+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இசைவாகப் பேசுவது எப்படி?
இன்றைய வாரமலரை நமது வகுப்பறைக் கண்மணிகள் இருவரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
என் 12 ஜனவரி 2011 ஆக்கத்தின் (சுவாமி விவேகானந்தரைப் பற்றியது) பின்னூட்டங்களை எத்தனை பேர் படித்தீர்களோ தெரியாது.எனக்கும் என் மதிப்புக்கு உரிய இளவல் ஹாலாஸ்யம்ஜி அவர்களுக்கும் இடையில் நடந்த சம்வாதத்தினை படிக்காதவர்கள் படிக்கும்படி பணிந்து வேண்டுகிறேன்.அது ஒரு பூப்பந்து விளையாட்டுப் போல நடந்தது.என் மனதுக்கு இதமாக இருந்தது.
சுவாரஸ்யமாக இருந்தது.பல செய்திகளை தெரிவிக்கும் முகமாக அமைந்தது. ஹாலாஸ்யம்ஜியின் அறிவின் ஆழத்தை அவருடைய முடிவுரை தெற்றென வெளிப்படுத்தியது. "அட! நீங்க செயிச்சுப்புட்டீங்க!"என்று சொன்னதன் மூலம் அவர்தான் ஜெயித்தார்.
"தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே வென்றாய்"என்பது மஹாகவி பாரதியின் கூற்று. (கண்ணன் பாட்டு - கண்ணன் என் சீடன்)
அந்த சம்வாதத்தில், 'மஹான்கள் தன் எதிர் வரும் ஜீவான்மாவுக்கு இருக்கும் அஹங்காரத்தைப் போக்கும் வண்ணம் பேசுவார்கள்; அது தனி நபர்களுக்குச் செய்த உபதேசம்.சில சமயம் அது நமக்கு முரணாகக்கூடத் தோன்றும்.எனவே இடம் சுட்டிப் பொருள் விளக்குதல் அவசியம்"என்று தொனிக்கும் வண்ணம் சொல்லியிருந்தேன்.
இது தொடர்பாக ஏற்கனவே எப்படி ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு சீடருக்கு வீரம் சற்று வருமாறும்,வேறு ஒருவருக்கு அவருடைய வீரத்தைச் சற்றே குறைக்கும் வண்ணமும் உபதேசித்தார் என்பதை ஆக்கமாக எழுதியுள்ளேன்.(கங்கையில் படகில் இரண்டு சீடர்களுக்கு ஏற்பட்ட ஒரே விதமான நிகழ்வுக்குப் பரமஹம் ஸரின் மறுமொழியை எழுதியுள்ளேன்).அதே கருத்தை வலியுறுத்த மீண்டும் இரண்டு நிகழ்வுகளை இங்கே கூற விழைகிறேன்.
-----------------------------------------------------------------------------
மஹாகவி பாரதியார் கூறுவார் கண்ணனைப்பற்றி:
"அம்மைக்கு நல்லவன் கண்டீர் - மூளி
அத்தைக்கு நல்லவன் தந்தைக்கும் அஃதே.
எம்மைத் துயர் செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான்"
"கோளுக்கு மிகவும் சமர்த்தன் - பொய்மை
சூத்திரம் பழிச்சொலக் கூசாச் சழக்கன்
ஆளுக்கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகாது அடிப்பான்" என்பார்.
மஹான்களும் கண்ணனைப் போன்றே 'ஆளுக்கிசைந்தபடி' பேசக்கூடியவர் களே!அதன்மூலம் கேட்பவருடைய ஆன்மீக நிலையினை அவர்களின் அப்போதைய இடத்தில் இருந்து சற்றே மேல்நோக்கி நகர்த்தும் வண்ணம் அமைந்து இருக்கும்.
ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பல இல்லற சீடர்கள். 'பறவைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்'.
