நகைச்சுவைக் கதை: கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்!
செக்கு என்றால் என்னவென்று தெரியுமா?
தெரியாதா?
இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாதுதான். ஆகவே செக்கின் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தெரியாதவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள்!.
எங்கள் ஊரில் அந்தக் காலத்தில் எல்லோருமே செக்கில்தான் எண்ணெய் வாங்குவார்கள். நல்லெண்ணெய். (எள் எண்ணெய்) அப்போது (1957ல்) ஒரு லிட்டர் எண்ணெயின் விலை ஒரு ரூபாய்தான்
ஒரு ஜாடி 18 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மொத்தமாக வாங்கினால் செக்கு வைத்திருப்பவரே தங்கள் வேலையாளின் மூலம் வீட்டிற்கே கொண்டுவந்து ஜாடி நிறைய ஊற்றிவிட்டுப் போவார். நுரை பொங்க பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும்.வீட்டில் சமையலுக்கு மட்டுமல்ல, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கும் அதே நல்லெண்ணய்தான்!
சமயத்தில் தீர்ந்துபோய் அவசரத்திற்கு இரண்டு அல்லது மூன்று
லிட்டர்கள் எண்ணெய் வேண்டுமென்றால் நாம்தான் போய் வாங்கிக்
கொண்டு வர வேண்டும். நான் பலமுறை செக்கடிக்குப் போயிருக்கிறேன். போகும்போது, அங்கே சற்று நேரம் நின்று அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்.பாவம் செக்கு மாடுகள். ஒரே வட்டத்திற்குள் திரும்பத் திரும்ப சுற்றிகொண்டிருக்க வேண்டியதுதான். அதனால்தான் அந்தக்
காலத்தில் பெரியவர்கள், தங்கள் வீட்டில் உள்ள பெண்டாட்டிதாசர்களை, “செக்கு மாடாட்டம் பெண்டாட்டியையே சுற்றி வந்து கொண்டிருக்கிறான்” என்று கடிந்து கொள்வார்கள்.
இப்போது ஒரு லிட்டர் நல்லெண்ணையின் விலை ரூ.240:00. 56 ஆண்டுகளில் 240 மடங்கு விலை ஏறியுள்ளது.கடலை எண்ணெய், சன் ப்ளவர் ஆயில், ரிபைண்ட்ஆயில், பாமாயில் எல்லாம் பின்னால் வந்தவை. அதை நினைவில் வையுங்கள்.
---------------------------------------------------
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது. சண்முகம் செட்டியார் பள்ளிக்கூடம் ஒன்றில் கணக்கு வாத்தியாராகப் பணி செய்து கொண்டிருந்தார். அத்துடன் தமிழ் அறிவும் மிக்கவர். சங்க இலக்கியங்களில் இருந்து சமகால இலக்கியம்வரை புரட்டி எடுத்துவிடுவார்.
அதிகாலையில் எழுந்தவர், காலைக் கடன்களை எல்லாம் முடித்துவிட்டு, ஆச்சி போட்டுக்கொடுத்த சீனூஸ் ஃபில்டர் காப்பியைச் சாப்பிட்டு விட்டு, அன்றைய நாளிதழில் மூழ்கியிருந்தார்.
ஆச்சி வந்து தோள்களைத் தொட்டவுடன்தான் தன்னிலைக்கு வந்து நிமிர்ந்து பார்த்தார்.
”எண்ணெய் தீர்ந்து போச்சு, சானா ஊரணி செக்கடிக்குப் போயி எண்ணெய் வாங்கிட்டு வாங்க” என்று சொன்னதோடு, ஒரு தூக்குப் பாத்திரத்தையும் பக்கத்தில் வைத்தார்.
“நான் போகமுடியாது. வேணும்னா நீ போய் வாங்கிக்கிட்டு வா”
“ஏன் போக முடியாது? பக்கத்திலதானே இருக்கு”
”எங்க பள்ளிக்கூடத்துப் பயலுக எவனாவது பார்த்தான்னா நாளைக்கே ஒரு புது பட்டப்பெயரை வைத்துவிடுவான்கள்!”
”இப்பவே உங்களுக்குப் பள்ளிக்கூடத்தில நாலு பெயர் இருக்காம்ல. அதோட ஒன்னு கூடுனா தப்பில்லை. போய் வாங்கிட்டு வாங்க! வாங்கிட்டு வந்தாத்தான் பூரி மசால். உங்களுக்குப் பிரியமான பலகாரம். இல்லைன்னா கோதுமை தோசைதான். யோசித்து முடிவு பண்ணுங்க!”
சொல்லிவிட்டு ஆச்சி வளவு நடைக்குள் போய்விட்டார்கள்.
வேண்டா வெறுப்பாக கிளம்பிய செட்டியார், பத்து நிமிட நடையில் செக்கடிக்கு வந்து சேர்ந்தார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. பூரி மசால்ன்னா ருசித்துச் சாப்பிடலாம். சாப்பிட்டுவிட்டு ஆசை தீர பகலில் ஒரு மணி நேரம் தூங்கலாம்!
