மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.4.11

சேவாலயா என்னும் தொண்டு நிறுவனம்

------------------------------------------------------------------
சேவாலயா என்னும் தொண்டு நிறுவனம்

வாத்தியாரின் கடிதக் கதை, முதியோர் இல்ல‌ம் பற்றியது, வெளியான வுடனேயே சொந்த அனுபவத்தை எழுதத் துடித்தேன். ஒரே சாயல் உள்ள செய்திகள் மிகவும் சலிப்பாக அமைந்து விடுமோ என்று சற்றே தயங்கி, மீண்டும் துணிச்சலை வர வழைத்துக் கொண்டு எழுதுகிறேன்.

"வாருங்கள் சார்!எங்க‌ள் இல்லத்தினின் அலங்கோலத்தை வந்து
காணுங்கள் சார்!"  என்று இரவு 10.30க்கு வந்து கதவைத் தட்டி
அழைத்தார் பக்கத்துக் கால‌னிவாசியான நண்பர் கோகுல கிருஷ்ணன்.
ஒரு சமயத்தில் பொதுப்பிரச்சனைகள், குடும்பப்  பிரச்சனைகள், எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்பவ‌னாக என்னை இறையருள் ஆக்கி வைத்திருந்தது.

'சரி போவோம்' என்று அவரோடு சென்றேன்.அவர் இல்ல‌மே ஒரு முதியோர் இல்ல‌ம் போலக் காட்சி அளித்தது. அவருடைய தாய்,தந்தை, சித்தப்பா, சித்தி, மேலும் ஓர் உறவினர், ஆக 5 பேர் படுத்த படுக்கையாக வயதால் மிகத் தளர்ந்த தோற்றமும், நோய்வாய்ப் பட்டும் கிடந்தனர்.

"இங்கே வாருங்கள் சார்!"என்று அவர்களையெல்லாம் தாண்டிக் கொண்டு 'டைனிங்ஹாலு'க்குக் கூட்டிச் சென்றார். அங்கே....கிழிந்த நாராக இன்னொரு வய‌தான மூதாட்டி கிடந்தார்.அவரும் எழுந்து நடக்க முடியாதவரே!

"பாருங்கள் சார்! இவர் எங்கள் வீட்டில் சமையல் செய்து வந்த மாமி. இப்போது அவருக்கு ஓய்வு கொடுத்து வீட்டோடு வைத்துப் பராமரித்து வருகிறோம். கடந்த ஒரு மாதமாகத்தான் எல்லாவற்றுக்கும் எங்க‌ளை எதிர்பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டார்.மற்ற முதியவர்களையும் நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால், இவரை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விட ஏற்பாடு செய்து கொடுங்கள் சார்!உங்க‌ளுக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும்!"

"சரி!முயற்சி செய்வோம்!" என்று உடனே பணியில் இறங்கினேன். சென்னையில் எனக்குத் தெரிந்த நண்பர்களை யெல்லாம் தொடர்பு கொண்டு மஹாபலிபுரம் போகும் பாதையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில்  அனுமதியைப் பெற்றோம்.அவர்களுடைய நடைமுறைகள்‍‍==மருத்துவ சோதனை, நேர்முகம் ஆகியவற்றுக்காக அந்த பாட்டியுடன் சென்னையில் ஒரு தொண்டு நிறுவனம் (www.sevalaya.org) சிறப்பாக நடத்திவரும் பொறியாளர் முரளிதரன் இல்லத்தில் சென்று தங்கினேன்.திரு முர‌ளியின் மனைவியார் திருமதி புவனேஸ்வரியும் எங்க‌ளுக்கு நன் முறையில் விருந்து உபசாரம் செய்தார்.

பாட்டிக்கு 'பாப்'செய்து கொள்ள‌ ஆசை வந்தது.நானே முடி திறுத்துனர் பணி செய்து ஆங்கிலேய பாணியில் அழகாக 'பாப்' செய்து விட்டேன்.

நேரம் நிறையக் கிடைத்ததால் பாட்டியின் வாயைப் பிடுங்கி கதை சேகரித்தேன்.

