மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label short stories. Show all posts
Showing posts with label short stories. Show all posts

28.7.21

Short Story சாமியார் சம்சாரியான கதை!


Short Story சாமியார் சம்சாரியான கதை!               

சாமியார் சம்சாரியான கதை!                  

ஆவுடையப்பன்.

நமது நாயகரின் பெயர் அதுதான். வயது 51. கதை நடந்த காலம் 1921ம் ஆண்டு. நெல்லையப்பரும், காந்திமதி அம்மனும் ஆட்சி செய்யும் திருநெல்வேலியை சொந்த ஊராகக் கொண்டவர் அவர்.

அந்தக் காலத்தில் திருநெல்வேலி அமைதியாகவும், அற்புதமாகவும் இருக்கும். பரபரப்பு இல்லாமல் இருக்கும். ஒருமுறை சென்றவர்களுக்கு அந்த ஊரைவிட்டுத் திரும்பிவர மனமிருக்காது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று வயல் வெளிகளும், வாகை மரங்களும் சூழ்ந்த ஊர் அது.

பல இடங்களில் வீடுகளுக்குப் பின்னால் தண்ணீர் ஓட்டத்துடன் கூடிய வாய்க்கால்கள் இருக்கும். வீட்டுக்காரர்களே படிகளைக் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுப் பெண்கள் எல்லாம் பாத்திரங்களைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கும், துணிகளைத் துவைப்பதற்கும், ஏன் குளிப்பதற்கும் அந்த வாய்க்கால் நீரைத்தான் பயன் படுத்துவார்கள். நீர் ஓட்டத்துடன் இருந்ததால் சுத்தமாக இருக்கும்.

ஆவுடையப்பரின் வீடு, தெற்குப் புதுத் தெருவில் இருந்தது. வாகையடி முக்கில் இருந்து கிழக்கு திசையில் இருக்கும். பூர்வீக வீடு. பெரிய வீடு.

திருநெல்வேலிக்கு அருகில் மேலப்பாளையம் கிராமத்தில், தாமிரபரணி ஆற்றையொட்டிய பகுதிகளில் அவருக்கு நிறைய விளை நிலங்கள் இருந்தன.ஆறு கிலோமீட்டர் தொலைவுதான். அவருடைய தந்தையார் காலத்தில் அவர்களே விவசாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆவுடையயப்பர் தலையெடுத்ததும் நிலைங்களைப் பிரித்து குத்தகைக்குக் கொடுத்துவிட்டார். அவருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் போனதுதான் அதற்குக் காரணம். அந்தக் காலத்தில் மனிதர்கள் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு நடந்ததால், குத்தகைக்காரர்களே நெல், பணம் என்று குத்தகைத் தொகையை ஒழுங்காகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கை பணக்கஷ்டமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

கர்மகாரகன் எல்லாக் கதவுகளையுமே திறந்து விட மாட்டான். ஒரு கதவைத் திறந்து விட்டால், இன்னொரு கதவை அடைத்து வைத்திருப்பான். அந்த நியதியின்படி, ஆவுடையப்பருக்கு பணம்வரும் வழியைத் திறந்து விட்டவன், நிம்மதி மற்றும் மகிழ்ச்சி3 வரும் வழியை அடைத்து வைத்துவிட்டான்.

மனிதர் அனுதினமும் நிம்மதியில்லாமல் தவிர்த்தார். அதற்குக் காரணம் அவருக்கு இரண்டு மனைவிகள் 12 பிள்ளைகள். விடிந்தால், எழுந்திரித்தால் சண்டை சச்சரவுகள். அவருக்கு அக்கா, தங்கை என்று இரண்டு சகோதரிகளே மனைவிகளாக வாழ்க்கைப்பட்டிருந்தார்கள்.

அவருக்கு முதல் திருமணமாகி, ஐந்தாண்டுகளுக்குக் குழந்தையே பிறக்காததினால், அவருடைய மாமனாரே உவந்து தனது அடுத்த மகளையும் அவருக்குக் திருமணம் செய்து வைத்தார். இருதாரச் சட்டம் எல்லாம் இல்லாத காலம் அது!

அதில் வேடிக்கை என்னவென்றால், இறையருளால் அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்ததற்கு மறு ஆண்டே, இரண்டு மனைவிகளும் உண்டாகி இருந்தார்கள். இருவருக்குமே அடுத்தடுத்து ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தார்கள். அந்த சமயத்தில் ஆவுடையப்பர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

தாமிரபரணி ஆற்றின் நடுவில் இருக்கும் குறுக்குத்துறை முருகனின் அருள் என்பார் அதை!

அடுத்தடுத்து பத்து ஆண்டுகளுக்குள் அவருக்குப் பன்னிரெண்டு பிள்ளைகள் பிறந்துவிட்டன.

மனைவிகள் இருவரும் அவருக்குப் போட்டி போட்டுக் கொண்டு சமையல் செய்து பறிமாறினார்கள். இருவருமே கிராமத்துப் பெண்களாதலால் அற்புதமாகச்  சமையல் செய்வார்கள். நெல்லைப் பிரதேசத்தின் பாரம்பரிய உணவுகளான கூட்டாஞ்சோறு, உளுந்தஞ்சோறு, வடைகறி தோசை, உளுந்தங்களி என்று அசத்திவிடுவார்கள்.

ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த சகோதரிகளுக்குள், பின்னால் பிள்ளைகளை வைத்தும், பணத்தை வைத்தும் பல பிரச்சினைகள் வந்துவிட்டன! உங்களுடைய நாத்தச் சண்டைகளை என்னிடம் கொண்டு வராதீர்கள் என்று சொல்லித் தப்பித்து வந்தார். இருவரையும் தனித்தனியாக வெவ்வேறு வீடுகளில் வைக்கும்படி உறவினர்கள் அவருக்கு யோசனை சொன்னார்கள். அது நிறைவேறவில்லை.சின்னவளை அனுப்பச் சொல்லிப் பெரியவளும், அந்தக் களவாணியையே அனுப்புங்கள் என்று சின்னவளும் சொல்லி, வீட்டை  விட்டுப் போக மறுத்துவிட்டார்கள்.

வீட்டின் மேல் பகுதியில் ஒரு பெரிய அறை காலியாக இருந்தது. பகல் நேரங்களில் அவருடைய நண்பர்கள் வந்து விடுவார்கள். தினமும் சீட்டாட்டம் நடக்கும். பாயிண்டிற்கு காலணா என்று நிர்ணயித்து ஆடுவார்கள். யாருக்கும் அதில் பெரிய நஷ்டமோ அல்லது லாபமோ இருக்காது. வந்து சென்றவர்கள் எல்லோருமே செல்வந்தர் வீட்டு வாரிசுகள் என்பதால், அதையே மும்மரமாகச் செய்து கொண்டிருந்தார்கள்.

