++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பக்தி மலர்
இன்று வெள்ளிக்கிழமை. புதிய பகுதியாக பக்தி மலரை உங்களுக்குத் தருவதற்கு மகிழ்வு கொள்கிறேன். இன்றைய பக்தி மலரை, தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவரும், நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவருமான, திருவாளர்.வி. கோபாலன் அவர்களின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்
----------------------------------------------------------------------------------------
Over to his posting!
----------------------------------------------------------------------------------------
"அன்னமிட்ட அன்னை!”
மகாத்மா காந்தி முதன் முதலில் காலடி எடுத்து வைத்த தமிழகக் கிராமம் எது தெரியுமா? தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தில்லையாடி என்னும் கிராமம். அவருக்கு அப்படி என்ன ஆர்வம் அங்கு?
தென்னாப்பிரிக்காவில் மகாத்மா சத்தியாக்கிரகம் செய்தபோது அவரோடு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்பட்ட ஒரு டீன் ஏஜ் பெண், வள்ளியம்மை என்று பெயர், அவர் சிறையில் மாண்டு போனார். அந்த சின்னஞ்சிறு பெண்ணின் தியாகத்தைப் போற்ற மகாத்மா அந்தப் பெண் பிறந்த கிராமமான தில்லையாடிக்கு விஜயம் செய்து அங்கு அந்தப் பெண்ணின் நினைவாக ஒரு ஸ்தூபியையும் திறந்து வைத்தார். அந்த தில்லையாடியில் தான் நானும் அவதரித்தேன்.
அப்படிப்பட்ட தியாகி பிறந்த ஊரில் பிறந்ததனால் உனக்கு என்ன பெருமை என்று நீங்கள் கேட்பதும் எனக்குப் புரிகிறது. ஒரு அல்ப ஆசை. அந்த மண்ணின் ராசி, நாமும் ஏதாவது ஒரு வகையில் தியாகியாக முடியாதா என்று. இன்று வரை ஆகவில்லை.
அது போகட்டும். இந்த ஊரில் நாராயணசாமி என்றொரு நெசவாளி. அவரும் மேலும் சிலரும் தென்னாப்பிரிக்கா சென்றால் அங்கு நல்ல வேலை கிடைக்கும், பணம் சம்பாதித்து ஊர் திரும்பலாம் என்று நம்மவர்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் "கங்காணி'களை அணுகினார்கள். அப்போதெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சி. எந்த நாட்டிற்கும் நம் இஷ்டத்துக்குச் செல்லலாம். பாஸ்போர்ட் இல்லை, விசா இல்லை. நேராக நாகப்பட்டினம் போனார்கள், அங்கிருந்து படகில் சென்று கடலில் வெகு தூரத்தில் நிற்கும் கப்பலில் ஏறிப் பயணம் செய்து தென்னாப்பிரிக்காவில் இறங்கினார்கள்.
அங்கு இவர்களுக்கு என்ன பெயர் தெரியுமா? கூலிகள். ஆம்! காந்தி கூட அங்கு ஒரு வழக்குக்காக சென்றவர் இல்லையா? அதனால் அவருக்கும் 'கூலி வக்கீல்' என்றுதான் பெயர். தானாக வலியச் சென்று அடிமைகளானவர்கள் நமது சகோதரர்கள். ஏற்கனவே அந்த பூமியின் சொந்தக்காரர்களான கருப்பர்கள் அடிமைப்படுத்தப் பட்டுள்ள நிலையில், இங்கிருந்தும் மேலும் அடிமைகள். ஆனால் அவர்களும் இவர்களும் கருப்பர்கள் என்றும், அடிமைகள் என்றும் வகைப்படுத்தப் பட்டார்கள். அங்கிருந்த நிலைமை குறித்து மேலதிகத் தகவல்களுக்கு மகாத்மா காந்தியின் "சத்திய சோதனை"யைப் படியுங்கள்.
அப்படி தென்னாப்பிரிக்காவில் குடியேறிய குடும்பத்தில் உதித்த பெண்தான் வள்ளியம்மை. அந்தப் பெண் எங்கள் சின்னஞ்சிறிய கிராமத்துக்கு பெருமை சேர்த்து விட்டாள். அந்த கிராமமே 'வள்ளியம்மை நகர்' என்றே அழைக்கப் படலாயிற்று. அந்த புண்ணிய பூமியில் நான் அவதரித்ததாகச் சொன்னேன் அல்லவா? ஆனால் எந்த வகையிலும் சொல்லும்படியாக என் வாழ்க்கை அமையவில்லை!
