எங்கள் பகுதியில் - அதாவது காரைக்குடிப் பகுதியில் ஒரு சொல் உண்டு;
ஆனால் அதற்கு இரண்டு பொருள் உண்டு. அந்தப் பகுதி மக்கள் - அந்தப்
பகுதியில் உள்ள 4 நகரங்கள், மற்றும் 72 கிராம மக்கள் - பேசும் போது
அந்த சொல்லை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.
ஒருவனைத் திட்டுவதற்கும் அந்தச் சொல்தான். அதேபோல் ஒரு
குழந்தையை அல்லது இளைஞனைக் கொஞ்சு மொழியில் விளிப்பதற்கும்
அந்தச் சொல்தான்.
பட்டுக்கிடப்பான்' என்பதுதான் அந்தச்சொல். எங்கள் பகுதியைச்
சேர்ந்தவரான நடிகை மனோரமா அவர்கள் அந்தச் சொல்லை
லாவகமாக - அனாசயமாகப் பயன்படுத்துவார். தில்லானா மோகனாம்பாள்
படத்தில் தன் கணவனாக நடிக்கும் நாகலிங்கம் என்பவரைக் குறிப்பிடும்
போது - "ஆமா, அந்தப் பட்டுக்கிடப்பான்தான்" என்று பல்லைக் கடித்துக்
கொண்டு கோபமாகக் கூறுவார்.
பட்டுக்கிடப்பான் - என்ற சொல் அடிபட்டுக் கிடப்பவன் அல்லது
கிடக்க வேண்டியவன், நோய்பட்டுக் கிடப்பவன் அல்லது கிடக்க
வேண்டியவன் என்ற பொருளைக் கொடுக்கும்
அதே வார்த்தையை வீட்டில் உள்ள பெரிசுகள் தங்கள் பேரனைத் தூக்கிக்
கொஞ்சும் போதும் சொல்லிக் கொஞ்சுவார்கள். அதேபோல இளவயதுக்
காளையாகத் திரியும் தங்கள் பேரனைக் கூப்பிடுவதற்கும்
அந்தச் சொல்லைத்தான் பயன் படுத்துவார்கள்,
"அட பட்டுக் கெடப்பா(ய்)
- இங்கின வந்து கேட்டுப் போடா" என்பார்கள்
இங்கே அந்தச் சொல்லிற்குப் பெயர். பட்டில் கிடப்பவன் - பட்டுத்
துணியில் கிடப்பவன் அல்லது பட்டுத்துணியில் கிடந்து வளர்ந்தவன்
என்று பொருள்படும்.
---------------------------------------------------------------------
இதை எதற்காகச் சொன்னேன் என்றால், ஜோதிடத்திலும் இந்த இரட்டைப்
பொருள் உள்ள வேலைகளைச் சில கிரகங்கள் செய்யும்!
உதாரணத்திற்கு சனி தீய கிரகம். ஆனால் அதே சனி பத்தாம்
வீட்டிற்குக் காரகன். அவன் கையெழுத்துப்போட்டால்தான்
பாத்தாம் வீட்டின் சட்ட திட்டங்கள் பாஸாகும்.
ஆகவே பத்தாம்
வீட்டைப் பொறுத்தவரை அவன் நல்லவன். பட்டில் கிடக்கும்
"பட்டுக்கிடப்பான்' அவன்! இதை மனதில் வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகங்களை வைத்துப் பொதுப்பலன்!
1.சூரியன்
இங்கே சூரியன் தனியாக நல்ல நிலையில் இருந்தால் - உதாரணம் கடகம்
ஒருவருக்கு லக்கினமாக இருந்து, பத்தாம் வீடாகிய மேஷத்தில் சூரியன்
இருந்தால், அவர் அங்கே உச்சம் பெற்றிருப்பார். அதே போல பத்தில்
இருக்கும் சூரியன், குருவின் பார்வை பெற்றிருப்பதும் நல்ல நிலைமைதான்.
இந்த அமைப்பால் ஜாதகருக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும்.
ஜாதகருக்கு அவர் தொட்டதெல்லாம் துலங்கும். தெலுங்குக்காரர்கள்
சொல்வதுபோல மட்டி (மண்) கூட பங்காரம் (தங்கம்) ஆகிவிடும். எடுத்துச்
செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றி பெரும். செழிப்பான, மகிழ்ச்சியான
வாழ்க்கை கிடைக்கும். அது பத்தாம் இடத்தின் அதிபதி மற்றும் சூரியனுடைய
தசா அல்லது புத்திகளில் அபரிதமாகக் கிடைக்கும்.
