மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.10.10

கொல்லப்படவிருந்த 35 வயதுக் குழந்தை!

----------------------------------------------------------------------------------
கொல்லப்படவிருந்த 35 வயதுக் குழந்தை!
 ===================================================
இன்றைய வாரமலரை, நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் முத்துராமகிருஷ்ணன் அவர்களின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. நடை துப்பறியும் நாவல்களில் வருவதைப்போல விறுவிறுப்பாக இருக்கிறது. படித்து மகிழுங்கள். ஆக்கம் பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------------------------
Over to his posting!
__________________________________________________________
கொலைப்பழி வராமல் கடவுள்தான் காப்பாற்றினார்!

தலைப்பைப் பார்த்ததுமே அந்த குண்டு விழுந்த நாட்டுக்காரர் "சொன்னனில்ல மாமூ..இந்தாளப்பத்தி நாபோட்ட‌ புள்ளி தப்பலியே.."என்று கோபர்களின் தலைவருக்கு குறுந்தகவலைத் தட்டிவிட்டு விட்டதாக காதில் விழுகிறது. போகிறது! முழுக் கதையையும் படித்துவிட்டு போட்ட புள்ளியை மாற்றிக் கொள்வாரா மாட்டாரா என்று பார்ப்போம்.

இந்த சம்பவம் நடந்த சமயம் என் வயது ஏழு அல்லது எட்டு இருக்கலாம்.நான் எந்த வீட்டில் வைத்துப் பிறந்தேனோ அந்த வீட்டிலேயே என்னுடைய 15 வயது வரை வளர்ந்தேன்.அப்பாவுக்கு சொந்தமாக வீடு கிடையாது. சொத்துபத்து சேர்க்கவும் தெரியாது. சேர்க்கக் கூடாது என்ற கொள்கையும் உடையவர். வீட்டு எண் 100, இரண்டாவது அக்ரஹாரம், சேலம் டவுன் என்பது எங்கள் வாடைகை வீட்டின் முகவரி. ஒண்டிக் குடித்தனங்களில் இருந்து அல்லல் பட்ட அப்பா,"எலி வளையானாலும் தனி வளை" என்று 1945ல் மற்றவர்கள் 6,7 ரூபாய் கொடுக்கக் கூடிய வீட்டுக்கு 20 ரூபாய் வாடகை பேசித் தன் மனைவி,இர‌ண்டு குழந்தைகள், மாமனார், மாமியார், இரண்டு மைத்துனர்கள்,ஒரு மைத்துனி சகிதம் குடி வந்து விட்டார்.

நாட்டு ஓடு வேய்ந்த 'இந்தக்கோடிக்கு அந்தக்கோடி' என்று நீளமான வீடு. அகலம் மிகக் குறைவு.அந்த வீட்டுக்கு வரும் விருந்தினர் அனைவரும் "என்ன இது!கோமணம் போல ஏக நீளம்!" என்று தவறாமல் 'கமென்ட்டை'  சிந்த விடுவார்கள்."இவர்களும் சொல்லியாச்சா"என்று மனதுக்குள்ளேயே சிரித்துக் கொள்வேன்.டெல்லிக்கார அம்மா போன்ற 'டீஸன்ட்'டான பெண்மணிகளும் படிக்கும் இந்தப் பதிவில்  'கெளபீனம்'(என்கிற)'கோமணம்' என்ற சொல்
கொஞ்சம் அநாகரீகமாக இருந்தாலும் யதார்த்தமாகக் கதை சொல்லும் போது தவிர்க்க முடியவில்லை. அம்மாக்கள் படித்துவிட்டு மறந்துவிடவும்,என்னை பொறுத்து, மன்னிக்கவும் வேண்டுகிறேன்.

அந்த வீட்டுக்கு வந்தபின்னர்தான்  எனக்கு உடனே மூத்த அண்ணனான‌ முனைவர் கண்ணன்(கோவை நேரு மஹாவித்யாலயா கல்லூரியின் முன்னாள் முதல்வர்) 1946ல் பிறந்தார். அவர் பிறந்த தேதி அன்றுதான் ஹிரோஷிமா நாகசாகி அழிவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.கேட்கக் கொஞ்சம் சங்க‌டமாக இருந்தாலும் யதார்த்தம் அய்யா யதார்த்தம்!அதை நாம் மறக்கக்கூடாதல்லவா?!

முன்னரே ஒரு பதிவில் கூறிய படி நான் 1949 ஆகஸ்டு மாதம் 22ந் தேதி 100, 2வது அக்ரஹாரத்தில் பிறந்தேன்.(கூறியது கூறல் என்ற இலக்கணப் பிழை வந்து நிற்கிறது. என்ன செய்வது? என் பிறந்த நாளை எல்லோரும் மறக்கக் கூடாது என்ற நல்லெண்ண‌த்தில் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்) மூத்த அண்ணன் பிறந்தது ஆகஸ்டு 6ந்தேதி. என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது அப்பாவுக்கு யார் 6ந்தேதி, யார் 22ந்தேதி என்ற குழப்பம் வந்து எனக்கும் 6ந்தேதியே கொடுத்துவிட்டார். எனவே என் 'அஃபிஷியல்' பிற‌ந்த நாள் 6 ஆகஸ்டு 1949! (ஆமாம்! ஹிரோஷிமா நினைவு நாள்!)

97ம் வீட்டில் தான் இந்தக்கதையின் முக்கிய நபர் வசித்தார்.அவரை ஹீரோ என்று சொல்லலாமே என்று கடல் கடந்து வாழும் சிலர் சொல்கிறார்கள். டெலிபதியில் கேட்கிறது! ஏன் சொல்லவில்லை என்பது கதையின் முடிவில் உங்களுக்கே புரியும். வேண்டுமானல் "ஆன்ட்டி ஹீரோ" என‌  வைத்துக் கொள்ளலாமா? எனக்கு அந்த 'டெக்னிக்கல்' சொற்கள் எல்லாம் அவ்வளவா பழக்கம் கிடையாது. இங்கிலீசு நாவல் எல்லாம் படிக்கும், "ரியலிஸம்,  சர்ரியலியஸ‌ம்"  என்று அட்டகாசமா பேசும் படித்தவர்கள்,கதையை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிச்சுப் போட்டு என்ன சொல்கிறார்களோ சொல்லிக்கட்டும்! நாம் உண்மைக் கதையைப் பார்ப்போம்.

