மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label குறுங்கதைகள். Show all posts
Showing posts with label குறுங்கதைகள். Show all posts

25.7.18

ஞானம் பிறந்த கதை!


சிறுகதை

ஞானம் பிறந்த கதை!
SP.VR.சுப்பையா, கோயமுத்தூர்
-------------------------------------------------
அடியவன் எழுதி மாத இதழ் ஒன்றில் இந்த மாதம் வெளியான சிறுகதை. நீங்கள் படித்து மகிழ்வதற்காக இன்று அதை வலை ஏற்றியுள்ளேன்
-------------------------------------------------
அதிரவைத்த இளம் சந்நியாசி!

இளஞ்செழியன் எனும் பெயரையுடைய குறுநில மன்னன்
ஒருவன் இருந்தான்.அவனுடைய நாடு நன்றாக இருந்தது.
அவனது ஆட்சியில் நாட்டு மக்களும் நன்றாக இருந்தார்கள்.

அனால் அவன் நன்றாக இல்லை. அதாவது அவனுடைய குடும்ப வாழ்க்கை நன்றாக இல்லை!

என்ன காரணம்?

அவனுக்கு இரண்டு தேவியர்கள். அதாவது இரண்டு மனைவிகள். பதின்மூன்று குழந்தைகள். நித்தமும் அரண்மனையில்
சண்டைகள். சச்சரவுகள்.

வீட்டில் வெட்டு குத்து நடக்கவில்லை. மற்றதெல்லாம் நடந்தது. குடும்பத்தில் ஒற்றுமையும், இணக்கமும் இல்லை!!

மனிதன் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் - நீங்களே சொல்லுங்கள்?

அவர்கள் பதினைந்து பேர்களுமாகச் சேர்ந்து அரசனைத்
தினமும் துவைத்துக் காயப்போட்டுக் கொண்டிருந்தார்கள்.

வெளி ஆட்களாக இருந்தால், அரசன் துன்பம்
விளைவிப்பவர்களை அல்லது குழப்பம் விளைவிப்பவர்களை உள்ளே தூக்கிப் போட்டிருப்பான். மனைவி மக்களை
தண்டித்து எப்படி உள்ளே போட முடியும்?

அரசன் தவித்தான். சுருண்டான். மயங்கினான். கவலை கொண்டான். தலைவலி. தூக்கமின்மை. என்று பல பிரச்சினைகளுக்கு ஆளாகினான். அனைத்தும் அவனை அனுதினமும் வாட்டின!

எதிலும் அவனால் தன்நினைவோடு இருக்க முடியவில்லை.
செயல் பட முடியவில்லை!

ஒரு நாள் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இது பற்றிக்
குறிப்பிட்டு, அழுகாத குறையாக தன்னுடைய மனக்
குறைகளை வெளிப்படுத்தினான்.

நண்பர் அதற்கு ஒரு யோசனை சொன்னார். ஞானானந்தா
என்று இளம் துறவி ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் உபதேசம் கேட்டுக்கொண்டால், எல்லாப்பிரச்சினைகளும் ஓடிப்போய்
விடும் என்றும் சொன்னார். அவரைத்தான் பார்த்ததில்லை
என்றும், ஆனால் நிறையக் கேள்விப் பட்டிருப்பதாகவும்
சொன்னார். அதோடு அந்த இளம் துறவி தற்சமயம் பல்லவ
நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் செய்தியையும் சொன்னார்.

அரசன் தன்னுடைய முதலமைச்சரை அழைத்து, தகவலைச் சொல்லி, உடனே புறப்பட்டுச் சென்று, எப்படியாகினும், அந்தத் துறவியை அழைத்து வரச் சொன்னான். முதன்மந்திரியும்,
 நான்கு வீரர்கள் துணையுடன், உடனே புறப்பட்டுப் போனார்.

ஆனால் சென்றது வீணாகி விட்டது. துறவி வருவதற்கு மறுத்து விட்டார்.

கிராமம், கிராமமாகத் தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அரசர்களைவிடத்தான்
மக்களையே அதிகம் விரும்புவதாகவும், இறையருளைச்
சொல்லி, மக்களை நல்வழிப் படுத்துவதே தனது தலையாய
வேலை என்றும் சொன்னார். தனி மனிதர்களுக்குத் தான்
முக்கியம் கொடுப்பதில்லை என்றும் சொன்னார்.

மந்திரி காலில் விழாத குறையாகக் கெஞ்சியும், அவர் வரச் சம்மதிக்கவில்லை. அதோடு தான் ராமேஸ்வரம் வரை கால்
நடைப் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், திரும்பும்
வழியில், அழைத்தால், வந்து பார்ப்பதாகவும் சொன்னார்.
அதற்கு ஒரு ஆண்டு காலம் ஆகுமென்றும் கூறிவிட்டார்.

மந்திரி திகைத்துப் போய்விட்டார்.

இந்தக்காலமாக இருந்தால், நடப்பதே வேறு. சாமியாரை ஏதாவது ஒரு செக்சனில் பிடித்து அள்ளிக் கொண்டு வந்திருக்கலாம். அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அனைவருமே பக்திமான்கள். தர்ம சிந்தனை உடையவர்கள், அதோடு
தன்னுடைய சக்தியால் சாமியார் எதையாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு இருந்தது.

அதனால் மந்திரி தோல்வியுடன் திரும்பி விட்டார். அரசனிடம் எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியது என்ற
முடிவையும் எடுத்திருந்தார்.

இரண்டு வாரங்களில் துறவி வருவதாக உறுதி அளித்திருக்கிறார் என்று அரசனிடம் ஒரு பொய்யைச் சொல்லி நிலமையைச் சமாளித்தார். இரண்டு வாரங்கள் கழித்து அரசன் நினைவு
படுத்திய போது, ஒரு வீரனை அனுப்பி விசாரித்துக் கொண்டு வரச்சொல்வதாககூறி, மீண்டும் அதே பொய்யைச் சொல்லி
மேலும் ஒருமாத காலத்தை ஓட்டினார்.

இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தன.

மிகுந்த கோபத்திற்கு ஆளான அரசன், முதன் மந்திரியைக் கண்டித்துச் சொல்லி விட்டான். "என்ன சேய்வீர்களோ தெரியாது. இன்னும் பதினைந்து தினங்களுக்குள் அந்தத் துறவி இங்கே இருந்தாக வேண்டும். இல்லை என்றால் உங்கள் பதவியை
நீங்கள் இழக்க நேரிடும்!"

முதன் மந்திரிக்கு மிகவும் இக்கட்டாகிவிட்டது. இக்கட்டில்
சிலரது மூளை அற்புதமாக வேலை செய்யும். மந்திரியின்
மூளையும் அப்படியொரு வேலையைச் செய்தது.

ஒரு போலிச் சாமியாரை உருவாக்கி, அரசன் முன் கொண்டு
வந்து நிறுத்திட மந்திரி முடிவு செய்தார். அதை உடனடியாகச் செயல் படுத்தவும் முனைந்தார்.

இந்தக் காலம் போல பத்திரிக்கைகள், புகைப்படங்கள், தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாததால் போலியான
ஒருவனைக் கொண்டு வந்து நிறுத்தினால் யாருக்குத் தெரியப்போகிறது?

சாந்தமான முகக்களை மற்றும் தோற்றமுள்ள இளைஞனைத்
தேடி, மந்திரி பக்கத்துக் கிராமங்களில் அலைந்து பார்த்தார்.

அவருடைய நல்ல நேரம், கிராமம் ஒன்றில் மணியக்காரராக
இருந்த பெரியசாமியின் மகன் முத்தழகன் தோதாகக்
கிடைத்தான்.

மந்திரியின் சொல்லத் தட்ட முடியாமல் சாமியார் வேடத்திற்கு ஒப்புக்கொண்ட முத்தழகன் நடிக்க வேண்டிய இடத்தைக் கேட்டவுடன் பயந்து விட்டான்.

"அய்யா, அரசர் கண்டு பிடித்து விட்டால் பிரச்சினையாகி
விடுமே!" என்றான்.

உடனே மந்திரி தக்கதொரு பதிலைச் சொல்லி அவனத் தேற்றினார்.

"அதெல்லாம் பிரச்சினை வராது. அப்படியே வந்தாலும் என் பெயரைச் சொல்லி, என் கட்டாயத்தினால்தான் நடித்தாகச் சொல்லிவிடு. வருவதை நான் பார்த்துக் கொள்கிறேன்"

முத்தழகன் ஒப்புக்கொண்டான். வேறு வழி? ஒப்புக்கொள்ளாவிட்டால் முதன் மந்திரியை எதிர்கொள்வது எப்படி?

------------------------------------------------------------------------------------------------
முத்தழகனுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கபெற்றது. தலைமுடி மழுங்க வழிக்கப் பெற்றது. கழுத்தில் ஒரு பெரிய உருத்திராட்ச மாலை அணிவிக்கப்பெற்றது. அதோடு தலைப் பகுதியிலும் வட்ட வடிவமாக ஒரு உருத்திராட்ச மாலை அணிவிக்கப் பெற்றது. பட்டையாக விபூதி பூசப்பெற்றது. சிவப் பழமாகக் காட்சியளித்தான்.

அரசன் என்னென்ன கேள்விகள் கேட்பான். அவற்றிற்கு
என்னென்ன பதில்கள் அளிக்க வேண்டுமென்றும் பயிற்சி கொடுக்கப்பெற்றது. அதோடு தெரியாத கேள்விகளுக்கு நமச்சிவாய அல்லது திருச்சிற்றம்பலம் என்று இறைவனின்
பெயரை மட்டும் சொல்லும்படி பணிக்கப்பெற்றிருந்தது. மொத்தமாகப் பயிற்சி அளிக்கப் பெற்றிருந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள்!
---------------------------------------------------------------------------------------------
ஒரு நாள் அதிகாலை நேரத்தில், நகருக்கு வெளியில் இருந்த மண்டபம் ஒன்றில் அவன் உட்கார வைக்கப்பட்டான்.
அரண்மனை பல்லக்கு ஒன்று அனுப்பட்டது. அதிலேறி அவனும் அரண்மனைக்கு வந்து சேர வேண்டும் என்பது ஏற்பாடு!.

இப்போது அவனுடைய பெயர். தவத்திரு ஞானானந்தா சுவாமிகள்!

அதற்கு முதல் நாளே, சுவாமிகள் எழுந்தருள உள்ள விஷயம் அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டதால், அரசனும் அவரை வரவேற்க மகிழ்வுடன் தயாராக இருந்தான்.

அரண்மணை முழுவதும் நன்நீரால் கழுவப்பெற்று, நல்
மலர்களால் அலங்கரிகப்பட்டிருந்தது.

அரண்மணை வாசலில் தன் தேவியர்கள் மற்றும் புத்திர சிகாமணிகளுடன் நின்று கொண்டிருந்த அரசன் ஆவலுடன் சுவாமிகளின் வரவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தான்.

நடந்தது என்ன?

அது மிகவும் சுவாரசியமானது!

என்ன சுவாரசியம்?

தொடர்ந்து படியுங்கள்

அரண்மனை வாசலில் தன் தேவியர்கள் மற்றும் புத்திர சிகாமணிகளுடன், சுவாமிகளின் வரவை ஆவலுடன் எதிர்
நோக்கிக் காத்துக்கொண்டிருந்தான் அல்லவா மன்னன்?

அவனை அதிக நேரம் காக்க வைக்காமல், இளம் துறவியை ஏற்றிக்கொண்டு வந்த பல்லக்கும் வந்து சேர்ந்தது.

இளம் துறவி பல்லக்கில் இருந்து இறங்கியவுடன், பட்டத்து யானையின் மூலம், பெரிய மலர்மாலை ஒன்று அவருக்கு அணிவிக்கப்பெற்றது.

அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத காரியம் ஒன்றை மன்னன் செய்தான்.

ஆமாம், திடீரென்று துறவியின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.

மன்னனே காலில் விழுந்து வணங்குவதைப் பார்த்த அங்கிருந்த தேவியர்கள் முதலிட்ட அரச குடும்பத்தினர் அனைவரும் விழுந்து வணங்கினார்கள்.

முதன் மந்திரி முதல் யானைப்பாகன் வரை அங்கிருந்த மற்றவர்களும் விழுந்து வணங்கினார்கள்.

முதலில் அதிர்ந்து போய்விட்ட துறவி, சற்று சுதாகரித்துக் கொண்டு, "நமச்சிவாய" என்று சொல்லி அனைவரையும் வாழ்த்தினார்

மன்னன் எழுந்து வழிகாட்ட, துறவியார் அரண்மனைக்குள் நுழைந்தார். உடன் அரச குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டர்கள். முதல் மந்திரியும், அரண்மனைத் தலைமைக் காவலரும் உள்ளே சென்றார்கள். வேறு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை!

பிரதான அரங்கத்தில் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பெற்று,
ஒரே ஒரு சிம்மாசானம் மட்டும் போடப்பட்டிருந்தது.

துறவியாரை, அதில் அமரும்படி கேட்டுக்கொண்டான் மன்னன்.

அவர் அமர்ந்தவுடன், அவர் அருகில், அவருடைய காலடி அருகே, தரையில், அதாவது ரத்தினக்கம்பளத்தின் மீது மன்னன்
அமர்ந்து கொண்டான்.

மற்ற அனைவரும் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டார்கள்.
அந்தக் காட்சியைக் கண்ணுற்ற நமது துறவியாருக்குச் சற்று அச்சமாக இருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.

பின்னே இருக்காதா? அரசனுக்கு 50 வயது. துறவிக்கோ இருபத்தியோரு வயதுதான். அதோடு பதவியில் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம். எல்லாம் விதியின் விளையாட்டுப்போலும் என்று துறவி மனதில் நினத்துக்
கொண்டார்.

உண்மை தெரிந்தால் தலை போகுமா? அல்லது கால் போகுமா? என்று தெரியாத  சூழ்நிலை. நடப்பது நடக்கட்டும் என்று தனது நாடகத்தைத் தொடர்ந்தார்.

மன்னன்தான் முதலில் பேசினான்.

"சுவாமி உங்களுக்குப் பாதபூஜை செய்ய விரும்புகிறோம்.
உத்தரவு கொடுங்கள்." என்றான்.

சுவாமிகள் கண்களினாலேயே சம்மதத்தைத் தெரிவித்தார்.

மன்னன் கையை உயர்த்த, தூரத்தில் நின்று கொண்டிருந்த
இரு தாதிப்பெண்கள் பெரிய வெள்ளித் தாம்பாளம், வெள்ளிக்குடத்தில் தண்ணீர், இன்னொரு தாம்பாளத்தில்,
பூஜைப் பொருட்கள் என்று அனைத்தையும் கொண்டு வந்து வைத்தார்கள்.

தேவியர் இருவரும் அருகில் வர, அவர்கள் துணையுடன்,
மன்னன் துறவிக்குப் பாத பூஜையைச் செய்து முடித்தான்.
அதோடு விழுந்தும் வணங்கினான்.

துறவியைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. இத்தனை சின்ன வயதில் முகத்தில் இப்படி ஒரு அருளா?

எல்லாவற்றையும் கொடுத்த இறைவன் இந்த நிர்மலமான
முகத்தை மட்டும் நமக்கு ஏன் தரவில்லை? அப்படி நினைத்த மாத்திரத்திலேயே மன்னன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு கன்னத்தில் வழிய ஆரம்பித்தது. அதைக் கவனித்த தேவியர்கள் இருவருமே உணர்ச்சி வசப்பட்டார்கள்.

சூழ்நிலையின் இருக்கத்தைக் குறைக்க விரும்பிய துறவியார், அருகில் தாம்பாளத்தில் இருந்த மலர்மாலை ஒன்றை எடுத்து, மன்னனுக்கு அணிவித்து, ஆசீர்வதித்தார்.

மீண்டும் தரையில் துறவியின் எதிரே அமர்ந்து கொண்ட
மன்னன், தன் அரச, மற்றும் குடும்ப வரலாறுகளை
பொறுமையாகச் சொன்னான். அதைவிடப் பொறுமையாகத் துறவியும் காது கொடுத்துக் கேட்டார்.

இறுதியில் மன்னன் தன் பிரச்சினைகளைச் சொல்லி,
அதற்குத் தங்களுடைய மேலான யோசனைகளைச்
சொல்லுங்கள் என்று துறவியைக் கேட்டுக் கொண்டான்.

துறவி நறுக்குத் தெரித்தார்ப்போல பேசினார்.