அந்த ஊரைச்சுற்றி பல அருமையான தலங்கள். மிக அருகில் திருவிடைக்கழி என்னும் அருணகிரியாரால் பாடப்பட்ட திருத்தலம். வடக்குத் திருச்செந்தூர் என வழங்கப்படும் முருகத்தலம். அடுத்தது திருக்கடவூர் எனும் அபிராமியம்மைத் திருத்தலம். இங்கு கோயில் கொண்டுள்ள காலசம்ஹார மூர்த்திதான் மார்கண்டேயனுக்காக எமனை வதம் செய்தவர். அபிராமி அந்தாதி எனும் மிக உயர்ந்த நூல் சுப்பிரமணிய பட்டர் என்பவரால் எழுதப்பெற்றது. பின்னர் இவர் அபிராமி பட்டர் என அழைக்கப்பெற்றார்.
அதற்கடுத்ததாக அனந்தமங்கலம் என்னும் சிற்றூர். அங்கு மிக உயரமான ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கிறார். அதையொட்டி எப்போதும் அலைகள் பாடிக்கொண்டிருக்கும் இடம், தரங்கம்பாடி. அந்த நாளில் டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டையை இன்றும் காணலாம், அருகில் கடல் எப்போது விழுங்குமோ என்றபடி உயிரைக் கையில் பிடித்தபடி நிற்கும் மாசிலாமணி நாதர் ஆலயம். அங்கு போகும் வழியில் ஒழுமங்கலம் என்றொரு ஊர். அங்கு எழுந்தருளியுள்ள மாரியம்மன் மிகப் பிரசித்தமானவள். இந்த மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்த தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வர். அப்படிப்பட்ட சூழலில் அமைந்த ஊர் தில்லையாடி எனும் வள்ளியம்மை நகர்.
அது சரி, இதெல்லாம் எதற்கு இப்போது? பூகோளப் பாடமா? இல்லை, இந்த ஒழுமங்கலம் மாரியம்மனின் திருவிளையாடலைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்காக இத்தனை பீடிகை போட்டேன். கொஞ்சம் பொறுமை காட்டுங்கள், விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.
நான் எனது ஒன்பதாவது வயதில் பிறந்த மண்ணை விட்டு மயிலாடுதுறை செல்லும்படியாகி விட்டது. அப்போது எங்களுக்கிருந்த வீடு அறுநூறு ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் திருவிடைக்கழியில் இருந்த நஞ்சை நிலமும் சில ஆயிரங்களுக்கு விலை போயிற்று. ஒருவழியாகப் படித்து வேலையில் சேர்ந்தது திருச்சியில். அங்கிருந்து கரூர், பின்னர் புதுக்கோட்டை, கடைசியில் தஞ்சாவூர். கரூரில் இருந்த சமயம் திருமணம் ஆயிற்று.
முதலில் ஒரு ஆண் குழந்தை. அதன் ஓராண்டு நிறைவுக்கு காது குத்தி, தலைக்கு மொட்டை போடப் பிறந்த பூமிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்படி வேண்டுதல். ஒழுமங்கலம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல கரூரிலிருந்து மயிலாடுதுறை வந்து தங்கி, மறுநாள் காலையில் கிளம்பி, ரயிலில் பயணம் செய்து பொறையாறு என்கிற ரயில் நிலையத்தில் இறங்கி, அருகிலுள்ள ஒழுமங்கலம் சென்றோம். அப்போது மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையே ரயில் போக்கு வரத்து இருந்தது. வழியில் மாயூரம் டவுன், மன்னம்பந்தல், ஆக்கூர், செம்பொன்னார்கோயில், திருக்கடவூர், தில்லையாடி, பொறையாறு கடைசியில் தரங்கம்பாடி.
