மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Short Story. Show all posts
Showing posts with label Short Story. Show all posts

30.5.18

Short Story சிறுகதை: ஈரமண்


Short Story சிறுகதை: ஈரமண்

அன்புடையீர்
மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய சிறுகதை. அந்த இதழில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது. நீங்கள் படித்து மகிழ அதை இன்று வலையில் ஏற்றியுள்ளேன்
அன்புடன்
SP.VR. சுப்பையா, கோயமுத்தூர் - 641012
-------------------------------------------------------------
”ஈரமண்ணில் எதை வேண்டுமென்றாலும் விளைவிக்கலாம். அந்த மண் காய்ந்து போய்விட்டால் ஒன்றும் விளையாது. அதுபோல ஒரு பெண் ஈரமண்ணாக இருக்கும்போதே திருமணம் செய்தால், நாம் சொல்கின்ற மாப்பிள்ளைக்கு ஒன்றும் சொல்லாமல் கழுத்தை நீட்டுவாள். கல்யாணம் செய்து கொள்வாள். அதே பெண் சற்று வயதாகி காய்ந்த மண்ணாகி விட்டால் சிரமம். சிக்கல். அவள் கேட்கின்றபடிதான் நாம் மாப்பிள்ளை பார்க்க வேண்டும்” என்று சிவலிங்கம் செட்டியார் அடிக்கடி சொல்வார்

அதற்கு என்ன அளவுகோல் என்று கேட்டால், அதற்கும் அவரே விளக்கம் சொல்வார்.

“பதினெட்டிலிருந்து  இருபதோரு வயதுவரைதான் பெண் ஈரமண்ணாக இருப்பாள். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ந்துபோய் இருபத்தியேழு வயதிற்குமேல் சுத்தமாகக் காய்ந்த மண்ணாகி விடுவாள்.”

”இந்தக் காலத்துப் பெண்கள் படிக்க வேண்டும் என்கிறார்கள். படித்தவுடன் வேலைக்குப் போக வேண்டுமென்கிறார்கள். பிறகு வேலையில் செட்டாக வேண்டுமென்கிறார்கள். செட்டாகி ஒரு நிலைக்கு வரும்போது நீங்கள் சொல்கின்ற இருபத்தேழு வயதாகி விடுகிறதே” என்றால் அதற்கும் பதில் சொல்வார் சிவலிங்கம் செட்டியார்:

”பெண்ணிற்கு கல்வி அவசியம். படிக்க வையுங்கள். எதற்காக வேலைக்கு அனுப்புகிறீர்கள்? படித்து முடித்தவுடன் திருமணம் செய்துவிடுங்கள். எதற்காக வேலைக்கு அனுப்புகிறீர்கள்? வேலைக்கு அனுப்புவதால்தான் பல கோளாறுகள்!”

"என்னவிதமான கோளாறுகள்?”

”தன் தந்தையைவிட அதிகம் சம்பளம் வாங்குகிறாள். பொருளாதார சுதந்திரம் கிடைக்கிறது. பலதரப்பட்ட மனிதர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கிறது. வெளியுலகக் கண்ணோட்டம் கிடைக்கிறது. தன்னுடன் வேலை பார்க்கும் அழகிய தோற்றமுள்ள இளைஞனைப் பார்க்கும்போது, அவனைத் திருமணம் செய்து கொண்டால் என்ன என்ற எண்ணம் உண்டாகிறது.
நமது பாராம்பரியம், கலாச்சாரம், வரலாறு எல்லாம் தெரியாத காரணத்தால், அதில் தவறில்லை என்ற சிந்தனையும் உண்டாகிறது.
பல பெண்கள் திசை மாறிச் செல்வதற்கு அதுவே காரணம். வீட்டிற்கு வந்து கண்ணைக் கசக்குவதால், பெற்றவர்களும் வேறு வழியில்லாமல் அவள் சொல்வதைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். அவள் விரும்பும் பையன் என்ன மொழிக் காரணாக இருந்தாலும், என்ன இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், அவளுக்குத் துணைபோக வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இது போன்று இன்னும் சில காரணங்கள் உள்ளன. அதனல்தான் சொல்கிறேன். படிக்க மட்டும் வையுங்கள். வேலைக்கு அனுப்பும்
தவறைச் செய்யாதீர்கள்!”

இவ்வாறாக தன் சகோதரர் சிவலிங்கம் செட்டியார் பலமுறை சொன்னதைக் கேட்டு, மனதில் பதிந்து விட்ட காரணத்தால், அவருடைய தம்பி சண்முகம் தன் மகள் சாலாவிற்கு, அவள் பி.காம் பட்டப் படிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதிய உடனேயே திருமணம் செய்து வைத்து விட்டார்.

தன் மூத்த சகோதரி மீனாட்சி ஆச்சி மகன் விஸ்வநாதனுக்கே திருமணம் செய்து வைத்து விட்டார். திருமணம் சென்ற சித்திரை மாதம் விமரிசையாக நடந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் மணமக்களின் ஜோடிப் பொருத்ததோடு, பெயர்ப் பொருத்தமும் சிறப்பாக அமைந்ததைப் பாராட்டிவிட்டுச் சென்றார்கள
                 **************************************************************************
சென்னையில் திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவில் அருகில்தான் மீனாட்சி ஆச்சிக்கு வீடு. ஒரு கிரவுண்டு மனையில் தரையோடு கட்டப்பட்ட வீடு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆச்சியின் மாமனார் முன்னின்று கட்டிய வீடு. முன் பக்கம் செம்பருத்தி, நந்தியா வட்டை, பவளமல்லிச் செடிகளுடன் அம்சமாக இருக்கும்.

திருமணமான தம்பதிகள், திருமணமான ஐந்தாம் நாளே பல கனவுகளுடனும் மீனாட்சி ஆச்சியுடனும், ஆச்சியின் அன்புக் கணவர் சின்னய்யா செட்டியாருடனும் சென்னைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்கள்.

”நடக்குமென்பார் நடக்காது: நடக்காதென்பார் நடந்துவிடும்” என்ற கவியரசரின் பாடல் வரிகள் உள்ளதைப் போல மீனாட்சி சென்னைக்கு வந்து,  அத்தை வீட்டின் அழகை ரசித்து முடித்த மகிழ்ச்சி இரண்டு நாட்களுக்குமேல் நிலைக்கவில்லை.

தன் மகனையும், மருமகளையும் அழைத்த மீனாட்சி ஆச்சி, மெல்லிய குரலில் சொன்னார்:

”உங்கள் இருவருக்காகவும் பக்கத்துத் தெருவில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றைப் பிடித்து வைத்திருக்கிறேன். கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர், தேவையான பாத்திரங்கள் எல்லாம் உள்ளன. நாளை வெள்ளிக்கிழமை நல்ல நாள், அங்கே பால் காய்ச்சி உங்களைக் குடிவைக்கலாம் என்று உள்ளேன்.”

உடனே விஸ்வநாதன் குறுக்கிட்டுப் பேசினான்:

”எதற்காக ஆத்தா, தனிக் குடித்தனம்? இத்தனை பெரிதாக நம் சொந்த வீடு இருக்கும்போது, எங்களை ஏன் தனிக் குடித்தனமாகப் போகச் சொல்கிறாய்?”

”நீங்கள் சின்னஞ் சிறுசுகள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அத்துடன் உங்களுக்குக் குடும்பப் பொறுப்பும் வரவேண்டும். அதற்காகத்தான்”

”மாதாமாதம் பதினெட்டாயிரம் அல்லது இருபதாயிரம் வாடகை வேறு கொடுக்க வேண்டுமே?”

”ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குகிறாயே - கொடுப்பதில் தப்பில்லை. பணம் பற்றவில்லை என்றால் என்னிடம் கேள் - நான் தருகிறேன். எனக்குத் திருமணமான போது, உங்கள் அப்பச்சி அப்போது பம்பாயில் இருந்தார். பைகுல்லா பகுதியில் வீடு பிடித்து வைத்திருந்தார். திருமணமான மூன்றாவது நாளே பம்பாய்க்குப் புறப்பட்டுப் போனோம். எல்லாம் புதிது புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களைத் தனியாக அனுப்பி வைக்கிறேன்.”

அதற்குமேல் ஆச்சியின் மகன் ஒன்றும் சொல்லவில்லை. ஆச்சி அவர்கள் முடிவு செய்தபடியே புதுமணத் தம்பதிகள் இருவரும் தனிக் குடித்தனம் போய்விட்டார்கள்

                  ****************************************************************************

தனிக் குடித்தனம் போன பிறகுதான் சின்னச் சின்ன பிரச்சினைகள் தலை தூக்கின.

விசாலாட்சிக்கு சமைக்கவே தெரியாது. படிக்கின்ற காலத்தில் சமையலறைப் பக்கமே போக மாட்டாள். படித்து முடித்து முடிக்கவே  திருமணமும் செய்து வைத்து விட்டார்கள்.

முதல் நாள் காலை, உப்புமா என்ற பெயரில், கோதுமை ரவையில் சாலா உப்புமா செய்து வைக்க, ஒரு வாய் சாப்பிட்ட விஸ்வநாதன், அதில் உப்பு கூடுதலாக இருக்க சாப்பிடாமல் எழுந்து விட்டான். கம்பெனி கேண்ட்டீனில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி, எழுந்து போய் விட்டான்.

சாலாவிற்கு மிகுந்த வருத்தமாகப் போய் விட்டது.

விஸ்வநாதன் தன் தாயாரின் சமையலில் அசத்தலாக சாப்பிட்டுப் பழகியவன். கத்தரிக்காய் கெட்டிக் குழம்பு, கருணைக் கிழங்கு மசியல், முருங்கைக்கீரை - வாழைப்பூ துவட்டல், புடலங்காய் கூட்டு என்று விதம் விதமாக சாப்பிட்டுப் பழகியவன்.

பதினோரு மணிக்கு, தன்னைப் பார்க்க வந்த தன் மாமியாரிடம், கண்ணில் கண்ணீரோடு சாலா விஷயத்தைச் சொல்ல
அவர்கள் ஆறுதலாகச் சொன்னார்கள்:

”நோ பிராப்ளம். இரவு தங்க மட்டும் இந்த வீட்டைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பெரிய வீட்டிற்கு இருவரும் வந்து விடுங்கள். மூன்று அல்லது நான்கு மாத காலம் நான் உனக்கு பயிற்சியாக சமையலைச் சொல்லித் தருகிறேன். அங்கேயே சாப்பிடுங்கள். உனக்கு நன்றாக சமையல் வரும்வரை வாத்தியார் வேலையை நான் செய்கிறேன். என்ன சரிதானே?”

தனக்கு சுத்தமாக சமைக்கத் தெரியாது என்பதைச் சொல்லாமல் இருந்ததற்காக தன் அத்தையிடம் மன்னிப்புக் கோரிய சாலா, அன்று முதலே தன் அத்தையிடம் சமையலைக் கற்றுக் கொள்ளத் துவங்கினாள்.

அதற்குப் பிறகு எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது.

*****************************************************************************

காலதேவனின் ஓட்டத்தில் ஆறு மாத காலம் போனதே தெரியவில்லை.

சாலா உண்டாகியிருந்தாள். பெண் மருத்துவர் கர்ப்பத்தை உறுதி செய்தார். அதற்குப் பிறகும் சாலாவின் பகற் பொழுது அவளுடைய மாமியார் வீட்டிலேயே தொடர்ந்தது.  ரம்மியமாகவும் கழிந்தது.

சாலா மாமியார் வீட்டில் வளைய வளைய வந்ததுடன், மாமியாரின் மீது அளவில்லாத அன்பைப் பொழிய, அவர்களும் அவளுடைய அன்பில் மயங்கி விட்டார்கள்.

சாலாவின் மீது இருந்த பிரியத்தின் காரணமாக, பிடித்திருந்த குடியிருப்பு வீட்டைக் காலி செய்து விட்டு, தன் மகனையும், மருமகளையும் தங்களோடு ஒன்றாக இருக்கச் சொல்லிவிட்டார் மீனாட்சி ஆச்சி. அவர்கள் இருவருக்கும் வீட்டில் தனி படுக்கை அறை ஒன்றையும் கொடுத்துவிட்டார்.

சாலாவின் மாமாவும் வங்கி ஒன்றில் பொது மேலாளர் பதவிவரை உயர்ந்து சென்று பின் பணி ஓய்விற்குப் பிறகு வீட்டோடுதான் உள்ளார். வீட்டில் இருந்தவாறே பங்கு வணிகத்தில் ஈடு பட்டிருந்தார். முன் பக்கத்தில் அவருக்கான பிரத்தியோக அறை இருந்தது. சாலாவின் அன்பான நடவடிக்கை அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

சாலாவும் சமையலைக் கற்றுக் கொண்டு அசத்தத் துவங்கி விட்டாள். கும்மாயம், வெள்ளைப் பணியாரம், கொழுக்கட்டை, பச்சைத் தேங்குழல் என்று இடைப் பலகாரம் வரை எல்லாம் செய்யத் துவங்கி விட்டாள். மேலும் இணையதள உதவியுடன், சைனீஷ் உணவுகளையும் செய்யத் துவங்கினாள். கோபி மஞ்சூரியன் செய்தால் சைனாக்காரனே அசந்துவிடுவான். அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்.

சாலாவின் பெற்றோர்கள் அவளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக சென்னைக்கு வந்திருந்தவர்கள், தாங்கள் எதிபார்த்ததைவிட சாலா அதிக சமர்த்தாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதைப் பார்த்துவிட்டு மிகவும் அதிசயத்துப் போனர்கள்.

அதைவிட அதிசயம் ஒன்றும் நிகழ்ந்தது.

காஞ்சிபுரத்தில் பட்டு ஜவுளி உற்பத்தி நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தவர், தன் ஆச்சிக்கும், மகளுக்கும் தலா நான்கு பட்டு சேலைகளைக் கொண்டு வந்து கொடுத்ததோடு, தன் ஆச்சியிடம் மெதுவாக வினவினார்:

”ஆச்சி, சாலாவின் பிரசவத்தை நாங்கள் காஞ்சிபுரத்திலேயே வைத்துக் கொள்கிறோம்....”

மீனாட்சி ஆச்சியின் பதில் வியப்பாக இருந்தது.

”சாலாவைப் பிரிந்து எங்களால் இருக்க முடியாது. சாலா சென்னையிலேயே எங்களோடு இருக்கட்டும். சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம். அவளுடைய பிரசவத்தை எனக்குத் தெரிந்த பெண் மருத்துவர் மூலம் நான் பார்த்துக்கொள்கிறேன். மருந்தீஸ்வரர் அருளால் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கட்டும். அவளைப் போலவே அது அழகாகவும், குணவதியாகவும் இருக்கட்டும். அதுதான் என் பிரார்த்தனையும், வேண்டுகோளும்”

அவர்களுடைய பேச்சு அத்துடன் நிறைவிற்கு வந்தது!

***********************************************************************

தங்கள் ஊர் சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் சென்ற சண்முகம் அண்ணன், தன் சகோதரர் சிவலிங்கம் செட்டியாரைப் பார்த்து, சாலாவின் மேன்மையான வாழ்க்கையைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு தன் சந்தேகத்தைக் கேட்டார்:

”அண்ணே, எத்தனை காலமானாலும், எந்த சூழ்நிலையானாலும், சில பெண்கள் மட்டும், காய்ந்து போகாமல் ஈர மண்ணாகவே இருக்கிறார்களே, அதற்கு என்ன காரணம்?”

”தினமும் தண்ணீர் விடப்படடும் மண் காய்ந்து போகாமல் ஈரமாகவே இருக்கும். அதுபோல அன்பெனும் தண்ணீரை தொடர்ந்து ஊற்றுவதால், அந்தப் பாக்கியம் கிடைக்கப் பெற்ற பெண்கள் எப்போதும் ஈர மண்ணாகவே இருப்பார்கள்”

தன் சகோதரரின் நெஞ்சைத் தொடும் இந்தப் பதிலால் சண்முகம் அண்ணனின் கண்கள் பனித்துவிட்டன

**********************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.5.18

Short story: சிறுகதை: கைகொடுத்த தெய்வம்!


Short story: சிறுகதை: கைகொடுத்த தெய்வம்!