வீட்டு எண் 97ல் வசித்தவர் பெயர் ரெங்கன். அவர் முழுப்பெயர் என்ன என்பது அவருக்கே தெரியுமா என்பது சந்தேகமே. ரெங்கநாதனோ, ரெங்க‌சாமியோ, ரெங்கமன்னாரோ, என்னமோ ஒன்று! "ரெங்கா, ரெங்கா"என்று தான் எல்லோரும் கூப்பிடுவோம்.'படிக்காத மேதை'யில் சிவாஜி சார் நடித்த‌
ரெங்கன் பாத்திரம் கிட்டத்தட்ட நம்ம உண்மை ரெங்கனுக்குப் பொருந்திவரும். என்ன வித்தியாசம் என்றால் சிவாஜி நடித்த ரெங்கன் பாத்திரம் வெகுளித்தனமானதுதானே தவிர மன நோயாளி அல்ல. அந்தப் பாத்திரம் கடுமையான உழைப்பாளி. நம்ம உண்மை ரெங்கன் கொஞ்சம் மன நோயாளி, காலில் ஊனம்,பேச்சுக் குளரல், எப்போதும் கட்டுப்படுத்த முடியாமல் வாயில் இருந்து ஜொள்ளு ஒழுகிக்கொண்டே இருக்கும். நம்ம ரெங்கன் எந்த வேலையும் செய்ய மாட்டார். என்னைப் போல வாண்டுகளுடன் கோலிக்குண்டு விளையாடுவார். பம்பரம் விளையாடுவார்.மட்டக்குதிரை தாண்டுவார். சுவரில் கரியால் விக்கெட் தீட்டிக் கிரிக்கெட் விளையாடுவார்.

 மஹான்களைப் பற்றி சரித்திரம் எழுதும் ஆசிரியர்கள் சிறுவனாக இருக்கும் போது 'அவன் இவன் 'என்று எழுதிவிட்டு, மஹானுக்கு ஞானம் வந்தவுடன் மரியாதை கொடுத்து 'அவர் இவர்' என்று எழுதத் துவங்கி விடுவார்கள். நம்ம கதையில் நேர்மாறாக,. வாண்டுகள் ரேஞ்சுக்கு இருக்கும் ரெங‌க‌னை 'அவர் இவர்' என்றால் என்னமோ அந்நியமாகப் படுகிறது. அப்போ எப்படி உரிமையோடு 'வா போ' என்று இயல்பாக‌ அழைத்தோமோ அது போலவே மரியாதை கொடுக்காமல் 'அவன் இவன்' என்றே எழுதுகிறேன்.

எனக்கு அப்போது 7/8 வயது என்றால் ரெங்க‌னுக்கு 35 வயது இருக்கும். ஆனாலும் மூளை என்னமோ 10வயது சிறுவனுக்கு உள்ளது போல.

ரெங்க‌னுக்குத்  தாய் தந்தைய‌ர் ரெங்க‌னின் சிறிய வயதிலேயே இறந்துவிட்டார்களாம். திரண்ட சொத்துக்களை விட்டுச் சென்றாலும், ரெங்க‌னின் அறியாமை காரணாமாக எல்லாவற்றையும், நரிக்கும் கேவலமான த‌ந்திர‌ம் உள்ள‌ உற‌வுக்கார‌ர்க‌ள் பிடுங்கிக்கொண்டு அவ‌னை ந‌டுத்தெருவில் விட்டு விட்டார்க‌ளாம். ஒரே அக்காவின் இல்ல‌த்தில் அடைக்க‌ல‌ம் புகுந்த‌ ரெங்க‌‌னை, குழ‌ந்தை பாக்கிய‌ம் இல்லாத‌ அக்கா த‌ன் குழ‌ன்தையாக‌வே பாவித்து உண‌விட்டு வ‌ந்தார்க‌ள். காதில் வைர‌க்க‌டுக்க‌ன், மொத்த‌மான‌ பிரேஸ்லெட்,தோடா, தொப்புள் வ‌ரை தொங்கும் த‌ங்க‌‌ச் ச‌ங்கிலி என்று ரெங்க‌னைப் பார்த்த‌வ‌ர்க‌ள் சொல்ல‌க் கேட்டுள்ளேன்.அக்காவின் க‌ண‌வ‌ர் ந‌ல்ல‌ ப‌டித்த‌,ஆனால் சாம‌ர்த்திய‌ம் இல்லாத‌ வ‌க்கீல். ச‌ட்ட‌மும், இல‌க்கிய‌மும் கரைத்துக் குடித்த‌வ‌ர். ஆனால் நெளிவு சுளிவு என்றால் என்ன‌ என்றே தெரியாத‌ வ‌க்கீல்.என‌வே வீட்டில் வ‌றுமை.ஆனாலும் வ‌றுமையில் செம்மையாக‌ வா‌ழ்ந்த‌வ‌ர்க‌ள்.தான் ப‌ட்டினி கிட‌ந்தாலும் த‌ம்பி வ‌யிறு காயாம‌ல் பார்த்துக்கொண்டார்க‌ள் ரெங்க‌னின் அக்கா.

