மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.9.07

பதிவில் எழுதுவதைக் கேள்விக் குறியாக்கும் பின்னூட்டங்கள்

பதிவில் எழுதுவதைக் கேள்விக்குறியாக்கும் பின்னூட்டங்கள்

கட்டற்ற எழுத்து சுதந்திரம் கட்டற்ற
கொடுமையாகிக் கொண்டிருக்கிறது

கண்ணியம் இல்லாதவர்களின் பின்னூட்டம்
காற்றை அசுத்தப் படுத்திக் கொண்டிருக்கிறது

போகப்போகத் தனிமனிதன் எழுத்து
சுதந்திரத்தைச் சுவாசிக்க முடியாத நிலை
ஏற்படும்போல் இருக்கிறது

பதிவின் நோக்கத்தை திசை திருப்பும்
கேள்விகளும், இறை நம்பிக்கையை
நக்கலடித்து எழுதப்பட்ட பின்னூட்டங்களும்
தொடர்ந்து வருகின்றன

இதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்.
இதெற்கெல்லாம் கவலைப் படுகின்ற
ஆள் நானில்லை!

பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய
அவசியம் எனக்கிலலை

செத்துப்போன தன் பாட்டியை உயிர்ப்பித்துத்
தரச்சொல் - நான் உன் கடவுளை நம்புகிறேன்
என்று ஒரு அன்பர் எழுதியிருக்கிறார்.

இன்னொருவர் காதலிக்காமல், காதலியைக் கண்
முன்னே பாராமல், தொட்டுப் பேசாமல், காதல்
உணர்வு எனக்கு எப்படி ஏற்படும்? என்று கேட்டுள்ளார்

இப்படிப் பின்னூட்டங்கள் வருவதும் அதைப்
பதிவில் வெளியிடாமல் விட்டு விட்டால்
ஏன் வெளியிடவில்லை என்று கேள்வி கேட்பதும்
அதிகரித்து வருகின்றன

அதேபோல் பதிவிற்கு சம்பந்தமில்லாத
செய்திகளுடன் என்னைக் கேள்வி கேட்டு வரும்
பின்னூட்டங்களும் அதிகரித்து வருகின்றன

சில பின்னூட்டங்கள், சற்று முன்வந்த சக
பதிவரின் பின்னூட்டத்தைத் பதிவில் பார்த்து
விட்டு, அவரை மறைமுகமாக ஏசி அல்லது தாக்கி
எழுதப்பெற்றும் வருகிறது. அதை வெளியிடாமல்
மட்டுறுத்தினால் ஏன் வெளியிடவில்லை என்று
அடுத்தடுத்துப் பின்னூட்டங்கள் வருகின்றது

இதை - இந்த நிலையை - கட்டற்ற கொடுமை
என்று குறிப்பிட்டால அதற்கும் எதிர் பின்னூட்டம்
வருகிறது. இனிமைக்கும் கொடுமைக்கும்
விளக்கம் கேட்டுப் பின்னூட்டம் வருகிறது

பதிவில் எழுதுவதையே கேள்விக் குறியாக்குகிறார்கள்!

கண்ணியமாக இல்லாத பின்னூட்டங்கள் குப்பைத்
தொட்டிக்குத்தான் போகும்.
எழுதி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்
--------------------------------------------------------------------
பின்னூட்டத்தை மட்டுறுத்துவது எனது உரிமை!
என்னுடைய வகுப்பறைக்கு வந்து செல்லும்
நல்ல உள்ளங்களின் மரியாதையைக் காப்பது
காப்பது எனது கடமை!

எனது உரிமையிலும் கடமையிலும் குறுக்கிட
யாருக்கும் அனுமதி இல்லை. அதை நினைவில்
கொள்க!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

தமிழ்ப் பதிவுல பிரம்மாவிற்காக ஒரு பதிவு

தமிழ்ப் பதிவுலக பிரம்மாவிற்காக ஒரு பதிவு

தமிழ்ப் பதிவுக பிரம்மாவின் கேள்வி:

///உருவாய் அருவாய் உளதாய் இலதாய்... இந்த
கடை வார்த்தைக்கு அர்த்தம் அவரால் இல்லமலும்
போகமுடியும்... he can become non existent too!
என்று நான் விளங்கியிருக்கிறேன். நாத்திகமும்
அவருக்கு ஒத்துப்போகும் என்பதையே நான்
உணர்கிறேன். அல்லது அவர் ஆத்திக நாத்திகங்கள்
இரண்டிற்கும் அப்பாற்பட்டவரோ? நீங்க என்ன
சொல்றீங்க வாத்தியார் ஐயா?///

அடியவனின் பதில்:

நாத்திகம் அவருக்கு (இறைவனுக்கு) ஒத்துப்போகும்.
ஆனால் நாத்திகத்திற்கு இறைத் தத்துவம் ஒத்துப்
போகவில்லை. அவர் இவை இரண்டிற்கும் -
நீங்கள் சொல்லியபடி அப்பாற்பட்டவர்தான்!!!!

இவர்கள் ஒத்துப்போகாதற்கும் இறைவன்தான்
காரணம் என்று எண்ணுகிறேன் இருதுருவங்கள்
இருப்பதுபோல - இரவு, பகல் இருப்பதுபோல -
இன்பம், துன்பம் இருப்பதுபோல - உறவு, பகை
இருப்பதுபோல - பெருமை, சிறுமை
இருப்பது போல, வறுமை, செழுமை
இருப்பதைப்போல, துணை, தனிமை
இருப்பது போல இதுவும் இருக்கட்டும் என்று எண்ணிச்
சும்மா இருக்கின்றாரோ என்னவோ:-)))))

ஆனால் ஆத்திகம், நாத்திகம் என்ற பேதம்
இறைவனுக்கு இல்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும்
இரு சாராருமே அவருக்குச் சமமானவர்கள் தான்
அவரால் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் பிரஜைகள்
அவர்கள். இந்தச் சம நோக்குப் பார்வையால்தான்
அவர் எல்லாம் வல்லவர் என்ற நிலையில் உள்ளார்.
That is the main reason for His existence as The Almighty
இல்லையென்றால் அவர் வெறும் mighty ஆகத்தான்
இருப்பார். எல்லாம் என்ற நிலை காணாமல் போயிருக்கும்.
வெறும் வல்லவர் என்றுதான் அவர் சொல்லப்படுவார்.

"ரவுசு பண்ணாம, முடக்கடி செய்யாம ஒத்துமையா
இருக்கோணும்டா சாமிகளா" என்று ஒரு தாய் தன்
பிள்ளைகளிடம் சொல்வது போலத்தான்
கடவுளின் சித்தமும். பிள்ளைகள் கேட்டால்தானே?

இங்கே நடக்கும் நாத்திக ஆத்திக சண்டைகளுக்கு
அவர் எப்படிப் பொறுப்பாவார்?

இலதாய் = இல்லாததாய் (non existent)
உளதாய் = உள்ளதாய்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்பதை
உருவம் உடையவராகவும், உருவம் இல்லாதவராகவும்
உலகத்தோரின் கண்களில் படும்படி உள்ளவராகவும்
உலகத்தோரின் கண்களுக்கு (படாதபடி) இல்லாதவராகவும்
அல்லது தெரியாதவராகவும் என்று பொருள் கொள்ளல் வேண்டும்

நாத்திகத்தைப் பற்றிய எந்தவிதமான செய்திக்கும்
இந்தப் பாடலில் வாய்ப்பே இல்லை! ஏனென்றால்
பாடலை எழுதியவர் அருணகிரிநாதர்.
அவரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

விளக்கம் போதுமா தமிழ்ப் பதிவுலகப் பிரம்மாவே?

நாத்திகம் பற்றி நான் நன்கறிவேன். ஏனென்றால்
வசந்த காலத்தில் நான் நாத்திகனாக இருந்தவன்.
"தில்லை நடராசரையும் ஸ்ரீரெங்க நாதரையும் பீரங்கி
வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?" என்று
சொல்லிய அன்பர்களோடும் நண்பர்களோடும்
ஒன்றாக இருந்தவன்.

நாத்திகக் கொள்கைகளுக்கு உரம் சேர்க்க ஆதாரங்
களைத் தேடி அலைந்தபோதுதான் ஆத்திகம் என்னைப்
பிடித்துக் கொண்டு விட்டது.

பிடிக்கு ஆளான கதை பெருங்கதை!

நன்றி, வணக்கத்துடன்
தோழமையுடன்,
SP.VR. சுப்பையா

பின் குறிப்பு: செய்தி நீண்டதாக இருந்ததாலும்,
உங்களின் மேல் உள்ள அன்பு, மரியாதை காரணமாகவும்,
தனிப் பதிவாக வலையேற்றம் செய்துள்ளேன்.

29.9.07

செல்லாவே வரலாமா? பதிலைத் தரலாமா?

செல்லாவே வரலாமா? கேள்விக்குப் பதிலைத் தரலாமா?

தேனினும் இனிய, மலரினும் மெல்லிய எனது
வகுப்புக் கண்மணிகள் அனைவருக்கும்,
வாத்தியாரின் காலை வணக்கங்கள்!

என் மதிப்பை அதிகம் பெற்றவறான நம் வகுப்பு
மாணவர் செல்லா அவர்கள், நேற்று நடத்திய
பாடத்தில் ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்துக்
கொள்ளூம் முகமாகப் போஸ்டர் அடித்து
ஒட்டியிருக்கிறார். (அதாவது தனிப் பதிவு
போட்டிருக்கிறார்) அதை அவர் வகுப்பறையிலே
கேட்டிருக்கலாம். இருந்தாலும் பரவயில்லை!
பதில்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

சிவப்பு வண்ண எழுத்துக்கள் கேள்விகளாகும்
கருப்பு வண்ண எழுத்துக்கள் பதில்களாகும்

1. * கடவுள் உண்டா இல்லையா? ….

பதிவை மீண்டும் படிக்கவும். பதில் அதில்
உள்ளது! இருந்தாலும் என் வகுப்பு மாணவராகிய
உங்களுக்காக மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.
கடவுள் இருக்கிறார். சர்வ நிச்சயமாக இருக்கிறார்

2. *கடவுள் என்றால் என்ன?

கடவுள் என்றால் எல்லாவற்றையும் கடந்தவர்
கடவுள் எனப்படுபவர் உலகம், உயிர் ஆகியவற்றின்
தோற்றத்துக்குக் காரணமாகக் கருதப்படும் மனித
ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாகக்
கருதப்படும் மேலான சக்தி - God

கடந்தவர் என்றால் எல்லாநிலைகளையும் தாண்டிய
நிலையில் உள்ள மேலானவர் என்று பொருள்படும்

3.* அவர் எப்படி இருப்பார்?

