Astrology ஜாதகத்தில் எது முக்கியம்?Key Pointsசந்தேகமில்லாமல், லக்கின அதிபதிதான் முக்கியம். ஒரு படத்தில் கதாநாயகன் எப்படி முக்கியமோ அப்படி முக்கியம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
லக்கினாதிபதியைப் பற்றி முன்பே சில முறை எழுதியிருந்தாலும், விரிவாக ஒரு பாடத்தை எழுதியுள்ளேன். சார், இது மீள் பதிவா என்று யாரும் கேட்காமல் பாடத்தில் உள்ள புதிய செய்திகளைப் படியுங்கள். இது மேல்நிலைப் பாட வகுப்பிற்காக முன்பு எழுதி, பதிவு செய்யப்பெற்ற பாடம். உங்களுக்கும் (அனைவருக்கும்) பயன்படட்டும் என்று வகுப்பறையில் பதிவிட்டுள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள்
--------------------------------------
மாபெரும் சபையினில் நீ நடந்தால் பல மாலைகள் விழவேண்டும் - ஒருமாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று பலர் போற்றிப் புகழவேண்டும்!- கவியரசர் கண்ணதாசன்----------------------------------------
லக்கின அதிபதி சென்று அமரும் இடங்களுக்கான பலன்கள்.
லக்கின அதிபதி லக்கினத்திலேயே இருந்தால் நன்று. உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்கினக்காரராக இருந்து அதன் அதிபதி செவ்வாய் மேஷத்திலேயே இருந்தால், அது அவருக்குச் சொந்த வீடு. ஆட்சி வீடு. அது நன்மை பயக்கும்.
இல்லை அந்த வீட்டை விட்டு வேறு இடங்களில் அமர்ந்திருந்தால் அதன் பலன் மாறுபடும். அவர் சென்று அமரும் வீடு, அவருக்குப் பகை வீடு என்றால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்.
அதேபோல அவர் சென்று அமரும் வீடு, லக்கினத்தில் இருந்து 6ஆம் வீடாகவோ அல்லது 8அம் வீடாகவோ அல்லது 12ஆம் வீடாகவோ இருந்தால் எதிர்மறையான பலன்களே கிடைக்கும். வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாக இருக்கும். எதிர் நீச்சல் போட வேண்டியதிருக்கும்.
அப்படியிருந்தால், பார்த்துவிட்டுக் கவலைப் படாதீர்கள். கன்னத்தில் கையை முட்டுக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்து விடாதீர்கள். அதற்கான நஷ்ட ஈடு வேறு இடங்களில் வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் யாராக இருந்தாலும் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.அதை நினைவில் வையுங்கள்.
லக்கின நாதன் வேறு இடங்களில் அமர்ந்தாலும், அது லக்கினத்திற்கு கேந்திரம் அல்லது திரிகோண இடங்களாக இருந்து, அங்கே அமர்பவர் அங்கிருந்து லக்கினத்தைப் பார்த்தாலும் நன்மையாக இருக்கும். லக்கினத்தைப் பகைக் கிரகங்களோ அல்லது நீசக் கிரகங்களோ பார்க்காமலும் லக்கினத்தில் இல்லாமலும், லக்கினாதிபதியுடன் சேராமல் இருந்தாலும் நன்மை உடையதாக இருக்கும்
அதேபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அதிக நன்மையான பலன்கள் கிடைக்கும். அதேபோல லக்கினம் சுபக் கிரகங்களின் பார்வையில் இருந்தாலும் நன்மைகள் உடையதாக இருக்கும்.
ஆகவே அனைத்தையும் அலசிப் பாருங்கள்
-------------------------------------------------------------
லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருந்தால்:
ஜாதகன் சுதந்திர மனப்பான்மையுடன் தன்னிச்சையாக வாழ்பவனாக இருப்பான்.யார் சொன்னாலும், அவர்கள் பேச்சைக் கேட்கமாட்டான். தன் எண்ணப்படி, நோக்கப்படி வாழ்பவனாக இருப்பான். ஜாதகன் தீர்க்க ஆயுளை உடையவனாக இருப்பான். சொத்துக்களை உடையவனாக இருப்பான். பெருமைகள், புகழை உடையவனாக வளர்வான். வாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும். மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான். தெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக இருப்பான். உறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான். தனது ஊரில், அல்லது தனது மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில் அல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும் பெற்றவனாகத் திகழ்வான்.
மேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும் நன்றாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் அவற்றிற்கு நேர் மாறான பலன்களே நடைபெறும்
-------------------------------------------------------------
லக்கினாதிபதி 2ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:
ஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன் சொற்கள் எல்லா இடங்களிலும் எடுபடும். தனது குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்பவனாக இருப்பான். தன் குடும்பத்திற்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக இருப்பான். செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக இருப்பான். மன அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான்,
-------------------------------------------------------------
லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:
ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான். எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான். சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான். நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.