காங்கிர‌ஸ் க‌ட்சி த‌மிழ‌க‌த்தில் செல்வாக்கோடு இருந்த‌ ச‌ம‌ய‌ம். க‌ட்சிக்கூட்ட‌ம், ஊர்வ‌ல‌ம் ஆகிய‌வ‌ற்றில் ரெங்க‌‌ன் முன்னிலை வ‌கிப்பான். அழுக்குத் துணியுட‌ன் எங்க‌ளுட‌ன் ப‌ம்ப‌ர‌ம் சுற்றிக்கொண்டு இருக்கும் ரெங்க‌‌‌ன், திடீரென‌ வீட்டுக்குப் போய் அடுத்த‌ நிமிட‌ம் மாஜிக் போல‌ வெளியில் வ‌ருவான். த‌லை‌யில் காந்திக் குல்லாய், க‌த‌ர் ஜிப்பா,வேட்டி, கையில் காங்கிர‌ஸ்  கொடியுட‌ன் த‌ன் குழ‌‌ர‌ல் குர‌லில் "வ‌ந்தேமாத‌ர‌ம், ம‌ஹாத்மா காந்திஜிக்கு ஜே!" என்ற‌ கோஷ‌ங்க‌ளுட‌ன் த‌னி ந‌ப‌ராக‌ ஊர்வ‌ல‌ம் கிள‌ம்பிவிடுவான்.

சுத‌ந்திர‌ம் கிடைப்ப‌த‌ற்கு முன்னால் ஒரு நாள் நீதிம‌ன்ற‌‌த்துக்குப் போய் "வ‌ந்தேமாத‌ர‌ம்" என்று கோஷ‌மிட்டு கோர்ட்டு ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ஸ்த‌ம்பிக்க‌ச் செய்தானாம். இவ‌னைப்ப‌ற்றி ந‌ன்கு அறிந்த‌ நீதிப‌தி இவ‌னுக்கு அன்று ஒரு நாள் ம‌ன்ற‌ம் க‌லையும் வ‌ரை த‌ண்ட‌னை அறிவித்து அத‌னைப் ப‌திவும் செய்து விட்டாராம்.அத‌னால் நாட்டுக்காக‌ சிறை சென்ற‌ தியாகி என்ற‌ ப‌ட்ட‌மும் ரெங்க‌னுக்கு உண்டு!

தெருவில் எல்லாரும் ரெங்க‌‌னின் நிலை அறிந்து அனுச‌ரித்து போவார்க‌ள். சில‌ ச‌ம‌ய‌ம் அவ‌ன் அட்ட‌காச‌ங்க‌ள் எல்லை மீறிப்போகும் போது அவ‌னைக் க‌ட்டுக்க‌ள் கொண்டுவ‌ர‌ ப‌ல‌ப் பிர‌யோக‌மும் செய்வார்க‌ள்.அவ‌னுக்குக் க‌ல்யாண‌ ஆசை வ‌ந்து எல்லோர் வீட்டுப் பெண்க‌ளுக்கும் ஒரு தொந்திர‌வாக‌ப் போய்விட்டான். கொஞ்ச‌‌ம் பேரிட‌ம் அடி கூட‌ வாங்கிவிட்டான்.

என் த‌ந்தையை அண்ணா என்றும் என் தாயாரை ம‌ன்னி என்றும் அழைத்துப் ப‌ழ‌கிய‌ ரெங்க‌‌ன், திடீரென‌ அப்பாவிட‌ம் " மாமா..... உன் பொண்ணக் கொடு...." என்பது போலப் பாடத் துவங்கிவிட்டான். முத‌லில் அவ‌ன் பேச்சை அல‌ட்சிய‌ம் செய்தாலும்,தொந்திர‌வு அதிக‌மாக‌வே அவ‌னை வீட்டுக்குள் அனும‌திக்காம‌ல் விர‌ட்ட‌த் துவ‌ங்கினோம்.

இது இங்கே நிற்க‌ட்டும்.

சேல‌த்தில் சிவ‌சாமிபுர‌ம் எக்ஸ்டென்ஷ‌னில் அந்த‌க் கால‌த்தில் எக்ஸ்ச‌ர்வீஸ்மென் கூட்டுற்வு ச‌ங்க‌த்துக்கார‌ர்க‌ள் 3 ப‌ஸ்க‌ள் வாங்கி ப‌ய‌ணிக‌ளுக்குப் ப‌ணி செய்து வ‌ந்தார்க‌ள். தின‌ச‌ரி ம‌துரை,கோவை, சித‌ம்ப‌ர‌த்துக்குப் பேருந்துக‌ள் சென்று திரும்பும்.சித‌ம்ப‌ர‌ம் பேருந்து எங்க‌ள் தெரு வ‌ழியாக‌ச் செல்லும். வாண்டுக‌ள் எல்லாம் வ‌ரிசையாக‌ நின்று கை அசைத்து வ‌ழி அனுப்ப‌வோம். ப‌ஸ் என்றால் அது ப‌ஸ். முத‌ல் முத‌லில் பானட்டை ப‌ஸ்ஸுக்குள் வைத்து வ‌ந்த‌ முத‌ல் ப‌ஸ் அதுதான். ந‌‌ல்ல‌ உய‌ர‌மான‌ ப‌ஸ்.க‌ம்பீர‌மாக‌ அதிர்வு இல்லாம‌ல் மிக‌ வேக‌மாக‌ அது ந‌ம்மைக் க‌ட‌ப்ப‌தைப் பார்ப்ப‌தே ஒரு அனுப‌வ‌ம். பேருந்துப் ப‌ய‌ண‌த்திற்கு முன் ப‌திவு என்ப‌து முன்னாள் ராணுவ‌த்தின‌ர் ஏற்ப‌டுத்திய‌ ப‌ழ‌க்க‌ம் தான். பின்ன‌ர் அர‌சு கூட‌ அத‌னைப் பார்த்துதான் செய‌ல் ப‌ட்ட‌து.