அடியவன் எழுதி, இந்த மாதம், மாத இதழ் ஒன்றில் வெளிவந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை இது. நீங்கள்
படித்து மகிழ்வதற்காக இன்று அதை வலை ஏற்றியுள்ளேன். படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------

பெண் பார்க்கும் வைபவம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் கோயிலில்தான் நடந்தது.

பெண்ணின் பெயர் மீனாட்சி. பெண் வீட்டில் இருந்து பெண்ணுடன் சேர்த்து நான்கு பேர்கள் வந்திருந்தார்கள். பெண்ணின்
பெற்றோர்கள், தாய் மாமா மற்றும் பெண். 

பெண் சிவந்த நிறத்துடன் அழகாக இருந்தாள். செடியில் இருந்து அப்போதுதான் பறித்த ரோஜா பூவைப் போல அழகாக
இருந்தாள். பொறியியல் படித்தவள். பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் டிஸைன் இஞ்சினியர்  வேலை. மாதம்
எண்பதாயிரம் ரூபாய் சம்பளம். அவளுடைய பெற்றோர்கள் சேலத்தில் இருக்கிறார்கள்.

பையனின் பெயர் சரவணன். பையன் வீட்டில் இருந்தும் நான்கு பேர்கள்தான் வந்திருந்தார்கள். பையனுக்கு தாயார் இல்லை.

இரண்டாண்டுகளுக்கு முன்பு இறந்து போய் விட்டார்கள். அவனுடைய தகப்பனார் முத்தப்ப செட்டியார். சித்தப்பா சிதம்பரம்
செட்டியார். பெரிய அய்த்தை பொன்னழகி ஆச்சி ஆகியோர்கள் அவனுடன் வந்திருந்தார்கள்.

பெண்ணின் தாய்மாமா கையில் கொண்டு வந்திருந்த புது ஜமுக்காளத்தை, கோவிலின் சுற்று பிரகாரத்தில் இருந்த நிழலான
பகுதில் விரித்து விட்டு,“வாருங்கள், உட்கார்ந்து பேசுவோம்” என்று அழைத்துக் கொண்டு போனார்

பரஸ்பரம் அறிமுகத்திற்குப் பிறகு, பேசத்துவங்கினார்கள். பெண்ணின் தாய்மாமா, பெண்ணையும், பையனையும் பார்த்து, “நீங்கள் இருவரும் மனம் திறந்து பேசிவிட்டு வந்து உங்கள் ஒப்புதலைச் சொல்லுங்கள்” என்று சொல்லி எதிர்ப்பக்கம் ஷாமியானா, சேர்கள் எல்லாம் போடப்பட்டிருந்த பகுதியைக் காட்டினார்.

இருவரும் எழுந்து சென்று, பத்து நிமிடங்கள் பேசி விட்டுத் திரும்பினார்கள்

பெண் முகம் சாந்தமாக இருந்தது. சரவணனின் முகம் மகிழ்ச்சியாக இல்லை.

அதைப் புரிந்து கொண்ட முத்தப்ப செட்டியாரும், பொன்னழகி ஆச்சியும், அவனை ஒதுக்கிக் கொண்டு போய் சற்றுத் தள்ளி
நின்று பேசத்துவங்கினார்கள்.

“என்ன கண்ணா? ஏன் உன் முகம் வெளிறிப்போய் இருக்கிறது?”

“இந்த இடம் வேண்டாம் அப்பச்சி?”

“ஏன்? என்ன நடந்தது?”

“அந்தப் பெண் இரண்டு கண்டிஷன்களைப் போடுகிறாள்?”

“என்ன கண்டிஷன்?”

“ திருமணத்திற்குப் பிறகும் வேலைக்குப் போவேன் என்கிறாள். நான் அதற்குச் சரி என்று சொல்லிவிட்டேன். ஆனால் அடுத்த
கண்டிஷன்தான் நெருடலாக உள்ளது. திருமணத்திற்குப் பிறகு உங்கள் அப்பாவை உங்களோடு கூட்டிக் கொண்டு வந்து
வைத்துக் கொள்ளக்கூடாது. அவருக்கும் சேர்த்து என்னால் பணிவிடைகள் செய்ய முடியாது. ஒரு ஒர்க்கிங் உமனுக்கு அது
சாத்தியப்படாது. மாமியார் என்றால் ஒத்துப் போய் விடலாம். அவர்களும் ஒத்தாசையாகக் கூட மாட வீட்டில் சேர்ந்து வேலை
பார்ப்பார்கள். ஆனால் மாமனார் மட்டும் என்னும் போது அது சரிப்பட்டு வராது என்கிறாள். அதற்கு நீங்கள் சம்மதித்தால் மட்டுமே
நமக்குத் திருமணம் என்கிறாள்”

“நீ என்ன சொன்னாய்?”

“சற்று டைம் கொடு, யோசித்துத் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்”

"அது ஒன்றும் பெரிய சமாச்சாரம் இல்லை.  இரண்டு நாட்களுக்கு முன்பாகவே எனக்கு அது தெரியும். அவளுடைய தாய்மாமா
போனில் பேசும்போது என்னிடம் சொல்லிவிட்டார். எங்கள் பக்கம் அதுதான் யோசனையாக இருக்கிறது என்றும் சொன்னார்.
என் பையனும், வரப் போகும் மருமகளும் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தினால் போதும். நான் அவர்களுடன் செல்ல மாட்டேன்.
அவர்கள் வாழ்வில் குறுக்கிட மாட்டேன். சென்னையில் போரூரில் இருக்கும் என் வீட்டில்தான் எப்போதும் போல இருக்கப்
போகிறேன். என்னை நீங்கள் முழுமையாக நம்பலாம். பெண்ணும் பையனும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துப் பேசுவதற்கு ஏற்பாடு
செய்யுங்கள். அவர்கள் சம்மதம்தான் முக்கியம் என்று சொல்லிவிட்டேன்.”

“எனக்கு அதில் உடன்பாடு இல்லை. திருமணத்திற்குப் பிறகு உங்களை என்னுடன் கூட்டிக் கொண்டுபோய் வைத்துக்
கொள்ளலாம் என்றிருக்கிறேன்” இது சரவணன்

இந்த இடத்தில் சரவணனின் அய்த்தை பொன்னழகி ஆச்சி குறுக்கிட்டுப் பேசினாள்:

“அடேய் கண்ணா, நாட்டு நிலவரம் தெரியாமல் பேசாதே! பெண் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. கடந்த ஒரு
வருடமாக நானும் உன் அப்பச்சியுமாகச் சேர்ந்து இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்களைப் பார்த்துவிட்டோம். யாரும்
இசைந்து வரவில்லை. சிலர் நம் ஊர் என்றால் வேண்டாம் என்கிறார்கள். சிலர் ஜாதகம் பொருந்தவில்லை என்கிறார்கள். சிலர் பதிலே சொல்லாமல்  இதைவிடப் பெரிய இடம் கிடைக்குமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெண்ணின் பெற்றோர்கள்
மட்டும்தான் ஒத்து வந்திருக்கிறார்கள். ஆகவே மறுப்பு எதுவும் சொல்லாமல் இந்தப் பெண்ணை ஒப்புக் கொள்வோம். உனக்கு
இப்போது இருபத்தொன்பது வயதாகிறது. இன்னும் ஒரு வருடம் தேடலில் கழிந்தால் உனக்கு முப்பது வயதாகிவிடும். முப்பது
வயதிற்கு மேல் நமக்கு யாரும் பெண் தரமாட்டார்கள். அதை யோசித்துப் பார்!”

அய்த்தையின் சொற்களில் இருந்த உண்மை சரவணனுக்குப் பிடிபட்டது.

”சரி அய்த்தை. நீங்களும் அப்பச்சியும் சேர்ந்து எடுக்கும் முடிவிற்கு நான் சம்மதிக்கிறேன்” என்று சொன்னான்.

பிறகு எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

சரவணின் அய்த்தை தாங்கள் கொண்டுவந்திருந்த மல்லிகைப் பூவை பெண்ணின் தலையில் சூட்டிவிட, அனைவரின் முகத்திலும்
மகிழ்ச்சி நிலவியது.

அடுத்து வந்த வைகாசியிலேயே இருவருக்கும் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

           **********************************************************

காலதேவனின் ஓட்டத்தில் 15 மாதங்கள் போனதே தெரியவில்லை.

மீனாட்சி அழகான பெண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள். சேலத்தில் உள்ள சிறந்த மருத்துவமனை ஒன்றில் குழந்தை பிறந்தது.

சுகப் பிரசவம். குழந்தை பிறந்த இரண்டாவது நாளே தாயையும் சேயையும் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்

குழந்தை மிகவும் அழகாக இருந்தது. ரசகுல்லா இனிப்பைப் போல பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. வந்தவர்களில் பாதிப்பேர்கள்
அதைச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

மீனாட்சிக்கு பிரசவ வலி வந்து விட்டது. மருத்துவமனைக்குக் கூட்டிக் கொண்டு போகிறோம் என்ற செய்தியைக் கேள்விப் பட்ட
உடனேயே  தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு பெங்களூரில் இருந்து மூன்று மணி நேரத்தில் சேலத்திற்கு வந்த சரவணன்
குழந்தை பிறந்த சமயத்தில் மருத்துவ மனையில்தான் இருந்தான்.

பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டுவந்து முதலில் சரவணனிடம்தான் காட்டிவிட்டுச்
சென்றார். அத்துடன் குழந்தை ரசகுல்லாவைப் போல இருக்கிறது என்று சொல்லிவிட்டும் சென்றார்.

சரவணன் வேலை பார்த்த பன்னாட்டு நிறுவனத்தில் குழந்தை பிறப்பிற்கு கணவனுக்கு ஒரு வாரம் விடுப்பு கொடுப்பார்கள்.

சரவணன் ஒருவாரம் மாமியார் வீட்டிலேயே தங்கி விட்டான். குழந்தையைப் பிரிந்து செல்வதற்கு அவனுக்கு மனமே வரவில்லை.

சரவணின் தந்தையும் சென்னையில் இருந்து வந்து குழந்தையைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

கல்யாணத்திற்குப் பிறகு கடந்து சென்ற 15 மாதங்களில் இரண்டு குடும்பத்தார்களும் ஒருவருடன் ஒருவர் நன்றாகப் பழகி  விட்டார்கள். மீனாட்சிக்கு தன் மாமனார் முத்தப்ப செட்டியார் மீது பல மடங்கு மரியாதை உண்டாகியிருந்தது. இடைப்பட்ட
நாட்களில் அவர் மூன்று முறை பெங்களூர் வந்து அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கிவிட்டுச் சென்றிருந்தார். மீனாட்சியும்
சென்னை போரூரில் உள்ள அவருடைய வீட்டிற்கு நான்கைந்து முறை சென்று பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறாள். அவர் வீட்டை
அழகுற வைத்திருக்கும் பாங்கை தன் தாய் வீட்டில் அடிக்கடி சிலாகித்துச் சொல்வாள்.

குழந்தை பிறந்து இரண்டரை மாதங்களில்தான் அவளுடைய வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்தது.

குழந்தையும், தன்னையும் பார்த்துவிட்டுச் செல்வதற்காக வந்திருந்த தன்னுடைய கணவன் சரவணனிடம் அவள் மெதுவாகக்
கேட்டாள்:

      “என்னை எப்போது பெங்களூருக்கு கூட்டிக் கொண்டு போவீர்கள்?”

      “இப்போது என்ன அவசரம் குழந்தைக்குக் கழுத்து நிற்கட்டும். ஆறு மாதம் கழித்து நீ வரலாம்”

      “ என்ன தமாஷ் பண்ணுகிறீர்களா? எனக்கு என் கம்பெனியில் பிரசவத்திற்குப் பிறகு மூன்று மாதங்கள்தான் லீவு
கொடுத்திருக்கிறார்கள். இன்னும் பதினைந்து நாட்களில் நான் வேலையில் சேர வேண்டும் - தெரியுமல்லவா?”

      “அப்படியா? அப்படியென்றால் குழந்தையை உன் தாய் வீட்டில் விட்டு விட்டு நீ மட்டும் வா!”

       “அதெப்படி தாய்ப்பால் குடிக்கும் பச்சைக் குழந்தையை அவர்கள் எப்படிப் பார்த்துக்கொள்வார்கள்?”

       “என்ன செய்யலாம் என்பதை நீயே சொல்!”

        “குழந்தையைப் பார்த்துக் கொள்ள என் தாயாரையும் நம்முடன் கூட்டிக் கொண்டு செல்வோம். குழந்தைக்கு இரண்டு
வயதாகும்வரை அவர்கள் நம்முடன் இருப்பார்கள். அதற்குப் பிறகு குழந்தையை டே கேர் இல்லத்தில் பகல் நேரங்களில் விட்டுக்
கூட்டிக் கொள்ளலாம். இது பற்றி என் பெற்றோர்களிடம் பேசி விட்டேன். அவர்களும் சரியென்று சொல்லிவிட்டார்கள். மாதத்திற்கு
இரண்டுமுறை எனக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அவர்கள் சேலத்திற்கு வந்துவிட்டுத் திரும்புவார்கள்.

இந்த இடத்தில் சரவணன் குறுக்கிட்டுப் பேசினான்: “எனக்கு அதில் உடன் பாடில்லை. உன் அப்பச்சியையும், தம்பியையும் தவிக்க
விட்டுவிட்டு உன் தாயார் நம்முடன் வர வேண்டாம்”

      “எங்கள் அப்பச்சி சரியென்று சொல்லிவிட்டார். அதில் உங்களுக்கென்ன பிரச்சினை?”

       “அதில் சட்டப் பிரச்சினை இருக்கிறது.”

       “சட்டப் பிரச்சினையா? என்ன சொல்கிறீர்கள்? தெளிவாகச் சொல்லுங்கள்”

       “எங்கள் அப்பச்சிக்கு ஒரு சட்டம். உங்கள் ஆத்தாவிற்கு ஒரு சட்டமா?  திருமண சமயத்தில் எங்கள் அப்பச்சியை நம்முடன்
பெங்களூருக்கு அழைத்து வரக்கூடாது என்று நீ சொன்னாயல்லவா? அது போல உங்கள் தாயாரையும் நம்முடன் தங்குவதற்கு நீ
பெங்களூருக்கு அழைத்து வரக்கூடாது.”

       “என்ன பழி வாங்குகிறீர்களா?”

        “கணவன் மனைவிக்குள் பழி பாவத்திற்கெல்லாம் இடமில்லை. நியாயத்தைத்தான் சொல்கிறேன்.”

        “சரி நீங்கள் சொல்வதை நியாயம் என்றே வைத்துக் கொள்வோம். உதவிக்கு ஆள் இல்லாமல் பச்சைக் குழந்தையை வைத்துக் கொண்டு, நான் எப்படி வேலைக்குச் செல்ல முடியும்?”

        “சாத்தியமில்லாதது எதுவும் இல்லை. குழந்தையா? அல்லது வேலையா? என்பதை நீயே முடிவு செய். குழந்தைதான் முக்கியம்
என்றால் வேலையை விட்டுவிடு. அல்லது வேலை முக்கியம் என்றால் குழந்தையை உன் தாய் வீட்டில் விட்டு விட்டு வா.
பதினைந்து நாட்களுக்கொருமுறை நாம் வந்து பார்த்துவிட்டுத் திரும்புவோம். குழந்தை இரண்டு ஆண்டுகள் வரை ஆயா
வீட்டிலேயே வளரட்டும்!”

        “இதுதான் உங்கள் முடிவா?”

        “ஆமாம்.ஆமாம்.ஆமாம்” என்று மூன்று முறை சொன்ன சரவணன் அடுத்த அரை மணி நேரத்தில் சேலத்தை விட்டுப்
புறப்பட்டுச் சென்று விட்டான். மீனாட்சியின் திகைப்பு அடங்க ஒரு நாள் ஆனது!

          *************************************************************************
இந்தக் காலத்துப் பெண்களெல்லாம் அதீத புத்திசாலிகள். முன் இரவு முழுவதும் யோசித்த மீனாட்சி, அடுத்த நாள் காலை ஒரு
முடிவிற்கு வந்தாள். அதை உடனே செயல் படுத்தவும் துவங்கினாள்.