பாட்டியின் அழகில் மயங்கிய ஒரு ஆங்கிலேயப் போலீஸ் அதிகாரி அவரை சிறையெடுத்துப் போய் திருமணம் செய்து இலண்டனுக்கே அழைத்துப் போய் விட்டாராம்.இலண்டனிலேயே ஓர் ஆண்டு காலம் பாட்டி அவருடன் குடித்தனம். நடத்தினாராம். பாட்டிக்குப் பிடிக்கவில்லை என்பதனால் மது, சிகரெட்டை ஒரே நாளில் தியாகம் செய்தாராம் துரை. மாமிச உணவை சாப்பிடவேண்டும் என்று பாட்டியை வற்புறுத்தவில்லையாம்.

"தினமும் எனக்குக் கைநிறைய ரோஜா செண்டு கொடுக்காமல் இருக்க மாட்டார்.ஏரோப்பிளோனிலும்,க‌ப்பலிலும் எப்போ பார்த்தாலும் சுவிட்ஜர்லாந்து, பாரிஸ் என்று கூட்டிண்டு போவார்.எல்லோருக்கும் அதிகாரமான பெரிய பதவி வகித்தாலும் என் சொல்லுக்குக் கட்டுப்படுவார்." பாட்டி மிகவும் 'நோஸ்டால்ஜிக்'காகமாறி விட்டார்.

"என் தரித்திரம் என்னை விட்டுப் போகுமா? யார் கண்ணு பட்டதோ, அல்லது என் அப்பா அம்மா இட்ட சாபமோ என் பிராணநாதர் குதிரை சவாரி பண்ணும் போது தவறிக் கீழே விழுந்து தலையில் பாறை மோதி பேச்சு மூச்சு இல்லாமல் ஒரு மாதம் கிடந்தார்.வேண்டிய மட்டும் பணிவிடை செய்தேன்.. பெரிய பெரிய டாக்டெரெல்லாம் கைய விரிச்சுட்டா.என்னைத் தனியாகத் தவிக்க விட்டுட்டு அவர் காலம் ஆகிவிட்டது." பாட்டி கண்ணீர் விட்டார். சிறிது நேரம் மெள‌ன‌ம் கவிந்தது.

"கை நிறைய பணத்தோட கப்பலில் ஏற்றி விட்டுட்டா.எப்படியோ மதறாஸுக்கு வந்து, 'போட்மெயி'லில் ஏறி மாயவரத்திற்கும் வந்துட்டேன். அப்பதான் தெரிந்தது நான் பண்ண காரியத்தால் அம்மா அப்பா தற்கொலை பண்ணிண்டு செத்துப் போய்ட்டான்னு.அவா கால் விழுந்து மன்னிப்புக் கேட்கணும்னு ஓடிவந்தும் அவாளோட   முகத்தைக்கூட பார்க்க முடியலையே.!"பாட்டி குலுங்கிக் குலுங்கி அழுதார். நான் அமைதியாகட்டும் என்று காத்திருந்தேன்.

கண்ணைத் துடைத்துக் கொண்டு பாட்டி தொடர்ந்தார்.

"நோக்கு அந்த அப்துல்லா ராமச்சந்திரனைத் தெரியுமோ?"

"அதென்ன பாட்டி! முஸ்லிம் பேரையும் இந்துப் பேரையும் சேர்த்துச் சொல்கிறீர்கள்?"

"அதாம்பா அப்துல்லா பாக்குக் கம்பெனியில் காரியஸ்தனா சேர்ந்தானே அவன் தான்!"

"ஓஹோ அவரா! சரி,அவருக்கென்ன?"

