மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.12.15

வள்ளுவரின் சாபம்!

திருவள்ளுவர்
வள்ளுவரின் சாபம்!

மன்றம் கூடியது

சில நிமிடங்களில் ஊர் மன்றம் கூடி விட்டது! ஏன்?

வள்ளுவர் வந்திருக்கிறாராம்!

வள்ளுவர் வந்திருக்கிறாராம்!

செய்தி அதிக வேகத்தில் பரவவே, பறக்கவே அனைவரும் ஊர் மன்றமான ஆலமரத்தடியில் கூடி விட்டனர். ஆலமரத்தைச் சுற்றியுள்ள மேடையில் அமர்ந்திருப்பவர் நிஜமாகவே வள்ளுவர் தான்!

அவரை வணங்கினர்; தொழுதனர்; கை கட்டி, வாய் மூடி உற்றுப் பார்த்து தங்களின் தரிசன பாக்கியத்தை நினைத்து மகிழ்ந்தனர்.

இன்று முழித்த வேளை நல்ல வேளை!

மெதுவாக ஊர்ப் பெரியவர் ஒருவர் எழுந்தார். ‘பெரிசு’ ஏதாவது பொருள் பொதிந்த ஒன்றைத் தான் கேட்கும்! அனைவரும் ‘பெரிசையும்’ அதற்கு வள்ளுவர் என்ன சொல்லப் போகிறார் என்பதையும் ஆவலுடன் எதிர் நோக்கினர்.

அப்போது கூட்டமாகக் கூடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்து பிச்சை எடுக்கும் வறியவன் ஒருவனும் ஓரமாக வந்து நின்றான்.

பத்துக் கேள்விகள்

பெரியவர் கேட்டார்: “வள்ளுவரே! வணக்கம். உங்கள் அருளை நாடி நிற்கிறோம். அருள் அல்லாதது யாது?

வள்ளுவர் அவரைக் கனிவுடன் நோக்கினார். பின்னர் கூறினார்:-
1
“அருள் அல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்             (குறள் 254)

ஒரு கேள்வி; அதற்கு அற்புதமாக இரண்டு விஷயங்களைப் பதிலாகப் பெற முடிந்தது. ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பதே அருள்; அந்த மாமிசத்தை வாங்கித் தின்னுவதே பொருள் அற்றது.

ஊர் மக்கள் சைவ உணவை மட்டும் உண்ணத் தீர்மானித்து விட்டனர்.

ஒரு கேள்வி கேட்டு பதிலும் வந்ததால் அடுத்தவர் மெல்ல எழுந்தார்.

“வாய்மை எனப்படுவது யாது?”

2
“வாய்மை எனப்பதுவது யாதெனின் …..யாதெனின்?!
“யாதொன்றும் தீமை இலாத சொலல்”   (குறள் 291)

ஆஹா! எளிமையான சுருக்கமான சூத்திரமாக இருக்கிறதே! பிற உயிருக்குத் தீமை பயக்காத சொற்களைச் சொல்லுவதே வாய்மை!

மூன்றாமவர் எழுந்தார்:-“ அறவினை யாது?”

3

“அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்”            (குறள் 321)

தான் முதலில் சொன்னதை மீண்டும் வலியுறுத்தி வள்ளுவர் கூறியதை அனைவரும் பக்தியுடன் மனதில் குறித்துக் கொண்டனர். பிற உயிரைக் கொல்லாமல் இருப்பதே அறவினை. அப்படிக் கொல்வோருக்கு அறமற்ற பிற தீவினைகள் சேரும்.

கூட்டத்தில் அஹிம்சையைப் பின்பற்றுபவருக்கு ஒரே சந்தோஷம். மனதிற்குள் உருகினார்.

இன்னொருவர் கேட்டார்:- “நல் ஆறு யாது?”

நல்ல வழி எது என்றா கேட்கிறீர்கள்?