தன் மாமனாருடன் அலைபேசியில் பேசிய அவள், “மாமா உங்களுடன் நான் சற்றுப் பேச வேண்டும். ஒரு இக்கட்டான சூழ்நிலை. போனில் பேச முடியாது. நேரில்தான் பேச வேண்டும். சிரமத்தைப் பார்க்காமல் நீங்கள் புறப்பட்டு வந்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன். நன்றி உடையவளாக இருப்பேன்”

     “சரி ” என்று சொன்னவர், காரை எடுத்துக் கொண்டு அன்று மதியமே வந்துவிட்டார்.

      வந்தவருக்கு அறுசுவை உணவை வழங்கினார்கள். கார் ஓட்டிக் கொண்டு வந்த களைப்புத் தீர ஒரு மணி நேரம் தூங்கிவிட்டார்
அவர் எழுந்த போது மாலை மணி நான்கு, மீனாட்சியின் தந்தை
லீ பஜாரில் இருக்கும் தனது கடைக்குச் சென்று விட்டார். மீனாட்சி
தன் தாயாருக்கு ஒரு வேலையைக் கொடுத்து அவரை வெளியே அனுப்பி விட்டாள்.

     சூடாக கொழுக்கட்டை, இஞ்சி தேநீர் என்று முத்தப்ப செட்டியார்க்கு வழங்கிய மீனாட்சி, அவருக்கு எதிரில் அமர்ந்து
அவருடன் தன்னுடைய பிரச்சினைகளை விரிவாகச் சொல்லிப் பேசினாள். தன் கணவன் சொன்ன அத்தனை சொற்களையும்
விடாமல் அவருக்கு எடுத்துரைத்தாள்.

     “இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் மாமா! நீங்கள் சொல்வதைத் தட்டாமல் நான் கேட்கிறேன் மாமா!”
என்றாள்

முத்தப்ப செட்டியார் புன்னகையுடன் சொன்னார்:  ”சாவி இல்லாத பூட்டை இறைவன் தயாரிப்பதில்லை என்பார்கள். அதுபோல
தீர்வு இல்லாத பிரச்சினைகளையும் இறைவன் கொடுப்பதில்லை.
நீ கவலைப் படாதே! உன்னுடன் நானும் வருகிறேன். நாளை
அதிகாலை நாம் இருவரும் குழந்தையுடன் பெங்களூருக்குப் புறப்பட்டுச் செல்வோம். சரவணனிடம் எதையும் இப்போது
சொல்லாதே சர்ப்ரைசாக இருக்கட்டும்.  மஹாதேவபுராவில் என் நண்பன் ஒருவன் மனிதவள மேம்பாட்டு மையம் நடத்துகிறான்.
அவனிடம் சொல்லி பகல் நேரத்தில் வீட்டிற்கு வந்து செல்லும்படி வேலைக்காரப் பெண் ஒருத்தியைச் சேர்த்துக் கொள்வோம். மாதம்
பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை சம்பளம் கொடுத்தால் நல்ல வேலைக்காரி கிடைப்பாள். வாரத்தில் உனக்கு ஐந்து
நாட்கள்தானே வேலை. ஆகவே நீ இல்லாத சமயத்தில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆளைச் சேர்த்துக் கொள்வோம்.
வீட்டோடு நானும் இருப்பதால் என் பேத்தியை நானும் பார்த்துக் கொள்வேன். என்ன சம்மதம் தானே?’

மீனாட்சிக்குக் கண்கள் கலங்கிவிட்டன. மாமனார் சொன்ன அற்புதமான தீர்வைக் கேட்டுப் பேச்சே வரவில்லை. சட்டென்று
அவருடைய கால்களில் விழுந்து வணங்கி எழுந்தாள்.
       ******************************************************************************* 
அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கு இன்னோவா வாடகைக்கார் ஒன்றில் முத்தப்ப செட்டியார் தன் மருமகள், பேத்தியுடன்  பெங்களூருக்குப் பயணமானார்.

லக்கேஜ்கள் அதிகமாக இருந்ததால் பெரிய காருக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். எட்டு மணிக்கெல்லாம் பெங்களூர் சர் சிவி ராமன் நகரில் இருந்த சரவணைனின் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சென்றடைந்தார்கள்.

காலிங் பெல்லின் சத்தத்தைக் கேட்டு வீட்டின் கதவைத் திறந்த சரவணன், தன் தந்தையைப் பார்த்தவுடன் ஆச்சரியத்தில்
உறைந்துபோய் தன்னையும் அறியாமல் அப்பச்சி என்று சத்தமாகக் கூப்பிட்டுவிட்டு உள்ளே வாருங்கள் என்றான், அவருக்குப்
பின்னால் பச்சைக் குழந்தையைக் கையில் ஏந்தியவாறு நின்றிருந்த தன் மனைவியைப் பார்த்தவுடன் அவனுடைய ஆச்சரியம் இரண்டு மடங்கானது.

“அடடே வாங்க மேடம் வாங்க!” என்றவன், அவர்களைச் சில நிமிடங்கள் நிற்க வைத்துவிட்டு, எதிர்க் குடியிருப்பு மாமியை அழைத்து ஆரத்தி எடுக்கச் சொன்னான். ஆரத்தித் தட்டில் புது இருநூறு ரூபாய் நோட்டு ஒன்றை வைத்தவன், மாமிக்கு நன்றி
சொல்லிவிட்டு அவர்களை உள்ளே அழைத்து வந்தான்.

அவனுடைய ஆரத்தி வரவேற்பை எதிர்பார்க்காத மீனாட்சி மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளானாள்.

பின்னால்  வந்த அபார்ட்மெண்ட் செக்யூரிட்டிகள் மற்றும் வாடகைக் கார் ஓட்டுனர் மூவரும்  லக்கேஞ்களை அனைத்தையும்
உள்ளே வைத்துவிட்டுச் சென்றார்கள்.

சரவணனின் கைகளில் குழந்தையைக் கொடுத்த மீனாட்சி, அடுக்களைக்குள் சென்று காப்பி போட்டு எடுத்துக் கொண்டு வந்தாள் மூவரும் காப்பியை அருந்தினார்கள்.

முத்தப்ப செட்டியார் வாடகைக்கார் ஓட்டுனரை அழைத்து வாடகைத் தொகையைக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்.

சரவணனுக்கு தன் மனைவி, தான் திரும்பி வந்த இரண்டே நாட்களில் தன் தகப்பனாரை  எப்படி சரிக்கட்டி அழைத்து வந்தாள்
என்பது புரியாத புதிராக இருந்தது. கண் ஜாடையில் அதைக் கேட்கவும் செய்தான். அவரும் பதிலுக்கு கை ஜாடையில் அப்புறம்
பேசலாம் என்று சமாதானப் படுத்தினார்.

சரவணன் பக்கத்துத் தெருவில் இருந்த மார்வாரி போஜனா சாலைக்குப் போன் செய்து மூவருக்கும் காலை உணவாக பூரி
மசால் அனுப்பி வைக்கச் சொல்லி போனில் பேசினான்.

முத்தப்ப செட்டியார், “டேய் ராஜா, உனக்கு அலுவலத்திற்கு நேரமாகிறது. நீ புறப்பட்டுச் செல். எல்லாவற்றையும் சாயந்திரம்
பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

“இல்லை அப்பச்சி நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் வந்திருக்கிறீர்கள். எங்கள் வீட்டு அம்மணி வந்திருக்கிறார்
செல்லக்குட்டிப் பெண் வந்திருக்கிறாள். இதைக் கொண்டாட வேண்டாமா? ஆகவே இன்று அலுவலகத்திற்கு டும்மா. லீவு சொல்லி
விடுகிறேன்” என்று சொல்லி விட்டு அலுவலகத்திற்கு போன் செய்து தன் மேலதிகாரியுடன் பேசி  விடுப்பு எடுத்துக் கொண்டுவிட்டான்.

காலை 11 மணி வரை எல்லாம் சுறுசுறுப்பாக நடந்தது. குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. மீனாட்சியும் சரவணனும்  சேர்ந்து
அவர்கள் கொண்டு வந்திருந்த லக்கேஜ்களைப் பிரித்து துணிமணிகள், சாமான்களை அலமாரிகளில் மற்றும் மேஜைகளில் அடுக்கி வீட்டை ஒதுங்க வைத்தார்கள்.

சரவணன் தனக்குத் தெரிந்த இஞ்சினிரியங் கம்பெனியில் ஆர்டர் கொடுத்து ஸ்டீல் ராடு 4 அடி நீளத்தில் ஃபேன் வளையத்தில்
மாட்டுவதற்கும், அந்த ராடின் முனையில் தொட்டில் கட்டுவதற்குத் தோதாக வளையம் மற்றும் தொட்டில் கம்பி என்று
அனைத்திற்கும் ஏற்பாடு செய்தான்.

”வாருங்கள் அப்பச்சி, எதிரில் ஒரு மலையாளி கடை இருக்கிறது. பலாக்காய், வாழைப்பூ என்று எல்லா காய்கறிகளும்
கிடைக்கும்.உங்களுக்குப் பிடித்த காய்கறிகளாக வாங்கிக் கொண்டு வருவோம்” என்று சொல்லி அப்பச்சியைக் கீழே கூட்டிக்
கொண்டு போனான்.

அவனுக்கு சேலத்தில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல். வெளியே போகும்போது அதைக் கேட்கவும்
செய்தான். முத்தப்ப செட்டியார் சுருக்கமாக விபரத்தைச் சொன்னவர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதுதான்
வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் அடிப்படையான விஷயம் என்று சொல்லி அவனை அதை ஏற்றுக் கொள்ளவும்
வைத்தார்.

இரண்டு நாட்களில் 40 வயதான தெலுங்குப் பெண்மணி ஒருத்தி வேலைக்குக் கிடைத்தாள். அவள் நன்றாகத் தமிழும் பேசினாள்.
குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொண்டாள். காலை ஒன்பது மணிக்கு வருகிறவள். மாலை ஆறு மணி வரைக்கும் இருந்து வீட்டு
வேலைகள் அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டுப் போனாள்.

மீனாட்சியும் வேலைக்குச் செல்லத் துவங்கினாள்

அவர்களுடைய வாழ்க்கை அனுசரணையாக ரம்மியமாகக் கழிந்தது

****************************************************************

இருபத்தோரு மாதங்கள் கடந்து போனதே தெரியவில்லை. குழந்தை நடக்கத் துவங்கியிருந்தது. அய்யாவின் வளர்ப்பில் சின்ன
சின்ன வார்த்தைகளை மழலையாகப் பேசவும் செய்தது.

குழந்தையின் இரண்டாவது பிறந்த நாள். அதை சிறப்பாகக் கொண்டாட விரும்பினார்கள். குழந்தையின் முதல் பிறந்த நாளை
தன் தந்தையின் விருப்பத்திற்கேற்ப சரவணன் தம்பதியர் சென்னையில் எளிமையாகக் கொண்டாடினார்கள். வடபழநி முருகன் கோவிலுக்குப் போய வந்தார்கள்

குழந்தையின் இரண்டாவது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடும் முனைப்பாக சரவணன் மற்றும் மீனாட்சியின் அலுவலக நண்பர்கள், தெரிந்த நகரத்தார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என்று மொத்தம் 300 பேர்கள் கலந்து கொள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிறந்த நாள் விழா சிறப்பாக நடந்தது.

மீனாட்சியின் பெற்றோர் உடனே ஊருக்குத் திரும்பிச் சென்று விட்டார்கள்

விழா முடிந்து இவர்கள் வீடு திரும்புமபோது மணி இரவு பதினொன்றாகியிருந்தது.

முத்தப்ப செட்டியார் தனது அறைக்குச் சென்று விட்டார்.

அவர் உறங்கியிருப்பார் என்று நினைத்து தம்பதியர் இருவரும் பேசிக்கொண்டது அவருடைய காதில் விழுந்தது.

சரவணன் குறுகுறுப்போடு சொன்னான்:

”அடுத்த வாரம் குழந்தையை டே கேரில் விட்டு விடுவோமா”

“எதற்காக....?” இது மீனாட்சி.

“நீ நினைத்தபடி உன் காரியத்தைச் சாதித்துக் கொண்டு விட்டாய். என் தந்தையை எதற்காக இன்னும் இங்கே வைத்துக்
கொண்டிருக்க வேண்டும். ஊருக்கு அனுப்பி விடலாம் இல்லையா?”

“என்ன, என் வாயைப் பிடுங்கி வம்புக்கு இழுக்கிறீர்களா?”

சரவணன் மீண்டும் குறுகுறுப்போடு சொன்னான்: “இல்லை உண்மையாகத்தான் கேட்கிறேன், என் கண்மணி!”

“என்னை என்ன பாதகி என்று நினைத்தீர்களா? அவர் கடைசிவரை நம்மோடுதான் இருப்பார். உங்களுக்கு வேண்டுமென்றால் 
அவர் பெற்றவர் என்ற நினைப்பு ம்ட்டும்தான் இருக்கும். எனக்கு அவர் சாதாரண மனிதர் அல்லை. கை கொடுத்த தெய்வம். 
இக்கட்டான சூழ்நிலையில் என்னை நீங்கள் தள்ளி விட்டு வந்த நிலையில் எனக்குக் கை கொடுத்து நான் வருகிறேன் வா 
பெண்ணே என்று கை கொடுத்து எனக்கு மறு வாழ்வு கொடுத்த தெய்வம் அவர். என் வேலை என்னை விட்டுப் பறி போகாமல் 
என்னைக் காத்த தெய்வம் அவர். அவர் கடைசி வரை நம்மோடுதான் இருப்பார். வயதான காலத்தில் அவருக்கு ஏதாவது சுகக்கேடு 
என்றால் வீட்டோடு ஒரு நர்சை வைத்து அவரை நான் பார்த்துக் கொள்வேன். எப்படி நம் குழந்தையை ஒரு வேலைக்காரியை 
வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாரோ அப்படி.”

அவளின் அதிரடிப் பேச்சில் சரவணன் அதிர்ந்து போய் விட்டான்.

 உள்ளே அதைக் கேட்டுக் கொண்டிருந்த முத்தப்ப செட்டியாரின் கண்கள் பனித்து விட்டன.
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.2.18

short Story: சிறுகதை: பங்குதாரர்


short Story: சிறுகதை: பங்குதாரர்

சென்ற மாதம் மாத இதழ் ஒன்றில் அடியவன் எழுதி,  பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன். அனைவரையும் படிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
பங்குதாரர்

சொக்கலிங்க அண்ணனுக்கு பழநி தண்டாயுதபாணி மேல் அளவில்லாத பக்தி உண்டு. அதற்குக் காரணம், அவர் இளைஞனாக இருந்த காலத்தில் பழநிக்குப் பாதயாத்திரை செல்வது வழக்கம். அவ்வாறு செல்கையில் மூன்றாம் ஆண்டு நடைப் பயணத்தின்போதுதான் மீனாட்சியைச் சந்திக்க நேர்ந்தது.

அவர் பயணமாகச் சென்ற குழுவில்தான் அவளும், அவளுடைய தாயாரும், மற்றும் இரண்டு உறவினர்களும் ஒன்றாக வந்தார்கள். மருதுப் பட்டி தோப்பில் துளிர் விட்ட நட்பு, நத்தம், சானார்பட்டி, கோபால்பட்டி, திண்டுக்கல், செம்மடைப்பட்டி, குழந்தை வேலன் சந்நதி, பழநி என்று தைப்பூச நன்னாள்வரை தொடர்ந்தது.

இவர் விழுந்து, விழுந்து அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பணிவிடைகள் செய்ய அவர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

எப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பார். தோற்றத்தில் அந்தக் காலத்து அன்னக்கிளி திரைப்பட நாயகன் சிவகுமார் போல இருப்பார். மீனாட்சியும் உயர்ந்த மனிதன் திரைப் படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்த நாயகி பாரதியைப் போலவே இருப்பார்.

”என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி”

என்று பாடாமலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது, அந்தக் காதல் அடுத்து வந்த வைகாசி மாதத்தில், ஒரு வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணத்தில் முடிந்தது.

அப்போது சொக்கலிங்கம் அண்ணனுக்கு இருபத்தைந்து வயது. மீனாட்சிக்கு இருபத்தோரு வயது.

நல்ல மனையாளை அடையாளம் காட்டியதோடு, கைபிடிக்கவும் வழி செய்த, பழனியாண்டவர் மேல் அவருக்கு மேலும் தீராத பக்தி  உண்டானது.