"அவருக்கென்னாவா!அவன் என் கூடப் பொறந்த தம்பி!என்கிட்ட‌ இருக்கிற காசையெல்லாம் வாங்கிண்டு என்னை நட்டாத்தில விட்ட‌ மஹானுனுபாவன்! பிசினெஸ் பண்றேன், பண்ணி உன்னைக் கோடீஸ்வரி ஆக்க‌றேன்னான்.
நம்பி லண்டன் பவுனாக் கொடுத்தேன். ஒரு நாளைக்கு வந்து 'எல்லாம் நஷ்டமா போயிடுத்துடி, எச்சுமி!'ன்னு சொல்லி அழுதான். நானும்
நம்பிண்டு மனசைத் தேத்திண்டுட்டேன்.அப்பறம் பார்த்தா அவன்
பெண்டாட்டி கழுத்துல பத்து வடம் செயின் என்ன,எட்டுக்கல்லு பேசரியென்னன்னு  கொட்டி முழக்கரா?" பாட்டியின் முகம் கோபத்தில் சிவந்தது.

"நீங்க‌ கேட்கலையா!?"

"கேட்டேன். கேட்டதுக்கு பதிலா "போடி ஓடுகாலி!உன்னாலதாண்டி அப்பா அம்மா தற்கொலை பண்ணிண்டா!  குடும்ப மானத்தை வாங்கின உனக்கு என்னடி வாழ்வு?எங்க‌ மானத்துக்கு நீ கொடுத்த விலையா  நினச்சுக்கோ.  பணம் தர முடியாது போ போ"ன்னு கழுத்தைப்பிடிச்சு வெளில தள்ளிட்டான்."

"அட,கொடுமையே!அப்புறம்...?

"அப்புறமென்ன?எங்கெஙகயோ போயி கிடைச்ச வேலையெல்லாம் செஞ்சேன். கடைசில்தான் கோகுலன் ஆத்தில சேர்ந்தேன்.இவ்வளவு நாள் சொந்த பாட்டி மாதிரி வைச்சுண்டான். இப்போ அங்கையும் 5 பேர் வயசானவா. என்ன பண்ணுவான்? என்னை வெளியில‌ அனுப்பணும்னு அனுப்பலை. முடியாத கொறைக்குத்தான் இப்படி அனுப்பியுள்ளான்."

முதியோர் இல்லத்தில் சேர்ந்த அன்று, பாட்டிக்கு அழகான ஒரு விலை உயர்ந்த புடவையை திருமதி. புவனா அணிவித்தார்கள். அவர்களுடைய காரில் போய் இல்லத்தில் இறங்கினோம்.பாட்டி சுருக்கம் விழுந்த முகமானாலும் நல்ல கலர், எடுப்பான நாசி, பாப் வெட்டிய தலை, கார்ப் பயணம் எல்லாம் சேர்ந்து, அங்கு ஏற்கனவே உள்ள பாட்டிகளுக்கு ஏதோ நன்கொடை கொடுக்க ஒரு வயதான் பணக்காரப் பாட்டி வந்துள்ளார்கள் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டது.இந்தப் பாட்டியும் தங்களைப்போல ஒரு அனாதை என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.விஷ்யம் தெரிந்தவுடன் ஒரு முட்டாக்குப் போட்ட ஒரு பிராமணப்பாட்டி, என்னை ஒதுக்குப் புறமாகக் கூட்டிப் போய் காதோடு கிசு கிசுத்தார்.

"இதோ பாருங்கோ, சார்வாள்!  இந்த இடத்தில பிராமணா சமையல் கிடையாது. சமையல் வேலை செய்யற‌வா எல்லாம் இதராள்தான். நான் சொல்லலைன்னு நினைச்சுக்காதீங்கோ.ஆமாம்..."

"நீங்க‌ள் இப்போ இதராள் சமைச்சு சாப்பிடலயா? அது போல அந்தப் பாட்டியும் சாப்பிட்டுப்பா..! நீங்கள் ஏன் கவலைப்படறேள்?...."

"நான் அனாதை.. வேற வழியில்லை ... சகிச்சுண்டு வயத்த ரொப்பிக்கிறேன் அந்தப் பாட்டி சீமாட்டி மாதிரின்னா இருக்கா. அவளுக்கு இது தேவையா?"

"நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அந்தப் பாட்டி சீமாட்டிதான். சீமைப்பாட்டிதான்" என்றேன்.