வள்ளுவர் கூறினார்:-

4
“ நல் ஆறு எனப்படுவது யாதெனின்  யாதொன்றும் 
கொல்லாமை சூழும் நெறி”    (குறள் 324)

அட, அதே கருத்து! திருப்பித் திருப்பி வலியுறுத்துகிறாரே! சொல் சிக்கனம் உடைய வள்ளுவர் ஆழ்ந்த கருத்தை வலியுறுத்தி, எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே நல் ஆறு என்கிறாரே!

கையிலுள்ள பணம் சுருங்கக் கூடாது; குறையக் கூடாது என்ற கவலையில் இருந்தவர் கேட்டார்:-
செல்வத்திற்கு அஃகாமை யாது?

வள்ளுவர் சிரித்தார்:-
5
“அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் 
வெஃகாமை வேண்டும் பிறன் கைப் பொருள்”   (குறள் 178)

பிறர் கைப்பொருளைக் கவரக் கூடாது என்று இருத்தலே தன் கைப்பொருள் சுருங்காமல் இருக்கும் வழி!

மோசமான அரசியல்வாதிகள் எல்லாம் அங்கு தலையைக் குனிந்து கொண்டனர்.

நண்பர்கள் இருவர் எழுந்தனர்: ஒருவர் கேட்டார்:-
“நட்பிற்குச் சிறந்த நிலை யாது?”

பதில் உடனே வந்தது:
6
“நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் 
கொட்பின்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை”   (குற:ள் 789)

நட்பிற்கு வீற்றிருக்கை – சிறந்த நிலை – மாறுபாடின்றி முடிந்த போதெல்லாம் உதவி செய்து தாங்கிக் கொண்டிருப்பதே ஆகும்.

அடுத்த நண்பர் பளிச்சென்று உடனே கேட்டார்:-
“ பழைமை எனப்படுவது யாது?”
7
“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”    (குறள் 801)

பழகிய நட்பு, அதாவது பழைமை எனப்படுவது யாதெனில் பழகிய நண்பர் உரிமையாய் செய்யும் எந்தச் செயலையும் அவமதிக்காது ஏற்றுக் கொள்வதேயாகும்.

நண்பர்கள் இருவரும் மகிழ்ந்தனர்.

அடுத்தவர் எழுந்தார்: “பேதைமை என்பது யாது?”

“பேதைமை அதாவது அறியாமை யாது என்று தானே கேட்கிறீர்கள்?

8
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்    (குறள் 831)

அறியாமை என்று சொல்லப்படுவது யாதென்றால், தனக்குக் கேடு விளைவிப்பனவற்றைக் கைக்கொண்டு நன்மை தருபனவற்றைக் கை நழுவி விடச் செய்வதாகும்!

இன்னொருவர் எழுந்தார்:-
“ வெண்மை எனப்படுவது யாது?”

9
“வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம் யாம் என்னும் செருக்கு” (குறள் 844)

வெண்மை அதாவது புல்லறிவு – கீழான அறிவு எதுவெனில் யாம் நிறைந்த அறிவு உடையோம் என்று தம்மைத் தாமே மதித்துக் கொண்டிருக்கும் செருக்கு-  அகம்பாவம் - தான்!

கூட்டத்தினர் அகம் மிக மகிழ்ந்தனர். எத்தனை ‘யாதெனின்?’ கேள்விகள். அத்தனைக்கும் உடனுக்குடன் பதில்!

வள்ளுவர் எட்டிப் பார்த்தார். ஓரத்தில் இருந்த பிச்சைக்காரன் முண்டியடித்துக் கொண்டு முன்னே வந்தான்.

வள்ளுவர் அவனுக்கு வழி விடுமாறு சைகை காட்டவே அனைவரும் ஒதுங்கினர்.

அவன் முன்னே வந்தான்.

“ஐயா! வணக்கம். இன்மையின் இன்னாதது யாது?”

தான் எடுக்கும் இந்த பிச்சையை விடக் கொடியது ஏதாவது இருக்கிறதா?

மனம் கலங்கி இருக்கும் அவனைப் பார்த்த வள்ளுவர் எழுந்தார். அனைவரும் எழுந்தனர்.

இன்மையின் இன்னாதது யாதெனின்..

அனைவரும் வள்ளுவரையே கவனித்தனர்.

இன்மையின் இன்னாதது யாதெனின்..யாதெனின்..

