கவிதை: தத்துவப் பாட்டில் பக்தி, காதல் பாட்டில் தத்துவம் என்று
கலக்கியவர் அவர்!
கவியரசர் கண்ணதாசன்
தத்துவப் பாடல்கள்
தத்துவம் என்பது உலக நெறிகளையும், மனித வாழ்க்கை நெறிகளையும் பொருள்படச் சொல்வதாகும்
பக்திப் பாடல்களையும், காதல் பாடல்களையும் எப்படிச் சுவைபட எழுதினாரோ, அதற்குச் சற்றும் குறைவில்லாத வடிவில் பல தத்துவப் பாடல்களையும் கவியரசர் கண்னாதாசன் அற்புதமாக எழுதியுள்ளார்.
உறவு, பிரிவு, வறுமை, செழுமை, சிறுமை, பெருமை, இன்பம்,
துன்பம், பிறவி, மரணம் என்று மனித வாழ்க்கையின் ஒவ்வொரு
நிலைக்கும் பல பாடல்களை எழுதியுள்ளார் அவர்!
"நம்பினோர் கெடுவதில்லை நான்குமறைத் தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையற்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!"
என்று தத்துவப் பாட்டில் பக்தியையும்,
"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி!"
என்று காதல் பாட்டில் தத்துவதையும் கலக்கலாகக் கலக்கிக்
கொடுத்தவர் கவியரசர்.
"காலமகள் கண்திறப்பாள் சின்னையா - நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா?
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா - அதில்
நமக்கு ஒருவழி இல்லையா என்னையா?"
என்று கலங்கி நிற்கும் நெஞ்சங்களைத் தன் பாடல்களால் வருடிக் கொடுத்தவர் அவர்.
"பழகும் வகையில் பழகிப் பார்த்தால்
பகைவன் கூட நண்பனே!
பாசம் காட்டி ஆசை வைத்தால்
மிருகம் கூட தெய்வமே!"
என்று மனித நேயத்திற்குப் புது விளக்கம் ஒன்றைத் தன் பாடலால் சொன்னதும் அவர்தான்!
"பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மண முடிப்பதில்லை
மண முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை"
என்று காதலுக்கும், திருமண வாழ்விற்கும், மண உறவுகளுக்கும் சர்வ சாதாரணமாக நெஞ்சில் பதியும்படி விளக்கம் சொன்னதும் அவர்தான்.
"போனால் போகட்டும் போடா - இந்தப்
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?"
என்று கேள்வி கேட்டு நிலையாமைத் தத்துவத்தைப் பாமரனுக்கும் புரியும்படியாகப் பாட்டில் வைத்தவர் அவர்தான்.
தத்துவ முத்தில் இரண்டு பாடல்களைக் கொடுத்துள்ளேன்.
------------------------------------------------------------------
மனிதனுடைய புத்தி!
"போயும் போயும் மனிதனுக் கிந்த
புத்தியைக் கொடுத்தானே! - இறைவன்
புத்தியைக் கொடுத்தானே! - அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே - மனிதன்
பூமியைக் கெடுத்தானே...!
(போயும்)
கண்களிரெண்டில் அருளிருக்கும் - சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் - அது
உடன் பிற்ந்தோரையும் கருவறுக்கும்!
பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே! - புலியின்
பார்வையில் வைத்தானே! - இந்தப்
பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே! - இதயப்
போர்வையில் மறைத்தானே!.....
(போயும்)
கைகளைத் தோளில் போடுகிறான் - அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்!
பைகளில் எதையோ தேடுகிறான் - கையில்
பட்டதை எடுத்து ஓடுகிறான்.....
(போயும்)"
படம்: தாய் சொல்லைத் தட்டாதே - வருடம் 1961
காற்று மட்டுமா மாசு பட்டுவிட்டது? மனிதனின் புத்தியும் மாசு பட்டு
விட்டது. பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து மனிதனின் புத்தி கெட்டு விட்டதோடு, அது அவன் வாழும் பூமியையும் கெடுத்துவிட்டது என்று
தன் பாடலைத் துவங்கிய கவியரசர் கண்களிரெண்டில் அருளிருப்பதைப் போன்று காட்சிகொடுக்கும் மனிதனின் புத்தியில் ஆயிரம் பொருளிருப்பது போலத் தெரிந்தாலும் உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் என்று சொன்னதோடு - அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும் என்று
சொன்னது இந்தப் பாடலின் சிறப்பு!