முட்டாக்குப் பாட்டி ஒன்றும் புரியாமல் திரு திரு என்று விழித்தாள்.

பிகு1: சீமாட்டியின் தம்பி இறந்த போது 5 ரூபாய் நாணயங்கள் நான்கு பெரிய மூட்டைகள், சடலம் போன பாதையில் தூவப்பட்டதாம்.21 சாஸ்திரிகளுக்கு கிரேக்கியத்து அன்று 1 கிலோ எடையுள்ள வெள்ளிக் குத்துப் போகிணிகள் தானம் கொடுக்கப்பட்டதாம்.

பிகு2.: சீமாட்டியின் தம்பியின் மகன்க‌ள் இருவர் சில வருடங்களுக்கு முன் ஏதோ "ஃபிராடு" செய்து இப்போது சிறையில் இருக்கிறார்களாம்.

பிகு3.: சீமாட்டியை 4 முறை முதியோர் இல்ல‌த்தில் வைத்துப் பார்த்தேன். அப்போது இன்னொரு ஐயங்கார்ர் பாட்டியின் கதை கிடைத்தது.(பின்னர் சொல்கிறேன்)

பிகு4: ஐந்தாவது முறை போன போது சீமாட்டிப் பாட்டி உயிரோடு இல்லை.

பிகு5:  சம்பவம் உண்மை. பாட்டி, பாட்டியுடன் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் மாற்ற‌ப்பட்டுள்ளன.

பிகு6: பொறியாளர் முரளிதரன், திருமதி புவனேஸ்வரி,www.sevalaya.org ஆகியவை உண்மை. அந்த தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்.

நன்றி, வணக்கத்துடன்
கே.முத்துராமகிருஷ்ணன்,
லால்குடி



கே.முத்துராமகிருஷ்ணன் அவர்களின் இளைமைத் தோற்றம்
(பழைய படம் 1974ல் எடுக்கப்பெற்றது)

வாழ்க வளமுடன்!

17 comments:

  1. ////"கேட்டேன். கேட்டதுக்கு பதிலா "போடி ஓடுகாலி!உன்னாலதாண்டி அப்பா அம்மா தற்கொலை பண்ணிண்டா! குடும்ப மானத்தை வாங்கின உனக்கு என்னடி வாழ்வு?எங்க‌ மானத்துக்கு நீ கொடுத்த விலையா நினச்சுக்கோ. பணம் தர முடியாது போ போ"ன்னு கழுத்தைப்பிடிச்சு வெளில தள்ளிட்டான்."////

    "உடன்பிறந்தே கொல்லும் வியாதி"
    மானம் போனதாக எண்ணிய பெற்றோர் அதற்கு உயிரை விலையாகக் கொடுத்தார்கள்...
    ஆனால், உடன் பிறந்தவனோ அதை விற்று தமக்கைக்கு துரோகம் விளைவித்து... அவளின் பணம் தான் போன மானத்தின் விலை என்றது தான் தாங்கள் கூறியது போல் கொடுமை அல்ல கொடுமையிலும் கொடுமை........ புராணகால வில்லன்களைஎல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டான்.

    ////பிகு1: சீமாட்டியின் தம்பி இறந்த போது 5 ரூபாய் நாணயங்கள் நான்கு பெரிய மூட்டைகள், சடலம் போன பாதையில் தூவப்பட்டதாம்.21 சாஸ்திரிகளுக்கு கிரேக்கியத்து அன்று 1 கிலோ எடையுள்ள வெள்ளிக் குத்துப் போகிணிகள் தானம் கொடுக்கப்பட்டதாம்.////

    அள்ளி இறைத்த அந்த பாவத்தை தெருக்களில் பொறுக்கி எடுக்க மறுஜென்மத்தில் அவனுக்கு கைகளைக் கூட இறைவன் தந்து இருக்க மாட்டான் என்பது உறுதியே...