உருவமும் அருவமும அற்றவர் கடவுள்
உருவம் = மனிதன், விலங்கு முதலியவற்றின்
வெளித்தோற்றம்: முழு உடல் (Human, Animal)
Figure, body, shape
அருவம் = உருவம் இல்லாதது that which has no form

4. *முக்காலம் உணர்ந்தவர் என்பது உங்கள் பதிலா?

இல்லை! அதற்கும் மேலானவர் அவர்.
காலமே அவர்தான்!
He is the creator and everyting in the space
is created by him.
In short he is the everything
The space is a part of creation, space cannot be
separate from its material cause for this universe.
So what is space?
Space is the Lord.
Time is also the Lord

5. மற்ற உதிரிக்கேள்விகளில் மூன்றில் இரண்டு
நீங்கள் பார்த்த திரைப்படத்தை வைத்துக்
கேட்டிருக்கின்றீர்கள். அதற்குரிய விளக்கங்களை
அப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியவர்
களைக் கேட்பதுதான் உசிதமானது. அவர்களையே
கேளுங்கள். (எனக்காகவும் சேர்த்துக் கேளுங்கள். )

(* திருவிளையாடல்கள்: “மக்களை சோதிப்பது
மற்றும் சோதனைக்கு உள்ளாக்குவது இதில்எல்லாம்
சிறந்தவர் நீங்கள் தான்” என்று பரம சிவனைப்
பார்த்து படத்தில் கேட்பார் பார்வதி!
முக்காலத்தையும் அறிந்த சிவனுக்கு சோதனை
ஏன் தேவைப் படுகிறது? சந்தேகம் தானே
சோதனைகளின் தாய்! அப்படியானால்
அவருக்கு முக்கா(லு) லம் தெரியாதா முழுவதும்
தெரியாதா? இந்த லட்சனத்தில் “நல்லவங்களை
ஆண்டவன் சோதிப்பான் … ஆன கைவிட மாட்டான்
…என்று வெட்டிச் சவடால்கள் வேறு. நம்மை
மாதிரி வெங்காயங்களை சோதித்துதான் அறியும்
நிலைமை / கொடுமை ஆண்டவனுக்கு ஏன் ஏற்பட்டது?)

6.* அடித்துக் கொண்டு சாவார்கள் என்ற விசயம்
தெரிந்தே தான் இவ்வுலகைப் படைத்தாரா?

யார் சொன்னது மதங்களை அவர் படைத்தார் என்று?
Only one - That is God கடவுள் ஒருவர்தான் என்று
பதிவில் சொல்லியிருக்கிறேன். மீண்டும் படியுங்கள்

அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுபோல
"ஒன்றே குலம் - ஒருவனே தேவன்" என்பதுதான்
என்னுடைய சித்தாந்தம். அதைத்தான் பதிவிலும்
சொல்லியிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை
பதிவைப்
படித்துப் பாருங்கள்.

மதங்களைப் பற்றிய உங்கடைய சந்தேகங்களுக்கு
அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களையே கேளுங்கள்.
மதங்களைப் பற்றிப் பேசும் உரிமையை
யாரும் எனக்குத் தரவில்லை.
அது என்னுடைய வேலையும் அல்ல!

7.* எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றை(!)
ஏன் நம்பச் சொல்கிறார்கள்? அதன் அவசியம்
என்ன! சிந்தனை செய் மனமே!

"எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றை" என்று
நீங்களே குறிப்பிட்டு என் வேலையைச் சற்று
எளிதாக்கி விட்டீர்கள்!

உங்களை யார் நம்பச் சொன்னது?
எதை நம்பச்சொன்னது?
உங்களை நம்பச்சொல்வதற்கு யாருக்கும்
அதிகாரமில்லை. அவசியமுமில்லை.
உங்களை நம்பவைக்க வேண்டிய
அவசியம் என்ன?
அதனால் கிடைக்கப் போகும்
பலன் என்ன?
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

8* ஒரு மகாசக்தியா கடவுள்? தன் பக்தனையே
நம்பாத கடவுள் தன்னை சாதாரண மனிதர்கள்
நம்ப வேண்டும் என்று சொல்வது .. அவரது
மரியாதையைக் குறைக்கும் செயலல்லவா!?

கடவுள் எப்போது தன்னை நம்பும்படி சொன்னார்?
அல்லது கேட்டுக்கொண்டார்?
நீங்களும் நானும் நம்புவதால் அவருக்கு
என்ன ஆகப் போகிறது?
உங்களிடமும், என்னிடமும் மரியாதை குறைவதால்
அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது?
ஆதாலால் இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல
கவலையை விடுங்கள்!

9* எந்த சக்தியும் இல்லாத என்னிடம் ” எப்படி
சாத்தானை சமாளிப்பது” என்ற புத்தகத்தை
ஏன் கொடுக்கிறார்?! போராளியாயிருக்க
வேண்டியவர் … புத்தகாசிரியர் ஆன கொடுமை
ஏன் நிகழ்ந்தது! ????

கடவுளா உங்களிடம் அதைக் கொடுத்தார்?
இல்லை அனுப்பி வைத்தாரா?
சரியாகச் சொல்லுங்கள்.
அந்தப் புத்தகத்தை படித்துப் பார்க்காமல்
நான் எப்படிப் பதில் சொல்வது?
ஆகவே இந்தக் கேள்வியை சாய்ஸ்ஸில்
விட்டு விடுகிறேன். அது எந்த அச்சகத்தில்
அடிக்கப் பெற்றது என்று பாருங்கள்
அங்கே சென்றால் இந்தக் கேள்விக்குச் சரியான
விடை கிடைக்கலாம்!

10*இவை அனைத்தும் ஆசிரமங்கள் ஆசிரமங்களாக
நான் பயணித்த போது எனக்குள் ஏற்பட்ட கேள்விகள்.

தொடர்ந்து செல்லுங்கள்.நிச்சயம் ஒரு நாள்
தெரியவரும். அதுவும் ஒரு தேடல்தான்.

இன்றைய இளைஞரெல்லாம் டாஸ்மாக் பார்களிலும்,
ரெஸ்டாரென்ட்களிலும் தங்கள் பொழுதையும்
(நேரத்தையும்) பொருளையும் (பணத்தையும்) வீணாக்கும்
போது - நீங்கள்தான் ஆசிரமங்களில் பொழுதைக்
கழித்திருக்கின்றீர்கள்.

கேட்பதற்கு சந்தோசமாகவும், பெருமையாகவும்
இருக்கிறது. Jeep it up!
என் வகுப்பின் நல்மாணவன் விருது உங்களுக்குத்தான்.
(நல்லாசிரியர் என்பதுபோல)
திருமதி பிரதிபா பாட்டீல் அவர்களுக்குப் பரிந்துரை
செய்கிறேன்.

நன்றி, வணக்கத்துடன்,
வாத்தி (யார்)
------------------------------------------------------------
திரு.செல்லா அவர்களுக்கு முடிந்தவரை பதில்
சொல்லிவிட்டேன்.

வேறு இரண்டு கேள்விகள் பின்னூட்டத்தில்
வந்துள்ளன. கீழே கொடுத்துள்ளேன்

1.ஒரு அன்பர் கேட்டுள்ளார். இருபது ஆண்டு
களுக்கு முன்பு செத்துப்போன என்னுடைய
பாட்டியை உங்கள் கடவுள் எழுப்பித்தருவாரா?
(அதாவது மீட்டுத் தருவாரா?)
அப்படித் தந்தால் கடவுளை நம்பத் தயாராக உள்ளேன்

அவராது பரவாயில்லை. பாட்டிமேல் உள்ள
பாசத்தில் தெரியாமல் கேட்டிருக்கிறார் என்று
நினைத்துக் கொள்ளலாம்
அடுத்த கேள்வியைப் பாருங்கள்

2.உணர்வது பற்றி எழுதியிருக்கிறீர்கள்.கண்களால்
பார்க்காமல் அல்லது கைகளால் தொடாமல்
ஒன்றை எப்படி உணர்வது? உதாரணத்திற்கு
காதல் உணர்வு என்கிறார்களே அது காதலி
கிடைத்த பின்பு, அவளைத் தொட்டுத் தழுவிய
பிறகுதானே ஏற்படும். ஆகவே கடவுளையும்
நான் தொட்டுத் தழுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
நான் கடவுளை நம்பத்தயார்!

இவர்கள் இருவருக்கும் என்ன பதில் சொல்வது
என்று என் சிற்றறிவிற்குத் தெரியவில்லை.
தெரிந்தவர்கள் சொல்லலாம்.

இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் உள்ளது
என்று அன்பர் ஒருவர் சென்ற வாரம் தன்னுடைய
பதிவில் குறிப்பிட்டிருந்தார்

இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
"இணையத்தில் கட்டற்ற கொடுமையும் உள்ளது!"

It is my turn now!
கேள்வி அன்பர் செல்லாவிற்கு - கடைசி வரியில்
குறிப்பிட்டுள்ளதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
மற்றவர்களும் பதில் சொல்லலாம்!

------------------------------------------------------------------

28.9.07

இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா?

விதிப்படிதான் நடக்குமா? பகுதி 4

இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா?

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால்
ஒரே ஒரு பதில்தான்:

இருக்கின்றார்! சர்வ நிச்சயமாக இருக்கின்றார்?

எப்படிச் சொல்கின்றாய்? ஆதாரம் இருக்கிறதா?

இறைவன் என்பவர் நம்பிக்கை' சம்பந்தப்பட்டவர்
அல்ல! அவர் உணரப்பட வேண்டியவர்!

Yes, God is not a matter for belief ;
He is to be understood

நம்பிக்கைக்குக்கு உரியது என்றால் ஆதாரம்
காட்டலாம். உணர்வில் இருப்பதற்கு எப்படி
ஆதாரம் காட்ட முடியும்?

சரி, நம்பிக்கை என்பது எது?
உணர்வில் கொள்வது என்பது எது?

நெருப்பு சுடும் என்பது தெரியும். ஆனால்
ஒரு சிறு குழந்தைக்கு அது எப்போது
தெரிகிறது? ஒரு முறை தன் கையால்
தொட்டு, சூடுபட்டவுடன்தான் அதற்குத்
தெரியும்.

எதையுமே பட்டு உணர்வதுதான் உணர்வு
ஏற்படும் அந்த உணர்வுதான், ஒன்றைப் பற்றி
நமக்கு ஒரு புரிதலைத்தருவது. அந்தப்
புரிதல்தான் அறிவு - அந்த அறிவுதான்
நம்பிக்கை - அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை!

இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்

உணர்வதுதான் அறிவு - அறிவு கொடுப்பதுதான்
அனுபவம் - அனுபவம் ஏற்படுத்துவதுதான்
நம்பிக்கை - நம்பிக்கைதான் வாழ்க்கை!

All are interlinked!
(எல்லாம் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை)

ஒருவன் எனக்கு இறை நம்பிக்கை இல்லை
என்று சொல்லும்போது என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்.
உங்களால் ஒன்றும் செய்ய முடியாது!
யாரையும் திருத்துவதற்காக நீங்கள் பிறவி
எடுக்கவில்லை!

உணர்கிறவர்கள் உணரட்டும்;
உணராதவர்கள் உணராமலேயே போகட்டும்!

குடியின் தாக்கம் பற்றி - அது ஏற்படுத்தும்
அல்லது கொடுக்கும் கிறக்கமான உணர்வு
அல்லது கிளர்ச்சி பற்றி, ஒரு சொட்டு
மதுவைக் கூட அருந்திப் பார்க்காதவனுக்கு
எப்படித் தெரியும்?

ஒரு நல்ல ஃபில்டர் காப்பி சாப்பிட்டுவிட்டு,
ஒரு வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை
ஆர அமர உட்கார்ந்து குடித்துப் பாருங்கள்.
அப்போதுதான் தெரியும் சிகரெட்டின் மகிமை!

அதோடு மட்டுமா? காப்பிக்கும் சிகரெட்டிற்கும்
உள்ள ஜோடிப் பொருத்தமும் அப்போதுதான்
தெரியவரும்!

சிகரெட்டையே தொட்டிருக்காதவனுக்கு
அந்தப் பொருத்தத்தை/ மகிமையை என்ன
சொல்லி விளக்க முடியும்?
சொன்னாலும் விளங்குமா?

நெய்யில் வறுத்து, லேசாக உப்பும், மிளகாய்த்
தூளும் தூவப்பட்ட முந்திரிப் பருப்பு மிகவும்
ருசியாக இருக்கும் என்பது, அதைச் சாப்பிட்டு
அனுபவித்தவனுகுத்தானே தெரியும்?
சாப்பிடாதவனுக்கு எப்படித் தெரியும்?

புலவு சாதமும், சிக்கன் குருமாவும்
அல்லது தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும்
அற்புதமான உணவு என்பது சாப்பிட்ட
நமக்குத் தெரியும்! சாப்பிட்டிருக்காத
நைஜீரியாக்காரனுக்கு அது எப்படித் தெரியும்?

அவன், அவன் உணவை உயர்த்தியாகச்
சொல்லுவான். நாம் நம் உணவை
உயர்த்தியாகச் சொல்லுவோம்.

ஆகவே இறைவன் என்பவர் உணர்ந்தவனுக்கு
இருக்கிறார்; உணராதவனுக்கு இல்லை!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிச்
சொன்னார்:

"உண்டு என்றால் அது உண்டு!
இல்லை என்றால் அது இல்லை!"

எல்லாம் அனுபவித்து வருவது. அனுபவித்து
வரும்போதுதான் மனிதன் ஒப்புக்கொள்வான்.
அனுபவத்திற்கு முதல் நிலைதான் உணர்தல்

கணணதாசன் வாழ்க்கையை அதன் போக்கிலேயே
நன்றாக அனுபவித்து வாழந்தவர். அவர் சந்திக்காத
துன்பமா? துரோகமா? வறுமையா?செழுமையா?
நட்பா? பகையா? சிறுமையா? பெருமையா?.

எல்லாவற்றையும் அவர் சந்தித்தார் - நல்லது,
கெட்டதை உணர்ந்தார், உணர்ந்ததனால்
அனுபவம் பெற்றார் - பெற்ற அனுபவங்களைத்
தான் தன் எழுத்தில் வைத்தார்.

என்னைப்போல் வாழாதீர்கள் - நான் எழுதியதைப்
போல வாழுங்கள் என்று சொல்லி விட்டும் போனார்

ஒரு தோட்டம். அதில் மல்லிகை, முல்லை, ரோஜா,
கனகாம்பரம், சம்பங்கி, செவ்வரளி, பிச்சிப்பூ, சாமந்தி
என்று விதவிதமான மலர்கள் நிறைந்திருக்கின்றன.
அந்த மலர்கள் ஒவ்வொன்றின் வடிவமும், நிறமும்
மணமும் ஏன் வேற்படுகின்றன?

நிலம் ஒன்றுதான், ஊற்றும் தண்ணீரும் ஒன்றுதான்
அப்படியிருக்கையில் அவை எப்படி வேறுபடலாம்?
விதையிலோ அல்லது நாற்றாக நடும் தண்டிலோ
நிறமோ அல்லது மணமோ கிடையாது. பயிராகிப்
பூக்கின்ற போது அவற்றிற்கு அந்த மணமும்,
நிறமும் எங்கிருந்து கிடைத்தது?

அதெல்லாம் இறைவனின் படைப்பு. அந்த மாதிரிக்
கேள்விகளுக் கெல்லாம் எந்தக் கொம்பனாலும்
பதில் சொல்லமுடியாது!

ஒரு தாவரவியல் விஞ்ஞானியிடம் கேட்டுப்
பாருங்கள். நாங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டி
ருக்கின்றோம் என்பார்.
We are exploring it என்பார்.

அந்தச் செடிகளின் மூலப் பொருள் இல்லாமல்
ஒரு மலரை உண்டாக்கிக் காட்டச் சொல்லுங்கள்.
எவனாலும் முடியாது!

செய்து காட்டட்டும் - அப்போது சொல்வோம்
இறைவன் இல்லையென்று!

இறைவனுக்குத் தன்னை உணர்ந்தவன அல்லது
உணராதவன் என்ற பேதம் கிடையாது. இருவரும்
அவனுக்கு வேண்டியவர்களே. இருவருமே
அவனால் படைக்கப்பட்டவர்கள் அல்லவா?
அதனால் இருவருமே அவனுக்குச் சமமானவர்கள் தான்.

அதனால் தான் இறைவனை - Almighty என்கிறோம்
இல்லையென்றால் அவர் வெறும் mighty ஆகிப்
போயிருப்பார்.

இறைவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம்
பல பெயர்களில் அழைக்கின்றோம்.

ஆறுகள் பல உள்ளன. பல் பெயர்களில் உள்ளன
அவை கலக்குமிடம் கடல்தான்.

மதங்கள் பல இருக்கலாம், வழிபாடுகள் பல
இருக்கலாம். ஆனால் இறைவன் ஒருவன்தான்

இறைவனை நீங்கள் உணரும்போது மேற்கூரிய
அத்தனை பேதங்களும் காணாமல் போய்விடும்

அப்புறம் ஈஷ்வரன், ஸ்ரீராமன், இயேசுநாதர், அல்லா
புத்தபகவான் என்று மற்றவர்களின் பேச்சுக்கள்
எல்லாம் உங்களிடம் எடுபடாமல் போய்விடும்

நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் வழிபடுங்கள்
அது உங்கள் விருப்பம். அது உங்கள் பழக்கப்பட்ட
விஷயம். அதையும் குறை சொல்ல எந்தக்
கொம்பனுக்கும் அதிகாரமில்லை

அதையும் மீறி ஒருவன் குறை சொன்னால்
அவனை விட்டு விடுங்கள்.

It is his problem - not our problem, because
we do not even have one god. We have
only God and he is the ultimate authority
for us!

சர்வ அதிகாரமும் படைத்தவர் அவர்
ஒருவர்தான்!

உலகில் இன்றுள்ள எவனுமே 'சர்வ' என்ற
வார்த்தையை தன்னுடைய அதிகாரத்துடன்
சேர்த்துப் பயன் படுத்தமுடியாது!

ஹிட்லரையும், முசோலினியையும் நினைத்துக்
கொள்ளுங்கள். அவர்களுடைய சர்வாதிகார
மெல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது

ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் சொன்னார்:

"இன்றைக்கு செத்தால்
நாளைக்குப் பால்
ஆனால்
ஆவின் வண்டியில்
அடிபட்டால்
அன்றைக்கே பால்!"

இன்றைக்கு அதிகாரத்தில் உள்ள அததனை
பேர்களின் வாய்களிலும், ஒரு நாள் பால்
ஊற்றப்படவுள்ளது அல்லது வாய்க்கரிசி
காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த அரிசியும், பாலுமே அவன் கொடுத்த
கொடைதான்!
(தொடரும்)

------------------------------------------------

26.9.07

இன்றைக்குப் பாடம் ஈஸி'யானது!

இன்றைக்குப் பாடம் ஈஸி'யானது!

இன்றைக்குப் பாடம் ஈஸியானது;
கலக்கலானது; குஷியானது
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்
கொள்ளுங்கள்

வகுப்பறையில்
தினமும்
சீரியசான பாடங்களையே
நடத்திக் கொண்டிருந்தால் -
வகுப்புக் கண்மணிகள்
களவடித்து விடுகிறார்கள்:
டேக்கா கொடுத்து விடுகிறார்கள்;
கட் அடித்து விடுகிறார்கள்
அதனால் இன்று செமெ ஈஸியான பாடம்

படம் பார்த்துவிட்டு ஒரே ஒரு கேள்விக்கு
மட்டும் பதில் சொல்லிவிட்டுப் போய்விட
வேண்டியதுதான்

Over to lessons:
--------------------------------------


ஒன்று

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

ஆறு

ஏழு

எட்டு

===================================================

கேள்வி இதுதான். பார்த்த எட்டுப் படங்களில்
கருத்தும், படமும் எந்தப் படத்தில் சூப்பராகப்
பொருந்தியிருக்கிறது அல்லது உங்களை
மிகவும் கவர்ந்த படம் எது?

எழுதுங்கள்!

அடுத்த வகுப்பில் விளையாட்டு
நடந்து கொண்டிருக்கிறது.
பார்த்துவிட்டுப் போங்கள்


அனைவரின் வேண்டுகோளும் ஏற்கப்பெற்றது
1.10.2007 திங்கட்கிழமை முதல்
'ஜோதிட
வகுப்பு' மீண்டும் துவங்கும்!

25.9.07

செந்தழல்ரவி' யாரின் கவனத்திற்கு!

செந்தழல்ரவி' யாரின் கவனத்திற்கு!

