மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.3.10

ஒரே மாதிரியான சாராம்சம் எதற்காக?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரே மாதிரியான சாராம்சம் எதற்காக?

எனக்கு வந்த மின்னஞ்சலைக் கீழே கொடுத்துள்ளேன். அதற்கான பதிலையும் அடுத்துக் கொடுத்துள்ளேன்.
------------------------------------------------------------------------------
from palani senthil
to classroom2007@gmail.com
date 17 March 2010 19:53
subject என் கருத்து
mailed-by gmail.com
Signed by gmail.com
வணக்கம்.
மன்னிக்கவும்.
தஙகளின் எல்லா செட்டி நாட்டு கதைகளிலும் பணக்கார செட்டியார் வருகிறார்.......
அவரின் பணக்கார வீடு,ஆடம்பரம் வருகிறது......
சொத்து பிரச்னை,பாக பிரிப்பு பிரச்னை வருகிற்து......
ஒரே மாதிரியான சாரம்சம்.
ஏன் மாற்ற கூடாது.
ஆனால் தஙகளின் நடை பாரட்டுக்குரியது.
மனதில் பட்டதை கூறி உள்ளேன்.
தவறாக கருதினால் மன்னிக்கவும்.
ந‌ன்றி.
ப.செந்தில்.
மதுரை
----------------------------------------------------------------------------------
எனது சிறுகதைகள்:
இதுவரை மொத்தம் 60 கதைகள் எழுதி வெளியாகியுள்ளன. சமூகத்தில் உள்ள பல அவலங்களை, பிரச்சினைகளை, கற்பனையில் ஓட்டி ஒரு தீர்வுடன் கதையாகச் சொல்லியுள்ளேன். பணக்காரர்கள் என்றில்லை. வாழ்க்கையின் எல்லா நிலை மக்களைப் பற்றியும் கதை எழுதியுள்ளேன். சுவைக்காக கதை நடந்த இடங்களைச் செட்டிநாட்டுப் பிண்ணனியில்,அந்தப் பகுதி மக்களின் சொல்வழக்கில் எழுதியுள்ளேன்.அன்பரின் குற்றச்சாட்டு தவறு என்று சுட்டிக்காட்ட கீழே உள்ள கதையைப் பதிவில் ஏற்றியுள்ளேன். இதைப் படித்து விட்டு அவர் தனது கருத்தை மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறேன்.
அன்புடன்
வாத்தியார்
=================================================
சிறுகதை:
தந்தி மீனி ஆச்சி
****************************************
தந்தி மீனி ஆச்சி வழக்கத்திற்கு மாறாக கலக்கத்துடன் காணப்பட்டார். என் தந்தையிடம் வந்ததும் வராததுமாகக் கடுகடுப்போடு சொல்லிக் கொண்டிருந்தார்.

“இராமசாமி அண்ணே, கேட்டீயளா இந்த அநியாயத்தை! இன்னிக்குச் சாயந்திரம் நடக்கப்போகும் மகாசபைக் கூட்டததில் அந்தக் கோடி வீட்டு ராமஞ்செட்டி தீர்மானம் கொண்டு வரப்போகிறாராம்.”

“என்ன தீர்மானம்? “ என் தந்தையார் நிதானமாகக் கேட்டார்.

“என்னை இந்த ஊரைவிட்டு இரண்டு வருஷமாவது தள்ளி வைக்க வேண்டுமாம்!”

“கவலைப்படாதே மீனா! நான் பார்த்துக் கொள்கிறேன். நீ யாரிடமும் ஒன்றும் பேசாதே. போய்ப் பேசாமல் வீட்டில்இரு.” என்று கண்டிப்புடனும், நம்பிக்கையுடனும் சொன்னவர், மீனி ஆச்சியை எங்கள் வளவில் உள்ள மற்றவர்கள் விசாரிக்கும் முன்பு அனுப்பி வைத்தார்.

அடுத்த வீடுதான் மீனி ஆச்சியின் வீடு. அவரும் உடனே போய் விட்டார்.

எங்கள் ஊரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாசபைக் கூட்டம் இன்று மாலை நகரச் சிவன் கோவிலி ல் நடக்க உள்ளது.

ராமஞ்செட்டியாரும் பேசப்போகின்றார், என் தந்தையாரும் பேசப் போகின்றார் என்றால் அது சுவாரசியமாக இருக்கும், நாமும் போக வேண்டும் என்று முடிவு செய்தேன்.

தந்தி மீனி ஆச்சி எங்கள் ஊரில் மிகவும் புகழ் பெற்றவர். அவரை ரேடியோ மீனி ஆச்சி என்பார்கள்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் மனோரமாவை நினைத்துக் கொள்ளுங்கள் - மீனி ஆச்சியும் அசப்பில் அப்படியேதான் இருப்பார். அதே மாதிரிதான் பேசுவார். செட்டிநாட்டுத்தொனி சிறப்பாக இருக்கும்.

1960ஆம் ஆண்டு பாகப்பிரிவினை படம் வந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த காலம்.

நான் அழகப்பாவில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது மீனி ஆச்சிக்கு வயது 45. ஆனாலும் முப்பது வயசுக்குள்ள கேலியும் கிண்டலும் அவரது பேச்சில் மிகுந்திருக்கும்.

“மீனி ஆச்சி ஏதாவது செய்தி உண்டா?” என்று வம்புக்கு இழுத்தால், உடனே பட்டென்று சொல்வார்.

“படிச்சுப் பாஸாகிற வேலையைப் பார் அப்பச்சி! நாட்டுச் செய்தியை எல்லாம் கேட்கிற வயசா உன் வயசு?”

ஒரு செய்தி மீனி ஆச்சிக்குத் தெரிந்தால் போதும் அன்று மாலைக்குள் ஊர் முழுக்கத் தெரிந்துவிடும். அதுவும் ‘யாரிடமும் சொல்லாதீர்கள்’ என்று சொல்லிவிட்டால் போதும். அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் அது ஊர் முழுக்கத் தெரிந்துவிடும்.