    ////பிகு2.: சீமாட்டியின் தம்பியின் மகன்க‌ள் இருவர் சில வருடங்களுக்கு முன் ஏதோ "ஃபிராடு" செய்து இப்போது சிறையில் இருக்கிறார்களாம்////
    பன்றிக்குப் பிறந்தது யானையாகுமா?

    இதயத்தை கனக்க வைக்கிறது..... வேறொன்று சொல்ல முடியவில்லை...

    ReplyDelete
  2. "ஒரு பாட்டியின் காதல் கதை" நன்றாக இருந்தது..டைட்டானிக் பாட்டியை நினைவுக்குக் கொண்டு வந்தது..
    /////////////பாட்டிக்கு 'பாப்'செய்து கொள்ள‌ ஆசை வந்தது.நானே முடி திறுத்துனர் பணி செய்து ஆங்கிலேய பாணியில் அழகாக 'பாப்' செய்து விட்டேன்.///////////.
    /////////////பாட்டி சுருக்கம் விழுந்த முகமானாலும் நல்ல கலர், எடுப்பான நாசி, பாப் வெட்டிய தலை,////////////////////

    கதையாசிரியர் பாட்டியின் அழகில் எப்படி கட்டுண்டு கிடக்கிறார் என்பதை மேல்கண்ட வரிகள் வெளிப்படுத்துகின்றன..
    வயசு கூட கிட்டத்தட்ட ஒத்துப் போயிருந்திருக்கலாம்..
    ஆனால் பிரசுரமாகியிருக்கும் போட்டோதான் சம்பவத்துக்கு சம்பந்தமில்லாமல் மிகவும் இளமையாக இருக்கிறது..

    ReplyDelete
  3. நகைச்சுவையிழை ஓடும் எழுத்து நடை. இது எப்போ நடந்தது?

    நான் தினமும் பஸ் ஏறும் இடத்திற்கு அருகில் பிளாட்பாரத்தில் ஒரு வயதான பாட்டி கயிற்றுக்கட்டிலில் படுத்திருப்பார். சுமார் ஒண்ணேகால் வருடங்களுக்கு மேலாகிவிட்டது. மேலே ஒரு அழுக்குப்போர்வை. அந்தக் கட்டிலையும் யாராவது லவட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற பயத்தில் அவரை அங்கே கொண்டு போட்ட குடும்பத்தினர் அந்த நிறுத்தத்தில் உள்ள தூணுடன் கட்டிலை சங்கிலி போட்டுக்கட்டியுள்ளனர். எல்லாம் அந்த கட்டிலில்தான். ஈ மொய்த்துக்கொண்டிருக்கும். அவள் குடும்பத்தினர் தினம் உணவு கொடுத்துவிட்டுப்போகின்றனர். எப்போதாவது நான் பார்க்கும்போது எழுந்து உட்கார்ந்திருப்பார். அதுவும் கடந்த குளிர்காலம் எங்களையே வாட்டுமளவு இருந்த நிலையில் அவர் எப்படி தாக்குப்பிடித்தார் என்பது ஆச்சரியமே. பஞ்சடைந்த தலை, அழுக்கு ஆடை. ஒவ்வொரு தினமும் கடந்துபோகும்போது என்ன மனிதர்கள் என்று தோன்றும். அவர் எதிர்பார்த்துக்காத்திருக்கும் எமன் இன்னும் வந்தபாடில்லை. ஒருவேளை கேமத்துரும யோகம் இருக்குமோ அவருக்கு?

    ReplyDelete
  4. .நானே முடி திறுத்துனர் பணி செய்து//

    பல்கலை வித்தகர்?

    ReplyDelete
  5. பாட்டியின் பெற்றோர் முடிவும், தம்பியின் பேச்சும் கொடுமை.

    ReplyDelete
  6. நன்றி நன்றி!சேவாலயா'வை முன்னிலைப் படுத்தியது உங்கள் தொண்டுள்ளத்தைக் காண்பிக்கிறது.என் கட்டுரையைப் படிப்பவர்களனைவரும் சேவாலயா இணைய தளத்திற்கும் சென்று முழுமையாகப் படித்து, உஙளால் முடிந்த ஆதரவை அளிக்க‌ வேண்டுகிறேன்.