பாயும் புலியின் கொடுமையை அதன் பார்வையில் வைத்த இறைவன்
பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே
என்று ஆதங்கம் மேலிடச் சொன்னது மற்றுமொரு சிறப்பு!. கைகளைத் தோளில் போடுகிறவன் - அதைக் கருணை என்று கூறுபவன் பைகளில் எதையோ தேடுவதையும்,கையில் பட்டதை எடுத்து ஓடுவதையும் முத்தாய்ப்பாய்க் கூறிப் பாடலை நிறைவு செய்தார் பாருங்கள் அதுதான்
இந்தப் பாடல் காலத்தாலும் மக்கள் மனதை விட்டு மறையாமல் நிற்கச் செய்கின்றது!
மற்றுமொரு பாடல்.
--------------------------------------------------------------------
''குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம்
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்
மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி - முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி- முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி
ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி- முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி- முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!"
படம் - பணத்தோட்டம் - வருடம் 1963
மனிதனின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இந்தப் பாடல்.மலர்த்தோட்டம் போட்டு மகிழ்வோடு விளையாடு என்று
இறைவன் கொடுத்த மனம் பணத்தோட்டம் போட்டு எப்படிப்
பாழாகின்றது என்பதைச் சிறப்பாகச் சொல்லிய கவியரசர்.
மனிதனின் இயற்கைக் குணம் மாறாது என்று சொல்லி முடித்தது
தான் இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு!
இந்த இரண்டு பாடல்களுமே திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்கத்
திரு.டி.எம்.எஸ் அவர்களின் கணீரென்ற குரலில் தமிழகமெங்கும் வெள்ளித்திரைகளில் ஒலித்த பாடல் என்பது குறிப்பிடப்பட
வேண்டிய மற்றுமொரு சிறப்பாகும்!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
அருமை அருமை அருமை
ReplyDeleteமலர்த்தோட்டம் போட்டு மகிழ்வோடு விளையாடு என்று
ReplyDeleteஇறைவன் கொடுத்த மனம் பணத்தோட்டம் போட்டு எப்படிப்
பாழாகின்றது. மிகவும் அருமையான வரிகள்....பாராட்டுகள்...பல பல..
கவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றுமே அருமையானவை. தாங்கள் அடிக்கடி நினைவு படுத்தி எங்களை ரசிக்க வைப்பதற்காக நன்றி ஐயா!
ReplyDeleteகோடை இசை மழை ரசனை எப்படி
ReplyDeleteகோபிக்காமல் பதில் சொல்லுங்க என
கேட்டதற்கு ஒரு பதிவையே
போட்டு கலக்கிட்டீங்க..
இந்த வாரம் முதல் கோடை
இசை மழையில் தினமும்
காதல் பாடல்கள்
கண்டிப்பாக புதுசும் பழசும்
சுவைத்து மகிழுங்கள் வாழக்கை
சுவை பட வாழ்வது தானே
////Blogger gayathri devi said...
ReplyDeleteஅருமை அருமை அருமை/////
நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
/////Blogger Venkat Venki said...
ReplyDeleteமலர்த்தோட்டம் போட்டு மகிழ்வோடு விளையாடு என்று
இறைவன் கொடுத்த மனம் பணத்தோட்டம் போட்டு எப்படிப்
பாழாகின்றது. மிகவும் அருமையான வரிகள்....பாராட்டுகள்...பல பல../////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteகவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றுமே அருமையானவை. தாங்கள் அடிக்கடி நினைவு படுத்தி எங்களை ரசிக்க வைப்பதற்காக நன்றி ஐயா!/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
//////Blogger வேப்பிலை said...
ReplyDeleteகோடை இசை மழை ரசனை எப்படி
கோபிக்காமல் பதில் சொல்லுங்க என
கேட்டதற்கு ஒரு பதிவையே
போட்டு கலக்கிட்டீங்க..
இந்த வாரம் முதல் கோடை
இசை மழையில் தினமும்
காதல் பாடல்கள்
கண்டிப்பாக புதுசும் பழசும்
சுவைத்து மகிழுங்கள் வாழக்கை
சுவை பட வாழ்வது தானே //////
நல்லது. நன்றி வேப்பிலையாரே!
வணக்கம் ஆசானே.
ReplyDelete