"What the IT industry needs and what the colleges offer" என்ற
ஒரு சிறப்பான செய்தியை Chief learning officer, Sun Microsystems,
Bangalore சேர்ந்த அதிகாரி கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

இந்து நாளிதழின் கோவைப் பதிப்பில் வந்த செய்தி அது .
மற்ற ஊர்ப் பதிப்புகளில் வந்துள்ளதா என்று தெரியவில்லை

Information age is history, today is participation age!
என்று அசத்தலாகச் சொன்ன அவர், இந்த ஆண்டு 19,000 Fresh
Engineering Graduates தேவை என்றும் சொல்லியிருக்கிறார்.

வேலை வாய்ப்பு வலையிதழைச் சிறப்புடன் நட்த்திக்
கொண்டிருக்கும் திருவாளர் செந்தழல் ரவி அவர்களுக்கு
இந்த செய்தி உபயோகப்படலாம். மற்றும் நம் வலைப்பதிவுகளில்
வளைய வரும் கண்மணிகளுக்கும் பயன் படலாம்

ஆகவே பதிவில் வெளியிட்டுள்ளேன்
*******************************************************
மேலும் ஒரு செய்தி!


------------------------------------------------------------------------------

கிழியும் ஆனால் கிழியாது - பகுதி 2

கிழியும் ஆனால் கிழியாது - பகுதி 2

இதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள், படித்து
விட்டு வாருங்கள் அப்போதுதான் இந்தப் பதிவில்
சில வரிகள் புரியும்!
-------------------------------------------

"அய்யா வகுப்பில் ஜோதிடப்பாடத்தை ஏன் தொடர்ந்து
எழுத வில்லை? அடுத்த பாடம் எப்போது? " என்று
பலபேர்கள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்கள்

"நன்றாக வந்து கொண்டிருக்கிறது - பாடம் நடத்தும் முறை
அருமையாக இருக்கிறது" என்று வகுப்பிற்கு வந்து போய்க்
கொண்டிருந்த பலரும் சொல்ல, சதாப்தி விரைவு வண்டியைப்
போல சென்று கொண்டிருந்த அந்தத் தொடரை முக்கியமான
பிரச்சினை ஒன்றின் காரணமாக நிறுத்திவைக்கும்படி
ஆகிவிட்டது.

என்ன பிரச்சினை? சொல்கிறேன்.

நமக்குத் தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக்கொடுப்போம்
என்ற சிந்தனையில்தான் படிப்பதற்கு மட்டுமல்ல சொல்லிக்
கொடுப்பதற்கும் சற்றுச் சிரமமான ஜோதிடப் பாடத்தைக்
கையில் எடுத்தேன்.

ஜோதிடம் ஒரு கடல். எததனை வருடங்கள் வேண்டு
மென்றாலும் அதைப் பற்றிச் சுவாரசியமாகத் தொடர்ந்து
எழுதலாம்

நூற்றுக் கணக்கான celebrities எனப்படும் பிரபலங்களின்
ஜாதகங்களை உதாரணமாகக் கொண்டு கற்றுணரலாம்.
உதாரணங்களைச் சான்றுடன் படிக்கும்போது மனம்
நெகிழப் படித்துத் தேறலாம்.

நான் ஜோதிடப் பதிவைத் துவங்கும் போது பலமான
யோசனைகளுக்குப் பிறகுதான் துவங்கினேன்.

ஆரம்பத்தில் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்
களிடமிருந்து எதிர்ப்பு வந்தது அவர்களைக் கண்டு
கொள்ளாமல், என் பணியைத் தொடர்ந்து செய்தேன்.

முப்பத்தியிரண்டு அத்தியாயங்கள்வரை எழுதினேன்.
இன்னும் பதினெட்டு பகுதிகள் வரை எழுதினால்
அடிப்படைப் பாடங்கள் முடிந்து விடும். அடிப்படைப்
பாடங்கள்வரை நடத்தலாம் என்றிருந்தேன்

அதற்குப் பிறகு advanced study எனப்படும் மேல்
நிலைப் பாடங்களுக்கு - உரிய புத்தகங்களின் பெயர்களைக்
கொடுத்து விருப்பப்படுபவர்களைப் படித்துக் கொள்ளச்
சொல்லலாம் என்றிருந்தேன்.

'ஆசான் இல்லாத வித்தைபாழ்' என்னும் மொழிப்படி
எங்களால் படித்துப் புரிந்து கொள்ளமுடியாது - அதையும்
எழுதுங்கள் என்ற வேண்டுகோள் வந்தால், அதை
அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும்
எண்ணியிருந்தேன்

Advance study யின் முக்கியமான பாடங்களை
ஐந்து பகுதிகளாகப் பிரித்து எழுதலாம்.
100 முதல் 150 அத்தியாயங்கள் வரை வரும்
Each chapter 4 pages - A4 size paper அளவு எழுத
வேண்டியது வரும். அதுவும் ஒரு உத்தேசமான
அளவுதான். அந்த அளவிற்கு எழுதி, தட்டச்சு செய்து
பதிவிடச் சாத்தியமாகுமா என்றால் கொஞ்சம்
சிரமம்தான். படிப்பவர்கள் கொடுக்கும் உற்சாகத்தைப்
பொறுத்து அதுவும் சாத்தியமே!

சாத்தியம் இல்லாதது என்று எதுவுமே இல்லை!

ஜோதிட வகுப்புக்கு வந்தவர்களீல் Blogger account
வைத்திருந்து உள்ளே வந்தவர்களைவிடப் புதுமுக
வாசகர்கள்தான் ஏராளம். அவர்கள் எல்லாம் தமிழ்
மணத்தின் உள்ளே வந்து செல்கின்றவர்கள். அதோடு
ஒருவருக்கு ஒருவர் சொல்லி அவர்கள்
வருகையும் அதிகமாகிக் கொண்டே போனது.
(Hit counter மூலம் நான் அறியவந்தேன்)
நிறையப் பெண் வாசகர்களும் வந்து
படித்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு வந்த மின்னஞ்சல்களில் பாதிக்கும் மேல்
ஆங்கிலத்தில்தான் வந்தன. காரணம் தமிழில் தட்டச்ச
வசதி இல்லை அல்லது தெரியாது அய்யா என்று
அவர்களே சொல்லியிருந்தார்கள்

தினமும் சந்தேகம் கேட்டுப் பல மின்னஞ்சல் வரும்
எழுதிய பாடங்களிலும் கேள்விகள் கேட்டார்கள்.
அதோடு எழுதப்பட்ட பாடத்திற்குச் சம்பந்தமில்லாமலும்
கேள்விகள் கேட்டார்கள்

சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலை மின்னஞ்சலில்
சொல்லும்படி ஆயிற்று. பொறுமையோடு செய்தேன்

அடுத்து இரண்டொருவர் தங்கள் ஜாதகக் குறிப்புகளை
அனுப்பி பலன் கேட்டார்கள். சொன்னேன்.

ஆனால் அது வளர்ந்து கடைசியில் ஜாதகக் குறிப்புகளை
அனுப்பிப் பலன் எழுதுங்கள் என்ற வேண்டுகோளுடன்
வரும் கடிதங்கள் அதிகமாகிவிட்டன.

சரி பதில் எழுதாமல் இருப்பது மனிதநேயம் அல்ல,
நேரம் கிடைக்கும்போது எழுதுவோம் என்றால் சம்பந்தப்
பட்டவர்களிடமிருந்து reminders வந்து குவிய
ஆரம்பித்துவிட்டன

கடைசியில் என்னுடைய மற்ற வேலைகளைப் பாதிக்கும்
நிலைமை ஏற்பட்டு விட்டது.

அதோடு சிலர் தங்கள் குழந்தைகளின் பிறப்பு விவரங்களைக்
கொடுத்துப் பலன் எழுதும்படி வேண்டினார்கள்.

குழந்தைகளுக்குப் பன்னிரெண்டு வயது வரை தனிப்பலன்
எதுவும் கிடையாது. அவர்களூடைய பெற்றோர்களின் ஜாதகப்
பலன்தான் அவர்களுக்கும்!

இதை எழுதினால் உடனே தங்களுடைய ஜாதகத்தை அனுப்பி
குழந்தைக்குரிய பிற்காலப் பலனோடு தங்களுடைய ஜாதக
பலன்களையும் எழுத வேண்டினார்கள்.

நேரமின்மையால் தர்ம சங்கடமாகிவிட்டது

அதைவிட வேறு ஒரு பிரச்சினையும் வந்தது.

தங்கள் காதல் நிறைவேறுமா? என்று கேள்வி கேட்டுப்
பெண்கள் உட்பட பலர் எழுத ஆரம்பித்தனர்

நான் அவர்களுக்குப் பதில் சொல்வதா? அல்லது
அவர்களைப் பெற்று வளர்த்து ஆளாகிய தெய்வங்களை
நினைத்துப் பதில் சொல்லாமல் விடுவதா?

எதைச் செய்வது தர்மம்? - சொல்லுங்கள்!

காதல் விவகாரம் - அதன் outcome எனப்படும் கடைசி
முடிவு எல்லாம் ஜாதகத்தைப் பார்த்தால் தெரியவரும்.
கோடிட்டுக் காட்டலாம்.

சாதாரண ஜோதிடனாக இருந்தால் ஜாதகத்தைப்
பார்த்துவிட்டு எழிற்குரியவன் அந்த வீட்டிற்குப்
பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கிறான்
ஆகவே உனக்கு காதல் திருமணம்தான்.
எழிற்குரியவன் சுக்கிரனோடு சேர்ந்திருக்கிறான்
ஆகவே உனக்கு உன் எண்ணப்படிதான் திருமணம்
என்று சொல்லி விட்டுப்போய் விடுவான்.

காதலர் இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்து,
அந்தக் காதல் நிறைவேறுமா? நிறைவேறினாலும்
இருவரும் சேர்ந்து வாழ்வார்களா? இல்லை உரசலில்
முடிந்து விடுமா? என்று எல்லாம் அறிந்து சொல்ல
மாட்டான்.

டவுசர் - கிழியும் ஆனால் கிழியாது என்ற நிலைமை
காதலுக்கும் உண்டு. காதல் மகிழ்ச்சியில் முடியும்
ஆனால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக
இருக்காது என்ற நிலைமை 25% காதல்களில் உண்டு.

திருமணத்திற்குப் பிறகு ஒருவரையொருவர் முழுதாக
அறியும் போது, பலவீனங்கள் தெரியும் போது
மனவாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டுவிடும். அது
சமயங்களில் முறிவுவரை கொண்டுபோய் விட்டுவிடும்.
ஜாதகத்தைப் பார்ப்பவன் இதையும் பார்த்துச் சொல்ல
வேண்டுமா இல்லையா?

