
சிறுகதை: இருப்பதைக் காப்பாற்றினால் போதும்!
(அடியவன் எழுதி, ஜனவரி ’2009ல், மாத இதழ் ஒன்றில் வந்த சிறுகதையை,
நீங்கள் படித்து மகிழ இன்று இங்கே பதிவிடுகிறேன்)
Over to my short story
--------------------------------------------------------------
காலம்: 1988ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் - முதல் முகூர்த்த நாள்.
தஞ்சை சிவகங்கை பூங்காவிற்கு அருகில், மேல ராஜ வீதியில் இருக்கும் பத்திர
எழுத்தர் திருப்பதியின் அலுவலகம். அலுவலகம் என்று சொல்வதை விட கடை
என்று சொல்லலாம். பத்துக்குப் பதினைந்து அடி இடத்தில் இருந்தது.
வெளியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த கதிரேசன் செட்டியாரும்,
அவருடைய மகன் சிவநேசனும் எழுத்தர் கூப்பிட்டவுடன், எழுந்து உள்ளே
சென்றார்கள்.
பன்னிரெண்டு மணிக்குள் பத்திரத்தை, பதிவு அலுவலகத்தில் சேர்க்க வேண்டும்.
சார் பதிவாளர் அலுவலகம் அருகில்தான் இருக்கிறது.
தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் இருக்கும், தனது
பூர்விகச் சொத்தான பத்து ஏக்கர் நிலத்தை செட்டியார் இன்று விற்கிறார். இடத்தை
வாங்கிக் கொள்ளும் புண்ணியவான் பத்திரத்தைப் படித்துப் பார்த்து வீட்டில்
இருந்தே கையெழுத்தைப் போட்டு அனுப்பிவிட்டார். பதியும் நேரத்திற்கு
நேரடியாக பதிவு அலுவலகத்திற்கே வருகிறேன் என்று சொல்லி விட்டார்.
அப்போதுதான் இது நடந்தது.
செட்டியாரால் பேனாவைப் பிடிக்க முடியவில்லை. கை நடுங்கிற்று. கையில்
பிடித்திருந்த ரைட்டர் பேனா
நெட்டுக்குத்தாகத் தரையில் விழுந்து தன் முனையை இழந்துவிட்டது.
பார்த்துக்கொண்டிருந்த சிவநேசன், அப்பச்சியின் கையை அழுத்தமாகப் பிடித்தான்.
"சார் ஒரு நிமிடம் பொறுங்கள்!" என்று எழுத்தரிடம் சொல்லி விட்டு, கடையை
விட்டு வெளியே வந்து, தன் தந்தையாரிடம் பேச்சுக் கொடுத்தான்:
"அப்பச்சி, முழுச் சம்மதத்துடன்தானே வந்தீர்கள்? கை நடுக்கம் ஏன்?"
"தவறு செய்கிறேனோ என்று நினைத்தேன்.....அதனால்தான் நடுக்கம்!"
"உங்கள் நிலத்தை நீங்கள் விற்கிறீர்கள்.அதுவும் மகனின் மேல்படிப்பிற்காக
விற்கிறீர்கள். அதில் என்ன தவறு?"
"நான் சம்பாதித்து வாங்கியிருந்த நிலம் என்றால் நடுக்கம் வராது. இது எனது
பூர்வீகச் சொத்து. வழிவழியாக வந்தது. அதை விற்கும் உரிமை எனக்கு இல்லை.
அதில் வரும் வருமானத்தை நான் பெருக்கலாம் அல்லது அனுபவிக்கலாம்.
தர்மப்படி விற்கும் உரிமை எனக்கு இல்லை?"
"வைத்திருந்து கடைசியில் என்ன செய்யப்போகிறீர்கள்?"
"அதைக் காப்பாற்றி குடும்பவாரிசான உனக்காக வைத்துவிட்டுப் போவதுதான் முறை!"
"என் படிப்புச் செலவிற்காகத்தானே விற்கிறீர்கள்?"
"உன்னைப் படிக்க வைப்பது என் கடமை. அதற்காகப் பூர்வீகச் சொத்தை விற்பது
நல்லதல்ல! தர்மத்தை மீறுவதாகத் தோன்றுகிறது."
முன் ஜென்மம் ஒன்றில் பஞ்சபாண்டவர்களில் மூத்தவராக தன் தந்தை
இருந்திருப்பாரோ என்று ஒரு கணம் நினைத்த சிவநேசன், மெல்லிய குரலில்
பேசத் துவங்கினான்.