"உங்கள் துன்பங்களைக் கூட்டிக் கழித்தால் இரண்டு
சொல்லில் அடக்கிவிடலாம். ஒன்று கோபம், இன்னொன்று படபடப்பு, இல்லையா?" என்று கேட்டார்.

"ஆகா, அவையிரண்டும்தான் தலையாய பிரச்சினைகள்"
என்று மன்னன் பதில் சொன்னான்.

துறவி அவற்றிற்குப் பதில் சொன்னார்.

முதலில் அவனுடைய மனைவிகள் இருவரையும் தனித்தனி மாளிகைகளில் தங்கும்படி செய்ய வேண்டும் என்றார்.
அதோடு ஒவ்வொரு தேவியின் குழந்தைகளும், அவர்களுடனே தங்கும்படியாகச் செய்ய வேண்டும் என்றார். மன்னன்
மாதத்தில் முதல் பதினைந்து நாட்கள் மூத்தவள் வீட்டிலும்,
அடுத்த பதினைந்து நாட்கள் இளையவள் வீட்டிலும் தங்கி
வருவது நல்லது என்றார். மன்னனும் அது நல்ல தீர்வு என்று
சொல்லி மகிழ்ந்தான். பிரச்சினைகள் பாதியாகக் குறைந்து விடுமல்லவா?

இன்பம், துன்பம் ஆகிய இரண்டையுமே அவைகள் வந்து
சேரும் கணத்தில் ஏற்றுக் கொள்ளாமல், ஒரு நாழிகை
கழித்தே (அதாவது 24 நிமிடங்கள் கழித்தே) மனதிற்குள்
கொண்டு செல்ல வேண்டும் என்றார். அதாவது சட்டென்று
react செய்யக்கூடாது எனும் பொருள்படத் துறவியார் சொன்னார்.

இன்பம் வந்தால் உடனே துள்ளிக் குதிக்காதே! துன்பம் வந்தால் உடனே கோபப்பட்டு மற்றவர்களைப்ப் பிறாண்டதே! என்பதை மன்னனுக்குப் புரியும் வண்ணம் இரண்டு குட்டிக் கதைகள் மூலமாகப் பாடம் நடத்தினார். மன்னன் மகிழ்ந்து விட்டான்.

அப்படிச் செய்தால் கோபம் வராது என்பதை மன்னன் உணர்ந்தான்.

அடுத்து படபடப்பு வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் துறவி சொன்னார்.

மன்னனாக இருப்பதால், பல சோதனைகளைத் தாங்கும்
போது படப்படப்பு ஏற்படுவது இயற்கை என்றும், அந்தமாதிரி நேரங்களில், ஆறு குவளைகள் தண்ணீரை அடுத்துத்துக் குடித்துவிட்டு, சற்று நேரம் மஞ்சத்தில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றார்.

ஆறு குவளைகள் நீரைக்குடித்தால் என்ன ஆகும்?
வயிறு முட்டிப்போகும்.
அதோடு மஞ்சத்தில் ஓய்வெடுத்தால் என்ன ஆகும்?
தூக்கம் வரும்.
தூக்கம் வந்தால் என்ன ஆகும்?
படபடப்புப் போய்விடாதா?
அது பாட்டி வைத்தியம்.
அதை அறிந்திராத மன்னன் ஆகா அற்புதமான தீர்வு என்று தனக்குள் சொல்லி மகிழ்ந்தான்.
--------------------------------------------------------------------------------------------
துறவிக்குச் சிற்றுண்டியாகச் சர்க்கரைபொங்கலும், வெண்பொங்கலும் வழங்கப் பெற்றது. அதுவும் தங்கத்
தட்டுக்களில் வழங்கப்பெற்றது.

துறவியும் கிடைத்ததை மண்டிவைக்காமல் ஒவ்வொன்றிலும் சிறிதளவு மட்டும் சுவைத்து உண்டார்.

மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. துறவியும், "மன்னா நான் புறப்படுகிறேன். இறையருள் இருந்தால் மீண்டும் சந்திப்போம்" என்று சொல்லி எழுந்துவிட்டார்.

மன்னனும் கெஞ்சி ஒருவாரம் இங்கே தங்கிச் செல்லும்படி
வேண்டிக் கொண்டான்

ஒருவாரம் தங்கினால் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதை உணர்ந்த துறவி, சற்று நிதானித்துப் பதில் சொன்னார்.

தான் எங்கேயும் தங்குவதில்லை என்றும், ஊருணிக்கரைகளில் உள்ள மண்டபங்களில் மட்டுமே தங்கி ஓய்வெடுப்பது வழக்கம் என்றும் சொன்னார். ஒரு ஊரில் ஒரு நாளைக்கு மேல் தங்குவதில்லை என்றும் சொன்னார். தன்னுடைய சீடர்கள்
இருவர் காத்துக் கொண்டிடுப்பார்கள் என்றும் சொன்னார்

அரை மனதுடன் அதற்குச் சம்மதித்த மன்னன், சமிக்கை
செய்ய, தேவியரில் மூத்தவள் எழுந்து விரைந்து சென்று
ஒரு தங்கத் தாம்பாளத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக்
கொண்டு வந்தாள். அது நிறையப் பொற்காசுகளும், வைர ஆபரணங்களும் இருந்தன. இன்றைய மதிப்பில் அவைகள்
பத்துக்  கோடிகளுக்குத் தேறும்.

அதைக் கையில் வாங்கிய மன்னன், துறவியிடம் நீட்டி,
"இந்த எளியவனின் காணிக்கையாக இதை ஏற்றுக்
கொள்ளுங்கள்" என்றான்.

துறவி புன்னகைத்து மறுத்துவிட்டார்.

"நான் முற்றும் துறந்த துறவி. எனக்கெதற்கு இதெல்லாம்?
ஏழை மக்களுக்குக் கொடுங்கள். எனக்கு ஒன்றே ஒன்றுதான் வேண்டும் அது மனித நேயம் மட்டுமே!"

மன்னன் விடவில்லை,"என் அரண்மனைக்கு வந்து விட்டு
நீங்கள் வெறும் கையுடன் போகக்கூடாது. வேறு என்ன
வேண்டும் கேளுங்கள். ஆசிரமம் அமைப்பதற்கு நூறு வேலி
இடம் தரட்டுமா?" என்றான்.

"ஆசிரமம் என்னை ஒரு இடத்தில் முடக்கிவிடும். அதுவும் வேண்டாம். ஏதாவது அவசியம் தர வேண்டும் என்று
நினைத்தால், அந்த மாம்பழத்தில் இரண்டைக் கொடுங்கள். அதுபோதும்!"

அதிர்ந்துவிட்ட மன்னன். இரண்டு பழங்களை எடுத்துக்கொடுத்தான். துறவி முகமலர்ச்சியுடன்
அவற்றைப் பெற்றுக் கொண்டார்.

இதுவரை இங்கு வந்தவர்களில் இவரைவிட எளிமையானவர்
எவரும் இல்லை என்பதை உணர்ந்த மன்னன், அந்த எளிமையை வணங்கும் முகமாக அவரை மீண்டும் ஒருமுறை விழுந்து வணங்கிவிட்டுச் சொன்னான்.

"சுவாமி, இப்போதுதான் எனக்கு ஞானம் வந்ததுள்ளது.
ஆசையும், உடைமைகளும்தான் அத்தனை துன்பங்களுக்கும் காரணம்."

புன்னகைத்த இளம் துறவி புறப்பட்டுவிட்டார். பல்லக்குத்
தூக்கிகள் அவரை ஏற்றிக் கொண்டு போய், புறப்பட்ட
இடத்தில் இறக்கிவிட்டுத் திரும்பி வந்து விட்டார்கள்

மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்ற மன்னன், முதன்
மந்திரியைப் பாராட்டி, அவரிடம் ஆயிரம் பொற்காசுகள் அ
டங்கிய பணமுடிப்பு ஒன்றைப் பரிசாக வழங்கினான்.
--------------------------------------------------------------------------------------
அன்று மாலை சூரிய அஸ்தமனமாகி மூன்று நாழிகைகள்
கழித்து, சற்று இருட்டிய நேரத்தில், முதன் மந்திரி, முத்தழகன் வீட்டிற்கு வந்தார்.

ஐந்து மணித்துளிகள் அவன் தந்தையுடன் பேசிவிட்டு, மகிழ்ச்சியுடன் முத்தழகன் இருந்த அறைக்குள் வந்தார்.

மரியாதை நிமித்தமாக எழுந்த முத்தழகனைக் கட்டித் தழுவி, பாராட்டினார்.

"அற்புதமாக நடித்தாய். என்னுடைய எதிர்ப்பார்ப்பையும்
பூர்த்தி செய்தாய். இந்தா இதை வைத்துக்கொள்" என்று
சொல்லி மன்னர் கொடுத்த ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பணமுடிப்பை அவனிடம் கொடுத்தார்.

அதில் என்ன இருக்கும் என்றுணர்ந்த முத்தழகன் சொன்னான்.

"எனக்கு ஒன்றும் வேண்டாம்"

மந்திரிக்கு ஆச்சரியமாகி விட்டது. "மன்னர் கொடுத்தை நீ வேண்டாம் என்று சொன்னதற்கு என்ன காரணம் என்று
என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒரு வேளை அவ்வளவு பணம் இருந்தால் ஆபத்து என்று நினைத்து நீ வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். இதை ஏன் வேண்டாம் என்கிறாய்? இதை நான் அல்லவா உவந்து கொடுக்கிறேன்" என்று கேட்டார்.

அவன் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான்.

மந்திரிக்குக் கோபம் வந்துவிட்டது."அட, புரியாதவனே, எதற்கு
இதை வேண்டாம் என்கிறாய்? அதைச் சொல்!"

"இன்று ஒரு நாளில் பல விஷயங்களைத் தெரிந்து 
கொண்டேன். ஒரு உண்மையான துறவிக்கு உள்ள 
மதிப்பைத் தெரிந்து கொண்டேன். எத்தனைபேர்கள் 
காலில் விழுகிறார்கள்!
 எத்தனை உள்ளங்களில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது? 
எத்தனை கண்களில் நீர் சுரக்கிறது? எத்தனை உள்ளங்களில் அமைதி குடிகொள்கிறது? எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். 
அதில் ஒரு மகத்துவம் இருக்கிறது. அது என்ன என்பதை 
முழுதாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இன்று 
முதல் நான் துறவியாகி விட்டேன். இந்தப் பாழாய்ப்போன பணத்தைக் காட்டி என் மனதைக் கெடுக்க 
முயற்சிக்காதீர்கள்
 (Don't try to pollute my mind by giving this money!)

"............................."

"மன்னனுக்குச் சொல்லியதைத்தான் உங்களுக்கும் சொல்கிறேன். இதை ஏழை மக்களுக்குக் கொடுத்து அவர்களுடைய பசியை நிரந்தரமாகப் போக்குங்கள். நீங்கள் இங்கே நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் பயனில்லாது போகும். ஆகவே நீங்கள் செல்லலாம்"
என்று சொன்னவன் தரையில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

மந்திரிக்கு சம்மட்டியால் அடித்தைப் போன்று ஆகிவிட்டது. திகைத்துப்போய் விட்டார். மேற்கொண்டு ஒன்றும் சொல்லமுடியவில்லை. செய்யவும் இயலவில்லை.

அங்கிருந்து கிளம்பித் தலைநகருக்குத் திரும்பினார்.

ஒரு உண்மையான துறவியை உருவாக்கிய மகிழ்ச்சி மட்டும் அவருடைய உள் மனதில் நீண்ட நாட்கள் குடிகொண்டது!
-------------------------------------------------------------------------------------
ஒருவருக்கு ஞானம் பிறக்கிறது என்றால், அதன் பின்னணியில்
கேது இருப்பார். அவர்தான் ஞானகாரகன். ஞானம் ஒருவனுக்கு
எந்த வயதில் வேண்டுமென்றாலும் வரலாம். அல்லது வராமலும் போகலாம்.

ஞானத்தைப் பெற்று ஒருவன் ஞானியாகி விட்டால், இந்த
வாழ்வியல் துன்பங்கள் அவனை ஒன்றும் செய்யாது. அவன்
எந்த பாதிப்பிற்கும் உள்ளாக மாட்டான். அதற்கு ஒரு
கொடுப்பினை வேண்டும்.

ஒரே நாளில் அந்த இளைஞனுக்கு ஞானம் கிடைத்தது பாருங்கள், அதுவும் கொடுப்பினைக் கணக்கில்தான் வரும்!!!!!!
                   
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.12.17

மகாபாரதப் போரை முழுமையாகப் பார்த்தவன் அவன்!!!!


மகாபாரதப் போரை முழுமையாகப் பார்த்தவன் அவன்!!!!

எல்லாம் மாதவன் செயலே.. ! தெரிந்த புராணம் தெரியாத கதை..!

பஞ்ச பாண்டவர்களில் பீமனுக்கும்,இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன்.

கடோத்கஜனுக்கும் கம்கன்கடவிற்கும் பிறந்தவன் பார்பாரிக்கா.

.தாய் கம்கன்கட,மகன் பார்பாரிக்காவிற்கு தானே பயிற்சி அளித்து சிறந்த வீரனாக தயார் செய்திருந்தாள்.

சிவ பெருமான் பார்பாரிக்காவிற்கு மூன்று அம்புகளை பரிசளித்திருந்தார்.

முதல் அம்பு, தான் அழிக்க நினைக்கும் இலக்குகளை குறியிட்டு விடும்.

இரண்டாவது அம்பு,தான் காப்பாற்ற நினைக்கும் இலக்குகளை குறியிட்டு ஒதுக்கிக் காப்பாற்றி விடும்.

மூன்றாவது அம்பு அழிக்கக் குறியிட்ட இலக்குகளை அழித்து விடும்.

மூன்று அம்புகளும் தத்தம் பணிகளைச் செய்து விட்டு பார்பாரிக்காவிடம் திரும்பி விடும்.

இது தவிர அக்னி பகவான் மூவுலகையும் வெல்லக்கூடிய வில் ஒன்றை பார்பாரிக்காவிற்கு பரிசளித்திருந்தார்.இதன் காரணமாக பார்பாரிக்கா மிகவும் பலம் பொருந்தியவனாக விளங்கினான்.

பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்ததை அறிந்த பார்பாரிக்கா போரைக் காண ஆவலுற்றான்.

தாயிடம் ஆசிப் பெற்று தன் நீலக் குதிரை மீதி புறப்பட்டான்.

புறப்படும் முன்,போரில் பலவீனமாக இருந்தவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை வெற்றி பெறச்செய்வேன் என்று தாயிடம் சூளுரைத்தான்.

பார்பாரிக்காவின் திறமையை அறிந்திருந்த கிருஷ்ணன்,அவன் மனநிலையை நேரில் கண்டறிய விரும்பி ஒரு பிராமண வேடம் பூண்டுஅவனைக் காணச் சென்றார்.

வழியிலேயே அவனைப் பார்த்தும் விட்டார்.அவனைத் தடுத்து நிறுத்தினார்.

ஒரு பிராமணர் தன்னை நிறுத்துவது கண்டு பார்பாரிக்காவும் குதிரையை விட்டு இறங்கினான்.”

என்ன பிராமணரே என்னை ஏன் வழி மறித்தீர் “ என்று கேட்டான் பார்பாரிக்கா.

“ போர் உடையில் நீ வேகமாகச் செல்வது கண்டு ஏன் இந்த பரபரப்பு என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மிகுதியில் நிறுத்தி விட்டேன் “ என்றான் கிருஷ்ணன்.

“ பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குருக்ஷேத்திரத்தில் போர் நடக்க உள்ளது,அதில் கலந்து கொள்ளப் போகிறேன்” என்றான் பார்பாரிக்கா.”

யார் பக்கம் சேர்ந்து போரிட போகிறாய் “ என்று வினவினான் கிருஷ்ணன்.”அங்கு போய் பார்ப்பேன்,யார் பக்கம் பலவீனமாக உள்ளதோ அவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை ஜெயிக்க வைப்பேன்” என்றான் பார்பாரிக்கா.

” நீ அவ்வளவு பெரிய பராக்கிரமசாலியா” என்ற வினவினான் கிருஷ்ணன்.”

நீங்கள் வேண்டுமானால் என் பராக்கிரமத்தைச்சோதித்து பாருங்களேன்” என்றான் பார்பாரிக்கா.

”இதோ இந்த அரச மரத்தில் உள்ள இலைகளை ஒரே அம்பால் உன்னால் கோர்க்க முடிந்தால் உன்னை பராக்கிரமசாலி என்று ஒப்புக்கொள்கிறேன்” என்றான் கிருஷ்ணன்.