தாமிரபரணி ஆற்றைப்போல காலம் சுறுசுறுப்பாக ஓடியதில் 20 ஆண்டுகள் போனதே தெரியவில்லை. ஆவுடையப்பருக்கும் வயது ஐம்பதைக் கடந்தது. அவருடைய மகன்களில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டிய நேரம் வந்தது. அத்துடன் அவருடைய வீட்டில் சண்டை வடிவில் பூகம்பமும் வந்தது.

அவருடைய தங்கை மகள் அலம்பிவிட்ட மொசைக் தரையைப் போல பளிச் சென்று அழகாக இருப்பாள். அத்துடன் அவளுக்கு பத்து ஏக்கர் பூமியும், 100 பவுன் நகையும் சீர்வரிசையாக வர இருந்தது. யாருக்குத்தான் அதை இழக்க மனம் வரும்? அதை வைத்து வீட்டில் ஆவுடையப்பரின் மனைவிகள் இருவருக்கும் பெரிய சக்களத்தி சண்டை. கடைசியில் கைகலப்பில் முடிந்தது. ஆவுடையப்பர்தான் இருவரையும் பிரித்து விட்டார். பெரியவளைக் கிராமத்திற்குப் போய் 10 நாட்கள் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அவள் செவிசாய்க்கவில்லை. தங்கை மகளை யாருக்குக் கட்டினாலும் பொல்லாப்பு என்பதனால், தன் தங்கையிடம், “உன் மகளை வெளியே கட்டிக்கொடுத்துவிடுஎன்று அவர் சொல்லி விட்டார்.

அது வீட்டினருக்குத் தெரிந்தபோது, வீட்டில் பெரிய கலவரமாகிவிட்டது. ஆளாளுக்கு அவருடன் சண்டைக்கு வந்து விட்டார்கள். வாய் வார்த்தைகள் முற்றிய நிலையில், அவருடைய மூத்த மகன் யாரும் எதிர்பார்க்காத செயலைச் செய்துவிட்டான். செய்யக்கூடாத செயலைச் செய்துவிட்டான். ஆமாம், தன் தந்தையை ஓங்கி அறைந்ததோடு, பிடித்துக் கீழேயும் தள்ளி விட்டு விட்டான். அவன் ஆத்திரம் அவனுக்கு. ஆத்திரத்தில் புத்தி வேலை செய்யாது என்பது உண்மையாகிவிட்டது.

கீழே விழுந்த அவருக்கு இடுப்பில் அடிபட்டுவிட்டது. அத்துடன் பலத்த அதிர்ச்சிக்கும் ஆளாகிவிட்டார். எழுந்து நிற்கவே சில மணித்துளிகள் ஆகிவிட்டது. அதற்குள் வீட்டினர் போட்ட காட்டுக் கூச்சலில் தெருவே, அவர்கள் வீட்டின் முன்பாகக் கூடி விட்டது. எதிர் வீட்டுக்காரர் வந்து அனைவரையும் சமாதானம் செய்தார்.

அப்போதுதான், அந்தக் கணத்தில்தான் ஆவுடையா பிள்ளை முடிவு செய்தார். தனக்கு மதிப்பில்லாத அந்த வீட்டில் இனிமேல் இருக்கக்கூடாது என்று முடிவு செய்ததோடு, அதைச் செயல்படுத்தவும் செய்தார்.

என்ன செய்தார்?

தனக்கு மதிப்பில்லாத வீட்டில் இனிமேல் இருக்கக்கூடாது என்று முடிவு செய்த ஆவுடையா பிள்ளை, அதைச் செயல் படுத்தும் முகமாகக் களத்தில் இறங்கினார். தன் நில புலன்களை இரண்டு பங்காக்கித் தன் மனைவிகள் இருவர் பெயருக்கும் எழுதி அதைப் பதிவு செய்து அவர்களிடம் கொடுத்ததோடு, தன் பங்கிற்காக வங்கியில் இருந்த மூன்று லட்ச ரூபாய்கள் பணத்தைத் தன் பாதுகாப்பிற்காக வைத்துக் கொண்டார். மூன்று லட்ச ரூபாய்கள் என்பது அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை.

பத்து நாட்கள் மெளனம் காத்துப் பொறுமையாக இருந்தவர், ஒரு நாள் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு, வீட்டைவிட்டுக் கிளம்பி விட்டார். தூர தேசங்களுக்குச் செல்வதாகவும், திரும்பி வரமாட்டேன் - என்னைத் தேட வேண்டாம் என்றும் எழுதி வைத்தவர், தான் வளர்ந்து ஆளாகிய நெல்லையை விட்டுக் கிளம்பி விட்டார்.

சாமியாராகி ஏதாவது மடத்தில் சேர்ந்து தங்கிவிடலாம் என்று நினைத்தார். ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்து விடலாம் என்று முதலில் நினைத்தார்.

அங்கெல்லாம் சுகமாக இருக்க முடியாது. உழைக்க வேண்டும். இறைவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு மக்களிடம் இறையுணர்வை முழுமையாக்க வேண்டும். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அங்கேயுள்ள சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். யோசிக்க யோசிக்க மலைப்பாக இருந்தது. ஆகவே அந்த நினைப்பைக் கைவிட்டார்.

திருச்செந்தூர் சென்று சண்முகநாதனை வழிபட்டவர், அங்கேயே ஒரு விடுதியில் தங்கி விடலாம் என்று நினைத்தார். ஆனால் நெல்லை மாவட்டத்துக்காரர்கள் அடிக்கடி வந்துபோகும் இடமாதலால், தன்னை அறிந்தவர்கள் மூலம், தான் அங்கே இருப்பதை அறிந்து தன் வீட்டினர், தன்னைத் தேடிவரும் அபாயம் உண்டு என்று நினைத்தவர், திருச்செந்தூரைவிட்டுக் கிளம்பிவிட்டார்.

கிளம்புமுன், காவி வேஷ்டியும், காவித்துண்டும் வாங்கி முருகன் சந்நிதானத்திலேயே வைத்து, வணங்கி, உடுத்திக்கொண்டார். சுமார் ஒரு மாத காலம் சவரம் செய்யப்படாத முகத்துடன் பார்ப்பதற்கு அசல் சாமியாரைப் போலவே தோற்றமளித்தார். ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில்ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறுஎன்று பாடிக்கொண்டு, திருச்செந்தூர் கோயிலின் முன்பாக நிற்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போலவே அவர் தோற்றமளித்தார்.