"அப்பச்சி மாட்டைக் கொன்று தின்பதுதான் தப்பு. மாட்டை விற்று விட்டு வேறு
நல்ல செலவு செய்வதில் தப்பு இல்லை. நம்பிக்கை வையுங்கள். இடத்தை
விற்போம். என்னைப் படிக்க அனுப்புங்கள். பல சிரமங்களுக்கிடையே
என்னை நீங்கள் பொறியியல் பட்டப் படிப்புவரை படிக்க வைத்து விட்டீர்கள்.
அமெரிக்கா சென்று எம்.எஸ் படித்தால் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது என்பதால்
மேலே படிக்க ஆசைப்படுகிறேன். படித்து முடித்த மூன்று ஆண்டுகளுக்குள்
இதைப்போல இரண்டு மடங்கு இடத்தை உங்களுக்கு நான் வாங்கித் தருகிறேன்.
எனக்கு சிவநேசன் என்று பெயர் வைத்தீர்கள். சிவன்மேல் உங்களுக்கு நம்பிக்கை
வேண்டாமா? தஞ்சைப் பிரகதீஷ்வரர் நமக்குத் துணையிருப்பார். நடுக்கத்தை
விட்டு விட்டு நம்பிக்கையோடு வாருங்கள். நேரம் ஆகிறது!"
மகன் பேச்சில் இருந்த தெளிவை உணர்ந்ததும், கதிரேசன் செட்டியாரின் மனம்
ஆறுதல் அடைந்தது.
சட்டென்று உள்ளே சென்றவர், பத்திரத்தின் அத்தனை பக்கங்களிலும்
சிரத்தையாகக் கையெழுத்தைப் போட்டு முடித்தார்
சொன்னபடி சிவநேசன் செய்தானா?
தொடர்ந்து படியுங்கள்!
**********************************************
காலம் 2008ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் பெளர்ணமித் திதியுடன் கூடிய
நன்னாள். அதிகாலைச் சூரியன் தன் பவனியைத் துவங்கிவிட்ட காலை நேரம்.
தென்றல் மனதை ரம்மியமாக வருடிக்கொண்டிருந்தது.
"பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை யென்பிழையைப் பொறுப்பானை பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையனென்றறிய வொண்ணா எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்தணி யாரூரானை மறக்கலுமாமே ! "
என்று நாவுக்கரசப் பெருமானால் பாடல் பெற்ற திருவாரூர் தியாகராஜப் பெருமான்
கோவில் வளாகத்திற்கு முன்பு, படகுபோல வந்து நின்ற ரோல்ஸ் ராய்ஸ்
ஃபாண்ட்டம் வி.12 காரைப் பார்த்தவுடன், வாசலில் நின்று கொண்டிருந்த
தலைமைக் குருக்கள் பட்டு அய்யர் பரபரப்படைந்தார். அவ்வளவு பெரிய
மற்றும் அழகான காரை அவர் இதுவரை பார்த்ததில்லை. ஆகையால் அந்தப்
பரபரப்பு.
வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய சிவநேசன், 30 ஏக்கர் இடத்தில் அமைந்த
அந்தத் திருக்கோவிலையும், எதிரில் பிரம்மாண்டமாக இருந்த கமலாலயம்
திருக்குளத்தையும் பார்த்து மகிழ்ந்து கைகளைத் தன் சிரசிற்கு மேலே உயர்த்தி
வணங்கினான்.
என்ன வினோதம் பாருங்கள். வந்தவன் கோவிலை வணங்க, கோவிலின்
தலைமைக் குருக்களோ அவனை வணங்கி "வாங்கோ, வாங்கோ" என்று
அன்பு மேலிடச் சொன்னார்.
காரின் பின் இருக்கையில் இருந்து இன்னோருவரும் இறங்கினார். அவர்
பெயர் அண்ணாமலை செட்டியார். வயது அறுபத்தைந்து. தேசிய வங்கி ஒன்றின்
தலைமைப் பதவியில் இருந்து பணி ஓய்வுபெற்றவர், தற்சமயம்
சிவநேசனின் நிறுவனங்களுக்குத் தலைமை மேலாளராகப் பணி புரிகின்றார்.
