ந்த வாழ்க்கை போதும்.
இளம் வயதில் விதவையாகி, ஒரு குழந்தையுடன் வாழ்வதுதான்
உலகிலேயே மிகவும் கஷ்டமான வாழ்க்கை. நான் பட்ட கஷ்டங்கள்
போதும். இளம் விதவை இந்த சமூகத்தின் கோரப்பிடியிலிருந்து
தன்னையும் காத்துக் கொண்டு, தன் பிள்ளையையும் ஆளாக்குவது
என்பது சவாலான செயல். ஒரு போராளியின் மனநிலை இருந்தால்
மட்டுமே அதை வெற்றிகரமாகச் செய்ய முடியும். நான் அப்படித்தான்
அதைச் செய்தேன். குன்றக்குடி முருகன் எனக்குத் துணையாக
இருந்தான். நான் சேர்த்து வைத்திருக்கும் பணம், எனது நகைகள்,
என் அப்பச்சி செக்காலைத் தெருவில் எனக்குக் கொடுத்த இடம்
எல்லாவற்றையும் சேர்த்தால், இன்றைய மதிப்பில் அது ஒரு கோடி
தேறும். அந்தப் பணம், இன்று இளம் வயதில் விதைவையாகிக்
குழந்தையுடன் இருக்கும் தாய்மார்களுக்கு உதவுவதாக இருக்க
வேண்டும். அதை நீ செய்வாயா? நான் சொன்னால் செய்வாய் என்று
தெரியும். இருந்தாலும், எனக்கு வாக்குக்கொடு. அப்போதுதான் நான்
மன நிம்மதியோடு போய்ச் சேருவேன்!”
கலங்கிய கண்களோடு, நிச்சயம் செய்வதாகக் குமரப்பன் தன்
தாய்க்கு வாக்குக் கொடுத்தான்.
பிறகு அதைச் செயல் படுத்தவும் செய்தான்.
தன் கணவன் சொன்ன பாகற்காயின் மருத்துவ குணம் சாலாவிற்கு
அப்போதுதான் புரிந்தது.
எல்லா மனிதர்களுமே நல்லது கெட்டது எனும் இரண்டு குணங்களையும்
உடையவர்கள்தான். நல்ல குணம் அற்புதமாக வெளிப்படும்போதுதான்
மனிதன் தெய்வமாகிவிடுகிறான்.
சாலாவிற்கு, கவியரசரின் வைரவரிகள் அவ்வப்போது நினைவிற்கு
வந்ததோடு, அவளுடைய மாமியாரின் முகத்தையும் அவள் கண்
முன் நிறுத்தத் தொடங்கின! மாமியாரின் மறுபக்கத்தை சாலவும்
உணர்ந்தாள்
”வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்குணம்! குணம்! அது கோவிலாகலாம்...மனிதன் என்பவன் தெய்வமாகலாம்மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!”அலமேலு ஆச்சி அவர்கள் தெவத்திரு மட்டுமல்ல, தெய்வமாகவும்
ஆகிவிட்டார்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!