மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Food. Show all posts
Showing posts with label Food. Show all posts

21.6.22

பரோட்டாவின் வரலாறு




பரோட்டாவின் வரலாறு

என்ன பரோட்டாவுக்கெல்லாம் வரலாறா என்று யாரும் சண்டைக்கு வரவேண்டாம். வித்தியாசமான பரோட்டா சுவைகளை போலவே வித்தியாசமான வரலாறும் பரோட்டாவுக்கு உண்டு.
இந்தியா , பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ்,மாலத்தீவுகள் நேபாளம், இந்தோனேசிய என பலநாட்டு மக்களை வசீகரித்து உணவு பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பரோட்டா .

இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப்படுகிறது. பராத்தா என்கிற வார்த்தை சமஸ்கிருதச் சொல்லாகும்

சினிமா கதாநாயகன் போல பல அவதாரங்கள் எடுக்கும் வல்லமை கொண்டது

ஆலூ பரோட்டா, கொத்துப் பரோட்டா, மெலிதான வீச்சுப் பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிய மலபார் பரோட்டா, சிலோன் பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டைப் பரோட்டா, காலிஃப்ளவர் பரோட்டா என்று பல விதமான பெயர்களில் பல்வேறு சுவைகளில் உருவாகும் புரோட்டாவின் தாயகம் இலங்கை என்று சிலர் சொன்னாலும் அது இந்திய துணைக் கண்டத்தில் இருந்த இப்போதைய பெஷாவர் தான் புரோட்டாவின் தாய்மண் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் புரோட்டா மேல் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில் கோதுமை மாவில் நிறைய நெய் விட்டு செய்யப்பட்ட புரோட்டா இரண்டாவது உலகப்போரில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது மைதாவுக்கு மாறியது. அதோடு நெய்யையும் விட்டுவிட்டு எண்ணெய் ஊற்றி தயாரிக்கபட்டது.

எளிய மக்களின் உணவாக கருதப் படும் பரோட்டா ஜீரணமாக வெகுநேரம் பிடிப்பதால் உழைக்கும் வர்க்கத்தின் மக்கள் பரோட்டாவை விரும்பி உண்டனர்.அதிலும் சால்னா குருமா இருந்தால் சொல்ல வேண்டியதில்லை.
சரி நீ எல்லா கோடுகளையும் அழி நா முதல்ல இருந்தே ஆரம்பிக்கிறேன் என்று புரோட்டா தின்னும் நடிகர் சூரியின் காமெடியை யாரும் மறக்க முடியாது
-----------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.3.22

தாம்பூலத்தின் மகிமை தெரியுமா?


தாம்பூலத்தின் மகிமை தெரியுமா?

 "வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய தமிழ்ச் சமூகம்"

சமீப காலமாக என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் இது.
  
தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு,வெறும் வெற்றிலைபாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.

வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் .... கேன்சர் இல்லை, சர்க்கரைவியாதி இல்லை, இதயநோய்கள் இல்லை ..... முக்கியமா மலட்டுத்தன்மை அறவே இல்லை. ஆக .... வெற்றிலைபாக்கு என்பது பல நோய்களை தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.

கலாச்சார சீரழிவும்,அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தை கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

வாயில் கேன்சர் வந்திரும், பல்லு கரை போகவே போகாது,தவிர டேய் இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டுக்கிட்டு என சொல்லி சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டே விட்டது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்து சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனை பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பி விட வேண்டும் என்றும், மூணாவது ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில்,ஆங் தாம்பூலமா அப்புடின்னா என கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது, 

பெருகி வரும் ஆண் மலட்டு தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.

வெற்றிலையில் உள்ள Hydroxy chavicol எனும் Phenol compound ஆனது ஆண்களின் prostate யை வலுப் படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது, விதை பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு  prostate இல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது motility உண்டாகிறது,IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தை சிலாகித்து பேசி இருக்கிறார்கள் போல,

மலச்சிக்கலா தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கை சேர், வாய் நாற்றமா வெற்றிலையை சேர், வீரியம் வேண்டுமா சாதிக்காய் சேர் என சொன்ன சமுகம் இன்று Infertility center களில் முடங்கி கிடக்கிறது.                                     

அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூல மகத்துவத்தை எடுத்து உரைப்போமே.
--------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.11.20

உணவையே மருந்தாக்கலாம் - படித்துப் பாருங்கள்!!!!


உணவையே மருந்தாக்கலாம் - படித்துப் பாருங்கள்!!!!

**மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்**

👽மூளை

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

👀கண்கள்

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

😁பற்கள்

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

🍁நரம்புகள்

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

🌹ரத்தம்

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

💃சருமம்

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

💓நுரையீரல்  & இதயம்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால்  நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

🍒வயிறு

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*

*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*

*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்
🍅கல்லீரல் & மண்ணீரல்

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

🍓மலக்குடல்

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

👣பாதம்
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

அதாவது நீங்கள் முயன்றால் உணவையே மருந்தாக்கலாம்
-------------------------------------------------------------
படித்ததில் தெளிந்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.11.20

இதைப் படித்தால்,,,இப்பவே மதுரைக்குப் போகத் தோன்றும்!!!


இதைப் படித்தால்,,,இப்பவே மதுரைக்குப் போகத் தோன்றும்!!!

மதுரை நகரின் வடை ஃபேக்டரிகள்:

மதுரையில் நிறைய வடைக் கடைகளை கடை என்பதை விட வடை ஃபேக்டரின்னே கூறலாம். 

சர்வ சாதாரணமாக 2000 வடைகள் தினமும் விற்கும் கடைகளே நூற்றுக்கும் அதிகமாக இருக்கும்.! 

அதில் தலையானது மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் இருக்கும் பாம்பே ஸ்வீட்ஸ்!

சூரியன் உதிப்பதற்கு முன்பே அந்த சூரியன் போன்ற வெப்பத்துடன் தயாராகும் அப்பம் மதுரையின் அடையாளம் ஆகும்

அதிகாலை 4 மணிக்கே இனிப்பு அப்பத்துடன் தனது நாளை துவக்குபவர்கள் சூரிய உதயத்திற்கு பின்பு அசால்ட்டாக..உளுந்தவடை, மசால்வடை, காரவடை, வெங்காயவடை, சமோசா என வெரைட்டிக்கு மாறுவார்கள்.. 

ஒவ்வொன்றிலும் தலா 200 வடைகள் போடுவார்கள். 

அதிகாலை அப்பம் தன் வெப்பம் இழந்து ஆறியிருந்தாலும்.. 

அந்த அப்பத்தை சுவைத்துவிட்டு தேங்காய் சட்னியோடு 2 வெங்காய வடையோ உளுந்தவடையோ உண்ணும் ஜீவராசிகள் பலர் மதுரையில் உண்டு அதுதான் காலை டிபன் 15 ரூபாய்க்குள் முடித்துவிட்டு பணிக்குச் செல்லும் கட்டுமான தொழிலாளர்கள் இங்கு பலர் உண்டு

(நானும் அந்தப்பட்டியலில் இருந்திருக்கின்றேன்.! )

அதே போல பஜ்ஜியில் தான் எத்தனை எத்தனை வகைகள்.!

பெரிய கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய், வெங்காயம் என வெரைட்டியாக பாஜக கலரில் வந்து இலையில் விழும் கொதிக்கும் பஜ்ஜியோடு சட்னியை சுவைத்துக் கொண்டே ரோட்டை வேடிக்கை பார்ப்பவர்கள் பலர்

இந்த கடையில் வெங்காய பஜ்ஜி சாப்பிடுவது தான் கொஞ்சம் கஷ்டம்.

அவர்கள் தரும் சூட்டில் பஜ்ஜியைக் கடித்தால் வாய் வெந்து விடும்.! 

ஓபன் ஹார்ட் சர்ஜரி போல பஜ்ஜியை இரண்டாகப் பிளந்து அதன் சூடு போக வாயால் அதை ஊதி ஊதி..வெங்காயத்தை லேயர் லேயராக எடுத்து தேங்காய் சட்னியில் குழைத்து ரசித்து உண்ணவேண்டும்.!

அதிலும் இந்த கடையில்  சமோசாவிற்கு ஒரு ஆனியன் தக்காளி குருமாவும், வடைகளுக்கு கடலைமாவில் செய்த பாம்பே சாம்பாரும் தருவார்கள் . அடடா அது என்ன ஒரு காம்பினேஷன் தெரியுமா?

சில நேரங்களில் வெள்ளையப்பம், காரபோண்டா, தவளவடை, மசால்வடைக்கு அருமையான..தக்காளி மல்லிச் சட்னி கிடைக்கும். 

மொறு மொறுன்னு அங்கம் மினு மினுக்க கிடைக்கும் பூண்டு தட்டிப்போட்ட மசால் வடைக்கும், தவளவடைக்கும் அந்தச் சட்னி தேவார்மிதமாக இருக்கும்.

மாலையில் மைசூர் போண்டா என்றோ பட்டணம் பக்கோடா என்றோ அழைக்கப்படும்..போண்டாவிற்கு ஒரு புதினா சட்னியும் மிளகாய் சட்னியும் தருவார்கள் பாருங்கள் அது டிவைன்.! 

சில சமயம் சூடான அதே பாஜக நிறத்தில் சொஜ்ஜியும் (கேசரி) கிடைக்கும்.! 

பிரமாதமான இனிப்பில் முந்திரி, திராட்சையுடன் வாயில் வைத்தாலே சர்ரென வயிற்றில் இறங்கும் வழவழப்பில் தயாரிக்கப்பட்ட கேசரி அது.! 

அப்படியே அண்ணா பஸ்ஸ்டாண்ட் சென்றால் எல்ஐசி ஊழியர்களின் சங்கம் இருக்கும் தெருவில் இருக்கும்  ஒரு வடைக் கடை இருக்கிறது ஒவ்வொரு வடையும் ஒரு டோனெட்டை விட 2 சுற்று பெரியதாக இருக்கும். அதிலும் அந்த உளுந்த வடை இருக்கே அது சூப்பரோ சூப்பர்

காலையில் 2 வடை ஒரு டீ சாப்பிட்டாலே மதியம் வரை பசிக்காது.! 

இங்கும் மெதுவடை, ஆமைவடை, போண்டா, வெங்காய வடை, சமோசா எல்லாம் கிடைக்கும்  அதன் சூடும் அந்தச்சட்னியும் அடடா.! செம.! 

அதே போல யானைக்கல் ஆசீர்வாதம் கடையின் வடைகளை எல்லாம் ஒரு யானையே வந்து  விழுங்குவது போல மதுரையன்கள் விரும்பி விழுங்குவார்கள். 

கூடல்நகர் பாலம், பீபிகுளம் உழவர் சந்தையில் வண்டிக் கடைகளில்..உங்களுக்கு அற்புதமான வடைகள் வித்தியாசமான சைட்டிஷ்களோடு கிடைக்கும்.. 

சீரகம் மிளகுத்தூள் கலந்த பொடியை நறுக்கிய முட்டை போண்டாவில் தூவித் தருவார்கள் பாருங்கள்..சொல்ல வார்த்தைகள் இல்லை.

மல்லி சட்னியோடு வடைகள், போண்டா, சமோசா என இங்கும் உண்டு விலை அதிகமில்லை ₹5மட்டுமே..

மஹால் ஏரியா, முனிச்சாலை சென்றுவிட்டால் முள் முருங்கைவடை இட்லிப் பொடியுடன் கிடைக்கும். வாழைப்பூ வடை, கீரை போண்டா, மெது போண்டா, கருப்பு உளுந்தவடை, கார சீயம், இனிப்பு சீயம், தேங்காய் போளி, பருப்பு போளி என வெரைட்டியாகவும், சுவையில் வித்தியாசமாகவும் பலப்பல வடை பதார்த்தங்களை ருசிக்கலாம். 

கல்யாண முருங்கையில் குட்டி பூரி போல சுடப்பட்டும் முள் முருங்கை வடை ருசியானதும் ஆரோக்கியமானதும் கூட !

சின்னச் சொக்கிக்குளத்தில் அருமையான தயிர்வடை, சாம்பார் வடை காராபூந்தி தூவி கிடைக்கும்.

இங்கு கிடைக்கும் உருளைக் கிழங்கு போண்டாவிற்கு புவிசார்பு குறியீடு வழங்கினாலும் தவறில்லை.! 

பீபீ குளம் மீனாட்சிபுரம் ஜங்ஷனில் கிடைக்கும் பால்பன், முட்டை கோஸ் அப்பம், வடைகள் எல்லாம் 5ஸ்டார் மதிப்புடையவை.