அதற்குள் வண்டியின் ஓட்டுனர் ஓடிச்சென்று காரின் டிக்கியைத் திறந்து,
அதிலிருந்து இரண்டு பெரிய தூக்குக் கூடைகளை இறக்கி வைத்தார்.
ஒன்றில் பன்னீர்ப்பூ மாலைகள் இருந்தன. மற்றொன்றில் அர்ச்சனைச்
சாமான்கள் இருந்தன.
குருக்களைத் தொடர்ந்து வந்த கோவில் சிப்பந்திகள் இருவர், அவற்றைக்
கையில் எடுத்துக் கொண்டனர்
சொற்றுனை வேதியன், சோதி வானவனான சிவபெருமானை மனதில்
நினைத்துக் கொண்டே சிவநேசன் கோவிலுக்குள் அடியெடுத்து வைத்தான்.
மற்றவர்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.
அடுத்த முப்பது நிமிடங்களில், சுவாமி, மற்றும் அம்பாள் சன்னதியில்
சிவநேசனுக்கு சூப்பராக தரிசனம் செய்து வைக்கப்பட்டது.
தலைமைக்குருக்கள் கோவில் பிரசாதங்களை வழங்க, பெற்றுக் கொண்ட
சிவநேசன், மெல்லிய குரலில் கேட்டான்," எத்தனை பேர்கள் இங்கே
பணிபுரிகிறீர்கள்?"
அய்யர் பதில் உரைத்தார், "நிரந்தப் பணியில் முப்பது பேர்கள் இருக்கிறோம்."
முப்பது ஆயிரம் ருபாய்த் தாள்களைத் பிரசாதத் தாம்பளத்தில் வைத்துக்
கொடுத்த சிவநேசன், "அனைவருக்கும் சமமாகக் கொடுத்து விடுங்கள்" என்றான்.
தொடர்ந்து திருக்கோவில் வங்கிக் கணக்கின் பெயரைக்கேட்டு,
ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலையையும் எழுதிக் கொடுத்தான்.
குருக்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே போவிட்டார்,"நீங்கள் என்றும் ஷேமமாக
இருக்க வேண்டும்' என்று பலத்த குரலில் சொல்லவும் செய்தார். அருகில் இருந்த
கோவிலின் சிப்பந்திகளும் அதையே சொன்னார்கள்.
திருக்கோவிலை விட்டு வெளியே வந்த சிவநேசன், "சுவாமி, தேரடி வீதியில்
திண்ணப்ப செட்டியார் மடம் இருந்ததே, அது எப்படி இருக்கிறது?" என்று
வினவினான்.
இச்சுக் கொட்டிய அய்யர்,"சிலாகித்துச் சொல்லும்படியான நிலைமையில்
அது இல்லை!'" என்று துவங்கி அதன் இன்றைய நிலைமையை விவரித்துச்
சொன்னார். அதைக் கேட்ட சிவநேசன் ஒரு நிமிட நேரம் வருத்தத்திற்கு
ஆளானாலும், மனதை வசப்படுத்திக் கொண்டு பேசினான்.
"அந்த மடத்தின் வாரிசுதாரர் ஆதப்ப செட்டியார் இங்கே இருப்பதாகச்
சொன்னீர்களே, அவருடைய வீட்டைக் காட்ட முடியுமா?"
"உங்களுக்குச் செய்யாமலா? நானே வந்து காட்டுகிறேன்!"
சிவநேசனுடன், அய்யரும், அண்ணாமலை செட்டியாரும் ஏறிக் கொள்ளக்
கார் புறப்பட்டது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகரத்தார்கள் வீடுகளுக்கு ஒரு பெருமை உண்டு. அதன் பிரம்மாண்டத்தை,
பொறியாளர்கள் மற்றும் கட்டுமான இயந்திரங்கள் இல்லாத காலத்தில்
கட்டப்பெற்ற அதன் சிறப்பைப் பலர் சொல்வார்கள். அதைவிடச் சிறப்பு
ஒன்று உள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு வரலாறு இருக்கும். வாழ்ந்த
வரலாறு இருக்கும்.
இன்றைய வருமானத்தில் அல்லது பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள்
இருந்தாலும், வரலாறுகள் அதன் சுவையில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி
அசத்தலாக இருக்கும். திரைகடலோடி திரவியம் சேர்த்த வரலாறு அது.
கேட்கக் கேட்கச் சுவையாக இருக்கும். மனதைப் புரட்டிப்போடும். ஒவ்வொரு
வீட்டின் வரலாற்றையும் கேட்டு பக்கம் பக்கமாக, தனித்தனியாக எழுதலாம்.