த‌லைப்புக்கு ச‌ம்ப‌ந்த‌மான‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ நாள் இப்போது வ‌ருகிற‌து. முத்திரைத்தாள் விற்ப‌னை செய்ப‌வ‌ரான‌ ச‌ந்திர‌ மெள‌லீஸ்வ‌ர‌ர் வீட்டூ வாச‌லில் க‌ட்டிட‌ வேலைக்காக‌ ம‌ண‌ல் கொட்டி இருந்த‌து. நானும் ந‌ண்ப‌ர்க‌ள் ஓரிருவ‌ரும் ம‌ண் வீடுக‌ட்டி விளையாடிக்கொண்டு இருந்தோம். அப்போது வ‌ந்தான‌ய்யா ரெங்க‌‌ன்.

"என்ன‌டா செய்ய‌ரீங்க‌?" ‍இது ரெங்க‌ன்.

நான்: "பார்த்தா தெரிய‌லை? போடா, போ!"

"டேய், டேய், நானும் ஆட்ட‌துக்கு வ‌ரேன்டா! என்னையும் சேத்துக்க‌ங்க‌டா"‍,ரெங்க‌ன் கெஞ்சுகிறான்.

நான் சொல்கிறேன்: "டேய், ரெங்கா! உன்னோட‌ பேச‌க்கூடா‌துன்னு அப்பா சொல்லிட்டார். ம‌ரியாத‌யா போயிடு. இல்லாட்டா அப்பா‌விட‌ம் சொல்லுவேன்".

ரெங்க‌‌னுக்குக் கோப‌ம் பொத்துக்கொண்டு வ‌ந்துவிட்ட‌து. நாங்க‌ள் க‌ட்டிய‌ ம‌ண‌ல்  வீட்டைக் காலால் உதைக்க‌ வ‌ந்தான். நான் ச‌ட்டென்று அவ‌னுடைய‌ தூக்கிய‌ காலைப் பிடித்துத் த‌ள்ளி விட்டேன். ச‌ற்றும் எதிர் பாராம‌ல் ந‌டு ரோட்டில் த‌லைகுப்புற‌ விழுந்தான். ம‌ய‌க்க‌மான‌துட‌ன் வ‌லிப்பும் வ‌ந்து விட்ட‌து.

'கிறீச்'சென்று ஒரு ச‌த்த‌ம். நிமிர்ந்து பார்த்தால் ராட்ச‌ச‌னைப்போல‌ சித‌ம்ப‌ர‌ம் பேருந்து 'ச‌ட‌ன் பிரேக்' போட்டு ரெங்க‌னின் த‌லைக்கு ம‌யிரிழையில் வ‌ந்து நின்று விட்ட‌து. ந‌ல்ல‌வேளையாக‌த் த‌லை மீது ஏற‌வில்லை.பேருந்து ஒட்டுன‌ர் த‌ன் இருக்கையை விட்டு எழுந்து கீழேகுதித்து என்னை பிடிக்க‌ வ‌ந்தார். நான் அவ‌ர் கையில் சிக்காம‌ல் த‌லை தெரிக்க‌  செள‌ராஷ்ட்ரா ந‌ந்‌த‌வ‌ன‌ம் வ‌ரை ஓடி  ஒளிந்து கொண்டேன். சாலையின் இர‌ண்டு ப‌க்க‌மும்
பேருந்துக‌ளும், குதிரை வ‌ண்டிக‌ளும் தேங்கி நின்று டிராஃபிக் ஜாம் ஆயிற்றாம்.நான் நீண்ட‌ நேர‌த்திற்குப் பிற‌கு எல்லாம் அட‌ங்கிய‌ பின்ன‌ர் வீடு திரும்பினேன்.ந‌ட‌ந்த‌ செய்தி அனைத்தையும் கேள்விப்ப‌ட்ட‌ அப்பா சொன்னார்:
"அப்ப‌ன் நாட்டுக்காக‌ ஜெயிலுக்குப் போனேன். ம‌க‌ன் கொலைப் ப‌ழி ஏற்று சிறை செல்லாம‌ல் அந்த‌க் க‌ட‌வுள்தான் காப்பாற்றினார்".

அப்புற்ம் என்ன‌ ஆச்சு ரெங்க‌‌னுக்கு?

1970ல் நாங்க‌ள் சேல‌த்தைவிட்டு வ‌ந்து விட்டோம்.நீண்ட‌ வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் கேள்விப்ப‌ட்ட‌து என்ன‌வென்றா‌ல் ரெங்‌க‌ன் சென்னையைப் பார்க்க‌ ஆசைப்ப‌ட்டு சென்னை வ‌ந்‌தானாம், மின்சார‌த் தொட‌ர் வ‌ண்டியில் அடிப‌ட்டு இற‌ந்துவிட்டானா‌ம்.அவ‌ன் ஆத்மா சாந்தி அடைய‌ப் பிரார்த்திக்கிறேன்!
---ஆக்கம்: KMRK (கே. முத்துராமகிருஷ்ணன்) தஞ்சாவூர்

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

17 comments:

  1. வணக்கம் ஐயா!

    திருவாளர் முத்துராமகிருஷ்ணன் சார்
    ஒரு வேண்டுகோள். தங்களுக்கு உள்ள ஞாபக சக்தியின் சிதம்பர ரகசியத்தை கொஞ்சோண்டு சொல்ல முடியுமா ஐயா
    என்னத்த தான் சொல்லுங்க உங்களுக்கு இணை நீங்கள் தான்.

    ReplyDelete
  2. "நாலுபேருக்கு ந‌ன்றி அந்த நாலு பேர்க்கு நன்றி....." யார் யாருக்கு? என்னையும் ஓர் பொருட்டாக எடுத்துக்கொண்டு என் ஆக்கங்களுக்கு ஊக்கம் அளித்து வரும் வாத்தியாருக்கு நன்றி. எனக்குக் கல்வி கேள்விகளில் பயிற்சி அளித்து (வஸிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்று பட்டம் வாங்குவது போல
    என்னை விட நல்ல அறிவுத்திறம் உள்ள வகுப்பறை மாணாக்கர்களிடம் கொஞ்சமேனும் பாராட்டுக் கிடைக்கும்படி செய்த)என் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் என் நன்றி.பேனைப் பெருமாள் ஆக்குவதைப்போல என்னிடம்
    அளவுக்கு மீறிய பாசம் வைத்து தாங்க‌ள் வாழ்ந்து காட்டி என்னை வள‌ர்த்து எடுத்த அல்லது வார்த்து எடுத்த மறைந்த என் பெற்றோர்களுக்கு என் நன்றி.
    இன்றும் என்னை இடித்து உரைத்துப் பக்குவப்படுத்தும் என் அன்பு இல்லாள்
    மற்றும் என் மூத்த அண்ணன் அவர்களுக்கும் என் ந‌ன்றி.