மரத்தின் ஒரு இலையை மட்டும் பிடுங்கி பார்பரிக்காவிற்கு தெரியாமல் தன் காலடியில் போட்டுக் கொண்டான்.

”இதோ ஒரு நொடியில் செய்து விடுகிறேன்” என்று ஒரு மந்திரத்தை உச்சரித்து அம்பை எய்தான் பார்பாரிக்கா.

அம்பு மரத்தில் இருந்த இலைகளையெல்லாம் கோர்த்துக் கொண்டு கடைசியாக கிருஷ்ணனின் பாதத்தை நோக்கிப் பாய்ந்தது.

”இது என்ன விபரீதம் அம்பு என் பாதத்தைத் துலைக்க முற்படுகிறதே” என்றான் கிருஷ்ணன்

”பிராமணரே உன் காலடியில் ஒரு இலை இருக்கும் என்று நினைக்கிறேன்,உடனே பாதத்தை எடுத்து விடும்” என்றான் பார்பாரிக்கா.

கிருஷ்ணர் பாதத்தை எடுத்தவுடன் பார்பாரிக்காவின் அம்பறாத்தூணியில் இருந்து புறப்பட்ட அம்பு ஒன்று எல்லா இலைகளையும் ஒன்றாகக் கோர்த்தது.

இந்த இடத்தில் ஒரு குட்டி கிளைக் கதை ஒன்று உள்ளது.

துருவாச முனிவர் கிருஷ்ணருக்கு ஒரு வரம் அளித்திருந்தார்.

கிருஷ்ணரின் பாதம் தவிர்த்த ஏனைய இடங்களில் எந்த ஆயுதத்தாலும் பாதிப்பு எற்படாது என்பதே அந்த வரம்.

மெளசால பர்வத்தில் ஜாரா என்னும் வேடன், மான் என்று எண்ணி கிருஷ்ணரின் பாதத்தில் அம்பு எய்து கிருஷ்ணரின் மரணத்திற்கு காரணமானதிற்கு முன் பார்பாரிக்காவின் அம்பு கிருஷ்ணரின் பாதத்தை பதம் பார்த்து பலவீனப்படுத்தியது, குறியிட்டு விட்டது முக்கிய காரணம் என்கிறது புராணம்.

ராமாவதாரத்தின் போது வாலியை   மறைந்திருந்து  தாக்கியதற்குவேதனையடைந்தவாலியிடம்,”கிருஷ்ணாவதாரத்தின் போது ஜரா என்னும் வேடனாக நீ பிறந்து நான் மரத்திலே மறைவாக அமர்ந்திருக்கும் போது உன்னால் கொல்லப்படுவேன்” என்று கூறியதாக புராணம் தெரிவிக்கிறது.

பார்ப்பாரிக்காவின் பராக்கிரமத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களை ஒளித்து வைத்தாலும் பார்பாரிக்காவின் அம்பு தேடிக் கண்டு பிடித்துக் கொன்று விடும் என்று உணர்ந்தார்.

”உன்னிடம் எனக்கு ஒரு யாசகம் வேண்டுமே” என்றான் கிருஷ்ணன்.

”எது வேண்டுமானாலும் தயங்காமல் கேளும் பிராமணரே !” என்றான் பார்பாரிக்கா.

”உன் தலையை கொய்து விட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான் கிருஷ்ணன்.

சற்றே திகைத்து விட்ட பார்பாரிக்கா,

” நீர் யார்,உண்மையை சொல்லும், நீங்கள் சாதாரண பிராமணரே அல்ல” என்றான்.

பகவான் கிருஷ்ணர் தன் சுய உருவத்தில் திவ்ய சொரூபனாகக் காட்சித் தந்தார்.”

கேசவா,நாராயணா,மாதவா,கோவிந்தா, மதுசூதனா...என்று பல்வேறு நாமங்களால் கிருஷ்ணரை துதித்தான்.

” பார்பாரிக்கா,நீ மாவீரன். உன் தாயிடம் நீ மேற்கொண்ட பிரத்திக்ஞையின் விளைவுகளை நீ அறியவில்லை. நீ பாண்டவர்களுக்கு 7 அக்ஷொனி படைகளும்,கெளரவர்களுக்கு 11 அக்ஷொனி படைகளும் இருப்பதைப் பார்த்து பாண்டவர்கள் பக்கம் சேர்வாய் ;உன் பராக்கிரமத்தால் கெளரவ படை தோற்கத் துவங்கும்.
 அது பலவீனமாவதை உணர்ந்து,உன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக நீ கெளரவர்கள் பக்கம் சேர்வாய்.

பாண்டவர்கள் தோற்க துவங்குவார்கள்.முடிவில் பாண்டவ,கெளரவ சேனைகள் முற்றிலும் அழிந்து நீ மட்டுமே மிஞ்சுவாய்.

இது தர்மத்திற்கு நல்லதல்ல.ஆகவே நீ போரில் பங்கேற்கக் கூடாது.

உன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்தின்ன் காரணமாக இது சாத்தியமல்ல. ஆகவே தர்மத்தின் பொருட்டு நீ உயிர் தியாகம் செய்து விடு”என்றான் கிருஷ்ணன்.

பார்பாரிக்காவும் இசைந்தான்.

பார்பாரிக்கா உண்மையில் நீ ஒரு யக்ஷன்.

முன் ஒரு சமயம்,பூமியில் அதர்ம சக்திகள் அட்டூழியம் நிகழ்த்தி வந்த நேரம்,பிரம்மாதி தேவர்கள் எல்லாம் என்னை வந்து பணிந்து தங்களைக் காபாற்றும்படி வேண்ட,நானும் தர்மத்தைக் காக்க அவதாரம் எடுப்பதாகக் கூறினேன்.

அதற்கு அங்கிருந்த நீ,அதற்கு நான் தேவையில்லை என்றும் நீ ஒருவனே போதும் என்றும் கூறினாய்.

இதை கேட்ட பிரம்மதேவன் கோபமுற்று, நீ பூமியில் மகத்தான சக்திகளுடன் பிறப்பாய் என்றும்,அதர்ம சக்திகளை ஒழிக்க முற்படும் போது நீயே என்னால் கொல்லப்பட்டு முதல் பலி ஆகி விடுவாய் என்றும் உன்னைச் சபித்தார்,அதன் காரணமாகவே, இன்று உனக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் போர் துவங்கும் முன் ஒரு மாவீரனை களபலி கொடுக்க வேண்டும்.

உன்னை மிஞ்சிய மாவீரன் இத்தரணியில் இல்லை” என்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் சக்ராயுதம் பார்பாரிக்காவின் தலையை கொய்தது.

பரந்தமனின் பரம் பதம் கிடைத்து விட்ட பிறகு வேறென்ன வேண்டும் என்று திருப்தி அடைந்த பார்பாரிக்கா”கிருஷ்ணா நான் போரினைக்காண  மட்டும் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” என்றான்.

பார்பாரிக்காவின் தலையைப் போர் பூமியைப் பார்த்து நின்ற ஒரு குன்றின் மீது வைத்தான் கிருஷ்ணன்.

போர் நடந்து முடிந்தவுடன்,பாண்டவர்களுக்குள் ஒரு வாக்குவாதம்.

தங்களில் யார் பராக்கிரமத்தால் போரில் வென்றோம் என்பதே அது.

கிருஷ்ணரிடம் வந்து “கிருஷ்ணா எங்களில் யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று கூறு” என்றனர்.”

எனக்கு எப்படி தெரியும்,நானோ அர்ஜுனனின் ரதத்தை ஓட்டிக்கொண்டு அவன் சொன்னபடியெல்லாம் சென்று
கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு எதிரிகளின் அம்புக்கணைகள் வேறு என் உடம்பை பதம் பார்த்து கொண்டிருந்தன. இந்த நிலையில் என்னால் வேறு எதையும்
பார்க்க தோன்றுமா என்ன” என்றான் கிருஷ்ணன்.

”அப்படியென்றால் வேறு யாரைத்தான் கேட்பது”என்று திகைத்தனர் பாண்டவர்கள்.

”ஒரு ஆள் முழு போரையும் பார்த்திருக்கிறான். அவனை வேண்டுமானால் கேட்கலாம்” என்றான் கிருஷ்ணன்.

”யாரது” என்று வினவிய பாண்டவர்களை பார்பாரிக்காவிடம் அழைத்துச் சென்றார் கிருஷ்ணர்.

”என்ன பார்பாரிக்கா முழு போரையும் பார்த்தாயா?” கேட்டான் கிருஷ்ணன்.

”பார்த்தேன் கிருஷ்ணா”என்றான் பார்பாரிக்கா.

”பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம், யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று” என்று கேட்டான் கிருஷ்ணன்.

”எனக்கு என்ன தெரியும் கிருஷ்ணா,யுத்த பூமியிலே ஒவ்வொரு தலை விழும் போதும் அங்கு உன் சக்ராயுதம்தான் என் கண்ணுக்கு தெரிந்தது”என்றான் பார்பாரிக்கா.

பாண்டவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.

!!ஸ்ர்வம் கிருஷ்ணார்ப்பணம்!!

மேலதிகத் தகவ்லுக்கு:
https://en.wikipedia.org/wiki/Barbarika
---------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.12.17

நெஞ்சை நெகிழ வைத்த கதை!


நெஞ்சை நெகிழ வைத்த கதை!

அந்தப் பெண்ணைச் சமையல் வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படி தெரியும் என தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது.

உன் பேரு என்னம்மா எனக்கேட்டேன்

கோகிலம் என்றாள்

கோகிலாவா என மறுபடியும் கேட்டேன்.

இல்லை சார் கோகிலம்` என அழுத்தமாகச் சொன்னாள். இப்படி ஒரு பெயரை முதன்முறையாக இப்போதுதான் கேட்கிறேன்.

எந்த ஊர் எனக்கேட்டேன்.

தெக்கே சார். பிள்ளைகுட்டிகள் யாருமில்லை. புருஷன் செத்துப் போயிட்டார். இரண்டு வருசமா தாம்பரத்துல ஒரு வீட்ல வேலைக்கு இருந்தேன். அவங்க இப்போது துபாய்க்கு வேலை மாறிப்போயிட்டாங்க. என்றாள்

எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்குறே ?

நீங்க குடுக்குறதை குடுங்க. ஆனா தங்க இடமும் சாப்பாடும் தரணும்.

இதுவரை எந்த வேலைக்காரியையும் என் வீட்டோடு தங்கியதில்லை. அப்படித் தங்கிக் கொள்ளும்படியான தனியாக அறை எதுவும் எனது வீட்டில் இல்லை. வீடு சின்னது, இதுல நீ எங்கம்மா தங்குவே எனக்கேட்டேன்

கிச்சன்லயே படுத்துகிடுவேன். இந்தப் பையை வைக்க இடம் இருந்தா போதும் என்றாள்.

அவள் குரலில் இருந்த துயரம் அவளது இயலாமையைத் துல்லியமாக வெளிப்படுத்தியது.

என் மனைவியும் அவளிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டாள். முடிவில் அவளைச் சமையல் வேலைக்கு வைத்துக் கொள்வது என முடிவானது.

சாப்பாட்டின் ருசி என்பது வீட்டுக்கு ஒரு மாதிரியானது. அதுவும் பல ஆண்டுகளாக ருசித்துப் பழகிவிட்டால் வேற்று ஆளின் சமையலை சாப்பிட முடியாது. என் மனைவி மிகவும் நன்றாகச் சமைப்பாள். ஆகவே புதிய சமையற்காரியின் சாப்பாட்டினை எப்படிச் சாப்பிடுவது என யோசனையாக இருந்தது. ஆனால் என் மனைவி கால்முறிவு ஏற்பட்டுப் படுக்கையில் கிடந்து இப்போது தான் தேறி வருகிறாள். ஆகவே புதிதாகச் சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை உருவாகியது

கோகிலம் சமைக்கத் துவங்கிய முதல்நாள் அவள் போட்டுக் கொடுத்த காபி. செய்து வைத்த சட்னி, சாம்பார் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. என் மனைவி அவளைக் கோபத்தில் திட்டவே செய்தாள்.

மறுநாள் கோகிலம் சமைத்த போது முட்டைக்கோஸ் வேகவைத்த வாணலி கருகிப்போய்விட்டது.

அடுப்பை கவனிக்காமல் என்னடி யோசனை என என் மனைவி அவளிடம் சண்டையிட்டாள்.

இல்லம்மா. என்னை அறியாமல் ஏதோ நினைப்பு வந்துருது. அந்த நினைப்பு வந்தவுடன் அழுகை அழுகையாக வருது என்றாள் கோகிலம்.

நீ ஒப்பாரி வைக்கிறதுக்கு என் வீடு தானா கிடைச்சது. கவனமா வேலை பாக்குறதா இருந்த இரு. இல்லே வேற வீடு பாத்துக்கோ என என் மனைவி அவளை விரட்டினாள்.

கோகிலம் சேலை முந்தானையால் அழுகையைத் துடைத்தபடியே சரிம்மா என்று கரிபிடித்த வாணலி கிழே இறக்கிவைத்தாள்.

கோகிலம் எப்போது சாப்பிடுவாள். எப்போது குளிப்பாள் என யாருக்கும் தெரியாது. நாங்கள் எழுந்து கொள்வதற்கு முன்பாக அவள் குளித்துத் தயராகிக் காபி டிக்காஷனை போட்டு வைத்திருப்பாள். சமையற்கட்டின் ஒரத்தில் எதையும் விரித்துக் கொள்ளாமல் வெறும் தரையில் தான் படுத்துக் கொள்வாள். சமையல் வேலையில்லாத நேரங்களில் டிவி பார்ப்பதோ, அரட்டை அடிப்பதோ எதுவும் கிடையாது. அவளாகவே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவாள். பைசா சுத்தமாகச் சில்லறை மீதம் தந்துவிடுவாள். சமையல் வேலைகள் தவிர்த்து வீட்டை சுத்தம் செய்வது. பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது. படுக்கை விரிப்புகளைச் சுத்தம் செய்வது. செருப்பைக் கழுவி துடைத்து வைப்பது எனச் சகல காரியங்களையும் கர்ம சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தாள்.

பத்து நாளில் அவளது சாப்பாடு எங்களுக்குப் பிடித்துப் போகத் துவங்கியது. வீட்டில் நானும் என் மனைவியும் மட்டுமே இருந்தோம். மூத்தமகன் மும்பையில் தன் மனைவி பிள்ளைகளுடன் இருந்தான். இளைய மகள் டெல்லியில் வசித்து வந்தாள். அவர்கள் விடுமுறைக்கு வருவதோடு சரி. நான் வங்கிப்பணியில் ஒய்வு பெற்றவன் என்பதால் அடிக்கடி நண்பர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவதுண்டு. அப்படி ஒருமுறை நாலைந்து நண்பர்கள் வந்திருந்த போது கோகிலம் கேரட் அல்வா செய்திருந்தாள்.

அப்படி ஒரு சுவையான அல்வாயை சாப்பிட்டதேயில்லை என நண்பர்கள் புகழாரம் செய்தார்கள். அல்வா எடுத்த ஸ்பூனை வழித்துத் தின்றான் ஒரு நண்பன்.

கோகிலம் அந்தப் பாராட்டுகளைக் கேட்டுக் கொண்டதோடு சரி. அதை நினைத்து பெருமைப்பட்டதாகவோ, சந்தோஷம் கொண்டதாகவே தெரியவில்லை. விதவிதமான சிற்றுண்டிகள், காய்கறி வகைகள், துவையல்கள், இனிப்பு வகைகள் எனச் செய்து கொடுத்தபடியே இருந்தாள். மாத சம்பளத்தை அவளிடம் தந்த போது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றாள்

உண்மையில் அவள் வந்த ஒரு மாத காலத்தில் நானும் என் மனைவியும் ஒரு கிலோ எடை அதிகமாகியிருந்தோம். கோகிலம் என் மனைவியின் தங்கையைப் போலவே ஆகியிருந்தாள். ஒரு நாளில் ஆயிரம் முறை கோகிலம், கோகிலம் என என் மனைவி அவளை அழைத்தபடியே இருந்தாள். அவளும் சுணக்கமின்றி ஒடியோடி வந்து உதவிகள் செய்தாள்.

சில நேரம் நாங்கள் சினிமாவிற்குப் போகும்போது அவள் வீட்டில் தனியாக இருப்பாள். ஒருமுறை நாங்கள் திருப்பதி போய்வந்த போது இரண்டு நாட்கள் அவள் மட்டுமே வீட்டிலிருந்தாள். வீடே காலியாக இருந்தாலும் அவள் சமையற்கட்டில் தான் உறங்கினாள். ஒரு பைசாவை எடுத்து செலவழிக்கவில்லை. சுவையான எந்த உணவையும் சாப்பிடுவதில்லை.