ஒரு சீடர் தொழிலில் வெற்றி அடைந்து பெரும் பொருள் ஈட்டி விட்டார். தன் தேவைகள் நன்கு பூர்த்தியாகி உபரியாக நிறைய வருமானம்.வேண்டிய சொத்துக்கள் 5 தலைமுறைக்குத் தேவைக்கு மேல் சேர்த்தாகி விட்டது. தற்கால அரசியல் தலைவர்கள் அளவு இல்லாவிடினும், ஏதோ அந்தக் கால அளவுகோலுக்கு அவர் சம்பத்து மிக அதிகமே!அவருக்கு தான தருமம் செய்வதில் ஆர்வம் தோன்றியது.ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் வந்து கூறினார்: "பாபா!நீங்கள் சுட்டிக்காட்டும் ஏதாவது ஒரு தர்மத்தை நான் உடனே செய்கிறேன்.என்னசெய்யலாம் என்று கூறி வழிகாட்டுங்கள்"
ஸ்ரீராமகிருஷ்ணர்: "நீ ஏன் சிரமப்பட்டு சம்பாதித்த காசை விரயமாக்குகிறாய்? இந்த உலக மக்களின் தேவையோ மிக அதிகம்.அவர்களுடைய தேவைகளை ஆண்டவனால் கூட நிறைவு செய்ய முடியவில்லை. உன்னால் என்ன செய்துவிட முடியும்? உன் தர்மம் எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமே! விழலுக்கு இறைத்த நீரே!ஆகவே உன் பணத்தை பத்திரமாக வைத்துபூட்டு. வீண் செலவு செய்ய வேண்டாம்"
கேட்ட தனவான் நொந்து நூலாகியிருப்பார் இல்லையா?
வேறு ஒரு சீடர்.எண்ணை விற்கும் செட்டியார் பிரிவைச் சேர்ந்தவர்.அவரும் பொருள் படைத்தவரே.தான தருமங்களைப் பற்றிய சிந்தனையே இல்லாதவர். குருதேவரைப் பார்க்க வரும் போதுகூட வண்டி சத்தம் மிச்சப்படுத்த நீண்ட தூரம் நடந்தே வருவார்.
ஒரு நாள் பலரும் இருக்கும் சமயம் ஸ்ரீராமகிருஷ்ணர்கூறினார்: "இந்த எண்ணைக்கார செட்டியார்கள் எல்லாம் சரியான கஞ்சர்கள்.அவர்கள் காசெல்லாம் பிசுக்கு நாற்றம் அடிக்கும்.காற்றுப் படாத இருட்டறையில் எண்ணைக் கறை படிந்த நோட்டுக்களை வருடக்கணக்கில் அடுக்கி வைத்தால் நாற்றம் அடிக்காமல் இருக்குமா?"
செட்டியாருக்குக் கோபம் வந்துவிட்டது. மற்றவர்கள் எல்லோரும் போனபின்னர், பரமஹம்ஸரை தனிமையில் சந்தித்து தன் ஆட்சேபணையைச் சொன்னார்: "என்னைக் கஞ்சன் என்று சொல்லியிருந்தால் கூடப்பரவா யில்லை. எங்கள் மொத்த சாதியினரையும் எப்படி நீங்கள் கஞ்சர்கள் என்று சொல்லப் போயிற்று?"
குருதேவர் வருத்தமடையாமல் சிரித்துக்கொண்டே,"நீங்கள் நான் சொன்னபடி இல்லையெனில் அதைச் செய்கை மூலம் உறுதிப்படுத்துங்கள்.என் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்கிறேன்." என்றார்.
"அப்படியா! சரி என்ன தானம் நான் செய்ய வேண்டும்? சொல்லுங்கள். உடனே செய்து காண்பித்து உங்களிடம் என் சாதிக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொள்கிறேன்." என்றார் செட்டியார்
"பக்கத்து கிராமத்து மக்கள் தண்ணீருக்காக அலைந்து திரிந்து சிரமப் படுகிறார்கள்.அவர்களுக்கு உன் செலவில் ஒரு குளம் வெட்டிக் கொடுக்கலாமே!" என்றார் குருதேவர்.
ரோஷத்துடன் போன செட்டியார் செயலில் இறங்கி ஆவன செய்து குளத்தை உடனே வெட்டிக்கொடுத்தார்.