    சேவாலயாவில் ஆதரவற்ற, ஏழைப்பிள்ளகளுக்குத்தரமான கல்வி அளிக்கப்படுகிறது.சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமக் க்குழந்தைகள் +2 வரை இலவசக் கல்வி பெறுகின்ற‌னர்.70 முதிய்வர்கள் கொண்ட முதியோர் இல்லம்,நல்ல நூலகம், வைத்தியசாலை, கோசாலை, இயற்கை விவசாயம் அனைத்தும் நடக்கின்றன‌.

    ReplyDelete
  7. நன்றி ஹாலாஸ்யம்ஜி!இப்போது நினைத்தாலும் எனக்கும் நெஞ்சு கனக்கும்.
    சேவாலயாவை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.அவர்கள் ஒரு கிராமப் பல்கலைக்கழகம் வரை செல்லத் திட்டம் இட்டு உள்ளார்கள்.

    ReplyDelete
  8. மைனர்வாள் வழக்கம் போலக் குறும்பு! மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.மாமியும் வகுப்பறைக்குத் தினமும் வந்து வாசிக்கிறார்கள்.கலகம் செய்துவிடுகிறீரே! ஞாயமா?

    இது நடந்தது 1988. எனக்கு வயது 39. பாட்டிக்கு வயது 75.

    போகட்டும்.சேவாலயாவை உங்கள் நண்பர்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்துங்கள்.
    சேவாலயாவின் முதியோர் இல்லக் கட்டடத்தை ஜப்பானிய அரசு கட்டிக் கொடுத்துள்ளது.

    ReplyDelete
  9. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் - என்னும் பொய்யாமொழியை நினைவூட்டுகிறது இக்கதை...

    //பாட்டிக்கு 'பாப்'செய்து கொள்ள‌ ஆசை வந்தது.நானே முடி திறுத்துனர் பணி செய்து ஆங்கிலேய பாணியில் அழகாக 'பாப்' செய்து விட்டேன்.//

    அறிமுகம் இல்லாதோர்க்கு உதவுவதே உண்மையான உதவி ..

    அதுவும் அருவருப்பின்றி பாட்டியின் தலைமுடியை சீரமைத்த தங்களுடைய சமுதாயத் தொண்டிற்கு தலைசாய்ந்த வணக்கங்கள் கிருஷ்ணன் சார்..

    ReplyDelete
  10. லண்டன் பாட்டியைக் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் சேர்த்த வரலாறு நன்றாக இருந்தது. பாட்டிக்கு 'பாப்' வேறு வெட்டி மாடர்னாக ஆக்கிப் புதுப் புடவைக் கட்டி, காரில் கொண்டு போய் இறக்கியதும், ஆச்சாரப் பாட்டி வழக்கம் போல கோள் மூட்டியதும் சுவாரசியமான நிகழ்ச்சிகள் தான். உங்களுக்கு இதில் உதவி செய்த 'சேவாலயா' முரளி, புவனேஸ்வரி, டி.எஸ்.வெங்கடரமணி ஆகியோரின் பணி வியந்து போற்றத் தக்கது. திண்ணனூர் ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்த ஒரு குழந்தையைக் காவல் துறையினர் கசுவா கிராமத்தில் இருந்த சேவாலயாவில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அந்த குழந்தை இன்று சமூகத்துக்குப் பயன்படத் தக்க வகையில் வளர்ந்து நிற்பது போற்றத்தக்கது. இரண்டு வயது பெண் குழந்தையொன்றை ஆதரவற்ற நிலையில் சேவாலயாவில் கொண்டு வந்து சேர்த்தனர். முரளி, புவனேஸ்வரி, வெங்கடரமணி ஆகியோர்தான் அவளை வளர்த்து, ஆளாக்கி, படிக்கவைத்து, நர்சிங் படித்து வேலைக்கும் போய்ச்சேர்ந்தாள். அங்கு நல்ல உள்ளம் படைத்த ஒரு இளைஞன் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்ப, அந்தப் பெண் தனது வளர்ப்புப் பெற்றோர்களிடம் வந்து விஷயத்தைச் சொல்ல, அவர்கள் அந்தப் பையனின் பெற்றோர், உறவினர் ஆகியோரைச் சந்தித்துப் பேசி, திருமணம் நடந்தது. கசுவா கிராமத்தில் சேவாலயா வளாகத்தில் நடந்த‌ அந்தத் திருமணத்துக்கு நானும் சென்றிருந்தேன். பெண்ணைத் திருமணம் செய்து தரும் பெற்றோரைப் பார்வதி பரமேஸ்வரனாக எண்ணி மாப்பிள்ளை பாதபூஜை செய்து அந்தப் பெண்ணைக் கரம் பிடித்தல் மரபு. அங்கு பார்வதி பரமேஸ்வரராக நின்றவர்கள் முரளியும் புவனேஸ்வரியும். அருகில் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க மகிழ்ச்சியோடு பார்த்து உளம் பூரித்தவர் வெங்கடரமணி. கூடியிருந்தவர்களும் உணர்ச்சிப் பெருக்கால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மித‌ந்தனர். அந்தப் பெண்ணுக்கு நலம் விரும்பிகள் கொண்டு வந்து கொடுத்த சீர் வரிசையைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். உலகில் இன்னமும் மழை பொழிகிறது என்றால் இவர்களைப் போன்றவர்களால்தான். வாழ்க இவர்கள் பணி. இதை இங்கு குறிப்பிட்ட கே.எம்.ஆருக்கு நன்றி.