கிருஷ்ணாபுரம் காலனியில் வண்டிக்கடையில் சுண்டல் குழம்பு & சமோசா, மிளகாய்பஜ்ஜி, கார உருண்டை, நைஸ் மசால் போண்டா, வெங்காய போண்டா, உளுந்து போண்டா, இவையெல்லாம் முறையே தேங்காய்/தக்காளி/மல்லிச்..சட்னிகளோடு பரிமாறப்படும் .

போனஸாக அந்த சுண்டல் குழம்பும் கடலைமாவு பாம்பே சாம்பாரும் வழங்கப்படும் .

சூடாக போடும் வரை காத்திருந்தே இங்கு சாப்பிடமுடியும். 

மதுரை பழைய ராஜ்மஹால் கடையிலிருந்து அம்மன் சன்னதி போகத் திரும்பும் சந்திப்பில் இருக்கும் போளி, வடைக்கடை, பெரியார் பேருந்து நிலைய கேபிஎஸ் ஓட்டல் வாசல் மெகா சைஸ் மெதுவடைக் கடை, கிராஸ் ரோடு வடைக் கடை. செல்லூர் மெயின் ரோட்டில் இருக்கும் செல்வம் கடை என மதுரையில் பலப் பல வடை ஃபேக்டரிகள் உண்டு.!

இங்கு நான் சொன்னது கொஞ்சமே.! 

மதுரையின் 16 திசைகளிலும் சுடச்சுட வெரைட்டியாக கிடைக்கும் அற்புத உணவு வடைகள் மட்டுமே. 

கதைகளில் காகங்கள் பாட்டியிடம் வடை திருடினாலும் மதுரையில் மட்டும் வடை சுட்டு விற்கும் பாட்டிகளுக்கு அது நஷ்டமே இல்லை..! 

ஏனெனில் முதல் வடையை சுட்டதும் அதை காக்கைக்கு வைத்துவிட்டே கடையைத் துவக்குகிறார்கள்.! 

மதுரையில் சிறந்த வடைக்கடையை அடையாளம் காண..சிறந்த வழி ஒன்று இருக்கிறது..! 

அந்த வடைக்கு அவர்கள் எவ்வளவு சட்னி வகைகள் வைத்திருக்கிறார்கள் எனப் பார்த்தாலே போதும்.! 

இரண்டு சட்னிகள் எனில் அது 3 ஸ்டார்.. 

3க்கு மேல் எனில் அது 5 ஸ்டார்.. 

விதவிதமாக என்றால் அது 7ஸ்டார்.!

திருவிளையாடலில் ஞானப்பழத்திற்கு பதில் நாரதர் வடையை கொண்டு ஆட்டத்தை ஆடியிருந்தால் தற்போது பழனி மலை மதுரையில் அமைந்திருக்கும் என்பதே ஆகச்சிறந்த உண்மை!
--------------------------------------------------
ஆஹா... என்ன ரசனை..ஐயா விவரித்த மனிதருக்கு!
வாழ்க அந்த மனித நேயர்

அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.10.20

வத்தக் குழம்பு புராணம்



வத்தக் குழம்பு புராணம்

வத்தக் குழம்பு செத்த நாக்கையும் உயிர்ப்பிக்கும் என்பார் அறுசுவை ஆறுமுகக் கவிராயர்..

உணவே மருந்து மருந்தே உணவு என்னும் தமிழரின் பாரம்பரியச் சமையலின் தலைமை மருத்துவ குணம் கொண்ட குழம்பு தான் இந்த வத்தக் குழம்பு.. சுவையிலும் தனித்துவத்தில் இருப்பது இதன் பெரும் சிறப்பு.!

வத்தக்குழம்பின் மகாத்மியங்களை சொல்லத்தான் இப்பதிவே.!

#சுண்டைக்காய்_வத்தல்_குழம்பு, #மணத்தக்காளி, #பிரண்டை, #பூண்டு, #வெண்டை, #எண்ணெய்_கத்திரிக்காய்,  #கொத்தவரங்காய் போன்ற வகைகள் வத்தக்குழம்பிற்கு மிகச் சிறந்த காய்கறி வகைகள்..

வெற்றிலை போட்டு வைக்கும் வத்தல் குழம்பும் உண்டு.. இதில் #டாப்_1_இடம்_சுண்டைக்காய்_வத்தக்குழம்புதான்.! சிவாஜி - பத்மினி போல பர்ஃபெக்ட் ஜோடி.!

முதலில் வத்தக் குழம்பிற்கு வைக்கும் சாதம் முக்கியம்.! குழையவேக்கூடாது..
MN நம்பியார்போல மிக விறைப்பாகவும் அதே நேரம் SV ரங்காராவ்போல கொஞ்சம் பதமாகவும் இருக்கவேண்டும்!

குழம்பை சொத சொதன்னு சோற்றில் ஊற்றாமல் பிரட்டுவதுபோல பட்டும் படாமல் பிசைவது மிகச்சிறந்த முறை ஆகும்.

அதிலும் சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிறகு..வத்தக் குழம்பை விட்டு பிசைந்து சாப்பிட்டால்!ஆஹஹாஹா! வத்தக்குழம்பு எவ்வளவு கெட்டியாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது.. என் பாட்டி வீட்டில் வைக்கும் வத்தக் குழம்பு எல்லாம் அம்மியில் அரைத்த துவையல் போல ஐஸ்க்ரீமின் ஒரு ஸ்கூப் போல மிக கெட்டியாக இருக்கும்..

இதற்கு தொட்டுக் கொள்ள வெறும் சுட்ட அப்பளமே தேவாமிர்தமாக இருக்கும்.!

பூசணிக்காய் பால்கூட்டு, தயிர் பச்சடி, புடலங்காய் பருப்பு கூட்டு, வாழைத்தண்டு பருப்பு கூட்டு, இப்படி பருப்பு சேர்த்து செய்யும் எல்லா கூட்டும் வத்தக் குழம்பிற்கு பெஸ்ட் காம்போ.. அவியலும் பிரமாதமாக இருக்கும்..

வேலி பிரண்டையை உரசி என் அம்மா வைக்கும் வத்தக் குழம்பு அருமையான மருத்துவ குணம் கொண்ட ஆரோக்கியமான உணவாகும்.. அதே போல.. மணத்தக்காளி போட்டும் வைப்பார்கள் வயிற்று கோளாறுகள் ஒரே நாளில் காணாமல் போய்விடும்..

அல்சர் இருப்பவர்கள் வாரத்தில் இரு முறை சாப்பிடலாம்.. ஒரு முறை கோவை வந்திருந்த போது என் பழைய எம்.டி. சுவாமிநாதன் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது கொங்கு ஸ்டைல் வதங்கல் கத்திரி வத்தக்குழம்பு சாப்பிடும் பெரும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்! அடர் வயலட்டில் மேனியெங்கும் எண்ணெய் மினுமினுங்க நன்கு எண்ணெயில் வதங்கிய முழு கத்திரிக்காய்கள்.. குலாப் ஜாமூன் போல புளிக்குழம்பில் மூழ்கியிருக்க.. கூடவே சுண்டைக்காய் வத்தலும் போட்டு நான் சொன்ன துவையல் பதத்தில் மேடை(சை)க்கு வந்தது..

சாம்பாருக்கு பிறகு 4முறை வத்தக்குழம்பையே சந்திரமுகி ரஜினி போல ரிபீட்டு கேட்டு கேட்டு வாங்கினேன்.!

அடுத்து வெங்காய வத்தக்குழம்பு.. இதுவும் மருத்துவ குணம் மிக்க அஜீரணத்தை கட்டுப்படுத்தும் குழம்பு இதற்கு வடகம், பொரித்த அப்பளம், சில நேரங்களில் மாங்காய் தொக்கு என பல காம்போக்கள் உண்டு..

பாகற்காய் வத்தக்குழம்பு எனது விருப்ப உணவுகளில் ஒன்று.. கொஞ்சம் இனிப்புள்ள பரங்கிப் பூசணி, கொத்தவரங்காய், அவரை, செள செள, காய் கூட்டுகள் இதற்கு..பக்கா பொருத்தமாக இருக்கும்..

எந்த வத்தக்குழம்பாக இருந்தாலும் என்ன காய் போட்டாலும் சுண்டைக்காய் சேர்த்து போடுதல் வத்தக்குழம்பிற்கான லட்சணங்களில் ஒன்று..

இந்த வத்தக்குழம்பில் எல்லாம் இன்னொரு வசதி.. தயிர் சாதத்திற்கு இதைத் தொட்டுக் கொள்ள பிரமாதமாக இருக்கும்.. ஒரே ஒரு முறை அதை சுவைத்துவிட்டால் எப்போதும் விடமாட்டீர்கள்.!

கால மாற்றங்களில் ஓட்டல்களில் செக்கச் செவேலென இன்று ஒரு கிண்ணத்தில் வைத்து தரப்படுவதெல்லாம் வத்தக் குழம்பே அல்ல..

சீகைக்காயை அந்த காலத்தில் கரைப்பார்களே அந்தக் கலரில் இருப்பதே அக்மார்க் வத்தக்குழம்பு.

சூடான சாதத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் 1ஸ்பூன் விட்டு.. பிசைந்து அதை சுட்ட அப்பளத்துடன் சாப்பிடும் சுகமே சுகம்.!

இன்னொன்று  சொல்ல மறந்துட்டேனே..!

முதல்நாள்_செய்த_வத்தக்குழம்பை_பத்துநாள்_வச்சு_வச்சு_சாப்பிட்டால்_பரமசுகம்...

ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்..!!!

அப்போ நாளைக்கு உங்க வீட்டில் வத்தக் குழம்பு தானே.
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.6.20

என்ன ரசனைடா சாமி ?


என்ன ரசனைடா சாமி ?

எதையும் ரசிப்பதற்கு ஒரு ரசனை உணர்வு மிகுந்த மனம் வேண்டும். ஒருவர் தங்கள் ஊரில் கிடைக்கும் உணவுகளைப் பற்றி ரசித்து ரசித்து எழுதியுள்ளார். அருமையாக உள்ளது. படித்துப்பாருங்கள்!!!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
மதுரையின் உணவுக்கடைகள பற்றி ஒரு திரட்டு போடுறேன்...  மதுரைல குட்டிக்குட்டித் தெருக்கள்ல கூட சுவை மிக்க கடைகள் இருக்கு... அதனால நான் மிஸ் பண்ணீட்டா உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு மன்னிச்சிருங்க... வாங்க போவோம்

முதல்ல மங்களகரமா ஸ்வீட்லருந்து ஆரம்பிப்போம்..

 ஸ்வீட்னா இது நம்ம பாரம்பர்ய ஸ்வீட்டு... "அதிரசம்" தானப்ப முதலிதெருவுலருந்து வடக்கு ஆவணி மூலவீதி தொடங்குர முக்குல ஒரு கடை இருக்கு அந்தக்கடையில அதிரசம் திங்கனும்... சும்மா டரியலா இருக்கும்.. அந்த வெளிப்புற மொறுமொறுப்பு...கடிச்சதும் உள்ள அம்புட்டு மிருதுவா இருக்கும்... ஒன்ன எடுத்து திங்க ஆரம்பிச்சா அங்கயே நின்னு நாலஞ்ச திண்ணாத்தான் மனசு ஆறும்...

காலை டிபனுக்கு, காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு எதிர் சந்துல நேரா போய் SS காலனில SBI பேங்க்குக்கு சைடு ரோட்டுல போனா கெளரின்னு ஒரு கடை இருக்கு..பைபாஸ் ரோடு கெளரிகிருஷ்ணா இல்ல... இது குட்டிக்கடை... இட்லி,தோசை,பூரி, பொங்கல்னு எல்லாமே நல்லாருக்கும்... அங்க என்ன ஸ்பெசல்னா... அந்த சாம்பார்ர்ர்ர்ர்ர்... செம்மையா இருக்கும் கைல வாங்கி குடிக்கலாம்... அதோட டெய்லி ஒரு ஸ்பெசல் சட்னி அரைப்பாங்க... எல்லாமே கெத்து காட்டும்பெரும்பாலும் மதுரைல காலை நேர டிபன கடைல சாப்பிடுர பழக்கம் மக்களுக்கு குறைவு , பெரும்பாலும் சைவக்கடைகள்தான் இருக்கும்..
.
11 மணிக்கெல்லாம் மத்தியாணச் சோத்த ரெடி பண்ணீருவாய்ங்க...
மதியத்த இங்க ஒவ்வொரு மாதிரி கொண்டாடலாம் அறுமுகம் மெஸ்னு ஒரு கடை தல்லாகுளம் பெருமாள் கோவில் கிரவுண்டுல ஓரமா இருக்கு... முன்னல்லாம் ரோட்டுக்கடையா இருந்தது இப்போ பக்கத்துலயே நல்ல ஹோட்டலா பெரிசாக்கி நடத்துராங்க.. அங்க மட்டன் பிரியாணி நல்லாருக்கும்.. இடிச்ச நாடுக்கோழி யோட சேத்து சொலட்டிக்கிட்டு அடிக்கலாம் பக்கத்துலயே அம்மா மெஸ், குமார் மெஸ்லாம் இருக்கு ஆனா அதெல்லாம் பேருக்காக வெளியூர்காரங்க வந்து சாப்பிடுர இடமா மாறிப்போச்சு...