வள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி என்று கூட ஒன்று உண்டா, என்ன?

யாதெனின்;

என்ன, வள்ளுவர் தடுமாறுகிறார். உடனுக்குடன் பதில் அளித்த வள்ளுவரா, யோசிக்கிறார், தடுமாறுகிறார், பதிலுக்காகத் தவிக்கிறார்.

கூட்டம் வியந்தது; பிரமித்தது.

தன் நிலையை அடைந்த வள்ளுவர் கூறினார்:-

10
“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது”    (குறள் 1041)

வறுமையை விடக் கொடியது என்னவென்றால்,..   என்னவென்றால் .. வறுமையைப் போலக் கொடியது வறுமையே தான்!

வள்ளுவரும் கலங்கி நின்றதைப் பார்த்த மன்றமே கலங்கியது.

பிச்சைக்காரன் கண்ணைத் துடைத்துக் கொண்டான்.

வள்ளுவரின் சாபம்

வள்ளுவர் சற்று உரத்த குரலில் கூறினார்:-

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் 
பரந்து கெடுக உலகியற்றியான்” (குறள் 1062)

பிச்சை எடுத்தும் உயிர் வாழுமாறு சிலரைப் படைத்திருந்தால் அந்த உலகை இயற்றியவன் அதே போல பிச்சை எடுத்து அலைந்து திரியட்டும்!

பிச்சைக்காரனின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டார் வள்ளுவர். அனைவரும் அவர் மேலே நடக்க வழியை விட்டனர்.

வள்ளுவரின் சாபத்தைக் கேட்ட இறைவன் சிரித்தான். ‘அடடா, என்ன கருணை நெஞ்சம், தெய்வப் புலவருக்கு!’

அருகிலிருந்த அன்னையைப் பார்த்துக் கண் சிமிட்டினான். மதுரையில் பொற்றாமரை ஏறிய ‘பொய்யில் புலவன்’ சாபம் கொடுத்து விட்டான், தேவியே! அதை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டாமா?”

தேவியும் சிரித்தாள்.

“வைகை தான் பெருக்கோடுகிறது. வந்தியோ அழைக்கிறாள். பிட்டுக்காவது மண் சுமந்து உங்கள் திருவிளையாடலைத் தொடங்குங்களேன்!”

பத்தே பத்து -  ‘யாதெனின்’ குறள்கள்!

பத்து, நூறு, ஆயிரம் அறிஞர்களும் நூல்களும் சேர்ந்தாலும் விளக்க முடியாத அரிய கருத்துக்கள்,

இல்லையா?

குறள் வாழ்க! தமிழ் வாழ்க!! குறள் நெறி வாழ்வோர் எவரானாலும் எங்கிருந்தாலும் வாழ்க!

Source:
நமக்கு அறியத்தந்தது நமது வகுப்பறை மாணவர் பொன்னுசாமி
அவருக்குக் கிடைத்தது: https://groups.google.com/forum/#!forum/agathiyam
-----------------------------------------------------
என்ன படித்து மகிழ்ந்தீர்களா?
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

  1. முதலையும் கடைசியாய் உள்ளதையும் வைத்து
    முன்னோட்டம் வரைகிறோம்

    உயிர் உள்ளவை அலாது உயிர் ஊட்ட பெற்றவை சைவம்
    உயிர் இல்லாதவை அசைவம்..

    உயிர் இல்லாதவைகள் பிணம் தானே..
    உண்மையில் பிணத்தை யாரவது தின்பார்களா?

    இதை தான் வள்ளுவம் நாகரீக வார்த்தையில்
    இப்படி சொல்கிறது..

    இறைவன் பிட்சண்டார் கோலத்தில்
    இருப்பதை வருவதை பார்த்ததில்லையா

    உயிர்கள் செய்யும் வினைகள பிச்சை எடுத்து
    உயிர்களுக்கு வினைபயன் ஊட்டுகிறான்.