    பொறுமையுடன் என் ஆக்கத்தைப் படிக்க இருக்கும் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  3. நீண்ட பதிவு.............. நல்லா இருக்கு.........

    ReplyDelete
  4. இளமை நினைவுகள் இனிமையானதுதான். அது துயரமான செய்தியாக இருந்தால்கூட. பழசை அசை போட்டால் இதுபோன்ற அபூர்வ நிகழ்வுகள் மனக்கண் முன் தோன்றத்தான் செய்யும். அன்பர் முத்துராமகிருஷ்ணன் பல அவதாரங்கள் எடுத்தவர். பன்முகம் கொண்டவர். அதில் இவரது இளமைக் கால நிகழ்வுகள் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. எழுதுங்கள் கே.எம்.ஆர், மேலும் எழுதுங்கள். எழுத்தாற்றல் உள்ள உங்கள் எழுத்துக்களை எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் பாருங்கள். வாழ்த்துக்கள் அன்பரே!

    ReplyDelete
  5. உண்மைதான் கிருஷ்ணன் சார்....
    ஆண்டவன் தான் காப்பாற்றி இருக்கிறார்...அதுவும் உங்கள் தந்தையாரின் உயரியக் கொள்கைக்காக இருக்கவேண்டும் என நம்புகிறேன்...
    இது இறை செயல் என்றாலும், ஒருவித நடுக்கத்தைத் தரும் நினைவு... கட்டுரை நன்றாக இருக்கிறது ஆனால் எழுதும் போக்கில் ஓரளவே தானும் வாசககர்களை ஞாபகத்தில் கொண்டால் போதும் என்பது எனது தாழ்வான அபிப்ராயம். காரணம் நீங்கள் கூற வந்ததை வடிகட்ட வேண்டியதாகிவிடும். சீம்பாலை வடிகட்டினால் அதிகம் மிஞ்சாது. உண்மையும் சத்தியமும் பேசப்படும்போது நடுநிலை மாத்திரமே மெருகூட்டும். கவலை வேண்டாம் கல்லெறி வரட்டும். அற்புதப் படைப்பு.

    உண்மையில் அருமையான பகிர்வுதான் தொடர்ந்து தாருங்கள். பெரும்பாலும் தீபாவளி மும்மரம் வெளியூர் மாணவர்களும் ஊர் திரும்பி இருப்பார்கள் என நம்புகிறேன்.

    நன்றிகள் சார்.

    ReplyDelete
  6. அன்பார்ந்த சக மாணவர் முத்துராமகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம்.
    சுப்பையா வாத்தியாரின் வகுப்பறையின் மாணவர்களில் ஒருவரான நானும்
    ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதியில்தான் பிறந்தேன்,ஆண்டு 1948, என்பதில்
    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,அதாவது நம் இருவருக்கும் பிறந்த நாள் ஒன்றுதான்.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  7. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    திரு.முத்துராமகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கையில்
    நடைப் பெற்ற,அனுபவ ஆக்கத்தினை "வ‌ந்தேமாத‌ர‌ம்" தியாகி,ரங்கனின் கதையின் மூலமாக சிறப்பாக நல்ல எழுத்து நடையுடன் அளித்துள்ளார்.
    /////சித‌ம்ப‌ர‌ம் பேருந்து 'ச‌ட‌ன் பிரேக்' போட்டு ரெங்க‌னின் த‌லைக்கு ம‌யிரிழையில் வ‌ந்து நின்று விட்ட‌து. ந‌ல்ல‌வேளையாக‌த் த‌லை மீது ஏற‌வில்லை.///// இதனைப் படிப்பவர்களும் நேரில் பார்ப்பதுபோல் விறுவிறுப்பாக இருக்கிறது.
    அடுத்ததாக,/////// அப்பா சொன்னார்:
    "அப்ப‌ன் நாட்டுக்காக‌ ஜெயிலுக்குப் போனேன். ம‌க‌ன் கொலைப் ப‌ழி ஏற்று சிறை செல்லாம‌ல் அந்த‌க் க‌ட‌வுள்தான் காப்பாற்றினார்".///////
    மனதைத்தொட்ட வரிகள்.
    ஆக்கத்தினை அளித்த திரு.முத்துராமகிருஷ்ணன் அவர்களுக்கும்,படிக்கும் வாய்ப்பினை அளித்த ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் நன்றி!

    தங்களன்புள்ள மாணவன்,
    வ.தட்சணாமூர்த்தி
    2010-10-24

    ReplyDelete
  8. KMR சார்,
    வாழ்த்துக்கள். சரளமான நடை.
    உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு
    சல்யூட். நிறைய எழுதுங்கள்.
    காலம் உங்களிடம் நிறைய
    கதைகளை கொண்டு வந்து
    கொட்டியிருக்கும்.
    அள்ளிக் கொள்ள காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  9. /////முன்னரே ஒரு பதிவில் கூறிய படி நான் 1949 ஆகஸ்டு மாதம் 22ந் தேதி பிறந்தேன்.//////

    உங்களுடைய எழுத்து ஆர்வத்துக்குக் காரணம் மனோகாரகன் சந்திரன் ஆட்சி பெற்றதைக் கூறலாமா?
    பிறந்த நாளுடன் நேரத்தையும் குறிப்பிட்டிருந்தீர்களேயானால்
    ஜாதகம் கணிக்க வசதியாயிருந்திருக்கும்..