அவர் அங்கே வந்தபோது செக்கின் உரிமையாளர் உலகநாதன் செக்கில் அரைத்துக்கொண்டிருந்தார்.
இவரைப் பார்த்தவுடன். அந்த வேலையை விட்டுவிட்டு, முன்புறம் இருந்த அறைக்கு வந்தார். அதை அறை என்று சொல்ல முடியாது. 10 x 6 ல் கூறை வேய்ந்த இடம். ஒரு நீண்ட பெஞ்ச். அதன் மீது எவர்சில்வரிலான
எண்ணெய் டிரம். மற்றும் சிறிய கல்லாப்பெட்டி. முன்புறம் மூங்கில் தட்டியிலான தடுப்பு.
”என்ன அப்பச்சி வேண்டும்?” என்று கேட்டார்
“இந்தப் பாத்திரம் என்ன அளவு பிடிக்குமோ அந்த அளவு எண்ணெய் ஊற்றப்பா” என்றார்
“நான்கு லிட்டர் பிடிக்கும் அப்பச்சி” என்று சொல்லிக்கொண்டே, கனத்த குரலில்,கையைத் தட்டியவாறு ”இந்தா...இந்தா... ஓடுறா” என்று குரல் கொடுத்தார்
உடனே ஜல் ஜல் என்ற சலங்கை ஒலியுடன் உட்புறம் மாடு ஓடும் சத்தம் கேட்டது.
செட்டியார் ஆரவத்துடன் கேட்டார்: “இப்போது என்ன செய்தாய்? உள்ளே மாடு ஓடும் சத்தம் கேட்கிறதே?”
”அப்பச்சி, மாட்டை வைத்து எண்ணெய் ஆட்டும் வேலையை நான்தான் செய்ய வேண்டும். அதே போல இங்கே வியாபாரத்தையும் நானேதான் கவனிக்க வேண்டும். தனித்தனியாக ஆட்களைப் போடுவதற்கெல்லாம் வசதி பத்தாது. ஆகவே இரண்டு வேலைகளையும் நானேதான் செய்கிறேன். நான் இங்கே வந்தால் மாடு நின்று விடும். அதனால் குரல் கொடுத்தால், நான் இருப்பதாக நினைத்துக்கொண்டு மாடு ஒட்டம் எடுக்கும். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளும் நடக்கும்”
“மாடு ஓடுகிறது என்று எப்படித் தெரியும்?”
”அதுதான் அதன் கழுத்தில் மணி ஒன்றைக் கட்டியிருக்கிறேனே. அந்த சப்தத்தில் இருந்து தெரியும்”
”கெட்டிக்காரனப்பா நீ...உன்னைப்போல எல்லோரும் பாடுபட்டால், இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பானாக மாறிவிடும்” என்று பாராட்டியவர், அவனிடம் எண்ணையை வாங்கிக்கொண்டு அதற்கு உரிய காசையும் கொடுத்துவிட்டுத் திரும்பி வீட்டை நோக்கி நடக்க எத்தனித்தார்.
அவன் காசை வாங்கி எண்ணிச் சரிபார்த்துக் கல்லாப்பெட்டியில் போட்டு விட்டு, படலின் கதவைத் திறந்து கொண்டு, செக்கு இருக்கும் பகுதிக்குச் செல்ல முயன்றான்.
அதற்குள் சட்டென்று திரும்பி வந்த செட்டியார், அவனிடம் சொன்னார்: “உலகநாதா, ஒரு சந்தேகம் கெட்கலாமா?” என்றவர் தொடர்ந்து கேட்டார்:
“மாடு ஓடினாலும் மணிச் சத்தம் கேட்கும். நின்று கொண்டே கழுத்தை ஆட்டினாலும் மணிச் சத்தம் கேட்கும். மாடு ஓட்டம் எடுக்காமல் நின்று கொண்டே கழுத்தை அசைத்து, ஓசை எழுப்பி, உன்னை ஏமாற்றினால், அது
உனக்கு எப்படித் தெரியும்?”
வகுப்பில் ஏமாற்று வேலை செய்யும் பல பையன்களைப் பார்த்த அனுபவத் தில் அவர் அப்படிக் கேட்டார்
“மாடு அப்படி எல்லாம் செய்யாது அப்பச்சி!” என்று அவன் பதில் உரைத்தான். இவர் விடவில்லை.
தொடர்ந்து கேட்டார்
“செய்யாது என்று எப்படிச் சொல்கிறாய்?”
“இல்லை அப்பச்சி. மாடுகளோடு எனக்கு 20 வருஷ பழக்கம் உண்டு. அவைகள் அப்படிச் செய்யாது!”
“அதைத்தான் எப்படி என்று கேட்கிறேன்”
”மாடு உங்களைப் போல படிக்கவில்லை. படித்தால்தான் புத்தி அந்தமாதிரி கோண வேலைகளைச் செய்யும். அதானால்தான் சொல்கிறேன்”
செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது. ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு செட்டியார் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்
=============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
========================================================