தஞ்சை மாவட்டத்தில் நிறையக் கிராமங்களும், கோவில்களும் இருப்பதால் அங்கே ஒரு ஊருக்குச் சென்று தங்கிவிடலாம் என்று முடிவு செய்து, கடைசியில் நாகபட்டிணம் அருகில் உள்ள சிக்கல் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தார். முருகப் பெருமான் சிங்காரவேலனாக உறைந்திருக்கும் ஊர் அது. சுற்றுப்புறம் பச்சைப் பசேல் என்று பசுமையாக இருந்தது. அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்.

சூரனை அழிக்க புறப்பட்ட முருகனுக்கு சிவனும், பார்வதியும் ஆயுதம் கொடுத்த ஸ்தலம் அது. பார்வதி தேவி முருகனுக்கு வேல் கொடுத்தார். தாயிடம் இருந்து வேல் பெற்ற முருகன் சிங்கார வேலன் என்றழைக்கப்பட்டார். அந்த நிகழ்வு நடந்த இடம் சிக்கல் என்ற தலமாகும். சிறப்பு மிகுந்த அந்த ஸ்தலம் பழைய தஞ்சை மாவட்டத்தில், இப்போதைய நாகை மாவட்டத்தில், நாகை - திருவாரூர் வழித்தடத்தில் நாகையில் இருந்து சுமார்  8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

உண்மையில் இத்தலம் நவநீதிஸ்வரரை  மூலவராகக்  கொண்ட சிவாலயமாகும். இத்தலத்தில் வசிஷ்ட முனிவர், காமதேனுவின் வெண்ணையால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். பிறகு அந்த லிங்கத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த லிங்கம் எடுக்க முடியாதபடி  சிக்கிக் கொண்டது. அதன் காரணமாக இந்த ஊருக்கு சிக்கல் என்ற பெயர் ஏற்பட்டதாம்.

தன் சிக்கல்களை மறப்பதற்கு சிக்கல்தான் சரியான ஊர் என்று முடிவு செய்தவர், கோயில் தர்மகர்த்தாவைப் பார்த்துப் பேசித் தன்னை அறிமுகம் செய்து கொண்டதோடு, தான் அந்த ஊரிலேயே தங்க இருப்பதாகவும், தனக்கு ஒரு சிறு வீடு ஒன்றைப் பிடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

சற்று யோசனையில் ஆழ்ந்த தர்மகர்த்தா, கடைசியில் தீர்க்கமாகப் பதில் சொன்னார்: இது சின்ன கிராமம். இங்கே உள்ள மக்கள் கட்டுப் பெட்டியானவர்கள், சாமியார்களுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் வீட்டை வாடகைக்குத் தரமாட்டார்கள். வேண்டுமென்றால் ஒன்று செய்யுங்கள். கிராமத்திற்கு ஒதுக்குப்புறத்தில் பத்து ஏக்கர் பூமி ஒன்று வீட்டுடன் விலைக்கு வருகிறது. உங்களிடம்தான் பணம் இருக்கிறது என்கிறீர்களே, அதை சல்லிசாக வாங்கித் தருகிறேன். நீங்கள் அங்கேயே தங்கிக் கொள்ளலாம்என்றார்.

அப்போதெல்லாம் ஏக்கர் ஐநூறு ரூபாயிற்கே கிடைக்கும். பவுன் பதிமூன்று ரூபாய்க்கு விற்ற காலம் அது. ஆவுடையாபிள்ளை சரி என்று தன் சம்மதத்தைச் சொல்ல, எல்லாம் மளமளவென்று நடந்தன. ஓட்டு வீடுதான். பின்பக்கம் கிணற்றுடன் செளகரியமாக இருந்தது. அத்துடன் பின்பக்கம் தென்னை மரங்களுடன் கூடிய நெல்வயல்.

தர்மகர்த்தா, நாகபட்டிணத்திற்கு ஆள் அனுப்பி, அவருக்கு வேண்டிய கயிற்றுக் கட்டில், பாய், தலையணை, உட்காரும் மர நாற்காலி, அவசியமான தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து உதவினார்.

மூன்று நாட்கள் தர்மகர்த்தாவின் வீட்டில் தங்கியிருந்தவர், நான்காம் நாள் தன் சொந்த வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறினார்.

சில மாதங்களுக்குள்ளாகவே தனக்கு ஏற்படப் போகின்ற சிக்கல் என்னவென்று தெரியாமலேயே அங்கே குடியேறினார்.

என்ன சிக்கல்?

தொடர்ந்து படியுங்கள்!

சிக்கல்களும், சந்தோஷங்களும் சொல்லிவிட்டு வருவதில்லை. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளே அவைகள். திணை விதைத்தால் திணை விளையும், விணை விதைத்தால் விணைதான் விளையும்.

ஆவுடையா பிள்ளைக்குப் புது வீட்டில் தனிமைதான் பெரிய குறையாக இருந்தது. அதனால் பாதி நேரத்தைக் கோயில் வளாகத்திலேயே கழித்தார்.சின்ன ஊர் என்பதால் கோயிலுக்கு வருபவர்கள் எல்லாம் அவருக்குப் பழக்கமாகி விட்டார்கள்.

அந்தக் காலத்தில் எல்லாக் கோயில்களிலும் மடப்பள்ளி இருந்தது. இருந்தது மட்டுமல்ல, அதில் காலையில், பிரசாதம் செய்து இறைவனுக்குப் படைப்பதோடு, கூடுதலாகச் செய்து கேட்கும் பக்தர்களுக்கு, விலைக்கும் கொடுப்பார்கள். பெரும்பாலும் சம்பாசாதம், வெண்பொங்கல் அல்லது புளியோதரை போன்ற சாதங்கள்தான் பிரசாதமாக இருக்கும்.

அவற்றுள் சம்பா சாதம் சூப்பராக இருக்கும். சிவ ஆலயங்களில் சிவனுக்கு உகந்த பிரசாதமாக, சம்பா சாதத்தைத்தான் வடித்து நிவேதனமாகப் படைப்பார்கள். அரிசியைக் களைந்து, தண்ணீர், உப்புச் சேர்த்து உதிரியாக வடித்து, பெரிய இருப்புச் சட்டியில், நெய் விட்டு, சூடானதும் மிளகுத் தூள், சீரகத் தூள்கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதைச் சாதத்தில் கொட்டிக் கிளறிவிடுவார்கள். அதுதான் சுவையான சம்பாசாதப் பிரசாதம் ஆகும். சிதம்பரம் நடராஜர் கோயிலின் நித்தியப் பிரசாதம் அது!. ஒரு நபர் சாப்பிடக்கூடிய சாதத்தின் அன்றைய விலை ஒரு அணா. ஆவுடையா பிள்ளைக்குக் காலைப் பலகாரம் கோயில் பிரசாதத்தில் முடிந்து விடும். மதிய உணவை உள்ளூரில் இருந்த சைவப் பிள்ளைமார் வீட்டுக்காரர்கள் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  இட்லி , சாம்பாருடன் அவர்களே இரவு உணவையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தலைச் சுமையாகக் கூடையில் பாத்திரம் வைத்துப் பால் கொண்டுவந்து விற்கும்  பெண்மணியிடம் இருந்து ஒரு உழக்குப் பாலை வாங்கி வைத்துக் கொள்வார். வேண்டும்போது, காப்பி அல்லது டீ போட்டுக் குடித்துக் கொள்வார். விறகு அடுப்பு. அடுப்பைப் பற்றவைத்து காப்பி அல்லது டீ போடுவதும், பாத்திரங்களைக் கொண்டுபோய்க் கிணற்றடியில் போட்டுக் கழுவதும்தான் சற்றுக் கடுமையான வேலையாக அவருக்குத் தோன்றியது. டீக்கடை, பெட்டிக்கடை எல்லாம் அந்தக் கிராமத்தில் இல்லாத காலம் அது!