Arranged Marriage களிலும் இது உண்டு என்றாலும்,
திருமணங்கள் தோற்கும்போது உதவிக்குப் பெற்றோர்
உற்றார் என்று அனைவரும் வருவார்கள். காதல்
திருமணங்கள் தோற்கும்போது தனிமைதான் துணைக்கு
வரும்!

பெற்ற கடனுக்காக சிலரைப் பெற்றோர்கள்
மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம்

அதனால்தான் கவியரசர் தன்னுடைய பாடல் வரிகளில்
இப்படிச் சொன்னார்

"காதலை இலக்கியத்திற்கு விட்டு விடுங்கள்
கல்யாணத்தைப் பெற்றோரிடம் விட்டு விடுங்கள்!"

இதையெல்லாம் அவர்களிடம் சொல்வது முறையற்ற
வேலையாகிவிடாதா?
----------------------------------------
வலையில் எழுதுவது எனக்குப் பொழுது போக்கு!
ஒரு ஆர்வத்தில் ஆதங்கத்தில் எழுதுகிறேன்

நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல!
எனக்கு வேறு தொழில் உள்ளது.
அதை நான் கவனிக்க வேண்டாமா?

நாள் ஒன்றிற்கு 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே
பதிவுகளுக்காக நேரம் ஒதுக்க முடியும்.
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் மட்டுமே
வகுப்பறையில் எழுத முடியும்.

பாடங்களைப் பதிதல், பின்னுட்டங்களுக்குப் பதில்
சொல்லுதல். மின்னஞ்சலில் வரும் சந்தேகங்களுக்குப்
பதில் சொல்லுதல். அதற்கும் மேலாக, பிறந்த
விவரங்களை அனுப்புபவர்களூக்கு softwareல் ஜாதகம்
கணித்து, ஆராய்ந்து பார்த்துப் பதில் எழுதுதல்
என்று பளு ஏறிக்கொண்டே போனால் நான் என்ன
செய்ய முடியும்?

ஜோதிடப் பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில்
தினமும், சந்தேகங்கள் மற்றும் ஜாதகப் பலன்களைக்
கேட்டு என்று சராசரியாகப் பத்திற்கும் மேற்பட்ட
கடிதங்கள் - மின்னஞ்சலில் வந்தன.
அப்படி வந்ததில் பதில் அனுப்பியதுபோக அனுப்ப
வேண்டியவை என்னுடைய மின்னஞ்சல் பெட்டியில்
(Mail Box) இன்றும் நிறைய உள்ளன!

அவ்வளவு பேர்களுக்கும் எப்படி பதில் எழுதுவது?
நேரததிற்கு எங்கே போவது?

அதனால்தான் ஜோதிடப் பாடத்தை நிறுத்தி வைத்திருக்கிறேன்

இப்போது, சார் என்ன ஆயிற்று?
மீண்டும் ஜோதிடப் பாடம் எப்போது?
என்று கேட்டு நிறைய மின்னஞ்சல்கள் வந்து
கொண்டிருக்கின்றன!

அவர்களுக்கெல்லாம் இதுதான் பதில்

பாடம் - முடிந்து விட்டது ஆனால் முடியவில்லை!
(அப்பாடா - தலைப்பை நியாயப்படுத்தும் வரியை
எழுதிவிட்டேன்)
-----------------------------------------
என் நிலைமையைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்
என்று நினைக்கிறேன். என்ன செய்யலாம் - உங்கள்
மேலான யோசனைகளைச் சொல்லுங்கள்!

பின்னூட்டமாகவோ அல்லது மின்னஞ்சலிலோ
உங்கள் பதிலை அனுப்பலாம்.
கால அவகாசம் பதினைந்து நாட்கள்.
எதற்கு பதினைந்து நாட்களா?
இன்று இந்தப் பதிவைப் படிக்காதவர்
அடுத்த வாரம் படிக்க நேரிடலாமில்லையா?
அதனால் பதினைந்து நாட்களுகுள் உங்கள்
பதிலை எழுதுங்கள்

நட்புடன்
வகுப்பறை வாத்தியார்

24.9.07

டவுசர் கிழியுமா?

டவுசர் கிழியுமா?

டவுசர் - கிழியும் ஆனால் கிழியாது' என்ற என்ற வார்த்தைகளை
வலைப்பதிவில் எழுதி, லக்கிலுக்காரும், வரவணையன் அவர்
களும் மற்றும் சுகுனாதிவாகர் அவர்களும் அதிகம்பேர்களின்
கவனத்தை ஈர்த்தார்கள்.

எதிர்காலத்தில் தமிழ்கூறும் நல்லுலகத்தில் அது பெரிய
சொல்லடையாக மாறக்கூடியவாய்ப்பு உள்ளது.

கிருஷ்ணகிரி கிழிஞ்சுது' என்று ஒரு திரைப்பட நடிகர் அடிக்கடி
பெரிய திரைகளிலும், சின்னத் திரைகளிலும் சொல்லி
வந்திருக்கிறார். இன்னும் சொல்லி வருகிறார். என்னதான்
மண்டையைப் பிய்த்துக் கொண்டு யோசித்தாலும்
இன்றுவரை எனக்கு அதன் அர்த்தம் பிடிபடவில்லை.

தெரிந்தவர்கள் சொல்லலாம்

ஆனால் 'டவுசர் - கிழியும் ஆனால் கிழியாது' என்ற பதம்
அப்படியல்ல !

அவர்களின் பதிவுகளைப் படித்தால் நன்றாக விளங்கும்

நான் என்ன விளங்கிக் கொண்டேன் என்பதைக் கீழே
கொடுத்துள்ளேன்.

டவுசர் கிழியும்.ஆனால் கிழிந்த பகுதியால் உனக்கு
ஒன்றும் நேராது (nothing would expose from it) கஷ்டப்படுவதாக
நினைத்துக் கொண்டிருப்பாய் கஷ்டம் இருந்திருக்கும், ஆனால்
கஷ்டம் உனக்கல்ல

எப்படி? என்று பதிவைப் படிக்கும் எந்த ஒரு ஆசாமி கூடக்
கேட்கக்கூடாது என்பதற்காக சுகுனாதிவாகர் அவர்கள் அதற்காக
1940ம் ஆண்டில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சி ஒன்றில் இருந்து
தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்தை அற்புதமாக
மேற்கோள் காட்டியும் இருக்கிறார்.

அசத்தலாக இருந்த அந்த மேற்கோள் இதுதான்:

'நான் ஜனங்களுக்காக ரொம்பக் கஷ்டப்படுவதாக இங்கே
பேசியவர்கள். சொன்னார்கள். நான் கஷ்டம் என்று
தோன்றுவதை
என் வாழ்நாளில் செய்வதே கிடையாது.
எனக்கு ஏதாவது
கஷ்டம் இருந்ததுன்னா இந்த 15பேர்
பேச்சையும்
உட்கார்ந்து கேட்டதுதான்'
- தந்தை பெரியார்

முழு விவரத்திற்கு அந்தப் பதிவைப் படிக்கவும்

கஷ்டம் - இருந்தது ஆனாலும் இல்லை

இப்போது அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்

அந்தச் சொல்லடையை ஏற்படுத்திய மூவருக்கும் எனது
பாராட்டுக்கள்!

அந்தச் சொல்லடைக்கும் எனது வகுப்பறையில் நடந்த ஒரு
நிகழ்விற்கும் தொடர்பு உண்டு.

அதை வெளிப்படுத்தும் முகமாகத்தான் இந்தப் பதிவு

எனக்கும் ஒரு ஆணி பிடுங்கும் வேலை பாக்கி உள்ளது.
அதனால் மீதி நாளை!

(தொடரும்)

22.9.07

சிங்கைக் கண்ணனாருக்காக ஒரு பதிவு!

சிங்கைக் கண்ணனாருக்காக ஒரு பதிவு!

நேற்றைய பதிவிற்கு அன்பர் சிங்கைக்
கோவி கண்ணனார் அவர்கள் எழுப்பிய
வினாக்களுக்கு உரிய பதில்கள் -
நீண்டதாக இருந்த காரணத்தால் தனிப் பதிவாக:

////கோவியார் அவர்கள் சொல்லியது:
பெரும்பாலும் விதியை 'மனு'தாரர்கள்
நம்புகிறார்களோ இல்லையோ, தாழ்த்தப்
பட்டவனை தாழ்த்தியே வைத்திருப்பதற்கு
விதியை காரணம் காட்டுவார்கள்.
எல்லாம் விதிக்கப்பட்டது என்பார்கள்.
விதி உண்மையோ பொய்யோ ஆனால்
சில சமூகங்களின் வயிற்றுப்பிழைப்
பிற்காக விதி நன்றாக செயலாற்றுகிறது.////

எனக்குத் தெரிந்த மனுதாரர்கள் எல்லாம்
ரேஷன்கார்டிற்காகத் தாலூகா ஆபீஸ்களில்
மனுக்கொடுப்பவர்கள்தான். நீங்கள் யாரைச்
சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை!

எல்லோருக்கும் ஒவ்வொரு திறமையைக்
கடவுள் கொடுத்துள்ளார்.
யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை.

இறைவன் படைப்பில் அனைவரும் சமம்.

ஒரு ஆரூர்தாஸ், ஒரு பீம்சிங், ஒரு எம்.எஸ்,வி,
ஒரு செளந்தரராஜன், ஒரு சுசீலா அம்மையார்,
ஒரு கவியரசர், ஒரு சிவாஜி, ஒரு சாவித்திரி
அம்மையார் போன்ற பல திறமையயளர்கள்
சேர்ந்து பணியாற்றியதால் தான் பாசமலர்
என்ற ஒரு அற்புதமான திரைப்படம் கிடைத்தது.
அதுபோல பல திறமையாளர்கள் சேர்ந்ததுதான்
ஒரு வலிமையான தேசம்.

இந்தியாவை மேலும் வலிமைப்
படுத்துவோம் - கைகொடுங்கள்!

கவியரசர் கண்ணதாசன் அவர்களின்
பாடலைப் பாருங்கள்:

தலைப்பு: இனமேது?
"சுடுகாட் டெலும்புகளைச்
சோதித்துப் பார்த்ததிலே
வடநாட் டெலும்பென்று
வந்தஎலும் பில்லையடி!
தென்னாட்ட் டெலும்பென்று
தெரிந்த எலும் பில்லையடி!
நம்நாட் டெலும்பென்றும்
எழுதிவைக்க வில்லையடி!
ஒருநாட்டு மக்களுக்குள்
ஓராயிரம் பிரிவை
எரியூட்ட வில்லையெனில்
எந்நாளும் துன்பமடி!"