    எதுக்கு சம்பந்தமே இல்லாம பஸ் பத்தி ஒரு பாரா வருதேன்னு நினைச்சேன்..

    கடைசிலேதான் தெரிஞ்சுது அந்த பஸ்தான் வில்லனா ஆவாருன்னு..
    இன்னும் கடைசிலே படிச்சப்புறம்தான் தெரிஞ்சுது மெயின் வில்லன் எலெக்ட்ரிக் ட்ரெயின்தான்னு..

    எலெக்ட்ரிக் ட்ரெயின் எடுத்துக்க வேண்டிய பேரை உங்களுக்கு தராமல் இயற்கை காப்பாத்தியது நினைவு கூற வேண்டிய விஷயம்தான்..

    ரெங்கன் எப்படியும் வண்டியிலே அடிபட்டுச் சாகணுமுன்னு விதி போலே.. உங்களைக் காப்பாத்தணுமுன்னுதான் 1ஸ்ட் அட்டெம்ப்ட் லே அவரை காப்பாத்தி கணக்கை முடிச்சுருக்காரு சித்திரகுப்தன்..

    இதே போலே நான் வாங்க இருந்த பேரை தானா அடிபட்டு இறந்த ஒரு ஆள் கூட வாழ்க்கையில் வெவ்வேறு பரிமாணங்களைக் காண எனக்கு உதவியிருந்தாரோன்னு நினைக்கிறேன்..
    theory of relativity ...

    ReplyDelete
  10. வந்துள்ள பின்னூட்டங்களில் முக்கியமானது மதுமிதா அவர்களுடையது.அவர் எனக்கு அலுவலகத்தில் ஜுனியர். வயதிலும், பணி செய்த ஆண்டுகளில் மட்டுமே ஜுனியர்.அறிவிலும், இலக்கிய ஆர்வத்திலும் மிகவும் சீனியர்.பல வெகுஜனப் பத்திரிகைகளில் அவருடைய சிறு கதைகள் வெளிவந்துள்ளன.சுமார் 300 எண்ணிக்கை இருக்கும்.சில புத்தகங்களாகவும்
    உருவாக்கம் பெற்றுவிட்ட‌ன. அவர் என் எழுத்து நடையைப் பாராட்டியது
    உண்மையாகவே மனதில் ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது.அது எனக்கு ஏற்பட்ட‌ கர்வமோ என்று கூடத் தோன்றுகிறது.நன்றி மதுமிதா அவர்களே!

    ஆர்வம் உள்ளவர்களுக்கு மேலதிகத்தகவல்: மதுமிதாவின் வலைப்பூ முகவரி:http://madumithaa.blogspot.com
    கவனிக்கவும்:two"a" போடவேண்டும்.

    ReplyDelete
  11. நன்றி நண்பர் ஆலாசியம் அவர்களே!தங்கள் பாராட்டு நல்ல ஊக்க டானிக்.
    ஆனால் உங்களின் அறிவுறுத்தல்

    ( //கட்டுரை நன்றாக இருக்கிறது ஆனால் எழுதும் போக்கில் ஓரளவே தானும் வாசககர்களை ஞாபகத்தில் கொண்டால் போதும் என்பது எனது தாழ்வான அபிப்ராயம். காரணம் நீங்கள் கூற வந்ததை வடிகட்ட வேண்டியதாகிவிடும். சீம்பாலை வடிகட்டினால் அதிகம் மிஞ்சாது. உண்மையும் சத்தியமும் பேசப்படும்போது நடுநிலை மாத்திரமே மெருகூட்டும். கவலை வேண்டாம் கல்லெறி வரட்டும். அற்புதப் படைப்பு.//)

    என்ன என்பது என் பழைய மூளைக்குப் புரியவே இல்லை.நானும் இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்று யோசித்துவிட்டுப் பின்னர் உங்களையே கேட்டுவிடுவது என்று துணிந்து விட்டேன்.என் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் மேலான அபிப்பிராயத்தைத் தர வேண்டுகிறேன். kmrk1949@gmail.com

    ReplyDelete
  12. தங்களின் பாராட்டிற்கு நன்றி நெப்போலியன் அவர்களே!என்னமோ இந்தமுறை என்னை கலாய்க்கத் தோன்றவில்லை.இத்தனைக்கும் கட்டுரையின் முதல் பாராவிலையே உங்களுக்காக கொஞ்சம் "பொடி"வைத்து இருந்தேன். மேலும் ஹிரோஷிமா என்ற‌து எல்லாம் உங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்த்து சொல்லியதுதான். போகட்டும்.சென்ற பதிவில் ஏற்பட்ட அனுபவம் உங்களை
    SAFE MODE L

    போட்டுவிட்டது. அந்த விஷயம் வேறு.மடத்தின் INITIATED DISCIPLE என்பதால் நான் என் பரமேஷ்டி குரு நிந்தனை பெறுவதைப் படித்துக்கொண்டு வாளாயிருத்தல் கூடாது.அதனால் நான் செய்த DEFENCIVE ARGUMENTS என்னை ஒரு சீரியஸ் ஆன ஆளாகக் காட்டிவிட்டது. தயங்காமல் என்னை நீங்கள் கலாய்க்கலாம்.டெல்லிக்கார அம்மா உமாவுக்காக வைத்திருக்கும் ஸ்டாக்கில் கொஞ்சம் தஞ்சாவூருக்கு அனுப்பித்தரவும்.

    'மடத்தின் பெயரைக் கெடுக்காமல் விட்டகதை'யில் என் பிறந்த நேரமும் குறிப்பிட்டு உள்ளேன்.பிற‌ந்ததேதி 22 ஆகஸ்டு 1949;நேரம்:விடியற்காலை 5.05;ஊர்:சேலம் டவுன் (இந்தியா) ஆண் மகன்.
    ஜாதகம் கணித்துப் பார்த்து பதில் சொல்லவும்.இப்போ மாரக தசா நடக்கிறது.சூரிய தசா ராகு புக்தி.சூரியதசா சனிபுக்தி வரும் சமயம் THE END போட்டுவிட‌
    லாமோ?
    MY MAIL ID:
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  13. என் மீது அன்பு கூர்ந்து பின்னூட்டம் இட்ட திருவாளர்கள் கண்ணன்,
    கோபாலன்ஜி,யோகேஷ், த‌ட்சிணாமூர்த்தி,அர‌சு ஆகிய‌ பெரும‌க்க‌ளுக்கு என்
    நன்றி.