எங்கள் ஊரில் மொத்தம் எண்ணூறு புள்ளிகள். அத்தனை பேர்களைப் பற்றிய விபரங்களும் மீனி ஆச்சிக்கு அத்துபடி. அதுமட்டுமல்ல எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மற்ற நகரத்தார் ஊர்களிலும் மீனி ஆச்சியைத் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள்.

மீனி ஆச்சி செய்தி சேகரிக்கும் விதமே அலாதியானது. பெரும்பாலும் நகரச்சிவன்கோவில், ஊருணிக்கரை, திருமண, சாந்திக்கார வீடுகள் போன்ற இடங்கள்தான் அவருடைய செய்திக்களங்கள். மாமியாரைப் போகவிட்டு மருமகளை மடக்குவார். அப்பச்சியைப் போகவிட்டு மகனை மடக்குவார். அண்ணனைப் போகவிட்டுத் தம்பியை மடக்கிப் பேசுவார். எப்படியோ
அவருக்கு செய்திகள் கிடைத்துவிடும். சில இடங்களில் நேர்காணலும் செய்துவிடுவார்.

அவருக்குக் கல்யாணமாகி இரண்டாவது ஆண்டு அவருடைய கணவர் வெளியூர் போனவர் போனவர்தான். இன்றுவரை திரும்பவில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு பையன். அதைவிற்று, இதைவிற்று எப்படியோ அவனைப் பள்ளி இறுதி வகுப்புவரை படிக்க வைத்துவிட்டார். அவனுக்குச் சென்னையில் ஒரு பதிப்பகத்தில் வேலை. திருமணமாகிவிட்டது. கைக்கும்
வாய்க்குமான சம்பளம். வாழ்க்கைப் போராட்டம். அவன் ஊருக்கே வருவதில்லை.

காலையில் எழுந்து குளித்துவிட்டுச் சிவன் கொவிலில் போய் ஒரு மணி நேரம் பொழுதைப் போக்கிவிட்டு, அங்கேயே அருகில் இருக்கும் கூடைக்காரப் பெண்களிடம் இரண்டு கட்டுக் கீரையை வாங்கிக் கொண்டு நகர்வலம் கிளம்பி விடுவார்.

முதல் கீரைக்கட்டை ஒரு வீட்டில் கொடுப்பார். அங்கே சாப்பிடச் சொல்வார்கள் - காலைப்பலகாரம் முடிந்துவிடும். அடுத்த கீரைக்கட்டிற்கு மதியம் ஒரு வீட்டைப் பிடித்து விடுவார். இரவிற்குச் சிவன் கொவில் கட்டளைக்காரர்கள் புளியோதரை, சர்க்கரைச்சாதம் என்று கொடுத்து விடுவார்கள். சமையல் வேலையெல்லாம் அவருக்கு இல்லை.

தேன் குழல், மாவுருண்டை, சீப்புச்சீடை என்று வீடுகளில் பலகாரம் செய்யும் ஆச்சிமார்கள் ஆள் அனுப்பி மீனி ஆச்சியை உதவிக்குக் கூட்டிக் கொள்வார்கள். காரைக்குடிக்குச் சாமான்கள் வாங்கப்போகும் ஆச்சிமார்களும் இவரைத்தான் கூட்டிக் கொள்வார்கள். பத்து இருபது கொடுப்பார்கள். அதுதான் அவருடைய வருமானம்.

அவரால் பிரிந்த குடும்பங்களும் உண்டு. ஒன்று சேர்ந்த குடும்பங்களும் உண்டு. திருமணமாகிப்போன பெண்களும் உண்டு. மருமகள்களாக வந்த பெண்களும் உண்டு.

ஒரே ஒரு அசத்தலான விஷயம்-இவ்வளவு கஷ்டத்திலும் அவர் மிகவும் நேர்மையானவர். நாணயமானவர். காசு விஷயத்தில் ஒரு பத்து பைசாக்கூட அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படமாட்டார்.

****************************
நகரச்சிவன் கொவிலில் அலங்கார மண்டபம். மாலை மணி ஆறு. கூட்டம் தொடங்கியது. மொத்தம் முன்னூறு பேர் வந்திருந்தார்கள்.

காரியக்காரர் வரவேற்புரை ஆற்றி, நிதிக்கணக்கைச் சமர்ப்பித்தார். பிறகு ஆற்ற வேண்டிய பணிகளைப்பற்றி விவாதித்தார்கள்..முடிவு எடுத்தார்கள். தீர்மானங்களை எழுதிக்கொண்டார்கள்.

கடைசியாகக் காரியக்காரர் ’வேறு ஏதாவது உள்ளதா? ‘ என்று கேட்டதுதான் தாமதம், ராமஞ்செட்டியார் எழுந்து நின்று தீர்க்கமாகச் சொன்னார்.

“தந்தி மீனி ஆச்சியின் தொல்லை பெரிய தொல்லையாக உள்ளது. மகாசபை அதற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டும்!”

‘ஆமாம், ஆமாம்’ என்று நான்கைந்து குரல்கள் ஒன்று சேர்ந்து ஒலித்தன.

காரியக்காரர் கேட்டார், “நாம் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?”

ராமஞ்செட்டியார் சொன்னார்., “ஒரு மூன்று ஆண்டுகளாவது ஆச்சியை ஊரைவிட்டுத் தள்ளி வைக்க வேண்டும்!

“எல்லோரும் ஒரு மனதாக ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார் காரியக்காரர்.

உடனே என் தந்தையார் எழுந்து சொன்னார்.