    ReplyDelete
  11. அன்புடன் வணக்கம் எங்கள் kmrk..இடம் மனித நேயம் அளவு கடந்து இருக்கிறது..
    தொடரட்டும்..

    ReplyDelete
  12. ////அங்கு பார்வதி பரமேஸ்வரராக நின்றவர்கள் முரளியும் புவனேஸ்வரியும். அருகில் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க மகிழ்ச்சியோடு பார்த்து உளம் பூரித்தவர் வெங்கடரமணி. கூடியிருந்தவர்களும் உணர்ச்சிப் பெருக்கால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மித‌ந்தனர்.////
    கோபாலன் சார்... ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை அறிந்து நானும் நெகிழ்ச்சி அடைகிறேன். ஆத்மார்த்த சந்தோசம்; பரமானந்தம் என்பதும் அதுவாகத்தான் இருக்கும்... கேட்கும் போதே மனம் நிறைந்து இனிமையாக இருக்கிறது... மகாத்மாக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    கிருஷ்ணன் சார் தங்கள் எண்ணம் ஈடேறும்...... நன்றி.

    ReplyDelete
  13. ////"கட்டிலை சங்கிலி போட்டுக்கட்டியுள்ளனர்"////
    நல்ல் வேளை பாட்டியை சங்கிலியால் பிணைக்காமல் போனார்களே!பாட்டி போனாலும் கட்டில் போகக்கூடாது என்ற 'நல்ல்' எண்ணம்.

    'பல்கலை வித்தகர்!'ஆம் எதையாக இருந்தாலும் செய்து பார்த்து விட ஓர் ஆர்வம். அதனால் பல முறை சிக்கல்களிலும் சிக்கிக் கொண்டது உண்டு!

    பாட்டியின் தம்பி உங்கள் ஊர்க்காரர்தான்!கொஞ்சம் யூகித்தால் ஆளை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

    சரி! சேவாலயாவைப் பற்றியும்,
    அவர்களுடைய வலை தளத்தையும் பலருக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

    ReplyDelete
  14. ///அறிமுகம் இல்லாதோர்க்கு உதவுவதே உண்மையான உதவி ..///
    ஆம், இடைப்பாடியாரே!ஒரு முறை ஆனைக்காவில் ஒரு பாட்டி அகிலாண்டேச்வரி சன்னிதி பிராகாரத்தில் உணவின்றி மயங்கிக் கிடந்தார்.நீரும் உணவும் கொடுத்து விட்டு, அடுத்த ஒரு மாதத்திற்கு இரண்டு வேளை கோவில் நெய்வேத்திய பிரசாதம் கொடுக்க பரிசாரகரிடம் பேசி ஏற்பாடு செய்து விட்டு வந்தேன்.எத்த‌னையோ சேவை செய்து இருந்தும்,, அந்த முகம் தெரியாத பாட்டிக்குச் செய்த தொண்டே இன்றும் மனதிற்கு நிறைவு தருகிறது.