திருவாரூர் திண்ணப்ப செட்டியார் மடத்திற்கும் அப்படியொரு வரலாறு
உண்டு. நூறு ஆண்டு வரலாறு சென்ற தலைமுறையைச் சேர்ந்த செட்டியார்கள்
அனைவருக்கும் அது தெரியும்.
1908ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் கட்டப்பெற்ற
பெரிய மடம். இருநூறு பேர்கள் வசதியாகத் தங்கலாம். அந்தக் காலத்தில்
திருவாரூரின் சுற்றுப் புறங்களில் பண்னைகள் இருந்த நகரத்தார்கள்
வண்டிகட்டிக் கொண்டு வரும் வழியில் இளைப்பாறிவிட்டுச் செல்வதற்கும்,
வழிபாட்டுத் தலங்களுக்கு வருபவர்கள் நான்கைந்து நாட்கள் தங்கிவிட்டுச்
செல்வதற்கும் அது பயன் பட்டது. உவந்து தங்குவதற்கு இடமும், உபசரிப்போடு
மூன்று வேளை உணவும் கிடைத்ததால் அது புகழோடு, பெருமையையும்
பெற்றது.
அதைக் கட்டிய பெருந்தகை அதற்குச் சிவமடம் என்றுதான் பெயர்வைத்தார்.
காலப்போக்கில் அது திண்ணப்பசெட்டியார் சிவமடமாகி, பிறகு திண்ணப்ப
செட்டியார் மடம் என்று அறியப்பெற்றது.
மாதம் மும்மாரி பொழிந்த காலம் அது. தஞ்சை மாவட்டம் தரணிபோற்றும்
பூமியாக, காவிரி அன்னை காதல் கொண்ட பூமியாக மற்றும் அவளுடைய
புகுந்த வீடாக விளங்கிய காலம் அது.
திண்ணப்ப செட்டியாருக்கு திருவாரூரைச் சுற்றி ஐநூறு ஏக்கர் விளை
நிலங்கள் இருந்தன. வருடம் மூன்று போகம் நெல் விளைச்சல்.
பணம் மழையாகக் கொட்டியது.
நகரத்தார்கள் இறைவனைப் பங்குதாரனாக வைத்துக் கொண்டுதான் வணிகம்
செய்வார்கள். லாபத்தில் இரண்டிலிருந்து பத்து சதவிகிதம் வரை எடுத்து
இறைப் பணிக்காகச் செலவு செய்வார்கள். சிவபக்தரான திண்ணப்ப செட்டியார்,
சிவனைச் சரி பங்குதாரனாக மனதில் வரிந்து கொண்டு விவசாயம் செய்ததோடு
இறைப் பணியையும் செய்தார். அதனால்தான் அவரால், அவ்வளவு பெரிய
மடத்தைக் கட்டவும், பெரும்பொருட் செலவில் தொடந்து அதை நடத்தவும்
முடிந்தது.
மூன்று தலைமுறைகள் வாழ்ந்தவர்களும் இல்லை, மூன்று தலைமுறை
களாகக் கெட்டுப் போனவர்களும் இல்லை என்பார்கள். திண்ணப்ப செட்டியாரின்
கொள்ளுப் பேரன் ஆதப்பனின் காலத்தில்தான் சரிவு ஆரம்பமானது.
காவிரித் தாயின் கண்ணீரை மட்டும் வைத்து எப்படி விவசாயம் செய்வது?
வறண்டு போன தஞ்சை மாவட்டத்தை விட்டு, வெளியேற மனமில்லாமல்,
பல தொழில்களைச் செய்த ஆதப்பன் கடைசியில் பல வழிகளில் அனைத்தையும்
இழந்தான். மிஞ்சியது மடம் மட்டுமே! நெல் வணிகர் ஒருவருக்கு அதை
வாடகைக்கு விட்டுவிட்டு, அந்த வாடகையில் கடந்த பத்து ஆண்டுகளாக
குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான்.
'சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' என்று சொல்லும் விதமாக கல்யாண
வயதில் இரண்டு மகள்களும், கல்லூரிக்குச் செல்லும் வயதில் ஒரு மகனும்
உடன் இருந்தார்கள். அவனுடைய மனைவி புண்ணியவதி. வாயையே திறக்க
மாட்டாள். நீங்கள் பிழைத்த பிழைப்பு சரியில்லை என்று குத்திக் காட்டவும்
மாட்டாள். அது ஒன்று மட்டுமே ஆறுதலான விஷயம்.