“தள்ளிவைப்பது என்பது மிகவும் கடுமையான செயல். ஒழுக்கமில்லாமல் நெறிகெட்டுப் போயிருந்தால் மட்டுமே அப்படிச் செய்யலாம். ஆச்சி மேல் உள்ள குற்றம் என்ன யோசித்துப் பாருங்கள். அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர்
பேசிக்கொண்டு திரிவது குற்றம் என்றால் ஊரில் உள்ள நாம் அனைவரும் காலம் காலமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே - அது குற்றமில்லையா? அடுத்த வீட்டு விஷயங்களைக் கேட்பதில்லை, அவற்றில் நமக்கு ஆர்வமில்லை என்ற நிலை இருந்தால் அவர் எப்படிப் பேசுவார்? ஆகவே நாம் அவரிடம் சேதிகள் கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும். இரண்டாவதாக அவர் பேச்சுக்களால் பாதிக்கப்படுவதை மட்டுமே சொல்கிறீர்கள். இருக்கலாம்.ஆனால் அவரால் எவ்வளவு நன்மைகளை நாம் அடைந்திருக்கிறோம். எவ்வளவு திருமணங்கள் அவரால், அவர் கூறிய மேன்மையான பரிந்துரைகளால் முடிந்திருக்கிறது.
அதை எல்லோரும் நினைத்து பாருங்கள்!

இப்போது ராமஞ்செட்டியார் குறுக்கிட்டார், “அவரால் நன்மையும் வேண்டாம். தீமையும் வேண்டாம். அவர் பேசாமல் இருக்க வேண்டும். அதற்கு ஏதாவது வழியிருக்கிறதா? சொல்லும்!”

என் தந்தையார் அதிரடியாகச் சொன்னார் “இருக்கிறது!”

சபையில் இருந்த அத்தனை தலைகளும் என் தந்தையாரை நோக்கித் திரும்பிப் பார்த்தன. பத்துப் பதினைந்து குரல்கள் ஒருமித்துக் கேட்டன, “ என்னவென்று சொல்லுங்கள்? “

என் தந்தையார் தொடர்ந்தார்.

“மீனா தன் வறுமை காரணமாகவே வீடுவீடாகச் செல்கின்றார். வலியப்போய் பேசுகின்றார். நம் ஊரில் எவ்வளவோ தொழில் அதிபர்கள், மேதைகள் இருக்கிறீர்கள். யாராவது ஒருவர் அவருக்கு ஏதாவது ஒரு வேலை போட்டுக்கொடுங்கள். பிரச்னை தீர்ந்துவிடும்!”

“இப்போது நான்கைந்து பேர் எழுந்து நின்று, “ஆமாம் அதுதான் சரியான
முடிவு என்றார்கள்”

என்ன ஆச்சர்யம் பாருங்கள். கூட்டத்திற்கு வந்திருந்த எங்கள் ஊரைச்
சேர்ந்த நூற்பாலை அதிபர் ஒருவர் தான் அதைச்செய்வதாக ஒப்புக்கொள்ள பலத்த ஆதரவிற்கிடையே கூட்டம் இனிதே முடிவுற்றது.

அந்த தொழில் அதிபர் தன் நூற்பாலையில் மீனி ஆச்சிக்கு மட்டும் இல்லை, அவருடைய மகனுக்கும் சேர்த்து வேலை போட்டுக்கொடுத்து விட்டார். அவர்கள் தங்குவதற்கு ஆலையின் குடியிருப்பில் இடமும் கொடுத்துவிட்டார்.

அடுத்தநாள் காலை மீனி ஆச்சி ஊரைவிட்டுப் புறப்படும் முன்பு எங்கள் வீட்டிற்கு வந்து என் தந்தையாரின் காலில் விழுந்து வணங்கி எழுந்து, கண்ணில் நீர் பெருக்கெடுக்க - ஒன்றும் பேசாமல் - கைகூப்பி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றார் பாருங்கள் - நான் அசந்து விட்டேன்.

மௌனமும் ஒரு மொழி என்பதை அப்பொதுதான் தெரிந்து கொண்டேன்.

- 16 மார்ச் 2005’ ஆச்சி வந்தாச்சு மாத இதழில் வெளிவந்தது
***********************************************************************














வாழ்க வளமுடன்!

26 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    அருமையான கருத்துள்ள கதையினை

    படிக்க வாய்ப்பு அளித்தமைக்கு

    நன்றி!

    வணக்கம்.

    தங்கள் அன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-03-19

    ReplyDelete
  2. நன்றி! நன்றி!!
    நண்பர் பழனி செந்திலுக்கு நன்றி!

    தேனடையில் இட்டத் துழை தேனியாய் அல்ல! தேனாய்க் கொட்டியது!

    அவலங்களும், அழுக்காச்சியும், கொடுமையும், குரோதமும், நம்பிக்கைத் துரோகமும், ஒழுக்கக் கேடும், இன்னும் என்ன என்ன கெட்ட விடங்கள் (விடயங்கள்) வேண்டுமோ அத்தனையும் தொலைக்காட்சித் தொடர்களிலேப் பார்க்கலாம். அதனாலே அந்தப் பக்கம் போவதில்லை. இன்னும் பல வார சஞ்சிகைகள் உண்டு அதில் அரிவாள் வெட்டும், அருவருப்பு மூட்டும் அவலக் கதைகளும், அயோக்கியத் தனங்களின் வெளிச்சம் என்றும் பல அவலங்களே அவைகளின் கருவறை, கருத்தறை எப்படி வேண்டுமானாலும் கொள்வோம்.... அவைகளுக்கு அவயம் இங்கே.... யாரின் கருத்திற்கும் மாற்றுக் கருத்தாக அல்ல, என் மனதில் பட்டதையே கூறுகிறேன்... வாத்தியாரின் வகுப்பறையில் ஜனநாயகம் உண்டு!!!
    வறுமையின் கொடுமையை அவலங்களை வாழ்வில் விரும்பாததுப் போல் கதைகளிலும் ஊறுகாயாய் வருவதே சுவை மிகும்.

