சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?
“சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?
தென்றலே உனக்கேது சொந்த வீடு?
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு”
என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அசத்தலாக எழுதினார். அவருடைய பாடல்கள்தான் எனக்கு வேதங்கள்.
இந்தப் பாடல்வரிகள்தான் என் எழுத்திற்கு அளவுகோல்!
நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல! தீவிர வாசகன். அது மட்டுமே என் தகுதி. எழுத வந்ததெல்லாம் தற்செயலாக நடந்தது.
கமகமக்கும் குனேகா சென்ட்டுடன் வரும் அந்தக்காலக் 'குமுதம்' என்னை வாசிப்பிற்குள் இழுத்துச் சென்றது. 'பகடை பன்னிரெண்டு' என்னும் சித்திரத் தொடரை வாசிக்கத் துவங்கியவன், பிறகு அட்டை முதல் அட்டைவரை வாசிக்கும் ரசிகனானேன்.
நான் தமிழ்வழிக் கல்வி பயின்றவன். சிறு வயதிலேயே தமிழின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே எனது வாசிப்புப் பயணம் துவங்கி விட்டது.
தங்கள் எழுத்தால் என்னை மயக்கியவர்களைப் பட்டியல் இட்டால் மாளாது. குமுதம் ஆசிரியர் திரு.S.A.P அண்ணாமலை, உதவி ஆசிரியர்கள்
திருவாளர்கள் ராகி.ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் மற்றும்
சரித்திர நாவலாசிரியர் திரு. சாண்டில்யன், கல்கண்டு ஆசிரியர்
தமிழ்வாணன், சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், ஜெகச்சிற்பியன்,
விந்தன், நா.பார்த்தசாரதி, அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று அனைவருடைய எழுத்துக்களும்
எனக்குப் பரீட்சயம்; விருப்பம்.
என்னை கவர்ந்தவர்களில் எழுத்தாளர் கல்கி அவர்களுக்குத் தனி இடம் உண்டு. அவருடைய 'பொன்னியின் செல்வன்' தொகுப்பைக் ணக்கின்றிப்பலமுறைகள் படித்து மகிழ்ந்திருக்கிறேன். நாயகன் வந்தியத்தேவனுடன் நானும் குதிரையில் பயணித்திருக்கிறேன்.
அது எல்லாம் ஒரு இருபது வருட காலம். அவ்வளவுதான். பிறகு
கவிதைகளில் நாட்டம் கொண்டு பல கவிதை நூல்களைப் படிக்கத் துவங்கினேன். கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதைகள்
மற்றும் அவருடைய எழுத்துக்கள் எனக்குத் தமிழில் ஒரு புதிய
பரிமாணத்தைக் காட்டின. கவிஞர். வாலி அவர்களின் கவிதைகள், பட்டுக்கோட்டையார், கவிஞர்.வைரமுத்து அவர்களின் கவிதைகள், தொடர்ந்து செட்டிநாட்டுக் கவிஞர்கள் திருவாளர்கள் முனைவர்
அர.சிங்கார வடிவேலன், கவிஞர்.சோம. சிவப்பிரகாசம், ஆத்தங்குடிக்
கவிஞர் அழ.அண்ணாமலை, கவிஞர் அரு.நாகப்பன், கவித்தென்றல் காசு.மணியன் என்று எல்லாக் கவிஞர்களின் கவிதைகளிலும் முங்கி எழுந்தேன். நீந்திக் களித்தேன்.
பிறகு ஆன்மீகத்தின் பக்கம் பார்வை திரும்பியது. வாரியார் சுவாமிகளின் நூல்களும், சுவாமி தயானந்த சரஸ்வதியின் நூல்களும்,ஓஷோவின் நூல்களும் மனதைப் புரட்டிப் போட்டன.
இடையில் James Hadley Chase, Jefferey Archer போன்ற பிரபலமான ஆங்கில நாவலாசிரியரின் நூல்களை எல்லாம் தேடிப் பிடித்துப் படித்தேன். அவற்றிற்கு இணை அவைதான். வேறு ஒன்றையும் இணையாகச் சொல்ல முடியாது. அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்து நடையைக் கொண்டது அவர்களின் ஆக்கங்கள்!
Jefferey Archer ரின் Twist in the tale என்னும் சிறுகதைத் தொகுப்பு அசத்தலாக இருக்கும். தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்கள். சிறுகதை இலக்கணத்திற்கு அந்த நூலை அரிச்சுவடியாகச் சொல்லலாம்.
