
===========================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 20
முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு ஞாயிற்றுக்
கிழமை காலைப் பொழுது.
நண்பர் ஒருவர் துணைக்குக் கூப்பிட்டார் என்பதற்காக
அவருடன் கோவை இடையர் வீதியிலிருந்த ஜோதிடர்
வீட்டிற்கு, அவருடன் நானும் சென்றிருந்தேன்.
ஜோதிடரின் பெயர் பரமேஷ்வர பணிக்கர். அந்தக்
காலத்தில் மிகவும் பிரபலமான ஜோதிடர்.கூட்டம்
அலைமோதும் காத்திருந்துதான் அவரைப் பார்க்க
முடியும். வயதானவர். அனுபவம் மிக்கவர்
என் நண்பனின் சகோதரி மகளுக்கு எப்போது திருமணம்
நடக்கும் என்று கேட்டு வருவதற்காகப் போயிருந்தோம
ஜோதிடரின் வீடு கீழ்த்தளத்தில். முதல் மாடியில்தான்
அவரது அலுவலகம்.
11' x 15' அளவில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான்
உட்காருவதற்குப் பாய் போட்டு வைத்திருப்பார்கள்
ஏற்கனவே பத்துப் பேர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
நாங்களும் போய் உட்கார்ந்து கொண்டோம்.
நான் இதுபோன்ற இடங்களுக்கெல்லாம் போகும்போது
என்ன நடக்கிறது என்று முழுக்கவனத்துடன் பார்ப்பது
வழக்கம்.
எங்களுக்கு முன்னால் ஒரு வயதான தம்பதியர்
தங்கள் மகனுடைய ஜாதகத்தை அவரிடம் கொடுத்துப்
பார்க்கச் சொல்லிவிட்டு அவர் எதிரில் அமர்ந்திருந்தார்கள்
ஜோதிடர் நடப்பு தசாபுத்தியை ஒரு காகிதத்தில் அசுர
வேகத்தில் கணக்கெடுத்துக் குறித்துக் கொண்டவர்,
ஜாதகத்தையும் ஒரு கண்ணோட்டம் பார்த்தவாறு கேட்டார்
"உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்?"
அந்தப் பெரியவர் சொன்னார்." சாமி, பையனுக்கு
22 வயசாச்சுங்க! வியாபாரம் எதாவது வச்சுக் கொடுக்கலாமா? அல்லது திருமணத்த நடத்திப் போடலாமா? கொஞ்சம் விவரனையா பாத்துச் சொல்லுங்க! வியாபாரம் வச்சுக் கொடுத்தா அஞ்சு வருசம் கழிச்சுத் தான் திருமணம் பண்ணோனும். இல்ல திருமணம் செஞ்சுவச்சோமின்னா வியாபாரம் பின்னாடித்தான் வைக்கோணும். சாதகப்படி எது நல்லதுன்னு சொல்லுங்க"
உடனே சட்டென்று ஜோதிடர் அவரைப் பார்த்துக் கேட்டார்.
"பையன் வீட்டிற்கு அடங்க மாட்டானே?"
"ஆமாம் சாமி!"
"ஒழுங்கா படிச்சு பட்டம் வாங்கியிருக்க மாட்டானே?"
"ஆமாம் சாமி!"
" அதுக்கெல்லாம் காரணம் பையன் மூல நட்சத்திரம்.
சின்ன வயசிலேயே சுக்கிர தசை வந்திருச்சு. சின்ன
வயசில சுக்கிர தசை வரக்கூடாது. குட்டிச் சுக்கிரன்
கூடிக் கெடுக்கும். அதோட பையனை சுகவாசியா
வச்சு - அவனைக் கெடுத்துவிட்டுப்போய் விடும்!
அவன் பிறந்ததிலிருந்து உங்களுக்குப் பணம் நிறைய
வந்திருக்கும். அதனால அவனைச் செல்லம் கொடுத்தும்
வளர்த்திருப்பீங்க! ஜாதகப்படி கர்ப்பச்செல் இருப்பு
கேதுல 3 வருஷம், சுக்கிரன் ஒரு 20 வருஷம், அதுக்க
ப்புறம் வரப்போகிற சூரிய தசை ஒரு ஆறு வருஷம்
ஆக மொத்தம் 29 வருஷம். பையனுக்கு 30 வயசுக்கு
மேலதான் நல்ல காலம். அதுக்கப்புறம் வியாபாரம்
வச்சுக்கொடுங்க. இப்ப கல்யாணத்தைப் பண்ணுங்க!
முடியப் போற சுக்கிரதசையும் கல்யாணத்தை
நடித்தி வச்சுட்டுத்தான் போகும். அதோட அவனுக்கு
வியாழ நோக்கமும் இருக்கு! ஜாதகப்படி இன்னும்
தொண்ணூறு நாள்ல கல்யாணம் ஜாம் ஜாம்னு
நடந்திரும்!"