    உங்கள் பா(ப)ணியும், தொனியும், அழகோடு அறிவும் சுமந்து வரும் தோணியாய், இனியும் தொடரட்டும்....
    கதையும் கருத்தும் அருமை! ராமன் செட்டியாரின் குட்டிக் கலாட்டாவால், மீனி ஆச்சிக்கு நல்லது நடந்தது. நன்றிகள் குருவே!

    ReplyDelete
  3. ஆச்சிக்கு குரல் கொடுத்த உங்கள் தந்தையால் அவர் தப்பினார்...

    நல்ல கதை.. உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. இலக்கியத்தை ரசிக்கும்போது,எழுத்தாளாரின் இதயம் நமக்குப் புலனaகும். ஒரு கதாசிரியர் பணக்காரச் சூழலில் இருந்தார் எனில் அச் சூழலை நாம் அறியத் தருவது தவறாகாது. அதையும் நாம் தெரிந்து கொள்வோம்.ஏழை படும் பாட்டைப் பற்றி அச் சூழலில் வளர்ந்த கதாசிரியர் எழுதுவதே சரியாகும். இதை அவ‌ரும் அதை இவரும் எழுதினால் அதில் செயற்கைத் தன்மைதான் மிஞ்சும். கி.ராஜ நாராயணன் க‌ரிசல் மண் சார்ந்த மக்களைப்
    பற்றி எழுதுவார்.அவரை செட்டிநாட்டைப் பற்றி எழுதச்சொல்வது சரியாகுமா?
    அவர் பிறந்துவளர்ந்த சூழல்தான் அவ‌ருடைய கதைக்கான தளம்.அதுதான் சரி.

    வெகுஜ‌னப் ப‌த்திரிகைக‌ள் துவங்கிய‌ ச‌ம‌ய‌ம் பார்ப்ப‌ன‌ர்க‌ளே அதிக‌ம் எழுதினார்க‌ள்.அத‌ன் மூல‌மாக அந்த ச‌மூக‌த்தின‌ரின் அனைத்து ப‌ழ‌க்க வ‌ழ‌க்க‌ங்க‌ளும், பேச்சு,ந‌டைமுறை,‌ அனைத்தும் பொதுவில் அல‌ச‌ப்ப‌ட்ட‌ன‌.
    எதிர்ம‌றையான‌ ஒரு பார்ப்பின‌ பாத்திர‌ம்‍‍, அதுவும் பெண்ணாக‌ இருந்துவிட்டால், எல்லா பார்ப்பின‌ப் பெண்க‌ளையும் அந்த‌ நோக்கோடு பார்ப்ப‌து என்ப‌து வ‌ழ‌க்க‌ம் ஆயிற்று.இயக்குனர் திரு கே.பால‌ச்சந்த‌ர் த‌ன் பங்குக்கு த‌ன் சமூக‌‌த்தை எவ்வ‌ள‌வு கேவ‌ல‌மாக‌ சித்த‌ரிக்க‌முடியுமோ அவ்வ‌ள‌வும் செய்தார்.பிராம‌ண‌ர்க‌ள் த‌ங்கள் அ‌வ‌ல‌ங்களைப் பார்த்துத் தாங்க‌ளே சிரிப்பா சிரித்தார்க‌ள்.ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கைகொட்டி சிரித்தார்க‌ள்.
    ஆனாலும் ஓர் இல‌க்கிய‌ ஆக்க‌ம் கிடைத்த‌து.அரச‌ல் புர‌ச‌லாக‌வேனும் ம‌ற்ற‌
    ம‌ற்ற‌ ச‌முக‌த்த‌வ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ உள்ள‌க்கிட‌க்கைக‌ள் வெளிவ‌ந்த‌ன‌.த‌மிழ் இல‌க்கிய‌ம் செழுமையுற்ற‌து.

    ReplyDelete
  5. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    அருமையான கருத்துள்ள கதையினை
    படிக்க வாய்ப்பு அளித்தமைக்கு
    நன்றி!
    வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. Alasiam G said...
    நன்றி! நன்றி!!
    நண்பர் பழனி செந்திலுக்கு நன்றி!
    தேனடையில் இட்டத் துழை தேனியாய் அல்ல! தேனாய்க் கொட்டியது!
    அவலங்களும், அழுக்காச்சியும், கொடுமையும், குரோதமும், நம்பிக்கைத் துரோகமும், ஒழுக்கக் கேடும், இன்னும் என்ன என்ன கெட்ட விடங்கள் (விடயங்கள்) வேண்டுமோ அத்தனையும் தொலைக்காட்சித் தொடர்களிலேப் பார்க்கலாம். அதனாலே அந்தப் பக்கம் போவதில்லை. இன்னும் பல வார சஞ்சிகைகள் உண்டு அதில் அரிவாள் வெட்டும், அருவருப்பு மூட்டும் அவலக் கதைகளும், அயோக்கியத் தனங்களின் வெளிச்சம் என்றும் பல அவலங்களே அவைகளின் கருவறை, கருத்தறை எப்படி வேண்டுமானாலும் கொள்வோம்.... அவைகளுக்கு அவயம் இங்கே.... யாரின் கருத்திற்கும் மாற்றுக் கருத்தாக அல்ல, என் மனதில் பட்டதையே கூறுகிறேன்... வாத்தியாரின் வகுப்பறையில் ஜனநாயகம் உண்டு!!!
    வறுமையின் கொடுமையை அவலங்களை வாழ்வில் விரும்பாததுப் போல் கதைகளிலும் ஊறுகாயாய் வருவதே சுவை மிகும்.
    உங்கள் பா(ப)ணியும், தொனியும், அழகோடு அறிவும் சுமந்து வரும் தோணியாய், இனியும் தொடரட்டும்....
    கதையும் கருத்தும் அருமை! ராமன் செட்டியாரின் குட்டிக் கலாட்டாவால், மீனி ஆச்சிக்கு நல்லது நடந்தது. நன்றிகள் குருவே!////