அடுத்து கீழ்வெளிவீதி அம்சவள்ளி பிரியாணி... பிரியாணி கொஞ்சம் குழைவா இருக்கும்... அங்க விற்கிர கோழிச்சில்லரைன்னு ஒரு குழம்பு ஐட்டத்துக்கு 20 பேர் எப்பவும்வரிசைல நிப்பாய்ங்க... பிரியாணி மதியம் 2.30 க்கெல்லாம் காலியாகிடும்... அங்க ஒரு புரூட் மிக்சர் விப்பாய்ங்க பிரியாணிய ஒரு ஏத்து ஏத்திட்டு ஒரு மிக்சரபோட்டம்னா ஒரு பினிஷிங்குக்கு வந்துரும்.

அப்புறம் காமராஜர் சாலைல கிருஷ்ணன் மெஸ்னு ஒரு கடை இருக்கு அங்க நல்லி பிரியாணி மெரட்டலா இருக்கும்... அப்பிடியே அந்த நல்லி எலும்புல கொத்தா ஒட்டி இருக்க கறி நல்லி எலும்ப பிடிச்சு ரெண்டு ஆட்டு ஆட்டுனா அப்பிடியே பூவா உதிரும் பாத்துக்கங்க...அங்க புறா, காடை, முயல்னு எல்லா சைடீஸும் பட்டயக்கெளப்பும்..

நான் சொன்னா எல்லாக்கடைலயுமே சீரகச்சம்பா பிரியாணிதான்... இங்க பாஸ்மதி பிரியாணிய பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டாய்ங்க... ராவுத்தர் கடைல மட்டும் கிடைக்கும்...மதியச்சாப்பாட்டுக்குன்னே சில கடைகள் இருக்கு... தமிழ்சங்கம் ரோடு ஜானகிராம்ல அயிரமீன் குழம்பு வாங்கி சோத்துல குலைச்சு அடிச்சோம்னா எம்புட்டு திங்கிறோம்னே தெரியாம உள்ள இறங்கும்...3 தடவ கொழம்ப ஊத்தி திண்ணுபுட்டு மறுக்கா சோத்த வாங்கி அந்த எலும்பு ரசத்த ஊத்தி பிசைஞ்சு..கரண்டி ஆம்லேட்டோட வச்சு இழுத்தோம்னா... எப்டி இருக்கும்.... ஆங் அப்டி இருக்கும்

இதெல்லாம் மக்களுக்கு தெரிஞ்ச கடைகள்தான்... சில கடைகள் சிலருக்கு மட்டுமே தெரிஞ்சது.. அதுல ஒன்னுதான் காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு பக்கத்துலயே வெளிய தெரியாத அளவுக்கு அடக்கமா ஒரு குட்டிக்கடை லெட்சுமி மெஸ்னு ஒரு பழைய ஸ்டேண்டிங் போர்டு இருக்கும்..
அங்க சோத்துக்கு குடல் குழம்பு, கறிக்குழம்பு, மீன் குழம்பு , நாட்டுக்கோழிக் குழம்புன்னு ஒவ்வொன்னும் பெருமாள் கோயில் தீர்த்தம் மாதிரி கைய குழிவா வச்சு வாங்கிக் குடிக்கலாம் போல இருக்கும்... சோறுகள்ல குழம்புகள...குதூகலமா வெளாட விட்டு எடுத்து செங்கச்சூளைல மண்ண அப்புன மாதிரி ஒரு கட்டு கட்டலாம் ... சைட் டிஷ்லாம்  தரம்ம்ம்மா இருக்கும்... வக்காளி ஒரு ஊறுகா வைப்பாய்ங்க.... அதுல என்ன மாயம் செய்வாங்களோ... அம்புட்டுப்பயலும் கறிக்கொழம்புக்கே ஊறுகாயத்தொடு வெளுப்பாய்ங்க 

வெத்தலப் பேட்ட பக்கத்துல நூரி மெஸ்னு ஒரு பாய் கடை... நெய் சோறும் குடல் குழம்பும் அந்தரா இருக்கும்.

வடக்கு ஆவணி மூலவீதிலருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு போற சந்துகள்ல ரெண்டாவது சந்துல ஒரு செட்டியார் கடை இருக்கு... செட்டிநாட்டு ஸ்டைல்ல பயமுறுத்தி  விடுவாய்ங்க... அங்க புறா சாப்பிட்டுபாருங்க....
கீழவாசல் அருளானந்தம்னு ஒரு கடை இருக்கு... சோத்துச் சொர்க்கம்யா... திண்ணுட்டு அங்கனயே ஓரமா எடம் கிடைச்சா தூங்கீரலாம்னிருக்கும்.... சைட்டிஷ்லாம் மயக்குவாளுக..

சைவ சாப்பாட்டுக்கு பைபாஸ் ரோடு லட்சுமி மெஸ், டவுன்ஹால் ரோடுப்பக்கத்துல சபரீஸ்.. காமராஜர்சாலை சபரீஸ்னு.. பெரிய கடைகளும்...சைவச்சாப்பாட்டோட வெங்காய பக்கோடா வச்சு சாப்பிடுரது மதுரைக்காரனுக வழக்கம்...

மத்தியானத்துலயே பெரும்பாலான ஹோட்டல்ல புரோட்டாவும் குஸ்காவும் கிடைக்கும்...இருந்தாலும் அது டின்னர் ஸ்பெசல்ல அத தனியா சொல்றேன்.இப்ப சிறு தீனி மற்றும்

 டீ காபி கூல்ட்ரிங் பக்கம் போவோம்

தல்லாகுளம் விசாலம் காபி சாப்பிட்டுப் பாருங்க... சாப்டு அரைமணிநேரமானாலும் அந்த காபி கசப்பு தொண்டைல நிக்கும் அப்பிடி ஒரு டேஸ்ட்டு...

அடுத்து தண்ணி குடிக்கக் கூட மனசு வராது  ரயில்வே ஸ்டேசனுக்கு எதிர்ல ப்ரேமவிலாஸ்னு ஒரு மிட்டாய் கடை... ஸ்வீட் கடைதான் அந்தக்காலத்துலருந்து இருக்கதால மிட்டாய்க்கடைன்னே வழக்காகிடுச்சு... தாமரை இலைல அப்டியே பொசுக்கப் பொசுக்க (சுடச்சுட) அல்வா எடுத்து போட்டு குடுப்பாய்ங்க...ரெண்டா பிச்சு வாய்ல போட்டா....அப்டியே கரையும்யா  அங்க விக்கிர ஸ்பெசல் மிச்சர்தான் இங்க பாதி பேர் வீட்ல சோத்துக்கு வெஞ்சணம் (சைட்டிஷ்). அந்த அல்வாவ அங்கனயே நின்னு திங்கிர கூட்டமே எப்பயும் பத்துப் பேர் இருப்பாய்ங்க... அல்வா கடை வாசல்லயெட் மல்லியப்பூ வச்சு நாலஞ்சு அக்காக்க விக்கும்ங்க... எம்புட்டு நேக்கா யாவாரம் பண்ணுவாய்ங்க...தெரியுமா... ஏப்பா தம்பி அல்வா மட்டுமா வாங்கிட்டுப்போற... வீட்டுக்காரப்புள்ளைக்கி பூ வாங்கிட்டுப்போய்யான்னு அங்கயே நம்மள  வாடிவாசல்ல நிக்கிர காளை மாதிரி உசுப்பேத்தி விட்டுருவாய்ங்க.
..
நேதாஜி ரோட்டுல தங்கமயில் ஜுவல்லரிக்கு பின்னாடி நர்சிங்னு ஒரு ஸ்வீட் கடை இருக்கு ...நார்த் இந்தியன் ஸ்வீட்டுகள் அங்க மட்டுந்தான் திங்குரது... கச்சோரி அங்க நல்லாருக்கும்... மசால்பூரி பாணிப்பூரியும் அங்க நல்லாருக்கும்.

சாயங்காலத்துல கோவில சுத்தி நிறைய ஸ்னாக்ஸ் விப்பாய்ங்க ஷப்னம் வாசல்ல விக்கிர காரப்பொரிக்கு காத்துக்கெடக்கலாம்யா..பருப்பு போளி,பச்சப்பயிறு, காரப்போளி,சுண்டலு, உளுந்தம்பருப்புன்னு எல்லாத்தையும் அவிச்சு விப்பாய்ங்க... தள்ளுவண்டிகள்ல முள்ளு முருங்கக்கீர வடை அப்பப்ப போட்டுத்தருவாய்ங்க

ரெண்டுரூவா வடைக்கெல்லாம் சொத்தெழுதி வைக்கலாம்யா  ஜிகர்தண்டா... மதுரையோட அடையாளமாவே மாறிப்போச்சு ... விளக்குத்தூண் பேமஸ் ஜிகர்தண்டா கடை ஒன்னுதான் இருக்கும் அப்பல்லாம் இப்ப அவங்க நிறைய ப்ரான்சஸி குடுத்து அங்கங்க இருக்கு.. வெளியூர்கள்லயும் இருக்கு.
..
ஆனா நாங்க பெரும்பாலும் ஜிகர்தண்டாவ மஞ்சணக்காரத்தெரு முக்குல ஒரு பாய்விக்கிராப்புள அங்கதான் சாப்பிடுரது.... டேஸ்ட்டு நம்மள திண்னுரும்...  முனிச்சாலைலருந்து செயிண்ட்ஜோசப் கேர்ள்ஸ் ஸ்கூல் போற வழில போஸ்ட்டாபீஸு பக்கத்துல பத்திரீசியார் ஸ்கூலுக்கு முன்னாடி ஒரு பொட்டிக்கடைல க்ரேப்ன்னு கேட்டீங்கன்னா ஒரு ஜூஸ டம்ளர்ல மோந்து குடுப்பாய்ங்க...யோவ்வ்வ்வ் அதெல்லாம் குடிச்சுப்பாக்கனும்யா...  முனிச்சாலைல சிக்னல் பக்கத்துலயே புகழ்பெற்ற கோவிந்தராஜ் பருத்திப்பால் கடை ஒன்னு இருக்கு ஒரு டம்ளர் குடிச்சா பசியாரிடும்

டின்னர மதுரைல கொண்டாடலாம்யா...

புரோட்டா மதுரயோட ஊர் உணவு. கொத்து புரோட்டாவ ம்யூசிக்கோட கொத்துரது எங்கூர்ல ஆரம்பிச்சகுதான்... பெஸ்ட் புரோட்டான்னா அண்ணாநகர் நியூமாஸ் ஓட்டல் புரோட்டாதான் அங்க போடுர மடக்கு புரோட்டா பிச்சம்னா அப்பிடியே பூவா பிரியும் பாத்குக்கங்க...சால்னா அங்க சுமாராத்தான் இருக்கும்... அண்ணா பஸ்டாண்ட்லருந்து ஆவின் போற வழியில இருக்க கூரைக்கடை... உக்காந்து சாப்பிட ரெண்டு டேபிள்தான் நைட்டு கடை கூட்டம் அம்மும்... சுக்கா, குடலு , ரத்தப்பொரியலு, நாட்டுக்கோழி சாப்ஸு, நெஞ்சு சாப்ஸுன்னு அத்தனையுமே கெரங்கடிக்கும்ஆவின் பக்கத்துலருக்க பன் பரோட்டா கடைல 3 புரோட்டா வயிறு ரொம்பீரும்... தலைக்கறி ரோஸ்ட்லாம் தெறிக்கவிடும்...குழம்பெல்லாமே அடிச்சுத்தூக்கும்


தெற்குவாசல் சுகன்யால புரோட்டாவ வீசி வெளாடுவாய்ங்க டேஸ்ட்டும் அந்தல சிந்தலயா இருக்கும்  க்ராஸ்ரோடு கீர்த்தனா ஓட்டல்லாம் வெரட்டி வெரட்டி திங்கலாம்...