கதை சொல்லும் உத்தியை இந்த வாசிப்புக்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தன.எப்படி எழுத வேண்டும் என்பதைவிட, எப்படி எழுதக்கூடாது என்பதில் ஒரு பயிற்சி கிடைத்தது. அந்த மாதிரி நூல்களையும் படிக்க நேர்ந்தது.
சுவாரசியமாகக் கதை சொல்லும் வாய்ப்பைப் பெறுவதற்கு, முதலில் பலரது நூல்களையும் படிக்க வேண்டும். வாசிப்பின் மூலமே சொல்லும் உத்தி அல்லது எழுதும் உத்தி வசப்படும். எனக்கும் எழுத்து அவ்விதமே வசப்பட்டது. உண்மையைச் சொன்னால் என்னையறியாமல் எழுத்து எனக்கு வசப்பட்டது. என்னை ஆட்கொண்டது!
இதுவரை 60 சிறுகதைகளையும், இரண்டு தொடர் கட்டுரைகளையும், சுமார் 100 குட்டிக் கதைகளையும் எழுதியுள்ளேன்.
எழுதியவற்றில் 60 சிறுகதைகளைத் தொகுத்து, புத்தக வடிவில் தவழ விட்டிருக்கிறேன். தொடர்ந்து மற்ற ஆக்கங்களும் புத்தகமாக வரும்!
சமீபத்தில் எனது 28 குட்டிக்கதைகளைத் தொகுத்து பத்தகமாக்கியுள்ளேன். கோவைக்கு பெருமை சேர்க்கும் விஜயா பதிப்பகத்தார் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.
அந்தப் புத்தகத்தின் முகப்புப் பகுதியையும், பின் பகுதியையும், உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன். 104 பக்கங்கள் கொண்ட அந்த் நூலின் விலை ரூ.40:00. தனியாக உங்களுக்கு அனுப்பினால் கூரியர் செலவு ரூ25:00 ஆகும். அதனால் அனைவரும் பொறுத்திருங்கள். எனது ஜோதிட நூல்கள் வெளியாகும்போது அவைகளுடன் அந்த நூலையும் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். நமது வகுப்பறை
மாணவர் திரு. ஆனந்த் அவர்கள் ஜோதிடப் பாடங்களுக்கென
வலைப்பதிவு ஒன்றைத் துவங்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்.
பின்னூட்டத்தின் மூலம் அவர் இப்படிச் சொல்லியுள்ளார்:
////////ஜோதிடம் என்பது கடல். அந்த கடலில் வாத்தியார் போகாத
இடங்கள் (அதாவது பாடம் நடத்தாத விஷயங்கள்) பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து பதிவாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். Suggestions are welcome from our fellow students. ////////
நான் எழுதாததைத் தேடிப்பிடித்து அவர் எழுத வேண்டாம். நான் எழுத உள்ளதற்காகக் காத்திருந்து எழுதவும் வேண்டாம். அது சாத்தியமில்லை. எழுத்திற்கெல்லாம் கட்டுப்பாடு கிடையாது. இருக்கவும் கூடாது.
அவருக்கு ஒரு வேண்டுகோள். அவருக்கு விருப்பமானதை அவர் எழுதலாம். ஜோதிடம் பெரிய கடல். எதை வேண்டுமென்றாலும் அவர் எழுதலாம்.
“காற்றுக்கென்ன வேலி; கடலுக்கென்ன மூடி?” என்று கவியரசர் சொன்னார். அதுபோல ஜோதிடத்திற்கு யாரும் வேலி போடவும் முடியாது. மூடி போடவும் முடியாது. சொந்தம் கொண்டாடவும்
முடியாது. அது பொதுச் சொத்து.
எழுதுவதை நன்றாக எழுத முடியும் என்றால், யார் வேண்டுமென்றாலும் எழுதலாம். நம் வகுப்பறையில் இன்றுள்ள 1685 மாணவர்களில் யார் வேண்டுமென்றாலும் எழுதலாம். நண்பர் ஆலாசியம் அவர்களுக்கும்,
ஜப்பான் மைனருக்கும் ஆர்வமும், திறமையும் இருக்கிறது. இருவரும்
வலைப் பதிவைத் துவங்கி எழுதலாம். ஜோதிடம் என்று இல்லை. எதை வேண்டுமென்றாலும் எழுதலாம். எழுதுவது உபயோகமாகவும், சுவாரசியமாகவும் இருக்க வேண்டும் அவ்வளவுதான்!திருவாளர் ஆனந்த அவர்களின் வலைப்பதிவு வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! உங்களைப் போல, தஞ்சை திரு.K.M.R.கிருஷ்ணன் அவர்களைப் போல நானும் அவருடைய பதிவுகளைப் படிக்க ஆர்வமாக உள்ளேன்.
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!