ஒருமுறை கோகிலம் சாப்பிடும் போது மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

வெறும்சோறு. அதில் கொஞ்சம் தண்ணீர். தொட்டுக் கொள்ள ஊறுகாய்.

ஏன் இந்தப்பெண் இப்படிப் பிடிவாதமாகயிருக்கிறாள் என ஆத்திரமாக வந்தது. என் மனைவியிடம் சொல்லி அவள் விரும்பியதை சாப்பிடும்படியாகச் சொன்னேன். அதைக்கேட்டு என் மனைவி சொன்னாள்

நானும் சொல்லிப்பார்த்துட்டேன். அவ கேட்கமாட்டாள்.

மும்பையில் இருந்து என் மகனும் மருமகளும் பேரப்பிள்ளைகளும் வந்திருந்த போது கோகிலத்தின் விருந்தை சாப்பிட்டு மயங்கிப் போனார்கள். தன்னோடு அவளை மும்பைக்கு அழைத்துப் போய்விடுகிறேன் என மகன் சொல்லிக் கொண்டேயிருந்தான். மருமகளும் கூடக் கூப்பிட்டாள். ஆனால் கோகிலம் மறுத்துவிட்டாள். கோகிலம் எதற்கும் ஆசைப்படவில்லை. பூ வைத்துக் கொள்ளக் கூட அவள் விரும்பியதில்லை.

கோகிலத்திற்காக நாங்கள் வாங்கிக் கொடுத்த புடவைகள் எதையும் அவள் கட்டிக் கொள்ளவில்லை. அப்படியே ஒரு பையில் போட்டு வைத்திருந்தாள். ஒரு நாள் கூட உடல்நலமில்லாமல் ஒய்வெடுக்கவோ, சலித்துக் கொள்ளவோயில்லை.

கோகிலத்தின் வேலை பிடித்துப்போகவே அவளுக்கு மாத சம்பளம் ஆறாயிரத்திலிருந்து எட்டாயிரம் தரலாம் என்ற யோசனையை என் மனைவிதான் சொன்னாள். அதைப்பற்றி அவளிடம் சொன்ன போது உங்க இஷ்டம் என்று மட்டும் தான் சொன்னாள்

என்ன பெண்ணிவள். எதற்காக இப்படிப் பகலிரவாக வேலை செய்கிறாள். சம்பளத்தைப் பற்றிப் பெரிதாக நினைப்பதேயில்லை. யாரைப்பற்றியும் ஒரு வார்த்தை தவறாகப் பேசியதில்லை. தன் கஷ்டங்களைச் சொல்லி புலம்பியதில்லை. இவளைப் போல வேலையாள் கிடைப்பது கஷ்டம் என நினைத்துக் கொண்டேன்.

ஒரு நாள் கோகிலம் என்னிடம் தயக்கத்துடன் கேட்டாள்

நாளைக்குக் காலையில பூந்தமல்லி வரைக்குப் போயிட்டு வரணும். அரை நாள் லீவு வேணும் சார்.

என்ன வேலை என்று கேட்டேன்.

பதில் சொல்லவில்லை. பேசாமல் நின்று கொண்டிருந்தாள்.

சரி போயிட்டு வா என்றேன்.

டிபன் செஞ்சிடும் போதே மதிய சமையலும் சேத்து வச்சிட்டு போயிடுறேன். வர்றதுக்கு மூணு மணி ஆகிடும் என்றாள்.

அதையெல்லாம் நாங்க பாத்துகறோம். நீ போயிட்டு வா.

அம்மாவுக்குத் தைலம் தேய்ச்சி குளிக்க வைக்கணும். அதைச் சாயங்காலம் செய்துரலாம்.

அதெல்லாம் பிரச்சனையே இல்லை கோகிலம் என அனுப்பி வைத்தேன்.

அவள் மறுநாள் காலை எட்டுமணிக்கு வெளியே கிளம்பி போனாள். என் வீட்டிற்கு வந்த ஆறுமாதங்களில் முதன்முறையாக அப்போது தான் வெளியே கிளம்பி போயிருக்கிறாள்.

யாரைப்பார்க்க போகிறாள். என்ன வேலையாக இருக்கும். என யோசித்துக் கொண்டேயிருந்தேன்.

என் மனைவி, கோகிலம் சில சமயம் காசை முடிந்து வைத்து சாமி கும்பிடுவதைக் கண்டிருப்பதையும். ஒருவேளை கோவிலுக்குப் போய்வரக்கூடும் என்றும் சொன்னாள்.

கோவிலுக்குப் போவதற்குச் சொல்லிக் கொண்டு போகலாம் தானே என்று கேட்டேன்.

அது அவ சுபாவம். எதையும் யார்கிட்டயும் சொல்லமாட்டா எனச் சிரித்தாள் மனைவி.

அன்று மாலை கோகிலம் நாலு மணிக்கு திரும்பி வந்தாள். அவள் முகம் இறுகிப்போயிருந்தது. தன்னை நம்பியவர்களை அப்படியே விட்டுவிட்டு போய்விட்டோம் என்பது போல அவள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். வந்த வேகத்தில் அடுப்பை பற்றவைத்து சுவையான உளுந்துவடையும் காபியும் கொடுத்தாள். எங்கே போனாள் யாரை பார்த்து வந்தாள் என எதையும் சொல்லிக் கொள்ளவில்லை

மறுநாள் என் மனைவி சொன்னாள் கோகிலம் ராத்திரி பூரா அழுதுகிட்டே இருந்தா. கேட்டா ஒண்ணுமில்லேங்கிறா.

யாராவது செத்துப் போயிருப்பாங்களா எனக்கேட்டேன்.

தெரியலை. ஆனா அவளைப் பாக்க பாவமா இருக்கு.

கோகிலம் மறுநாள் முதல் இயல்பாகிப் போனாள். நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. பத்துநாட்களுக்குப் பிறகு ஒரு மதியம் காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு நான் கதவை திறந்தேன். வாசலில் முப்பது வயதுள்ள ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான்

என்ன வேணும் எனக்கேட்டேன்.

எங்க அம்மாவை பாக்கணும் என்றான்.

உங்க அம்மாவா. யாரு எனக்கேட்டேன்.

கோகிலம் என்றான்

கோகிலத்திற்கு யாருமில்லை என்றாளே என்ற குழப்பத்துடன் சமையலறைக்குப் போய் அவளை அழைத்தேன். வெளியே வந்தவளின் முகம் அவனைப் பார்த்தவுடன் மாறியது.

இங்க எதுக்கு வந்தே எனக்கேட்டாள்.

உன்னை யாரு இங்க வந்து வீட்டுவேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினா. உன் தலைவிதியா எனக்கேட்டான் அந்தப் பையன்.

நான் உழைச்சி சாப்பிடுறேன். உன்னை என்னடா பண்ணுது. அதான் எல்லாத்தையும் குடுத்துட்டேனே. இன்னும் என்ன வேணும் என முறைத்தபடியே கேட்டாள்.

யம்மா. நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக நீ யாரோ வீட்ல வந்து எதுக்கு வேலை செய்ற. சும்மா உட்கார்ந்து சாப்பிட்டா கூட முப்பது வருஷம் சாப்பிடலாம். சொத்த வித்த பங்குல உனக்குச் சேர வேண்டியது இரண்டு கோடி வந்துருக்கு. அது உனக்குத் தான்.

அது ஒண்ணும் என் பணமில்லை. காசு காசுனு நீ தானே அலையுறே. நீயே வச்சி அனுபவி என்றாள் கோகிலம்.

உனக்கு வேணாம்னா போ. ஆனா நாளைக்கு உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா கொள்ளி போட நான் தான் வந்தாகணும். அதை மறந்துராத என்றான் மகன்.

ஏன் நான் செத்தா இவங்க எடுத்து போட மாட்டாங்களா எனக்கேட்டாள்.

அதைக் கேட்டதும் எனக்குச் சிலீர் என்றது. அந்தப் பையன் சொன்னான்.

உனக்குக் காசோட அருமை தெரியலை. இரண்டு கோடியை வேணாம்னு சொல்லுறே, பெத்த தாயேன்னு தான் திரும்ப வந்து நீயே வச்சிக்கோனு குடுக்குறேன். வேற யாராவது இருந்தா முழுங்கி ஏப்பம் விட்ருப்பான்.

நீயும் வேணாம். உன் கோடி ரூபாயும் வேணாம். கிளம்பு. இனிமே என்னைத் தேடிகிட்டு இங்க வந்தா செருப்பாலே அடிப்பேன். போடா எனச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் போய்விட்டாள்.

அந்தப் பையன் என்னை முறைத்தபடியே வெளியே போனான். கோகிலம் பேசியதை எல்லாம் கேட்டதும் எனக்குத் திகைப்பாக இருந்தது. கோகிலம் வெறும் வேலைக்காரியில்லை. இரண்டு கோடி பணமுள்ளவள். அதை விடவும் வசதியாக வாழ்ந்தவள். ஏதோ ஒரு பிடிவாதம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வந்து வேலைக்காரியாக இருக்கிறாள்.

கோகிலத்திடம் நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிரவு அவளாகவே வந்து சொன்னாள்

எங்க வீட்டுக்காரு பெரிய டிராவல்ஸ் வச்சிருந்தாரு. பூந்தமல்லியில பெரிய வீடு. நாலு கார் இருந்துச்சி. நல்லா சம்பாதிச்சி மெயின்ரோட்ல ஒரு கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாரு. பம்மல்ல இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் இருந்துச்சி.எங்க வீட்லயும் ரெண்டு பேரு வேலைக்காரிகள் இருந்தாங்க. எங்க வீட்டுக்காரருக்கு தினமும் சாப்பாடு ருசியா இருக்கணும். விதவிதமா ஆக்கி போடுவேன்.

திடீர்னு ஒரு நாள் பெங்களுர் போயிட்டு வந்துகிட்டு இருந்த என் புருஷன் ரோடு ஆக்சிடெண்டில் செத்துப்போயிட்டாரு. கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி ஆகிருச்சி. என் மகனே என்னை ஏமாத்த ஆரம்பிச்சிட்டான். அவனுக்குச் சேர்க்கை சரியில்லை. ஒரு வருசத்துக்குள்ளே ஊர்பட்ட கடன். அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சேன். வந்தவ இன்னும் மோசம். ரெண்டு பேரும் சேந்துகிட்டு என்னை வீட்டை விட்டு துரத்தி அடிச்சிட்டாங்க.

அப்புறம் வீட்டுவேலை செய்து பிழைச்சிகிட்டு இருக்கேன். எப்படி வாழ்ந்த நாம இப்படி ஆகிட்டோம்னு நினைச்சி தான் வெறும் சோத்தை சாப்பிடுறேன். அதுலயும் உப்புப் போடுறது கிடையாது.

பெத்து வளர்ந்த மகனேஅடிச்சி விரட்டிட்டான். ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. அவன் நல்லா இருக்கணும்னு காசு முடிச்சி போட்டு சாமி கும்பிட்டுகிடுவேன். எனக்குன்னு யாருமேயில்லை. அதான் இருக்கிற காலத்தை உங்கள மாதிரி யார் வீட்லயாவது ஒடிட்டு முடிச்சிரலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். முந்தநாள் பஜார்ல என் மகனை பார்த்தேன். கல்யாண மண்டபத்தை விக்கப் போறேன். உன் கையெழுத்து வேணும். பத்திர ஆபீஸ்க்கு வந்துருனு சொன்னான். அதைப் போட தான் நேத்து போனேன். எட்டு கோடி ரூபாய் வந்துச்சி. அதுல என் பங்கு ரெண்டு கோடி வச்சிக்கோனு குடுத்தான். உன் பிச்ச காசு எனக்கு வேணாம் போனு உதறிட்டு வந்துட்டேன். நான் செஞ்சது சரி தானே சார்.

எனக்கு அவள் பேசியதை கேட்க கேட்க மனதில் பாரமேறியது. தொண்டை வலித்தது.

இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம்லே.

வசதியா இருந்த ஆளை யாரு வேலைக்கு வச்சிகிடுவா?

அதுக்கா ஏன் வீட்டுவேலை செய்து கஷ்டப்படுறே. அந்தப் பணத்தை வாங்கிப் பேங்கிலப் போட்டுட்டு காலாட்டிகிட்டு வாழலாம்லே எனக்கேட்டாள் என் மனைவி.

நம்மாலே அப்படி வாழ முடியாதும்மா. நமக்கெல்லாம் உழைச்சி சாப்பிடணும். அது அநாமத்தா வந்த பணம். அதை வச்சிருந்தா ஆயிரம் பிரச்சனை கூட வரும். அந்தக் கருமம் எனக்கு வேணாம். சோறு போடுறதுக்கு நீங்க இருக்கீங்க. படுக்க இடம் இருக்கு இது போதும்மா.

அவள் சொல்வது உண்மை. ஆனால் இவளை போன்ற துணிவும் மனவுறுதியும் எங்களுக்கு இருக்குமா என யோசனையாக இருந்தது. என் மனைவி அவளிடம் திரும்பத் திரும்பப் பணம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். கோகிலம் அது தன்னுடைய பணமில்லை. தன்னைப் பெற்ற மகனே ஏமாற்றியபிறகு யாரையும் நம்பத் தயாராகயில்லை“ என உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சரி அவள் இஷ்டம். எப்போதும் போல அவள் இந்த வீட்ல் இருக்கலாம். இனி அவளுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல மாட்டோம் என நாங்கள் முடிவு செய்தோம்.

மறுநாள் விடிகாலையில் நாங்கள் எழுந்து வந்த போது கோகிலம் சமையல் அறையில் இல்லை. சிறிய கடிதம் மட்டுமே இருந்தது.

அன்பு மிக்க நடராஜன் அய்யா, அம்மாவிற்கு,

இத்தனை நாட்கள் எனக்குச் சாப்பாடு போட்டு தங்க இடம் கொடுத்ததிற்கு நன்றி. நான் யார் என்று தெரிந்தபிறகு முன்பு போல என்னை வேலை சொல்ல உங்களுக்கு மனம் வராது. ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும் போதும் இரண்டு கோடி ரூபாய் உங்கள் நினைவில் வந்து போகும். அது எனக்கும் சிரமம். உங்களுக்கும் சிரமம். ஆகவே வேறு ஊருக்கு வேலைக்குப் போகிறேன். இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள என் சம்பள பணத்தை அம்பத்தூரில் உள்ள அநாதை காப்பகத்திற்குக் கொடுத்துவிடவும். அம்மாவிற்குத் தைலம் தேய்த்துவிட முடியாமல் போய்விடுகிறதே என்று மட்டும் தான் எனக்குக் கவலை. என் சாப்பாடு உங்கள் இருவருக்கும் பிடிந்திருந்தது என்பது மகிழ்ச்சி. பலசரக்கு கடைக்காரன் 26 ரூபாய் பாக்கி தர வேண்டும். பால் பாக்கெட் ஒன்று கூடுதலாகப் போட வேண்டும். உங்கள் இருவரின் நினைவாக ஒரேயொரு டம்ளரை எடுத்துப் போகிறேன். அதில் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் உங்களை நினைத்துக்கொள்வேன். இப்படிக்கு உங்கள் வேலைக்காரி கோகிலம் என எழுதியிருந்தாள்.

அந்தக் கடிதத்தைப் படித்து முடிந்தவுடன் வேதனை பீறிட்டது.

என் மனைவி படித்துவிட்டு வாய்விட்டு அரற்றினாள்.

நமக்கு தான் புத்தியில்லை. ஆள பாத்து தப்பா எடைபோட்டுட்டோம். விதவிதமா நமக்குச் சமைச்சி போட்டு கவனிச்சிட்டா. அவளுக்கு நாம ஒண்ணுமே பண்ணலே. இந்தப் பாவத்துக்கு என்ன பரிகாரம் பண்ணப்போறோம் சொல்லுங்க.

எனக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை

சமையல்கட்டின் ஒரம் நாங்கள் கொடுத்த புதுப்புடவைகள் அத்தனையும் ஒரு பையில் அப்படியே இருந்தன. அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது என் மனைவி வெடித்து அழத் துவங்கியிருந்தாள்.

படித்து நெகிழ்ந்த கதை.
---------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.7.16

குட்டிக்கதை: நம்முடைய அகந்தை நம்மை என்ன செய்யும்?


குட்டிக்கதை: நம்முடைய அகந்தை நம்மை என்ன செய்யும்?