    உங்களின் மனமுவந்த பாராட்டுக்களுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. கண்ணகி said...
    ஆச்சிக்கு குரல் கொடுத்த உங்கள் தந்தையால் அவர் தப்பினார்...
    நல்ல கதை.. உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.//////

    கதை 100% கற்பனை! அதில் வருவது என் தந்தையல்ல! கதையை விவரிக்கும் நாயகனின் தந்தை!:-))))
    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. /////kmr.krishnan said..
    இலக்கியத்தை ரசிக்கும்போது,எழுத்தாளாரின் இதயம் நமக்குப் புலனaகும். ஒரு கதாசிரியர் பணக்காரச் சூழலில் இருந்தார் எனில் அச் சூழலை நாம் அறியத் தருவது தவறாகாது. அதையும் நாம் தெரிந்து கொள்வோம்.ஏழை படும் பாட்டைப் பற்றி அச் சூழலில் வளர்ந்த கதாசிரியர் எழுதுவதே சரியாகும். இதை அவ‌ரும் அதை இவரும் எழுதினால் அதில் செயற்கைத் தன்மைதான் மிஞ்சும். கி.ராஜ நாராயணன் க‌ரிசல் மண் சார்ந்த மக்களைப்
    பற்றி எழுதுவார்.அவரை செட்டிநாட்டைப் பற்றி எழுதச்சொல்வது சரியாகுமா?
    அவர் பிறந்துவளர்ந்த சூழல்தான் அவ‌ருடைய கதைக்கான தளம்.அதுதான் சரி.
    வெகுஜ‌னப் ப‌த்திரிகைக‌ள் துவங்கிய‌ ச‌ம‌ய‌ம் பார்ப்ப‌ன‌ர்க‌ளே அதிக‌ம் எழுதினார்க‌ள்.அத‌ன் மூல‌மாக அந்த ச‌மூக‌த்தின‌ரின் அனைத்து ப‌ழ‌க்க வ‌ழ‌க்க‌ங்க‌ளும், பேச்சு,ந‌டைமுறை,‌ அனைத்தும் பொதுவில் அல‌ச‌ப்ப‌ட்ட‌ன‌.
    எதிர்ம‌றையான‌ ஒரு பார்ப்பின‌ பாத்திர‌ம்‍‍, அதுவும் பெண்ணாக‌ இருந்துவிட்டால், எல்லா பார்ப்பின‌ப் பெண்க‌ளையும் அந்த‌ நோக்கோடு பார்ப்ப‌து என்ப‌து வ‌ழ‌க்க‌ம் ஆயிற்று.இயக்குனர் திரு கே.பால‌ச்சந்த‌ர் த‌ன் பங்குக்கு த‌ன் சமூக‌‌த்தை எவ்வ‌ள‌வு கேவ‌ல‌மாக‌ சித்த‌ரிக்க‌முடியுமோ அவ்வ‌ள‌வும் செய்தார்.பிராம‌ண‌ர்க‌ள் த‌ங்கள் அ‌வ‌ல‌ங்களைப் பார்த்துத் தாங்க‌ளே சிரிப்பா சிரித்தார்க‌ள்.ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கைகொட்டி சிரித்தார்க‌ள்.
    ஆனாலும் ஓர் இல‌க்கிய‌ ஆக்க‌ம் கிடைத்த‌து.அரச‌ல் புர‌ச‌லாக‌வேனும் ம‌ற்ற‌
    ம‌ற்ற‌ ச‌முக‌த்த‌வ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ உள்ள‌க்கிட‌க்கைக‌ள் வெளிவ‌ந்த‌ன‌.த‌மிழ் இல‌க்கிய‌ம் செழுமையுற்ற‌து.////////

    உங்களின் விளக்கம் நன்று. நன்றி கிருஷ்ணன் சார்!

    செட்டிநாட்டில், பெரிய செல்வந்தர்கள், நடுத்தரமக்கள், ஏழைமக்கள் என்று கலவையகத்தான் மக்கள் உள்ளார்கள். கவியரசர் கண்ணதாசன் வெறும் ஏழாயிரம் ரூபாய்க்காக சுவீகாரம் விடப்பட்டார். சிறுகூடற்பட்டியில் பிறந்த அவர், 1951ஆம் ஆண்டு காரைக்குடிக்கு சுவீகாரம் வந்தார். அன்றும் இன்றும் பிரச்சினைகளுக்குக் குறிவில்லாமல்தான் வாழ்க்கை மற்ற இடங்களைப் போல செட்டிநாட்டிலும் இருக்கிறது. கதைக்கான தளத்தையும், வட்டாரச்சொல் வழக்கையும் ஒரு சுவாரசியத்திற்காகவும், எனக்கு எளிதாக எழுத வருவதாலும், அத்தனை கதைகளையும் செட்டிநாட்டை வைத்தே எழுதினேன்.
    ஆனால் கதைகளில் வரும் பிரச்சினைகளும், பொது நீதியும் அனைத்து தமிழ் மக்களுக்கும் பொதுவானது. மாமியார், மருமகள் பிர்ச்சினை எங்கேதான் இல்லை? சொத்துச் சண்டை எங்கேதான் இல்லை? வெரைட்டியாகத்தான் கதைகளை எழுதியுள்ளேன். என்னுடைய 3 நூல்களையும் படித்தவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்! நன்றி!