அப்படியே பத்து நாள் பொழுது ஓடிவிட்டிருந்தது. அதற்குப் பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

ஆள் நடமாட்டம் இருப்பது தெரிந்து, பக்கத்து வயல்களில் இருந்து எலிகள் வர ஆரம்பித்துவிட்டன. வந்த எலிகள் சும்மா இருக்காமல் வீட்டில் இருந்த கெளபீணம், வேஷ்டி, துண்டுகள் எல்லாவற்றையும் கடித்துக் குதறிவிட்டுப் போயிருந்தன.

எலிகள் மட்டும் அல்ல, இரண்டொரு சமயம் பாம்பும் வர ஆரம்பித்துவிட்டது. ஆவுடையா பிள்ளைக்குப் பழக்கமில்லாத சமாச்சாரங்கள் அவைகள்.

கோவில் தர்மகர்த்தாவிடம் அதைக் குறையாகச் சொல்லி, என்ன செய்யலாம் என்று கேட்டபோது, அதற்கு அவர் ஒரு தீர்வைச் சொன்னார். ஒரு பூனையை வாங்கிக் கொடுத்து, அதை வைத்துக் கொள்ளச் சொன்னார்.

வந்த பூனைக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. வந்த இரண்டாவது நாளே வீட்டிற்குப் பின்பக்கம் இருந்த தோட்டத்தில், நாகப் பாம்புடன் அது போராடிய போது, நாகப்பாம்பு அதைப் போட்டுத் தள்ளிவிட்டுப் போய்விட்டது.

மீண்டும் ஒரு பூனையைப் பிடித்துக் கொடுத்த தர்மகர்த்தா, கூடவே நாய் ஒன்றையும் வாங்கிக் கொடுத்தார். ஆனால் அவை இரண்டும் அதிசயமாக ஒன்றுக் கொன்று ஒற்றுமையாக இருந்தன. எலிக்காகப் பூனை. பாம்பிற்காக நாய்.

அவைகளுக்கு உணவு, பால் ஆகியவற்றிற்கும் அவர் ஏற்பாடு செய்தார். இப்போது சற்றுப் பாதுகாப்பாக இருந்தது.

இப்போது ஒரு உழக்குக்கிற்குப் பதிலாக 4 உழக்குப் பால் வாங்க வேண்டியதாக இருந்தது. காசைப் பற்றிய கவலை இல்லாததால் வாங்கத் துவங்கினார். அவை இரண்டையும் பராமரிப்பதிலும் சற்றுப் பொழுது கழிந்தது.

ஆனால் பால் ஊற்றும் பால்கார அம்மணி சில நாட்கள் வராமல் விட்டு, அவரைத் திண்டாட வைத்தாள். அதற்கும் ஒரு தீர்வைச் சொல்லி, தர்மகர்த்தா குறைந்த விலையில் ஒரு பசுமாட்டைக் கன்றுடன் வாங்கிக் கொடுத்தார். அவற்றிற்குத் தீவனப் பயிர்களான வைக்கோல், சோளத்தட்டை, புண்ணாக்கு, கழனித் தண்ணீர் என்று வேலைப் பளு சற்று அதிகரித்தது. அத்துடன்  மாட்டைக் கழுவிக் குளிப்பாட்டுவது, மாட்டுக் கொட்டகையில் சாணத்தை அள்ளித் தரையைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளும் ஏற்பட்டன.

அதற்கு என்னடா செய்யலாம்? என்று அவர் நொந்துபோனபோது, தர்மகர்த்தா அதற்கும் ஒரு தீர்வைச் சொன்னார்.

பக்கத்து கிராமத்தில் இருந்து தெரிந்த பெண் ஒருத்தியைக் கூட்டிக் கொண்டு வந்து காட்டி, “இன்று ஒரு நாள் வேலை செய்யச் சொல்லிப் பாருங்கள், உங்களுக்குப் பிடித்தால், இந்தப் பெண்ணை வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்என்றார்.

வந்த பெண் அம்சமாக இருந்தாள். வயது 28 இருக்கும். சற்று விளக்கமாகச்  சொல்ல வேண்டும் என்றால், கல்யாணப் பரிசு படத்தில் வரும் நடிகை சரோஜாதேவியைப் போன்று இருந்தாள். கறுப்பு நிறம்தான் ஆனால் ஈர்க்கும் விதமாக வசீகரமாக இருந்தாள். அத்துடன் சுறுசுறுப்பாகவும் இருந்தாள். ஒரே ஒரு சோகம். அவள் விதவைப் பெண். திருமணமான மறு ஆண்டிலேயே தன்னுடைய கணவனைப் பறிகொடுத்தவள். குழந்தை இல்லை. தன் அன்னையோடு தங்கியிருக்கிறாள். காலையில் 7 மணிக்கு வந்தால் மாலை 6 மணிவரைக்கும் வேலை பார்க்கிறேன்  என்றாள். அவளுடைய கிராமம் பக்கத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. கூலி வேலைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறாளாம்.

பெயரைக் கேட்டார். கண்ணம்மாஎன்று சொன்னாள்.

இனி கூலி வேலைக்கெல்லாம் நீ செல்ல வேண்டாம். இங்கே வந்து வேலைகளைப் பார். வேண்டிய சம்பளத்தை நான் தருகிறேன் என்று ஆவுடையா பிள்ளை சொல்லிவிட்டார்.

காலையில் காப்பி போட்டுக் கொடுப்பதில் துவங்கி, மூன்று வேளைக்குமான சமையலையும் அவளே செய்து கொடுத்தாள். வீட்டையும், வீட்டிலுள்ள மற்ற ஜீவன்களையும் அவளே பார்த்துக் கொள்ளத் துவங்கினாள்.

ஒரு மாதம் சென்றது. கிட்டத்தட்ட ஒரு மனைவி செய்வதைப் போன்று எல்லா வேலைகளையும் அவள் ஈடுபாட்டுடன் செய்ததால், ஆவுடையா பிள்ளைக்கு அவளை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

அத்துடன், எல்லாம் அப்படி சுமூகமாகவே நடந்து கொண்டிருந்தால் கதையில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது?