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகத்தில் பட்டம் பெற்றிருந்த சொக்கலிங்கம் அண்ணனை அவருடைய தந்தையார், இரும்பு வணிகம் செய்து கொண்டிருந்த தன்னுடைய நண்பர் ஒருவரின் கடையில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தார்.  நான்கு ஆண்டுகள் அங்கே கடுமையாக உழைத்து, வியாபாரத்தில் உள்ள நெளிவு சுழிவுகளை எல்லாம் நன்கு கற்றுத் தேறியிருந்தார் நமது நாயகன்.

திருமணம் ஆன கையோடு, அவருடைய தந்தையார் பத்து லட்ச ரூபாய் முதலீட்டில் தனியாகக் கடை ஒன்றையும் வைத்துக் கொடுத்தார். கோவை என்.ஹெச் ரோட்டில் கடை. அருகில் இருந்த சந்தில் கிட்டங்கி. வியாபாரம் துவக்கத்தில் இருந்தே சூடு பிடித்து வளரத் துவங்கியது.

பழனியாண்டவர் மேல் இருந்த அதீத பக்தியால் தன் கடைக்கு பழநியப்பா ஸ்டீல்ஸ் என்ற பெயரையும் சூட்டியிருந்தார் சொக்கலிங்கம் அண்ணன். அத்துடன் பழனியாண்டவரையும் கூட்டாக சேர்த்துக் கொண்டிருந்தார். ஆண்டவருக்கு லாபத்தில் 20 சதவிகிதம் பங்கு என்பது எழுதாத ஒப்பந்தம்!

ஒவ்வொரு ஆண்டும் கணக்கை முடித்தவுடன், பங்குதாரர் பழநியாண்டவருக்கு உள்ள பங்கை பணவோலை மூலம் பழநி கோவிலில் செலுத்திவிடுவார். அதுபோல ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பழநிக்குப் பாத யாத்திரையும் மேற்கொள்வார்.
தொடர்ந்து இருபது ஆண்டுகள் சென்று வந்தவர், அதற்குப் பிறகு உடல்நிலை காரணமாக பாதயாத்திரை செல்லாமல் தைப்பூச சமயத்தில் காரில் பழநிக்குச் சென்று பழநியில் மூன்று நாட்கள் தங்கி பழநியப்பனை தரிசனம் செய்துவிட்டு வருவார்.

தெளிந்த நீரோடைபோல வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

ஆசைக்கு பெண்ணொன்றும் ஆஸ்திக்கு ஆண் என்றும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார்.

ப்ரூக்பாண்ட் ரோட்டின் மையப் பகுதியில் இருந்து குருத்வாரா சங்கம் செல்லும் தெருவில் 20 செண்ட் இடம் ஒன்றை விலைக்குவாங்கி சொந்தமாகக் கட்டிடம் ஒன்றையும் கட்டி, அங்கே இருந்து நிர்வாகம் செய்தவாறு வியாபரத்தைத் தொடர்ந்தார், வியாபாரமும் சிறப்பாக நடைபெற்றது.

காலச் சக்கரம் சுழன்றதில் எல்லா மாற்றங்களும் நிகழ்ந்தன!

நல்லவை மட்டுமல்ல அல்லவை ஒன்றும் நடந்தது.

வியாபாரம் ஒன்றை மட்டுமே முனைப்போடு கவனித்து தனது ஆரோக்கியத்தைக் கவனிக்காமல் விட்டதால், வயதாகும்போது வரும் வியாதிகள் எல்லாம் ஒவ்வோன்றாக வந்து விட்டன. இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், முழங்கால் வலி என்று எல்லாம் வந்து உடம்பில் குடியேறிவிட்டன.

செட்டியாருக்கு மட்டுமல்ல, அவருடைய அன்பு மனைவிக்கும் அவை எல்லாம் வந்துவிட்டன. மருந்து மாத்திரைகளால் அவை கட்டுக்குள் இருந்தன.

அதுபற்றி யாராவது கேட்டால், சொக்கலிங்கம் அண்ணன் நகைச்சுவையாகச் சொல்வார்: “ கார் பெட்ரோலில் ஓடுகிறது: என் உடம்பு மருந்தில் ஓடுகிறது!”

சொக்கலிங்கம் அண்ணனுக்கும் அறுபது வயதாகிவிட்டது. சஷ்டியப்த பூர்த்தி சாந்தி பண்ணிக் கொள்ளவில்லை. அதற்காக வைத்திருந்த பணத்தில் ஊரில் ஏழ்மையில் உழன்ற இரண்டு நகரத்தார் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

அத்துடன் தனது ஊரில் சிவன்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் ஒன்றையும் கட்டிக் கொடுத்தார். அதன் நிர்வாகத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், வருகின்ற வருமானத்தையும் கோவில் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி மண்டபத்தை அவர்களிடமே கொடுத்துவிட்டார்

சொக்கலிங்கம் அண்ணனின் ஊர், நகரத்தார் ஊர்களில் பெரிய ஊராகும். பங்காளிகள், தாய பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று ஏராளமான தொடர்புகள். அத்துடன் நெடுநாட்களாக கோவையில் இருப்பதால் மற்ற ஊர் நகரத்தார்களிடமும் பழக்கம் அதிகம். 59வது, 60வது, 70வது சாந்திக் கல்யாணங்கள், திருமணங்கள் என்று சராசரியாக மாதம் பதினைந்து அழைப்புக்க்களுக்கு மேல் வரும். எல்லோரும் வீடு தேடி வந்து கூப்பிட்டுவிட்டுப் போவார்கள்.

போகாமல் இருக்க முடியுமா?

காரில்தான் போவார் என்றாலும் சிரமமாக இருந்தது. செட்டிநாட்டு ஊர்களுக்குப் போக ஆறு மணி நேரம், திரும்பிவர ஆறு மணி நேரம் என்று பயணம் சள்ளையாக இருந்தது

அதனால், சம்பாதித்து போதும். இருப்பதை வைத்துக் கொண்டு நிம்மதியாக இருப்போம் என்று தன் சொந்த ஊருக்கே வந்து விட்டார். வியாபாரத்தை மொத்தமாகத் தன் மகனிடமே கொடுத்து, பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்.  இவரிடம் சுமார் எட்டு ஆண்டு காலம் பணி செய்து பயின்ற அனுபவத்தால் அவனும் அதைச் சிறப்பாகப் பார்த்துக்கொண்டான்.

கதை இப்படியே சென்று கொண்டிருந்தால் என்ன சுவாரசியம் இருக்கும்? கதை என்றால் திருப்பங்கள், டிவிஸ்ட்டுகள், முடிச்சுகள்
என்று ஏதாவது ஒன்று வேண்டாமா?

சொக்கலிங்கம் செட்டியார் வாழ்க்கையிலும் முடிச்சு ஒன்று விழுந்தது. ஆண்டு தோறும் பங்குதாரார் பழணியாண்டவரின் பங்கை அவர் செலுத்தி வந்தது போல, அவர் மகன் ஒழுங்காக செலுத்தாமல் காலம் தாழ்த்தி செலுத்தத் துவங்கினான். இந்த ஆண்டு அதையும் அவன் செய்யாததால், பழநியாண்டவருக்கு உரிய பணம் போய்ச் சேரவில்லை,

அதை அறிந்தவுடன் அண்ணன் துடித்துப் போய் விட்டார்.

நெருங்கிய உறவுகளுடன் தர்க்கம் செய்யக்கூடாது, வாக்குவாதம் செய்யக்கூடாது - உறவுகளில் கீறல் விழுந்து விடும் என்பதால் அதை அவர் ஒரு போதும் செய்ய மாட்டார். மகனுடன் நேரடியாகப் பேசி காரணத்தை அறிந்து கொள்ள அவர் விரும்பவில்லை. ஆகவே தன் அன்பு மனைவியை அழைத்து விஷயத்தைச் சொல்லி விசாரிக்கச் சொன்னார். மேலும் பழநியாண்டவருக்கு ஒரு வாரத்திற்குள் பணம் போய்ச் சேர வேண்டும். அதற்கு நீதான் பொறுப்பு என்றும் சொல்லிவிட்டார்.

ஆச்சி அவர்களும் அவரைச் சமாதானப் படுத்தி, நான் ஏற்பாடு செய்கிறேன். கவலைப் படாதீர்கள் என்று சொல்லி விட்டு ஊரிலிருந்து தங்களுடைய காரில் புறப்பட்டு கோவைக்குச் சென்றார்கள்.

என்ன நடந்தது? பணம் ஏன் போகவில்லை. ஆச்சி சொன்னபிறகாவது போய்ச் சேர்ந்ததா?

வாருங்கள், அதைத் தெரிந்து கொள்வோம்!

                 ****************************************************************

மீனாட்சி ஆச்சி கோவைக்கு வந்ததும் மகன் சுப்பிரமணியனை அழைத்து உட்காரவைத்து சரமாரியாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

      “மணி, சென்ற நிதியாண்டுக் கணக்கை முடித்து வருமான  வரியை எல்லாம் கட்டிவிட்டாயா?”

      “மார்ச் முபத்தொன்றாம் தேதி அட்வான்ஸ் டாக்ஸ் கட்டிய போதே அதெல்லாம் முடிந்துவிட்டது ஆத்தா! பாக்கி ஒன்றும் இல்லை”

      “நிகர லாபம் எவ்வளவு?”

      “ஐம்பது லட்ச ரூபாய். ஆடிட்டட் பேலன்ஸ் ஷீட்டை அப்பச்சிக்கு அனுப்பியிருக்கிறேனே ஆத்தா”

      “அதை நான் பார்க்கவில்லை! பழநி கோவிலுக்கு நாம் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்? அதை அனுப்பி விட்டாயா?”

      “பத்து லட்சம் அனுப்ப வேண்டும். அதில் ஒரு சின்ன மாற்றம். அந்தப் பணத்தை வேறு சில காரியங்களுக்கு தர்மமாகக் கொடுத்துவிட்டேன். பழநி கோவிலுக்கு அடுத்த ஆண்டுதான் பணம் அனுப்ப முடியும்”

      “என்ன காரியங்களுக்குக் கொடுத்தாய்?”

      “என் பெரிய மைத்துனன் மகன் அமெரிக்காவிற்கு எம்.எஸ் படிக்கப் போயிருக்கிறான். அவனை அனுப்பும் சமயத்தில் பணம் பற்ற வில்லை என்றார். அந்தப் பையனின் கல்விக்கு உதவுவதற்காக அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.”

      “உறவுகளுக்கு உதவுவது உதவிக் கணக்கில்தான் வரும். தர்மக் கணக்கில் எப்படி வரும்?’

      “இப்போது அவன் படிப்பதற்குப் பணம் கொடுத்தேன். அதைக் கல்விநிதி என்று வைத்துக் கொள்ளலாம் அல்லவா? கல்விக்கு உதவுவது தர்மமாகாதா?”

      “ஆகாது. முன்பின் தெரியாதவர்களுக்குக் கொடுப்பதுதான் தர்மக் கணக்கில் வரும். நீ கொடுத்துள்ள பணம் வராது. வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் 40 சதவிகித்தை நீ எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறோமே. அந்தப் பணம் அதாவது இருபது லட்ச ரூபாய் என்ன ஆயிற்று? அந்தப் பணத்தில் நீ அந்தப் பையனுக்குக் கொடுத்திருக்கலாமே?”

      “பாலக்காட்டில் பழைய இரும்பை உருக்கி கட்டுமான பணிகளுக்கான கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று விலைக்கு வருகிறது. என் நண்பன் ஒருவனுடன் கூட்டாகச் சேர்ந்து அதை வாங்கி நடத்தலாம் என்று உள்ளோம். என் பங்குப் பணமாக ஐம்பது லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். அதற்காக என் இருப்பை அப்படியே வைத்திருக்கிறேன்.”

      “கொள்ளைக்குப் போனாலும் போகலாம் கூட்டுத் தொழிலுக்குப் போகக்கூடாது என்று எங்கள் அப்பச்சி கூறுவார். புதுத் தொழிலெல்லாம் வேண்டாம். கையில் இருக்கிற இந்தத் தொழிலையே நீ அக்கறையுடன் செய்தால் போதும். பாலக்காட்டில் தொழிற்சாலை ஆரம்பித்தால் அதை யார் பார்த்துக் கொள்வது?”

       “என் நண்பன் பார்த்துக் கொள்வான். நானும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் அங்கே சென்று நடப்பைப் பார்த்துவிட்டுத் திரும்பலாம் என்று உள்ளேன்”

      “அதெல்லாம் நமக்கு சாத்தியப்படாது. ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளை ஓட்டிச் செல்ல முடியாது. ஆகவே அந்த நினைப்பை விட்டுவிடு. இதையெல்லாம் உன் அப்பச்சியிடம் ஏன் சொல்லவில்லை?

      “போனில் சொன்னால் சத்தம் போடுவார். டென்சனாகி விடுவார். ஆகவே நேரில் சந்திக்கும்போது சொல்லலாம் என்றுள்ளேன்”

       “நீ ஒன்றையும் சொல்ல வேண்டாம். சொன்னால் அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படுத்து விடுவார். நீ அதைச் செய்யாமல் இரு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியுள்ளது. பழனியாண்டவரைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

      “அப்பச்சி அடிக்கடி சொல்வதுபோல அவர் நம் குலதெய்வம். நம்மைக் காக்கும் குலதெய்வம்”

       “அதைவிட மேலானது ஒன்று இருக்கிறது. அவர் நம் கடைக்கு, நம் வியாபாரத்திற்குப் பங்குதாரர். அது தெரியுமல்லவா உனக்கு?”

       “தெரியும்”

       “பங்குதாரரின் பங்கை அவரிடம் கொடுப்பதைவிட்டு விட்டு நீ எப்படி உன் நோக்கத்திற்கு செலவு செய்யலாம். அவர் ஸ்லீப்பிங் பார்ட்னர். நேரில் வந்து கேட்க மாட்டார் என்ற நினைப்பா?”

        “--------------”

       “பழனியாண்டவர் பங்குதாரராக இருப்பதனால்தான் இத்தனை ஆண்டுகளாக வியாபாரம் நல்ல முறையில் நடந்திருக்கிறது. நஷ்டமே வந்ததில்லை. கொடுத்த சரக்குகளுக்கு வராத பாக்கி என்று எதுவும் இல்லை.  நாமும் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம். நம் வாழ்க்கையும் செழிப்பாக இருக்கிறது. ஆகவே அவரை ஏமாற்ற நினைப்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதைப் போன்றது. அதை மட்டும் செய்யாதே. செய்தால் உருப்படாமல் போய் விடுவோம். அதை மனதில் வை.

ஆத்தாளின் இந்த சொற்கள் அனைத்தும் சுப்பிரமணியனை செவிட்டில் அறைவதைப் போன்று இருந்தது.

அவன் கலங்கிப் போய் விட்டான். கண்களில் நீர் கோர்த்துக் கொண்டுவிட்டது

      “ஆத்தா என்னை மன்னித்துவிடுங்கள். என் தவறை நான் உணர்ந்துவிட்டேன். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்.”

      “பங்குதாரருக்கு உரிய பங்கிற்கு பண ஓலை ஒன்றை எடுத்துக் கொடு. நான் ஊருக்குக் கிளம்புகிறேன். உன் அப்பச்சி அங்கே தனியாக இருப்பார். போகிறபோது தாராபுரம் வழியாகப் போகாமல் பழனி வழியாகச் சென்று கோவில் நிர்வாகத்தினரிடம் பண ஓலையைச் சேர்த்துவிட்டு, பழநியாண்டவரையும் தரிசித்து விட்டு நான் ஊருக்குப் போய்ச் சேருகிறேன்.

அடுத்த நாள் காலை ஆச்சி தான் ஊரிலிருந்து வந்த காரிலேயே திரும்பிச் சென்று விட்டார்கள்.

சுப்பிரமணியன் தான் செய்த தவறுக்குப் பிராயச் சித்தமாக பத்து லட்சத்திற்குப் பதிலாக தன் பணத்தையும் சேர்த்து பதினைந்து லட்சத்திற்கு பண ஓலை எடுத்து வந்திருந்தான். தன் தாயாரிடமும் அதைக் கொடுத்துவிட்டான்

அதைப் பார்த்தவுடன் ஆச்சியின் கண்கள் பனித்து விட்டன!