கரிமேடு மீன் மார்கெட் பக்கத்துல ஒரு குட்டிக்கடைல விருதுநகர் பொறிச்ச புரோட்டா கிடைக்கும்.. நொறுக்கிப்போட்டு கொழம்புகள கொலச்சு அடிச்சோம்னா விருதுநகர்லயே போய் தின்னுட்டு வந்த மாதிரி இருக்கும்  சைவக்கடைகளும் நைட்ல கலைகட்டும்.... கீழவாசல் நாகலெச்சுமி அனெக்ஸ்... ரேவதி டிபன் செண்டர்லயெல்லாம்... வெண்பொங்கல், தக்காளிப் பொங்கல்  ( வெரைய்ட்டி ரைஸ செள்ராஸ்ட்ரா கடைகள்ல அப்பிடித்தான் சொல்லுவாய்ங்க), புளியோதர, லெமன்சாதம்னு எல்லா சாதமும் டின்னருக்கு கிடைக்கும்...இந்த ஐட்டங்கள் ல செளராஸ்ட்ரா கட்சிகள அடிச்சுக்க முடியாது...  அங்கயெல்லாம் போனா  மிலிட்ரி முறைதான் எல்லா வெரெய்ட்டியும் ஒவ்வொரு வாய் சாப்பிட்டாலே போதும்னு எல்லாத்தையும் ஆர்டர் பண்ணி சுத்துல விட்டு சாப்பிடுவோம்.. பில்ல  சரியா பங்கு போட்டுக்குவோம் 

 மதுரையின் ரோட்டுக்கடைகள என்னவே முடியாது அதுல ஒன்னு ரெண்ட சொல்றேன்... அண்ணா நகர் அக்கா கடைன்னு ஒரு கடை 40 வருசமா இருக்கு... ஒரு மரத்தடில ஆரம்பிச்சது... இப்பவும் அதே மரத்தடில ஒரு வீட்டயே ஓட்டலா மாத்தி நடக்குது ... அங்க முட்ட சப்பாத்திக்கொத்து ஒன்னு போடுவாய்ங்க.... ருசி அள்ளும் பைபாஸ் ரோட்ல கேஎப்சி இருக்கு அது நமக்கு வேணாம் அதுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு அக்கா கடை போட்டிருக்கு... முட்டதோசயெல்லாம் பத்துக்கும் மேல தின்னுட்டு அடுத்த தோசைக்கு தட்ட நீட்டீட்டே நிப்போம்... அந்தக்கா போதும் போடான்னு வைய்யும்

யானைக்கல்தான் மதுரைக்கு தூங்கா நகர்னு பேர் வாங்கிக்கொடுத்த இடம், அங்க பரமேஸ்வரி , ராஜேஸ்வரின்னு ரெண்டு கடை எதிரெதிரா இருக்கு... சோறு சாம்பார் ரசம் மோர் பாயசம்னு நைட்டு 3 மணிக்கும் சாப்பிடலாம்... வெங்காயக்குடல் அங்க ரொம்ப நல்லாருக்கும். அடுத்து சுல்த்தான் கடைநைட்டு 3 மணி வரை பிரியாணி புரோட்டா சைட்டிஷ்னு  எல்லாம் கிடைக்கும்... வெளியூர்லருந்து சாப்பிடாம லேட்டா வரவங்களுக்கு அதுதான் புகழிடம்...நிறைய சொல்லாம விட்டது போலத்தான் இருக்கு... இன்னொரு நாள்ல விட்டத லிஸ்ட் பண்ணி சொல்றேன்.

கொரொனா லாக்டவும் முடிஞ்சு உலகம் நார்மல் மோடுக்கு வந்ததும் மதுரைக்கு வந்து சாப்பிட்டு பாருங்க மக்களே

Jeevan
ps
😍 டெலிஃபோன் டைரக்டரி மாதிரி தான் போடனும் 😂. இதுல ஜானகிராம், பழைய கோனார் கடை, முதலியார் கடை அப்புறம் சைவத்துக்கு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதி வட மேற்கு மூலைல ஒரு கடை பேர் மறந்து போச்சு. 😍😍
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.6.20

வத்தக் குழம்பு புராணம்


வத்தக் குழம்பு புராணம்

வத்தக் குழம்பு செத்த நாக்கையும் உயிர்ப்பிக்கும் என்பார் அறுசுவை ஆறுமுகக் கவிராயர்..

உணவே மருந்து மருந்தே உணவு என்னும் தமிழரின் பாரம்பரியச் சமையலின் தலைமை மருத்துவ குணம் கொண்ட குழம்பு தான் இந்த வத்தக் குழம்பு.. சுவையிலும் தனித்துவத்தில் இருப்பது இதன் பெரும் சிறப்பு.!

வத்தக்குழம்பின் மகாத்மியங்களை சொல்லத்தான் இப்பதிவே.!

#சுண்டைக்காய்_வத்தல்_குழம்பு, #மணத்தக்காளி, #பிரண்டை, #பூண்டு, #வெண்டை, #எண்ணெய்_கத்திரிக்காய்,  #கொத்தவரங்காய் போன்ற வகைகள் வத்தக்குழம்பிற்கு மிகச் சிறந்த வகைகள்..

வெற்றிலை போட்டு வைக்கும் வத்தல் குழம்பும் உண்டு.. இதில் #டாப்_1_இடம்_சுண்டைக்காய்_வத்தக்குழம்புதான்.! சிவாஜி - பத்மினி போல பர்ஃபெக்ட் ஜோடி.!

முதலில் வத்தக் குழம்பிற்கு வைக்கும் சாதம் முக்கியம்.! குழையவேக்கூடாது..
MN நம்பியார்போல மிக விறைப்பாகவும் அதே நேரம்
SV ரங்காராவ்போல கொஞ்சம் பதமாகவும் இருக்கவேண்டும்!

குழம்பை சொத சொதன்னு சோற்றில் ஊற்றாமல் பிரட்டுவதுபோல பட்டும் படாமல் பிசைவது மிகச்சிறந்த முறை ஆகும்.

அதிலும் சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிறகு..வத்தக் குழம்பை விட்டு பிசைந்து சாப்பிட்டால்!ஆஹஹாஹா! வத்தக்குழம்பு எவ்வளவு கெட்டியாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது.. என் பாட்டி வீட்டில் வைக்கும் வத்தக் குழம்பு எல்லாம் அம்மியில் அரைத்த துவையல் போல ஐஸ்க்ரீமின் ஒரு ஸ்கூப் போல மிக கெட்டியாக இருக்கும்..

இதற்கு தொட்டுக் கொள்ள வெறும் சுட்ட அப்பளமே தேவாமிர்தமாக இருக்கும்.!
பூசணிக்காய் பால்கூட்டு, தயிர் பச்சடி, புடலங்காய் பருப்பு கூட்டு, வாழைத்தண்டு பருப்பு கூட்டு, இப்படி பருப்பு சேர்த்து செய்யும் எல்லா கூட்டும் வத்தக் குழம்பிற்கு பெஸ்ட் காம்போ.. அவியலும் பிரமாதமாக இருக்கும்..

வேலி பிரண்டையை உரசி என் அம்மா வைக்கும் வத்தக் குழம்பு அருமையான மருத்துவ குணம் கொண்ட ஆரோக்கியமான உணவாகும்.. அதே போல.. மணத்தக்காளி போட்டும் வைப்பார்கள் வயிற்று கோளாறுகள் ஒரே நாளில் காணாமல் போய்விடும்..

அல்சர் இருப்பவர்கள் வாரத்தில் இரு முறை சாப்பிடலாம்.. ஒரு முறை கோவை வந்திருந்த போது என் பழைய எம்.டி. சுவாமிநாதன் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது கொங்கு ஸ்டைல் வதங்கல் கத்திரி வத்தக்குழம்பு சாப்பிடும் பெரும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்! அடர் வயலட்டில் மேனியெங்கும் எண்ணெய் மினுமினுங்க நன்கு எண்ணெயில் வதங்கிய முழு கத்திரிக்காய்கள்.. குலாப் ஜாமூன் போல புளிக்குழம்பில் மூழ்கியிருக்க.. கூடவே சுண்டைக்காய் வத்தலும் போட்டு நான் சொன்ன துவையல் பதத்தில் மேடை(சை)க்கு வந்தது..

சாம்பாருக்கு பிறகு 4முறை வத்தக்குழம்பையே சந்திரமுகி ரஜினி போல ரிபீட்டு கேட்டு கேட்டு வாங்கினேன்.!

அடுத்து வெங்காய வத்தக்குழம்பு.. இதுவும் மருத்துவ குணம் மிக்க அஜீரணத்தை கட்டுப்படுத்தும் குழம்பு இதற்கு வடகம், பொரித்த அப்பளம், சில நேரங்களில் மாங்காய் தொக்கு என பல காம்போக்கள் உண்டு..

பாகற்காய் வத்தக்குழம்பு எனது விருப்ப உணவுகளில் ஒன்று.. கொஞ்சம் இனிப்புள்ள பரங்கிப் பூசணி, கொத்தவரங்காய், அவரை, செள செள, காய் கூட்டுகள் இதற்கு..பக்கா பொருத்தமாக இருக்கும்..

எந்த வத்தக்குழம்பாக இருந்தாலும் என்ன காய் போட்டாலும் சுண்டைக்காய் சேர்த்து போடுதல் வத்தக்குழம்பிற்கான லட்சணங்களில் ஒன்று..

இந்த வத்தக்குழம்பில் எல்லாம் இன்னொரு வசதி.. தயிர் சாதத்திற்கு இதைத் தொட்டுக் கொள்ள பிரமாதமாக இருக்கும்.. ஒரே ஒரு முறை அதை சுவைத்துவிட்டால் எப்போதும் விடமாட்டீர்கள்.!

கால மாற்றங்களில் ஓட்டல்களில் செக்கச் செவேலென இன்று ஒரு கிண்ணத்தில் வைத்து தரப்படுவதெல்லாம் வத்தக் குழம்பே அல்ல..

சீகைக்காயை அந்த காலத்தில் கரைப்பார்களே அந்தக் கலரில் இருப்பதே அக்மார்க் வத்தக்குழம்பு.

சூடான சாதத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் 1ஸ்பூன் விட்டு.. பிசைந்து அதை சுட்ட அப்பளத்துடன் சாப்பிடும் சுகமே சுகம்.!

இன்னூன்னு சொல்ல மறந்துட்டேனே..!

#முதல்நாள்_செய்த_வத்தக்குழம்பை_பத்துநாள்_வச்சு_வச்சு_சாப்பிட்டால்_பரமசுகம்...

ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்..!!!

அப்போ நாளைக்கு உங்க வீட்டில் வத்தக் குழம்பு தானே.!
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.3.20

புளியோதரை புராணம் - எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது


புளியோதரை புராணம் - எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது 

ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் “வச்சு வச்சு” சாப்பிட்டது புளி சாதத்தைத் தான்.! ஒரு வாரம் ஆனாலும் கெடாது.! அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில் நம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே! என்பது 100% உண்மை.!

எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.! உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் உள்ள உணவு புளியோதரை.. இதன்  நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்துவிடலாம்.. இதன் புராணம் மிகச் சுவையானது!

புளியோதரைக்கு மணமும் நிறமும் இரு கண்கள்.. முதலில் புளியோதரைக்கு வடிக்கும் சாதத்தின் பதம் மிக முக்கியம்.. அது புதுமணத் தம்பதியர்  போல பின்னிப் பிணைந்து குழைந்து இராமல்.. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிகள் போல சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே சாலச் சிறந்தது.. அடுத்து நிறம்.!

புளியோதரை ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச்சிறப்பு.! சாதத்தை வடித்து ஆறவிட்டு பயன்படுத்துதல் புளியோதரைக்கு சரியான சமையல் முறையாகும்.. அடுத்து எண்ணெய்.. நீங்கள் பில்கேட்ஸ் குடும்பமாக இருந்தாலும் எண்ணெய்க்கு பதிலாக நெய் எல்லாம் சேர்க்கக்கூடாது.. நல்லெண்ணெய் என்னும் ஏக பத்தினியை மட்டும்..