ஒரு குரு இருந்தார்.  அவர் வில் வித்தையில் கைதேர்ந்தவர்.  அவருடைய  குரு குலத்தில்  பல மாணவர்கள் தங்கி வில் வித்தை பயின்று வந்தார்கள்.  அதில் ஒரு மாணவன் மிகச் சிறப்பாக சகல வித்தைகளையும்  கற்றுத்  தேர்ந்தான். குருவுக்குப் பிறகு அவன்தான் அடுத்த குரு என்று குருகுலத்தில் பேசிக்கொண்டனர். இதையெல்லாம் கேட்கக் கேட்க அவனையறியாமலே அவனுக்குள் ஆணவம் வளர்ந்தது.  அது கற்றுக் கொடுத்த  குருவையே அலட்சியமாக நினைக்க வைத்தது.  அவனுக்குள் ஒரு தீய  எண்ணம் வேர்விட்டது.

"இனியும்  நான்  ஏன் பொறுத்திருக்க வேண்டும்?  குருவுக்குத் தெரிந்த சகலமும் இப்போது  எனக்கும் தெரியுமே! இன்னும் கூட அதிகமாகக் கற்றுக் கொள்ள எனக்கு  இளமையும்,  வயதும் இருக்கிறது.  இனி நான்தான்  குரு.  பழைய குருவை விரட்டுவேன். நானே குரு ஆவேன்" என்று எண்ணி  ஒரு  ஆலோசனை செய்தான்.  மறுநாள் அவனுக்கு வேண்டிய சில பெரிய மனிதர்களை அழைத்துக் கொண்டு  குருவின் வீட்டுக்குப் போய் வாசலில் நின்று சத்தமிட்டான். "கிழட்டு  குருவே வெளியே வாரும்.  இனி நீரல்ல, நான்தான்  குரு.  உம்மோடு போட்டியிட்டு ஜெயிக்க வந்திருக்கிறேன்.  தைரியம் இருந்தால் மோதிப் பாரும்.  இல்லை என்றால்  இப்போதே தோல்வியை ஒப்புக் கொண்டு ஆசிரமத்தை என்னிடம் ஒப்புவியும்" என்றான்.
 
குரு இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.  வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததில்  கொஞ்சம் நிலை குலைந்து போனார். ஆனாலும் உறுதியான  குரலில் சொன்னார் . " போட்டி துவங்கலாம் ". துவங்கியது.

முதலில்  குரு அம்பை எடுத்து தூரத்திலிருந்த ஒரு மரத்தை நோக்கி  எய்தார். அது சரியாய் ஒரு காயை வீழ்த்தியது.  சிஷ்யனும் அதே போல்  ஒரு  அம்பை எய்ய அது  இரண்டு காய்களை வீழ்த்தியது.  சிஷ்யனின் ஆதரவாளர்கள்  கைதட்டி  ஆர்ப்பரித்தனர்.

அடுத்து  குரு இரண்டு  அம்புகளை ஒன்றாக விடுத்தார்.  அதில் சரியாக  ஒரு  இலையும்,  ஒரு காயும் விழுந்தன.  சீடன்  அலட்சியமாக மூன்று அம்புகளை  ஒன்றாய்  எய்ய  அது  ஒரு இலையையும் ,  ஒரு காயையும் ,  ஒரு பூவையும் கூட அழகாய் வீழ்த்தியது.  சீடனின் கூட்டம் இன்னும் சத்தமிட்டது. குரு இப்போது தரையைப் பார்த்து  தலைகுனிந்தபடி வானத்தை நோக்கி அம்பு விட்டார்.  அது குறிபார்த்து  எய்ததுபோல் விண்ணில் பறந்து கொண்டிருந்த  ஒரு பறவையின்  மார்பில் தைத்து அதைக் கீழே விழ வைத்தது.

சிஷ்யனின்  கூட்டம் சற்றே மிரண்டது. சிஷ்யனோ சற்றும் மிரளவில்லை. புன்னகைத்தபடியே  அவனும்    தலையைக் குனிந்தவாறே   ஒரு  அம்பை  எய்தான். அவனது  அம்போ இரண்டு பறவைகளை ஒன்றாக  வீழ்த்தியது.  சிஷ்யனின் கூட்டம்  கூத்தாடியது. மரியாதை
1இல்லாமல் குருவின்  அருகே வந்து அவரை சுற்றி நின்று கைதட்டியது.

மற்ற சீடர்களின் கண்களில் கண்ணீர்.  குரு  அவமானப் படுத்தப்படுவதை அவர்களால்  தாங்கிக்கொள்ள முடியவில்லை.  குரு வில்லையும் , அம்பையும் கீழே போட்டுத் தரையில் மண்டியிட்டுக் கண்களை மூடிக்கொண்டார்.

குரு தோல்வியை  ஒப்புக் கொண்டு விட்டாரோ?

எல்லாரும் மௌனமாய் குருவின் முகத்தையே பார்த்தனர்.

திடீரென்று குரு கண்ணைத் திறந்து வானத்தை  ஏறிட்டுப் பார்த்தார்.  அவர் பார்த்த மாத்திரத்திலேயே வானத்தில் பறந்து சென்று கொண்டிருந்த சில பறவைகள் பொத்தென்று கீழே விழுந்தன.  இப்போது சீடனின் முகம்  இருண்டது .

"குருவிடம்  இப்படி ஒரு வித்தையை நான் பார்த்ததே இல்லையே " .

மனதுக்குள் மிரண்டாலும் அவனும்  அவரைப் போலவே மண்டியிட்டு வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்த்தான்.  ஒன்று கூட விழவில்லை.  பதற்றமாக மீண்டும் பார்த்தான்.  அப்போதும் எதுவும் விழவில்லை.  மீண்டும் ஒரு முறை பார்த்தான். அப்போதும் பயனில்லை. அவமானத்தில் குன்றிப் போனான் .  திடீரென  எழுந்து குருவின்  பாதங்களில்  விழுந்து அழுதான்.  "குருவே!  எப்போதுமே நீங்கள் மட்டுமே  பெரியவர்.

என்னை  மன்னிப்பீர்களா?" என்றான். குரு  அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

" நீங்கள் பார்க்கும்போது விழுந்த பறவைகள் நான் பார்க்கும்போது விழவில்லையே. ஏன் குருவே?

குரு சொன்னார்

" தாழ்மை வந்தால்தான்  மேன்மை வரும்.  அகந்தை வந்தால்  அழிவுதான் வரும் " "ஆம்  குருவே,  நான் பாவி.  ஒன்றும்  அறியாத நிர்மூடன்" என்று அவரது பாதத்தைப் பிடித்து அழுதான்.

குரு சொன்னார், " இப்போது மேலே பார்" பார்த்தான்.  பறந்து கொண்டிருந்த  ஐந்தாறு பறவைகள் பொத்தென்று கீழே விழுந்தன.
செல்லமே!  மேன்மைக்கு ஏதுவான தாழ்மையை இந்த நாளில் ஆண்டவரிடம்  வேண்டிப் பெற்றுக்   கொள்வோமா?

"மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்: மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான் ".
============================================================
படித்ததில் பிடித்தது. அறியத்தந்துள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.8.15

குட்டிக்கதை: மாட்டைவைத்து மனைவியை அடக்கியவன்


குட்டிக்கதை: மாட்டைவைத்து மனைவியை அடக்கியவன்

ஒரு கிராமத்து கதை.

ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க
போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக்
கொண்டிருந்தாள்.

அந்த கன்டிசன்களை எல்லாம் கேட்ட மாப்பிள்ளைகள் இவளைக்
கல்யாணம் செய்து வாழமுடியாது என தலை தெறிக்க ஓடித் தப்பித்துக் கொண்டு இருந்தார்கள்.

நல்ல அழகான பெண்ணாக தேடிக்கொண்டு இருந்த ஒருத்தனுக்கு
இந்த பெண்ணைப்பற்றிய தகவல் கிடைத்தது அவன் தன் அம்மாவிடம்
அந்த பெண்ணை பார்த்து பேசிக் கல்யாணம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறான்.

அவன் அம்மா ஏற்ககனவே இந்த பெண் பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் வேண்டாம் என்று மறுத்திருக்கிறாள்.

இருந்தும் இவன், நான் அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்வதாக உள்ளேன் எனச் சொல்லவும், சரி வா பெண் பார்த்துப் பேசுவோம் என
அவனும் அவனுடைய அம்மாவும் சேர்ந்து அங்கே போனார்கள்.

போகும்போதே அம்மாவிடம் சொல்லிவிட்டான்: “அவள் எந்த கன்டிசன் போட்டாலும் தலையாட்டி சரி என சொல்லிவிடு அம்மா”

அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார்.

பெண்வீட்டிற்குப் போய்ப் பெண் பார்த்து முடிக்கும்போது, பெண் போட்ட அத்தனை கன்டிசனுக்கும் அவன் சம்மதித்துவிட்டான். ஆனால் அவன்
அன்னை நொந்து போய்விட்டதோடு,,மனதில் நம் மகனின் வாழ்க்கை சிக்கலாகப் போகிறது என்று நினைத்தார்.

மணப்பெண்ணும் நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று
திருமணத்துக்கு ஒத்துக்கொண்டாள்.

திருமணமும் நன்றாக முடிந்து மனைவியை வீட்டுக்கு அழைத்துக்
கொண்டு அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான்.

வரும் வழியில் ஒரு மாடு பாதையில் நின்றுகொண்டு இருந்தது.
இவன் சட்டென அருகில் கிடந்த உலக்கையை எடுத்து மாட்டை
அடித்து இனிமேல் போகும் பாதையில் நிக்காதே என்று சொல்லிக் கத்தியிருக்கிறான்..

அடுத்து வழியில் ஒரு நாய் படுத்து இருந்தது. இவன் தன் காலால்
அந்த நாயைப் பலமாக உதைந்து, இனிமேல் போகும் பாதையில்
படுப்பாயா என்று சொல்லி இருக்கான். வலி தாங்காத நாயும் அலறலோடு ஓடியிருக்கிறது.

அடுத்ததாக, வீட்டுக்குள் நுழையும் முன்பு வீட்டு வாசலில் நின்ற சேவல் கூவியது. இவன் சட்டென்று சேவலைப் பிடித்து இனிமேல் எப்படிக்
கூவுவாய் என்று பார்க்கிறேன்” என்று சொல்லியவாறு சேவலின்
தலையைப் பிடித்து பலமாகத் திருகி அதைக் கொன்றுவிட்டான்.

இதையெல்லாம் வழியெங்கும் பார்த்துகொண்டே வந்த அவனுடைய புது மனைவி, பயத்தில் உறைந்துபோனதோடு, தான் போட்ட கன்டிசன்களை
எல்லாம் மறந்து, அவனுக்கு அடங்கி வாழ்ந்தாள்.

இதுதான் மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை!
=================================================================
படித்ததில் பிடித்தது
-------------------------------------
ஜோதிடப் புத்தகத்தை, அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் முனைப்பாக இருப்பதால், புதிருக்குப் புதிதாக எதையும் எழுதிப் பதியமுடியவில்லை.
பொறுத்துக்கொள்ளுங்கள். செப்டம்பர் 4ம் தேதியில் இருந்து புதிர் பாடங்கள் மீண்டும் வெளியாகும்

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.1.14

Astrology: கேதுவால் என்ன கிடைக்கும்?

Astrology: கேதுவால் என்ன கிடைக்கும்?

சில பாடங்களை கதைகளை உதாரணமாகச் சொல்லி, நடத்தினால் எளிதில் புரியும். கேதுவால் என்ன கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? என்பதை
ஒரு கதையின் மூலம் இன்று சொல்ல விளைகிறேன். படித்துப் பாருங்கள்!
-------------------------------------------------------------------------
கதையின் தலைப்பு: அதிரவைத்த இளம் சந்நியாசி!

இளஞ்செழியன் எனும் பெயரையுடைய குறுநில மன்னன் ஒருவன் இருந்தான்.அவனுடைய நாடு நன்றாக இருந்தது. அவனது ஆட்சியில் நாட்டு
மக்களும் நன்றாக இருந்தார்கள்.

அனால் அவன் நன்றாக இல்லை. அதாவது அவனுடைய குடும்ப வாழ்க்கை நன்றாக இல்லை!

என்ன காரணம்?

அவனுக்கு இரண்டு தேவியர்கள். அதாவது இரண்டு மனைவிகள். பதின்மூன்று குழந்தைகள். நித்தமும் அரண்மனையில் சண்டைகள். சச்சரவுகள்.வீட்டில் வெட்டு குத்து நடக்கவில்லை. மற்றதெல்லாம் நடந்தது. குடும்பத்தில் ஒற்றுமையும், இணக்கமும் இல்லை!!

மனிதன் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் - நீங்களே சொல்லுங்கள்?

அவர்கள் பதினைந்து பேர்களுமாகச் சேர்ந்து அரசனைத் தினமும் துவைத்துக் காயப்போட்டுக் கொண்டிருந்தார்கள்.

வெளி ஆட்களாக இருந்தால், அரசன் துன்பம் விளைவிப்பவர்களை அல்லது குழப்பம் விளைவிப்பவர்களை உள்ளே தூக்கிப் போட்டிருப்பான். மனைவி
மக்களை தண்டித்து எப்படி உள்ளே போட முடியும்?

அரசன் தவித்தான். சுருண்டான். மயங்கினான். கவலை கொண்டான். தலைவலி. தூக்கமின்மை. என்று பல பிரச்சினைகளுக்கு ஆளாகினான்.
அனைத்தும் அவனை அனுதினமும் வாட்டின!

எதிலும் அவனால் தன்நினைவோடு இருக்க முடியவில்லை. செயல் பட முடியவில்லை!

ஒரு நாள் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இது பற்றிக் குறிப்பிட்டு, அழுகாத குறையாக தன்னுடைய மனக்குறைகளை வெளிப்படுத்தினான்.

நண்பர் அதற்கு ஒரு யோசனை சொன்னார். ஞானானந்தா என்று இளம் துறவி ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் உபதேசம் கேட்டுக்கொண்டால்,எல்லாப் பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும் என்றும் சொன்னார். அவரைத்தான் பார்த்ததில்லை என்றும், ஆனால் நிறையக் கேள்விப் பட்டிருப்பதாகவும் சொன்னார். அதோடு அந்த இளம் துறவி தற்சமயம் பல்லவ நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் செய்தியையும் சொன்னார்.

அரசன் தன்னுடைய முதலமைச்சரை அழைத்து, தகவலைச் சொல்லி, உடனே புறப்பட்டுச் சென்று, எப்படியாகினும், அந்தத் துறவியை அழைத்து வரச்
சொன்னான். முதன்மந்திரியும், நான்கு வீரர்கள் துணையுடன், உடனே புறப்பட்டுப் போனார்.

ஆனால் சென்றது வீணாகி விட்டது. துறவி வருவதற்கு மறுத்து விட்டார்.

கிராமம், கிராமமாகத் தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அரசர்களைவிடத்தான் மக்களையே அதிகம் விரும்புவதாகவும், இறையருளைச் சொல்லி, மக்களை நல்வழிப் படுத்துவதே தனது தலையாய வேலை என்றும் சொன்னார். தனி மனிதர்களுக்குத் தான் முக்கியம் கொடுப்பதில்லை  என்றும் சொன்னார்.

மந்திரி காலில் விழாத குறையாகக் கெஞ்சியும், அவர் வரச் சம்மதிக்க வில்லை. அதோடு தான் ராமேஸ்வரம் வரை கால் நடைப் பயணம்
மேற்கொண்டிருப்பதாகவும், திரும்பும் வழியில், அழைத்தால், வந்து பார்ப்பதாகவும் சொன்னார். அதற்கு ஒரு ஆண்டு காலம் ஆகுமென்றும்
கூறிவிட்டார்.

மந்திரி திகைத்துப் போய்விட்டார்.

இந்தக்காலமாக இருந்தால், நடப்பதே வேறு. சாமியாரை ஏதாவது ஒரு செக்சனில் பிடித்து அள்ளிக் கொண்டு வந்திருக்கலாம். அது ஆயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அனைவருமே பக்திமான்கள். தர்ம சிந்தனை உடையவர்கள், அதோடு தன்னுடைய சக்தியால் சாமியார் எதையாவது
செய்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு இருந்தது.

அதனால் மந்திரி தோல்வியுடன் திரும்பி விட்டார். அரசனிடம் எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியது என்ற முடிவையும் எடுத்திருந்தார்.