ஒழுமங்கலத்தில் குழந்தைக்கு மொட்டை அடித்து, குளத்தில் மூழ்கி பின்னர் மாரியம்மனுக்கு மாவிளக்கு முதலியன போட்டு தரிசனம் முடிய கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணியாகிவிட்டது. ஒழுமங்கலம் மாரியம்மன் மிக சக்தி வாய்ந்தவள் என்பது பொதுவாக அங்கு நம்பப்படும் செய்தி. எந்தக் குறையு மில்லாமல் எங்கள் நேர்த்திக் கடன் முடிவடைந்தது. நல்ல வெயில். அருகிலுள்ள பொறையாறு ரயில் நிலையம் சென்றோம். குழந்தைக்கு நல்ல
பசி. எங்காவது பசும்பால் கிடைக்குமா என்று விசாரித்துப் பார்த்தேன். எங்கும் கிடைக்கவில்லை. பொறையாறு நிலையத்துக்கு அருகிலும் எந்த ஓட்டலும் இல்லை. எங்களுக்கும் நல்ல பசி. என்ன செய்வது. மாயூரம் செல்ல தரங்கம்பாடியிலிருந்து 12.45க்கு ஒரு ரயில் வரும். அது கிட்டத்தட்ட இரண்டு மணிக்குத்தான் மாயூரம் போகும்.
அதுவரை பசியைத் தாங்கமுடியுமா? குழந்தையின் அழுகையும் அதிகரித்து வந்தது. ரயில் சரியாக 12.45க்கு வந்தது. அங்கிருந்து, அடுத்த நிலையம் தில்லையாடிதான். அங்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் ஒன்றும் தெரியாது. அப்படி யாராவது இல்லாமலா போய்விடுவார்கள். போய் அங்கு யார் வீட்டுக்காவது போய் நிலைமையைச் சொல்லி அங்கு சாப்பிட்டால் என்ன என்று தோன்றியது. சரியாக ஒரு மணிக்கு ரயில் தில்லையாடி
போய்ச் சேர்ந்தது. நாங்கள் துணிந்து இறங்கி விட்டோம்.
கோயிலுக்கு எதிரில் சந்நிதித்தெருவின் முடிவில் ரயில் நிலையம். நான் இருந்தது வடக்கு மடவளாகம் என்னும் தெரு. அங்கு போவது மிகவும் சுலபம். அதிகம் நடக்கத் தேவையில்லை. நல்ல வெய்லில் வேகமாக சந்நிதித் தெருவைக் கடந்து வடக்கில் திரும்பி வடக்கு மடவளாகம் போய்ச் சேர்ந்தோம். அங்கு சுமார் பதினைந்து இருபது வீடுகள்தான் இருக்கும். அந்தத் தெருமுனையில் நாங்கள் திரும்பிய போது அங்கு ஒருவரையும் காணவில்லை. ஏழெட்டு வீடு தாண்டி ஒரு வீட்டு வாசலில் ஒரு அம்மையார் நிற்பது தெரிந்தது. சரி அங்கு போய்விடுவோம். மொட்டையடித்த கைக்குழந்தை, கணவன் மனைவியாக நாங்கள் இருவர். எங்களுக்கு உணவு இல்லாமலா போய்விடும். ஆபத்துக்குப் பாவமில்லை. பசி என்று கேட்டால் போட மறுக்கப் போகிறார்களா என்ன? துணிந்து நடந்தோம்.
அந்த வீட்டை நெறுங்கிய சமயம் அந்த அம்மையார் எங்களை எதிர்பார்த்து நிற்பது போலத் தெரிந்தது. நாங்கள் நெறுங்கி வந்ததும் "வாருங்கள், வாருங்கள்" என்று தெரிந்த உறவினரை அழைப்பது போல அந்த அம்மையார் எங்களை அழைத்தார்கள். நாங்களும் அப்பாடா என்று வீட்டினுள் நுழைந்தோம். நான் சொன்னேன்,
இதே தெருவில் இருந்த சுந்தராம்பாள் பாட்டியின் பேரன் நான். என் அப்பா சைகோன் வெங்கட்டராமன் என்பது என்றேன். ஆகா, தெரியுமே, நன்றாகத் தெரியுமே என்று எங்கள் குடும்ப விஷயங்களை விசாரிக்கத் தொடங்கி விட்டார்.
உள்ளே வாருங்கள், கைகால்களை சுத்தம் செய்துகொண்டு வந்து உட்காருங்கள். சாப்பிடலாம். மணி ஆகிவிட்டது என்றார்.