ஏற்றுக் கொள்வான் இந்த புளியோதரை என்னும் ராமச்சந்திர மூர்த்தி!அதிலும் செக்கில் ஆட்டிய புனிதவதி எண்ணெய் எனில் எந்தச் சீரும் வாங்காமல் சிறப்பாக இணைவான் இவன். அடுத்து புளி.. நேற்று முளைத்த புதுப்புளி கூடாது.!  பழம் புளியே புளிக் காய்ச்சல் செய்வதற்கு மிகச் சிறந்தது..

புதுப்புளியில் புளியோதரை புளிக்கு பிறந்த பூனையாகிவிடும்.! பழம் புளியில் தான் அது புலியாகும்! அடுத்து மிளகாய்.. நல்ல தரமான வதக்கும் போதே நெடியேறும்.. காரசார காய்ந்த மிளகாய் தான் பெரும் சிறப்பு,  அடுத்து இதற்கு மிகுந்த சுவை சேர்ப்பது நிலக்க டலைப் பருப்புகள்.!

நிலக்கடலையும் புளியோதரையும் நல்ல நண்பர்கள்! நல்லெண்ணெய் கமகமக்க ஒரு வாய் அள்ளிச் சுவைக்கையில் வாயில் அரைபடும் புளியோதரையின் நிலக்கடலை பத்து பாதாம் பருப்புகளுக்குச் சமம்.! புளியோதரைக்கு மிகப் பொருத்தமான சாம்பார் எதுவெனில் துவரம் பருப்பு போட்ட மெல் இனிப்பில் சின்ன வெங்காயம்..

அல்லது சிவப்பு பூசணி சாம்பார் தான்! கத்திரிக் காய் சாம்பாரை விட எண்ணெய்/ புளிக் கத்திரிக்காய் வதக்கல் இன்னும் பிரமாதம்.. இஞ்சி, பருப்பு, புதினா, கடலை, நவதானியம், இப்படி தேங்காய் சேர்க்காது புளி சேர்த்து அரைக்கும் துவையல்கள் நீண்ட நாள் உபயோகத்திற்கு.. பொட்டுக் கடலை தேங்காய் வைத்து அரைக்கும் துவையல் இன்ஸ்டண்ட் சுவர்க்கம்.!

மதுரையில் சித்திரான்னங்களுக்கு பேர் போன சவுராஷ்டிரா சமூக நண்பர்களுடன் பழகிய போது அவர்கள் வீட்டில் செய்யும் புளியோதரைக்கு கருப்பு கொண்டைக் கடலை சுண்டலை தந்தார்கள்.. அசுவாரஸ்யாமாக சாப்பிட்டால் சுவை ஆஹா.. அள்ளியது..! கூடவே இஞ்சி மிளகாய் சட்னி வேறு!

முருங்கை, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் தன்மையால் அக்காய்களைக் கொண்டு வைக்கும் சாம்பார்கள் நல்ல புளியோதரை சாப்பிடும் உன்னத உணர்வை கெடுத்துவிடும்.. என் அம்மா இதற்கு மாங்காய் போட்டு சாம்பார் வைப்பார்.. இது புள்ளத்தாச்சி பெண்களுக்கு பிடிக்கும்டா தம்பி என்பார்!

அம்மாவுடன் வீட்டில் அடிக்கடி வந்து  பேசும் சில கர்ப்பிணி அக்காக்களின் ரகசியம் அப்போது தான் தெரிந்தது.! ஆயிரம் தான் புளியோதரை வீட்டில் செய்தாலும் பெருமாள் கோவில் புளியோதரையின் தரமே வேறு.. ஒரு பெண் புகுந்த வீட்டில் இருந்து தன் தாய்வீட்டிற்கு 1 மாதம் விடுமுறையில் வந்தது போல..

புளியோதரையின் தாய்வீடு பெருமாள் கோவில்.! அங்கு வந்து விட்டாலே அதற்கு ஒரு தனிக் கு (ரு)சி வந்துவிடும்.! திருப்பதி,  மயிலை, திருவட்டார் முதலிய பெருமாள் கோவில் புளியோதரைகளுக்கு நான் ஹேமநாத பாகவதர் பாண்டிய நாட்டிற்கு அடிமை என எழுதித் தந்தது போல எழுதித் தரச் சொன்னால்..

கொஞ்சமும் தயங்காமல் மனதார எழுதித் தருவேன். என் பாட்டியின் ஸ்டைல் சிறிது சுண்டை வத்தல் நன்கு வதக்கி அதை இடித்துத் தூவுவது.! பெருமாளே வந்து கையேந்தும் பக்குவத்தில் மிகப் பிரமாதமாகச் செய்வார் புளியோதரையை புண்ணியச் சோறு என்பார்! கல்யாண சமையல் சாதம் என்ற மாயாபஜார் படப் பாடல் வரிகளில்..

 “புளியோதரையில் சோறு மிகப் பொருத்தமாய் சாம்பாரு” போல அருமையான புளியோதரை கிடைத்துவிட்டால் நாம் எல்லாருமே கடோத்கஜன்கள் தானே!!!

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.10.19

அன்றும் இன்றும்: படித்ததில் மனம் விட்டு சிரித்தது


அன்றும் இன்றும்: படித்ததில் மனம் விட்டு சிரித்தது

அடுப்புச் சாப்பாடு

“விறகு மண்டிக்குப் போய் விறகு வாங்கிட்டு வரனும்” என்பார் அம்மா.

அப்பா விறகு மண்டிக்கு கிளம்புவார். பின்னாலேயே நானும் அண்ணன்களும் போக வேண்டும். நாங்கள் தான் டெலிவரி செய்யும் மகன்கள். அமேசன்கள்.

விறகு மண்டியில் பெரிய பெரிய மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு ஆள் எப்போது பார்த்தாலும் கோடாலி வைத்து விறகுகளை பிளந்து கொண்டே இருப்பார். ஏன் என்ற கேள்வி ஒரு தடவை கூட அவர் கேட்டதில்லை.

“ரெண்டு குண்டு விறகு வைங்க” என்பார் அப்பா.

குண்டு என்பது ஒரு எடை அளவு. கடைக்காரரும் விறகை எடுத்து தராசில் வைப்பார்.

நான் அந்த goondas act ஐ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.

தராசு என்பது பெரிதாக இருக்கும். குருவாயூர் கோவிலில் துலாபாரம் போடும் தராசை விட பெரிதாக இருக்கும். Large scale தராசு. வலது பக்கம் விறகு கட்டைகளை வைக்க வைக்க அந்த தட்டு இந்திய ரூபாயின் மதிப்பு மாதிரி கீழே இறங்கும்.

“ஈர விறகு எல்லாம் வைக்காதீங்க...போன தடவையே எதுவும் சரியா எரியல்லே” என்பார் அப்பா. இது அவரின் சுய சிந்தனை இல்லை. மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை ஒப்பித்து கொண்டிருக்கிறார்.

“எடுத்துகிட்டு போய் கொஞ்சம் காய வைச்சா நல்லா எரியும்” என்பார் கடைக்காரர்.

‘காயமே இது பொய்யடா’ என்று தெரிந்தும் அந்த விறகை வாங்குவதை தவிர வேறு வழியில்லை. ஊரில் ஒரே ஒரு விறகு கடை தான் இருந்தது. வீரப்பன் வேறு அவரின் கம்பெனியை அப்போது incorporate செய்திருக்கவில்லை.

இப்போது ஈரம் விளைந்த விறகை வீட்டுக்கு எடுத்துப் போக வேண்டும்.

கருடாழ்வார் மாதிரி நம்முடைய இரண்டு கைகளையும்  நீட்ட வேண்டும். அதன் மேல் விறகுகளை அடுக்கி வைப்பார்கள். விறகுக்கு கீழே கையில் ஒரு சாக்கு போட்டு விடுவார்கள். கையில் விறகு குத்தாமல் இருக்க அது ஒரு சாக்கு அப்ஸார்பர்.

நானும் அண்ணனும் தெருவில் பிரதர் வலம் வருவோம்.

கால் மணி நேரத்தில் விறகுகுண பாண்டியர்கள் வீடு போய் சேர்ந்து விடுவோம். இப்போது இன்ஸ்பெக்ஷன் நடக்கும். அம்மா ஒரு சரியான water diviner.

“இன்னும் விறகுல தண்ணி இருக்கே. ஒரே ஈரம்” என்பார்.

அம்மாவும் பாவம் தான். அந்த விறகை வைத்து எப்படி சமைப்பார்கள்?

விறகு காய வைக்கும் படலம் ஆரம்பிக்கும். மொட்டை மாடியில் விறகு காயப் போட வேண்டும். அதற்கும் நாங்கள் தான் packers and movers. நல்ல வேளை. காவல் காக்க வேண்டாம். காக்கா தூக்கிப் போகாது.

அப்போதெல்லாம் விறகு அடுப்பு விநோதமாக இருக்கும்.  சாணி பூசி மொழுகி சாணி ராணியாக இருக்கும். மேலே வீபூதி பட்டை வேறு இருக்கும். மண் அல்லது சிமெண்டினால் செய்திருப்பார்கள். அடுப்பின் மேல் மூன்று இடங்களில் உருண்டையாக புடைத்துக் கொண்டிருக்கும்.

இந்த மெயின் அடுப்புக்கு பக்கத்தில் அல்லக்கை மாதிரி இன்னொரு அடுப்பு இருக்கும். வட்டமாக ஒரு துவாரம் இருக்கும். மெயின் அடுப்பிலிருந்து சூடு இந்த அடுப்புக்கு இலவசமாக வரும். இந்த அடுப்பிற்கு கொடி அடுப்பு என்று பெயர்.

இந்த auxiliary அடுப்பு பொதுவாக ரசம் செய்யத் தான் உபயோகப்படுத்தப் படும்.

சமைக்கும் போது சதா சர்வகாலமும் அடுப்பு பக்கத்திலேயே ஜெகன் மோகினி பேய் மாதிரி இருக்க வேண்டும். விறகை உள்ளே தள்ளி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அவ்வப்போது விறகு அனைந்து புகை மூட்டம் வரும்.

சச்சீன் படத்தில் ஜெனிலியா வரும் போதெல்லாம் திரை முழுக்க புகை வருமே அந்த மாதிரி கிச்சன் முழுக்க புகை வியாபிக்கும். இப்போது விறகை ஊதுகுழல் வைத்து ஊத வேண்டும்.

“டேய். வந்து கொஞ்சம் அடுப்பை ஊதுடா?’ என்பாள் அம்மா.

அண்ணன் போய் ஊதுவான்.

“இன்னும் கொஞ்சம் காசு போட்டு நல்ல விறகா வாங்கியிருக்கக் கூடாதா? சரியான கஞ்சம்” என்று அம்மா புலம்புவாள்.

குழல் ஊதும்  அண்ணனுக்கு பஞ்சப் பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.

குழல் ஊதுவதும் ஒரு டெக்னிக். கொஞ்சம் வேகமாக ஊதி விட்டால் ஆஷ் துரை கிச்சன் முழுக்க பறக்க ஆரம்பித்து விடுவார். வீடு முழுக்க சாம்பல் பள்ளத்தாக்கு ஆகிவிடும்.

விறகிலிருந்து வரும் புகையெல்லாம் சுவற்றில் fixed deposit ஆகும். கிச்சன் சுவர் முழுக்க கறுப்பாக இருக்கும். அந்த கருப்பை எல்லாம் எடுத்தால் Go back daddy என்று நூறு தடவை கறுப்பு கொடி காட்டலாம்.

அப்போதெல்லாம் குண்டு பல்பு தான். நாற்பது வாட்ஸ் பல்பு எரியும். அந்த வெளிச்சம் கரப்பான் பூச்சிகளுக்கே சரியாகப் போய் விடும்.

விறகு அடுப்பில் இன்னொரு பிரச்சினை. வெங்கலப் பானை அடியெல்லாம் கருப்பாகி விடும். அம்மா ராத்திரி உட்கார்ந்து தேய்த்துக் கொண்டிருப்பாள். அது ஒரு பெரிய night mare. அந்த காலத்தில் பிக் பாஸ் vessel cleaning team எல்லாம் கிடையாது. மும்தாஜும் சென்றாயனும் வந்து பாத்திரம் தேய்த்து கொடுக்க மாட்டார்கள்.

பாத்திரத்தில் கரி பிடிப்பதை தடுக்க ஒரு உபாயம் உண்டு. வெங்கலப் பானையின் அடியில் அரிசி மாவைக் கரைத்து பூசி விடுவாள் அம்மா. அந்தக்காலத்திலேயே Firewall கண்டு பிடித்திருந்தாள் அம்மா.