ஓராயிரம் பிரிவை ஏற்படுத்தியது
கடவுளா? சக மனிதன்தானே?

ஏற்படுத்தியவர்களூம், ஏற்றுக் கொண்ட
வர்களும் அடிபட்டுத் திருந்தட்டும் என்று
கடவுள் விட்டு வைத்திருக்கலாம்.

ரோடு போடுவதைப்போல, குடிதண்ணீர்
வழங்குவதைப்போல சமூக நீதிகளும்
அரசின் வேலைதான். கடவுளின் வேலையல்ல!

அதை (தமிழகத்தைப் பொறுதவரை) காமராஜர்
காலத்தில் இருந்து இன்று வரை (52 ஆண்டுகளாக)
எல்லா ஆட்சியாளர்களும் செய்து கொண்டுதான்
இருக்கிறார்கள்.
இல்லையென்று சொல்லுங்கள்
பார்ப்போம்

அதற்கும் கவியரசரின் பாடல் உள்ளது:

"ஆண்டான் அடிமை மேலோர் கீழோர்
என்பது மாறாதோ?
அரசனில்லாமல் ஜனங்கள் ஆளும்
காலமும் வாராதோ?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு!

- படம் : பச்சை விளக்கு - வருடம் 1964

1964ம் வருடமே - அதாவது நீங்கள் பிறக்கு
முன்பே கண்ணதாசன் நிலைமையை
விளக்கிப் பாட்டெழுதி விட்டார்.

நீங்கள்தான் இன்னமும் எதையோ நினைத்துக்
கொண்டும், நாட்டு நடப்பு அறியாமலேயே
எதையோ பிடித்துத் தொங்கிக் கொண்டும்,
முனுமுனுத்துக் கொண்டும் இருக்கிறீர்கள்.

உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்.
காட்சிகள் தெரியும்: கவலைகள் மறையும்!

இது ஒத்தடம் அல்ல: உண்மை!

விதி வலியது. விதியைவைத்து யாரும்
வயிற்றுப் பிழைப்பு நடத்த முடியாது
மாறாக விதிதான் பலபேரை வயிற்றுப்
பசிக்காகத் தட்டுடன் கோவில் வாசல்களிலும்,
தேவாலய வாசல்களிலும்,
தெருவிலும் நிறுத்தியிருக்கிறது!
இது அவர்கள் செய்த கர்மவினையின் பலன்

நீங்கள் சிங்கையில் இருப்பதனால் உங்கள்
கண்ணில் அவைகள் பட வாய்ப்பில்லை!
அடுதமுறை வரும்போது சென்று பாருங்கள்

///உங்கள் கருத்துக்களை மறுக்க வேண்டும்
என்ற நோக்கம் இல்லை. எனது கருத்தை
நான் சொல்வதற்கு உங்கள் வகுப்பில்
தடையில்லை என்பதால் சொன்னேன். :)///

ஆகா, தாராளமாகச் சொல்லலாம்!

தவறான கருத்தென்றால் ஆசிரியர் என்று
பாராமல் நீங்கள் தட்டிக் கேட்கலாம்
(அடித்து அல்ல - அடிதாங்கும் வயசை
அடியேன் தாண்டி விட்டேன்)

வகுப்பில் நீங்கள் முதல் வரிசை மாணவர்.
ஆகவே உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு
- வாத்தியார் சீட்டில் குண்டூசி வைப்பதைத் தவிர!

//விதிப்படியே எல்லாம் நடக்கிறதென்றால்
சோதிடம் பார்த்து பலன் அறிந்து கொள்வதில் என்ன பலன் ?//

ஜோதிடம் பொய் என்றே வைத்துக்
கொள்வோம் - ஒரு வருடம் கழித்து உனக்கு
நல்ல காலம் வருகிறது என்றால் - அந்த ஒரு
வருடமாவது கேட்டுவிட்டுச்
செல்பவன்
நிம்மதியாகத் தூங்குவானே - அது குறைந்த
பட்சப் பலன். அதுகூடக்

கிடைக்கக்கூடாது என்கிறீர்களா?

///விதிப்படியே எல்லாம் நடக்கிறது என்று
உறுதியாக நம்பினால் கடவுள் நம்பிக்கையால்
அதை மாற்ற முடியாது என்றும் சொல்கிறீர்கள்.
ஆனால் அது மனத்திடம் தருவதற்கென்று
ஒத்தடமும் கொடுக்கிறீர்கள். விதிகள் வகுத்தது
யார் ? என்ற கேள்வியில் கடவுளை புகுத்தி

விடைகாண முடியும். அதே சமயத்தில் விதிப்படி
என்றால் சுனாமி, சோகங்களும்,

கும்பகோணம் குழந்தைகள் சாம்பலுக்கும்
விதிமேல் பலியை போட்டு விடலாம் ?
ஆனால் விதியை படைத்தவன் இறைவன்
என்று நம்பினால் கடவுள் கருணையற்றவ
ராகத்தானே தெரிகிறார். நெருப்பு எதையும்
சுடும் அதற்கு குழந்தையோ, கண் இல்லாத
வரோ தெரியாது என்பது தானே இயற்பியல்
விதி ? கத்தி எதையும் கைவிரலையும் வெட்டும்,
கழுத்தையும் வெட்டும் அதுவும்

இயற்பியல் விதி. இந்த இயற்பியலைப்
போல்தான் விதிகள் என்று நம்பப்படுவது

இயக்கங்கள் அனைத்தும் சார்பு நிலை
தத்துவத்தில் இயங்குகிறது. நமது

மனதையும், முன்நிகழ்வுகளையும் வைத்து
இயக்கங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது

இது நன்மை, இது தீமை என்கிறோம்.
ஆனால் அவை யாவும் வெறும் நிகழ்வு

மட்டுமே. நன்மை / தீமை என்ற பகுப்பில்
பார்பதால் நன்மைக்கு சாதகமான

பின்னனியாக இறைநம்பிக்கையும்,
தீமைக்க்கு காரணமாக வினையையும்

வசதியாக வைத்துக் கொள்கிறோம்.:))///

விதியை யாரும் வகுப்பதில்லை.
It is an auto process - self eveolving system
என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
வினை விதத்தவன் வினை அறுப்பான்.
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
என்று சொல்கிறோம் இல்லையா - அப்படிப்
பட்ட ஒழுங்குமுறை என்று

வைத்துக் கொள்ளூங்களேன். அது
செயல்களை வைத்துப் பலன் தரும்

ஒரு ஒழுங்குமுறை என்றும் வைத்துக் கொள்ளலாம்

தரையைத் துழைத்து கோடிக்கணக்கான
பேரல்கள் அளவில் தண்ணீரையும், பெட்ரோலிய
எண்ணையையும் மனிதன்

உறிஞ்சுகிறான். 80% சதவிகித மரங்களை
வெட்டிப் பயன்படுத்திவிட்டான்.

அதனால் தான் இயற்கைச் சீற்றங்கள்.
அதற்குக் கடவுள் என்ன செய்வார் பாவம்?


இந்த உடம்பு கடவுள் கொடுத்ததுதான்
ஆத்மா குடியிருக்க! அந்த உடம்பை ஒழுங்காக
வைத்திருக்கிறோமா?
ஜானிவாக்கர் விஸ்கி,
பட்டை சாராயம், பான்பராக், அபின், கஞ்சா,
சிக்கன் மட்டன், தந்தூரி
புரோட்டாவென
கண்ட கண்ட கழுதைகளையெல்லாம் உள்ளே
தள்ளிப்
பாழ்படுத்திவைத்திருக்கிறோம்.

அதற்கும் கடவுள்தான் காரணமா?

கவிஞர் திரு.வரமுத்து சொன்னார்:
40 வயதுவரை நாம் சாப்பிட உணவு:
40ற்கு மேல நம்மையே சாப்பிடும் அந்த உணவு!

பாதிப்பேர் முதலில் பல்லையே ஒழுங்காக
விளக்குவதில்லை. கடவுள் என்ன செய்வார்
பாவம்? உலகில் உள்ள 600 கோடி பேர்களுக்கும்
ஆள்வைத்து அவரா பல்லை
விளக்கிவிட முடியும்?

நன்றும் தீதும் பிறர்தர வாரா!

எல்லா புற அவலங்களுக்கும் நாமே காரணம்.
அதன் பலனை நாமேதான் அனுபவிக்க வேண்டும்.

நான்காவது மாடியில் குறுகிய இடத்தில்,
ஓலைக் கூரையின் கீழ் பள்ளிக்கூடத்தை
வைத்து நடத்தியது யார்?

அனுமதித்தது யார்?

ஆடும்வரை மனிதன் ஆடுவான்
அடிபட்டபின் கடவுளைக் கூப்பிடுவான்.
அல்லது கடவுளின்மேல் குற்றம் சுமத்துவான்

நாம் செய்யும் தவறுகளுக்கு அவர்
எப்படிப் பொறுப்பாவார்?

யோசித்துப் பார்த்துவிட்டு
(வீட்டுப் பாடங்களையும் - அதாவது
Home Work ஐ எழுதிவிட்டு)
நாளை வகுப்பிற்கு வாருங்கள்!

நட்புடன்
வாத்தியார்

21.9.07

எது புண்ணியம்? எது பாவம்?


******************************************************************
விதிப்படிதான் நடக்குமா? - பகுதி 2

எது புண்ணியம்? எது பாவம்?

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப்
பயன்கள் செய்தவனையே சென்றடைவதுதான்
விதி. ஆகவே இப்பிறவியில் ஏற்படும் நன்மை,
தீமைகள் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் -
நாம் வாங்கி வந்த வரத்தின்படிதான் நடக்கும்
என்று முன் அத்தியாயத்தில் எழுதியிருந்தேன்.

அதென்ன இருவினைப் பயன்கள்?

பட்டினத்தடிகள் அதைப் பற்றி நான்கே
வரிகளில் நெற்றியடியாக எழுதி வைத்து
விட்டுப் போயிருக்கிறார்

பாடலைப் படியுங்கள்:

"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழிஅம்பொழுக
மெத்திய மாந்தரும் வீதிமட்டே விம்மிவிம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந்தருஞ் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே"

இதே பாடலை கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் எளிமைப் படுத்தி ஒரு திரைப்படப்
பாடலின் ஆரம்ப வரிகளுக்குப் பயன் படுத்தினார்

அது மிகவும் பிரபலமான பாடல். தமிழகம்
எங்கும் ஒலித்த, ஒலித்துக் கொண்டிருக்கின்ற -
உங்களுக்குத் தெரிந்த பாடல்.
பாடல் வரிகளைப் பாருங்கள்:

"வீடு வரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ?"