"இப்போது என்ன சொல்கிறீர்கள்!" செட்டியார் கேட்டார். ஒப்புக்கொள்கிறேன்! நீர் தர்மவான்தான்" என்றார் பரமஹம்சர்.
இந்த சம்பவங்களில் இருந்து என்ன தெரிகிறது?
பணத்தை வைத்து புகழ் பெறவிரும்பிய பணக்காரருக்கு 'உன் பணம் ஒன்றும் பெரிய விஷயமில்லை' என்பதை உணர்த்தினார்.
பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த செட்டியாருக்குப் பணத்தினை எப்படி நல் வழியில் செலவு செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார்.
இந்த சம்பவங்களில் அவர் பேசியதை இடம் சுட்டாமல் சொன்னால், பரமஹம்சர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார் என்று ஆகிவிடுமல் லவா? எனவே தொங்கலாக விடப்பட்ட பொன் மொழிகளைக் கொண்டு எந்த அபிப்பிராயமும் நாம் வைத்துக் கொள்ளக் கூடாது.
என்ன ஏதோ கொஞ்சமாவது புரிகிறதா?
'அய்யோ! கண்ணைக்கட்டுகிறதடா சாமி!' என்று அந்த குண்டு விழுந்த நாட்டுக் காரரைப்போல எல்லோரும் நினைக்கிறீர்களா?
ஒரு வாக்கியம் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
நன்றி.
அன்புடன்.
கே. முத்துராமகிருஷ்ணன்,
தஞ்சாவூர்
திருவாளர் கே.முத்துராமக்ருஷ்ணன் அவர்கள்
தன் துணைவியாருடன் இருக்கும் புகைப்படம்
( தில்லியில் எடுக்கப்பெற்றது. ஆண்டு 2000)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
சிறுகதை:
நல்லதும் கெட்டதும் நம் பார்வையில்தான்!
'ஸ்ஸ் ப்பா என்ன வெயில்' என்று முனகிக்கொண்டே குடையுடன் வெளியில் வந்தவரின் முகம் சட்டென்று சுருங்கியது.
'இந்தப் படுபாவி எதுக்கு நம்மாத்து வாசல்ல நிக்கறான்? ஒரு நல்ல காரியத்துக்காகக் கிளம்பினால் போயும் போயும் இந்தக் கிராதகன் முகத்துலயா முழிக்கணும்?'
'காமாட்சி, குடிக்க கொஞ்சம் ஜலம் கொண்டா'
'இதோ வரேன்னா'
வந்தவள் 'ஏன் வாசல்லேயே நின்னுண்டு? என்னாச்சு?' என்றாள்.
'சும்மாதான் சித்த ஆசுவாசப்படுத்திண்டு போகலாம்னு' என்று சத்தமாகச் சொன்னவர், மனைவியிடம் திரும்பி கிசுகிசுப்பான குரலில் 'வெளில வந்ததும் இவன் மூஞ்சில முழிச்சுத் தொலைச்சேன். அவன் இந்த இடத்தைவிட்டு நகரட்டும். அப்புறமா போறேன்' என்றவாறு திண்ணையில் அமர்ந்தார்.
'சரி அதுக்கு ஏன் திண்ணைல உக்காருவானேன்? உள்ள வாங்கோளேன்'
'இல்லடி, ஆத்தை விட்டுக் கிளம்பினது கிளம்பியாச்சு. இப்படியே சித்த உக்கார்ந்துட்டுப் போறேன். நீ கதவைத் தாழ்ப்பாள் போட்டுண்டு உள்ள போ'.
'இல்ல நீங்க போறச்சே சொல்லுங்கோ, வந்து தாழ்ப்பாள் போடறேன்'
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சங்கர ஐயரின் குடும்பம் சிறியது. மனைவி, இரண்டு மகள்கள். ஒரு நகராட்சிப் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்.
இந்தப் பகுதிக்குக் குடிவந்து ஆறு மாதங்களாகிவிட்டன. இப்போது ஓய்வூதியப் பணத்திலும், இரண்டாவது பெண்ணுக்கு வரும் சிறிய வருமானத்திலும்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.