நுண்ணறிவு, பணம், பதவி, அதிகாரம், புகழ், செல்வக்கு என்று எல்லாம்
கிடைக்கும். சொந்த வீடு,வாகனம்,வேலையாட்கள் என்று ஜாதகன்
செளகரியமாக வாழ்வான்.
அரசாங்க உத்தியோகம் அல்லது பதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள்
கிடைக்கும். இசை ரசிகராக ஜாதகர் இருப்பார்.
மற்றவர்களை ஈர்க்கக்கூடிய சக்தி உடையவராக இருப்பார்.
(இவ்வளவு இருக்கும்போது ஈர்க்கமுடியாதா என்ன?)
பத்தில் சூரியனுடன், செவ்வாய் சேர்ந்திருந்தால், ஜாதகர் குடி மற்றும் போதைப்
பழக்கங்களுக்கு அடிமையாகிவிடும் அபாயம் உண்டு!
பத்தில் சூரியனுடன், புதன் சேர்ந்தால், ஜாதகருக்கு விஞ்ஞானத்தில் அதிக
ஈடுபாடு உண்டாகும். பிரபல விஞ்ஞானியாக உருவெடுப்பார். அதே நேரத்தில்
பெண் பித்து (மயக்கம்) ஏற்படும் அபாயமும் உண்டு.
பத்தில் சூரியனுடன், சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகருடைய மனைவி, பெரும்
செல்வந்தர் வீட்டுப்பெண்ணாக இருப்பாள். அவள் மூலம் அவருக்குப் பெரும்
சொத்துக்கள் கிடைக்கும்.
பத்தாம் வீட்டில் சூரியனுடன், சனி சேர்ந்திருந்தால், அது நல்லதல்ல.
ஜாதகருக்குப் பலவிதமான துன்பங்கள் ஏற்படும். இறுதியில் வாழ்க்கை
வெறுத்துப்போகும் நிலைமைக்கு ஆளாகி விடுவார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.சந்திரன்
பத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகர் இறைவழிபாட்டில், ஆன்மிகத்தில் மிகவும்
நாட்டம் கொள்வார். புத்திசாலியாக இருப்பார். துணிச்சல் மிக்கவராக இருப்பார்.
செய்யும் செயல்களில் வெற்றி காண்பராக இருப்பார்.உதவி செய்யும் மனப்பான்
மையும், தர்ம சிந்தனையும் மேலோங்கியவராக இருப்பார். பல கலைகளில்
தேர்ந்தவராக இருப்பார். மொத்தத்தில் சகலகலா வல்லவராக இருப்பார்.
இதே பத்தில் சந்திரனுடன், சூரியனும், குருவும் சேர்ந்திருந்தால், ஜாதகர்
வேதாந்தங்களிலும், ஜோதிடத்திலும் விற்பன்னராக இருப்பார்.
பத்தில் சந்திரன் இருந்து, அவர் சூரியனுடைய பார்வையையும், சனியினுடைய
பார்வையையும் பெற்றிருந்தால், ஜாதகர் மாறுபட்ட சிந்தனை உடையவராக
இருப்பார். அச்சுத்தொழில் அல்லது பதிப்பகத் தொழில் துவங்கிப் பெரும்பொருள்
ஈட்டுவார். அவருக்கு அனேக நண்பர்கள் இருப்பார்கள்.வாழ்க்கை வசதியானதாக
இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். பல அறக்கட்டளைகளைத் தலைமை
தாங்கி நடத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.செவ்வாய்
பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், ஜாதகருக்கு ஆளும் திறமை இருக்கும்.
பெரிய பதவிகள் கிடைக்கும். இதே செவ்வாய், சனி அல்லது ராகுவுடன்
கூட்டணி போட்டிருந்தால் கடுமையான ஆட்சியாளராக இருப்பார். துணிச்சலாக
ஆட்சி நடத்தும் திறமை இருக்கும். பாராட்டுகளுக்கு மயங்குபவராக இருப்பார்.
எதிலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று வேகம் உடையவர்களாக இருப்பார்
பத்தில் செவ்வாயுடன், புதனும் சேர்ந்தால், நிறைய செல்வங்கள் சேரும். சொத்துக்கள்
குவியும். சிலர் மதிப்புமிக்க விஞ்ஞானியாக உருவெடுப்பார்கள்.சிலர் கணிதத்தில்
பண்டிதராக விளங்குவார்கள். பத்தில் செவ்வாயுடன் குரு சேர்ந்திருந்தால் பல
ஏழை மக்களின் துயர் தீர்க்கும் தலைவனாக ஜாதகன் விளங்குவான். அதே பத்தில்
செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்திருந்தால் ஜாதகன் தூரதேசங்களுக்குச் சென்று
வணிகம் செய்து பொருள் ஈட்டுவான். பத்தில் செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால்
ஜாதகன் அதிரடியாக வேலைகளைச் செய்யும் திறமை பெற்றிருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4 புதன்
ஜாதகன் நேர்மையனவனாகவும், மகிழ்ச்சியுடையவனாகவும் இருப்பான்.
எல்லாக் கலைகளிலும் வித்தகனாக இருப்பான். அதோடு அறிவுத்தேடலில்
ஈடுபாடு கொண்டிருப்பான்.புகழ் பெற்று விளங்குவான். எடுத்த காரியங்களில்
வெற்றி காண்பவனாக இருப்பான்.
கணிதத்திலும், வானவியலிலும் தேர்ச்சியுற்றவனாக இருப்பான். அதே இடத்தில்
புதனுடன் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் ஜாதகன் அழகான மனைவியையும்,
செல்வத்தையும் பெற்றவனாக இருப்பான். அதே இடத்தில் புதனுடன், குரு
சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் குழந்தைப்பேறு இருக்காது. வாழ்க்கையில்
மகிழ்ச்சியும் இருக்காது, ஆனால் அரசு வட்டாரங்களில் மிகுந்த தொடர்பு
உடையவனாக இருப்பான். இந்தப் பத்தாம் இடத்தில் புதனுடன் சனி சேர்ந்திருந்தால்
ஜாதகன் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அச்சுத்தொழில் அல்லது
ப்ரூஃப் ரீடர் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5. குரு
ஜாதகன் அரசாங்கத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரியாக விளங்குவான்.
செலவந்தானாக, தர்ம சிந்தனை உடையவனாக, இறை நம்பிக்கையாளனாக,
மத விஷயங்களில் ஈடுபாடு உடையவனாக, புத்திசாலித்தனம் மிக்கவனாக,
மகிழ்ச்சி உடையவனாக ஜாதகன் விளங்குவான். உயர்ந்த கொள்கைகள்
அவனுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும். குருவுடன் சுக்கிரனும்
சேர்ந்திருந்தால் அரசில் முக்கியமான பொறுப்பில் இருப்பான்.
குருவுடன் ராகு சேர்ந்திருந்தால் ஆசாமி குசும்பானவன். மற்றவர்களுக்குத்
தொல்லைகளைக் கொடுப்பவனாக இருப்பான். ஒவ்வொரு செயலிலும் தொல்லை
யாக இருப்பான்.
பத்தில் இருக்கும் குருவை செவ்வாய் பார்த்தால், கல்விக் கேந்திரங்களுக்கும்
ஆராய்ச்சிக்கூடங்களுக்கும் தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பில் இருப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.சுக்கிரன்
ஜாதகன் இடம், வீடுகளை வாங்கி, கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில்
ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவான். செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பான்.
நிறையப் பெண்களுக்கு வேலை கொடுப்பான். அல்லது நிறைய பெண்கள்
வேலை செய்யும் இடங்களில் வேலை பார்ப்பன். நட்புடையவனாக, பலராலும்
அறியப்பட்டவனாக இருப்பான். யதார்த்தவாதியாக இருப்பான்.
இங்கே சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் உடல் வனப்புப் பொருட்களை உற்பத்தி
செய்பவனாக அல்லது விற்பவனாக இருப்பான். பெண்களுக்கான அலங்காரப்
பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபடுவான். யாரையும் வசப்படுத்தக்கூடிய
சக்தி இருக்கும். தனது திறமையால் வியாபாரத்தில் சிறந்து விளங்குவான்
சுக்கிரனும், சனியும் சேரும் இந்த அமைப்பினால் ஜாதகனுடைய கல்வி தடைப்
படும். தெய்வ சிந்தனை மிக்கவனாகவும், தெய்வ வழிபாடு மிக்கவனாகவும்
இருப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.சனி
ஜாதகன் ஆட்சியாளனாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது அதற்குச்
சமமான பதவியிலோ சென்று அமர்வான். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு
அமைப்புக்களின் கூட்டணியால், விவசாயியாக அல்லது விவசாயத்தொழிலில்
சிறந்து விளங்குவார்கள். துணிச்சல் மிக்கவனாக இருப்பான். செல்வம், புகழ்
இரண்டும் தேடிவருபவனாக இருப்பான். அடித்தட்டு மக்களுக்குப் பாடுபடுபனாக
இருப்பான். கோவில், குளம் என்று அடிக்கடி பயணம் செல்பவனாக இருப்பான்
ஒரு கட்டத்தில் மிகுந்த பக்திமானாக மாறிவிடுவான்.