சாதம் பொங்கி வரும் போது கஞ்சி overflow ஆகும். அதை அப்படியே விட்டால் அடுப்பு அணைந்து விடும். கஞ்சிக்கு ஏது கண்ட்ரோல்  வால்வ்? ஒரே வழி. விறகை பிடித்து வெளியே இழுக்க வேண்டியது தான்.

சமையல் முடிந்து விட்டால் அடுப்பை அணைக்க வேண்டும்.

அதுவும் ஒரு டெக்னிக் தான்.

விறகை வெளியே இழுக்க வேண்டும். அதன் மீது லேசாக தண்ணீரை தெளிக்க வேண்டும்.

‘தண்ணீர் தெளித்து விட்டாச்சு’ என்றால் இனிமேல் பயன் இல்லை என்று அர்த்தம். ஆனால் இந்த விறகில் தண்ணீர் தெளிப்பதே மறுபடியும் உபயோகப்படுத்தத்தான். 

சூடு ஆறிய பிறகு சாம்பலை சேகரிப்பாள் அம்மா. பாத்திரம் தேய்க்க அது தான். அம்மாவின் அம் பார்.

கிச்சனை விட்டு அம்மா வெளியே வரும் போது தலையெல்லாம் சாம்பல் துகள்கள் இருக்கும். கண்கள் சிவப்பாக கன்றிப் போயிருக்கும்.

ஆனால் தட்டில் வெள்ளை வேளேர் என சாதமும் சாம்பாரும் வந்து விழும்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று என் வீட்டில் இருக்கும் கிச்சனைப் பார்க்கிறேன்.

மேடையில் இருக்கும் kitchen accessories ஐ நோட்டம் விடுகிறேன்.

கேஸ் ஸ்டவ் – piped gas உடன், மைக்ரோவேவ் ஓவன், ரைஸ் குக்கர், இண்டக்ஷன் ஸ்டவ், காபி மேக்கர், சப்பாத்தி மேக்கர், ப்ரெட் டோஸ்டர், சாண்ட்விச் மேக்கர், எலெக்ட்ரிக் கெட்டில்.

இவ்வளவு சாதனங்கள் இருக்கின்றன. வேண்டிய அளவு ப்ளக் பாயிண்ட் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு ப்ளக் பாயிண்டிலும் செல்போன் சார்ஜர் நிரந்தரமாக குடியேறியேறியிருக்கிறது.

ஏனோ எனக்கு அம்மாவின் நினைவு வருகிறது. விறகு அடுப்பு வைத்து புகைகளுக்கு மத்தியில் பத்து பேருக்கு தவல வடை செய்து போட்டது ஞாபகம் வருகிறது.

இதோ இப்போதும்  கிச்சனிலிருந்து குரல் கேட்கிறது.

“நைட் டிபனுக்கு என்ன செய்யட்டும்?”

ஒரே ஒரு வித்தியாசம்.

கேட்டது சமையல்காரம்மா.
------------------------------------------------------------------
படித்ததில் ரசித்தது: பகிர்வு.
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.10.19

சின்ன வெங்காயமும் உங்கள் உடல் நலமும்!!!!


சின்ன வெங்காயமும் உங்கள் உடல் நலமும்!!!!

*சின்ன வெங்காயத்தின் சிறப்புகள்: உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?*

வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு இரண்டு வகை இருப்பது பலருக்கும் தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இவைகளில் மருத்துவ குணம் நிறைந்தது… சின்ன வெங்காயம்தான்!

ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்று தின்று  வெந்நீர் குடித்தால்  ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்றுவிடும்.. கூடவே… நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால், உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது… முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம்.

பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா… ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டில் அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்வது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிசத்தாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வைத்துக் கொண்டால்  பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அவ்வப் பொழுது  நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும்.

இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்றப்ப… ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா… தலைமேல பலன் கிடைக்கும்.

தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா… காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்
---------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.9.19

சட்டமும், நீதியும், மனிதாபிமானமும்!!!!


சட்டமும், நீதியும், மனிதாபிமானமும்!!!!

இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான வழக்கொன்றை சந்தித்தது.........!!!

வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.

வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்........:

"நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.

இதை கேட்டதும் நீதிபதி.........:

"என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாய் (100 அமெரிக்க டாலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்டத் தவறினால் இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."

இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து......

"இங்குள்ள ஒவ்வொருவர்மீதும் நான் ஐம்பதுனாயிரம் ருபாய் (5 டாலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன். காரணம் !!!! இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன்."
என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார். இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.

இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) 10 இலட்சம் ருபாயை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.!!!!!!!

சட்டம், மனிதாபிமானம், நீதி ஒன்றுக்கொன்று கைகோர்த்து தர்மத்தை நிலைக்கவைத்துவிட்டன !

நீதிபதி என்றால் இவர்போல சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒருங்கே கையாள வேண்டும்.முன்னுதாரணமான இந்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்......
--------------------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.1.19

சமையல் கலைஞர் என்ன சொல்கிறார் - வாருங்கள் கேட்போம்!!!!


சமையல் கலைஞர் என்ன சொல்கிறார் - வாருங்கள் கேட்போம்!!!!

*போஜன திலகம் கோவை மணி ஐயர் வழங்கும் கிச்சன் டிப்ஸ்...*

● மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்...... ஊச்......... என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.

● வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.

● வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.

● அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அருகம்புல்லில் அதிகம்.

● ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும். கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.

● மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.

● ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்..

● பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

● வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

● சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

● சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

● தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

● உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

● கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

● ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

● தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

● பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

● இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

● தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

● மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.

● பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

● வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

● தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

● எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

● உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

● தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

● துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.10.18

இனிப்பான செய்தி!!!!


இனிப்பான செய்தி!!!!

இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி.

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க  படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்  சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளைs சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

This is true .. Can we  avoid

நண்பர்களே இன்றய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம் பணத்திற்காக நம் பாமர மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......!

(முக்கியம்) படித்துவிட்டு பகிருங்கள்..
------------------------------------------------
படித்து அதிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.8.18

வெந்நீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்


வெந்நீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்

*வெந்நீரின் பயன்கள்*

இதை அதிக அளவில் பகிர்தல் அனைவரும் பயன் பெற உதவும்

ஒரு ஜப்பானிய  மருத்துவர் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.
 
1 மைக்கிரேன்

2 உயர் இரத்த அழுத்தம்

3 குறைந்த இரத்த அழுத்தம்

4 மூட்டு வலி

5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்

6 கால்-கை வலிப்பு

7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்

8 .இருமல்

9 .உடல் அசௌகரியம்

10. கொலு வலி

11 ஆஸ்துமா

12 ஹூப்பிங் இருமல்

13 .நரம்புகள் தடுப்பு

14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான
 நோய்கள்

15.வயிற்று பிரச்சினைகள்

16 .குறைந்த பசியின்மை

17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி

*சுடு நீர் பயன்படுத்துவது எப்படி?*

காலையில் எழுந்து, வெரும் வயிற்றில்  சுமார் 2 தம்ளர் சூடான நீர் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர்  குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.

*குறிப்பு:*

 *தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும்  சாப்பிட வேண்டாம்.*

*சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்*

30 நாட்களில் நீரிழிவு நோய்

30 நாட்களில் இரத்த அழுத்தம்

10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்

9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்

6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு

10 நாட்களில் ஏராளமான பசி

10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்

✔ மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்

15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்

30 நாட்களில் இதய நோய்கள்

✔ 3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்

✔ 4 மாதங்களில் கொழுப்பு

✔ 9 மாதங்களில்    கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம்

4 மாதங்களில் ஆஸ்துமா

* குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!! குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

* குளிர் நீர்  இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. *இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்*

*இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது* கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீர் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.

* குளிர்ந்த நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.

*தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*

நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும்.

-டாக்டர் டி. மென்சா-அசரே
--------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.18

பஜ்ஜி மகாத்மியம்!!


பஜ்ஜி மகாத்மியம்!!

மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’
– இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல
ஒரு திருப்தி!

மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி
போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு!

அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும்
என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்!
அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி
காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு
நல்ல கும்பகோணம் டிகிரி காப்பியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும்
பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல!
பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வாழ்நாள்
முழுவதும் ஆடிய தலையுடனேயே இருப்பது பஜ்ஜியின்
நீண்ட கால வெற்றியின் ரகசியம்!

மாலை மூணு மணியளவில் கடலை மாவு கரைபடும்போதே களைகட்டி விடும் கிச்சன், உருளை, வாழை, கத்தரி,
வெங்காயம், செள செள எனப்படும் பெங். கத்தரிக்காய்,
எல்லாம் சில்லு சில்லாய் வெட்டப்பட்டு (வெங்காயம் ரிங்கு
ரிங்காய் பிரியாமல், தின் ஸ்லைசுகளாய் சீவுவது ஒரு
தனிக் கலை –ன்னும் பஜ்ஜிக் கலை), பஜ்ஜி மாவில் முக்கி
எடுக்கப் பட்டு, பதமாய்க் கொதிக்கும் புது
எண்ணையில் (முதல் நாள் சுட்ட எண்ணை உதவாது  சில கடைகளில் பஜ்ஜி வாய்க்கு வந்தவுடன் காட்டிக் கொடுத்து
விடும்! மெதுவாய் விடப்படும் - சிறு குமிழிகளுடன் பொறிந்து, பொன்னிறம் ஆனவுடன் சட்டுவத்தில் ( அதாங்க, ஓட்டைகள் நிறைந்த கரண்டி) எடுத்து பாத்திரத்தில் போட்டு விட்டால்
பஜ்ஜி ரெடி!

கொஞ்சம் கரகரப்பாகவும், அதிகம் உப்பாமலும், உள்ளிருக்கும் காயின் வடிவத்தில் சூடாக வந்து விழும் பஜ்ஜியே, உன்னை ஆராதிக்கிறேன்! அப்படியே சூடாகக் கடித்துவிட, முழுங்கவும் முடியாமல், துப்பவும் மனமில்லாமல் வாய் வழியே புஸ் புஸ்
என்று அனல் காற்று வெளியே விட, தின்னும் பஜ்ஜி ஜோர்! பஜ்ஜியைப் பிய்த்து, காயையும், பஜ்ஜி உறையையும் தனித்
தனியே ஊதி ஊதித் தின்பவர்கள் பஜ்ஜியால் சபிக்கப்
பட்டவர்கள்!

காரம் கம்மியாக, திப்பி திப்பியாக தேங்காய்ச் சட்னியும்,
கொஞ்சம் வெங்காய சாம்பாரும் கூட இருந்தால் கோடி சுகம். சாஸோ, கெச்சப்போ ஆபத்துக்குப் பாவமில்லேன்னாலும், இரண்டாம் பட்சம்தான்!

(யாரு, டாக்டரா? எண்ணை கூடாதாமா? .. தண்ணீரில்
பொறியாதே சரி, சரி சாயந்திரம் கிளினிக்குலெ வந்து பார்க்கிறேன்னு சொல்லுங்க ரெண்டு பஜ்ஜியோட!)

ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் கிடைக்கிறது  கொஞ்சம் இட்லி/
தோசை மாவைச் சேர்த்துக் கொண்டால் பஜ்ஜி கரகரப்பாக இருக்கும் -

ஓரிரண்டு மிமி தடிமனில் சிம்ரன் மாதிரி ஸ்லிம்மா சீவின
காய்கள், நல்ல பஜ்ஜிக்கு நளபாகத் தரம் தரக்கூடியவை!
ரொம்ப நேரம் எண்ணையில் விடக் கூடாது; ஆரஞ்சுக்கும், சிவப்புக்கும் நடுவான கலர் உசிதம் அதிகம் சூளையில் சுட்ட கருஞ்செங்கல் நிறம் காசிக்குப் போகாமலேயே பஜ்ஜியை
ஒதுக்கி வைத்துவிடும்! மேற்படி ’டிப்ஸ்’ அகில உலக ’பஜ்ஜி
ரிசர்ச் கமிட்டி’ யினால் பொது மக்கள் நலம் கருதி
பரிந்துரைக்கப் படுகின்றன!

‘மானசரோவரி’ல் கிராமத்து சாலையோர டீக்கடையில்
பஜ்ஜி பொறித்துப் போடுவதை சுவையாக எழுதியிருப்பார் அசோகமித்திரன்!