மூத்தவள் சத்யாவைக் கல்யாணம் செய்து கொடுத்தாயிற்று. கடைசிப் பெண் ரம்யாவுக்கும் எப்படியாவது கல்யாணம் செய்து கொடுத்துவிட்டால் இருக்கவே இருக்கிறது பிறந்த கிராமத்தில் ஒரு சிறிய ஓட்டு வீடு. அங்கே போய் வரும் பணத்தை வைத்துக்கொண்டு சொச்ச காலத்தை ஓட்டிவிடலாம்.
அது விஷயமாகத்தான் கிளம்பிக்கொண்டிருந்தார். ரம்யாவைப் பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள் நேரில் பேச வருமாறு கூப்பிட்டனுப்பி யிருந்தார்கள். என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் தகுதிக்கு எட்டாத உயர்ந்த இடம். அருண் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறான். வீட்டுக்கு ஒரே பையன். சொந்த வீடு, வாகனம் எல்லாம் இருக்கிறது.
அவர்கள் பெண் பார்க்க வந்ததே அவருடைய பால்ய சிநேகிதன் வேணு சொல்லித்தான். அவர் இது பற்றிப் பேசியபோதுகூட சங்கர ஐயர் இது ஒத்து வராது என்றுதான் சொன்னார். அவர்தான் விடாப்பிடியாக ரொம்ப நல்ல குடும்பம். பணத்தையும், வசதியையும் அவர்கள் பெரிதாக நினைக்கவில்லை. உன் பெண்ணைப் பார்த்தால் பிடித்துவிடும் என்று சொல்லி ஏற்பாடு செய்தார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
'ம்ம் இத்தனை நேரமா என்ன பண்ணிண்டிருக்கான் போய்த் தொலையாம?' யோசித்துக்கொண்டே அவன் புல்லட்டைக் குடைவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அவனை நேருக்கு நேர் அதிகம் பார்த்ததில்லை. எல்லாம் மற்றவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டதுதான். அதுவும் பக்கத்து வீட்டுக்காரர் கோபால்தான் கதை கதையாகச் சொல்லுவார். 'அந்த ரவுடி மணி பெரிய போக்கிரி. உங்க வீட்டுல வயசுப் பொண்ணு வேற இருக்கா. ரொம்ப ஜாக்கிரதையா இருங்க' என்று வேறு சொல்லி அவரின் ராத்தூக்கத்துக்கு ஆப்பு வைத்திருந்தார்.
நல்ல கறுப்பு. சுருட்டை சுருட்டையான முடி. கண்கள் இரண்டும் சிவந்திருந்தன. தினம் குடிப்பானோ? அதப்பத்தி நமக்கென்ன? பத்து பேர் சண்டைக்கு வந்தாலும் ஒண்டிக்கு ஒண்டி நின்று சமாளிக்கும் அளவு திடகாத்திரமான உடம்பு. மடித்துக் கட்டிய லுங்கியும், முழங்கைக்கு மேல் தூக்கி விட்டிருந்த சட்டையும், பொத்தான்கள் கழட்டப்பட்டிருந்த சட்டையும் அவனின் பலத்தைப் பறைசாற்றின. கழுத்தில் ஒரு மொத்த செயின். கடைவாயோரம் கடித்தபடி சிகரெட். அதை அவ்வப்போது எடுத்து புகையை மேல்நோக்கி விட்டுக்கொண்டிருந்தான். முகத்திலிருந்து வழிந்த வேர்வையை சட்டைக்காலருக்குள் கழுத்தைச் சுற்றிக் கொடுத்திருந்த கைக்குட்டையை எடுத்து துடைத்துக்கொண்டிருந்தான். பேஷ் பேஷ் ஒரு ரவுடிக்கு உரிய அத்தனை சாமுத்ரிகா லட்சணங்களும் இவனுக்கு அம்சமாப் பொருந்தறதே.
சட்டென்று தலையை சிலுப்பிக்கொண்டு தன் நினைவோட்டத்தை நிறுத்தினார். 'ச்சே, பகவானே என் புத்தி என்ன பேதலிச்சுடுத்தா? இவனைப்பார்த்து ரசிச்சு வர்ணனை பண்ணின்டிருக்கேனே?'