இரண்டு வாரங்களில் துறவி வருவதாக உறுதி அளித்திருக்கிறார் என்று அரசனிடம் ஒரு பொய்யைச் சொல்லி நிலமையைச் சமாளித்தார். இரண்டு
வாரங்கள் கழித்து அரசன் நினைவு படுத்திய போது, ஒரு வீரனை அனுப்பி விசாரித்துக் கொண்டு வரச்சொல்வதாககூறி, மீண்டும் அதே பொய்யைச்
சொல்லி மேலும் ஒருமாத காலத்தை ஓட்டினார்.

இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தன.

மிகுந்த கோபத்திற்கு ஆளான அரசன், முதன் மந்திரியைக் கண்டித்துச் சொல்லி விட்டான். "என்ன சேய்வீர்களோ தெரியாது. இன்னும் பதினைந்து
தினங்களுக்குள் அந்தத் துறவி இங்கே இருந்தாக வேண்டும். இல்லை என்றால் உங்கள் பதவியை நீங்கள் இழக்க நேரிடும்!"

முதன் மந்திரிக்கு மிகவும் இக்கட்டாகிவிட்டது. இக்கட்டில் சிலரது மூளை அற்புதமாக வேலை செய்யும். மந்திரியின் மூளையும் அப்படியொரு
வேலையைச் செய்தது.

ஒரு போலிச் சாமியாரை உருவாக்கி, அரசன் முன் கொண்டு வந்து நிறுத்திட மந்திரி முடிவு செய்தார். அதை உடனடியாகச் செயல் படுத்தவும்
முனைந்தார்.

இந்தக் காலம் போல பத்திரிக்கைகள், புகைப்படங்கள், தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாததால் போலியான ஒருவனைக் கொண்டு வந்து
நிறுத்தினால் யாருக்குத் தெரியப்போகிறது?

சாந்தமான முகக்களை மற்றும் தோற்றமுள்ள இளைஞனைத் தேடி, மந்திரி பக்கத்துக் கிராமங்களில் அலைந்து பார்த்தார்.

அவருடைய நல்ல நேரம், கிராமம் ஒன்றில் மணியக்காரராக இருந்த பெரியசாமியின் மகன் முத்தழகன் தோதாகக் கிடைத்தான்.மந்திரியின் சொல்லத் தட்ட முடியாமல் சாமியார் வேடத்திற்கு ஒப்புக்கொண்ட முத்தழகன் நடிக்க வேண்டிய இடத்தைக் கேட்டவுடன் பயந்து விட்டான்.

"அய்யா, அரசர் கண்டு பிடித்து விட்டால் பிரச்சினையாகி விடுமே!" என்றான்.

உடனே மந்திரி தக்கதொரு பதிலைச் சொல்லி அவனத் தேற்றினார்.

"அதெல்லாம் பிரச்சினை வராது. அப்படியே வந்தாலும் என் பெயரைச் சொல்லி, என் கட்டாயத்தினால்தான் நடித்தாகச் சொல்லிவிடு. வருவதை நான்
பார்த்துக் கொள்கிறேன்"

முத்தழகன் ஒப்புக்கொண்டான். வேறு வழி? ஒப்புக்கொள்ளாவிட்டால் முதன் மந்திரியை எதிர்கொள்வது எப்படி?
------------------------------------------------------------------------------------------------
முத்தழகனுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கபெற்றது. தலைமுடி மழுங்க வழிக்கப் பெற்றது. கழுத்தில் ஒரு பெரிய உருத்திராட்ச மாலை அணிவிக்கப் பெற்றது. அதோடு தலைப் பகுதியிலும் வட்ட வடிவமாக ஒரு உருத்திராட்ச மாலை அணிவிக்கப் பெற்றது. பட்டையாக விபூதி  பூசப்பெற்றது. சிவப் பழமாகக் காட்சியளித்தான்.

அரசன் என்னென்ன கேள்விகள் கேட்பான். அவற்றிற்கு என்னென்ன பதில்கள் அளிக்க வேண்டுமென்றும் பயிற்சி கொடுக்கப்பெற்றது. அதோடு தெரியாத கேள்விகளுக்கு நமச்சிவாய அல்லது திருச்சிற்றம்பலம் என்று இறைவனின் பெயரை மட்டும் சொல்லும்படி பணிக்கப்பெற்றிருந்தது.

மொத்தமாகப் பயிற்சி அளிக்கப் பெற்றிருந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள்!
---------------------------------------------------------------------------------------------
ஒரு நாள் அதிகாலை நேரத்தில், நகருக்கு வெளியில் இருந்த மண்டபம் ஒன்றில் அவன் உட்கார வைக்கப்பட்டான். அரண்மனை பல்லக்கு ஒன்று
அனுப்பட்டது. அதிலேறி அவனும் அரண்மனைக்கு வந்து சேர வேண்டும் என்பது ஏற்பாடு!.

இப்போது அவனுடைய பெயர். தவத்திரு ஞானானந்தா சுவாமிகள்!

அதற்கு முதல் நாளே, சுவாமிகள் எழுந்தருள உள்ள விஷயம் அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டதால், அரசனும் அவரை வரவேற்க மகிழ்வுடன் தயாராக
இருந்தான்.

அரண்மணை முழுவதும் நன்நீரால் கழுவப்பெற்று, நல் மலர்களால் அலங்கரிகப்பட்டிருந்தது.

அரண்மணை வாசலில் தன் தேவியர்கள் மற்றும் புத்திர சிகாமணிகளுடன் நின்று கொண்டிருந்த அரசன் ஆவலுடன் சுவாமிகளின் வரவை எதிர்
நோக்கிக் காத்துக் கொண்டிருந்தான்.

நடந்தது என்ன?

அது மிகவும் சுவாரசியமானது!

என்ன சுவாரசியம்?

கதையின் அடுத்த பகுதியும், கேதுவைப் பற்றிய தகவலும், கேதுவால் ஏற்படும் துன்பங்களுக்கான பரிகாரமும் நாளை வெளியாகும். இங்கெயல்ல!
galaxy2007 வகுப்பில் வெளியாகும். இங்கே எழுதினால், பதிவு திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஆகவே அங்கே வெளியாகும்.  அங்கே எழுதுபவைகள் எல்லாம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் புத்தகமாக வரவுள்ளன. அப்போது அனைவரும் படிக்கலாம்!

(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

===================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.12.13

Short Story: சிறுகதை: இக்கட்டான சூழ்நிலை


 
Short Story: சிறுகதை: இக்கட்டான சூழ்நிலை

அப்பச்சி - My Father - சொன்ன கதைகள் - பகுதி 6

(எங்கள் அப்பச்சி சொன்ன கதைகள் வரிசையில் இது ஆறாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. கருவிற்கு உருவம் கொடுத்து
விரிவாக்கம் செய்து, எழுத்தில்  வடிவமைத்தது எல்லாம் என்னுடைய கைவண்ணம். மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் கதைகளில் ஒன்றை இன்று உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்)

தலைப்பு: இக்கட்டான சூழ்நிலை!

இக்கட்டான சூழ்நிலை என்றால் உங்களுக்கெல்லாம் தெரியும்.செய்யவும் முடியாமல் விடவும் முடியாமல் சிக்கலாக இருக்கும் சூழ்நிலை இக்கட்டான
சூழ்நிலையாகும். அதுபோல சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாத சூழ்நிலையும் இக்கட்டான சூழ்நிலைதான். ஆங்கிலத்தில் அந்த சூழ்நிலையைப் ‘பாட்டில்நெக் சிச்சுவேசன் (Bottle Neck Situation) என்பார்கள். கோலி சோடாவில் அதன் கழுத்தில் இருக்கும் கோலிக் குண்டு, உள்ளேயும் போகாமல் , வெளியேயும் வந்துவிடாமல், அதன் கழுத்திலேயே இருக்கும் அல்லவா அந்த நிலைமை என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அதுபோன்ற சூழ்நிலை ஒரு இளம் பெண்ணிற்கு ஏற்பட்டது.

என்ன சூழ்நிலை அது?

வாருங்கள் அதை இன்று பார்ப்போம்.

நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அது. செழிப்பான கிராமம் ஒன்றில் நமது கதையின் நாயகி வசித்துக்கொண்டிருந்தாள். அவள் பெயர் பூவாத்தாள். செடியில் இருந்து பறித்த பூவைப்போன்று அம்சமாக இருப்பாள். வயது 22. செல்வந்தர் வீட்டுப் பெண். வாழ்க்கைப்பட்டு, தற்சமயம் இருக்கும் கிராமத்து வீடும் செல்வந்தர் வீடுதான். அதை வீடு என்று சொல்ல முடியாது. அரண்மனை போன்ற பெரிய மாளிகை.

அவளுடைய மாமனார் பெரிய நாட்டு மருத்துவர். கோட்டா தொந்தரவு இல்லாத காலத்தில் படித்தவர். அனுபவம் மிக்கவர், கைராசிக்காரர்
என்று பெயர் பெற்றவர்.சுற்றியுள்ள எல்லா ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் அவர்தான் மருத்துவர். வேறு ஆள் கிடையாது.அறுவை சிகிச்சையைத் தவிர
மற்ற எல்லாச் சிகிச்சைகளையும் வெற்றிகரமாகச் செய்யக் கூடியவர். அனுபவம் மிக்கவர். வயது 50.

அத்துடன் 50 கிலோமீட்டர் தூரம் உள்ள நகரத்திற்கு சென்றால்தான் வேறு வைத்தியர்கள் கிடைப்பார்கள். மண் ரோடுகள், வாகன வசதிகள்
இல்லாமல், எங்கே சென்றாலும் மாட்டு வண்டிகளில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற சூழலும் இருந்தது. அதைக் கவனத்தில் கொள்ளுங்கள்!

அறிமுகத்தைக் கொடுத்து விட்டேன். இப்போது கதைக்குப் போவோம்

                                  **************************************

பூவாத்தாளுக்குத் தொடையில் பெரிய கட்டி. அது வீங்கி எழுமிச்சம்பழ அளவிற்குப் பெரிதாகி, பழுத்து உடையும் நிலையில் இருக்கிறது. நான்கு
நாட்களாகத் தாங்க முடியாத வலி!.

கணவன் வேறு ஊரில் இல்லை! தனியாக அமர்ந்து கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.

வீட்டிற்கு வந்த அவளுடைய தோழி, விசனத்திற்குக் காரணம் கேட்க விவரத்தைச் சொன்னதோடு, தன்னுடைய சேலையை முழங்கால் வரை விலக்கி, அவளுக்கு, அந்தக் கட்டியைக் காட்டவும் செய்தாள்.

தோழி அரண்டு விட்டாள், "என்னடி இவ்வளவு பெரிதாக வீங்கி, உடையும் நிலையில் உள்ளது. சுத்த பைத்தியக் காரியாக இருக்கியே – உன்
மாமனாரிடம் காட்டி வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே? சொல்லாம அழுதுக்கிட்டிருந்தா சுகமாயிருமா?"

"எப்படியடி காட்டுவேன், அவர் என் மாமனார் ஆயிற்றே?"

"மாமனார் என்று ஏன் நினைக்கிறாய்? வைத்தியர் என்று நினைத்துக் காட்டு! எங்களுக்கு வந்தால் நாங்கள் காட்டி வைத்தியம் பார்த்துக்கொள்ள
மாட்டோமா?"

“நீங்களெல்லாம் காட்டி, மருந்தை வாங்கிக்கொண்டு போய்விடுவீர்கள். நான் வீட்டோடு அல்லவா இருக்கிறேன். அவர் எத்தனை நல்லவராக இருந்தாலும்,  எனக்கு மனசு என்று ஒன்று இருக்கிறதே - எப்படிக் காட்ட முடியும்? காட்டிவிட்டு அவரைப் பார்க்கும் போதெல்லாம் மனசு குறுகுறுக்குமே? அதோடு இந்த கிராமத்தில் இருக்கும் மற்ற பெண்களுக்குத் தெரிந்தால், அவர்களுடைய பார்வையை எப்படித் தாங்குவேன். உனக்கு இப்படி ஒரு நிலைமை என்றால் என்ன செய்வாய்? அதற்கு முதலில் பதில் சொல்லடி!"

தோழி மெளனமாகி விட்டாள்.

அழுதுகொண்டே தொடர்ந்து  பூவாத்தாள் சொன்னாள்:

"எல்லாம் என் தலை எழுத்து. இப்படி ஒரு இக்கட்டு. காட்டினால் மானம் போகும்; காட்டாவிட்டால் பிராணன் போகும்!"

உண்மைதான். இதுதான் இக்கட்டான சூழ்நிலை என்பது. இக்கட்டான சூழ்நிலைக்கு, இந்தக் கதையைத்தான் எங்கள் அப்பச்சி சொல்வார்கள்.
இதை அவர்கள் என்னிடம் சொல்லியதில்லை. மற்றவர்களிடம் சொல்லியபோது நான் கேட்டதாகும். அதை உங்களுக்கு அறியத்தந்திருக்கிறேன்

                          ************************************************
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================================

21.11.13

உளவியல் குட்டிக்கதை: கைத் துப்பாக்கி

 

1
உளவியல் குட்டிக்கதை: கைத் துப்பாக்கி

கதையின் தலைப்பு: கைத் துப்பாக்கி

காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேந்திரன் தன் மனைவி சுஜாதாவைக் கைத்தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பதட்டத்தோடு பேசினார்.

"சுஜாதா, ஒரு முக்கியமான விஷயம்."

மனைவி இடைமறித்தார், "நீங்கள் கூப்பிடுவீர்கள் என்று தெரியும்.உங்கள் கைத்துப்பாக்கிதானே?"

"ஆமாம், அவசரத்தில் அதை வைத்துவிட்டு வந்து விட்டேன்.நம் வாண்டுப்பயல் கண்ணில் படுமுன் அதை எடுத்து உள்ளே வை!"

"அவன் கண்ணில் படாமல் இருக்குமா? எடுத்துக்கொண்டு சமையல் அறைக்கு வந்து, நீட்டி, ஹாண்ட்ஸ் அப் என்று சொல்லி விட்டான்"

"அடடா, அப்புறம் என்ன செய்து சமாளித்தாய்?"

"என்ன செய்திருப்பேன் - ஊகம் செய்து சொல்லுங்கள் பார்க்கலாம்?"

"கெஞ்சிப் பிடித்து - அதை வாங்கினாயா?"

"கெஞ்சுவதாவது - பிடிப்பதாவது! ஒரு அடி நகர்ந்தால்கூட, தெரியாமல் டிரிக்கரை அழுத்தி விட்டான் என்றால் என்ன செய்வது?"

"பிறகு எப்படி வாங்கினாய்?"

உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவள் உற்சாகமாகச் சொன்னாள்,  "ஏமாற்றி வாங்கினேன். என்னங்க..அவனைப் பிடிக்காதீர்கள் என்று குரல் கொடுத்தேன். நீங்கள்தான் பின்னால் வருகிறீர்கள் என்று நினைத்துத் திரும்பினான். பாய்ந்து சென்று அப்படியே அமுக்கிப் பிடித்து,  வாங்கிவிட்டேன்.

மகேந்திரனுக்குப் பரம சந்தோஷம். இவள் அல்லவா காவல்துறையில் இருக்க வேண்டியவள் என்று நினைத்துக் கொண்டார்.
--------------------------------------------------
2
ஒரு மகிழ்ச்சியான விஷயம்:-)))

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. ஆனாலும் கூகுள் ஆண்டவரின் துணையோடு வகுப்பறை நடக்கும்.  (Through auto post settings in the blog) இன்றையப் பாடத்தை மேலே பதிவிட்டுள்ளேன். அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கருத்தை (விமர்சனத்தை) பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள்.

நாளை வழக்கம் போல பக்தி மலர் உண்டு. அது வழக்கத்திற்கு மாறான, வித்தியாசமான பக்தி மலர். அனைவரும் நாளை தவறாமல் வகுப்பறைக்கு வந்து அந்த பக்தி மலரைப் படித்து மகிழும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

உங்களுடைய பின்னூட்டங்களும், அதற்கான பதில்களும், வாத்தியார் திரும்பி வந்த பிறகு சனிக்கிழமையன்று வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===================================================

4.10.12

Astrology எதை முதலில் பார்க்க வேண்டும்?



Astrology எதை முதலில் பார்க்க வேண்டும்?

முற்காலத்தில் ஒருஅரசன் இருந்தான்!

எந்த நாட்டில்?

நாடெல்லாம் முக்கியமில்லை.