இந்தப் பாடலை ஒலிப் பதிவுக்கூடத்தில்
பாடுவதற்காக இருந்த பாடகர்
திரு.T.M.செளந்தரராஜன் அவர்கள்
கவிஞரைப் பார்த்துக் கேட்டார்.

"அப்பச்சி, இந்தப் பாடலின் துவக்க வரிகளை
நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன்.எந்தப்
பாடலின் உந்துதலில் இதை எழுதினீர்கள்?"

கவியரசர் பதில் சொன்னார்.

"அது பட்டினத்தார் பாடல் அய்யா"

"எங்கே முழுப் பாடலையும் சொல்லுங்கள்"

கவியரசர் சொன்னார்

"பட்டினத்தார் பாடலின் கடைசி வரியை
ஏன் விட்டுவிட்டீர்கள்?"

"எதை - பாவ, புண்ணியத்தையா? அதைச்
சொன்னால் நமது மக்களுக்குப் புரியாதையா!
அதனால்தான் யாரோ என்று எழுதினேன்.
புரிகிறவன் புரிந்து கொள்ளட்டும்
புரியாதவனுக்குப் புரியாமலேயே போகட்டும்!"

என்னவொரு அசத்தலான பதில் பார்த்தீர்களா?
மக்களின் நாடி தெரிந்தவர் அவர்.
அதனால்தான் அவர் கவியரசரானார்.
மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்

இதே பாடலை நான் பள்ளியில் படித்துக்
கொண்டிருந்த காலத்தில், நானும், சகமாணவர்களும்
சேர்ந்து இப்படித் திரித்துப் பாடுவோம்.

"வீடுவரை லைஃபு (Life)
வீதிவரை ஒய்ஃபு (Wife)
காடுவரை சன்னு (Son)
கடைசிவரை மண்ணு"

இது உப செய்தி - தொடரின் சுவாரசியத்திற்காக.
அதை விடுங்கள் - இருவினைப் பாவ, புண்ணி
யத்தைப் பார்ப்போம்.

பாவம் எது என்பதும், புண்ணியம் எது என்பதும்
உங்களுக்குத் தெரியாததா என்ன?
இருந்தாலும் கட்டுரைக்காக ஒரு சிறு உதாரணம்
மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை
அவர்களுடைய வயதான காலத்தில்
வீட்டில் வைத்து அவர்களுடைய மனம்
மகிழும்படியாக பிள்ளை பார்த்துக் கொண்டால்
அது புண்ணியக் கணக்கில் வரும் :
மனைவியின் பேச்சைக் கேட்டு அல்லது
தொல்லை என்ற சுய சிந்தனையுடன் அவர்களைக்
கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விட்டால்
அது பாவக் கணக்கில் வரும்

அமெரிக்காவில் வேலைக்குப் போகும் தம்பதிகள்
அதிகம் - 90% அவர்கள் தங்கள் குழந்தைகளைப்
பேணி வளர்க்காமல் விடுதிகளில் (Hostel) விட்டு
விடுவார்கள். அதே குழந்தைகள் வளர்ந்து ஆளாகி
ஒரு நிலைக்கு வரும்போது தங்களுடைய பெற்றோர்
களை முதியோர் இல்லத்தில் விட்டு விடுவார்கள்.
கேட்டால், நமது கவுண்டமணி பாணியில்
"அமெரிக்காவில இதெல்லாம் சகஜமப்பா...!"
என்று சொல்லி விடுவார்கள்.

ஒரு ரூபாயோ அல்லது கோடி ரூபாயோ
இறைப் பணிக்குச் செலவழித்தால் அல்லது
ஏழை, எளியவர்களுக்குச் செலவழித்தால் அது
புண்ணியம். பொதுச் சொத்தையோ அல்லது
கோவில் சொத்தையோ கொள்ளையடித்தால்
அது பாவம்

இன்னும் சிறப்பாக விளக்க ஒரு கதை
சொல்கிறேன். சுவாரசியமான கதை. கொஞ்சம்
பொறுமையோடு படியுங்கள்.

ஒரு துறவியும், அவருடைய சீடனும், திருத்தலம்
ஒன்றிற்குப் பயணமாகச் சென்று கொண்டிருந்தார்கள்
இரு நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அது.
வோல்வா பேருந்துகளும், சதாப்தி ரயிலும் இல்லாத
காலம். நடைப் பயணம்தான்

சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்த களைப்பு. உடன்
கடுமையான பசி. பெரியவர் பொறுத்துக்கொண்டார்
சீடனால் முடியவில்லை

"சாமி, அதோ ஒரு கிராமம் தெரிகிறது. சிரமபரிகாரம்
செய்து விட்டுப் போகலாமே" என்றான்

துறவியாரும் சரி என்று செயலில் இறங்கினார்.

வரப்பின் மேல் நடந்து, கிராமத்தை அடைந்தனர்.

கிராமத்தின் நுழை வாயிலிலேயே ஒரு பெரிய
பண்ணை வீடு இருந்து. பின்புறம் நூற்றுக்கணக்கான
ஏக்கர் நிலபுலன்களுடன் கூடிய மிகப் பெரிய வீடு.

துறவி கதவைத் தட்டினார். திறக்கப் படவில்லை
மீண்டும், மீண்டும் நான்கைந்து முறை தட்டினார்.
கால்மணி நேரம் கடந்திருக்கலாம். கதவைத் திறந்து
கொண்டு பீமசேனன் தோற்றத்துடன் ஒரு மனிதன்
வெளிப்பட்டான்.

அவன்தான் அந்தப் பெரும் பண்ணைக்கும், பண்ணை
வீட்டிற்கும் சொந்தக்காரன். பாதித்தூக்கம் அவன்
கண்களில் மிச்சம் இருந்தது

எரிச்சலோடு கேட்டான்," என்ன வேண்டும்?"

துறவி, பொறுமையாகத் தாங்கள் யார் என்பதையும்,
எங்கு பயணிக்கின்றோம் என்பதையும் கூறிவிட்டு
உண்வு வழங்கும்படி வேண்டினார்.

அடிப்படைப் பண்பின்றி அவன் கோபமாக," இதற்குத்
தான் தட்டினீர்களா - சனியன் பிடித்தவர்களே - என்
தூக்கத்தைக வேறு கெடுத்துவிட்டீர்களே - போய்
வேறு இடத்தில் கேளுங்கள்" என்று சொல்லி விட்டுத்
திரும்பவும் தன் வீட்டிற்குள் சென்று படார் என்று
கதவை அறைந்து சாத்தி விட்டான்.

அவன் நடத்தையைப் பார்த்துச் சீடனுக்கு அசாத்திய
கோபம் வந்தது. ஆனால் குருபக்தியினால் கோபத்தைக்
கட்டுப்படுத்தைக் கொண்டான்.

ஆனால் துறவி எதுவுமே நடக்காதது போல சாந்தமாக
நின்றவர், தன் கைகளை உயர்த்தி, "ஆண்டவனே
இவனுக்கு இன்னும் நான்கு மடங்கு செலவத்தைக்
கொடுப்பாயாக!" என்று பிராத்தனை செய்தார்.

சீடன் வியப்பின் எல்லைக்கே போய்விட்டான்.
குருவின் தவவலிமை அவனுக்குத் தெரியும்.
அவர் பிராத்தனை செய்தால் அது நடந்துவிடும்.
ஆனாலும் இவர் ஏன் இந்தக் கிராகதகனின்
நல்வாழ்விற்குப் பிரார்த்திக்கின்றார் என்பது
அவனுக்குப் பிடிபடவில்லை.பேசாமல் நின்றான்.

இறங்கி நடந்த துறவி, கிராமத்தை நோக்கி
நடந்தார். சீடனும் தொடர்ந்தான். கண்ணில்
பட்டது ஒரு குடிசை வீடு. முன் பக்கம்
திண்ணை. அருகில் உள்ள கொட்டகையில்
நான்கு பசுமாடுகள் கட்டப்பட்டிருந்தன

துறவி,"தாயே!" என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்.

அடுத்த நொடியே, ஒரு மூதாட்டி கதவைத்
திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

" வாங்க சாமிகளா? என்ன சாமிகளா வேணும்?"
என்று அன்புடன் கேட்டாள்

துறவி சொன்னார்

அவள் பதறி விட்டாள். அவள் வீட்டில் சற்று
முன்தான் சாப்பிட்டுவிட்டு, பாத்திரங்களைக்
கழுவிப் போட்டிருந்தார்கள்

"சாமி நல்ல மோர் இருக்கிறது.ஆளுக்கு ஒரு
செம்பு தரட்டுமா?" என்று தயக்கத்துடன்
வினவினாள்.

கொண்டுவரச் சொல்லிவிட்டுத் துறவி திண்ணையில்
அமர்ந்தார். சீடனையும் அமரச் செய்தார்.

இரண்டு பெரிய செம்புகளில் அமிர்தம் போன்ற
சுவையுடன் மோர் வந்தது. வாங்கி அருந்தினார்கள்
பசி அடங்கிய பிறகுதான் இருவரும் ஒரு
நிலைக்கு வந்தார்கள்.

துறவி அந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தார்

அவள் தன் கதையைச் சொன்னாள். அவள் வீட்டில்
விதைவைக் கோலத்துடன் ஒரு மகள். பதினெட்டு
வயதில் ஒரு பேத்தி - ஆக மூன்று பேர்கள். நான்கு
பசு மாடுகளை வைத்து ஜீவனம். பால், தயிர், மோர்
விற்று வயிறு வளர்ப்பதை நடிகை மனோரமா
பாணியில் ஏற்ற இறக்கத்துடன் சொன்னாள்.

துறவி விடை பெற்றுக் கொண்டு புறப்படும்போது,
இப்படிச் சொல்லி ஆசீர்வதித்தார்." உன் பேத்திக்கு
சீக்கிரம் திருமணம் ஆகும். நல்ல மணாளன்
கிடைப்பான். உன் மாடுகளில் இரண்டு இறந்துவிடும்
அனாலும் நீ நன்றாக இருப்பாய்!"

சீடன் நொந்து போய்விட்டான்

அந்த அயோக்கியன் வீட்டில் உன் செல்வம்
நான்கு மடங்கு பெருகட்டும் என்று
சொன்னவர். ஏழையானாலும், பசிக்கு
அற்புதமான மோர் கொடுத்த இந்த
மூதாட்டி வீட்டில் இரண்டு பசுமாடு சாகட்டும்
என்கிறாரே - எதற்காக இப்படி சொல்கிறார்?
என்று புரியாமல், குழப்பத்துடன் தன்
குருவைத் தொடர்ந்தான்.