ஒரு வழியாக சரி செய்து விட்டான் போலிருக்கிறது. திருப்தியுடன் 'அப்பாடா சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணினா சரி' என்று நினைத்தவர் அவன் இவர் வீட்டை நோக்கி வரவும் விருட்டென்று எழுந்தார். 'இங்க எதுக்கு வரான்?'.
'ஐயரே, குடிக்க கொஞ்சம் தண்ணி குடு' சொல்லிவிட்டு திரும்ப முகத்தைத் துடைத்துக்கொண்டான்.
'இது என்ன இன்னிக்கு நேரமே சரியில்லையே'. உள்நோக்கிக் குரல் கொடுக்க எத்தனித்தவர் 'ம்ஹூம் வேண்டாம் நாமளே உள்ள போய் எடுத்துண்டு வருவோம்' என்று வீட்டுக்குள் போனார்.
ஒரு செம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தவர் சற்றே தயங்கவும் அவனே 'ஐயரே இப்படிக் கீழே வெச்சுடு, நானே எடுத்துக்கறேன், நீங்கதான் ரொம்ப சுத்தம் பார்ப்பீங்களே' என்று சொல்லி அதை உடைத்தெறிந்தான். வெளியில் கேட்காதபடி ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டவர், அவன் குடித்து முடித்துவிட்டுக் கிளம்பும்வரை காத்திருந்துவிட்டுக் கிளம்பும் முன் மனைவியிடம் 'செம்பை ஜலம் தெளிச்சு எடுத்து தேய்ச்சு வெச்சுடு' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
'எதற்காகக் கூப்பிட்டிருப்பார்கள்? ஒருவேளை பிடிக்கவில்லை என்றால் தொலைபேசியிலேயே அந்த மாமி சொல்லியிருப்பாரே? நகை, வரதட்சணை பற்றிப் பேசுவார்களோ?'. கிளம்பும் முன்பே மனைவி 'ஏன்னா அவா அப்படி எதாவது நிறைய எதிர்பார்த்தா எங்களுக்கு அவ்ளோ சக்தி கிடையாதுன்னு தெளிவாச் சொல்லிடுங்கோ. குழந்தைக்குன்னு ஒருத்தன் பிறந்திருக்காமையா இருப்பான்?' என்று சொன்னது நினைவு வரவே 'என்ன அப்படி ஏதாவது பேசினா நம்மளோட இயலாமையை சாத்வீகமாச் சொல்லிட்டு வந்துடலாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் இருக்கறதுதான் நல்லது' என்று தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார்.
'சத்யாவைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு வாங்கற பேச்சே போதும். சக்திக்கு மீறி செஞ்சும் அந்த மாமிக்கு திருப்தி கிடையாது. இன்னமும் ஏதாவது குறை சொல்லிண்டுதான் இருக்கா. சத்யா எதுக்கும் வாயைத் திறக்கவே மாட்டா. ரம்யாவும் அப்படித்தான். வளர்த்த விதம் அப்படி. அதுவே தப்போன்னு சில சமயம் தோணறது. எப்பப் பார்த்தாலும் நச்சு நச்சுனு ஏதாவது பிடுங்கிண்டு. குழந்தை பாவம் பொறுமையா குடும்பம் நடத்தறா. எதையும் குறைக்காம பார்த்துப் பார்த்து செஞ்சும் அவசரத்துல வெண்கல அடுக்கு வாங்கறது விட்டுப்போச்சுன்னு கல்யாண வீட்டிலேயே என்ன களேபரம் பண்ணிட்டா. அதுக்கப்புறம் வாங்கித் தராமையா இருந்துட்டோம்? இன்னமும் மீனு ஆத்திலிருந்து போன் வந்திருக்குன்னு கூப்பிட்டனுப்பினா சத்யாவோட மாமியாரா இருக்கக்கூடாதே பகவானேன்னுதான் முதல்ல தோணறது. நானும் ஒவ்வொரு தடவை பேசும்போதும் நம்மளால குழந்தைக்கு எதுவும் பிரச்சனை வரப்படாதேன்னு பவ்யமாதான் பேசறேன். போன வாரம் பேசினப்ப கூட பேரன் ஆயுஷ்ஹோமத்துக்கு என்ன பண்ணப் போறேள்னுதான் பேச்சையே தொடங்கினா. மாப்பிள்ளை நல்லவர்தான்னாலும் அவரால அம்மா பேச்சை மீற முடியாது. என்னமோ பகவான்தான் வழிவிடணும்' என்று சிந்தனைக்குதிரையைக் கட்டுக்கடங்காமல் ஓட விட்டுக்கொண்டு வந்ததில் அருண் வீடு வந்துவிட்டிருந்தது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
'எவ்ளோ பெரிய வீடு, உள்ள நாய் ஏதும் இருக்குமோ' என்று நினைத்தபடியே பார்வையைச் சுழல விட்டவருக்கு வரவேற்பு நன்றாகவே கிடைத்தது.