கதையை மட்டும் படியுங்கள்
-------------------------------------
தன் பேரரசிற்கு ஒரு முதன் மந்திரியை நியமிக்க விரும்பினான் அவன்.
கவிராயர்கள், குருமார்கள், கல்விமான்கள், விகடகவிகள் என்று தன் அரசபையில் இருக்கும் பலரில கல்வித்தகுதி மற்றும் வயதில் சமமாக இருக்கும் 4 பேர்களை முதலில் அவனாகவே தெரிவு செய்தான். பிறகு தன் அரச சபையில் தன் தெரிவுகளை அறிவித்ததோடு, அவர்கள் நால்வருக்கும் ஒரு பரிட்சை வைக்கப்போவதாகவும், அதில் யார் முதல் நிலையில் தேர்வு
பெறுகிறாரோ, அவரே முதன் மந்திரியாகும் வாய்ப்பைப் பெறுவார் என்றும் அறிவித்தான்.

மற்றவர்கள் எப்படியோ, ஆனால் அந்த நால்வரும் பரபரப்பிற்கு உள்ளாகிவிட்டார்கள்.

ஒரு வாரம் சென்றது. ஒரு நாள் அவர்கள் நால்வரையும் அழைத்த மன்னன் சொன்னான்.

“நான் ஒரு பூட்டைத் தயார் செய்து வைத்துள்ளேன். கணித அடைப்படையில் விஞ்ஞான பூர்வமாக செய்யப்பெற்ற பூட்டு அது. நாளை காலை உங்கள் நால்வருக்கும் அந்தப் பூட்டைத் திறக்கும் வாய்ப்பு வழங்கப்பெறும். யார் ஒருவர் குறுகிய நேரத்திற்குள் சாமர்த்தியமாக அந்தப் பூட்டைத் திறக்கிறீர்களோ அவரே வெற்றி பெற்றவராவார். முதன் மந்திரி பதவியும் அவருக்குத்தான்”

அவ்வாறு மன்னன் சொன்னதைக் கேட்ட அவர்கள் நால்வரும், அரசசபையில் இருந்து தத்தம் வீட்டிற்குச் சென்று பலத்த சிந்தனைக்கு ஆளானார்கள். எப்படியாவது வெற்றி பெற்றுப் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் அவர்கள் நால்வருக்கும் இருந்தது.

பூட்டுக்களின் செய்முறையை பற்றிய பழைய நூல்களையும், கணிதக் குறிப்புக்களில் பூட்டுக்களுக்கான செய்திகளையும் படித்து குறிப்பு எடுத்துவைத்துக்கொண்டார்கள்.

அவர்களில் மூவர் இரவு முழுவதும் தூங்காமல் பல நூல்களையும், ஏடுகளையும் படித்து மனதில் தக்க வைத்துக்கொண்டார்கள். ஒருவர் மட்டும் சில ஏடுகளைப் புரட்டிப் பார்த்ததோடு நிறுத்திக்கொண்டு, சீக்கிரமே நித்திரைக்கு ஆளாகி, நன்றாக உறங்கிவிட்டார்.

அடுத்த நாள் காலை!

அரசசபையில் பூட்டு கொண்டு வரப்பெற்று அவர்கள் முன்பாக வைக்கப்பெற்றது. அதன் அருகே மன்னனும் இருந்தார்.

பூட்டு அளவிலும் சரி, தொழில் நுட்பத்திலும் சரி அனைவரையும் ஆச்சரியப் படுத்தும் விதமாக பெரிதாக இருந்தது.

பூட்டின் படம் கீழே உள்ளது. நீங்களும் பாருங்கள்



ஒருவருக்குப் பின் ஒருவராக பூட்டின் அருகே சென்று பார்ப்பதற்கு அவர்கள் நால்வருக்கும் அனுமதியளிக்கப்பெற்றது. தாங்கள் எடுத்து மனதில் தேக்கி ந்வைத்திருந்த  குறிப்புக்களின் படி, தங்களுக்குத் தெரிந்த விதத்தில் அல்லது தங்களுக்கு யோசனை தோன்றிய விதத்தில் அந்தப் பூட்டை அவர்கள் திற்க்க முயன்றார்கள்.

இரவு தன்னுடைய தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ளாமல் சீக்கிரமாகப் படுத்து உறங்கினானே, அவன் தான் அந்த நால்வரில் இறுதியாகப் பூட்டின் அருகே வந்தான். பூட்டை நன்றாகப் பரிசோத்தித்துப் பார்த்தான். அவனுடைய வியப்பைப் பல மடங்கு அதிசயப்படுத்தும் விதமான் ஒன்றை அப்போதுதான் அவன் கவனித்தான். அந்தப் பூட்டு பூட்டப்படாமலேயே இருந்தது.

சாவியைப் பயன் படுத்தாமல், பூட்டின் மேற்பகுதியில் இருந்த இணைப்புக் கம்பியை விலக்கிவிட்டு (by removing the hook) பூட்டை எளிதாக அவன் திறந்து விட்டான்.

சொல்லவும் வேண்டுமா?

அவனுக்குத்தான் முதன் மந்திரிப் பதவியும் கிடைத்தது.

உண்மை என்னவென்றால், அந்தப் பூட்டு பூட்டப் படவில்லை.(The fact was, the lock was not locked.)

மற்ற மூவரும் பரபரப்பினாலும், வெற்றிபெற வேண்டுமே என்ற ஆதங்கத்தினாலும் அதைக் கவனிக்கவில்லை.

அதாவது முதலில் எதைச் செய்திருக்க வேண்டுமோ அதை அவர்கள் செய்யவில்லை
------------------------------------------------------------------------------------
”வாத்தி (யார்) இந்தக் கதை எதற்காக?”

”ஜோதிடப் பாடம் படிக்கும் பலரும் இதைததான் செய்கிறீர்கள். பூட்டைத்தான் பார்க்கிறீர்கள். பாடத்தைத்தான் பார்க்கிறீர்கள். பூட்டு பூட்டப் பட்டுள்ளதா என்பதை முதலில் பார்க்காததைப்போல, விதிவிலக்குகளைப் பார்ப்பதில்லை. ஆகவே  விதிவிலக்குகள் உள்ளதா என்று முதலில் பாருங்கள்”

To solve a problem, one must first understand the problem.To understand the problem, the mind should be calm, without tension or agitation. This will facilitate seeing things objectively.

நமது வகுப்பறை நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் தான் படித்ததாகக் கூறி மின்னஞ்சலில் அனுப்பிய கதை.  கதை ஆங்கிலத்தில் இருந்தது. மொழியாக்கம் மற்றும் அடியேனுடைய கைவண்ணம். அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.7.11

முதலில் யாருக்குச் சிறந்தவராக நீங்கள் இருக்க வேண்டும்?

---------------------------------------------------------------------------------------
முதலில் யாருக்குச் சிறந்தவராக நீங்கள் இருக்க வேண்டும்?

மூன்று தையற்காரர்கள் இருந்தார்கள். தொழிலில் நன்றாகத் தேர்ச்சியடைந்த பின் முன்னேற்றத்தைத் தேடி மூவரும்  ஒரு பெரிய நகரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். மூவரும் நகரின் பிரதான சாலையில் தகுந்த இடத்தை வாடகைக்குப் பிடித்து, தங்கள் தொழிலைத் தனித்தனியாகச் செய்யத் துவங்கினார்கள்.

அடுத்த நாள் காலை, முதலாமவன், தன் கடை வாசலில் கீழ்க்கண்டவாறு அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தான்:

  “நகரின் மிகச்சிறந்த தையற்காரர் இங்கே இருக்கிறார்”

அதேபோல இரண்டாவது ஆசாமியும் தன் கடை வாசலில் இப்படி ஒரு அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தான்.

   “உலகின் மிகச் சிறந்த தையற்காரர் இங்கே இருக்கிறார்”

இரண்டையும் கண்ணுற்ற மூன்றாமவன், திகைத்துப்போனான். அதே
போல தன் கடை வாயிலும் ஒரு அறிவிப்புப்  பலகை ஒன்றை வைக்க விரும்பினான். அத்துடன் தன்னுடைய கடைப்பலகை அவை
இரண்டையும் விட மேன்மை உடையதாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினான். பலமாக யோசனை செய்து, அடுத்த நாள் இப்படி ஒரு  அறிவிப்புப் பலகையை வைத்தான்.

“இந்தத் தெருவின் மிகச் சிறந்த தையற்காரர் இங்கே கடை வைத்திருக் கிறார். ஒருமுறை தைத்துப் பாருங்கள்”

யாரிடம் கூட்டம் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

மூன்றாவது ஆசாமியிடம்தான் கூட்டம் சேர்ந்தது!

உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் என்ன செய்யப்
போகிறீர்கள் என்பதுதான் அதி முக்கியமானது.  அதுதான் 
அதிகமான வரவேற்பைப் பெறும் அதை மனதில் வையுங்கள்.
------------------------------------------------------------------------------------------------------
இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. மொழிமாற்றம் மட்டும் அடியேனுடைய கைவண்ணம்

அன்புடன்
வாத்தியார்
21.7.2011


வாழ்க வளமுடன்!

13.7.11

குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்?

இளம்பெண் ஒருத்தி கவலை தோய்ந்த முகத்துடன், தன் மருத்துவரிடம் சென்றாள். அவள் நேரம், அன்று அவர் ஃப்ரீயாக இருந்தார். சென்றவள் பரபரப்புடன் தன் பிரச்சினையைச் சொன்னாள்:

“டாக்டர், நான் ஒரு சீரியசான பிராப்ளத்தில் இருக்கிறேன். உங்கள் உதவி தேவை”

மருத்துவர் இன்முகத்துடன் சொன்னார்,” என்னவென்று சொல்லுங்கள். சரி பண்ணிவிடலாம்.”

“என்னுடைய கைக்குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகிறது. நான் மறுபடியும் கர்ப்பம் தரித்துள்ளேன். குறைந்த இடைவெளியில் மீண்டும் ஒரு குழந்தை எனக்கு வேண்டாம்”

“சரி, என்ன செய்யலாம் சொல்லுங்கள்?”

“உண்டாகியிருக்கும் கர்ப்பத்தைக் கலைத்துவிட வேண்டும். சிரமம் இல்லாமல் அதைச் செய்து முடிக்க நீங்கள்தான் உதவ வேண்டும்”

சற்று யோசித்த மருத்துவர் அந்தப் பெண்ணிடம் சொன்னார்.  “உங்கள் பிரச்சினை தீர இன்னும் ஒரு வழி உள்ளது. அதில் உங்கள் உடம்பிற்கு அபாயம் எதுவும் ஏற்பட சான்ஸில்லை!”

அவள் புன்னகை செய்தாள். மருத்துவர் ஒரு நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இப்போது உண்டானது.

அவர் தொடர்ந்து சொன்னார்.  “ இரண்டு குழந்தைகளை ஒரே நேரத்தில் உங்களால் ஒன்றாக வளர்க்க முடியாது என்னும் சூழ்நிலையில், கையில் இருக்கும் குழந்தையைக் கொன்று விடுவோம். அடுத்த குழந்தை பிறப்பதற்குள் உங்களுக்கு சற்று ஓய்வும் கிடைக்கும். கொல்வது என்று முடிவிற்கு வந்துவிட்டபின் எந்தக் குழந்தையைக் கொன்றால் என்ன? கையில் இருக்கும் குழந்தையைக் கொல்வதன் மூலம், கருக்கலைப்பில் ஏற்படவிருக்கும் சிக்கல்களை, அபாயத்தை நீங்கள் தவிர்க்கலாம். யோசித்துப் பாருங்கள்”

கலவரம் அடைந்த அப்பெண் மெல்லிய குரலில் சொன்னாள்.” இல்லை டாக்டர். அது கொடுமையானது. அத்துடன் கைக்குழந்தையைக் கொல்வது பெரும் குற்றமாகிவிடுமே!”

“நானும் ஒப்புக்கொள்கிறேன். அது உங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று சொன்ன மருத்துவர், தான் உண்மை நிலையை அவளுக்கு உணர்த்திவிட்டதாக எண்ணினார்.

வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கொல்வதும், கையில் இருக்கும் குழந்தையைக் கொல்வதும் - இரண்டும் ஒன்றுதான். இரண்டிற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. இரண்டிலும் குற்றத்தின் அளவு ஒன்றுதான் என்பதை அப்பெண்மணி உணர்ந்தாள்!

மருத்துவருக்கு தன் நன்றியைத் தெரிவித்துவிட்டு அவள் எழுந்து சென்று விட்டாள்.

இப்போது அவள் மனம் தெளிவடைந்திருந்தது!
-------------------------------------------------------------------------
- இது இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. மொழிமாற்றம் மட்டும் அடியேனுடைய கைங்கர்யம்
--------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்







வாழ்க வளமுடன்!

24.12.10

கடவுள் செய்து வைத்துள்ள மாற்று ஏற்பாடுகள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++
 பக்தி மலர்: கடவுள் செய்து வைத்துள்ள மாற்று ஏற்பாடுகள்!
---------------------------------------------------------------------
இன்றைய வகுப்பறையின் பக்தி மலரை, நமது வகுப்பறை மாணவி ஒருவருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++
உட்தலைப்பு: மனதிற்கு இதமான சில தத்துவங்கள்
இறைவனின் படைப்பில் மான் மிகவும் அழகானது. அந்த மானும் மனிதன் மாதரி சில நேரங்களில் நமக்கு சில  உறுப்புகளைக் கடவுள் அழகாக வைக்கவில்லை என்று மனவருத்தம் கொள்ளுமாம்

ம‌னித‌னுக்கு என்ன‌தான் அழ‌கையும், உட‌ற்க‌ட்டையும், ப‌டிப்பையும், போக‌த்தையும் கடவுள் கொடுத்திருந்தாலும் மனிதன் ம‌ன‌நிறைவு கொண்டதாகச் சரித்திரம் இல்லை!

தங்கள் உருவ‌த்தைக் க‌ண்ணாடியில் பார்த்து மன வருத்தம் கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். கடவுளின்  படைப்பில் நாம் அனைவருமே அழகுதான். அழகானவர்கள்தான்!

யாருக்கு உட‌ல் ந‌ல‌க் குறைவோ (நீண்ட‌ தீராத‌ பிணி) அல்லது உடல் ஊனமோ அவ‌ர்க‌ள்தான் வருத்தம்  கொள்ளலாம். மற்றவர்கள் வருத்தமடைவது நியாயமல்ல!

மானும் அதே மாத‌ரி ‍ஓடைக்குச் சென்று நீர் பருகும் பொழுதெல்லாம் த‌ன்னுடைய‌ உருவ‌ பிம்ப‌த்தை நீரில்  பார்த்து வேத‌னைப்ப‌டுமாம்.
அதோடு ச‌ந்தோஷ‌மும் ப‌டுமாம். “ச்சே என்ன‌ காலு இது ஒல்லி
ஒல்லியா குச்சிமாதிரி? க‌ட‌வுள் த‌டி த‌டியா அழ‌கா குட்டையா வைக்க‌மா போயிட்டாரே  இந்த‌ உருவ‌த்திற்கும் இந்த‌ அழ‌குக்கும்  இந்த‌க் கால்
தேவையா?” என்று வேத‌னைப்படுமாம். கொம்பு இருப்பதால்
சந்தோஷமும் கொள்ளுமாம்.

“ஆ எவ்வ‌ளவு அழகான கொம்பைக் க‌ட‌வுள் எனக்குத் த‌ந்திருக்கிறார்? கிளை கிளையா அழ‌கா பிரிந்து  போகின்றதே? என‌க்கு கிடைத்த கொம்பைப் போன்ற கொம்புகள் ம‌ற்ற‌ ஜீவ‌ராசிக‌ளுக்கு இல்லையே?” என்று  ம‌னதைத் தேர்த்திக் கொள்ளுமாம்.

ஒரு நாள் மான் புல் மேய்ந்து கொண்டிருந்த‌து. அந்த‌ நேர‌த்தில் புலி
ஒன்று மானைத் தேடி வந்து, தூர‌த்த  ஆரம்பித்தது. த‌ன் உயிரைக் காப்ப‌ற்றிக்கொள்ள‌ மான் மிக‌வும் வேக‌த்தோடு ஓடிய‌து. ஓடும்
வ‌ழியில் கொம்பு ஒரு  ம‌ர‌த்தின்  தாழ்வான கிளையில் மாட்டிக்
கொண்ட‌து.  மானின் கால்க‌ளோ வேக‌மாக‌ ஓட‌த் துடித்த‌து. கொம்போ  ஒத்துழைக்கவில்லை. புலியோ அதைத் தின்ப‌த‌ற்கு நெருங்கி வ‌ந்து கொண்டிருந்த‌து. கடுமையான போர‌ட்ட‌த்திற்கு  பிற‌கு மானின் கொம்பு உடைந்துவிட்ட‌து. மானும் த‌ப்பித்து ஓடி ஒரு புத‌ரில் ம‌றைந்து கொண்ட‌து.