                           *******************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.1.18

Short Story: சிறுகதை: பணமும், பகையும்!


Short Story: சிறுகதை: பணமும், பகையும்!

சென்ற மாதம், மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் எழுதிய கதை அந்த இதழ் வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. அந்தக் கதையை நீங்கள் அனைவரும் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
      சுப்பிரமணியன் செட்டியார், தங்கள் வீட்டிற்கு தன்னைப் பார்ப்பதற்காக வந்திருந்த தன் தம்பி மகன் சின்னைய்யாவை பிடித்துக் கொண்டு விட்டார். மெதுவாகக் கேட்டார்:

      “நீயும் உன் அண்ணனும் இந்த வீட்டின் அருமை, பெருமைகளை ஏன் அப்பச்சி வெட்டி சாய்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

      சின்னைய்யாவிற்கு தூக்கி வாரிப் போட்டது. பதிலுக்குக் கேட்டான்: “என்ன பெரியப்பச்சி சொல்கிறீர்கள்? சற்று விபரமாகச் சொல்லுங்கள்”

      “உன் பாட்டைய்யா அண்ணாமலை செட்டியார், அந்தக் காலத்தில், அதாவது 1906ம் ஆண்டிலேயே பர்மாவிற்குச் சென்று பெரும்பொருள் ஈட்டியவர். பத்தாயிரம் ஏக்கர்கள் விலை நிலம் இருந்தது. அங்கே மூன்று ஊர்களில் கொடுக்கல், வாங்கல் கடைகள் இருந்தன. 1,941ல் இரண்டாம் உலக யுத்தம் தீவிர மடைந்தபோது, பர்மாவிற்கு ஏற்படப் போகும் அவல நிலையைக் கணித்து, அதை அப்படியே விட்டு விட்டு, கையில் இருந்த பணத்துடன் இங்கே வந்தவர், அதை வைத்து, திருவாரூருக்கு அருகில் 500 ஏக்கர்கள் விலை நிலங்களை வாங்கி விவசாயம் செய்யத் துவங்கினார். அதையும் வெற்றிகரமாகச் செய்து, பொருள் ஈட்டி தன் குடும்பத்தைச் செழிப்பாக வழி நடத்தியதுடன், நம் ஊர் சிவன் கோவிலுக்கும், திருப்பணிகளைச் செய்தார். சிவன் கோவிலுக்கு காரியக்காரராக இருந்து கோவிலின் நிர்வாகத்தை சீராக நடத்தினார். ஊர் மக்கள் அவரைக் காரியக்காரர் என்றும், நம் பெரிய வீட்டைக் காரியக்கார வீடு என்றும் அழைத்தார்கள், அந்தப் பெயர் இன்றும் நிலைத்திருக்கிறது. அதெல்லாம் உனக்குத் தெரியுமா?”

     “நன்றாகத் தெரியும் பெரியப்பச்சி! நீங்கள்தான் அடிக்கடி சொல்வீர்களே!”

      “தெரிந்து என்னடா பிரயோசனம்? மாமியார் வீட்டு சொத்திற்கு, மைத்துனன்களுடன் ஏன்டா அடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? கேவலமாக இருக்கிறது!”

     “அந்த வேலையை, நான் செய்யவில்லை. எங்கள் அண்ணன் அல்லவா செய்து கொண்டிருக்கிறார்.

     “ அதை நீ தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாமா?”

     “என்னைவிட அவர் பத்து வயது மூத்தவர். நான் சொன்னால், அவர் கேட்கவா போகிறார்? அத்துடன் அவர் மனைவியும் அவருக்குத் துணை போகிறார். அதில் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை!”

     “அவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர்கள் இருக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் சேர்ந்து சொல்ல வேண்டாமா?”

     “அவர் எங்கள் அப்பச்சி வைத்துவிட்டுப்போன சொத்துக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு அறுபது வயதாகி விட்டது. யாருக்கும் சல்லிக்காசு தரமாட்டேன் என்கிறார். எப்போதும் அவர் பெருமையையே அவர் பேசிக் கொண்டிருக்கிறார். இங்கே ஊரில் சொந்த வீடு கட்டிக் கொண்டதிலிருந்து, இந்தப் பொது வீட்டிற்குக் கூட அவர் வருவதில்லை. அது உங்களுக்கே தெரியும்.”

     “சாகும்போது, என்னத்தைக் கொண்டு போகப் போகிறான்? செய்த பாவ, புண்ணியங்கள்தான் கூட வரும்!”

     “அதை எங்கள் மூத்த சகோதரி ஒருமுறை சொல்லிவிட்டார். பணம் பணமென்று ஏன் பேயாக அலைகிறாய்? காதறுந்த ஊசிகூட உன்னுடன் வராது என்று பட்டினத்தார் கதையை எல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டார். ஆனால் அவர் ஒரே வரியில் பதில் சொல்லி எங்கள் ஆச்சியின் வாயை அடைத்துவிட்டார்”

     “என்ன சொன்னான்?”

     “ஆச்சி நீ சொல்வதெல்லாம், மண்டையைப் போட்ட பிறகு, இருக்கும்வரை எல்லாம் வேண்டும். அதற்குப் பணம்தான் பிரதானம். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று சொல்லிவிட்டார்”

      பெரியப்பச்சி புன்னகைத்துவிட்டுச் சொன்னார்:“ நானென்ற அகம்பாவம்: நமதென்ற எக்காளம் நடவாது வேலனிடமே” என்று
கவியரசர் கண்ணதாசன் அற்புதமாகச் சொல்லிவிட்டுச் சென்றார். உன் அண்ணன் சிங்காரத்திற்கு இன்னும் மனம் பக்குவப்படவில்லை. அதை அவன் உணரும் நாள் சீக்கிரம் வரும். நான் வணங்கும் பழநியாண்டவர் அதை அவனுக்கு தன் தண்டாயுதத்தால் உணர வைப்பார். பொறுத்திருந்து பார்!”

      இதைச் சொன்னபிறகு அவர் மெளனமாகி விட்டார். அத்துடன் அவர்களுடைய உரையாடலும் நிறைவிற்கு வந்தது.

     ********************************************************************      சிங்காரம் செட்டியாரின் அப்பச்சிக்கு ஆறு பிள்ளைகள். பிறப்பு வரிசையில் சிங்காரம் செட்டியார் இரண்டாவது. சிங்காரம் செட்டியாருக்கு ஒரு மூத்த சகோதரியும், மூன்று இளைய சகோதரிகளும் ஒரு சகோதரனும் உண்டு.

       சிங்காரம் செட்டியாரின் அப்பச்சி மாணிக்கம் செட்டியார், அவருடைய காலத்திலேயே தன்னுடைய நான்கு பெண் மக்களையும் உரிய வயதில் கட்டிக்கொடுத்தத்துடன், சிங்காரம் செட்டியாருக்கும், அவருடைய தம்பி சின்னைய்யாவிற்கும் பெரிய இடத்துப் பெண்களைக் கட்டி வைத்துவிட்டார். இப்போது அவர் இல்லை.

       சிங்காரம் செட்டியார் சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். வேலைக்குப் போகவில்லை. தங்கள் அப்பச்சியின் கட்டுமானத் தொழிலையே உடன் இருந்து பழகி, முழுமையாக இப்போது அதையே செய்து வருகிறார். பண விஷயத்தில் கறாரானவர். அவருடைய மாமனார் வீட்டினர் உள்ளூரிலேயே பெரிய பணக்காரர்கள்.

       சிங்காரம் செட்டியாருக்கு இரண்டு மகன்கள், இருவரும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில் பணி செய்கிறார்கள். இருவருமே பெங்களூரில் இருக்கிறார்கள்.

       சிங்காரம் செட்டியாரிடம் நிறைய கஞ்சத்தனம் உண்டு. அதை அவர் சிக்கனம் என்பார்.

       சென்னை அண்ணா நகரில் ஒரு கிரவுண்டு மனையில் பெரிய வீடும், ஐந்து இடங்களில் அவர் கட்டிக் கொடுத்த பலமாடிக் குடியிருப்பு மனைகளில் ஒவ்வொரு வீடு என்று ஐந்து வீடுகளும் உள்ளன. அவற்றை எல்லாம் வாட்கைக்கு விட்டிருக்கிறார்.

       இவை பத்தாது என்று தன்னுடைய மாமனார் வீட்டு சொத்துக்களில் தன் மனைவியின் பங்கிற்காக அவர்களுடன் இவரே நின்று சண்டை போட்டத்துடன், தன் மைத்துனன்கள் மூன்று பேர் மீதும் வழக்கும் தொடுத்துவிட்டார். அவர்கள் தருவதாகச் சொன்ன பணத்தை வாங்க மறுத்து சம பங்கு வேணும் என்பதுதான் பிரச்சினை. ஊர் முழுக்க அது அவருக்குக் கெட்ட பெயரை உண்டாக்கி விட்டது.

        அந்தப் பிரச்சினைகளாலும், அதிகமாகப் பணம் செலவாகும் என்ற காரணத்தாலும் தன்னுடைய அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவைக்கூட அவர் செய்து கொள்ளவில்லை. வடபழநிக் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வந்ததுடன் அது முடிந்து விட்டது.

         உடன் பிறந்தவர்களிடமும், உறவினர்களிடமும் சுமூகமான உறவு இல்லை. தன்னைப் பேணியாக வளர்ந்துவிட்டார்,  உலகில் தான்தான் கெட்டிக்காரன் என்ற அகம்பாவம் மிக்கவர். பணம்தான் அவருக்குக் கடவுள். சேர்ந்த பணத்தை விட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். தர்ம காரியங்களுக்கென்று ஒரு நூறு ரூபாய் பணம்  கூட இதுவரை கொடுத்ததில்லை.

      அவர் செய்த நல்ல காரியம் தன்னுடைய மகன்கள் இருவரையும் நன்றாகப் படிக்க வைத்ததும், அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்ததும்தான்.

        துவக்கம் என்றால் முடிவு என்று ஒன்று உண்டு. பகல் என்றால் இரவு உண்டு, உறவு என்றால் ஒரு நாள் பிரிவும் உண்டு. பிறப்பு என்றால் இறப்பும் உண்டு. உலகில் எல்லாவற்றிற்கும் இரண்டு நிலைப்பாடுகள் உண்டு.

       அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் அற்புதமாகத் தன் பாடல் ஒன்றில் இப்படிச் சொன்னார்:

       அங்கும் இங்கும் அலைபோலே - தினம் 
       ஆடிடும் மானிட வாழ்விலே 
       எங்கே நடக்கும் எது நடக்கும் - அது 
       எங்கே முடியும் யார் அறிவார் 

        சிங்காரம் செட்டியாரும் அதை உணரும் காலம் வந்தது.

        காலதேவன் அதைக் கச்சிதமாகச் செய்தான்

        என்ன செய்தான்?

        வாருங்கள் அதைப் பார்ப்போம்!

                      **********************************************
        பெரியவர் சுப்பிரமணியன் செட்டியார், “பழநியாண்டவர் உன் அண்ணனுக்கு தன் தண்டாயுதத்தால் எல்லாவற்றையும் உணர வைப்பார்.” என்று சொன்ன ஒரு வார காலத்திலேயே அது நடந்தது.

        சிங்காரம் செட்டியாரின் மனைவி மீனாட்சி ஆச்சியின் உயிர் ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் தூக்கத்திலேயே பிரிந்து விட்டது.

         சிங்காரம் செட்டியார் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார். ஆடிப் போய் நிலை குலைந்து விட்டார்.

         சிங்காரம் செட்டியாரின் மகன்களும், உடன் பிறப்புக்களும் மற்றும் உறவினர்களும் வந்து குவிந்து விட்டார்கள். ஆச்சியின் சகோதரர்கள் மூவரும் பகையை மறந்து ஆச்சிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வந்து விட்டார்கள். இறந்த இரண்டாம் நாள்
ஆச்சியின் பூத உடல் திருவொற்றியூர் மாயானத்தில் தகனம் செய்யப் பெற்றது.

        எல்லா கிரியைகளையும், சவண்டியையும் சென்னையிலேயே செய்தார்கள். இரண்டு நாட்கள் சொந்த ஊருக்கும் சென்று பங்காளி வீடுகளுக்கு கேதம் சொன்னார்கள்.

        எல்லாச் சடங்குகளும் முடிந்து, புறப்படும் சமயத்தில், அவருடைய மகன்கள் இருவரும் தங்கள் தந்தையைத் தனியே அழைத்துச் சென்று பேசிய வார்த்தைகள்தான் முக்கியமானது.

        "அப்பச்சி, பணம் மட்டுமே சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் தராது. உறவுகளாலும் நட்புக்களாலும்தான் அதைத் தரமுடியும். உங்கள் வம்பு, வழக்குகளை மறந்து எங்கள் ஆயா வீட்டு மக்கள் அனைவரும் கேதத்திற்கு வந்து விட்டார்கள் பார்த்தீர்களா? உங்கள் உடன் பிறப்புக்கள் அனைவரும் வந்து விட்டார்கள். அந்தப் பெருந்தன்மை நமக்கு வேண்டாமா? ஆகவே சிந்தித்துப் பாருங்கள். எங்களுக்குப் பணமும் வேண்டாம். பணத்தை வைத்து வரும் பகையும் வேண்டாம். உங்கள் பணம், சொத்து என்று எங்களுக்கு எதுவும் வேண்டாம். இறையருளால் நாங்கள் சம்பாதிப்பதே எங்களுக்குப் போதும், அதுபோல நீங்கள் உண்டாக்கி வைத்திருக்கும் பகையும் எங்களுக்கு வேண்டாம். அவற்றை எல்லாம் முதலில் சரி பண்ணுங்கள். இது எங்களுடைய வேண்டுகோள்” என்று சொன்னவர்கள், அவரை விழுந்து வணங்கி விட்டுப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.

          சிங்காரம் செட்டியாருக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது. அவருடைய மனதில் பெரிய தாக்கத்தையும் உண்டாக்கியது. தன் பிள்ளைகளுக்கு முப்பது வயதிற்குள் ஏற்பட்ட பக்குவம், அறுபது வயதாகியும் தனக்கு ஏற்படாததை நினைத்து மனதில் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.

          எல்லாவற்றையும் ஒரே மாதத்தில் சரி செய்தார். மைத்துனர்கள் மேல் போட்டிருந்த வழக்கை வாபஸ் வாங்கியதோடு, அவர்களையும் அழைத்து எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். தம்பியை அழைத்து தங்கள் அப்பச்சியின் சொத்துப் பத்திரங்கள், வங்கி வைப்புத்தொகைகளை எல்லாம் கொடுத்து நீங்கள் ஐவரும் எடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

           சென்னையில் இருந்த சொத்துக்களை எல்லாம் விற்றதுடன், தங்கள் பாட்டனார் அண்ணாமலை செட்டியார் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கி, அதில் அந்தப் பணத்தை எல்லாம் முதலீடு செய்தார். அத்துடன் சென்னையில் தான் செய்து வந்த கட்டுமானத் தொழிலை நிறுத்திவிட்டு தன் சொந்த ஊருக்கு குடி பெயர்ந்து விட்டார்.

           தங்கள் பெரிய வீட்டிலேயே சமையல்காரர், காவல்காரர் என்று உதவிக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டு, அங்கேயே தங்கி, தன்  பெரிய தகப்பனார் உதவியுடன் உள்ளூர் நகரச் சிவன் கோவிலின் நித்திய பூஜைகள், கட்டளைகளைக் கவனிக்கத் துவங்கினார்.

           காரியக்காரர் வீடு என்ற பெயர் மீண்டு வந்து சேர்ந்தது! அவருடைய மன மாற்றத்திற்கு கிடைத்த பரிசு என்று அதை  எடுத்துக் கொள்ளலாம்.

*******************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.11.17

Short Story: சிறுகதை: இறைவன் கொடுத்த வரம்!!!


Short Story: சிறுகதை: இறைவன் கொடுத்த வரம்!!!

இந்த மாதம், மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் எழுதிய சிறுகதை, அந்த இதழ் வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. அந்தக்
கதையை நீங்கள் அனைவரும் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்ல
வேண்டுகிறேன்.

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
சிறுகதை: இறைவன் கொடுத்த வரம்!