************************************************
படகு போன்ற கார் ஒன்று தங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பதையும்,
அதிலிருந்து இருவர் இறங்குவதையும் பார்த்த ஆதப்ப செட்டியாரும்,
அவருடைய மனைவியும் ஒருவிதக் குறுகுறுப்போடு வாசலை எட்டிப்
பார்த்தார்கள்
வந்தவர்கள் படியேறி வரவும், "வாங்க' என்று அன்போடு வரவேற்றார்கள்.
ஆச்சி ஓடிச் சென்று, இருப்பதில் நல்ல பாயாக ஒன்றை எடுத்து உள் கட்டில்
விரித்து, வந்தவர்களை அமரச் சொன்னார்கள்.
சிவநேசன்தான் முதலில் பேசினான்.
"அண்ணே, என்னைத் தெரிகிறதா?"
ஆதப்ப அண்ணன் நெளிந்தார். என்ன சொல்வது? ஞாபகப்படுத்திப் பார்க்க
முடியவில்லை. புன்னகை செய்தார்.
சிவநேசன் தொடர்ந்து பேசினான்.
"இருபது வருடங்களுக்கு முன்பு இங்கே சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் கடை
வைத்திருந்தார்களே கதிரேசன் செட்டியார் - அவருடைய மகன் நான்"
சுரீர் என்றது அவருக்கு. நினைவு வந்துவிட்டது.
"கதிரேசண்ணன் மகனா நீங்கள்? உங்களை நீங்கள் சின்னப் பையனாக
இருந்த காலத்தில் பார்த்தது. உங்கள் தந்தையாருடன் எங்கள் மடத்திற்கு
அடிக்கடி வருவீர்கள்"
தொடர்ந்து பழைய கதைகளைப் பேசினார்கள். இருந்த பாலில் ஆச்சி
இருவருக்கும் காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தார்கள்.
கடைசியில் அவர்களிடம் சொல்லிக் கொண்டு புறப்படும் முன் சிவநேசன்
முத்தாய்ப்பாகச் சொன்னான்.
"அண்ணே பல தர்மங்களைச் செய்த குடும்பம் உங்கள் குடும்பம்.
தர்மத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர்கள் உங்கள் குடும்பத்தினர்.
மடமும், உங்கள் குடும்பமும் பழைய நிலைமைக்கு வர வேண்டும்.
இன்று நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன். எல்லா உதவிகளையும்
முன்னின்று செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். எந்தப் பிரதிபலனும்
எனக்கு வேண்டாம். இந்த விஸிட்டிங் கார்டில் என்னுடைய சென்னை
முகவரி இருக்கிறது. ஒரு வாரத்திற்குள் வந்து பாருங்கள்.வேண்டியதைச்
செய்கிறேன்"
விஸிட்டிங் கார்டுடன், ஐம்பதாயிரம் ரொக்கத்தையும் சேர்த்து நீட்டினான்
சிவநேசன்
******************************************
அடுத்தடுத்து எல்லாம் நடந்தன.பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தால்
என்னதான் நடக்காது?
மூன்றே மாதங்களில் மடம் பழைய பொலிவைப் பெற்றது. மடத்தின் திறப்பு
விழாவிற்கு ஆயிரம் பேர்களுக்கு மேல் அழைப்பு அனுப்பப்பெற்றது.
இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தன்னை, தன் உதவியை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத சிவநேசன்,
மூன்று தினங்களுக்குப் பிறகே மண்டபத்திற்கு வந்துவிட்டுத் திரும்பினான்.
திரும்பும் முன்பாக ஆதப்ப செட்டியாரின் குடும்பத்திற்கு, தன்னுடைய
என்.ஆர்.ஐ வங்கிக் கணக்கில் இருந்து மாற்றி எடுக்கப்பெற்ற வைப்பு நிதிக்
கணக்கிற்கான ரசீதையும் அவர் கையில் கொடுத்தான். ஒரு கோடி ரூபாய்
பணத்திற்கான வைப்பு நிதி அது. வருடம் ஆறு லட்ச ரூபாய் வட்டிப் பணமாக,
வீடு தேடி வரும். அவருடைய குடும்பம் உணவிற்காகப் பொருள் தேடுதல்
இன்றி இருப்பதற்காக அந்த உதவி.. அதோடு உங்கள் பெண்கள் இருவருக்கும்
வரன்களைத் தேடுங்கள், திருமணத்தை நான் நின்று நடத்தி வைக்கிறேன் என்று
வாக்கும் கொடுத்து விட்டு வந்தான்.