என்ன இது ஆச்சரியம். எங்கள் மனவோட்டத்தை இந்த அம்மையார் புரிந்து கொண்டாரா, என்ன? “ குழந்தைக்கு பால் தரட்டுமா? நீங்கள் வேறு ஏதாவது கொடுப்பீர்களா?” என்றார்.
பால் முதலில் தருகிறோம். பிறகு சிறிது ரசம் சாதம் கொடுக்கலாம் என்று என் மனைவி சொன்னாள். எங்களுக்கு இன்னமும் ஆச்சரியம்
தாங்கவில்லை. நானே கேட்டேன்.
"நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா, அம்மா?" என்று.
” இன்னும் இல்லை” என்றார் அவர்.
"ஏன், நேரமாகிவிட்டதே" என்றேன்.
அப்போது அந்த அம்மையார் சொன்ன செய்திதான் எனக்கு இத்தனை ஆண்டுகள் கழித்தும் மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது.
அவர் சொன்னார். “ நாங்கள் எப்போதும் காலையில் பழைய சாதம்
சாப்பிட்டுவிடுவோம். பிற்பகல் ஒரு மணிக்கு தரங்கம்பாடி ரயில் வந்த பிறகு அதில் யாராவது விருந்தாளிகள் வருகிறார்களா என்று பார்த்துவிட்டுத்தான் சாப்பிடுவது வழக்கம்” என்றார் அவர்.
”அது எப்படி இந்த கிராமத்துக்கு விருந்தாளி தினம் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்? “ என்றேன்.
அவர் சொன்னார், ” இங்கு மிக அருகாமையில் இருக்கும் திருவிடைக்கழி, திருக்கடவூர், ஒழுமங்கலம் இவைகளெல்லாம் பிரார்த்தனை தலங்கள். இங்கு வேண்டுதல் உள்ளவர்கள் அடிக்கடி வந்து தரிசனம் செய்து, பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு போவார்கள். அப்படி இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இருந்தால் நிச்சயம் இங்கு வந்துவிட்டுத்தான் போவார்கள். அப்படி அடிக்கடி இங்கு வருபவர்கள் உண்டு. அந்த வகையில் வரும் விருந்தினர்களை உபசரித்து, பசியோடு வரும் அவர்களுக்குச் சாப்பாடு போட்டு விட்டுத்தான் நாங்கள் சாப்பிடுவது என்பது நெடுநாட்களாக இருந்து வரும் பழக்கம்” என்றார்.
அப்போது அவரது கணவர் அந்த ஊரின் கணக்குப் பிள்ளை. எங்கோ வெளியில் போய்விட்டு குடையோடு வீட்டுக்குத் திரும்பினார்.
எங்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்து முகமன் கூறி, “வாருங்கள், கொஞ்சமும் தயக்கமில்லாமல் உங்கள் வீடு போல இங்கு சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை ரயிலில் நீங்கள் போகலாம்” என்றார்.
வீட்டில் அவர்கள் இரண்டே பேர்தான் என்றாலும், நாலைந்து பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.
இது என்ன அதிசயம். நாங்கள் வருவதை எப்படி அவ்வளவு நிச்சயமாக எதிர்பார்த்தார்கள். ஒன்றும் புரியவில்லை. அவரும் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து உட்கார அனைவரும் உணவு உண்டு எழுந்த பின் அந்த வீட்டு அம்மாள் தான் உட்கார்ந்து உணவருந்தினார். அவர் சொன்னது போலவே அன்று பகல் வெய்யில் நேரத்தில் அவர்கள் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை ரயிலேறி ஊர் திரும்பினோம்.
அந்த அம்மையாரின் பரந்த உள்ளத்தினால் ஏற்பட்டதா, அல்லது ஒழுமங்கலம் மாரியம்மன் எங்களை "பசியாயிருக்கிறது என்று தவிக்கிறீர்களே, போங்கள், அங்கு ஒரு அம்மாள் உங்களுக்காக சாப்பாடு வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள்" என்று எங்களை இங்கே அனுப்பி வைத்தாளா? தெரியவில்லை. அந்த மர்மம்
புரியவில்லை.
பின்னர், அதை இறைவியின் செயல் என்று எடுத்துக்கொண்டு விட்டேன்.
இறைவியின் செயல் என்றாகிவிட்டபிறகு, மர்மம் ஏது?