கருப்பையா செட்டியார் தன் மகளுக்கு வரன் பார்க்கத்  துவங்கியபோது, அவர் மகள் மீனாட்சி இரண்டே இரண்டு
கோரிக்கைகளைத்தான் முன் வைத்தாள்.

”அப்பச்சி, படித்து முடித்துவிட்டு இப்போது வீட்டில் இருப்பது போலவே, திருமணத்திற்குப் பிறகும், ஹோம் மேக்கராக
வீட்டிலேயே இருப்பதைத்தான் விரும்புகிறேன். வேலைக்குச் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆகவே கை நிறையச் சம்பாதித்து, தன் செலவிலேயே குடும்பத்தை நடத்தக் கூடிய மாப்பிள்ளையாகப் பாருங்கள். மாப்பிள்ளை தோற்றத்தில் எப்படியிருந்தாலும் பரவாயில்லை - ஆனால் நல்ல குணமுடையவராக இருக்க வேண்டும். மனைவியை மதித்து வைத்துக் கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும்....”

“மாப்பிள்ளையின் உண்மையான குணம் எல்லாம், கல்யாணத்திற்குப் பிறகுதானே அம்மா தெரியும்...”

“ஜாதகத்தைப் பார்த்தால் தெரியாதா? கோட்டூர்புரம் ஜோதிடர் கோவிந்தசாமி அய்யாதான் பெரிய ஜோதிடராயிற்றே?
அத்துடன் உங்களுக்கு அவர் நெருங்கிய நண்பரும் ஆயிற்றே? ஜாதகங்களை அவரிடம் காட்டினால் பார்த்துச் சொல்ல மாட்டாரா?”

"அவர் உன்னுடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு ஏற்கனவே சொல்லிவிட்டார். பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடு சூப்பராக
இருக்கிறது. அத்துடன் 7ம் வீட்டு அதிபதி குரு பகவானின் பார்வையும் 7ம் வீட்டின் மேல் இருக்கிறது. மேலும் சுக்கிரனும் குருவும் ஒருவருக்கொருவர் நேரடிப்பார்வையில் இருக்கிறார்கள். ஆகவே நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். அத்துடன் பெண்ணின் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். ஆகவே நீ ஒன்றுக்கும் கவலைப் படாதே!
பழநியாண்டவரைப் பிரார்த்தித்துக் கொள் மற்றதை எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார்”

பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் பார்க்கும் நிகழ்விலேயே  அவள் அதைத் தெரிந்து கொண்டாள்.

வடபழநி முருகன் கோவிலில்தான் பெண் பார்க்கும் நிகழ்வு
நடந்தது.

மீனாட்சி, திரைப்பட நட்சத்திரம் அனுஷ்காவைப் போல் பளிச்சென்ற தோற்றத்துடன் இருப்பாள். ஐந்தடி ஏழங்குல
 உயரம். தன் உயரத்திற்குத் தகுந்ததைப் போலவே மாப்பிள்ளை இருக்க வேண்டுமென்பதுதான் அவளுடைய விருப்பம்.

மாப்பிள்ளை தன் பெற்றோருடன் வந்திருந்தார். வந்தவர் கையில் பூங்கொத்தோடு (பொக்கே) வந்திருந்தார். அதைக் கருப்பையா
செட்டியாரின் கையில் பணிவுடன் கொடுத்துவிட்டு இரு கைகளையும் கூப்பி வணங்கினார்.

ஆறடி உயரம். களையான முகம். ஜீன்ஸ் கால்சட்டையும், கிளாசிக் போலோ டி சட்டையும் அணிந்திருந்தார்.

மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்துவிட்டது. கண் ஜாடையிலேயே தன் தாயாரிடம் தன் சம்மதத்தைத் தெரிவிக்க, அந்த ஆச்சியும், கையில் கொண்டுவந்திருந்த பையில் இருந்து நான்கு முழம் மல்லிகைப் பூவை எடுத்து, ஒரு முழம் அளவிற்கு வெட்டி மீனாட்சியின் தாயாரிடம் கொடுத்து விட்டு, மீதிப் பூவை மீனாட்சியிடம் கொடுத்து தலையில் சூடிக் கொள்ளச் சொன்னார்.

“நீங்களே வைத்து விடுங்கள்!” என்று மீனாட்சி சொல்லிவிட்டு தலையைக் குனிந்து அவரிடம் காட்ட, அவரும் பூவைச் சூட்டி
விட்டார்.

கருப்பையா செட்டியார் கோவிலுக்கு வெளியே சென்று
பெரிய மாலை ஒன்றையும், தேங்காய், பழம், வெற்றிலை
பாக்குடன் அர்ச்சனைத் தட்டு ஒன்றையும் வாங்கிக் கொண்டு வந்தார்.

பின்னர் ஆறு பேரும் முருகன் சன்னிதானத்திற்குள் நுழைந்து அங்கே உறைந்திருக்கும் வடபழநியாண்டவரை வணங்கி
விட்டுத் திரும்பினார்கள்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இருவீட்டாரும் சேர்ந்து பேசி அடுத்து இரண்டு மாதங்களில் வந்த தை மாதத்தில், முதல்
முகூர்த்தத்திலேயே திருமணத்தை நடத்தி வைத்தார்கள்!

              ********************************************************

கருப்பையா அண்ணனுக்கு காரைக்குடி முத்துப் பட்டிணத்தில் வீடு. மாப்பிள்ளையும் உள்ளூர்தான். மெ.மெ.வீதியில் வீடு.

கல்யாணம் முடிந்த கையோடு, அப்பத்தா வீடு, ஆயா வீடு
காய்ச்சி ஊற்றுதல், குன்றக்குடி கோவில், இலுப்பக்குடி,
இளங்குடிக் கோவில், குலதெய்வக்கோவில் என்று எல்லாக் கோவில்களுக்கும் சென்றுவிட்டு நான்காவது நாளே
மீனாட்சியும், அவளுடைய உள்ளம் கவர்ந்த கணவன் சோமசுந்தரமும் பெங்களூருக்குப் புறப்பட்டார்கள்.

எந்த சாமானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எல்லா சாமான்களும் கேஸ் அடுப்பிலிருந்து வாஷிங் மெஷின்வரை
பெங்களூர் வீட்டில் இருப்பதால் நான்கு பெரிய பெட்டிகளில் துணிகளைத் தவிர வேறு ஒரு லக்கேஜூம் இல்லை.

இரண்டு வீட்டுப் பெரியவர்களும் மெதுவாகச் செல்லுங்கள்
என்று மட்டும் சொல்லிவிட்டு, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.

பெங்களூரில் சர் சி.வி.ராமன் நகரில் உள்ள பக்மானே டெக்னோ பார்க்கில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சோமுவிற்கு
டிசைன் இஞ்சினியர் வேலை. சென்னை ஐ.ஐ.டி யில் எம்.ஈ வரை படித்தவன். மாதம் இரண்டு லெட்ச ரூபாய் சம்பளம்.

ஹூண்டாய் ஐ 20 கார். பயணத்திற்கு சூப்பராக இருந்தது. திருமணத்திற்கு ஒரு மாதம் முன்புதான் தன்னுடைய பழைய காரைக் கொடுத்துவிட்டு இந்த வண்டியை அவன் வாங்கியிருந்தான்.

மீனாட்சிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காரைக்குடியில் இருந்து திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி என்று வழியில் உள்ள
ஊர்களையெல்லாம் தாண்டி ஏழு மணி நேரத்தில் ஹோசூருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கிருந்து பெங்களூரில் உள்ள அவர்கள்
வீட்டுக்குப் போய்ச் சேர ஒன்றரை மணி நேரமாகிவிட்டது. சாலைகளில் வாகன நெரிசல் காரணம்

வழியில் ஹோசூரில் உள்ள அடையார் ஆனந்தபவன்
ஹோட்டலில் இரவு உணவை முடித்துகொண்டு வந்தவர்கள்
பயணக் களைப்பில், வீட்டிற்கு வந்தவுடன் படுத்து உறங்கி விட்டார்கள்

                        *******************************************

மீனாட்சி சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து பழக்கப்பட்டவள். அதிகாலையில் எழுந்தவள் காலைக் கடன்களை முடித்துவிட்டு,
காப்பி போட்டு எடுத்துக் கொண்டு வந்து வைத்து விட்டு,
கணவனை எழுப்பினாள்.

அவளைப் படுக்கையில் தன் அருகே அமரச் சொன்னவன், மெதுவாகக் கேட்டான்.

“வீடு நன்றாக இருக்கிறதா? உனக்குப் பிடித்திருக்கிறதா?”

“எனக்கு எல்லாம் பிடித்திருக்கிறது!  உங்களை, உங்கள் பெற்றோர்களை, உங்கள் காரைக்குடி வீட்டை, உங்கள்
புதுக்காரை, இந்த வீட்டை என்று எனக்கு எல்லாம்
பிடித்திருக்கிறது!”

“திருமணமாகி நான்கு நாட்கள்தானே ஆகிறது. அதற்குள் என் பெற்றோர்களை எப்படிப் புரிந்து கொண்டாய்?”

“ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பார்கள். உங்கள் தாயாரின் நல்ல குணத்தை அவர்களின் செயல்களில் இருந்து
புரிந்து கொண்டேன். திருமணப் பேச்சு வார்த்தையின்போது,
என்ன தோது எதிர்பார்க்கிறீர்கள் என்று? என் தந்தையார்
கேட்டார்களாம்.அதற்கு உங்கள் தாயார் எதுவும் யோசிக்காமல் சட்டென்று பதில் சொன்னார்களாம். எங்களுக்கு எந்த
எதிர்பார்ப்பும் இல்லை. உங்கள் பெண்ணிற்கு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் என்றார்களாம்.”

புன்னகைத்த சோமு, சொன்னான். “ திருமணத்திற்காக ஏழு
லெட்ச ரூபாய் பணம் சேர்த்து வைத்திருந்தேன். திருமணத்திற்கு
முன்பு  என்னுடைய வங்கி டெபிட் கார்டை என் தாயார் கையில் கொடுத்து, திருமணச் செலவிற்கான பணத்தை என் வங்கிக்
கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். என்
தாயார் மறுத்து விட்டார்கள். உன் கல்யாணத்திற்காக நான்
பத்து லெட்ச ரூபாய் எங்களுடைய வங்கிக் கணக்கில் வைத்திருக்கிறேன். அதில் இருந்துதான் செலவழிக்கப்
போகிறேன் என்றார்கள்.அதோடு பெண் வீட்டிலிருந்து அவர்கள் ஏதாவது ரொக்கம் கொடுத்தால், அதை உங்கள் இருவரின்
பெயரில் வைப்புத் தொகையாகப் போட்டு விடுவதாக
இருக்கிறேன் என்றார்கள்”

“என் தந்தையார் ஸ்ரீதனமாகக் கொடுத்த ஐந்து லெட்ச ரூபாய்களையும் அப்படியே வங்கியில் வைப்புத்
தொகையாகப் போட்டு விட்டு அதன் ரசீதை என் தந்தையிடம் காட்டினார்களாம். அத்துடன் இன்னொன்றும் செய்தார்கள் தெரியுமா?”

“என்ன?” சோமு ஆர்வமாகக் கேட்டான்.

“நாம் இங்கே புறப்பட்டு வருவதற்கு முன்பு உள் வீட்டிற்குள்
என்னை அழைத்தவர்கள், கையில் ஐநூறு ரூபாய்க் கட்டு
ஒன்றைக் கொடுத்தோடு சொன்னார்கள். என் மகன் சிக்கனமானவன். ஒவ்வொரு செலவையும் கணக்கெழுதி செலவழிப்பவன்.  ஆகவே ஒவ்வொரு வீட்டுச் செலவிற்கும் அவனைக் கேட்டு நீ செலவு செய்ய முடியாது. ஆகவே
அவசரத்திற்கு இதில் இருந்து எடுத்து செலவழித்துக்கொள் என்றார்கள். என் மகனிடம் இதைச் சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார்கள். நமக்குள் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது என்பதற்காக இதை நான் உங்களிடம் சொல்கிறேன். இந்த
விஷயம் நமக்குள் இருக்கட்டும்.....”  என்று  சொன்னவள், உள் அறைக்குள் சென்று தன் பெட்டியிலிருந்த அந்த புது ஐநூறு
ரூபாய்க் கட்டைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.

“இல்லை நீயே வைத்துக்கொள்” என்றவன் தொடர்ந்து
சொன்னான், “நம் திருமணத்திற்கு அடுத்த நாள் மறுவழிச் சாப்பாட்டிற்காக உங்கள் வீட்டிற்கு வந்த போது, உன் தந்தையார் என்னிடம் தங்கத்தில் கற்பகப் பிள்ளையார் ஒன்றைக் கொடுத்தார். கால் கிலோ எடையாம். அவருடைய மாமனார், அவருடைய திருமணத்தின்போது பரிசாகக் கொடுத்ததாம். மாமனார் என்ற முறையில் அடுத்த தலைமுறை மாப்பிள்ளையான உங்களுக்குப் பரிசாகக் கொடுப்பதுதான் முறை. ஆகவே வைத்துக் கொள்ளுங்கள். என் பெண்னிடம் இப்போது சொல்ல வேண்டாம். சர்ப்ரைசாக இருக்கட்டும். பெங்களூர் போனதற்குப் பிறகு
அங்கே சொல்லுங்கள். இந்தப் பிள்ளையார் மிகவும்
இராசியான பிள்ளையார். எல்லா வளமும் உங்களைத் தேடி வரும்” என்று ஆசீர்வதித்துக் கொடுத்தார். ”அது என் பெட்டியில் துணிகளுக்குக் கீழே உள்ளது எடுத்துப் பார்”

மீனாட்சி அசந்து போய் விட்டாள். தன் தந்தையையும் தன் கணவனையும் ஒரு சேர நினைத்துப் பார்த்தவளின் கண்கள் பனித்து விட்டன!

" ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூட்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே!"

என்ற பாடல் வரிகள் அவள் மனதிற்குள் ஒலித்தது!!!!

                    ***********************************************

மூன்று மாதங்கள் சென்றதே தெரியவில்லை. மீனாட்சியின் பெரியப்பச்சி மகள் அகிலா என்ற அகிலாண்டேஷ்வரி
வெளிநாட்டிலிருந்து 18 நாட்கள் விடுப்பில் சென்னைக்கு வந்தவள், மீனாட்சியைப் பார்க்க தன் மூன்று வயதுக் குழந்தையுடன்
பெங்களூருக்கு வந்திருந்தாள்.

வந்தவளுக்கு எல்லாமும் ஆச்சரியமாக இருந்தது.

ஆச்சரியத்தில் பெரிய ஆச்சரியம், மீனாட்சி தன் கணவனை ’அய்த்தான்’ என்று ஒவ்வொருமுறையும் அழைத்தது. அவள் கணவன் சோமுவும் மீனாட்சியைப் பெயர் சொல்லி
அழைக்காமல் “கண்மணி’ என்று அழைத்ததும் ஆச்சரியமாக இருந்தது.

மீனாட்சியின் கணவன் தன்னுடைய அலுவலகத்திற்குப்
புறப்பட்டுச் சென்றவுடன், அகிலா மெதுவாகக் கேட்டாள்:

“என்னடி நடக்கிறது இங்கே? நீ அய்த்தான் அய்த்தான் என்று குழைகிறாய். அவர் பதிலுக்குக் கண்மணி கண்மணி என்று
குழைகிறார்.....என்ன ஆச்சு உங்களுக்கு? எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் நீங்கள்?

“எதற்காக கேட்கிறீர்கள் ஆச்சி?”

”இந்தக் காலத்து இளம் பெண்கள் அனைவருமே தங்கள்
கணவனை பெயர் சொல்லித்தானே அழைக்கிறார்கள். நான்
என் கணவர் இராமநாதனை ராம் என்று தான் அழைக்கிறேன்.
அவர் என்னை அகில் என்றுதான் அழைக்கிறார்!”