    ReplyDelete
  9. வணக்கம் சார் ,
    கண்கள் கலங்கியது ஆட்சிக்கு மட்டும் அல்ல எனக்கும் தான் , அருமையான நடையில் நெகிழ வைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. வணக்கம் அய்யா.
    இது கற்பனை அல்லாத‌
    நிஜமாகவே நடந்த கதை தானே!
    நன்றாக இருந்தது.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  11. அடியேனின் சிரம் தாழ்ந்தக் கருத்து இது..........
    கவிஞனுக்கும் கலைஞனுக்கும்
    சாதிமதம் என்ற நிலை இல்லை,
    அவன் அறியாதுப் பிறந்த குலத்தை ஒரு ஆடுகளமாகக் கொள்கிறான் அவ்வளவே,
    அதில் குறை நிறை இருப்பின் அவன் கூறத் தயங்குவதில்லை, காரணம் அவனுக்கு அதில் உரிமை இருப்பதாகவே எண்ணுகிறான். பல நாத்திகர்களும் இவ்வாறே இந்து மதத்தை சாடுகிறார்கள், அப்படி என்றால் மற்ற மதத்திலும் கூறப் பட்ட நல்ல விசயங்களை தவறாகப் புரிந்து கொண்டு பின் பற்றுபவர்களும் உண்டு. அதில் பாரதியும் பாலச்சந்தரும் கூட அடங்குவர். தமிழ் தாத்தா உ.வே.சா.ஐயரின் அரும் பெரும் தொண்டு, சாதனை மட்டுமே போதும் அக்குலத்தின் பெருமையை கோடானக் கோடி வருடம் உயர்த்திப் பிடிக்க. கவலை எதற்கு? அழுக்கு இல்லாத உடம்பும் இல்லை, அசிங்கத்தில் சிக்காத குலமும் இல்லை. கவிஞனுக்கும் கலைஞனுக்கும் இதில் இருந்து விடுதலை கொடுப்போம். நன்றி அனைவருக்கும். நன்றிகள் குருவே

    ReplyDelete
  12. நல்ல படிப்பினையை தந்த நல்லதொரு கதை. ஒரு பிரச்சினை இருக்கிறதென்றால் அதை வெறும் பிரச்சினையாக மட்டும் பாராமல் ஏன் எதற்கு என்று ஆராய்ந்தால் இது போன்றதொரு நல்ல முடிவு வாழ்க்கையில் நாம் தினமும் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு கிடைக்கும். கவலையளிக்க கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் நல்லவர்களும் புத்திசாலிகளும் குறைந்துக் கொண்டு வருவதுதான். எதையும் பிறருடைய கண்ணோட்டத்திலிருந்தும் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  13. /////CUMAR said...
    வணக்கம் சார் ,
    கண்கள் கலங்கியது ஆட்சிக்கு மட்டும் அல்ல எனக்கும் தான் , அருமையான நடையில் நெகிழ வைத்தமைக்கு நன்றி.////

    கதை உங்கள் மனதைத் தொட்டதைச் சொன்னமைக்கு மிக்க நன்றி! இதுபோன்ற மனம் திறந்த பின்னூட்டங்கள்தான் என் போன்று எழுதுபவர்களை மேலும் மேலும் எழுதத்தூண்டும்!

    ReplyDelete
  14. thirunarayanan said...
    வணக்கம் அய்யா.இது கற்பனை அல்லாத‌ நிஜமாகவே நடந்த கதை தானே!
    நன்றாக இருந்தது.நன்றி அய்யா.//////

    இல்லை.இல்லை.இல்லை! 100& கற்பனைக்கதை. கதையில் வரும் நாயகி மட்டும் எண் கண்ணில்பட்டு, கதைக்கான கருவைக் கொடுத்தார்! அதுமட்டுமே நிஜம். கதையின் போக்கு, முடிவு எல்லாம் என்னுடையது!

    ReplyDelete
  15. /////Alasiam G said...
    அடியேனின் சிரம் தாழ்ந்தக் கருத்து இது..........
    கவிஞனுக்கும் கலைஞனுக்கும். சாதிமதம் என்ற நிலை இல்லை,
    அவன் அறியாதுப் பிறந்த குலத்தை ஒரு ஆடுகளமாகக் கொள்கிறான் அவ்வளவே,
    அதில் குறை நிறை இருப்பின் அவன் கூறத் தயங்குவதில்லை, காரணம் அவனுக்கு அதில் உரிமை இருப்பதாகவே எண்ணுகிறான். பல நாத்திகர்களும் இவ்வாறே இந்து மதத்தை சாடுகிறார்கள், அப்படி என்றால் மற்ற மதத்திலும் கூறப் பட்ட நல்ல விசயங்களை தவறாகப் புரிந்து கொண்டு பின் பற்றுபவர்களும் உண்டு. அதில் பாரதியும் பாலச்சந்தரும் கூட அடங்குவர். தமிழ் தாத்தா உ.வே.சா.ஐயரின் அரும் பெரும் தொண்டு, சாதனை மட்டுமே போதும் அக்குலத்தின் பெருமையை கோடானக் கோடி வருடம் உயர்த்திப் பிடிக்க. கவலை எதற்கு? அழுக்கு இல்லாத உடம்பும் இல்லை, அசிங்கத்தில் சிக்காத குலமும் இல்லை. கவிஞனுக்கும் கலைஞனுக்கும் இதில் இருந்து விடுதலை கொடுப்போம். நன்றி அனைவருக்கும். நன்றிகள் குருவே/////

    அப்படியே எழுத்தாளர்களுக்கும் விடுதலை கொடுங்கள்!:-))))

    ReplyDelete
  16. /////ananth said...
    நல்ல படிப்பினையை தந்த நல்லதொரு கதை. ஒரு பிரச்சினை இருக்கிறதென்றால் அதை வெறும் பிரச்சினையாக மட்டும் பாராமல் ஏன் எதற்கு என்று ஆராய்ந்தால் இது போன்றதொரு நல்ல முடிவு வாழ்க்கையில் நாம் தினமும் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு கிடைக்கும். கவலையளிக்க கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் நல்லவர்களும் புத்திசாலிகளும் குறைந்துக் கொண்டு வருவதுதான். எதையும் பிறருடைய கண்ணோட்டத்திலிருந்தும் பார்க்க வேண்டும்.//////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்! இதுபோன்ற மனம் திறந்த பின்னூட்டங்கள்தான் என் போன்று எழுதுபவர்களை மேலும் மேலும் எழுதத்தூண்டும்!