வாழைக்காயை நீளவாட்டில் சீவிப் போடும் பஜ்ஜியை
சின்ன நியூஸ் பேப்பர் தாளில் வைத்துக் கொடுப்பார்கள்
அதில் அழுத்தி எண்ணையை உறிஞ்சிய பிறகு கொஞ்சம்
உலர்ந்த பஜ்ஜி – டீயுடன் அதற்கு மக்களிடையே கிராக்கி அதிகம்!

கேரளாவின் நேந்திரம் பழ பஜ்ஜி ‘பழம்புழுங்கி' ('பழம்பொறி' ?)
ஓர் அசட்டுத் தித்திப்புடன் ரொம்பவும் பிரபலம். ஒன்று
தின்றாலே, ஒரு நாள் முழுக்க பசிக்காது!.

காரம் கம்மியான ஸ்பெசல் மிளகாய் பஜ்ஜி  கடற்கரையில்
மிகவும் பிரசித்தம். பஜ்ஜியின் இக்காலப் பரிணாம வளர்ச்சி!
பிரட் பஜ்ஜி கூட கிடைக்கிறது

‘தூள்பஜ்ஜி’ என்ற சொல்வழக்கு காரைக்குடி பக்கங்களில்
உண்டு பஜ்ஜிக்கும், பக்கோடாவுக்கும் இடைப்பட்ட
ஒரு வஸ்து பொட்டலமாகக் கட்டி விற்பார்கள் – செட்டிநாட்டு சுவையுடன்!

எண்பதுகளில் பாண்டிபசார் சாந்தா பவனில் அறுபது
பைசாவுக்கு ஒரு ப்ளேட் ஆனியன் பஜ்ஜியும் (மூன்று),
நாற்பது பைசாவுக்கு ஒரு ஸ்ட்ராங் காபியும் குடித்த நினைவு
இன்று ஒரு ரூபாய்க்கு சின்ன வெங்காயம் ஒன்று கிடைக்குமா என்பதே சந்தேகம்!

இன்று ‘நொந்து நூடுல்ஸ்’ ஆவதின் அன்றையப் பிரயோகம் ‘பஜ்ஜியாய்ட்டேம்பா!’!

வாழ்க ப.நே.ம.க.!! (பஜ்ஜி நேசிக்கும் மனிதக் கட்சி!).

நன்றி: மாலி சதாசிவம்.
------------------------------------------
படித்ததில் ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.3.18

சமையலுக்கு சுவை ஊட்டும் பொருட்கள்!


சமையலுக்கு சுவை ஊட்டும் பொருட்கள்!

கறிச்சுவையூட்டிகள் (List of Provisions)

சமைக்கும் கறிகளின் சுவை, கறிச்சுவையூட்டிகளைப் பொருத்தே அமைகின்றன. அதாவது கறியில் சேர்த்துக்கொள்ளப்படும் சுவையூட்டும் பொருற்களே, ஒரு கறியின் சுவையை நிர்ணயிப்பவை என்றும் கூறலாம் . இக் கறிச்சுவையூட்டிகளை "பலச்சரக்குப் பொருற்கள்" என்றும் "வாசனைப்பொருற்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.

இக் கறிச்சுவையூட்டிகளின் ஆங்கிலப் பெயர்களும், அதற்கான தமிழ் பெயர்களும் இங்கே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. இதனூடாக ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் சொற்கள் என்ன என அறிந்துக்கொள்ளவும், தமிழ் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்கள் (பெயர்கள்) என்ன என அறிந்துக்கொள்ளவும் முடியும். அப்பெயர்களுக்கு உரிய கறிச்சுவையூட்டிகளின் தோற்றம் எப்படி இருக்கும் என அறிந்துக்கொள்ள விரும்புவோர், குறிப்பிட்ட சுவையூட்டியின் ஆங்கிலப் பெயருடன் கூகுள் ஆண்டவரைக் கேட்டால் படத்துடன் விளக்கம் தருவார்!.


List of Provisions...

இல: ஆங்கிலம் தமிழ்
1 Acorus calamus வசம்பு
2 Almondsuhashuhasi பாதாம்பருப்பு
3 Anise seed சோம்பு/பெருஞ்சீரகம்
4 Asafetida பெருங்காயம்
5 Basil leaves துளசி இலை
6 Bay leaves புன்னை இலை
7 Bishop’s weed ஓமம்
8 Black cumin கருஞ்சீரகம்
9 Black pepper கருமிளகு
10 Butter வெண்ணைய்
11 Butter milk மோர்
12 Capsicum குடைமிளகாய்
13 Cardamom ஏலம்
14 Cashew nut முந்திரிப்பருப்பு
15 Cheese பாலாடைக்கட்டி
16 Chili powder மிளகாய் தூள்
17 Chilies மிளகாய் (கொச்சிக்காய்)
18 Cinnamon Sticks கறுவாப்பட்டை
19 Cloves கிராம்பு
20 Coconut milk தேங்காய் பால்
21 Coriander leaves கொத்தமல்லி இலை
22 Coriander powder கொத்தமல்லி தூள்
23 Crumb powder றஸ்குத் தூள்
24 Cubes வால்மிளகு
25 Cumin சீரகம்
26 Curds தயிர்
27 Curry leaves கறிவேப்பிலை
28 Curry powder (Masala) கறித்தூள் (பலச்சரக்குத்தூள்)
29 Daun Pandan leaves இரம்பை இலை
30 Dried chilies காய்ந்த/செத்தல் மிளகாய்
31 Dried ginger சுக்கு
32 Dried hottest chilies உறைப்புச்செத்தல் மிளகாய்
33 Dried shrimp உலர் சிற்றிறால்
34 Fennel பெருஞ்சீரகம்
35 Fenugreek வெந்தயம்
36 Gallnut கடுக்காய்
37 Garlic வெள்ளைப்பூண்டு, உள்ளிப்பூண்டு
38 Ghee நெய்
39 Gingelly oil நல்லெண்ணை
40 Ginger இஞ்சி
41 Gingili (seasame seeds) எள்ளு
42 Green cardamom பச்சை ஏலம்
43 Green chilli பச்சை மிளகாய்
44 Ground nut oil கடலையெண்ணை
45 Honey தேன்
46 Jaggery சக்கரை
47 Lemon எழுமிச்சை
48 Lemongrass வெட்டிவேர்/எழுமிச்சைப்புல்
49 Lemongrass powder வேட்டிவேர் தூள்
50 Licorice அதிமதுரம்
51 Long pepper திப்பிலி/ கண்டந்திப்பிலி
52 Mace சாதிபத்திரி
53 Milk பால்
54 Mint leaves புதினா
55 Musk கஸ்தூரி
56 Mustard கடுகு
57 Nigella-seeds கருஞ்சீரகம்
58 Nutmeg சாதிக்காய்
59 Oil எண்ணை
60 Onion வெங்காயம்
61 Palm jiggery பனங்கருப்பட்டி
62 Pepper மிளகு
63 Phaenilum மணிப்பூண்டு
64 Pithecellobium dulce (Madras thorn) கொடுக்காபுளி
65 Poppy கசகசா
66 Raisin உலர்திராட்சை
67 Red chilli சிகப்பு மிளகாய்
68 Rolong கோதுமை நெய்
69 Rose water பன்னீர்
70 Saffron குங்கமம்
71 Sago சவ்வரிசி
72 Salad onion செவ்வெங்காயம்
73 Salt உப்பு
74 Sarsaparilla நன்னாரி
75 Small chilli சின்ன மிளகாய்
76 Small onion சின்ன வெங்காயம்
77 Star anise நட்சித்திரச் சோம்பு
78 Sugar சீனி
79 Tail pepper வால்மிளகு
80 Tamarind புளி
81 Tomato தக்காளி
82 Turmeric மஞ்சல்
83 Turmeric powder மஞ்சல் தூள்
84 Vermicelli சேமியா
85 Vinegar காடி (வினிகர்)
86 White onion வெள்ளை வெங்காயம்


குறிப்பு:

1.
Cumin seeds - சீரகம்
Black pepper seeds - கருமிளகு

Cumin seeds, Black pepper seeds போன்ற பெயர்களின் "seeds" எனும் சொல்லும் ஆங்கிலத்தில் பின்னொட்டாக இணைந்து பயன்படுகின்றன. ஆனால் அவற்றை முறையே "சீரக விதைகள், கருமிளகு விதைகள்" எனத் தமிழில் கூறும் வழக்கம் இல்லை. சுருக்கமாக "சீரகம், கருமிளகு" என்று கூறும் வழக்கே உள்ளது. எனவே நானும் அவ்வாறே எழுதியுள்ளேன்.

2.
Cinnamon sticks - கறுவாப்பட்டை/ இலவங்கப்பட்டை

"Cinnamon Sticks" எனும் சொல்லில் "Sticks" எனும் சொல் தடிகள் அல்லது குச்சிகள் என்றே பொருள்படும். ஆனால் தமிழில் "பட்டை" எனும் சொல்லே பின்னொட்டாக புழக்கத்தில் உள்ளது.

3.
Coriander leaves கொத்தமல்லி இலை
Curry leaves கறிவேப்பிலை

Leaf  இலை
Leaves  இலைகள்

மேலுள்ள சொற்களில் “Leaves” எனும் சொல் "இலைகள்" என பன்மையாகவே பயன்படுகிறது. இருப்பினும் அவற்றை "கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை" என ஒருமையில் கூறும் வழக்கே நம் தமிழில் உள்ளது.

4.
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய கேரள மாநிலமான "கொச்சின்" துறைமுகத்தில் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்ட பொழுது, அந்த காயின் பெயர், தமிழரின் பேச்சி வழக்கில் "கொச்சின் + காய் = கொச்சிக்காய்" என அழைக்கும் வழக்கானது எனும் ஒரு கூற்று உள்ளது. இப்போதும் இலங்கையில் சில இடங்களில் மிளகாய் என்பதை "கொச்சிக்காய்" என்று அழைப்போர் உள்ளனர். சிங்களவரிடம் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. 

ஆக்கம்: அன்புடன் அருண் HK Arun
அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.3.18

நீங்களும் உங்கள் உணவுப் பழக்கமும்!!!


நீங்களும் உங்கள் உணவுப் பழக்கமும்!!!

எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும்?

காலை உணவு :

🍚 காலை உணவை 7 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். அப்போது தான் எளிதாக செரிமானம் ஆகும். 10 மணிக்கு மேல் காலை உணவை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

🍚 காலை உணவு என்பது, அந்த நாளைத் தொடங்குவதற்கான சக்தியைத் தரக்கூடியது. காலை உணவு, மூளைக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. உடலின் இயக்கத்துக்கு உதவுகிறது.

🍚 அவசரமாகக் கிளம்பும் சூழலில், காலை உணவைப் பலரும் தவிர்ப்பார்கள். இப்படித் தவிர்ப்பதால், அவர்களுக்கு தலைவலி, செரிமான கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

🍚 காலை உணவைத் தவிர்ப்பவர்கள், மதிய உணவை அதிகமாக எடுத்துக்கொள்வார்கள். இதனால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

🍚 காலை உணவில் இருக்க வேண்டிய உணவு வகைகள் தோசை, சப்பாத்தி, பொங்கல், காய்கறி உப்புமா, பூரி.

மிட் மார்னிங் :

🍚 காலை மற்றும் மதிய உணவு வேளைக்கு நடுவில் உள்ள மிட்மார்னிங் நேரமான 10:45 முதல் 11:30 மணி நேரமாகும். இந்த நேரத்தில் பழச்சாறுகள், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

🍚 டீ, காபி போன்றவற்றை மதிய உணவு வேளைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகப் பருகலாம்.

மதிய உணவு :

🍚 மதிய உணவை 12 மணி முதல் 1.30 மணிக்குள் சாப்பிட வேண்டும். அப்போது தான் எளிதாக செரிமானம் ஆகும். 3 மணிக்கு மேல் மதிய உணவை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

🍚 மதிய உணவுக்கும், காலை உணவுக்கும் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். அப்போது தான் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரியாகப் பராமரிக்கப்படும். இதனால் அதிகப் பசி மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

🍚 சரியான நேரத்துக்குச் சாப்பிட்டால் வாயுக்கோளாறு, நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

🍚 மதிய உணவில் இருக்க வேண்டிய உணவுகள் கீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள், அசைவம், அரிசி சாதம், சாம்பார், கூட்டு.