மான் த‌ன்னுடைய‌ அழ‌கில்லா கால்க‌ள் த‌ன்னை காப்பாற்ற‌ துடித்த‌தையும், அழ‌கான் கொம்பு மறுத்த‌தையும்  நினைத்து வ‌ருத்த‌ப்ப‌ட்ட‌து. மேலும் கொம்பு உடைந்த‌ற்கு வ‌ருத்த‌ம் கொள்ள‌வில்லை அது மற்றொரு ப‌க்க‌ கொம்பையும் வெறுக்கத் துவங்கியது.

அந்த‌மாத‌ரி எந்த‌ பொருளில் எல்லாம் மிகுந்த அழ‌கிருக்கிறதோகோ அதில் எல்லாம் ந‌ம‌க்குத் துன்ப‌மும்  இருக்கும். எந்த‌ப் பொருளில் எல்லாம் அழ‌கில்லையோ அதில் துன்ப‌ம் இருக்காது.

அழ‌கான‌ ம‌னைவி அல்லது க‌ண‌வ‌ன் ஒருவர் கண்ணுக்கு மற்ரவர் விருந்தாவார்கள் (அவர்கள் ஆபரணம்  போன்றவர்கள்) குண‌மான‌
ம‌னைவி அல்லது க‌ண‌வ‌ன் ஒருவர் மனதிற்கு மற்ரவர் மகிழ்ச்சியைக் கொடுப்பார்கள்.(அவ‌ர்க‌ள் பொக்கிஷம் போன்றவர்கள்)

ம‌ன‌ம் அழ‌கில் ம‌ய‌ங்கும் த‌ன்மையையுடைய‌து.

சீதை மாய‌மானின் அழ‌கில் ம‌ய‌ங்கிப் பின் துன்புற்றார். துன்ப‌த்திற்குக் கார‌ண‌ம் ம‌ன‌சுதான். ஆசையை  உருவாக்குவ‌தும் ம‌னசுதான். ம‌ன‌சு என்ற‌ குதிரைக்கு நாம் க‌டிவாள‌மிட்டு அட‌க்கி ஆளவேண்டும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
ராஜ‌நாக‌ம் மிகவும் அழ‌காக இருக்கும். அதே நேர‌த்தில் எந்த‌ பாம்புக‌ளுக்கும் இல்லாத கொடிய‌ விஷ‌த்தைக்  கொண்டுள்ளது அதன் த‌னிச் சிற‌ப்பு.

அந்த‌ப் பாம்பு எப்பொழுதும் ம‌னித‌னின் த‌லையில்தான் எகிறி கொத்துமாம். கொத்து வாங்கியவன் நிமிட‌த்தில்  டிக்கெட் வாங்கி விடுவான். அதாவது சிவலோகம் அல்லது வைகுண்டம் சென்று விடுவான்.

அந்த‌ ராஜ‌ நாக‌த்தினால் காட்டில் வாழும் ம‌ற்ற‌ வில‌ங்குக‌ள் எல்லாம் துன்ப‌த்தை அனுப‌விக்கும். அந்த‌ பாம்பைப்  பார்த்தால் யானை கூட‌ப் பய‌ந்து ஒதுங்கிச் செல்லுமாம்.

வ‌ல்ல‌வ‌னுக்கு வ‌ல்ல‌வ‌ன்  ஒருவன் இருக்க‌வே செய்வார். க‌ட‌வுள் க‌ட‌வுள் க‌ருணைமிக்க‌வ‌ர். எந்தொவொரு  ஆர‌ம்ப‌த்திற்கும் முடிவை வைத்திருப்பார். தீர்வை வைத்திருப்பார். துன்ப‌த்திற்கும் முடிவைக் கொடுப்பார்.

கொடுமைக்காரர்க‌ளுக்கும் ஒரு முடிவை வைத்திருப்பார்.

அக‌ந்தையில் (தான் என்ற‌ க‌ர்வ‌த்தோடு) இருப்பவர்க‌ளூக்கும் பாட‌ம் புகட்டுவார். அந்தப்‌  பாம்புக‌ள் அதிக‌ அளவில் குஞ்சு பொரிக்கும்.
பெரும்பாலும் ந‌திக்க‌ரை ஓர‌ங்க‌ளில்தான் அவைக‌ள் பொரிக்கும்.

அந்த‌க் குட்டிக‌ள் எல்லாம் நீரை நோக்கி ஓடும். அவற்றிற்கு நீந்துவது
மிகவும் பிடிக்கும். மீன்களையும், த‌வ‌ளைகளையும் பிடித்து அவைகள் சாப்பிடும்.  பாவ‌ம், அந்த‌ ராஜ‌ நாக‌த்தை முத‌லை பிடித்து  நின்றுவிடும். அதோடு ம‌ட்டுமில்லாம‌ல் முத‌லை அவைக‌ளிருக்கும் க‌ரைக்கே வ‌ந்து, நிறைய பாம்புக் குட்டிக‌ளைப்  பிடித்துத் தின்று விடும். ராஜ‌நாக‌ம்
நிறையக் குஞ்சுகளைப் பொரித்தாலும் ஒவ்வொரு த‌ட‌வையும் 2
அல்லது 3  குட்டிகள் மட்டுமே  உயிரோடிருக்கும். அப்படி முத‌லைகள் தின்னவில்லையென்றால், காட்டில் விலங்குகள் ஒன்றும்  இருக்காது. அதாவது மிஞ்சாது.

க‌ட‌வுள் வ‌ல்லமை உடைய ஒன்றைப் ப‌டைத்துவிட்டால் அதற்கு ஈடாக, மாற்று ஏற்பாடாக, வேறு ஒரு  வ‌ல்ல‌மையையும் படைத்து இருப்பார்.

மனிதர்களுக்கும் மாற்று ஏற்பாடாகக் கடவுள் சர்வ வல்லமை படைத்த ஒன்றை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்.

அதன் பெயர் ஊழ். உங்கள் மொழியில் சொன்னால் விதி. (Destiny)

எத்தனை உடல் வலிமை இருந்தாலும், எத்தனை மன வலிமை
இருந்தாலும், எத்தனை புத்திசாதுர்யம் இருந்தாலும்,  எத்தனை
செல்வம் இருந்தாலும் - கோடிகளை வீசி எதையும் வசமாக்கும்
திறமை இருந்தாலும், எத்தனை பெரிய பதவி இருந்தாலும்,
எத்தனை செல்வாக்கு இருந்தாலும், விதியின் முன் அவைகள்
ஒன்றும் செல்லாது!

ஆடுபவர்களை, ஆட்டம் போடுபவர்களை எல்லாம் விதி, ஒருநாள், அடக்கி, ஒடுக்கி, முடக்கி வைத்துவிடும். எத்தனையோ பேர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். மண்ணோடு மண்ணாகியிருக்கிறார்கள்.

விதியைவிட வலியது எது?

அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்நுறும் - குறள் எண் 380


அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் அவர்கள் இப்படி அழகாக மொழி பெயர்த்திருக்கிறார்:

what is stronger than fate? If we think of an expedient (to avert it), It will itself be with us before the thought

சர்வ வல்லமை படித்த கடவுளை அனுதினமும் வணங்குவோம்.
அவன் தாள் பணிவோம்; அக மகிழ்வு கொள்வோம்!

-------------------------------------------------------------------------
ஆக்கத்தைத் தந்த மாணவி, தன் பெயரையும் ஊரையும் வெளியிட வேண்டாம் என்று அன்புக் கட்டளை இட்டிருக்கிறார். ஆகவே அவற்றை வெளியிடவில்லை.

நீங்கள் கொடுக்கும் உற்சாகத்தில், அடுத்த ஆக்கத்தில், அவரே தன் பெயரை வெளியிடுவார் என்று நம்புவோமாக!
+++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

27.11.10

எங்கும் இலவசம்; எதிலும் இலவசம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்கும் இலவசம்; எதிலும் இலவசம்!

"எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் நிலை வேண்டும்
எங்கள்கவி பாரதி எண்ணப்படி வேண்டும்
தங்கத் தமிழ் தணிகைத் தமிழ் மதுரைத்தமிழ் வேண்டும்
தமிழே என் ஊனாக உயிராக வேண்டும்”


என்று எனது நண்பரும், பிரபல கவிஞருமான கவித்தென்றல் காசு.மணியன் அவர்கள் மேடைதோறும் முழங்குவார்.

அந்த வைர வரிகளைச் சற்று மாற்றி நான் இப்படிச் சொல்வேன்.

“எங்கும் இலவசம் எதிலும் இலவசம் என்னும் நிலை வேண்டும்
எங்கள் மக்கள் எண்ணப்படி வேண்டும்”


ஏன் அப்படிச் சொல்வேன்?

விவரம் பதிவில் உள்ளது. படித்துப்பாருங்கள்
______________________________________________
இலவசத்தைப் பற்றி ஒரு கதை உண்டு:

முற்காலத்தில், நாகபட்டினம் அருகே ஒரு நிலச்சுவான்தார் இருந்தார். அந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தன. ஜமீந்தார், மிராசுதார், பண்ணையார் என்று எப்படி  வேண்டு மென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆசாமி கஞ்சன். அவர் வாங்கிவந்த வரம் அப்படி! பண்ணையில் ஆயிரக் கணக்கான மூட்டைகள் நெல் விளைந்தலும், ஆசாமி பத்துக் காசுகள்கூட தர்மம் செய்ய மாட்டார். யாருக்கும் ஈய மாட்டார். கொடுக்க மாட்டார். மதியம் வைத்த சோற்றில் தயிரையும், தண்ணீரையும் ஊற்றி வைத்து, இரவில் சின்ன வெங்காயம் ப்ளஸ் மாங்காய் ஊறுகாய் ஆகையவற்றைத் தொட்டுக் கொண்டும் கடித்துக்கோண்டும் உண்பார்.

ஒரு சமயம் அவருடைய நண்பர் ஒருவர் வந்து சொன்னார்:

“பக்கத்து நாட்டிலிருந்து ஆயிரம் இளம் பெண்கள் கப்பலில் வருகிறார்கள்”

இவர் கேட்டார்: “எதற்கு?”

“அங்கே வறட்சியாம். வேலை தேடி வருகிறார்கள். சம்பளம் எதுவும் கொடுக்க வேண்டாம். இருக்க இடம்.உடுக்க உடை. உண்ண உனவு கொடுத்தால் போதும். சொல்லும் வேலையை செய்வார்கள். அத்துடன் எல்லா வேலைகளுக்கும் லாயக்கானவர்கள்”

எல்லா’ வேலைகளுக்கும் லாயக்கானவர்கள் என்று அவர் சொன்னதில் ஒரு உள் அர்த்தம் உள்ளது. அதை நான் பதிவில் எழுத முடியாது. உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

மிராசுதார் உடனே கேட்டார்: “அவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?”

“கேட்கிறவர்களுக்குக் கேட்கிறபடி கொடுக்கப் போகிறோம்”

“அப்படியென்றால் எங்கள் வீட்டிற்கு மூவரை எழுதிக்கொண்டு, ஏற்பாடு செய்”

“என்ன கணக்கு?”

“எனக்கு ஒன்று. என் அப்பனுக்கு ஒன்று. என் தம்பிக்கு ஒன்று!” என்று இவர் சொல்ல, வந்தவர் எழுதிக்கொண்டு போய்விட்டார்.

என்ன நடந்தது?

மீதிக்கதை மின்னஞ்சலில். 

மீதிக்கதை மட்டுமல்ல - கதைக்கான காரணமும் மின்னஞ்சலில்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

30.4.10

ஆணவத்திற்கு விழுந்த அடி!



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆணவத்திற்கு விழுந்த அடி!

ஒரு சாமியார் இருந்தார். வேண்டாம் ...ஒரு சந்நியாசி இருந்தார். ..அதுவும் வேண்டாம்...ஒரு துறவி இருந்தார்.

நல்ல விஷய ஞானம் உள்ளவர். எல்லா விஷயங்களையும் அறிந்தவர். எல்லா நாடுகளுக்கும் சென்று வந்தவர். அவருக்கு ஏராளமான தொண்டர்கள், சீடர்கள், பின்பற்றுபவர்கள் இருந்தார்கள்.

மைக்கைப் பிடித்தால் மணிக்கணக்கில் பேசுவார். சுவாரசியமாகப் பேசுவதில் கில்லாடி. சபையை நிறைக்கும் கூட்டமும், மெய்மறந்து அவருடைய
உரையைக் கேட்கும்.

இறைவனைப் பற்றியும் பேசுவார். இயல்பு வாழ்க்கையைப் பற்றியும் பேசுவார்.

பிரதான சீடன் ஒருவன் கூடவே இருப்பான்.

அவர் நல்லவர். வல்லவர்.ஆனாலும் பேச்சில் கொஞ்சம் அகராதி இருக்கும். சில சமயங்களில் ஆணவம் தலைதூக்கும்.

ஒரு சமயம் மேடையில் பேசும்போது இப்படி சொன்னார்:

“இந்த உலகில் நான் பார்க்காத இடமே இல்லை. என் கண்படாத இடமே இல்லை!”

அவருக்குப் பின்புறம் மிக அருகில் அமர்ந்திருந்த பிரதான சீடன், குறுக்கிட்டு மெல்லிய குரலில் சொன்னான்:

“ஒரு இடம் இருக்கிறது சுவாமிஜி!”

மைக்கைச் சட்டென்று தன் கைகளால் மூடிக்கொண்டு, அவனை நோக்கித் திரும்பிய சுவாமிஜி, கோபத்துடன், அதே நேரத்தில் மெல்லிய குரலில், உறுமும் தொனியுடன் கேட்டார்:

“எந்த இடம்?”

சீடன் பதில் சொன்னான்:
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
“உங்கள் முதுகு!”
--------------------------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

19.2.10

வெற்றியின் ரகசியம் என்ன?



+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெற்றியின் ரகசியம் என்ன?

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC)

அவர் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள், ஒரு இளைஞன் வந்து அவரை சந்தித்தான். வெற்றியின் ரகசியத்தைத் தனக்கு சுருக்கமாகச் சொல்லித்தருமாறு வேண்டிக்கொண்டான்.

அடுத்த நாள் காலை, ஊருக்கு அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு வந்து தன்னை சந்திக்கச் சொல்லி, அப்போதைக்கு அவனை அனுப்பிவைத்தார் அவர். அவனும் மறு பேச்சின்றி சென்று விட்டான்.

அடுத்த நாள் காலை. ஆற்றங்கரைக்கு வந்து அவரைச் சந்தித்தான் அவன்.

தன்னுடன் சேர்ந்து நடக்குமாறு அவனைப் பணித்துவிட்டு, அவர் ஆற்றுத் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவனும் நடந்தான்.

மார்பளவு நீருள்ள பகுதிக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

அப்போதுதான் அது நடந்தது.

சற்றும் எதிர்பார்க்காத வகையில், அந்த இளைஞனைத் தன் இருகரங்களாலும் பிடித்த சாக்ரடீஸ், தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தண்ணீருக்குள் அமுக்கிப் பிடித்துக் கொண்டார்.

ஒன்றும் புரியாத இளைஞன், அவர் பிடியில் இருந்தும், நீருக்குள் இருந்தும் விடுபட முயன்றான். முடியவில்லை.

ஒரு நிமிட மரணப் போராட்டத்திற்குப் பிறகு, தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். முகம் சிவந்துவிட்டது. மூச்சுத் திணறியதால், வேக வேகமாகக் காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கத் தொடங்கினான்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் தன்நிலைக்கு வந்தான்.

சாக்ரடீசின்மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால், அமைதியாகக் கேட்டான்:

“ஐயா, ஏன் இப்படிச் செய்தீர்கள்?”

“செய்ததைவிடு! தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது உனக்கு மிக அத்யாவசியமாகத் தேவைப்பட்டது எது? - அதைச் சொல் முதலில்!” என்று பதிலுக்கு அவனைக் கேட்டார் சாக்ரடீஸ்.

“காற்று. சுவாசிப்பதற்கான காற்று!”

“வெற்றியின் ரகசியமும் அதுதான். மோசமான நிலையில் ஒன்று தேவைப்படும் நிலையில், போராடி, அதைப் பெற்றாய் இல்லையா நீ? வெற்றியும் அதுபோலத்தான் கிடைக்கும். வெற்றிக்கு வேறு ரகசியம்
ஒன்றும் இல்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்படி உள்ளது கதை?

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!