அது ஒவ்வொருவரின் பழக்கத்தைப் பொறுத்தது. அன்பு,
அபிமானம், வைத்திருக்கும் மரியாதையைப் பொறுத்தது.
அவர் தங்கமான மனிதர். என்னைவிட ஆறு வயது மூத்தவர். அவரைப் பெயர் சொல்லி அழைக்க என் மனம் ஒப்பவில்லை. அவரிடமே கேட்டேன். உங்களை அய்த்தான் என்று
அழைக்கட்டுமா? பத்தாம் பசலி என்று நீங்கள் நினைக்ககூடாது அதனால்தான் கேட்கிறேன் என்றேன். அதற்கு அவர் உன் விருப்பம்போல எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம்
என்று சொல்லிவிட்டார். ஆரம்பத்தில் இருந்து அவரும் என்னைக் கண்ணின் மணி - கண்மணி என்றுதான் அழைக்கிறார்”

”போகட்டும், காலையில் எழுந்தவுடன் தரையில் பாயை
விரித்துக் கொண்டு அமர்ந்து, சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை எல்லாம் அழகாக நறுக்கித் தட்டில் அடுக்கிக் கொடுத்து விடுகிறாரே! அதுவும் எனக்கு ஆச்சரியமாக
உள்ளது. என் கணவர் இருந்த இடத்தைவிட்டு நகர மாட்டார்.
காப்பி குடித்த டம்ளரை சிங்கில் கொண்டு போய்  போடமாட்டார். நான்தான் எடுத்துக் கொண்டுப்போய்ப் போட வேண்டும். அவர் குளிக்கச் சென்றால், உள்ளாடைகள், டவல் என்று எல்லாவற்றையும் நான் தான் கொண்டுபோய்க் குளியலறையில் போட வேண்டும். எல்லாவற்றிலும் மிதப்பாக இருப்பார். ஒத்தாசையாக இருக்க மாட்டார். அது பற்றிப் பேசினால் சண்டைதான் வரும். ஆகவே
நான் எதுவும் பேசுவதில்லை. குணம் அறிந்ததால், தலையைக் கொடுத்துவிட்டோம் என்று சரி பண்ணிக் கொண்டு போகிறேன்.”

“காலப்போக்கில் எல்லாம் சரியாவிகிடும் ஆச்சி. பொறுமையாக இருங்கள்!”

“வேறு வழியில்லை. அப்படித்தான் இருக்க வேண்டும். ஆமாம்
கேட்க வேண்டும் என்று நினைத்தேன். சென்றமுறை, அதாவது
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உன்னை நான் பார்த்தபோது, கலக்கலாக இருப்பாயே - இப்போது அடியோடு மாறிவிட்டாயே -
எப்படி மாறினாய்? என்ன காரணம்?”

“எங்கள் ஆத்தாவின் அறிவுரைதான் காரணம். என்னுடைய திருமணத்திற்கு முன்பிருந்தே தினமும் எனக்கு பல அறிவுரைகளைச் சொன்னார். அதில் மூன்று அறிவுரைகள் முக்கியமானவை. அதன்படிதான் நடக்கிறேன்.”

“என்ன அறிவுரை? எனக்கும் சொல்லேன்!”

“இனிமேல் உனக்கு உன் கணவர்தான் முக்கியம். நாங்கள் யாரும் உடன் வரமாட்டோம். அவரின் மனம் நோகாமல் நடந்து கொள்.
அவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள். வியாபாரத்தில், வாடிக்கையாளர் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்கின்ற பொன்மொழி உண்டு - அதாவது customer is always right'  என்பதுதான் தாரக மந்திரம். அது போல தாம்பத்திய
வாழ்க்கையில் கணவர் எப்போதுமே சரியானவர் என்பதுதான் தாரக மந்திரம் Husband is always right.  அவரை எதிர்த்துப் பேசாதே. எந்த சூழ்நிலையிலும் அவருடன் சண்டை போடாதே. இதுதான் முதல் அறிவுரை”

“இரண்டாவது........”

“கணவருக்கு மரியாதை கொடு. ஒருமையில் அழைக்காதே! மூன்றாவது அறிவுரை முக்கியமனது. அவரிடம் நேர்மையாக
நடந்து கொள். ஒளிவு மறைவாக எதையும் செய்யாதே!”

 “அருமை! இதையெல்லாம் மீறி ஒன்று இருக்கிறது தெரியுமா? அதுதான் தலை எழுத்து! நாம் வாங்கி வந்த வரம்! மனைவி
அமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரம் என்ற பாடலைக் கவியரசர் கண்ணதாசன் அற்புதமாக எழுதினார். ஆனால்
அவர் கணவனுக்காக என்ன எழுதினார் என்பது தெரியவில்லை! நல்ல கணவர் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான்!”

இவ்வாறு பேசி முடிக்க முடிக்க அகிலாவின் கண்களில் நீர் துளிர்த்தது.

அதைக் கேட்ட மீனாட்சியின் கண்களும் பனித்து விட்டன!!!                  ****************************************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.11.17

Short Story: சிறுகதை: மெல்லத் திறந்தது கதவு!


Short Story: சிறுகதை: மெல்லத் திறந்தது கதவு!                

சென்ற மாதம், மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய கதை. அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை. நீங்கள் படித்து மகிழ்வதற்காக அதை இன்று வலையில் ஏற்றியுள்ளேன்,

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------
                                      மெல்லத் திறந்தது கதவு!                           

      “எனக்கு சன்’னும் இல்லை: பென்சன்’னும் இல்லை. வயதான காலத்தில் கலக்கமாக இருக்கிறது” என்று சின்னைய்யா செட்டியார் சொன்னவுடன், அவருடைய நண்பர் இராமசாமி செட்டியார் பொறுமையாகக் கேட்டார்:

      “என்னண்ணே சொல்றீங்க? சொல்றதைத் தெளிவாகப் புரியும்படியாகச் சொல்லுங்கள்”

      “எங்க பெரியப்பச்சி மகன் மாணிக்கம் செட்டியாருக்கு இரண்டு மகன்கள். இரண்டு பேரும் மாதா மாதம் அவருக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சென்னை நங்கநல்லூரில் பெரிய மகன் வாங்கி வைத்திருக்கும் வீட்டில் அவர் தன் மனைவியுடன் குடியிருக்கிறார். வாடகை இல்லை. வருகிற பணத்தில் செளகரியமாகச் சாப்பிட்டுக் கொண்டு சுகமாக இருக்கிறார். அவருடைய தம்பி சுந்தரம் செட்டியாருக்கு பையன்கள் இல்லை. இரண்டுமே பெண் குழந்தைகள்தான். நல்ல இடங்களில்  கட்டிக் கொடுத்து விட்டார். வங்கியில் சீனியர் மேனஜராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். வங்கியில் இருந்து கணிசமான தொகை மாதாமாதம் பென்சனாக - அதாவது ஓய்வு ஊதியமாக வருகிறது, அவரும் சென்னை வில்லிவாக்கத்தில் அந்தக் காலத்தில் கட்டிய தன்னுடைய வீட்டில் செளகரியமாக இருக்கிறார். ஆனால் என் நிலைமை அப்படியா இருக்கிறது?”

      “ஏன் நீங்களும் அம்பத்தூர் வீட்டில் கடந்த முப்பது வருடங்களாக செளகரியமாகத்தானே இருந்தீர்கள்?”

      “இருந்தேன். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக ஏழரைச் சனி புரட்டிப் போட்டு விட்டது. வியாபாரத்தில் நஷ்டம். சரக்குக் கொடுக்த இடத்தில் எல்லாம் பணம் வரவில்லை. எனக்குப் பணம் கொடுத்தவர்களெல்லாம் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். கடை வாடகை, கடைப் பையன் சம்பளம் வீட்டு வாடகை, வீட்டுச் செலவு என்று மாதா மாதம் பணத் தேடலில் நொந்து நூலாகப் போய் விட்டேன். எல்லாவற்றையும் ஊற்றிக் கழுவி விட்டு, ஊற்றி மூடி விட்டு சொந்த ஊருக்கே வந்து விட்டேன்.”

      “நல்லதுதானே! இந்த வீட்டில் - இவ்வளவு பெரிய வீட்டில் உங்களுக்குப் பாதிப் பங்காயிற்றே - அதற்காக சந்தோஷப் படுங்கள்.”

      “பங்கென்னவோ பாதிதான். ஆனால் பராமரிப்புச் செலவென்றால் பாதிப் பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறதே. அதை நினைத்துப்  பார்த்தாயா?”

      "ஒரு ப்ளஸ் என்றால் கூடவே ஒரு மைனசும் இருக்கத்தான் செய்யும். நல்லதும் கெட்டதும் கலந்ததுதானே வாழ்க்கை. பகல் இரவைப்போல!!”

      “நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் மனது என்று ஒன்று இருக்கிறதே. கையில் காசு இருந்தால், எல்லாவற்றையும் சரி பண்ணிக் கொண்டு போய் விடலாம். பணம் இல்லாதபோதுதான் பிரச்சினைகளெல்லாம் பூதாகரமாகத் தெரிகிறது. எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் எனக்குப் பாதிப் பங்கு 32 செண்ட் இடத்தில் என் பங்கு 16 செண்ட். தெருவை ஒட்டி இருப்பதால் எங்கள் ஊரில் இருக்கும் பணக்காரர் ஒருவர் விலைக்குக் கேட்டார். பதினாறு லெட்சம் பணமும் தருகிறேன் என்றார். அவருக்கு விற்று விட்டேன். சென்னையைக் காலி பண்ணிக் கொண்டு வரும்போது, வாங்கிய கடன்களை எல்லாம் நேர் செய்துவிட்டு வந்ததில் பதினான்கு லெட்சம் பணாலாகிவிட்டது. மிச்சம் கையில் இருந்த இரண்டு லெட்சத்தோடுதான் இங்கே வந்தேன். வந்து நான்கு மாதமாகிறது. வீட்டு செலவு, மருந்து, மாத்திரை செலவு என்று மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் செல்வாகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு அந்தப் பணம் வருமோ தெரியவில்லை. அதுதான் கவலையாக இருக்கிறது!”

      "அதெல்லாம் கவலைப் படதீர்கள். ஒரு கதவு சாத்திக் கொண்டால், இறைவன் இன்னொரு கதவைத் திறந்து விடுவான். ஆகவே எந்தக் கதவு திறந்திருக்கிறதென்று பாருங்கள். அதன் வழியே செல்லுங்கள். வாழ்க்கை மீண்டும் வளமாகி விடும்!”
நீங்கள் நினைப்பது போல் உங்கள் பெரியப்பச்சி மகன்களெல்லாம் ஆனந்தமாக இல்லை. பத்து நாட்களுக்கு முன்புதான் உங்கள் பெரியப்பச்சி மகன் மாணிக்கம் செட்டியாரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அழாத குறையாக எல்லாக் கஷ்டங்களையும் சொன்னார். கையில் இருந்தால் வாயில் போட்டுக் கொள்ளலாம் - அடுத்தவர்கள் கொடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் நிலைமை அவலமானது என்று சொன்னார், இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்றுதான் பேர். ஆனால் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் தாராளமாகச் செலவழித்து ஆளாக்குவதைப் போல, வயதான காலத்தில் பெற்றோர்களுக்கு அவர்கள் தாராளமாகச் செலவழிப்பதில்லை. அளந்துதான் கொடுக்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் அதுதான் நடக்கிறது என்றார்.”

      “........................................”

      “சென்னையில் இருந்து ஊரில் நடக்கும் விசேடங்களுக்குப் போய் வந்தால் இரண்டாயிரம் ரூபாய் செலவாகிறது என்றால், ஊருக்கெல்லாம் போகாதீர்கள். நீங்கள் வரவில்லை என்று யார் அழுகிறார்கள்? மேலும் நீங்கள் ஊரில் விழுந்து அடிபட்டால் யார் வைத்தியம் பார்ப்பது என்கிறார்களாம். இதையும் அவரேதான் சொல்லி வருத்தப்பட்டார். அவருடைய தம்பி நிலைமை இன்னும் மோசமாம். இரண்டாவது மகளுக்குப் பிரசவம் பார்த்து, சீர் செய்து அவளை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்ததில் மூன்று லெட்ச ரூபாய்களும், தன் மனைவிக்கு கர்ப்பப்பைக் கோளாறுக்காக வைத்தியம் பார்த்ததில், இரண்டு லெட்ச ரூபாய்களும் ஆக மொத்தம் ஒரே மாதத்தில் ஒரு வருட பென்சன் பணம் காலியாகிவிட்டதாம். ஆகவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை. மொத்தத்தில் சன்’ வைத்திருப்பவர்களில் பலரும் மகிழ்ச்சியாக இல்லை, பென்சன் பணத்தில் வாழ்பவர்களில் பலரும் மகிழ்ச்சியாக இல்லை. அதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்”

      தொடர்ந்து இவ்வாறு பலவாறாக இராமசாமி செட்டியார் சொன்னவுடன், சின்னய்யா செட்டியார் அவற்றை மறுத்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மெளனமாகி விட்டார்.

     அவர்களுடைய உரையாடலும் அத்துடன் நிறைவிற்கு வந்தது!

********************************************************************************

      இராமசாமி செட்டியார் புறப்பட்டுச் சென்றவுடன், அதுவரை பெட்டகசாலையில் அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த சின்னைய்யா செட்டியாரின் மனைவி சாரதா ஆச்சி  முகப்பிற்கு வந்தவர், அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு தன் கணவரை சொற்களால் விளாசு விளாசென்று வீசி விட்டார்:

      “ எதற்காக  வருகிறவர்களிடமெல்லாம் எனக்கு சன்’னும்
இல்லை: பென்சன்’னும் இல்லை என்ற பாட்டைப்  பாடிக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் பிரச்சினை என்ன? கையில் பணம் இல்லை. வயதான காலத்தில் சம்பாதிக்கவும் வழியில்லை என்பதுதானே? எங்கள் ஆத்தா வீடு போட்ட கெட்டிக் கழுத்தீர் நூறு பவுனும் உபரி நகைகள் நூறு பவுனும் ஆக மொத்தம் 200 பவுன் நகைகள் கடந்த 40 வருடங்களாக வங்கி லாக்கரில்தான் இருக்கிறது. அவற்றை எடுத்துத் தருகிறேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு அவற்றை வைத்துப் பாதுகாப்பது.? எங்கள் ஆத்தா வீடு அவற்றை பவுன் 140 ரூபாய் விற்கும் காலத்தில் வாங்கினார்கள். இப்போது பவுன் 23 ஆயிரம் விற்கிறது. அவற்றை எடுத்து விற்றால் சுமார் 44 லெட்ச ரூபாய்கள் கையில் கிடைக்கும். வாங்கி வங்கியில் சேமிப்புக் கணக்கில் போட்டு விட்டு நிம்மதியாக இருங்கள். வட்டியில் சாப்பிட வேண்டாம். அசலிலேயே சாப்பிடுவோம். மாதாமாதம் வேண்டிய பணத்தை வாங்கிச் செலவழிப்போம். நிம்மதியாக இருப்போம்.”

      சின்னையா செட்டியாருக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

      “உண்மையாகத்தான் சொல்கிறாயா?”
 
      “உண்மையாகத்தான் சொல்கிறேன். எதற்கு இந்த சந்தேகம்?”

      “ எந்தப் பெண்ணும் நன் நகைகளை விற்றுச் செலவழிக்க ஒப்புக்கொள்ள மாட்டாளே? அதனால்தான் கேட்கிறேன்.”

      “உங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் நல்லவர். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர். எந்தக் கெட்ட செலவும் செய்யாதவர். நமது தாம்பத்திய வாழ்க்கையில் ஒரே ஒரு குறைதான். நமக்குப் பிள்ளை இல்லை என்பதுதான் ஒரே ஒரு குறை. அதற்கு நீங்கள் காரணம் இல்லை. முன்று முறை கருத்தரித்தும் குழந்தை என் வயிற்றில் தங்கவில்லை. கர்ப்பப்பை வீக்காக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். இப்போது அதை எல்லாம் நினைத்து வருத்தப் படுவதில் பயனில்லை. உங்களுக்கு நான் குழந்தை, எனக்கு நீங்கள் குழந்தை என்றுதான் இத்தனை நாட்களாகப் பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். நமக்கு சன்’ இல்லாததைப்போல பெண்’னும் இல்லை. நமக்குப் பின்னால் அந்த நகைகளுக்கெல்லாம் ஒரு விடிவு வேண்டாமா? நம் காலத்திலேயே அதைச் செய்துவிடுவோம் என்றுதான் இதைச் சொல்கிறேன்!”