    வள்ளுவத்தில் சோதிட எண் கணித சாஸ்திரம் பற்றி முன்பு
    வரைந்த சொல் உரையை நினைவு படுத்தியது இப்பதிவு

    சைவர்களின் வேதம் திருக்குறளே.. ஆனால்
    பலர் இந்த வேதத்தை படிப்பதே இல்லை

    பரீட்சைக்கு கூட திருக்குறளுக்கு
    படித்து எழுதினால் கூட 2 மதிப்பெண் தான்

    நல்லவைகளுக்கு தேர்வில் கூட யாரும் அதிகமாக
    நிறைய மதிப்பெண் தருவதில்லை அதனால்

    பலர் அவ்வழியில் நிற்க தவறுகின்றனர்
    பாவம் விழி மூடிய வழி போக்கர்கள்..

    இப்படி தான் வழிகாட்டவேண்டும்
    இதனை எடுத்து தந்த பொன்னுசாமி அண்ணா விற்கும்

    அதனை எங்களுக்கு
    அறிய தந்தமைக்கும் நன்றிகள்.. நன்றிகள்..
    (நன்றி மறப்பது நன்று அன்று அல்லவா)

    ReplyDelete
  2. உண்மை தான் ஐயா,
    நமது தமிழ், சமய கதைகள் சொல்லும், சொல்ல வரும் நீதிகள் தான் எத்தனை!
    எந்த ஒரு நிலைக்கும் ஒன்றென்ன, ஓராயிரம் கதைகள் உண்டு.
    பிச்சை எடுப்பது கீழ் என்று நினைக்கிறாயா, தானே பிச்சை எடுத்து நீ
    கீழானவன் இல்லை என்று காட்டும் இறைவன் இருக்க, உள்ளதையும் உதறித்தள்ளி,
    சந்நியாசம் போகும் சித்தர்களும் இருக்க, யாருக்கு என்ன கீழான எண்ணம்?

    ReplyDelete
  3. உண்மை யாதெனின் உலக பொதுமறை திருக்குறள். இறைவன் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். வள்ளுவர், புத்தர், வள்ளளார், விவேகாணந்தர் இவர்களின் வாக்கு இறை நம்பிக்கையை விட உயர்ந்தது.

    ReplyDelete
  4. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    ”விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றண்டு” என்பதைப் போன்று, இதைப் படித்தபோது ஏற்ப்பட்ட உணர்வு,தெய்வக் கலைஞன்,குயவன் கையில் கிடைத்த களிமண்ணை போன்ற-இந்த ஆக்கம் ஒரு அழகிய வடிவில் வகுப்பறையில் மட்டுமே உருவாக முடியும் என்பதே!அங்ஙனம் உருவாக்கி பலரும் அறியத் தந்த ஆசானுக்கு நன்றிகள்!!!
    அன்புடன்,
    - பொன்னுசாமி.

    ReplyDelete
  5. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    தெய்வத்தாய் அவ்வையாரும் குறிப்பிட்டுள்ளாரே- “கொடிது கொடிது வறுமை கொடிது!அதனினும் கொடிது இளமையில் வறுமை” - எத்துணை பொருள் பொதிந்த வரிகள்!!
    தெய்வப் புலவர் அய்யன் திருவள்ளுவர் சாபமிட்டதில் தவறுமுண்டோ?
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  6. திருகுறளை விடச் சிறந்தது யாது?

    திருக்குறளை விட‌ச் சிறந்தது யாதெனின்
    திருக்குறளேதான்.

    ReplyDelete
  7. குரு வணக்கம்.
    வள்ளுவப் பெருந்தகையின் சாபம் முடிய
    அனைத்துமே மெய்்சிலிர்கக வைத்தது.
    இவற்றைத் தந்த வகுப்பறை மாணவர் பொன்னுசாமி மற்றும் அதைப் பகிர்ந்த தாங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வந்தனங்கள்.