ஆக்கம்: V. கோபாலன், தஞ்சாவூர்
-------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
22.10.10
இறைவியின்செயல் என்றாகிவிட்டபிறகு, மர்மம் ஏது?
Subscribe to:
Post Comments (Atom)
நெஞ்சைத் தொட்டது திரு கோபாலன்ஜியின் ஆக்கம்.இறைவியின் கருணைதான்.சந்தேகமே இல்லை.
ReplyDeleteமஹாத்மாஜியின் முதல் தொண்டர்கள் தமிழர்களே!அதிலும் தில்லையாடி வள்ளியம்மை மிகச் சிறிய வயதிலேயே காந்திஜியின் சத்யாகிரஹப் போராட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் கலந்துகொண்டு,காவலர்களின் குதிரைகளால் மிதிபட்டு,ஆப்பிரிக்கச் சிறையில் உயிர்தியாகம் செய்த மாபெரும் தியாகி.காந்திஜியின் போராடங்களைத் தன் இன்னுயிர் ஈந்து துவங்கி வைத்தவர்.அந்த தியாகத்தின் சிகரத்தை நினைவு படுத்திய திரு கோபால்ஜி அந்த மாரியம்மன் அருளால் பல்லாண்டு வாழ்ந்து நமக்கு மேலும் சிறந்த ஆக்கங்களைத் தர வேண்டும்.
"செல்விருந்து ஓம்பி வருவிருந்து
பார்த்து இருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு" எனபது பொதுமறையாம் திருக்குறள்.
நமது நாட்டுப் பண்பு அதிதி உபசாரம். திதி என்றால் தேதி.அதிதி என்றால் தேதி குறிப்பிடாமல் உணவுக்காக வரும் வழிப்போக்கர்கள்."மாத்ரு தேவோ பவ!பித்ரு தேவோ பவ!ஆசார்ய தேவோ பவ! அதிதி தேவோ பவ!"என்பது
வேதம் இடும் கட்டளை."தாய், தந்தை, குரு, திடீர் விருந்தாளி ஆகிய தெய்வங்களைப் போற்று" என்பது பொருள்.
இதனை சரியாகக் கடைப்பிடிக்கும் உத்தமர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
அதனால்தான் கொஞ்சமாவது மாரியாத்தாள் மழையை அனுப்பி வைக்கிறாள்.
நன்றி சொல்வேன் நான் உங்களுக்கு(வாத்தியார் சாருக்கு)நல்ல ஆக்கத்தை
வெளியிட்டதற்கு! நன்றி!
வணக்கம் ஐயா !
ReplyDeleteமிகவும் அருமையான அற்புதமான தொடக்கம் மற்றும் ஆக்கம்.
பக்தி மயம் மாறி வரும் இன்றைய
சூழலில் வாழ்கையில் அவசியமான பக்தி மலரை மலர வைத்த ஐயாகளுக்கு முதற்க்கண் நன்றி.
ஆஹா மிகவும் அற்புதமான சம்பவம்.
ReplyDelete////அந்த மண்ணின் ராசி, நாமும் ஏதாவது ஒரு வகையில் தியாகியாக முடியாதா என்று. இன்று வரை ஆகவில்லை/////
யார் சொன்னது நீங்கள் தியாகி இல்லை என்று.... இதோ இந்த
http://tamilnaduinfreedomstruggle.blogspot.com/
வலைப்பதிவுக்கு சென்றுப் பார்த்தால் நன்றாக விளங்கும் நீங்கள் யார் என்று. தியாகிகளை இவ்வளவு நன்றியோடு அதிலும் சாதி சமய, கொள்கை, குணம் என்ற என்ற பேதமும் இல்லாமல் நாட்டுக்கு உழைத்த நல்ல மனிதர்களை நன்றி உணர்வோடு என் போன்றோரின் அறிவுப் பசிக்குத் தீனியாக அமுது படைக்கும் மணிமேகலையாகவே தெரிகிறீர்கள். அடியவர்களைப் போற்றுபவரும் அடியவராகத்தானே இருக்க முடியும்.