விதி எப்போதும் எதிரணியில்தான் விளையாடும். விதி தன் ஆட்டத்தைத் துவங்கியது. ஆவுடையா பிள்ளையைக் கண்ணம்மாவிடம் நெருக்கிக் கொண்டு சென்றது.

கண்ணம்மா நடுக்கட்டில் வேலை செய்யும்போது, கட்டிலில் அமர்ந்தவாறு அவளுடைய அழகை ரசிக்கத் துவங்கினார்.

ஒரு கவிஞன் கவிதையொன்றில் நச்சென்று குறிப்பிட்டதைப் போல நடக்கத்துவங்கியது.

 

அவள் குனிந்து, நிமிர்ந்து

வீட்டைக் கூட்டினாள்

வீடு சுத்தமானது

மனம் குப்பையானது!

 

ஆவுடையா பிள்ளையின் மனம் குப்பையாகிப் போனது. ரசனை உணர்வு காம உணர்வாக மாறியது.

ஒரு அடை மழை நாளில், வேலைக்கு வந்த அவள் திரும்பிப் போக முடியாமல், அன்று இரவு ஆவுடையா பிள்ளையின் வீட்டில் தங்கும்படியானது.தங்கியவளைத் தாரமாக்கித் தன் இச்சைகளைத் தீர்த்துக் கொண்டுவிட்டார் ஆவுடையா பிள்ளை. கண்ணம்மாவும், ஏழு ஆண்டுகளாக உள்ளே உறங்கிக் கொண்டிருந்த விரகதாபத்திற்கு தன்னைப் பலி கொடுத்து விட்டாள்.

அந்தப் பாவ உணர்வு தொடர இருவரும் அந்நியோன்யமானார்கள். அந்த அந்நியோன்யம் மூன்றே மாதங்களில் கண்ணம்மா கர்ப்பமடைந்ததில் வந்து திகைப்புடன் நின்றது.

அதற்குப் பிறகு?

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. விஷயம் ஊர் முழுக்கத் தெரிய, பஞ்சாயத்தை வைத்துக் கண்ணம்மாவை, ஆவுடையா பிள்ளைக்கே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

ஆவுடையா பிள்ளையாவின் சந்நியாசம் அதிரடியாக முடிவிற்கு வந்தது. அவர் மீண்டும் சம்சாரியானார்.

எல்லோரும் சாமியாராக, துறவியாக  முடியுமா? அதற்குக் கொடுப்பினை வேண்டும்!

துறவு என்றால் எல்லாவற்றையும் துறக்க வேண்டும். முதலில் ஆசைகளைத் துறக்க வேண்டும். மனச் சலனங்களைத் துறக்க வேண்டும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை அறவே கூடாது. ஆவுடைய பிள்ளை துறவறம் பூண நினைத்தவருக்குப் பணம் எதற்கு?

ஊரை விட்டுக் கிளம்பியவர் பெரும்தொகையை வைப்புநிதியாக உடன் கொண்டு வந்தது முதல் தவறு. மடங்களில் சேராமல் வீட்டைப் பிடித்துத் தங்கியது இரண்டாவது தவறு. எலிக்குப் பூனை, பாம்பிற்கு நாய், பிறகு பாலுக்காக பசுமாடு, பிறகு அவற்றைக் கவனிக்க வேலைக்காரப் பெண் என்று அடுக்கடுக்காகத் தவறான செய்கைகளைச் செய்தது, தொடர்ந்து மீளமுடியாத நிலைக்குப் போன தவறுகளாகும். அதற்கு ஈடாகத்தான் துறவறத்தையே அவர் பலிகொடுக்க நேர்ந்தது.

என்ன இன்னொரு பெண்ணும் இங்கே அவர் வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருக்க வேண்டும். சிக்கல் சிங்கார வேலன்தான் அதற்கு அருள் புரிய வேண்டும்!

ஒரு தவறுக்கு, அந்தத் தவறை மறைக்க முயன்று அடுத்தடுத்து செய்யும் தவறுகளுக்காக சாமியார் பூனை வளர்த்த கதை என்று இந்தக் கதையை என் தந்தையார் சொல்வார்கள்

அவர்கள் சொன்னது 10 வரிக் கதைதான். அதை நான் எனது நடையில் விரிவு படுத்தி எழுதியிருக்கிறேன்

கதைகளைப் படித்து ரசித்தமைக்கு நன்றி. வணக்கம்

அன்புடன்

வாத்தியார்

========================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.3.21

சிறுகதை: போர் நிறுத்த உடன்படிக்கை


சிறுகதை: போர் நிறுத்த உடன்படிக்கை

15 ஆண்டுகளுக்கு முன்பு மாத இதழில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்ற சிறுகதை. நீங்கள் படித்து மகிழ்வதற்காக இன்று அதை வலையில் ஏற்றியுள்ளேன்

-------------------------------------------------------------------------

 

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து வேளாச்சேரியில் உள்ள தன் வீட்டிற்கு வந்து சேர்ந்த ஐந்தாவது நிமிடமே கருப்பையாவிற்கு அதிர்ச்சி யாகிவிட்டது.

 

தான் அணிந்திருந்த கோட் ¤ட்டையெல்லாம் களைந்துவிட்டு, வேஷ்டி, காலர் வைத்த 'டீ' சர்ட்டிற்குத் தன்னை மாற்றிக்கொண்டு, வீட்டின் பிரதான அறைக்கு வந்தவன், .ஸி யை இயக்கிவிட்டு, அமர்ந்தான்.

 

எதிரில் வந்து அமர்ந்த அவன் தாயார் சாத்தம்மை ஆச்சி அவர்கள், இரு கைகளாலும் தன் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித்தேம்பி அழுக ஆரம்பித்து விட்டார்கள்.

 

கருப்பையா பதறிப் போய்விட்டான். தன் தாயாரின் அருகே சென்று, அவர்களுடைய கைகள் இரண்டையும் விலக்கிவிட்டுச் சைகையால் அவர்களைச் சமாதானப் படுத்தியவன், மெல்லிய குரலில் பேசத்துவங்கினான்

 

"ஆத்தா, இப்போது என்ன நடந்து விட்டது? ஏன் அழுகிறீர்கள், சொல்லுங்கள்?" என்றான்.

 

"உனக்குச் சிரமம் அப்பச்சி.,என்னால் உன் குடும்ப வாழ்க்கை பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருக்கிறதே!"

 

"பிரச்சினை என்று நினைத்தால்தான் பிரச்சினை. நான் எதையும் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள்தான் தேவையில்லாமல் உங்களைக் குழப்பிக் கொள்கிறீர்கள். எப்போதும் நீங்கள் சொல்வது போல ஆண்டவன் நமக்குத் துணை செய்வான்."