    ReplyDelete
  17. ஐயா! எழுத்தாளர்களும்
    கலைஞர்கள்தானே. அதிலும்
    தங்களைப் போன்று இவ்வளவு
    வாசககர்களின் மனதில்
    குடிகொண்டவர்களுக்கே
    அங்கும் முதலிடம்.
    அதில் என்ன சந்தேகம்.
    மறுத்தால் கலைவாணியின்
    சாபத்திற்கே ஆளாக வேண்டியிருக்கும்.
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  18. வாத்தியார் ஐயா

    மனதை முழுவதுமாக கொள்ளை கொண்டு விட்டீர்கள் இன்று.

    பாரதத்தில் கர்ணன் மிகவும் அருமையாக கூருவதாத கூறுவார்கள் ஆன்மிக அறிந்த சான்றோர்.

    6 - லையும் மரணம் & 100 -லையும் மரணம் என்று

    அதாவது மரணம் எப்படியும் உறுதல். அதனால் எனது விதிப்படியே அமைந்து விட்டு போகட்டும் என்று அனைத்தும் அறிந்த கர்ணன் விதி படியே விட்டு விட்டான்

    நிற்க

    இந்த (கலியுகத்தில்) சமுகத்தில் பிறந்து விட்டு மற்றவரை (இனத்தை) குறிப்பிட்டு கூறினால் உண்மை எது என்று பாராமல் சண்டைக்கு வரும் ஆசாமிகள் தான் அதிகம் , அதனால் தன்னால் மற்றவருக்கு ஏன் வீண் சிரமம் என்று தானே தனது சமுகத்தை குறிப்பிட்டு எழுதி உள்ளீர்கள் ஐயா.

    (லாபமோ அல்லது நஷ்டமோ தன்னோடையே இருந்து விட்டு போகட்டும் என்று தானே)

    இப்படி எழுதுவதில் தவறு இல்லை என்பது அடியேனின் கருத்து ஐயா

    இது தவறு என்றால் அதுவும் தவறுதான்

    பொதுவாக எல்லாருமே ஏதாவது ஒரு வழியில் தப்பிக்கத்தான் பார்கின்றனர்

    அதுநாள் தான் மதம் மாற்றம் முதல் பெற்ற தாயே! தவம் இருந்து பெற்ற தனது குழந்தையை கொல்லும் அளவிற்கு சென்று கொண்டு உள்ளது இந்த மகா புண்ணிய பூமி .

    சரிதானே ஐயா

    ReplyDelete
  19. kmr . krishnan அவர்கள் சொல்வது போலே இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் தன் சமூகத்து கலாச்சாரத்தை உள்ளது உள்ளபடியாகத்தான் சித்தரித்திருக்க்கிறாரா என்பது சரியாகத் தெரியவில்லை..taboo மரபு மீறல் என்ற ஒரே விஷயத்தை கையில் கொண்டு காலத்தை ஒட்டிவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது..
    இன்னமும் வசனம்,சண்டைகாட்சிகள்,பாடல்கள் என்று ஒரு அடிப்படை formula இல்லாமல் எடுக்கப்படும் படங்கள் மிகக்குறைவே.
    fiction கான்செப்ட் படங்கள் இதுவரை யாருமே தமிழிலே செய்யாத விஷயமாகிப் போய்விட்டது..பட்ஜெட் மட்டும்தான் காரணமா?தெரியவில்லை..மேற்கத்தியப் படங்களை மொழிமாற்றம் செய்துவிட்டாலே போதுமே?ஏன், வீணாக ரிஸ்க் எடுத்துக்கொண்டு? என்று நினைக்கிறார்களோ என்னவோ?
    இன்றைய தலைமுறையும் இன்னமும் இத்தகைய பழைய படங்களை உல்டா பண்ணியும் கலாய்த்தும் படம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்..(பழைய படங்களில் 70 - 90 களில் வந்த படங்களில்,பாடல்களில் இருந்த உயிரோட்டம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தே போகும் அளவுக்கு போய்க்கொண்டிருக்கிறது..இதுவும் இல்லாத இன்றைய படங்களை பார்க்கும்போது அனிமேஷன் படங்களே தேவலாம் என்று தோன்றுகிறது..)
    எத்தனை படங்கள் வந்தாலும் வந்த சில நாட்களிலேயே இணைய வழியில்
    இலவசமாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நமது நேரத்தை செலவிட்டு பார்க்க பொறுமையும் இல்லை..போரடிக்கிறது..
    உன்னைப்போல் ஒருவனுக்குப்பிறகு இன்னும் ஒரு படம் கூட பார்க்கவில்லை..

    ReplyDelete
  20. இட் இஸ் ஒன் ஐடியா தட் சேஞ்சஸ் எ வர்ல்டு என்பார்கள்.
    செட்டியார் அவர்கள் தனது ஒரு கருத்தால் ஒருவருக்கு வாழ்வே கொடுத்திருக்கிறார்கள்.
    போற்றவேண்டிய செயல்.

    புக்கர் விருது தங்கள் கதைக்குத் தரப்படவேண்டும்./

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  21. /////Alasiam G said...
    ஐயா! எழுத்தாளர்களும்
    கலைஞர்கள்தானே. அதிலும்
    தங்களைப் போன்று இவ்வளவு
    வாசககர்களின் மனதில்
    குடிகொண்டவர்களுக்கே
    அங்கும் முதலிடம்.
    அதில் என்ன சந்தேகம்.
    மறுத்தால் கலைவாணியின்
    சாபத்திற்கே ஆளாக வேண்டியிருக்கும்.
    நன்றிகள் குருவே!/////

    உங்களின் நல்ல மனதிற்கு அதற்கெல்லாம் (சாபத்திற்கு) ஆளாகும் சூழ்நிலை ஏற்படாது ஆலாசியம்!