    ReplyDelete
  8. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    திரு.வேப்பிலை அய்யா அவர்களின் பாராட்டுதல்களை பணிவுடன் ஏற்று, தலை வணங்கி நன்றிகள் - அனைத்தும் வாத்தியார் அய்யா அவர்களுக்கே சமர்ப்பணம்!!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  9. /////Blogger வேப்பிலை said...
    முதலையும் கடைசியாய் உள்ளதையும் வைத்து
    முன்னோட்டம் வரைகிறோம்
    உயிர் உள்ளவை அலாது உயிர் ஊட்ட பெற்றவை சைவம்
    உயிர் இல்லாதவை அசைவம்..
    உயிர் இல்லாதவைகள் பிணம் தானே..
    உண்மையில் பிணத்தை யாரவது தின்பார்களா?
    இதை தான் வள்ளுவம் நாகரீக வார்த்தையில்
    இப்படி சொல்கிறது..
    இறைவன் பிட்சண்டார் கோலத்தில்
    இருப்பதை வருவதை பார்த்ததில்லையா
    உயிர்கள் செய்யும் வினைகள பிச்சை எடுத்து
    உயிர்களுக்கு வினைபயன் ஊட்டுகிறான்.
    வள்ளுவத்தில் சோதிட எண் கணித சாஸ்திரம் பற்றி முன்பு
    வரைந்த சொல் உரையை நினைவு படுத்தியது இப்பதிவு
    சைவர்களின் வேதம் திருக்குறளே.. ஆனால்
    பலர் இந்த வேதத்தை படிப்பதே இல்லை
    பரீட்சைக்கு கூட திருக்குறளுக்கு
    படித்து எழுதினால் கூட 2 மதிப்பெண் தான்
    நல்லவைகளுக்கு தேர்வில் கூட யாரும் அதிகமாக
    நிறைய மதிப்பெண் தருவதில்லை அதனால்
    பலர் அவ்வழியில் நிற்க தவறுகின்றனர்
    பாவம் விழி மூடிய வழி போக்கர்கள்..
    இப்படி தான் வழிகாட்டவேண்டும்
    இதனை எடுத்து தந்த பொன்னுசாமி அண்ணா விற்கும்
    அதனை எங்களுக்கு
    அறிய தந்தமைக்கும் நன்றிகள்.. நன்றிகள்..
    (நன்றி மறப்பது நன்று அன்று அல்லவா)/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  10. /////Blogger Mrs Anpalagan N said...
    உண்மை தான் ஐயா,
    நமது தமிழ், சமய கதைகள் சொல்லும், சொல்ல வரும் நீதிகள் தான் எத்தனை!
    எந்த ஒரு நிலைக்கும் ஒன்றென்ன, ஓராயிரம் கதைகள் உண்டு.
    பிச்சை எடுப்பது கீழ் என்று நினைக்கிறாயா, தானே பிச்சை எடுத்து நீ
    கீழானவன் இல்லை என்று காட்டும் இறைவன் இருக்க, உள்ளதையும் உதறித்தள்ளி,
    சந்நியாசம் போகும் சித்தர்களும் இருக்க, யாருக்கு என்ன கீழான எண்ணம்?//////

    வேண்டுதல் வேண்டாமை (Likes and dislikes) இல்லாதவரால் படைக்கப்பெற்றவர்கள் அல்லவா நாமெல்லாம். அதனால் நமது சிந்தனைகள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கும். நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. ////Blogger SELVARAJ said...
    உண்மை யாதெனின் உலக பொதுமறை திருக்குறள். இறைவன் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். வள்ளுவர், புத்தர், வள்ளளார், விவேகானந்தர் இவர்களின் வாக்கு இறை நம்பிக்கையை விட உயர்ந்தது.////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி செல்வராஜ்!

    ReplyDelete
  12. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    ”விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றண்டு” என்பதைப் போன்று, இதைப் படித்தபோது ஏற்ப்பட்ட உணர்வு,தெய்வக் கலைஞன்,குயவன் கையில் கிடைத்த களிமண்ணை போன்ற-இந்த ஆக்கம் ஒரு அழகிய வடிவில் வகுப்பறையில் மட்டுமே உருவாக முடியும் என்பதே!அங்ஙனம் உருவாக்கி பலரும் அறியத் தந்த ஆசானுக்கு நன்றிகள்!!!
    அன்புடன்,
    - பொன்னுசாமி.///////

    களிமண்ணைப் போன்ற ஆக்கம் அல்ல அது. உலகின் அற்புதமான சிற்பி செதுக்கிய 1330 சிலைகளில் இந்தப் பத்தும் அடங்கும். பார்ப்பதற்கு வசதியாக அந்தப் பத்தை வரிசைப் படுத்திக் கொடுத்தது மற்றுமே என்னுடைய பணியாகும்!