 

"நான் எவ்வளவோ சொல்லியும் உன் மனைவி கேட்கவில்லை அப்பச்சி! அவள் நினைத்தபடி, கைப்பிள்ளையைத் தூக்கிக் கொண்டு தனியாளாகத் தன் ஆத்தாவீட்டிற்குப் போய் விட்டாள் அதை நினைத்துத்தான் எனக்குத் தீராத வருத்தமாக இருக்கிறது!"

 

"அவள் போனதிற்கு நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்? நான் நேற்றுக் காலையில் டில்லியிலிருந்து அரை மணி நேரம் அவளுடன் போனில் பேசியிருக்கிறேன். நான் வரும்வரை பேசாமல் இரு என்று கண்டித்தும சொல்லியிருக்கிறேன். அதையும் மீறி அவள் புறப்பட்டு போயிருக்கிறாள். ஆகவே விடுங்கள். உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை!"

 

"இல்லை அப்பச்சி ஊர் உலகம் என்ன சொல்லும்? நல்லா இருந்த மகன் குடும்பத்தை இந்தப் பாவிமட்டை போய்ப் பிரித்து விட்டாள் என்று என்னைத் தானே ஏசும்? உன் அப்பச்சியைப் பறிகொடுத்து ஆறு மாதங்கள்கூட ஆகவில்லையே - அதற்குள் எனக்கு இந்த அவப்பெயர் தேவைதானா? ஆகவே நீ போய் அவளை அழைத்துக் கொண்டு வா - நான் எனக்கு ஏதாவது வழி பண்ணிக் கொள்கிறேன்!"

 

"ஆத்தா, ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். பிரளயமே வந்தாலும் உங்களை நான் தனியாக அனுப்ப மாட்டேன். நீங்கள் கடைசிவரை என்னோடுதான் இருக்கப் போகிறிர்கள்.ஊர் உலகத்தைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். மாமியார் மருமகள் சண்டை யார் வீட்டில்தான் இல்லை? அவள் எங்கே போய்விடப் போகிறாள்? பத்து நாட்களில் தானாகத் திரும்பி வருவாள் பாருங்கள்!"

 

"போகும் போது, தன் கிளைகாரி ஒருத்தியையும் வைத்துக் கொண்டு அவள் பேசிவிட்டுப் போனதைப் பார்த்தால் - அவள் தானாகத் திரும்பி வருவதாக எனக்குத் தோன்றவில்லை!"

 

"வராவிட்டால் போகிறது கழுதை!" என்று சொன்ன கருப்பையா தன் பேச்சை நீட்டிக்க விரும்பாமல் தன் தாயாரின் கவனத்தை மாற்றும் நோக்கத்தோடு, தொடர்ந்து சொன்னான்.,"அவளைப் பற்றி அப்புறம் பேசுவோம். எனக்குப் பசிக்கிறது.ஏதாவது டிபன் செய்து எடுத்து வாருங்கள்"

 

சாத்தம்மை ஆச்சி அவர்கள் சமையலறையை நோக்கி எழுந்து செல்ல, கருப்பையா அன்றைய செய்தித் தாளைக் கையில் எடுத்துக் கொண்டு அதைப் படிக்கத் துவங்கினான்.

 

மனம் செய்தித் தாளில் நாட்டம் கொள்ளவில்லை.

 

எப்படிக் கொள்ளூம்?

 

தன் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் மருமகள், மாமியார் சண்டையின் தீவிரம் அவனுக்குத் தெரிந்ததுதான். இஸ்ரேல் லெபனான் போர் போல குண்டு வீச்சு இல்லையே ஒழிய வார்த்தைகள் தடித்து விட்டன. இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

 

எப்படி நிறுத்தலாம்?

 

அவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

 

                                             ******************

கருப்பையாவிற்குத் திருமணமாகி மூன்றரை ஆண்டு களாகின்றன. முதல் மூன்று வருடத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. தெளிந்த நீரோடையாக வாழ்க்கை சென்றது.

 

அவன் மனைவி கண்ணம்மை நல்லவள்தான் - யாரும் சீண்டாதவரை! நிர்வாக இயலில் முதுகலைப் பட்டம் பெற்றவள். கருப்பையாவிடம் தாம்பத்யத்தில் அனுசரனையாகத்தான் நடந்து கொண்டாள். திருமணம் ஆகி தன் கணவனுடன் டில்லிக்குச் சென்றவள் வெகு சீக்கிரமே டில்லிக்கும், ஹிந்தி மொழிக்கும், தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டு விட்டாள். ஒருவருடத்திற்கு முன்பு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்து விட்டது.

 

அனால் கருப்பையாவின் அன்புத்தந்தை குமரப்ப செட்டியார், அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு ஹார்ட் அட்டாக்கில் இறந்த பிறகுதான், 'நான் வருகிறேன் தடுக்குப் போட, என் ஆத்தா வருகிறாள் பிள்ளை எடுக்க' என்னும் பழமொழிபோல பிச்சினைகள் அடுக்கடுக்காக வந்து விட்டன.

 

தன் தந்தையார் இறந்த பிறகு, அவர் செய்து கொண்டிருந்த வியாபாரத்தை ஒழுங்கு பண்ணவேண்டும் என்பதற்காகவும், தன் தாயார் தனியே சிரமப்படக்கூடாது என்பதற்காகவும், கருப்பையா சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொன்டு வந்து விட்டான்

 

ஆதம்பாக்கத்தில் இருந்த தங்கள் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டதோடு, தான் வேலை பார்த்த நிறுவனத்திற்கு அருகில், வேளாச் சேரியில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ப்ளாட் ஒன்றை வாங்கிக் கொண்டு குடியேறிவிட்டான்

 

குடியேறிய இரண்டாவது நாளில் இருந்தே மாமியார் மருமகள் சண்டை சிறிய அளவில் ஆரம்பித்து விட்டது. எங்கேதான் மாமியாரும் மருமகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்? பத்து சதவிகிதம் வீடுகள் விதி விலக்காக இருக்கலாம். பெரும்பான்மையான சண்டைகளுக்குத் தலைமுறை இடைவெளிதான் (Generation Gap) முக்கியமான காரணம்.

