என்ன பாவம் செய்தேனோ?
பாடல் வரிகளைக் கேளுங்கள். அருமையான பாடல். அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அவர்கள் எழுதியது. உங்கள் வசதிக்காக பாடல் வரிகளையும் கொடுத்துள்ளேன். மேலும் பாடலின் ஒலி வடிவத்தையும் கொடுத்துள்ளேன்.
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------
“நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ!
கலங்கி யொளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்ப மழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகை கொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ்செய் வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென் றறியேனே!
(மநு முறை கண்ட வாசகம்)
- வள்ளலார்
Vallalar Song - Enna Paavam Seitheno - Mazhaiyur Sadasivam
=====================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
வணக்கம் குருவே!
ReplyDeleteமனிதன் செய்யக் கூடாத பாபங்களை
தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது வள்ளளாரின் பாடல் வரிகள்! அப்ப்ப்பா!
பொய் பேசுதல், புலால் உண்ணல் ஈராக வகைப்படுத்தியிருக்கும் அத்தனையும் இந்நாளில் லஜ்ஜையின்றி
அரங்கேறிக் கொண்டுதானிருக்கும் கொடிய காலமிது! இவற்றை பாபமாக நினைத்தால்தானே? செய்பவர் பலரை
கண் முன்னே நாம் கண்டாலும் தட்டிக்
கேட்க இயலாது புலம்பும் நிலை!?
அசுரர்கள் ஆட்சியில் இப்படித்தான்
இருந்திருக்குமோ?!
வள்ளலார் இராமலிங்க அடிகளார் மனத்தால் நினைத்த மாத்திரத்தில் அவற்றின் கொடுமையை எண்ணி
வருந்துகிறார்!
அருமையான பதிவு!
வணக்கம் ஐயா,பாவங்களை தவிர்த்து,அடுத்த பிறவிக்காவது புண்ணியங்களை சேர்க்க வள்ளலார் வார்த்தைகள் வழிகாட்டட்டும்.நன்றி.
ReplyDelete/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
மனிதன் செய்யக் கூடாத பாபங்களை
தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது வள்ளளாரின் பாடல் வரிகள்! அப்ப்ப்பா!
பொய் பேசுதல், புலால் உண்ணல் ஈராக வகைப்படுத்தியிருக்கும் அத்தனையும் இந்நாளில் லஜ்ஜையின்றி
அரங்கேறிக் கொண்டுதானிருக்கும் கொடிய காலமிது! இவற்றை பாபமாக நினைத்தால்தானே? செய்பவர் பலரை
கண் முன்னே நாம் கண்டாலும் தட்டிக்
கேட்க இயலாது புலம்பும் நிலை!?
அசுரர்கள் ஆட்சியில் இப்படித்தான்
இருந்திருக்குமோ?!
வள்ளலார் இராமலிங்க அடிகளார் மனத்தால் நினைத்த மாத்திரத்தில் அவற்றின் கொடுமையை எண்ணி
வருந்துகிறார்!
அருமையான பதிவு!//////
நல்லது. உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி ஆதித்தன்!!!!!
//////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,பாவங்களை தவிர்த்து,அடுத்த பிறவிக்காவது புண்ணியங்களை சேர்க்க வள்ளலார் வார்த்தைகள் வழிகாட்டட்டும்.நன்றி./////
அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்போமோ? யாருக்குத் தெரியும்? அதனால் இந்தப் பிறவியிலேயே அப்பாவங்களைத் தவிர்ப்போம்!!!!
வாழ்க வளமுடன்!
ReplyDelete