'வாங்கோ உள்ள வாங்கோ' என்றவாறே சதாசிவம் வந்து கதவைத் திறந்துவிட்டவர் மனைவியிடம் தகவலைத் தெரிவித்தார்.
'இருங்கோ குடிக்க ஏதாவது கொண்டு வரேன்' என்று சிறிது நேரத்தில் கையில் காபி தம்ளருடன் வந்த அவரின் மனைவி 'முதல்ல நான் உங்களைக் கூப்பிடனுப்பினேன்னு தப்பா எடுத்துக்காதீங்கோ. பையன் போன வாரமே ஊருக்குப் போயாச்சு. நாளன்னிக்கு நாங்க கிளம்பறோம். இன்னும் ஒரு வேலையும் ஆகலை. வாங்கின சாமான்களும் போட்டது போட்டபடி கிடக்கு. இனிமேதான் ஆரம்பிக்கணும். அதான் எங்களுக்கு வந்து பேச ஒழியல' என்றதும் 'இல்ல இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு' என்றதுடன் நிறுத்திவிட்டு அவரே தொடரட்டும் என்று காத்திருந்தார்.
'சரி முதல்ல உங்காத்துப் பெண்ணை எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. அதான் பாக்கி விஷயத்தையும் பேசி முடிச்சுடலாம்னு. நாங்க உங்ககிட்டேர்ந்து ஒண்ணும் எதிர்பார்க்கல. உங்களால எதெது முடியும்னு சொல்லிட்டேள்னா நாங்களே மீதி செலவப் பார்த்துக்கறோம். ஏன்னா நாங்க எப்படி வேணும்னு ஆசைப்பட்டோமோ அதே மாதிரி உங்க பொண்ணு இருக்கா. உங்காத்து மாமிகிட்டையும் கலந்து பேசிண்டு சொன்னேள்னா நிச்சயதார்த்தம், கல்யாணத்துக்கு நாள் குறிச்சுடலாம். உங்களுக்குச் சம்மதம்தானே?'
சங்கர ஐயருக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. உடனே மனைவிடம் பறந்து போய்ச் சொல்லவேண்டும் என்ற பரபரப்பு தொற்றியது. இவ்வளவு பெரிய விஷயம் இத்தனை எளிதாக முடிந்து விடுமா?
'எனக்குச் சம்மதம்' என்று திக்கித் திணறிச் சொல்லிவிட்டு மேலும் சில சம்பிரதாயப் பேச்சுக்களுக்குப் பின் கிளம்பினார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
'இது முடிஞ்சிடும்னு நான் நினைக்கவே இல்லேன்னா'
'நானும்தாண்டி. நிஜமாவே அவா பெரிய மனுஷாதான். சரி என்ன சமையல் இன்னிக்கு? பசிக்கறது'.
'சேனை மசியல், தொட்டுக்க அப்பளம் பொரிச்சிருக்கேன்'.