    அர‌‌சுவின் பிற‌ந்த‌தேதியும் என்பிற‌ந்த‌ தேதியும் ஒன்றுதான் என்ப‌து ந‌ல்ல‌
    coincidence.
    சென்ற‌‌ மாத‌ம் கோவையில் ஒரு திரும‌ண‌த்திற்குச் சென்று இருந்தேன்.முஹூர்த்தம் நாள் அன்று ஆவ‌ணிப்பூச‌ம். வ‌ந்திருந்த‌ உற‌வின‌ர்க‌ள் 4 பேர் ஆவ‌ணிப் பூச‌த்தில் பிற‌ந்த‌வ‌ர்க‌ள்.எல்லோரும் சேர்ந்துந‌ட்ச‌த்திர‌ பிறந்த‌ நாளைக்கொண்டாடினோம்

    ReplyDelete
  14. திருவாளர் கிருஷ்ணன் சார் அவர்களுக்கு வணக்கம்,

    //////கட்டுரை நன்றாக இருக்கிறது ஆனால் எழுதும் போக்கில் ஓரளவே தானும் வாசககர்களை ஞாபகத்தில் கொண்டால் போதும் என்பது எனது தாழ்வான அபிப்ராயம். காரணம் நீங்கள் கூற வந்ததை வடிகட்ட வேண்டியதாகிவிடும். சீம்பாலை வடிகட்டினால் அதிகம் மிஞ்சாது. உண்மையும் சத்தியமும் பேசப்படும்போது நடுநிலை மாத்திரமே மெருகூட்டும். கவலை வேண்டாம் கல்லெறி வரட்டும். அற்புதப் படைப்பு//////////

    தங்களின் படைப்புகள் நன்றாக வருகின்றன. அதே நேரம் எழுதும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டு மற்றவர்களின் அபிப்ராய பேதத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு எழுதுகிறீர்களோ என்ற எண்ணம் தோன்றியது ஒருவேளை நான் எண்ணியதும் கூட தவறாக இருக்கலாம். எழுதும் போது இவ்வாறு கவனம் சிதறினால் ஒரு முழுமையான மிகச் சிறந்த படைப்புக்கு அது முட்டுக் கட்டையாக இருக்கும் என்றும் தோன்றிற்று.
    நீங்கள் உண்மை நிகழ்வுகளை எழுதுகிறீர்கள், அதில் எந்தவித மிகைப் படுத்துதலும் இல்லை அதேநேரம் நடுநிலையோடும் இருக்கிறது அதாவது உங்களை சார்ந்த விசயங்களை, உள்ளது உள்ளது படி கூறுகிறீர்கள் அப்படிக் கூறும் போது அதுவே சிறப்பாக அமைந்துவிடும். பின்னூட்டங்களில் வருபவர்களின் கருத்து நிச்சயம் நம் கருத்தோடு சிறிதளவேனும் வேறுபடும் ஆகவே, அந்த சங்கடத்தை சரிசெய்ய நீங்கள் எழுத்துக் களுக்கு இடையில் எண்ணுகிறீர்களோ என்றுத் தோன்றுகிறது. யாரும் நம்மை குறை பட்டுக்கொள்ளக் கூடாது என்று நினைப்பது தப்பாகாது, அதற்காக ஏதோ ஒரு சிறு தயக்கம், சுய கெளரவம், சிறு யோசனையை தருகிறதோ என்றுத் தோன்றியது.... மொத்தத்தில் கொஞ்சம் தோலை தடிமனாக்கிக் கொள்ளத்தான் வேண்டும். பாரதி படாத அவமானமா!திரு வெ இராஜகோபாலன் சாரும் தொடர்ந்து எழுதுவதும் இந்த வகையில் தான் எனவும் கூறவேண்டும். மனித சமூகத்திற்கு உபயோகமாகும் விசயங்களைக் கூறும் போது அதற்கு மாறான பல சமூகம் சார்ந்தக் கருத்துக்கள் பரிபாலங்களுடன் குறுக்கிடத்தான் செய்யும். சமூகத்திற்கு சில விசயங்களை கூறும் போது நாம் நிர்வாணமாக வேண்டியதாகிறது. அது ஆரம்பத்தில் எதேச்சியமாக வராவிட்டாலும் போகும் போக்கில் வந்து விடும் என்பது எனது அபிப்ராயம். அப்படி ஆகும் போது அது தடம் மாறுவதாகத் தோன்றலாம்.... ஆனால் அது சரியானப் பாதையே அதைத்தான் தங்களது தந்தையார் போன்ற பெரியவர்கள் செய்திருக்கிறார்கள் என்பது உறுதியே. தாங்கள் அறியாதது இல்லை. விவேகானந்தரே கோ தானம் செய்ய அவைகளின் பசியைப் போக்க நிதிதிரட்ட முயன்றவர்களிடன் அதைவிட ஆறறிவுப் படைத்த மனிதன் பசியால் வாடுகிறான் என்று வாதிட்டார்களாம். அதைப் போல எந்த வட்டத்துக்குள்ளும் மாட்டாமல் மானுடத்திற்கு உபயோகமாக உங்களின் அனுபவத்தை கூற முனையும் போது.... அதுவும் உண்மையை கூறும்போது கல்லெறிகள் வரலாம் (அது கருத்து சுதந்திரம்.... ஏன்? நானே தங்களின் கருத்திற்கு வேறுபட்ட கருத்துக்களை இம்மன்றத்திலே வைத்து இருக்கிறேன்) வந்தாலும் அவைகள் தங்களின் கோபத்திற்கு நெய்வார்க்க வேண்டாம். பாவம் விவரம் தெரியாதவர்கள் என்று தங்களுக்குள் எண்ணிக்கொண்டு, போகும் வேகத்தைக் குறைக்காமல் செல்லவேண்டும் என்பதே எனது வேண்டுகோளாக இருந்தது.... மற்றபடி இதை மேலோட்டமாக எடுத்துக் கொள்ளுங்கள் எனது இந்தக் கருத்து தங்களை சங்கடப் படுத்துவதாக இருந்தால் மன்னித்து மறந்து விடுங்கள்.
    நான் கூறிய நடுவு நிலைமை என்பது ( கதைக்கு தொடர்பு இல்லாத எனது பொதுவானக் கருத்தைத் தான் கூறினேன் கதையோடு சம்பந்தப் படுத்த வேண்டாம்) எங்கும் நிறைந்த பர பிரம்மப் படைப்பில் வேற்றுமையில்லை உயர்வு தாழ்வு இல்லை எல்லாமே அழகு தான் அப்படி வேறுபாடு காண்பது அவனதுப் படைப்பை கேலிசெய்வதாகும். எல்லாவற்றும் அவனுக்குத் தெரியாமல் நடக்க வில்லை. அதோடு எல்லாவற்றிற்கும் அவனே காரணம் இது போன்ற ஒரு சிந்தனைக் கூறும் நடுவுநிலைமையை நான் கூறினேன். (அந்த நடுவு நிலைமை அது உங்கள் சிந்தனையில் செய்கையில் இருக்கிறது என்பதையும் நான் நன்கு அறிவேன்.) பர பிரம்மம், அடுத்து உலக உயிர்கள் என்ற அடுத்த நிலை. நாம் சாதாரண மனிதனை விட கொஞ்சம் மேலானப் மானுடப் பார்வை பெற்றவர்கள் என்ற கற்பனையான சிந்தனை, இவைகள் தாம். பரமாத்மா, ஜீவாத்மா வேறு பேதம் இல்லை என்ற ஒரு நடுவு அவ்வளவே! தங்களுக்கு தெரியாத எதையும் நாம் கூறவில்லை. தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். அறிவுரையெல்லாம் கூறவில்லை அந்த அளவுக்கு தங்களை போல் வர இன்னும் நாட்கள் இருக்கிறது. தாங்களும் பின்னூட்டத்திற்கு விளக்கம் கேட்டமையால் கூறுகிறேன் அவ்வளவே!. மீண்டு கூறுகிறேன் மிகச் சாதரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