-------------------------------------------------------------
லக்கினாதிபதி 4ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:
ஜாதகன் தன் பெற்றோர்களால் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகுவான் அனேக உடன் பிறப்புக்கள் இருக்கும். அழகான தோற்றத்தை உடையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும் ஜாதகன் இருப்பான். ஜாதகன் நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான். நல்ல குடும்ப உறுப்பினர்களைப் பெற்றவனாக இருப்பான். ரோட்டி, கப்டா, மக்கான் என்னும் உண்ண உணவு, உடுக்க உடைகள், இருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக்
குறைவில்லாத வாழ்க்கையைப் பெற்றவனாக இருப்பான். தாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான். தாய்வழி உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். சுகவாசியாக இருப்பான்.வண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான். இத்துடன், ஜாதகத்தில் 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும் வலிமை பெற்றிருந்தால் மேற்கூரிய பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
------------------------------------------------------------
லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:
ஜாதகன் புத்திர பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான். அதாவது நிறைய மக்களைப் பெற்றவனாக இருப்பான். அதோடு தன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான். ஜாதகன் பெருந்தன்மை உடையவனாகவும், சேவைமனப்பான்மை உடையவனாகவும் இருப்பான். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். சிலருக்கு அரசியல் செல்வாக்கும், ஆட்சியாளர்களின் ஆதரவும் இருக்கும்
------------------------------------------------------------
லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:
******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான். எதிரிகள் நிறைந்தவனாக இருப்பான். பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும். பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும். லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக் காலங்களில் கடன் மற்றும் நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து சிறப்பைப் பெறுவார்கள். சிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமையடைவார்கள்
-------------------------------------------------------------
லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும். சிலர் வாழ்க்கையின் பின் பகுதியில் சந்நியாசியாகி விடுவார்கள். மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது ஏழையாக இருப்பான். ஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான். மனைவியால் சொத்துக்கள் கிடைக்கும். சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும். சிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக இருப்பார்கள். எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள். எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும்பொருள் ஈட்டி மகிழ்வுடன் வாழ்வான்.
===========================================
லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
ஜாதகன் கல்வியில் சிறந்தவனாக இருப்பான். சூதாட்ட மனப்பான்மை மிகுந்திருக்கும். ஒழுக்கக் குறைவு ஏற்படும். சிலருக்கு மரணம் - அது வரும் நேரத்தில் அமைதியானதாகவும், ஒரு நொடியில் ஏற்படுவதாகவும் அமையும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் நீண்ட ஆயுளை உடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும். ஜாதகன் பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும். சிலருக்கு உடலில் அங்கக்குறைபாடுகள் இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை எடுத்து வளர்க்க நேரிடும்.
இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம ஆயுளை உடையவன். வாழ்க்கையில் வறுமை ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். சிலருக்குப் பலவிதங்களில் அவப்பெயர் உண்டாகும்.
=============================================
லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
பொதுவாக இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும். ஜாதகன் பலருக்கும் உதவுபவனாக இருப்பான்.நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது. இது பாக்கியஸ்தானம் அதை மனதில் கொள்க!
ஜாதகனுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும் ஜாதகனுக்குக் கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன் பெரியவர்களை மதிக்கும் குணம் உடையவனாக இருப்பான். சிறந்த பக்திமானாக விளங்குவான். தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான், நேர்மையாளனாக இருப்பான். வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள் எதுவும் இருக்காது.
=================================================
லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
தொழிலில் அல்லது வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான அமைப்பு இது. பத்தாம் அதிபதிக்கும், லக்கின அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிலைச் ஜாதகன் செய்து அதில் மேன்மையடைவான். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமையும். கை நிறையச் சம்பாதிப்பான். நற்பெயரையும், செல்வாக்கையும் உடையவனாக இருப்பான். தொழிலில் மேன்மை அடைவான். அதிகாரமும், பதவிகளும் தேடிவரும். அரசியல் செல்வாக்கு அல்லது அரசாங்க செல்வாக்கு இருக்கும். சிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள். நிலபுலன்கள், பெரிய வீடு, வண்டி, வாகன வசதிகளுடனான வாழ்க்கை ஏற்படும்.
==================================================
லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான தொழிலைச் செய்வான். நற்பெயரும், செல்வாக்கும் தேடிவரும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தாலும், அல்லது இந்த பதினொன்றாம் இடத்து அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள்.
ஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம் வீட்டினால் ஏற்படும் பயன்களுடன் இந்த அமைப்பும் சேர்ந்து மேலும் பலவிதமான நன்மைகளைச் செய்யும். Gains; Gains: Gains - அவ்வளவுதான். ஜாதகனுக்குப் பணக்கஷ்டமே இல்லாத வாழ்க்கை அமையும்.
இந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு மேற்கூறிய நன்மைகள் இருக்காது. ஜாதகனுக்குப் பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் உண்டாகும்
==================================================
லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து கொண்டே இருக்கும். எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின் கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும். வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். வாழ்க்கையில் நிறையப்
பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம் செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான். அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம் அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும். திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும். வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்
சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவு, மன அமைதி பெறுவார்கள்
====================================================
அன்புடன்வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணவக் கண்மணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
சில் தவிர்க்க முடியாத காரணங்களால் பின்னூட்டங்கள்
(Comments) மொத்தமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
உங்கள் கருத்துக்களை நீங்கள் வாத்தியாருக்கு அறியத் தந்தால் மட்டும் போதும்.
ஆகவே பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை, மின்னஞ்சலில் தெரியப் படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் பின்னூட்டங்களுக்கான தனி மின்னஞ்சல் முகவரி
spvrsubbiah@gmail.com Subject Boxல் சம்பந்தப்பட்ட பதிவின் தலைப்பையும், தேதியையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.
என் அரிய நேரத்தை செலவழித்து இந்த வகுப்பறையைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறேன். உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தொடர்ந்து நடத்துவது சாத்தியம். அதை மனதில் கொள்க!
என்றென்றும்
அன்புடன்
வாத்தியார்