    ReplyDelete
  22. kannan said...
    வாத்தியார் ஐயா
    மனதை முழுவதுமாக கொள்ளை கொண்டு விட்டீர்கள் இன்று.
    பாரதத்தில் கர்ணன் மிகவும் அருமையாக கூருவதாத கூறுவார்கள் ஆன்மிக அறிந்த சான்றோர்.
    6 - லையும் மரணம் & 100 -லையும் மரணம் என்று
    அதாவது மரணம் எப்படியும் உறுதல். அதனால் எனது விதிப்படியே அமைந்து விட்டு போகட்டும் என்று அனைத்தும் அறிந்த கர்ணன் விதி படியே விட்டு விட்டான்
    நிற்க
    இந்த (கலியுகத்தில்) சமுகத்தில் பிறந்து விட்டு மற்றவரை (இனத்தை) குறிப்பிட்டு கூறினால் உண்மை எது என்று பாராமல் சண்டைக்கு வரும் ஆசாமிகள் தான் அதிகம் , அதனால் தன்னால் மற்றவருக்கு ஏன் வீண் சிரமம் என்று தானே தனது சமுகத்தை குறிப்பிட்டு எழுதி உள்ளீர்கள் ஐயா.
    (லாபமோ அல்லது நஷ்டமோ தன்னோடையே இருந்து விட்டு போகட்டும் என்று தானே)
    இப்படி எழுதுவதில் தவறு இல்லை என்பது அடியேனின் கருத்து ஐயா
    இது தவறு என்றால் அதுவும் தவறுதான்
    பொதுவாக எல்லாருமே ஏதாவது ஒரு வழியில் தப்பிக்கத்தான் பார்கின்றனர்
    அதுநாள் தான் மதம் மாற்றம் முதல் பெற்ற தாயே! தவம் இருந்து பெற்ற தனது குழந்தையை கொல்லும் அளவிற்கு சென்று கொண்டு உள்ளது இந்த மகா புண்ணிய பூமி .
    சரிதானே ஐயா/////

    நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

    ReplyDelete
  23. ////minorwall said...
    kmr . krishnan அவர்கள் சொல்வது போலே இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் தன் சமூகத்து கலாச்சாரத்தை உள்ளது உள்ளபடியாகத்தான் சித்தரித்திருக்க்கிறாரா என்பது சரியாகத் தெரியவில்லை..taboo மரபு மீறல் என்ற ஒரே விஷயத்தை கையில் கொண்டு காலத்தை ஒட்டிவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது..
    இன்னமும் வசனம்,சண்டைகாட்சிகள்,பாடல்கள் என்று ஒரு அடிப்படை formula இல்லாமல் எடுக்கப்படும் படங்கள் மிகக்குறைவே.
    fiction கான்செப்ட் படங்கள் இதுவரை யாருமே தமிழிலே செய்யாத விஷயமாகிப் போய்விட்டது..பட்ஜெட் மட்டும்தான் காரணமா?தெரியவில்லை..மேற்கத்தியப் படங்களை மொழிமாற்றம் செய்துவிட்டாலே போதுமே?ஏன், வீணாக ரிஸ்க் எடுத்துக்கொண்டு? என்று நினைக்கிறார்களோ என்னவோ?
    இன்றைய தலைமுறையும் இன்னமும் இத்தகைய பழைய படங்களை உல்டா பண்ணியும் கலாய்த்தும் படம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்..(பழைய படங்களில் 70 - 90 களில் வந்த படங்களில்,பாடல்களில் இருந்த உயிரோட்டம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தே போகும் அளவுக்கு போய்க்கொண்டிருக்கிறது..இதுவும் இல்லாத இன்றைய படங்களை பார்க்கும்போது அனிமேஷன் படங்களே தேவலாம் என்று தோன்றுகிறது..)
    எத்தனை படங்கள் வந்தாலும் வந்த சில நாட்களிலேயே இணைய வழியில்
    இலவசமாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நமது நேரத்தை செலவிட்டு பார்க்க பொறுமையும் இல்லை..போரடிக்கிறது..
    உன்னைப்போல் ஒருவனுக்குப்பிறகு இன்னும் ஒரு படம் கூட பார்க்கவில்லை../////

    எதிர் காலத்தில் வரலாம் மைனர்!

    ReplyDelete
  24. ////sury said...
    இட் இஸ் ஒன் ஐடியா தட் சேஞ்சஸ் எ வர்ல்டு என்பார்கள்.
    செட்டியார் அவர்கள் தனது ஒரு கருத்தால் ஒருவருக்கு வாழ்வே கொடுத்திருக்கிறார்கள்.
    போற்றவேண்டிய செயல்.
    புக்கர் விருது தங்கள் கதைக்குத் தரப்படவேண்டும்./
    சுப்பு ரத்தினம்.//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி. உங்களின் (வாசகர்களின்) மனம் திறந்த பாராட்டைவிடவா புக்கர் விருது உயர்ந்தது?

    ReplyDelete
  25. //ஒரே மாதிரியான சாராம்சம் எதற்காக?//

    உங்க தலைப்பை தவறாக (சம்சாரம் என) படித்து அதிர்ச்சி ஆகிவிட்டது.

    ReplyDelete
  26. /////கோவி.கண்ணன் said...
    //ஒரே மாதிரியான சாராம்சம் எதற்காக?//
    உங்க தலைப்பை தவறாக (சம்சாரம் என) படித்து அதிர்ச்சி ஆகிவிட்டது.//////

    அதே அதிர்ச்சியுடன், வாத்தியாரைத் திட்டி ஒரு பின்னூட்டம் போட்டிருக்கலாமே! சான்ஸை மிஸ் பண்னிவிட்டீர்கள் கோவியாரே!:-)))

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com