Astrology பூணூலை மாற்றுகிற தினம் மட்டுமா அது?
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 9
அவிட்ட நட்சத்திரம்
கோரக்கர் என்னும் பெயரைக்கொண்ட சித்தர் ஆலயங்களுக்கு யாத்திரையாக வந்தபோது, இத்தலத்திற்கு வந்தாராம். வந்தவர் இங்கே உறையும்
சிவபெருமானைத் தரிசித்துவிட்டு, அருகில் இருந்த மடம் ஒன்றில் தங்கினாராம்.
அந்தக் காலத்தில் ஊருக்கு ஊர் மடங்களும், வீட்டுக்கு வீடு திண்ணைகளும் இருந்தன. வழிப்போக்கர்களும், பயணிகளும் இரவு நேரத்தில் தங்கிச் செல்வார்கள்.
அப்படி மடம் ஒன்றில் தங்கிசென்றபோது கோரக்கர் (என்ன பெயருடா சாமி) ஒரு சோதனைக்கு உள்ளானார். பல பக்தர்கள் முன்பே அங்கு தங்கியிருந்தனர்.
அவர்களோடு ஒரு ஓரமாகப் படுத்திருந்த கோரக்கர் அசதியில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவில் திடீரென விழித்தவருக்கு, அதிர்ச்சியாக இருந்தது. அருகில் ஒரு இளம் பெண் படுத்திருந்தாள். அத்துடன் அவளுடைய சேலைத்தலைப்பு விலகி, இவர் மேற்கிடந்தது. அப்பொழுதெல்லாம் ஒன்பது முளம் சேலை. பெண்கள் ரவிக்கை (Blouse) அணிவதில்லை. அதனால் இறுக்கி முடிந்துகொண்டுதான் படுப்பார்கள். அப்படி இருந்தும் எப்படி விழுந்தது என்று தெரியவில்லை.கோரக்கர் மிகவும் வருத்தமுற்றார்.
அதற்குப் பரிகாரமாக தன் கையை வெட்டிக் கொண்டு விட்டார். பிறகு அந்த மடத்திலேயே சில காலம் தங்கி, அங்குள்ள சந்திர புஷ்கரணியில் தினமும்
இருமுறை நீராடி, வெட்டுப்பட்ட கையோடு ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லித்தாயாரையும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவனார் அந்தச் சித்தருக்கு அருள்பாலித்தார். சித்தருக்கு மீண்டும் கை கிடைத்தது. கோரக்கரின் கை வெட்டுப்பட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு கோரக்கை என்ற பெயர் உண்டானது. தனது வெட்டுண்ட கையால் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பெற்றது. காலப்போக்கில் அது கொருக்கை என்று மாறி விட்டது.
பிரம்மாவிடம் இருந்த வேத நூற்சுவடிகளை அசுரரகள் திருடிக் கொண்டு போய்விட்டார்கள். மகாவிஷ்ணு மீட்டுக் கொடுத்தார். அந்த நிகழ்வால், பிரம்மாவினால் இயல்பாக இருக்க முடியவில்லை. படைப்புத் தொழிலையும் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. விஷ்ணுவின் ஆலோசனைப்படி, அவர் இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, பாதப்பிரதட்சணம் செய்து தினமும் சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நன்நாளில், சிவன் பிரம்மாவிற்கு ஞானம் (wisdom) கொடுத்தார். அதனால் பிரம்மா மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி முன்போலவே சிறப்பாகச் செயல் புரிந்தார். அதனால் இத்தலநாதன் பிரம்ம ஞானபுரீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார்.
இறைவன் இங்கே சுயம்பு மூர்த்தி. சிவனுக்கும் அம்பிகைக்கும் எதிரில் உள்ள இரண்டு நந்திகளும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
முந்திரிப்பருப்பு, நிலக்கடலை இரண்டையும் கலந்து மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது இங்கே நிலவும் நம்பிக்கை.
அருள்மிகு பிரம்ம ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை என்னும் கிராமத்தில், பட்டீஸ்வரம் என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ளது. அந்தப்
பட்டீஸ்வரம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. சுவாமியின் பெயர் பிரம்மஞானபுரீஸ்வரர். தாயாரின் பெயர், அதாவது அம்பிகையின் பெயர் புஷ்பவல்லி. கோவிலின் முன் உள்ள திருக்குளத்தின் பெயர்: சந்திர புஷ்கரிணி. 1000 ஆண்டுகட்கு முற்பட்ட புராதனக்கோவில். கோவிலின் நடை காலை 11 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். மகாசிவராத்திரியன்று திருவிழா நடைபெறும்.
மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் இக்கோயில் கட்டப்பெற்றுள்ளது.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் நீங்கிச் சுகமடைய இத்தல இறைவனை வழிபாடு செய்வது நல்லது. அத்துடன் கல்வியில் சிறக்க, திருமணத் தடைகள் நீங்க, குடும்ப ஒற்றுமை வளர இங்கு பிரார்த்தனை செய்வதும் நல்லது. அதாவது நன்மை பயக்கும்!
ஆவணிமாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று பெளர்ணமியும் சேர்ந்துகொள்ளும். அன்றைய தினம் இங்கே வந்து வழிபடுதல் மேன்மை உடையதாகும்
கோயில் மிகவும் சிதிலமடைந்துள்ளது. அவிட்ட நட்சத்திரக்காரர்கள் ஒன்று சேர்ந்து, இத்தலத்திற்கு திருப்பணி செய்வது நல்லது. அது புண்ணியக் கணக்கில் வரும்! பணத்தை மட்டும் சேர்க்காமல் கொஞ்சம் புண்ணியத்தையும் சேருங்களேன்!
+++++++++++++++++++++++++++
ஆவணி அவிட்ட நட்சத்திரம் பற்றிய மேலதிகத்தகவல்:
கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி
அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?
சோ நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற
சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது
உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது. அப்போது
பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம்
செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.
வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது.
அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.
கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது
எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?
சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான்
இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது பிரமாணம்தான் தீர்ந்து
விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு
மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன்,
இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.
தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில், அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.
ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ,
ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது
எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே
அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர் களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’ என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.
நன்றி: திருவாளர் சோ.ராமசாமி அவர்கள் மற்றும் சோ அவர்களின் செய்திகளைத் தொகுத்தளித்த திருவாளர் அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்
அன்புடன்
வாத்தியார்
அடிக்குறிப்பு: மகிழ்ச்சியான செய்தி - வாத்தியார் வெளியூர்ப் பயணம். நாளை ஒருநாள் வகுப்பறைக்கு விடுமுறை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!