மாலை ஸ்நாக்ஸ் :

🍚 மாலையில் 4 முதல் 5 மணிக்குள் ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். ஸ்முத்தீஸ், ஹெல்த்தி ஸ்நாக்ஸ், பழச்சாறுகள், காய்கறி சாலட், தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

இரவு உணவு :

🍚 இரவு உணவை 7 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

🍚 இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே சாப்பிட வேண்டும். இல்லையெனில், தொப்பை, உடல்பருமன், செரிமானப் பிரச்சனை ஆகியவை ஏற்படும்.

🍚 சாப்பிட்டவுடன் தூங்கினால், உணவின் கலோரிகள் ஆற்றலாக மாறாமல், உடலில் சேர்ந்து உடல்பருமனுக்கு வழிவகுக்கும்.

🍚 இரவு உணவில் இருக்க வேண்டியவை இட்லி, இடியாப்பம், புட்டு, சப்பாத்தி, தோசை வகைகள்.

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.12.17

செட்டிநாட்டு சமையல் கலையில் சில பதார்த்தங்கள் உங்களுக்காக!


பால் பணியாரம்
---------------------------------------------------------------------------------------------------------------
செட்டிநாட்டு சமையல் கலையில் சில பதார்த்தங்கள் உங்களுக்காக!

23 வகை செட்டிநாட்டு ரெசிபி

'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் கண் முன்னே விரியும். கும்மாயம், இனிப்பு சீயம், ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை என்று இந்த  'செட்டிநாடு சமையல்  சாப்பிடுவதை சுகானுபவமாக மாற்றும் இந்த ஸ்பெஷல் அயிட்டங்களில்... சுண்டைக்காய் பச்சடி, சிவப்பரிசி புட்டு, கீரை மண்டி போன்றவை... உடல் நலத்தை உறுதிப்படுத்தும்.

1
மிளகாய் சட்னி

தேவையானவை: காய்ந்த மிளகாய் - 15 அல்லது 20, புளி - சிறிய எலுமிச்சையளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.

குறிப்பு: சட்னியின் மேலே எண்ணெய் நிற்குமாறு இருக்க வேண்டும். ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும் இதற்கு 'ரோஜாப்பூ சட்னி’ என்றே பெயர். பணியாரம், இட்லி, தோசைக்கு சிறந்த காம்பினேஷன்.
---------------------------------------------------
2
வெள்ளை பணியாரம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுந்து - 4 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்தை சேர்த்து சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு உப்பு, சர்க்கரை சேர்த்து நைஸாக அரைக்கவும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த 10 நிமிடத்தில் செய்யவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷன்!
-------------------------------------------------------
3
கல்கண்டு வடை

தேவையானவை: உளுந்து - ஒன்றரை கப், பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், கல்கண்டு - ஒரு கப், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். முக்கால் பதம் அரைத்தவுடன் பொடித்து வைத்த கல்கண்டை சேர்த்துக் கரைக்கவும் உளுந்தை அரைக்கும்போது, தண்ணீர் சிறிது கூட சேர்க்கக் கூடாது. அரைத்து முடித்ததும் மாவு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும் (தீயை மிதமாக எரிய விட வேண்டும்).

குறிப்பு: கல்கண்டு சேர்ப் பதால், தீ அதிகமாக எரிந்தால், வடை கறுத்து விடும்.
-------------------------------------------------------
4
கும்மாயம்

தேவையானவை: வெள்ளை முழு உளுந்து - ஒரு கப், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - கால் கப், கருப்பட்டி (அ) வெல்லம் - ஒன்றரை கப், நெய் - கால் கப்.

செய்முறை: உளுந்து, அரிசி, பாசிப்பருப்பை தனித்தனியே வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். இவற்றை ஒன்றுசேர்த்து மாவாக அரைக்கவும். கருப்பட்டி (அ) வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய் விட்டு, சூடானதும், கரைத்து வைத்துள்ளதை கொட்டி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே மீதி நெய்யைச் சேர்த்து, மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
-------------------------------------------------------------
5
இனிப்பு சீயம்

தேவையானவை:

பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

பூரணம் செய்ய: தேங்காய் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை: தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போக கிளறவும். அதனுடன் கரைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி ஆறவிடவும். இதுதான் பூரணம்.

பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்துக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, பின் நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கிளறி வைத்துள்ள பூரணத்தை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூரணத்தை அரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்.... சுவையான இனிப்பு சீயம் தயார்!
-----------------------------------------------------------------
6
ஜவ்வரிசி ஊத்தப்பம்

தேவையானவை: இட்லி அரிசி - 4 கப், உளுந்து - ஒரு கப், ஜவ்வரிசி - கால் கிலோ, வெங்காயம் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும். மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லைச் சூடாக்கி, மாவை கெட்டியாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
-------------------------------------------------------------------
7
குழி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுந்து - அரை கப், ஜவ்வரிசி - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கறி வேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும். அரைக்கும்போது, 10 நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 - 6 மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்தால்.... சுவை யான குழி பணியாரம் ரெடி.
-----------------------------------------------------------------------
8
கருப்பட்டி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கருப்பட்டி, வெல்லம் - தலா கால் கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் வெல்லம், கருப்பட்டியை போட்டு, தேவையான நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கம்பிப்பாகு பதத்தில் பாகு காய்ச்சவும். இதை பச்சரிசி மாவில் ஊற்றி நன்கு கிளறவும். மேலே நெய் ஊற்றி, ஆறியதும் துணியினால் மூடி வைக்கவும். இந்த மாவை ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். பணியாரம் செய்யும் முன், தேவைக்கேற்ப மாவில் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அகலக் கரண்டியில் மாவை எடுத்து, ஒவ்வொன்றாக ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு எடுத்து வைத்தால், கருப்பட்டி பணியாரம் தயார்.
குறிப்பு: நகரத்தார் வீட்டு பிள்ளையார் நோன்பில் கட்டாயம் இந்த பணியாரம் இடம் பெறும்.
------------------------------------------------------------------------
9
கந்தரப்பம்

தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுந்து - கால் கப், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் - இரண்டரை கப், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டி ஆறவிடவும். அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சுத்தம் செய்து ஊறவிடவும். ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மாவை எடுக்கும் முன் ஏலக்காய்த்தூள், வெல்லத் தண்ணீர் சேர்த்து, அரைத்து எடுக்கவும். மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து, மெதுவாக விடவும். ஒரு பக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பி, சிவக்க விட்டு எடுக்கவும். இதை ஒவ்வொன்றாகத்தான் தயார் செய்ய வேண்டும்.
---------------------------------------------------------------------
10
ஐந்தரிசி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், ஜவ்வரிசி, ரவை - தலா அரை கப், பொடித்த வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, பருப்பு மூன்றையும் ஒன்றாகவும்... ரவை, ஜவ்வரிசியை தனித்தனியாகவும் ஊறவிடவும். ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் அரிசிகள், பருப்பை அரைக்கவும். பாதி அரைத்தவுடன் ரவை, ஜவ்வரிசி, நீரில் கரைத்து வடிகட்டிய வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வட்டமாக ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறம் வேகவிடவும். ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். தீயை மிதமாகத்தான் எரியவிட வேண்டும். பொறுமையாக செய்தால், சூப்பர் சுவையில் அசத்தும் இந்த ஐந்தரிசி பணியாரம்.
--------------------------------------------------------------------
11
பால் பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண் ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்க்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, எண்ணெயை வடியவிடவும். இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். பாலைக் காய்ச்சி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும் பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது. பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.
-----------------------------------------------------------------------
12
பாசிப்பருப்பு புட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு - 2 கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லிகளாக வேக வைத்து எடுக்கவும். வெந்த இட்லிகளை எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். உதிர்த்த மாவில் வெல்லக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதில் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்... சத்தான பாசிப்பருப்பு புட்டு ரெடி!
-------------------------------------------------------------------
13
பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை - உருண்டை செய்ய: கடலைப்பருப்பு - முக்கால் கப், துவரம்பருப்பு - கால் கப், சோம்பு, சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

குழம்புக்கு: தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, கசகசா - தலா அரை டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் - ஒன்றை டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 5.

செய்முறை: உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: உருண்டைகளை வேக வைக்காமலும் போடலாம். எண்ணெயில் பொரித்தும் போடலாம்.
----------------------------------------------------------------------
14
கத்திரிக்காய் மசாலா

தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, சோம்பு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை நான்காக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... பட்டை, சோம்பு, பிரியாணி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேவையான உப்பு, நீர் சேர்த்து வேகவிடவும். வெந்து, நீர் சுண்டியதும் இறக்கி பரிமாறவும்.
------------------------------------------------------------
15
வெண்டைக்காய் மண்டி

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, வேக வைத்த கொண்டைக்கடலை - ஒரு கப், அரிசி களைந்த நீர் - 2 கப், புளி - எலுமிச்சையளவில் பாதி, பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 15 (உரித்தது), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு பல் - 10, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயை பெரிது பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் தாளித்து, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலை, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
------------------------------------------------------------------
16
மாங்காய் வற்றல் ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், மாங்காய் வற்றல் - 6, வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகு - சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், பூண்டு - 6 பல், காய்ந்த மிளகாய் - 3, கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை குழையாமல் வேக வைக்கவும். மாங்காய் வற்றலை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டம்ளர் நீர் விட்டு வேக வைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், புளித் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வேறொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், மிளகு - சீரகத்தூள், தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: மாவற்றல் மிகவும் புளிப்பாக இருந்தால், புளியின் அளவைக் குறைக்கவும். வற்றலில் உப்பு இருப்பதால் உப்பையும் பார்த்து சேர்க்கவும்.
--------------------------------------------------------------
17
கத்திரிக்காய் திரக்கல்

தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - கால் கப், கசகசா, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: கத்திரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து, அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
---------------------------------------------------------------
18
தண்ணிக் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - அரை கப், புளி - சிறிய எலுமிச்சையளவு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உப்பு - தேவையான அளவு.
பொடி செய்ய: காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் - சிறிதளவு, பட்டை - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 4, பூண்டு - 4 பல், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் அரைக்கவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை நிறைய தண்ணீர் விட்டு வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். இதில் பாசிப்பருப்பை சேர்த்து வேக விடவும். குழைய வெந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வறுத்து அரைத்த பொடி, உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மற் றொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு ஆகியவற்றை தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.
-------------------------------------------------------------------
19
வறுத்துப் பொடித்த சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். காய் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். வறுத்து பொடித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு - மிளகாய் பொடியை சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்த வுடன் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும். இது... இட்லி, தோசையுடன் பரிமாற ஏற்ற சாம்பார்.
------------------------------------------------------------------
20
செட்டிநாட்டு அவியல்

தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பட்டை - சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, பூண்டு - 3 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து... வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்... ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.
-----------------------------------------------------------------
21
ஜவ்வரிசி பாயசம்

தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய் - ஒன்று (துருவி பால் எடுக்கவும்), முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான நீர் ஊற்றி ஜவ்வரிசியை வேகவிடவும் (கட்டி தட்டாமல பார்த்துக் கொள்ளவும்). வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, ஜவ்வரிசியுடன் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்.

குறிப்பு: தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்க விடக் கூடாது. பொதுவாக பால், சர்க்கரை சேர்த்து ஜவ்வரிசி பாயசம் செய்வார்கள். செட்டிநாட்டில் வெல்லம் - தேங்காய்ப் பால் சேர்ப்பது ஸ்பெஷல்.
-----------------------------------------------------------------
22
சுண்டைக்காய் பச்சடி

தேவையானவை: சுண்டைக்காய் - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 4, புளி - கோலி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போடவும். துவரம்பருப்பை மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சுண்டைக்காய் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய் வெந்ததும், துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: வயிற்றில் ஏற்படும் பூச்சி தொல்லையை நீக்கும் அருமருந்து இது.
-----------------------------------------------------------------
23
கீரை மண்டி

தேவையானவை: கீரை - ஒரு கட்டு (முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை இவற்றில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம்), சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 2, அரிசி கழுவிய நீர் - 2 கப், தேங்காய்ப் பால் - கால் கப், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது), பூண்டு, காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, அரிசி கழுவிய நீர் சேர்க்கவும். கொதி வந்ததும் உப்பு சேர்க்கவும். கீரை வெந்ததும் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கவும் (தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்கவிடக் கூடாது).

குறிப்பு: வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாக உதவும் உணவு இது. 'மண்டி இருந்தால், உண்டி பெருக்கும்’ நீங்கள் கேட்ட பல காரங்கள் அனைத்தும் கொடுத்து இருக்கிறேன்.
=======================================================
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!