    சேவாலயாவை நண்பர்களிடம் கொண்டு சேருங்கள்.

    ReplyDelete
  15. ///"இரண்டு வயது பெண் குழந்தையொன்றை ஆதரவற்ற நிலையில் சேவாலயாவில் கொண்டு வந்து சேர்த்தனர். முரளி, புவனேஸ்வரி, வெங்கடரமணி ஆகியோர்தான் அவளை வளர்த்து, ஆளாக்கி, படிக்கவைத்து, நர்சிங் படித்து வேலைக்கும் போய்ச்சேர்ந்தாள். அங்கு நல்ல உள்ளம் படைத்த ஒரு இளைஞன் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்ப, அந்தப் பெண் தனது வளர்ப்புப் பெற்றோர்களிடம் வந்து விஷயத்தைச் சொல்ல, அவர்கள் அந்தப் பையனின் பெற்றோர், உறவினர் ஆகியோரைச் சந்தித்துப் பேசி, திருமணம் நடந்தது. கசுவா கிராமத்தில் சேவாலயா வளாகத்தில் நடந்த‌ அந்தத் திருமணத்துக்கு நானும் சென்றிருந்தேன்"///

    ஆம் கோபால்ஜி!சேவாலயாவில் இது போன்ற உண்மைக் கதைகள் ஏராளம்.
    அங்கேயே படித்த ஒரு மாணவன் இன்று டிஸி எஸ் நிறுவனத்தில் கணினிப் பொறியாளர் ஆகிவிட்டார்!அவரை சேவாலயா ஒரு ட்ரஸ்டி ஆக்கியுள்ளது.

    என்னை சுதந்திரமாக விட்டால் நான் சேவாலயாவில் சென்று பணியாற்றுவேன்.

    ReplyDelete
  16. பதிவின் முதல் பகுதியிலேயேநின்றபடி
    படிக்க தயங்குகிறது மனம்..


    முடியாவிட்டால் முதியோர் இல்லம்
    முதிர்ந்தவருக்கோ ஏது.. இல்லம்..


    நன் செய்தே விதைக்கிறோம்; ஆனால்
    புன் செய்து விட்டு புறத்தே போகிறதே

    .....


    ஓட்டைக் குடிசையில் இருந்து
    ஒக்கார்ந்தபடிஎப்படி மழையை ரசிப்பது


    கள்ளிக் காட்டில்
    கனிந்த ரோசா என வந்தமைந்த


    எழுத்தோவியம்;எங்களையும் மயக்கும்
    எத்தனை பெரிய நினைவாற்றல்..


    சாஃப்ட் வேர்பணியென்பதாலே முரளி "சாஃப்ட்"எண்ணத்திலும் உள்ளத்திலும்


    நல்லவர்களிடம் வந்தவர்கள்
    நலம் பெற்று வாழ்வார்கள்..என


    முத்தாய்ப்பாக அமைந்த குறிப்புகள்
    முத்துத் துளிர்ந்த கண்ணீர் துளியினை


    கண்ணங்கள் தாங்கியபடி
    எண்ணங்களின் சுமையில்..

    ReplyDelete
  17. ///கள்ளிக் காட்டில்
    கனிந்த ரோசா என வந்தமைந்த
    எழுத்தோவியம்;எங்களையும் மயக்கும்
    எத்தனை பெரிய நினைவாற்றல்..///

    பாராட்டுகு நன்றி ஐயர் அவர்களே!உங்க‌ள் நண்பர்களின் கவனத்தை சேவாலயாவின் பக்கம் திருப்புஙள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com