என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டார்
அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை
அவர் சொன்ன அந்த வாக்கியம் நெடு நாட்கள்
என் காதிலும் மனதிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
"குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்."
"குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்."
அது உண்மை என்பதைப் பின்னால் தெரிந்து
கொண்டேன்
அதாவது எனக்குக் கிடைதத என் உறவினர்கள்
மற்றும் என் நண்பர்களின் ஜாதகங்களை (சுமார் 200)
வைத்து நான் ஆராய்ச்சி செய்தபோது அது
உண்மைதான் என்று தெரிந்து கொண்டேன்
-----------------------------------------------------------------------
அதுபோல பத்து வருடங்களுக்கு முன்பு, வேறு
ஒரு நண்பர் கூப்பிட்டார் என்பதற்காக அவருடன்
வேறு ஒரு பிரபல ஜோதிடரைப் பார்க்கப் போயி
ருந்தேன்.
அந்தக் கால கட்டத்தில் நான் ஜோதிட நூல்களை
யெல்லாம் ஓரளவிற்குக் கற்றுத் தெளிந்திருந்தேன்
ஆனாலும் இதுபோன்ற இடங்களுக்குப் போகும்
போது என்னுடைய திருவாயை மூடிக் கொண்டு
என்ன நடக்கிறது என்று கவனிப்பேனேயன்றி
ஒன்றும் பேச மாட்டேன். என் மேதாவித்தனத்தை
எல்லாம் ஸ்லைடு போட்டுக் காட்டமாட்டேன்
என் நண்பர் கொடுத்த அவருடைய ஜாதகத்தை
வாங்கி ஒரு காகிதத்தில் தேவையான விவரங்களைக்
குறிபெடுத்த ஜோதிடர் என் நண்பர் ஒன்றும் சொல்
லாமலேயே கேட்டார்.
"உங்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக மிகுந்த
பணக்கஷ்டம். சரியா?"
என் நண்பர் சற்றுத் திகைத்துப்போய், அரைப்
புன்னகையுடன் பதில் சொன்னார்
"ஆமாம்!"
" வியாபாரத்தில் சரக்குக் கொடுத்த இடத்திலெல்லாம்
சிக்கல். நம்பியவர்கள் எல்லாம ஏமாற்றுவார்கள்.
உங்கள் பாக்கியெல்லாம் ஒன்றும் வசூலாகாது. ஆனால்
உங்களுக்குப் பணம் கொடுத்தவன் நெருக்கடி கொடுப்பான்
இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதா?"
" ஆமாம்!"
"அதற்குக் காரணம் உங்களுக்கு 2ம் வீட்டில் மாந்தி
மாந்தி அமர்ந்த வீட்டிற்குரியவனான புதனுடைய
புக்தி உங்களுக்கு இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.
மாந்தி அமர்ந்தவனுடைய புக்தி வாட்டி எடுத்துவிடும்.
மேலும் உங்களுக்கு சனிமகாதிசையில் புதன் புக்தி
சனியும் புதனும் வேறு அஷ்டம சஷ்டமத்தில்
(6th and 8th position to each other) இருக்கிறார்கள். அதுவும்
அனுகூலமாக இல்லை. இந்த தசாபுக்திக் காலம்
மொத்தம் 32 மாதத்தில் 24 மாதங்கள் கழிந்துவிட்டன
இன்னும் 8 மாத காலம் பாக்கி இருக்கிறது. அதற்குப்
பிறகு எல்லாம் சரியாகிவிடும். கவலையை விடுங்கள்
உங்கள் அடிப்படை ஜாதகம் நன்றாக இருக்கிறது
பழைய நிலைமை திரும்பி விடும்" என்று சொல்லி
அனுப்பி வைததார்.
அதன்படியே நடந்தது!
சரி, இதையெல்லாம் எப்படி சொல்கிறார்கள்?
தசாபுக்திகளை வைத்துத்தான் சொல்வார்கள்!
தசாபுத்தி என்றால் என்ன?
ஒவ்வொரு கிரகத்திற்கும் தசாபுக்திகள் (Own Periods)
உண்டு. ஒவ்வொரு கிரகமும் அதனுடைய தசாபுக்தி
நடக்கும்போதுதான் பலனைக் கொடுக்கும்.
(Awarding the benefits to the native of the horoscope)
அதுதான் அடுத்த பாடம்!
பதிவின் நீளம், மற்றும் உங்களுடைய பொறுமை
கருதி இன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன்
நாளை சந்திப்போம்!
(தொடரும்)
-----------------------------------------------------------------


