அவன் மன ஓட்டத்தை ஊகம் செய்த துறவி
அவராகவே முன்வந்து விளக்கம் சொல்லி
அவன் குழப்பத்தைத் தீர்த்துவைத்தார்.

"பண்ணைக்காரனிடம் அபரிதமான செல்வம்
இருந்தும் பசித்தவர்க்கு உணவளிக்க மறுக்கும்
பாவியாக இருக்கின்றான். அவன் செல்வம்
நான்கு மடங்கு பெருகினால் - அவன் பாவமும்
நான்கு மடங்கு பெருகும்.அதனால்தான் அவனை
அப்படி ஆசீர்வதித்தேன். இந்தப் பெண்மணி தன்
ஏழ்மையிலும் தர்மம் செய்யும் தயாநிதியாக
இருக்கிறாள். நான்கு மாடுகளை மட்டுமே வைத்து
இவள் செய்யும் தர்மம் (புண்ணியம்) இரண்டு
மாடுகளை மட்டும் வைத்துச் செய்யும்
போது இரண்டு மடங்காக மாறும். அத்னால்தான்
இங்கே அப்படி ஆசீர்வதித்தேன்"

புண்ணியத்தைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும்,
என் சிற்றறிவிற்குத் தெரிந்தவரை ஓரளவு
தெரிவு படுத்தியிருக்கிறேன்.

வேறு ஒரு உப தலைப்புடன் (Sub Title) மீண்டும்
சந்திப்போம்

(தொடரும்)

20.9.07

விதிப்படிதான் நடக்குமா?




************************************************************
விதிப்படிதான் நடக்குமா?

இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒரே
ஒரு பதில்தான்:

ஆமாம், எல்லாம் விதிப்படிதான் நடக்கும்!

எப்படிச் சொல்கிறாய்?

நிறையப் படித்ததையும், நீண்ட அனுபவத்
தையும் வைத்துச் சொல்கிறேன்!

முதலில் விதி என்றால் என்ன என்று பார்ப்போம்.

விதி என்ற சொல் இரண்டு வகையில் பொருள் தரும்

முதலில் அது வினைச் சொல்லாக (verb)
வரும்போது ஒரு பொருள் தரும்:
பெயர்ச் சொல்லாக வரும்போது வேறு
ஒரு பொருள் தரும் (noun):

விதி*1 - விதிக்க, விதித்து - வரி, கட்டணம்
முதலியவற்றை வசூலிக்க அறிவித்தல்.வரவு
செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் (levy, taxes)
விதிப்பது. 2.தண்டனை, தடை முதலிய
வற்றை அதிகாரபூர்வமாக அறிவித்தல்
award, impose 3. கட்டுப்பாடு நிர்ணயித்தல்,
நிபந்தனையை முன்வைத்தல் prescribe rules,
condition etc ; laydown

விதி*2 - 1.முன் கூட்டியே வகுக்கப் பட்ட
தாகவும், மனிதனால மாற்றமுடியாததாகவும்
உள்ள நியதி.ஊழ் (destiny, fate). 2.இயற்கை
யின் நிகழ்வில் உள்ள ஒழுங்குமுறை law of nature.

பிறந்தவன் இறந்துதான் போவான் என்ற
இயற்கையின் விதியை யாரால் மீற முடியும்?

எந்தச் செயலுக்கும் ஒரு எதிர்ச் செயல்
என்ற விதியின் அடிப்படையில்தான்
ஏவுகணை செலுத்தப்படுகிறது.

நான் இங்கே ஊழ் என்று பொருள்படும்
விதியைப் பற்றித்தான் எழுத முனைந்துள்ளேன்.

தமிழுக்கு முதல் பெருமை என்று சொல்லக்கூடிய
மறை நூலான 'திருக்குறள்' என்ற பொக்கிஷத்தைக்
கொடுத்த வள்ளூவர் பெருமகனார் விதியைப்
பற்றி என்ன சொல்கிறார்?

அடித்துப் பிழிந்து சாறெடுத்து இருபதே
வரிகளில் அவர் விதியைப் பற்றி
அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

இடம், பதிவின் நீளம், என்னுடைய கால
அவகாசம், கருதி மூன்று குறள்களை
மட்டும் எடுத்துக் கொடுத்துள்ளேன்.
பொறுமையாகப் படியுங்கள்
(பதிவர்களில் 81% இளைஞர்கள். அதனால்
இதைச் சொல்ல வேண்டியதுள்ளது.)
-----------------------------------------------------------------------
திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம்
38 அதிகாரங்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை
அறத்தின் கடைசி அதிகாரமாக எழுதியது ஊழ்வினை
என்ற அதிகாரம்.

ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி
விளக்கம் கொடுத்துள்ளார்.

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள்
செய்தவனையே சென்றடையும் இயற்கை ஒழுங்கு
என்கிறார் அவர்.

அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான குறள்:

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"
குறள் எண் 377

அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன்
வகுத்தபடிதான். கோடிக்கணக்கில் பொருளை
வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால்
அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் விதிக்கப்பட
வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை
அனுபவிக்க முடியாது.

சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்
களையும் சேர்ப்பதற்கென்றே பிறப்பார்கள்.
அவர்கள் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள்
கிளப்பிச் செலவளிப்பதற்கென்றே சிலபேர் பிறவி
எடுப்பார்கள்.

சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும்
கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ
அல்லது மாப்பிள்ளையோ அல்லது பேரனோ
ஹோண்டா சிட்டி ஏ.ஸிக் காரில் சென்று
அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான்.
விதி அங்கேதான் வேறு படுகிறது.

ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம்.
ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம்

******
"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"
குறள் எண். 380

ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை
வேறு எவை உள்ளன? அந்த ஊழை விலக்கும்
பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு,
வேறு ஒரு வழியை ஆராய்ந்து எண்ணினாலும்,
அது அவ்வழியையே தனக்கும் வழியாக்கி
முந்திக்கொண்டு வந்து நிற்கும்

கோவையில் இருந்து சென்னைக்குச் சேலம்
வழியாகச் சென்றால் விபத்து நேறிடும் என்று
அறிந்த ஒருவன், சேலம் வழியில் செல்வதைத்
தவிர்த்து, திருச்சி வழியாகச் சென்று தப்பித்துவிட
முனைந்தால் விதி விடாது. அது அவனுக்காக
திருச்சி டோல்கேட் அருகே காத்துக் கொண்டு நிற்கும்

ஒருவன் தன்னுடைய அபரிதமான பணத்தைப்
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஆபத்து
என்று தெரிந்து கிலோக் கணக்கில் தங்கமாக
வாங்கி வீட்டில் வைத்துக் கட்டிக் காத்தால்,
அது போகின்ற வேளையில் கொள்ளையில்
போய்விடும்

What is stronger than fate (destiny)?
If we think of an expedient
to avert it, It will itself be with us
(before the thought)

******

"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக்
காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன்
எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது
அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது
முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள்
சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்
போது - ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்
தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும்
அது அவனைப் பேரறிஞனாக்கும்!

An adverse fate produces folly, and
a prosperous fate produces enlarged knowledge.

******
இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter)
தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத்
துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப்
பாலின் கடைசி அதிகாரமாக ஊழ்வினையை
வைத்தார்?
அவருக்கே தெரியும், மனிதன் என்னதான்
கடவுளை வணங்கிக் கூழைக்கும்பிடு போட்டாலும்
அல்லது கதறி அழுதாலும், எல்லாம் ஊழ்வினைப்
படிதான் நடக்கும் என்று!

அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது
தெரியாமல் இருந்திருக்குமா என்ன?

சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும்
சக்தியை அவர் கொடுப்பார்.
The Almighty will give standing power!
தாக்குப் ப்டிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.
அதற்கு உதாரணம் கேரளாவில் மிகவும்
பிரசித்தமான நாராயண குருவின் சரித்திரம்
(அதைப் பற்றி வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்)

ஆகவே எல்லாம் விதிப்படிதான் நடக்கும்!
நாம் வாங்கி வந்த வரத்தின்படிதான் நடக்கும்!

குமுதம் வார இதழின் நிறுவனரும், முன்னாள்
ஆசிரியருமான திரு.S.A.P அண்ணாமலை அவர்களிடம்
(அரசு கேள்வி பதில் பகுதியில்) ஒருமுறை இந்தக்
கேள்வி கேட்கப்பட்டபோது அவர் இப்படித்தான்
பதில் சொன்னார்:

"ஆமாம் அதுதான் உண்மையாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் பிறப்பில் ஏன் இத்தனை பேதங்கள்?"

ஒரு குழந்தை செல்வந்தர் வீட்டில் பிறக்கின்றது.
பிறந்த அன்றே வாழ்க்கைக்குத் தேவையான
அத்தனை வசதிகளும் அதற்கு கிடைத்து விடுகிறது.
மற்றொரு குழ்ந்தை, அன்றாடம் அரிசி வாங்கி,
தினமும் இரண்டு வேளை மட்டுமே - அதுவும்
அரை வயிறு மட்டுமே சாப்பிடும் ஏழை வீட்டில்
பிறந்து பாலுக்குக் கூட பலமணி நேரம் அழும்
நிலையில் பிறக்கிறது.

ஒரு குழந்தை பார்த்தவர் அத்தனை பேரும்
தூக்கிக் கொஞ்சும்படியான அழகுடன் பிறக்கிறது.
இன்னொரு குழந்தை பிறவியிலேயே ஊனத்துடன்
பிறக்கிறது.

ஒரு குழந்தைக்கு அற்புதமாக அன்பைச் சொறியும்
அன்னை கிடைக்கின்றாள். இன்னொரு
குழந்தைக்குப் பிறந்த மூன்றாம் நாளே
தூக்கிக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துவிட்டுச்
செல்லும் இரக்கமில்லாத தாய் அமைகிறாள்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதெல்லாம் ஏன் இப்படி நடக்கிறது?

ஒரே வரியில் சொன்னால் பிறப்பில் இருந்து
இறப்பு வரை எல்லாமே விதிப்படிதான்.

நான் வலைப் பதிவில் எழுதுவது கூட விதிப்படி
என்று வைத்துக் கொள்ளுங்களேன்........!
(இது நகைச் சுவைக்காக)

(தொடரும்)


**********************************************************