/////அங்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் ஒன்றும் தெரியாது. அப்படி யாராவது இல்லாமலா போய்விடுவார்கள். போய் அங்கு யார் வீட்டுக்காவது போய் நிலைமையைச் சொல்லி அங்கு சாப்பிட்டால் என்ன என்று தோன்றியது./////
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தாலும் பசியின் கொடுமையையும், உங்களின் எதார்த்த மனத்தையும் நன்கு காட்டுகிறது.
//// அவர் சொன்னார். “ நாங்கள் எப்போதும் காலையில் பழைய சாதம்
சாப்பிட்டுவிடுவோம். பிற்பகல் ஒரு மணிக்கு தரங்கம்பாடி ரயில் வந்த பிறகு அதில் யாராவது விருந்தாளிகள் வருகிறார்களா என்று பார்த்துவிட்டுத்தான் சாப்பிடுவது வழக்கம்” என்றார் அவர்////
அன்னபூரணி அம்மாவின் தெளிந்த மனம், மிக உயர்ந்த குணம் என்ன வென்று சொல்லுவது. அவர்கள் அப்போதியடிகளின் வழித் தோன்றல் ஆகத் தான் இருக்க முடியும்.
அற்புதமான உண்மை நிகழ்வு பகிர்ந்தமைக்கும், வலைபதிவிட்ட ஆசிரியருக்கும் நன்றிகள்!
//// மஹாத்மாஜியின் முதல் தொண்டர்கள் தமிழர்களே!அதிலும் தில்லையாடி வள்ளியம்மை மிகச் சிறிய வயதிலேயே காந்திஜியின் சத்யாகிரஹப் போராட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் கலந்துகொண்டு,காவலர்களின் குதிரைகளால் மிதிபட்டு,ஆப்பிரிக்கச் சிறையில் உயிர்தியாகம் செய்த மாபெரும் தியாகி.காந்திஜியின் போராடங்களைத் தன் இன்னுயிர் ஈந்து துவங்கி வைத்தவர்////
ReplyDeleteதில்லையாடி வள்ளியம்மையின் கடைசி நேர நிகழ்வை கூறவேண்டும். அருகிலே மகாத்மாவும், பாலசுந்தரமும் (இவரும் அவர்களுடன் போராடி சிறையில் இருந்தவர்) இருந்தார்களாம். அம்மையார், பாலசுந்தரத்தைப் பார்த்து அண்ணா எனக்காக ஒருமுறை திருவாசகத்தைப் பாடுங்கள் என்று கேட்டு இருக்கிறார், பாலசுந்தரம்... காந்தியும் என்ன கூறுகிறார் என்று கேட்க, காந்திஜியின் முகத்தைப் பார்த்து அவரிடம் பாலசுந்தரம்.... கடைசி நேரம் திருவாசகத்தைப் பாடச் சொல்லுகிறார். நமது நம்பிக்கைப் படி உயிர் விடும் நேரம் கேட்கும் விரும்பும் சிந்திக்கும் விசயத்தில் தொடர்புள்ளதாக மறுஜென்மம் வழங்கப்படும் என்றாராம். அதன்படியே பாலசுந்தரமும் பாடும் நேரம் அம்மையாரின் உயிரும் பிரிந்ததாம்.
உங்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் http://ananth-classroom.blogspot.com/ நமது வகுப்பறை மாணவர் ஆனந்தின் வலைப்பதிவில் எனது கட்டுரை வந்துள்ளது. அதிலும் சிறப்பு அந்த கட்டுரையை நம்ம வாத்தியாருக்கே சமர்பித்திருக்கிறேன். அனைவரும் வந்து வாசித்து உங்கள் மேலானக் கருத்தை கூறவேண்டும் என வேண்டுகிறேன்.
வாத்தியார் ஐயா தாங்கள் அவசியம் வந்து ஆசிர்வதிக்க வேண்டும். அதோடு கருத்தையும் வழங்க விடுகிறேன்.
நன்றிகள் ஐயா!
இனிய காலைப் பொழுது
ReplyDeleteஇளநெஞ்சம் படும்பாடு....
இளவேனிற் தென்றலாய்
இன்பம் தரும் வேணுகானமாய்
இன்சொல்லிளிற்குள் அடங்கா சுகந்தமாய்
இமயக் குளிருக்கு
இதமானத் தீப் பந்தமாய்
இதழில் வடியும் தேனாய்
இனிக்கும் அடிக்கரும்பாய்
இன்னும் மேலாக உணர்கிறேன்...