பத்தில் சனி இருப்பவர்களுக்கு, வேலை அல்லது தொழிலில் பல ஏற்றங்களும்
இறக்கங்களும் இருக்கும். உச்சிக்கும் போவான். பள்ளத்திலும் விழுவான்
சனி எட்டாம் அதிபனுடன் சேர்ந்து நவாம்சத்தில் தீய இடங்களில் அமர்ந்திருந்தால்
ஜாதகனுக்கு எப்போதும் தொழிலில் அல்லது வேலையில் மோதல்கள் இருந்து
கொண்டேயிருக்கும். தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும்.
சனியுடன் பத்தாம் வீட்டதிபனும் சேர்ந்திருந்து, ஆறாம் அதிபனின் பார்வை
பெற்றால் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தாரம் அமையும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.ராகு
காம இச்சை அதிகம் உடையவானாக ஜாதகன் இருப்பான். சிலர் அந்தக்
காம இச்சையிலும், தன்னைவிட விட வயதில் மூத்த பெண்ணிடம் தொடர்பு
வைத்திருப்பார்கள்.
(இது பொதுவிதி. இதைப்படித்துவிட்டு, எனக்குப் பத்தாம் இடத்தில் ராகு
உள்ளது. ஆனால் நான் அப்படிப்பட்ட ஆசாமி இல்லையே என்று யாரும்
சொல்ல வேண்டாம். வேறு சுப கிரகங்களின் பார்வையால், அது இல்லாமல்
இருக்கலாம். அதற்காக சந்தோஷப்படுங்கள்)
ஏன் சந்தோஷப்பட வேண்டுமா?
மண், பெண், பொன் ஆகிய மூன்றின் மீதும் ஆசைவைத்தவன் திருப்திய
டைந்ததாக சரித்திரம் இல்லை. உருப்பட்டதாகவும் சரித்திரமில்லை!
இந்த அமைப்பினர் (அதாவது 10ல் ராகு இருக்கும் அமைப்பு) கை தேர்ந்த
கலைஞர்களாக இருப்பார்கள். எல்லாக் கலைகளையும் சுலபமாகக் கற்றுக்
கொண்டு விடுவார்கள்.இலக்கியங்களிலும், கவிதைகளிலும் ஆர்வமுள்ளவர்களாக
இருப்பார்கள்.
அதிகமாக ஊர் சுற்றுபவர்களாக இருப்பார்கள். சிலர் கற்றவர்களாகவும், புகழ்
பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சிலர் சுய தொழில் செய்து மேன்மை
அடைவார்கள். கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள். தைரியம்
உடையவர்களாக, சாதனைகள் படைப்பவர்களாக இருப்பார்கள்
சிலர் அந்தரங்கமாக பல பாவச்செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9. கேது
ஜாதகன் தன் தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்திக்க
வேண்டியதாக இருக்கும். ஜாதகன் மிகுந்த சாமர்த்தியசாலியாக இருப்பான்.
பத்தாம் இடத்துக் கேது சுபக் கிரகங்களின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால்
ஜாதகன் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி பத்தாம் வீட்டிற்குரிய பலன்கள் எப்போது கிடைக்கும்?
1.பத்தாம் வீட்டின் அதிபதி
2.பத்தாம் வீட்டில் அமர்ந்தவன்
3.பத்தாம் வீட்டைப் பார்க்கும் கிரகம்
2.பத்தாம் வீட்டு அதிபதியைப் பார்க்கும் கிரகம்
ஆகிய கிரகங்களின் தசா (Major Dasa) அல்லது புத்திகளில் (Sub period)
பலன்கள் கிடைக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாம் வீட்டை வைத்து, தொழில் முனைவோர், வேலையில் இருப்போர்,
பொறியாளர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள், நிதி நிறுவனங்கள்
வங்கிகளில் வேலை பார்ப்போர் போன்றவர்களுக்கான அமைப்புக்களைப்
பற்றிய பாடத்தை விடுபட்டவை என்ற பெயரில் தனித்தனியாகத் தரவுள்ளேன்
அது பின்னால் வரும். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்
இத்துடன் 10ஆம் வீட்டின் முக்கியமான பகுதிகள் நிறைவுறுகின்றது.
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!