நீங்களும் உங்களுடைய அணியும்
You and your team mates
ஜோதிடப் பாடங்களைப் படிக்கும்போது, எந்தவொரு புதிய ஜோதிட விதியை படித்தாலும், முதலில் அதைத் தங்கள் ஜாதகத்துடன் பொருத்திப் பார்ப்பது ஒவ்வொருவரும் செய்யக்கூடியதாகும். அதில் தவறில்லை. அடியவனும் படிக்கின்ற காலத்தில் அதைச் செய்திருக்கிறேன்.
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் படித்த பின்பு, ஓரளவு கற்றுக்கொண்ட பிறகு தங்கள் ஜாதகத்தை தாங்களே அலசிப் பார்க்கும் அளவிற்குப் பலருக்கும் திறமை உண்டாகிவிடும்.
ஆகவே கற்றுக் கொள்வதில் பொறுமைதான் முக்கியம். எழுதும் பாடங்களை மட்டும் படியுங்கள்.உங்கள் ஜாதகத்தைவைத்தோ அல்லது உங்கள் நண்பர்கள், உறவினர்களின் ஜாதகங்களை வைத்தோ கேள்விகளைக் கேட்காதீர்கள்.பலனைக் கேட்காதீர்கள்
நீங்கள் உதிரியாகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது சிரமம். பலன் சொல்வதும் கஷ்டம். அத்துடன் ஜாதகத்தை முழுமையாகப் பார்க்காமல் உதிரியான கேள்விகளுக்குப் பதில் சொல்வது, ஜோதிட விதிகளுக்கு எதிரானது.
உதாரணத்திற்கு எனக்கு வந்த கேள்வி ஒன்றைக் கொடுத்துள்ளேன்:
//////my doubt is what is the benefit of exchange between mars and mercury
in kanni and viruchagam.////
செவ்வாய்க்கு சொந்த வீடுகள் மேஷம், மற்றும் விருச்சிகம். புதனுக்கு சொந்த வீடுகள் கன்னியும், மிதுனமும். அந்த 4 இடங்களுக்குள்தான் அவர்கள் பரிவர்த்தனையாகமுடியும். அவைகள் பரிவர்த்தனையானால் என்ன பலன் என்பதைப் பாடத்திலேயெ சொல்லியுள்ளேனே? அதில் doubtற்கு எங்கே இடம் இருக்கிறது?
பரிவர்த்தனையில் சம்பந்தப்படும் கிரகம் இயற்கையில் சுபக்கிரகமாகவோ அல்லது ஜாதகத்திற்கு யோககாரகனாகவோ இருந்தால், அக்கிரகம் சம்பந்தப்பட்ட காரகங்களுக்கு (செயல்களுக்கு) உரிய பலன்கள் எளிதாக வந்து சேரும். உங்கள் மொழியில் சொன்னால் அவைகள் உங்களைத் தேடிவரும். பரிவர்த்தனைக்கு உள்ளான வீடுகளின் பலன்களும் நன்மை சேர்ப்பதாக இருக்கும். அதே நேரத்தில் பரிவர்த்தனையில் சம்பந்தப்படும் கிரகம் தீய கிரகம் என்றால், அக்கிரகம் தனித்துக் கொடுப்பதைவிடத் தீயபலன்களை அதிகமாகக் கொடுக்கும். அவைகள் அதிக சிரமத்தைக் கொடுப்பதாக இருக்கும்.
செவ்வாயும், சனியும் தீய கிரகங்கள், அவைகள் ஜாதகத்தில் பரிவர்த்தனையானதால் என்னென்ன வழியில் சிரமங்கள் உண்டாகும் என்பதை அவர் தெரிந்து கொள்ள விரும்புகிறார். அதுதான் மேட்டர்.
அதைத் தெரிந்து கொள்ள மற்ற ஆட்டக்காரர்களையும் பார்க்க வேண்டாமா? பெளலர்களையும், பேட்ஸ்மேன்களையும் பார்க்க வேண்டாமா? முக்கியமாகக் கேப்டனைப் பார்க்க வேண்டாமா? அதாவது லக்கினாதிபதியைப் பார்க்க வேண்டாமா? எதிர் அணியைச் (விதியை - Destiny) சமாளித்து ஆடி வெற்றி பெறுவதற்கும், ஒரு வேளை வேற்றி பெறாவிட்டால் தன்னுடைய அணியின் ஸ்கோரை மதிப்பு உடைய அளவிற்கு ஏற்றுவதற்கும் அவர் வேண்டாமா?
ஆகவே உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு (Question with scattered planetary position) கேள்விகளைக் கேட்காதீர்கள். யாரிடமும் கேட்காதீர்கள்.
உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது தவறாகும். நீங்கள் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்!
உங்களுக்கு உங்களுடைய ஜாதகத்தை வைத்துக் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு பலன்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது ,
அதாவது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மற்றும் திருமணம் எப்போது நடைபெறும் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும், நடுத்தர வயதுக்காரர்களுக்கு, சொந்த வீடு எப்போது அமையும், இருக்கும் வேலையில் வருமானம் போதவில்லை சொந்தத் தொழில் செய்யலாமா என்ற கேள்விகள் இருக்கும், ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு கடன் பிரச்சினை, உடல்/நோய் சம்பந்தப்பட்ட கேள்விகள் இருக்கும்.
அதெல்லாம் உண்மைதான். நல்ல ஜோதிடராகப் பார்த்துக் கேட்டீர்கள் என்றால் உரிய பதில் கிடைக்கும். இல்லை நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். கையில் வகுப்பறை ஜோதிடத்தின் பாகம் இரண்டு மற்றும் பாகம் மூன்றை தொகுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன். அவை அச்சில் ஏறிவிட்டால் எனது வேலைப்பளு சற்றுக் குறைந்துவிடும். அதற்குப் பிறகு உங்களுக்கு உதவ நான் முன் வருகிறேன்
என்ன சரிதானே?
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!