இளையோன் என்னை
இன்புற வாழ்த்திய வலையுலக
இளங்கோவே என் ஆசானே!
இனிய வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஐயா!
ம.நித்தியானந்தம் கரையாம்பாளையம் பல்லடம்
ReplyDeleteநன்றி திரு கோபாலன் அவர்களே ஆக்கம் மிக அருமை
இறைவியின் செயல்தான் சந்தேகமில்லை அங்கே இறங்கச் சொல்லி உத்தரவிட்டதே இறைவிதானே
அதுசரி அதற்குப் பிறகு அந்தத் தாயைப் போய் பார்த்தீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால்
த்ர்மம் செய்தவர்களெல்லாம் தெருவில் நிற்பதும் அக்கிரமக்காரர்களெல்லாம் அரச வாழ்க்கை வாழும்
காலமிது
நல்ல ஒரு அனுபவப் பகிர்வு. எதார்த்தமாக எழுதப்பட்டிருக்கிறது.
ReplyDelete// பிற்பகல் ஒரு மணிக்கு தரங்கம்பாடி ரயில் வந்த பிறகு அதில் யாராவது விருந்தாளிகள் வருகிறார்களா என்று பார்த்துவிட்டுத்தான் சாப்பிடுவது வழக்கம்” //
amazing , ஆனால் இன்றைய தேதியில் இந்த மாதிரி ஆட்கள் குறைவு, ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். எனக்குத் தெரிந்து என் வீட்டில் கூட என் அப்பா வழிப் பாட்டி, திண்ணையில் ஒரு மண் பானையில் மோர் வைத்திருப்பார்கள்.
இப்போதெல்லாம் யாரும் ஆத்மார்த்தமாக சொந்தக்காரர்களை வரவேற்பதில்லை, சமையல் செய்தால் கூட போறும் போறாமையுமாகத்தான் செய்கிறார்கள். அதுவும் இப்போதெல்லாம் வெளி ஆட்களை நம்பி உள்ளே விடக் கூட பயமாக இருக்கிறது.
இன்னும் ஒரு சில இடங்களில் நமது பண்பாடுகள் / கலாச்சாரங்கள் மறையாமல் இருப்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது. சென்னைவாசியான எனக்கு இது மிகவும் ஆச்சர்யமாக இருகிறது.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா. இது போன்ற நல்லதொரு பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு.
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteபுதிய பகுதியாக இன்று வெள்ளிக்கிழமை மலர்ந்துள்ள பக்தி மலரை அளித்த திரு.வி. கோபாலன் அவர்களின் ஆக்கம் அனுபவ பூர்வமானது.இறைவியின் செயல் மெய் சிலிர்க்க வைக்கிறது.
வாய்பளித்த தங்களுக்கு நன்றி!
தங்களன்புள்ள மாணவன்,
வ.தட்சணாமூர்த்தி
2010-10-22
Pathivu Nanru............
ReplyDeleteAyya namathu website il Side il lessons link ullathu....
Many links are their to read and benefit.
But Raaghu(thala) link ai kaanavillai(Gone). May i know Why?
Before i saw that link but now its gone sir.plz put that too.
Coz his dasha is for me........Nanraga Kaapaatrugiraar ennai...
padithu maghizha ketkirean...Nanri.
இறைவியின் அடியாரான தங்களுக்கு உதவும் பொருட்டு அந்த பெண்மனி ரூபத்தில் அல்லது அவர் மூலமாக அந்த இறைவியே சிரமெற் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. இறையருள் இருப்பின் எதுவும் சாத்தியமே.
ReplyDeleteஒரு வாக்கியம் கூட ஒழுங்காக எழுத முடியாத நிலை எனக்கு ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இறையருளால் இப்போது எவ்வளவோ எழுத முடிகிறது. எல்லாம் அவன் செயல்.
திரு.ஆலாசியத்தின் ஆக்கத்தை அனந்தின் வலைப்பூவில் படித்து ரசித்தேன்.நன்கு எழுதியுள்ளார்.பதிவு கொஞ்சம் நீளம் என்றாலும்,சொல்ல வந்த செய்திக்கு அத்தனையும் தேவையாகத்தான் இருந்தது.மேலும் பல நல்ல ஆக்கங்களை திரு.ஆலாசியம் எழுத இறையருள் கூட்டி வைக்கட்டும்.