'பேஷ் பேஷ் தட்டை எடுத்து வை, நான் கை, கால் அலம்பிண்டு வரேன். சாப்பிட்டுட்டு முதல்ல வேணு ஆத்துக்குப் போய் நன்றி சொல்லிட்டு வரேன். அவனாலேதான் ரம்யாவுக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமையறது'.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
'என்ன இன்னும் ரம்யாவைக் காணும், இருட்டிடுத்தே. திடீர்னு மழை வேற பெய்யறது. வழக்கமா ஆறு மணிக்குள்ள வந்துடுவாளே'.
அவருக்கும் அப்போதுதான் உரைத்தது. 'மழைங்கரதால கொஞ்சம் நேரமாயிருக்கும். இன்னொரு பத்து நிமிஷம் பார்ப்போம். இல்லேன்னா நான் போய் பார்த்துட்டு வரேன்'.
'இந்த மழைல எங்க போய் பார்ப்பேள்?'
நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. ரம்யா வருகிற வழியாக இல்லை.
'கடவுளே, குழந்தையை நல்லபடியா கொண்டு வந்து சேர்த்துடுப்பா'.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மரத்தடியில் நின்றிருந்த ரம்யாவும், அவள் தோழியும் தொப்பலாக நனைந்திருந்தனர்.
'என்னடி ரம்யா இன்னிக்கு வழக்கமா வர பேருந்து வரலை? இப்ப என்ன பண்றது?'
'நானும் அதாண்டி யோசிச்சிண்டிருக்கேன்'
தடதடவென்று புல்லெட் சத்தம் நெருங்கி வந்தது.
'என்ன தங்கச்சி, இன்னும் வீட்டுக்குப் போகாம இங்க நின்னுட்டிருக்க? பஸ் வரலையா?'
'இல்ல' பயத்தில் மென்று விழுங்கினாள்.
'பக்கத்துல ஆட்டோ ஸ்டான்ட் இருக்கே, அதுல போக வேண்டியதுதானே?'
'இல்ல அது வந்து ...... வந்து பஸ் க்கு மட்டும்தான் காசு எடுத்துண்டு வந்தேன்'.
'அட இந்த ஊர்ல நம்ம பொண்டாட்டியைத் தவிர நம்மளைப் பார்த்து எல்லாரும் ஏன் பயப்படறாங்க?'
'சரி இங்கயே இரு வரேன்' என்று போனவன் ஒரு ஆட்டோவைக் கையோடு அழைத்து வந்தான்.
'இதுல ஏறுங்க ரெண்டு பெரும், நான் பின்னாடி வண்டில வரேன்' என்றவன் ஓட்டுனரிடம் 'இந்தா எவ்ளோ காசுன்னு சொல்லு தரேன்' என்றான்.
'ஐயோ அண்ணே, உங்ககிட்ட போய் நான் காசு கேட்பேனா? வேண்டாண்ணே'
'அதெல்லாம் வேணாம், இந்தா பிடி' என்று ஒரு நூறு ரூபாய்த்தாளை அவன் சட்டைப்பையில் திணித்தான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஆட்டோ சத்தம் கேட்டு வெளியில் வந்தவர் மனைவியிடம் 'ஏய், ரம்யா வந்துட்டா' என்று சத்தம்போட்டு சொன்னார்.
'கடவுளே என் வயிற்றில் பாலை வார்த்தே. நாளைக்கே கொழுக்கட்டை பண்ணி நைவேத்தியம் பண்ணிடறேன்' என்றவாறே வேகமாக ஓடி வந்தாள்.
மழை நின்றிருந்தது.
உள்ளே வந்த ரம்யா சட்டென்று நினைத்துக்கொண்டு திரும்ப வாசலை நோக்கி நடந்தாள். மணியைப் பார்த்து 'அண்ணா, ரொம்ப நனைஞ்சிட்டேளே, உள்ள வந்து தலையை துவட்டிண்டு போங்கோ'.
'அட நீ வேற தங்கச்சி. நம்ம வீடு இதோ பத்தடி தூரத்தில இருக்கு. நீ உள்ளாற போ' என்றவாறே புல்லட்டைக் கிளப்பினான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஆக்கம்
திருமதி உமா,
தில்லி
வாழ்க வளமுடன்!