 

பாணிபூரி, பேல்பூரி, பாவ்பாஜி என்று சாட் உணவு அயிட்டங் களையும்,காளான் சூப், சிக்கன் கோப்தா, நான், கோபி மஞ்சூரியா, வெஜிடெபிள் புலவ் என்று கான்டினென்டல் உணவுகளையும் படிக்கும்போது மட்டுமல்ல, டெல்லியில் குடித்தனம் நடத்தும்போதும் சாப்பிட்டுப் பழகிவிட்டவள் கண்ணம்மை. மாலை மற்றும் இரவு உணவு பெரும்பாலும் வெளியில்தான் . அதேபோல சமைத்து மதியம் மீதமான உணவு அப்படியே குப்பைத் தொட்டிக்குப் போய்விடும். கருப்பை யாவிற்கு மாத சம்பளமாக ஒரு லட்ச ரூபாய் வருவதால் அவளுக்கு இதெல்லாம் சாத்தியமாயிற்று. அதேபோல ஒரு நாள் கட்டிய புடவையை அடுத்த நாள் கட்டமாட்டாள். காட்டன் புடவைகள், காட்டன் ரவிக்கைகள் அதுவும் துவைத்து ஸ்டார்ச் போட்டு, அயர்ன் பண்ணியவற்றைத் தான்.அணிவாள்.

 

சிக்கனத்தை மூச்சாகக் கொண்ட பார்வதி ஆச்சிக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. பெரிய நஷ்டம் ஒன்றும் இல்லை - கண்டு கொள்ளாமல் இரு ஆத்தா என்று கருப்பையா பல முறைகள் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை

 

அடுத்து, இவள் ஸ்டார் டிவி, ஸ்போர்ட்ஸ் சானெல்கள், சன் மியூஸிக் என்று தேடிப் பிடித்துப் பார்ப்பாள். பார்வதி ஆச்சிக்கு, சன், ராஜ், விஜய் தவிர - அதுவும் கண்ணீரை வரவழைக்கும் தொடர்களைத் தவிர வேறு எதுவும் பிடிக்காது.

 

மேலும் கண்ணம்மை, தங்கள் வீட்டிற்கு வந்து மேல் வேலைகளைச்  செய்யும் வேலக்காரிக்கு, அவள் நன்றாக மகிழ்வோடு வேலை களைச் செய்ய வேண்டுமென்பதற்காக சம்பளத்தைத் தவிரத் தனியாக அவ்வப் போது பத்து இருபது என்று தாராளமாகக் கொடுப்பாள். அதுவும் சாத்தம்மை ஆச்சிக்குப் பிடிப்பதில்லை.

 

இதைப்போல சில பல சில்லுண்டிக் காரணங்களால் ஆரம்பத்தில் புகைய ஆரம்பித்த சண்டை இப்போது நன்றாகப் பிடித்து எரிய ஆரம் பித்துவிட்டது.

 

இரவு நேரங்களில் கண்ணம்மை தன் தாயாரைப் பற்றி புகார் செய்யும் போதெல்லாம், கருப்பையா அவளை ஒரே வார்த்தையில் அடக்கி விடுவான். "சரி பண்ணிக்கொண்டு போ - அப்போதுதான் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்!"

 

"உங்களுக்கு அவர்கள் உங்களைப்பெற்ற பெற்ற தாயார் - அதனால் நீங்கள் சரி பண்ணிக்கொண்டு போகலாம்! நான் வந்தவள் - எனக்கு என்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. நான் எதற்காகச் சரி பண்ணிக்கொண்டு போக வேண்டும்?"

 

"உன்னுடைய தாயார் என்றால் என்ன செய்வாய்? அதுபோல என் தாயாரிடமும் நீ நடந்து கொள்!"

 

"என்னுடைய தாயார் என்றால் நடப்பதே வேறு! அம்மா வாயை மூடிக்கொண்டு இருக்கிறாயா? என்று அவ்வப்போது கேட்டு அடக்கி விடுவேன். உங்கள் தாயாரையும் அது போல சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?"

 

"நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்துகொள் கண்ணம்மை. நம் தாம்பத்ய வாழ்க்கையில் எனக்கு நீ முக்கியம் - உனக்கு நான் முக்கியம். உனக்கு நான் எவ்வளவு சுதந்திரத்தையும். உரிமைகளையும் கொடுத்திருக்கிறேன். அதை ஏன் நீ அடிக்கடி மறந்து விட்டுப் பேசுகிறாய்?" என்று அவளைச் சமாதானப்படுத்து வதோடு தொடர்ந்தும் சொல்வான், அதனால் எனக்காக இது ஒன்றே ஒன்றை மட்டும் செய் - என் தாயாரை நீ அனுசரித்துப் போ - முடியாத இடங்களில் சில வற்றைக் கண்டு கோள்ளாமல் இரு. அதுதான் நீ எனக்குச் செய்யும் பிரதி உபகாரம்!"

 

ஆனால் ஆறு மாதங்களுக்குள் பிரச்சினை முற்றி, சென்ற வாரம் கருப்பையா தன் கம்பெனி வேலையாக டெல்லிக்குப் புறப்பட்டபோது விமான நிலையம் வரை வந்த கண்ணம்மை, அவன் கைகளை பிடித்து கீழ்க்கண்டவாறு கெஞ்சிச் சொல்லிவிட்டாள்.

 

"இந்த ப்ளாட்டில் நிறைய செக்யுரிட்டிகள் உள்ளார்கள். ஆகவே பயம் ஒன்றும் இல்லை. உங்கள் தாயார் இதிலேயே இருக்கட்டும். நாம் தனிக்குடித்தனம் போய்விடுவோம்!"

 

கருப்பையாவிற்கு ஜோக் அடித்துக் கலகலப்பாகப் பேசுவது கைவந்த கலை. அவள் அப்படிச் சொன்னவுடன், கருப்பையா, சிரிக் காமலும், கோபப்படாமலும் இப்படிச் சொன்னான்.

 

"அப்படியென்றால் நீயும், நம் செல்ல மகள் - குட்டிக் கண்ணம்மையும்தான் தனிக்குடித்தனம்போக வேண்டியதாக இருக்கும். கவலைப் படாதே டில்லியிலிருந்து திரும்பியவுடன், உங்கள் இருவருக்கும் ஏற்றதாக ஒரு வீட்டைப் பிடித்துக் கொடுத்து விடுகிறேன்"

 

முன் கதைச் சுருக்கும் இதுதான்.

 

என்ன செய்தால் இந்த மாமியார் மருமகள் யுத்தம் முடிந்து வீட்டில் அமைதி திரும்பும் என்று யோசித்த கருப்பையா ஒரு நல்ல முடிவிற்கு வந்தான்.

 

அவர்களுடைய குடும்ப நண்பர் வில்லிவாக்கம் வேலாயுத அண்ணனைச் சந்தித்துப் பேசினான். அவர்தான் கண்ணம்மையை அவனுக்கு மணம் முடித்து வைததவர்.அதோடு கண்ணம்மையின் பெற்றோர்களுக்கும் உறவுக்காரர்.

 

"சரி, கருப்பையா இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஒரு தீர்விற்கு ஏற்பாடு செய்து விடுகிறேன் - நீ கவலைப் படாமல் இரு!" என்று ஆறுதல் சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.