    ReplyDelete
  13. ////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    தெய்வத்தாய் அவ்வையாரும் குறிப்பிட்டுள்ளாரே- “கொடிது கொடிது வறுமை கொடிது!அதனினும் கொடிது இளமையில் வறுமை” - எத்துணை பொருள் பொதிந்த வரிகள்!!
    தெய்வப் புலவர் அய்யன் திருவள்ளுவர் சாபமிட்டதில் தவறுமுண்டோ?
    அன்புடன்,
    -பொன்னுசாமி.//////

    சிவபெருமானே தவறில்லை என்று சொல்லிவிட்டு பிட்டுக்கு மண் சுமக்கப் போய்விட்டாரே அண்ணா! அது போதாதா?

    ReplyDelete
  14. //////Blogger kmr.krishnan said...
    திருகுறளை விடச் சிறந்தது யாது?
    திருக்குறளை விட‌ச் சிறந்தது யாதெனின்
    திருக்குறளேதான்./////

    நிதர்சனமான உண்மை. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. ////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா/////

    வணக்கம் சிவகுமார்!

    ReplyDelete
  16. /////Blogger வரதராஜன் said...
    குரு வணக்கம்.
    வள்ளுவப் பெருந்தகையின் சாபம் முடிய அனைத்துமே மெய்சிலிர்கக வைத்தது.
    இவற்றைத் தந்த வகுப்பறை மாணவர் பொன்னுசாமி மற்றும் அதைப் பகிர்ந்த தாங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வந்தனங்கள்./////

    அவற்றைப் படித்துவிட்டுப் பின்னூட்டமிட்ட உங்களுக்கும் எங்களது வந்தனங்கள் வரதராஜன்!

    ReplyDelete
  17. //////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    திரு.வேப்பிலை அய்யா அவர்களின் பாராட்டுதல்களை பணிவுடன் ஏற்று, தலை வணங்கி நன்றிகள் - அனைத்தும் வாத்தியார் அய்யா அவர்களுக்கே சமர்ப்பணம்!!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி.////

    வாத்தியாருக்கு சம்ர்ப்பித்தது உங்களுடைய அன்பைக் காட்டுகிறது. நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  18. ஐயா,
    பொன்னுசாமி ஐயாவின் பதிலில் தான் அது copy, paste article இல்லை,
    உங்கள் கைவண்ணத்தால் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதும் என்று.
    வள்ளுவரின் சாபத்தை ஆண்டவன் காதில் வாங்கிக் கொண்டு நிறைவேற்றிக்காட்டி விட்டார்
    என்று முறையாக முடித்துள்ளீர்கள்.
    எல்லாம் அவன் அருள். அவனருளாலே (அதற்கும் அவனருள் வேண்டும்!)
    அவன் தாள் வணங்கி...

    இம்முறையும் 'facts of life' அசத்துகிறது ஐயா.

    இதையே பின்பற்றி வந்தால் இறைவனின் மேன்மையை உணரலாம்.

    ReplyDelete
  19. //////Blogger Mrs Anpalagan N said...
    ஐயா,
    பொன்னுசாமி ஐயாவின் பதிலில் தான் அது copy, paste article இல்லை,
    உங்கள் கைவண்ணத்தால் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதும் என்று.
    வள்ளுவரின் சாபத்தை ஆண்டவன் காதில் வாங்கிக் கொண்டு நிறைவேற்றிக்காட்டி விட்டார்
    என்று முறையாக முடித்துள்ளீர்கள்.
    எல்லாம் அவன் அருள். அவனருளாலே (அதற்கும் அவனருள் வேண்டும்!)
    அவன் தாள் வணங்கி...
    இம்முறையும் 'facts of life' அசத்துகிறது ஐயா.
    இதையே பின்பற்றி வந்தால் இறைவனின் மேன்மையை உணரலாம்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com