ReplyDeleteMigavum Arumai, Siru vayathil vasalil kathai ketta antha ninaivu vanthathu....... santhegam enna iraiviyin seyal than...Ithe pondru tharala nargunangal udaiyavar en thaayarum.... Miga arumai!!!
ReplyDeleteமெய் சிலிர்கிறது அய்யா..
ReplyDelete"கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக்
கூட்டம் முதலான சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும்
புசிப்பினைக் குறையாமலே கொடுத்தும்"
என்ற அபிராமி அம்மை பதிகம் தங்கள் அனுபவம்.
உங்களை போன்ற பெரியவர் களின் அனுபவம் எங்களுக்கு பாடம்...
இது போன்ற படைப்புகள் ( அனுபவங்களை ) அய்யா நிறைய எழுத வேண்டும்..
வாத்தியார் அய்யா -விற்கும் எனது நன்றி..
////மேலும் பல நல்ல ஆக்கங்களை திரு.ஆலாசியம் எழுத இறையருள் கூட்டி வைக்கட்டும்./////
ReplyDeleteசுப்பையா, வாத்தியார், வெ.கோபாலன் உள்ளிட்ட உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம் தான் என்னை எழுத வைக்கிறது.
மிக்க நன்றிகள் கிருஷ்ணன் சார்.
அன்புடன் வணக்கம் ஸ்ரீ திருநவுக்கரசு சுவாமி களுக்கு எம்பெருமான் பசியோடு வந்த காலத்தில் பொதி சோறு கொடுத்தார்
ReplyDeleteஅது போல நீங்கள் வழிபாடு செய்த அந்த அம்மைதான் உங்களை பசி ஆற்றி இருக்கிறாள் இதில் என்ன சந்தேகம்.!!இது
போன்ற சம்பவங்கள் நடக்கவும் கொடுப்பினை வேண்டும்.உங்களுக்கு வாய்த்திருக்கிறது ...
சம்பவ விவரங்களைத் தொகுத்து அருமையாக விவரித்திருக்கிறார் அய்யா.. தஞ்சாவூரார் அவர்கள்....
ReplyDeleteபிள்ளைக்குப் பசிஎன்றதும் தன்மானத்தைக் கூடப் புறம்தள்ளி பரிதவித்துப் போன காட்சி மனக்கண்ணில் தெரிகிறது..
விவரம் தெரியாத ஒன்பதாவது வயதில் வீட்டையும் மற்ற நிலபுலன்களையும் விற்று ஊரைவிட்டு எங்கோ செல்வது என்பது
அவரது பெற்றோருக்கு எவ்வளவு மனவருத்தம் தந்திருக்கும் என்பதை நினைக்கும்போது மனதில் இறுக்கம் நிலைகொள்கிறது..
ஏனோ மகாநதி படம் மனதில் வருகிறது..
இந்தப்படத்தில் கமல் அதிகம் உச்சரித்திருக்கும்
பாரதியின் வரிகள்
'தேடிச் சோறு நிதந்தின்று -பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பமிக உழன்று -பிறர்
வாட பல செயல்கள் செய்து -நரை
கூடி கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றிட்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல் நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ.'
-மேலே சொன்ன கவிதை ..ஹுஹும் கவிதை அல்ல அது ஒரு சிங்கத்தின் உறுமல் என்ற நந்தாவின் கூற்றுப்படி இந்த வசனத்தை தனக்குரிய google chat
கஸ்டம் மெசேஜ் ஆக வைத்திருப்பவர் அய்யா..தஞ்சாவூரார் ..இதே உறுமலுடன் இவர் படித்து வேலைக்குப் போய் திருமணம் குழந்தை என்று ஒரு ஆளாய்ச் சங்கதியாய்
அதே ஊருக்கு பயணம் செய்திருக்கும் விஷயம் அவரது இளமைக்கால உழைப்பின் வலிமையை உணர்த்துகிறது..
பக்தி மார்க்கத்துக்கான பாதையிலேயே பாடலும் பயணிக்கிறது என்பதை இந்தக் கதையினைப் போலவே
எனக்கு அய்யா தெளிவாக முழுப்பாடலையும் அனுப்பி விளக்கமளித்திருந்ததை நினைவு கூர்கிறேன்..