 

வில்லிவாக்கம் வேலாயுத அண்ணனைப் பற்றி, ஒரே ஒரு சின்ன அறிமுகம் போதும். அவர் அரட்டை அரங்கம் திருவாளர் விசு அவர்களைப் போல எந்தப் பிரச்சினையையும் பேசி ஒரு நல்ல முடிவைக் கொடுக்கக் கூடியவர்!

 

 

மூன்றாவது நாள்

காலை மணி 8.10

 

அலுவலகத்திற்குப் புறப்படுவதற்குக் தன் காரை எடுப்பதற்காகக் குடியிருப்பின் கீழ் தளத்திற்கு லிப்ட்டில் வந்த கருப்பையாவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

 

அதே லிப்ட்டில் மேலே ஏறிச் செல்வதற்காக வேலாயுத அண்ணன் அவர்களும், கைக்குழந்தையுடன் அவன் மனைவி கண்ணம்மையும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

 

மனிதர் எமகாதகர். பார்த்துவிட்டு வந்து மூன்று நாட்கள்கூட ஆகவில்லை. அதற்குள் சாதித்து விட்டாரே என்று மனதிற்குள் நினைத்தவன், அவர்கள் இருவரும் புன்னகைப்பதைப் பார்த்து வாருங்கள் என்று சொன்னதோடும், கண்ணம்மையின் கையில் இருந்த கைகுழந்தையை வாங்கிக் கொண்டதோடும், அவர்களுக்கு லிப்ட்டில் ஏறத்துணை புரிந்தான்

 

அப்புறம் நடந்ததெல்லாம் சாதாரண விஷயங்கள்.

 

அனாவசியமாக லீவு போடாதே என்று கட்டாயப்படுத்திக் கருப்பையாவை அனுப்பி வைத்த வேலாயுத அண்ணன் பகல் பொழுது முழுவதும் மாமியார், மருமகள் இருவரோடும் பேசுவதற்காக அவர்கள் வீட்டிலேயே இருந்து விட்டார்.

 

****************************

மாலை மணி 6.30

 

டி.டி.கே சாலை பார்க் ஷெரட்டான் ஹோட்டலின் காப்பி ஷாப்பில் தனக்காகக் காத்திருந்த வேலாயுதம் அண்ணனைக் கருப்பையா பார்த்த வுடன் அவர் அவனை எதிரில் அமர வைத்து ரத்தினச் சுருக்கமாக நடந்ததையும் இனி நடக்க வேண்டியதையும் சொல்லி முடித்தார்.

 

இருவரில் ஒருவர் பகல் நேரத்தில் வேலைக்குச் சென்றால் பிரச்சினைகளின் தாக்கம் வெகுவாகக் குறைந்து விடும் என்றும், கண்ணம்மை படித்திருந்தாலும் கைக்குழந்தை இருப்பதனால் அவளை வேலைக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை என்றும், அவனுடைய தாயார் அவர்களுக்குத் தான் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

 

அவன் தாயருக்கு, கிளாஸ் பெயிண்ட்டிங், மெட்டி வேரில் கலைப் பொருட்கள் செய்வது, எம்பிராய்டரி, போன்று பல கலைகள் தெரியு மாதலால் அவர்களுக்குத் தகுந்த மாதிரி இளம் பெண்களூக்குக் பயிற்சி (Coaching) கொடுக்கும் பெரிய பள்ளி ஒன்றில் வேலை வாங்கிக் கொடுத்திருப்பதாகக் கூறினார்.

 

பள்ளிக்குச் சொந்தமான வாகனத்தில் பயணிக்கும் வசதி, மதிய உணவு, இவற்றுடன் கைநிறைந்த ஊதியமும் கிடைக்குமென்றார். அவன் தாயார் அவர்களையும் அன்று காலை பள்ளி நிர்வாகியிடம் அறிமுகம் செய்து வைத்து விட்டதாகவும், அவனுடைய தாயார் அவர்களும் மகிழ்ச்சியோடு அந்த வேலைக்கு ஒப்புக் கொண்டு விட்டதாகவும் அவர் சொன்னார்.

 

கருப்பையா ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டதோடு அவரைக் கையெடுத்துக் கும்பிடவும் செய்தான். அவனுடைய கண்கள் பனித்து விட்டன.

 

அவனைத் தட்டிக்கொடுத்துவிட்டு எழுந்தவர், புறப்பட எத்தனித்தார். அப்போது ஒரு சிறு பொறி தட்ட, கருப்பையா தயக்கத்தோடு அவரிடம் கேட்டான்.

 

"மாமா, ஒரு சின்ன சந்தேகம், கண்ணம்மை சற்று முரண்டு பிடித்தி ருப்பாளே, அவளை எப்படி சமாதானப் படுத்தி அழைத்து வந்தீர்கள்?"

 

"பெண்களுடைய லாஜிக் எனக்கு நன்றாகத் தெரியும். முதலில் . அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். அப்புறம் நாம் சொல்வதற்கு அவர்கள் கட்டுப்படுவார்கள். பகல் நேரத்தில் உன் மாமியாரால் உனக்கு எந்தவிதப் பிரச்சினையும் வராது அதற்கு நான் பொறுப்பு என்று சொல்லித்தான் அவளை இங்கே நான் திரும்ப அழைத்து வந்தேன் அதே பிரகாரம் வந்த தினமே அவளுக்கு ஒரு வழி பண்ணி விட்டேனா - இல்லையா, சொல்லு கருப்பையா?" என்று கேட்டுவிட்டுப் புன்னகைத்தார் அவர்.

 

மேலும் தொடர்ந்து அவர் சொன்னார், "ஏற்பட்டுவிட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை எப்போது உடையுமோ என்ற சந்தேகம் உனக்கு வேண்டாம். எனக்கு நம் தமிழ்நாட்டுப் பெண்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர்கள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். இருவரிடமும் சத்தியப் பிரமாணம் வாங்கியிருக்கிறேன் - ஒருவருக் கொருவர் இனிப்பிரச்சினையாக இருக்க மாட்டார்கள். ஆகவே நினைத்தபடி இருவரையுமே நீ மகிழ்ச்சியாக வைத்துக்கொள். வாழ்த்துக்கள்,வருகிறேன்!"

 

கருப்பையா வியந்துபோய் நின்றான் - மகிழ்ச்சியின் எல்லையில் - கண்களில் மீண்டும் நீர் பனிக்க!

-------------------------------- 

(மதுரையிலிருந்து வெளிவரும் மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதி 16.09.2006 தேதியிட்ட இதழில் வெளி வந்த சிறுகதை இது! இணைய நண்பர்களும் படித்து மகிழட்டும் என்று பதிவு செய்துள்ளேன்)

 ==========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!