    நன்றி வணக்கம்.

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  15. உங்களின் அனுபவப்பகிர்வு நன்றாக இருந்தது.

    //அப்பாவுக்கு யார் 6ந்தேதி, யார் 22ந்தேதி என்ற குழப்பம் வந்து எனக்கும்//

    இந்த முன்னாடி generation அப்பாக்கள் நிறைய பேருக்கு இந்த problem இருந்ததுன்னு நினைக்கிறேன். பையன்/பெண் என்ன படிக்கிறான்னு தெரியாம, யாரவது கேட்டா, அவங்களைக் கூப்பிட்டு கேட்டோ / இல்ல நைசா சமையலறையில் போய்க் கேட்டோ சொல்லரவங்களை நானும் பார்த்திருக்கிறேன்.

    மற்றபடி ரங்கன் ரொம்ப பரிதாபகரமான கேரக்டர்.

    ReplyDelete
  16. பிரசுரமானதை வைத்து நான் உங்களை விட சீனியர் ஆகி விடமுடியாது KMR
    சார். உங்களின் பெருந்தன்மைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  17. குண்டு விழுந்த நாட்டுக்காரர் என்றும், கடல் கடந்து இருப்பவர் சொல்வது டெலிபதியிலே கேக்குதுன்னும் படிச்சப்போவே புரிந்தது..என்னைபத்தி சொல்றீங்க ன்னு..

    ஆனால் கோபர்களின் தலைவன் என்று யாரை சொன்னீர்கள் என்றுதான் சுத்தமாகப் புரியவில்லை..மாமூ என்று நான் அழைக்கும் ஒரே நபரிடமும் கேட்டுவிட்டேன்..நேற்றே..

    அவருக்கும் புரியவில்லை..எப்படியிருந்தாலும் ஓகே..சும்மா லேசா எடுத்துகிட்டு அத வுட்டுட்டு ஜெனரல் டொபிக் லே கமென்ட் அடிச்சுட்டுப் போயிட்டேன்..

    மத்தபடி உங்களுக்கெல்லாம் ஜாதகம் பார்த்து பலன் சொல்ற வயசு எனக்குஇல்லே..
    அதிலும் நீங்க சொன்ன ' the end ' பத்தி..சொல்லணும் என்றால் இங்கே சமீபத்தில் ரெண்டு மாதங்களாக true man show படத்தில் வருவதைப் போலே நான் வேலைக்குச் செல்லும் போதும் வரும்போதும் ஒரு ஆள் வேகமாக வாக்கிங் போவார்..அவரைக்கடந்து செல்லும்போது ஒரு courtesy கென்று goodmorning , good evening என்று சொல்லுவேன்.ஒரு நாள் அவரை விசாரித்தபோதுதான் எனக்குத்தெரிந்தது..தினமும் 7 கிலோமீட்டர் தூரம் நடக்கிறார் என்று..அதுவும் ஒரு மணி நேரத்தில்..தினமும்..
    அவருக்கு வயது 70 என்று தெரிந்தபோது ஷாக் ஆகிட்டேன்..இங்கே இதுபோன்ற விஷயங்கள் சர்வசாதாரணம்..
    உங்கள் மனதை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு வயதாகவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது..
    இன்னும் ஒரு half century அடிச்சு ரெகார்ட் பிரேக் பண்ணுங்களேன்..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com