      “ஒரு கதவு சாத்திக் கொண்டால், கடவுள் இன்னொரு கதவைத் திறந்து விடுவார் என்பார்கள். கடவுள் நல்ல மனைவி என்ற கதவைத் திறந்து விட்டிருக்கிறார். உன்னுடைய நல்ல மனம் வாழ்க. உன்னுடைய நகைகளை விற்று, அந்தப் பணத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. நீ சொல்வதைப் போல அந்த நகைகளை எல்லாம் விற்று விட்டு, வருகிற பணத்தை நம் ஊர் மீனட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்குக் கொடுத்துவிடுவோம். இறைப் பணிக்கு அந்தப் பணம் பயன் படட்டும். நம் நடப்புச் செலவிற்கு என்ன செய்வது என்பதைப் பற்றி நான் யோசித்து ஒரு முடிவு செய்து வைத்திருக்கிறேன்.”

      “என்ன முடிவு?”

      “இவ்வளவு பெரிய வீடு நமக்குத் தேவையில்லை. நம் பங்கில் சரி பாதி வீட்டை விற்று விடலாம் என்று இருக்கிறேன். நம் தோட்டத்தை விலைக்கு வாங்கினாரே சண்முகம் செட்டியார், அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஐம்பது லெட்ச ரூபாய்கள் தருகிறேன் என்கிறார். அவருடைய பூர்வீகப் பங்கு வீடு சிதிலமாகி இடிந்து தரை மட்டமாகிவிட்டது. அவருக்கு இரண்டு மகன்கள். நன்றாகப் படித்து, சென்னை ஐ.டி கம்பெனிகளில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறார்கள். ஊரில் சொந்த வீடு இல்லை என்பதனால் அவர் வீட்டில் பெண்களைச் செய்வதற்குப் பலரும் தயங்குகிறார்கள். அதனால் நம் வீட்டின் பாதிப் பங்கை வாங்குவதற்கு அவர் தயாராக இருக்கிறார். அதனால் கொடுத்து விடலாம் என்று இருக்கிறேன். அவருடைய பிரச்சினையும் தீர்ந்து விடும். நம் பிரச்சினையும் தீர்ந்து விடும். நீ என்ன சொல்கிறாய்?”

     “நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எனக்கும் அதில் சம்மதம்தான். பழநியாண்டவருக்கு 101 ரூபாய்கள் எடுத்து முடிந்து வைக்கிறேன். நமது இருவரின் கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்றி வைப்பார்.”

      அடுத்து வந்த ஆவணி மாதத்திலேயே அந்த இரண்டு செயல்களும் பழநியாண்டவர் அருளால் செவ்வனே நிறைவேறின.

      அடுத்து, பழநியாண்டவரின் அருளால்  சின்னைய்யா தம்பதியருக்கு 15 வயதில் அழகான ஆண் மகனொன்று செலவில்லாமல் சுவீகாரமாகக் கிடைத்தது. ஆமாம் சின்னய்யா செட்டியாரின் பங்காளி வீட்டு ஆச்சியொன்று தன் இரண்டு மகன்களில் இரண்டாவது மகனை நீங்கள் சுவீகாரமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு ஒன்றும் பணம் தர வேண்டாம். நீங்கள் அவனை நன்றாகப் படிக்க வைத்து ஆளாக்குங்கள் என்று சுவீகாரமாகக் கொடுத்து விட்டார். எளிய நிகழ்ச்சியொன்றில் அதுவும் நிறைவேறியது.

      சுவீகார தினத்தன்று சுவீகாரம் வந்த பையன், “அப்பச்சி’ - ஆத்தா” என்று அன்பொழுக அழைத்தவாறு சின்னய்யா செட்டியார் - சாரதா ஆச்சி ஆகிய இருவரின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தான். பண்பான, பணிவான பையன்.

      இறைவனின் அருள் அது. தாமதமாக பிள்ளைச் செல்வம் கிடைத்தாலும் உரிய நேரத்தில் அது கிடைத்தது. மெல்லத் திறந்தது கதவு என்றாலும் உள்ளத்தை நெகிழ்த்தியது அந்தக் கதவு.

      இறைவனின் அருளை நினைத்து இருவரின் கண்களும் பனித்து விட்டன!!!!
             ******************************************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.8.17

Short Story: சிறுகதை: நம்பிக்கையும், இறையுணர்வும்!


சிறுகதை:

நம்பிக்கையும், இறையுணர்வும்!

அடியவன் எழுதி, சென்ற மாதம் மாத இதழ் ஒன்றில் வெளியான சிறுகதை ஒன்றை உங்களுக்குப் படிக்கத் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்

சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!

உங்கள் பிரச்சினைகளுக்கான சாவியை, இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பார். இல்லை என்றால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் உரிய மதிப்பெண்   337 என்று எப்படி வரும்? இங்கே தேர்வு எழுதியவனுக்கும் 337தான். தேர்வில் எதையும் எழுதாமல் வெறும் வெள்ளைத்தாளை மடக்கிக் கொடுத்துவிட்டு  வந்தவனுக்கும் மதிப்பெண் 337தான்!

ஆகவே சாவி உங்களிடம்தான் இருக்கும் .அதைத் தேடி எடுங்கள். பத்தாம் வீடு கெட்டிருந்தால் தொலையட்டும், பண வரவிற்கான வேறு அமைப்பு
நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் ஜீவனம் எப்படி நடக்கும்?கர்மகாரகன் சனீஸ்வரனும், தனகாரகன் குரு பகவானும் அந்த அவலத்திற்கான மாற்று
ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பார்கள். அல்லது சுகாதிபதி சுக்கிரன், உங்களுக்கு ஒரு மங்கை நல்லாள் மூலம் ஜீவனத்திற்குக் கொடி
காட்டியிருப்பான். ஆகவே கவலை இன்றி இருங்கள். நடப்பது நடக்கட்டும். அது நல்லதாகவே நடக்கட்டும்

கையில் இருந்த புத்தகத்தில் இருந்த அந்த அசத்தலான வரிகளை சிகப்பி ஆச்சி எத்தனை முறைகள் படித்தாரென்று தெரியவில்லை. அதையே அவர் மனது அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது. தனது பிரச்சினைக்கான சாவியை அவர் தேடிக்கொண்டிருந்தார்.

என்ன பிரச்சினை?

அவருடைய ஒரே மகள் சாலா என்ற விசாலாட்சி தனக்கு திருமணமே வேண்டாம்தனக்காக மாப்பிள்ளை தேடும் முயற்சியை விட்டுவிடுங்கள் என்று  சொல்லிக் கொண்டிருந்தாள்.

சொந்தக்காரர்கள், சுற்றத்தார்கள் எல்லாம் வேறு மாதிரிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் யாரையோ விரும்புகிறாள் போலும், அதனால்தான் பெற்றோர்கள் பார்க்கும் வரன்களை எல்லாம் தட்டிக் கழிக்கிறாள் என்று பேசத் துவங்கி விட்டார்கள்.

சாலாவிற்கு வயது 27 தொட்டுவிட்டது. திரைப்பட நட்சத்திரம்போல அழகாக இருப்பாள். கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூரில்தான் வசிக்கிறாள்.
கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த காலத்தில் படித்துத் தங்கப் பதக்கத்துடன்   பொறியாளராக தேர்வு பெற்றவள்.பன்னாட்டு நிறுவனம்
ஒன்றில் நல்ல வேலை. தற்போது வேலை பார்ப்பது மூன்றாவது நிறுவனம். மூன்று முறைகள் தாவியதில் (By Jumping) சம்பளம் மாதம் லட்ச ரூபாயைத் தாண்டிவிட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு வந்த புதிதில் பி.ஜி  
(Paying-Guest-Accommodation-For women) ஒன்றில் தங்கி வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள், சனி மற்றும் ஞாயிறு என்று வாரம் 
இரண்டு நாள் விடுமுறைக்கும் சென்னைக்குச் சென்று தன் 
பெற்றோர்களுடன் இருந்துவிட்டு திங்கட்கிழமை காலை பெங்களூருக்குத் திரும்பி விடுவாள்.

அவ்வாறு சிரமங்கள் இன்றி இருக்க அவளுடைய தந்தையார் அவள் வேலை பார்த்து வந்த பக்மானே டெக் பார்க் ஏரியாவின் அருகில் இருந்த
பைரசந்திரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்து விட்டார், 3 படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்பு.
அவளுக்கு சமைத்துப் போட்டு துணையாக இருக்க அவளுடைய தாயாரும் பெங்களூருக்கே வந்துவிட்டார். வந்தவர் சும்மா இருக்காமல் அவளைத்
தினமும் திருமணம் குறித்துப் பேசி நைத்துக் கொண்டிருந்தார்.

அவள் அதைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டாள். “அம்மா, நான்தான் உன்னிடம் பலமுறை  சொல்லிவிட்டேனே! எனக்குத் திருமணம் வேண்டாம். வேண்டாம்....... வேண்டாம், அதைப்பற்றி இனி என்னிடம் பேசாதே!!”

நானும் அதைபோல சொல்லியிருந்தால், என்ன நடந்திருக்கும்? நீ பிறந்திருப்பாயா? உன் முடிவை மாற்றிக்கொள் ராஜாத்தி! எங்களுக்குப் பிறகு
உனக்கு ஒரு துணை வேண்டாமா?”

"துணையே வினையாகிப் போனால் என்ன செய்வதுகணவன், அவருடைய பெற்றோர்கள் என்று எல்லோரும் என்னைக் கட்டுப் படுத்துவார்கள்.
எனது சுதந்திரத்தை நான் இழக்க வேண்டியதாக இருக்கும். அதில் எனக்கு உடன்பாடில்லை! நான் சுதந்திரப் பறவையாக இருக்க விரும்புகிறேன்.
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றின் வரிகளைப் போல நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்.”

என்ன எழுதினார் கண்ணதாசன்?”

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்தவீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
மரத்தில் படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு படரவிட்டார்
மண்ணில் நடக்கும் நதியே
உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்
உங்கள் வழியே உங்கள் உலகு
இந்த வழிதான் எந்தன் கனவு

இதற்கு மேல் சிகப்பி ஆச்சி அவளுடன் வாதிடுவதை நிறுத்திக் கொள்வார்

சிகப்பி ஆச்சியின் கணவர் சின்னையாவிற்கு சாலா செல்லப்பிள்ளை. ஆகவே அவர் அவளைக் கடிந்து ஒன்றும் சொல்ல மாட்டார். சிகப்பி   ஆச்சிக்குத்தான் கடுமையான சோதனையாகி விட்டது. பழநி அப்பனைப் பிரார்த்திப்பதைத்  தவிர அவருக்கு வேறு வழியொன்றும் தோன்றவில்லை.

மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சண்முகா......... சரணம்!”

என்று கந்த சஷ்டிக் கவசத்தைத்தான் அனுதினமும் பாராயணம் செய்து கொண்டிருந்தார்.

கார்த்திகை மைந்தன் கைகொடுத்தாரா?

கைகொடுக்காமல் இருப்பாரா?

என்ன செய்தார்? சாலா எப்படி மனம் மாறினாள்?

வாருங்கள் அதைப் பார்ப்போம்!!

இறைவன் நேரில் காட்சி கொடுத்து யாருக்கும் உதவ மாட்டார். சக மனிதர்கள் மூலமாகத்தான் உதவுவார். சிகப்பி ஆச்சிக்கும் அவருடைய இளைய
சகோதரி சாரதா ஆச்சி மூலமாக அந்த உதவி வந்து சேர்ந்தது.

சாரதா ஆச்சியும் அவரது கணவரும் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் வசிப்பவர்கள். சாரதா ஆச்சி 18 நாட்கள் விடுப்பில் இந்தியாவிற்கு வந்தவர்,
தன் சகோதரியைப் பார்ப்பதற்காக பெங்களூருக்கு வந்திருந்தார்.

சிகப்பி ஆச்சி தன் மனக்குறையை அவரிடம் கொட்டித் தீர்த்தார். அவரைச் சமாதானப் படுத்திய சாரதா ஆச்சி, சாலாவுடன் நான் பேசுகிறேன் என்று
சொல்லிவிட்டுஅவளைத் தனியே அழைத்துப் பேசத்துவங்கினார்.

நான் பேசி முடிக்கும்வரை பொறுமையாகக் கேள். குறுக்கே பேசாதே
பேசி முடித்த பின் உன் சந்தேகங்களைக் கேள் என்று சொல்லி
விட்டுத்தான் பேசத்துவங்கினார்:

சாலா, உலகில் எதுவுமே தனித்து இயங்காது. ஒன்றை ஒன்று சார்ந்து தான்இயங்கும். பதினெட்டு வயது வரை பிள்ளைகளுக்கு தாய் வேண்டும்.
அறுபது வயதிற்குமேல் தாய்க்கு அவளை அரவணைக்க பிள்ளைகள் வேண்டும். விவசாயத்திலிருந்து விமானப் போக்குவரத்துவரை எல்லா
இயக்கமும் அவற்றின் பின்னணியில் பலரை, பலவற்றைச் சார்ந்துதான் இருக்கும்.

ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையை வைத்து அல்ல! கொலுசு என்ன விலை என்றாலும் அதைக் காலில்தான் அணிந்து கொள்கிறோம். இரண்டு
ரூபாய்க்குக் கிடைக்கும் குங்குமத்தை நெற்றியில் அணிந்து கொள்கிறோம். அது போல உலகில் உள்ள ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. ஒரு
பெண்ணின் முழு மதிப்பு அவள் தாய்மை ஸ்தானத்தை அடைந்த பிறகுதான் அவளுக்குக் கிடைக்கும்.

ஆனான படிப்பு நீ படித்தாலும் அதுக்கது துணை வேண்டும்என்று பெண்களுக்காக நீ போற்றிப் புகழும் கவியரசரே சொல்லியிருக்கிறார்,
 
உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பல கற்றும்,
கல்லார் அறிவிலாதார்.” என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். பலவற்றைக் கற்றிருந்தும், உலகத்தோடு ஒன்றி இசைந்து வாழும் ஒழுகுதலைக்   கல்லாதவர் அறிவில்லாதவர் என்பது அதன் பொருளாகும்.

உலகில் உள்ள செயல்கள் அனைத்திற்கும் விதிமுறைகள் உள்ளன. நிறுவனங்களுக்கு விதிமுறைகள் உள்ளன. அவற்றின்படிதான் அவைகள்
செயல்படும். விளையாட்டுக்களுக்கும் விதிமுறைகள் உள்ளன. கால் பந்தாட்டத்தில் உள்ள இரண்டு கோல் போஸ்ட்டுக்களையும் நீக்கி விட்டு
விளையாடுங்கள் என்று சொன்னால் எப்படி விளையாட முடியும்?

வாழ்க்கைக்கு நம்பிக்கைதான் அடிப்படை. உன் அன்னைக்குக் கிடைத்த கணவரைப் போல அல்லது எனக்குக் கிடைத்த கணவரைப் போல உனக்குக்
கிடைப்பார் என்று நம்பிக்கை வைத்து திருமணம் செய்து கொள்!!!!

நாளைக்குக் காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையில்தான் அனைவரும் இரவில் படுக்கின்றோம். எழுகிறோம். எழுவோம் என்பதற்கு யாராவது
கியாரண்டி தர முடியுமா? தர முடியாது. எல்லாம் இறைவனின் கருணையினால் நடக்கிறது.

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
        நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க!!!”

என்று கவியரசர் அற்புதமாக எழுதினார். ஆகவே நம்பிக்கையும், இறையுணர்வும் இருந்தால் போதும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும்  இருக்கும்

என்று சாரதா ஆச்சி அவர்கள் தொடர்ந்து பேசியவுடன், சாலாவின் மனதில் ஒரு தெளிர்ச்சி ஏற்பட்டது!!!

ஏதாவது விளக்கம் வேண்டும் என்றால் கேள்!”

ஒன்றும் வேண்டாம் சித்தி, நீங்கள் இருவரும் பார்த்து எனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்யுங்கள்என்று தழுதழத்த குரலில் சாலா
சொன்னாள்

அப்புறம்?

அப்புறம் என்ன? அடுத்து வந்த ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தத்தில் சாலாவின் திருமணம் சிறப்பாக நடந்தது!
==================================================== 
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!