கார், தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் விரைந்த போது, மேலாளர்
அண்ணாமலை செட்டியார், சிவநேசனுடன் பேச்சுக் கொடுத்தார்.
"தம்பி, எனக்கு எல்லாம் புரிகிறது. ஒன்று மட்டும் சற்றுப் பிடிபடவில்லை.
கிட்டத்தட்ட உங்களுக்கு மூன்று கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது.
உங்களுக்கு அது ஒன்றும் பெரிய தொகை அல்ல! பத்து நாள் வருமானம்.
இருந்தாலும் அத்தனை பணத்தையும் இந்த ஒரே குடும்பத்திற்குக்
கொடுத்ததற்கு ஏதாவது ஒரு அடிப்படைக் காரணம் இருக்கிறதா
சொல்லுங்கள்!"
"ஆகா, இருக்கிறது!"
"சொல்லுங்கள். கேட்டுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்"
"படிப்பதற்காக நான் அமெரிக்கா சென்றபொது, எங்கள் தந்தையார்
எங்களுடைய பூர்வீகச் சொத்தான பத்து ஏக்கர் நிலத்தை விற்றார் என்று
சொல்லியிருக்கிறேன் அல்லவா? இந்த ஆதப்ப செட்டியாரின் தந்தைதான்
அந்த நிலத்தை வாங்கிக் கொண்டு எங்களுக்குப் பணத்தைக் கொடுத்தார்.
படிப்பிற்காக விற்கிறோம் என்று தெரிந்ததால், சந்தை மதிப்பைவிட இரண்டு
மடங்கு பணத்தை அன்று அவர் கொடுத்தார். அந்தப் பெருந்தன்மைக்கும்,
கொடைத் தன்மைக்கும் நான் என் உயிர் உள்ளவரை தலை வணங்க வேண்டும்."
"அதற்குக் காரணம் சரியானதுதான். மடத்தை எதற்காக இவ்வளவு பொருள்
செலவு செய்து சீரமைத்தீர்கள்?
அந்தப் பணத்தில் நீங்கள் புதிதாகத் தங்கும் விடுதி ஒன்றை உங்கள் குடும்பத்தின்
பெயரில் கட்டியிருக்கலாமே?"
"தர்மம் செய்வதில் பெயர் முக்கியமில்லை. கோவிலில் ஒரு குழல் விளக்கைப்
போட்டுவிட்டு, அதில் பெயரை எழுதினால் பெயர் நிற்கும். தர்மம் அடிபட்டுவிடும்.
ஆகவே பெயர் முக்கியமில்லை. நகரத்தார்கள் வசிக்கின்ற ஊர்களிலும்,
ஸ்தலங்களிலும் போதுமான அளவிற்கு விடுதிகள் உள்ளன. யாரும், எதையும்
புதிதாகக் கட்ட வேண்டாம். அவசியமுமில்லை! இருப்பதைப் புதுபித்தாலே
போதும்! இருப்பதைப் பராமரித்தாலே போதும்! அல்லது பராமரிப்பதற்கு உதவி
செய்தாலே போதும்!
என்னவொரு தெளிவான சிந்தனை. அதுவும் இந்த வயதில். அண்ணாமலை
செட்டியார் அசந்து போய்விட்டார். கண்கள் இரண்டும் பனித்து விட்டன.
தன்னையறியாமலேயே அவருடைய இரண்டு கரங்களும் சிவநேசனை
வணங்கின! உள்ளம் மகிழ்ந்து உவகையால் நிறைந்தது.
===========================================================================
”வாத்தி(யார்) எதற்காக வகுப்பறையில் நீங்கள் எழுதிய சிறுகதை? இதுவும் பாடக்கணக்கிலா?”
“படிப்பனைக் கணக்கில்!”
“என்ன படிப்பினை?”
“படிக்கவைப்பதற்காக எதை வேண்டுமென்றாலும் விற்கலாம். இரண்டு அவ்வாறு படித்துவிட்டு வருபவன், தான்
வந்தவழியை, தனக்கு உதவியர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது.”
--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!